திருச்சி- தஞ்சாவூர் பாதையில் உள்ளது துவாக்குடி. இங்கிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஸ்ரீகோமள வல்லி சமேத ஸ்ரீசோழீஸ்வரர் ஆலயம்.
மன்னன் ஒருவன், 'நாகதோஷத்தால் தன் தங்கைக்கு திருமணம் தள்ளிப்போகிறதே' என்று மனம் கலங்கினானாம். தோஷம் நீங்கி, தங்கைக்கு நல்ல இடத்தில் வரன் அமைய வேண்டும் என்று சதாசர்வ காலமும் சிவபெருமானை பிரார்த்தித்து வந்தான்.
ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான், 'உடனே எமக்கு ஓர் ஆலயம் எழுப்பு. உன் சகோதரிக்கு தோஷங்கள் விலகி விரைவில் திருமணம் நடந்தேறும்' என்று அருளியவர், கோயில் கட்டுவதற்கான இடத்தையும் காட்டினார்! விடிந்ததும் படை-பரிவாரங்களுடன் வல்லம் வழியாகப் புறப்பட்டு வந்த மன்னன், இறைவன் குறிப் பிட்டபடி... இப்போது உள்ள இந்த இடத்தில் கோயில் எழுப்பினான்; வழிபாடு மற்றும் பூஜைகளுக்காக 200 ஏக்கர் நிலங்களையும் தானம் அளித்தான். இதையடுத்து, மன்னனின் தங்கைக்கு திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது என்கிறது ஸ்தல வரலாறு!
சோழ மன்னன் எழுப்பிய ஆலயம் என்பதால் இங்கே குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு ஸ்ரீசோழீஸ்வரர் என்று பெயர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீகோமளவல்லி.
இந்தக் கோயிலில், நவக்கிரகங்கள் தங்கள் தேவியருடன் காட்சி தருகின்றனர். எனவே இந்த ஆலயத்துக்கு வந்து, ஸ்ரீகோமளவல்லி சமேத ஸ்ரீசோழீஸ்வரரையும் தம்பதி சமேதராக திகழும் நவக்கிரகங்களையும் வணங்கி வழிபட... கிரக தோஷங்கள் அனைத்தும் விலகிப் போகும்; செல்வ கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம்.
ஆவணி மாதம் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி மற்றும் பங்குனி மாதம் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதிகளில் சோழீஸ்வரரை, தனது கிரணங்களால் வழிபடுகிறார் சூரியபகவான். இந்த நாட்களில், சோழீஸ்வரரை வழிபடுவது மிகுந்த பலனைத் தரும் என்கின்றனர் பக்தர்கள்!
|
Saturday, 5 August 2017
துவாக்குடி - ஸ்ரீசோழீஸ்வரர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment