Saturday, 5 August 2017

ஆறுமுகநேரி - ஸ்ரீசோமநாதேஸ்வரர்

மையவளான ஸ்ரீபார்வதிதேவி, நூறுகோடி சந்திர ஒளியுடன் திவ்விய தரிசனம் தந்த திருத்தலம்; மிருகண்ட முனிவர், ரோமசர் என முனிவர்களும் சித்த புருஷர்களும் வழிபட்ட புண்ணிய க்ஷேத்திரம்; அம்மை உமையவளுக்கு ஸ்ரீசோமசுந்தரி என்றும் அப்பன் சிவனாருக்கு ஸ்ரீசோமநாதர் என்றும் திருநாமங்கள் அமைந்த ஒப்பற்ற திருவிடம்... என மகிமைகள் பல கொண்டது ஆறுமுகநேரி ஸ்ரீசோமநாத ஸ்வாமி திருக்கோயில்.
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில், தூத்துக்குடியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறுமுகநேரி. இங்கே... அழகிய ஆலயத்தில் அற்புதமாக அருள்பாலிக்கிறார் ஸ்ரீசோமநாத ஸ்வாமி.
சிவபெருமானை பூஜிக்க, சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை மிக உகந்த நாள் என்பர். தவிர... இந்த ஆலயத்தின் இறைவனின் திருநாமம் ஸ்ரீசோமநாதர் என்பதால், சோமனாகிய சந்திரனுக்கு உரிய திங்கட்கிழமையில் சிவனாரை தரிசிப்பது விசேஷம் என்கின்றனர். குறிப்பாக தொழிலில் கடும் போட்டி, நஷ்டம் என அவதிப்படுவோர் இங்கே, இறைவனுக்கு வெள்ளை வஸ்திரம் சார்த்தி, நெய் விளக்கேற்றி வழிபட, பிரச்னைகள் நீங்கும்; தொழிலில் அபிவிருத்தி ஏற்படும் என்கின்றனர்.
இங்கு அருள்பாலிக்கும் அம்பாள் ஸ்ரீசோமசுந்தரி, பிள்ளை வரம் தரும் கருணை நாயகி! பெண்கள், ராகுகால வேளையில் கோயிலுக்கு வந்து, 8 திரிகள் இட்டு எலுமிச்சை தீபம் ஏற்றி அம்பாளை வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.
வருடந்தோறும் மகாசிவராத்திரி (வருகிற மார்ச் 12-ஆம் தேதி, இந்த ஆலயத்தில் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது) விழாவும் இங்கே பிரசித்தம்! அன்றைய தினம், இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையிலான லிங்கோத்பவ காலத்தில், ஸ்ரீசோமநாத ஸ்வாமியை தரிசிக்க, உள்ளூர் மட்டுமின்றி அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்களாம். அப்போது, வலம்புரிச்சங்கில் 21 வித அபிஷேகங்களும் 108 வில்வ இலைகளால் அர்ச்சனையும் நடைபெறும். அன்னாபிஷேகமும் உண்டு.
இந்த அன்னாபிஷேகப் பணியில் இயன்ற அளவு நாமும் பங்கேற்க, ஏழேழு தலைமுறைக்கும் உணவுப் பஞ்சமே வராது; பாவங்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை!
இந்த நாளில், தேன், பால், நெய், தயிர் கொண்டு ஸ்வாமியை அபிஷேகிக்க... ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்!
பன்னீரால் சிவனாரை அபிஷேகித்து தரிசிக்க, நவக்கிரக தோஷங்கள் அத்தனையும் விலகும்; நலமும் வளமும் பெறலாம்!

No comments:

Post a Comment