வேலூர் மாவட்டம், பாலாற்றின் கரைகளில் அமைந்திருக் கின்றன, ஏழு முனிவர்கள் வழிபட்ட சிவத்தலங்கள்.
வால்மீகி, வசிஷ்டர், பரத்வாஜர், அத்திரி, அகத்தியர், கௌதமர், காஷ்யபர் ஆகிய ஏழு முனிவர்களும் (புராணங்கள் குறிப்பிடும் சப்தரிஷிகள் வரிசையில் வரும் முனிவர்கள் வேறு) வழிபட்ட... இந்தத் திருத்தலங்களில் அருளும் மூர்த்திகள் அந்தந்த முனிவரின் பெயரைக் கொண்டிருப்பது விசேஷம்.
காஞ்சியில் நடைபெற்ற சிவ- பார்வதி திருக்கல்யாணத்தைக் காண வந்த ஏழு முனிவர்களும் இந்தத் தலங்களில் சிவபூஜை செய்து அருள் பெற்றதாக தலபுராணங்கள் கூறுகின்றன. பௌர்ணமி நாட்களில் இந்தக் கோயில்களில் விசேஷ யாகசாலை பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. இந்தப் பகுதியைச் சார்ந்த பக்தர்கள் பலரும், கார்த்திகை மாதம் மாலை அணிந்து, ஒருமண்டல காலம் விரதம் இருந்து சப்த சிவாலயங்களையும் தரிசித்து வழிபட்டு வருகின்றனர். சிவராத்திரி தினத்தில், இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்பது விசேஷம்!
 ஸ்ரீவால்மீகீஸ்வரர் கோயிலில் சொர்ணகௌரி பூஜை
வால்மீகி முனிவர் வழிபட்ட இந்தத் திருத்தலம், தேவ கன்னியராலும் வழிபடப்பட்டது. விமல நாட்டு மன்னன் சந்திரபிரபன், சொர்ணகௌரி பூஜை செய்து குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றானாம். இதன் அடிப்படையில் ஆடி மாத வளர்பிறை திருதியை திருநாளன்று, இந்தத் திருகோயிலில்... ஐந்து குழந்தைகளை பங்கேற்கச் செய்யும் கன்யா பூஜை நடைபெறுமாம்.
வெகு விமரிசையாக நடைபெறும் இந்த பூஜையில், அஷ்ட மங்கள பொருட்களாக எட்டுவித பொருட்களை வைத்து வழிபடுவராம். குழந்தை பாக்கியம் அருளும் மேல் விஷாரம் ஸ்ரீவால்மீகீஸ்வரர் கோயில், வேலூரில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் இந்தக் கோயில் உள்ளது.
 வசிஷ்டருக்கு முதல் மரியாதை!
பாலாற்றின் தென் கரைத் திருத்தலம். வேம்பு மரங்கள் நிறைந்திருந்ததால், வேம்பூர் என்று வழங்கப்பட்டதாம். தற்போது, 'வேப்பூர்' என்கிறார்கள். ஆற்காட்டில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குள்ள இறைவனை வழிபட்ட பிறகே வசிஷ்டர், அருந்ததியை மணம் முடித்ததாக தல புராணம் கூறுகிறது. ஸ்ரீராமனின் குலகுரு என்பதால், இந்தக் கோயிலில் வசிஷ்டருக்கே முதல் மரியாதை. இவருக்கு பூஜை நடந்தபிறகே சிவனாருக்கு பூஜைகள் நடைபெறுமாம்.
வசிஷ்டருக்கு மிளகுப் பொங்கல் நிவேதனம் செய்து, வேப்பம் பூ மற்றும் வில்வ மாலை அணிவித்து வழிபட்டால் கல்வி- கேள்விகளில் சிறக்கலாம். பித்ருக்களுக்கு (முன்னோருக்கு), திதி- தர்ப்பணம் செய்யாதவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால், பித்ரு தோஷம் நீங்குமாம். திங்கட்கிழமைகளில் மாலை வேளையில், கோயிலின் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, தீபங்கள் ஏற்றி வைப்பர். அப்போது, ஜோதி சொரூபனாக காட்சி தருவாராம் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்!
படே... படே... பரத்வாஜம்!
ஆற்காட்டில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது புதுப்பாடி ஸ்ரீபரத்வாஜீஸ்வரர் ஆலயம். பரத்வாஜ மகரிஷி சிவபூஜை செய்த தலம் இது. சீதாதேவியை மீட்டு வந்த ஸ்ரீராமன், தன் சகாக்களுடன் இங்கு பரத்வாஜரின் உபசரிப்பை ஏற்றுக் கொண்டதாக தலவரலாறு கூறுகிறது. ஸ்வாமி சந்நிதிக்கு எதிரில், நந்திதேவருக்கு அருகே ஸ்ரீராமர் பாதம் மற்றும் பரத்வாஜ முனிவரை தரிசிக்கலாம்.
காலப்போக்கில் கோயில் சிதைந்துபோக, லிங்கத் திருமேனி மண்ணுக்குள் புதையுண்டதாம். பிற்காலத்தில், விவசாயி ஒருவர் இந்தப் பகுதியை உழுதபோது, ஏர்க் கலப்பை பட்டு சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்றும் லிங்கத் திருமேனியில், ஏர்க்கலப்பையால் உருவான தழும்பைக் காணலாம். முற்காலத்தில் வெகு விமரிசையாக வழிபாடுகள் நடைபெற்றதால், 'படே படே பரத்வாஜம்' என்று சிறப்பிக்கப்பட்டதாம் இந்தத் திருக்கோயில்!
அந்திம காலத்தில் துணையிருக்கும் அத்திரீஸ்வரர்
குடிமல்லூர் ஸ்ரீஅத்திரீஸ்வரர் ஆலயம்- அத்திரி மகரிஷி- அனுசூயா தம்பதி வழிபட்ட இந்தத் தலத்தின் இறைவன், வாழ்வில் இறுதிக்கட்டத்தில் (அந்திம காலத்தில்) இருப்போருக்குத் துணையாக இருந்து அருள்வதாக ஐதீகம். எனவே, இவருக்கு 'திருஅந்தீஸ்வரர்' என்றும் பெயருண்டு.
உடல் நலம் இல்லாதவர்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்போருக்காக இங்கே கோயிலில் வேண்டிக் கொள்கிறார்கள். கோயிலின் ஸ்வாமி சந்நிதி விமானம், பச்சைக்கல் எனப்படும் அரிய வகைக் கல்லால் ஆனது என்கிறார்கள். ஸ்வாமி சந்நிதிக்கு உள்ளேயே 'நமசிவாய' எந்திரம் பொறிக்கப்பட்ட பீடம் ஒன்று உள்ளது. பூஜையின் போது இந்த பீடத்துக்கும் ஆராதனை நடக்கும். இப்படி, சிவமந்திர யந்திரத்துடன் அருளும் சிவபெருமானை தரிசிப்பது விசேஷம். இங்குள்ள நந்தி சிலைகளும் வேலைப்பாடு மிக்கவை. வாலாஜாபேட்டையில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது குடிமல்லூர். பஸ் வசதி குறைவு. ஷேர்ஆட்டோ வசதி உண்டு.
 அகத்தியருக்காக குறுகிய சிவலிங்கம்
அகத்திய மாமுனிவர், சிவ-பார்வதியரின் மணக்கோல தரிசனம் கண்ட தலங்களில் ஒன்று வன்னிவேடு. வாலாஜாபேட்டையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இங்குள்ள சிவலிங்கம் அகத்தியருக்காகக் குறுகிக் கொண்டதாம். இன்றும் இந்த சிவலிங்கம் சிறியதான லிங்க பாணத்துடன் காட்சிதருகிறது.
சதயம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய இந்தக் கோயிலில், பௌர்ணமி இரவில் நடைபெறும் வழிபாடுகள் விசேஷம். அப்போது ஏழு முனிவர்களும் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில், அம்பாள் சந்நிதிக்கு எதிரே 7 இலைகள் விரித்து, அதில் 7 விதமான நிவேதனங்கள் படைப்பர். இந்த பூஜையை ஏழு முனிவர்களுமே செய்வதாக ஐதீகம். கோயிலின் எட்டு திசைகளுக்கும் ஒருவராக... வாயு, குபேரன், ஈசானன், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன் ஆகிய அஷ்டதிக் பாலகர்களும் அருள்வது சிறப்பம்சம்.
 நோய் தீர்க்கும் ஸ்ரீகௌதமேஸ்வரர்
காரை மரம் நிறைந்திருந்த பகுதி என்பதால் காரை என்று பெயர் பெற்றுவிட்டதாம் இந்தத் தலம். கௌதம மகரிஷி, அகலிகையுடன் சிவபூஜை செய்த தலம். ஆற்காட்டில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தத் தலத்துக்கு வந்து வழிபட, சகல தோஷங்களும் நிவர்த்தியாகுமாம். பௌர்ணமி அன்று (நித்திய) பிரதோஷ வேளையில், அதாவது 430 முதல் 600 மணி வரை, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 'இந்த அபிஷேக தீர்த்தம் சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்து' என்கிறார்கள் பக்தர்கள். மேலும், மருந்துப் பொருட்களை ஸ்வாமியின் திருவடியில் வைத்து பூஜித்து வாங்கிச் செல்லும் வழக்கமும் உண்டு. இதனால் ஸ்வாமிக்கு 'நோய் தீர்க்கும் கௌதமேஸ்வரர்' என்றும் திருநாமம் உண்டு.
 அவரக்கரை காஷ்யபேஸ்வரர்
ஆற்காட்டில் இருந்து சுமார் 8 கி.மீ., தூரத்தில் உள்ளது அவரக்கரை. காஷ்யப மகரிஷி வழிபட்ட சிவத்தலம் இது. அனைத்து விதமான மூலிகைக் குணம் கொண்ட மரங்கள் நிறைந்திருந்த பகுதி ஆதலால், 'நவ வனக்காடு', 'நவலக்ஷவன க்ஷேத்ரம்' என்றெல்லாம் இந்தத் தலத்துக்கு பெயர்கள் உண்டு.
கருவறையில்... காசியில் இருப்பதைப் போன்று பள்ளத்துக்குள் காட்சி தருகிறது லிங்கத் திருமேனி. எதிரில், காஷ்யபர். பௌர்ணமி அன்று விசேஷ பூஜைகள் உண்டு. திருக்கார்த்திகை அன்று 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். இந்தக் கோயிலில், சப்த கன்னியரும், கல் வடிவில் காட்சி தருகின்றனர்.
|
No comments:
Post a Comment