Saturday, 5 August 2017

மேட்டுப்பாளையம் - ஸ்ரீகாசிலிங்கேஸ்வரர்


ங்கை போல் புண்ணிய நதியாம் பவானியின் கரையில், ஓங்கியுயர்ந்த குன்றின் மீது கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாசிலிங்கேஸ்வரர். இந்தக் குன்றும் கோயிலும் அமைந்திருக்கும் இடம் - சத்தியமூர்த்தி நகர்; கோவை-மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, மரங்களும் கொடிய விலங்குகளும் நிறைந்த வனமாக திகழ்ந்ததாம் இந்தப் பகுதி. அப்போது கன்னட தேசத்தில் இருந்து சித்தர்கள், முனிவர்கள் என சிவனடியார்கள் பலரும் தவம் செய்வதற்காக இங்கே வந்தனர். அவர்களுக்கு, பவானி ஆற்றில் சுயம்புலிங்கம் ஒன்று கிடைத்ததும் ஆனந்தித்தனர். பிறகு, இந்தப் பகுதியிலேயே ஒரு குகையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். சிவனருளால் விரைவில் அவர்களுக்கு முக்தி கிடைத்ததாம்!
காலங்கள் உருண்டோடின! சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், தவத்திரு கிருஷ்ணதேவ் என்பவர் இந்தத் தலத்துக்கு வந்து சேர்ந்தார். குகையில் இருக்கும் சிவலிங்க மூர்த்தியை தரிசித்தவர், ஏற்கெனவே தமக்கிருந்த வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக குகைக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்தார். அழகிய மண்டபங்கள், விசாலமான பிராகாரம் அமைத்து குடமுழுக்கும் நடத்தினார். காசிலிங்கேஸ்வரரின் சாந்நித்தியம் இன்னும் அதிகரித்தது; தேடி வந்து தரிசிக்கும் பக்தர்களின் வறுமை, நோய் என சகலவிதமான துன்பங்களையும் நீக்கி அருள்புரிந்த இந்த ஈஸ்வரன், சுற்றுவட்டார பகுதி மக்களின் இஷ்ட தெய்வமானார்.
மகாசிவராத்திரி வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தத் திருநாளில் காலை 6 மணிக்கு முதல் கால பூஜை; யாவரும் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நடைபெறுகிறது. 12 மணிக்கு 2-ஆம் கால பூஜை; உலகில் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருக வேண்டும் எனும் நோக்கத்துடன், மகா தீபாராதனையுடன் வழிபாடுகள் நடக்கும். 3-ஆம் கால பூஜையின்போது மூலிகை அபிஷேகமும், 4-ஆம் கால பூஜையின்போது ஸ்ரீநடராஜ அலங்காரமும் இந்தக் கோயிலின் சிறப்பம்சங்கள்.
தொடர்ந்து தீப ஜோதியாக பிரகாசிக்கும் இறைவனுக்குச் செய்யப்படும் லிங்கோத்பவ கால பூஜையையும், இதையடுத்து நடைபெறும் 36 வகை அபிஷேகங்களையும் சிறப்பு அலங்காரத்தையும் காணக் கண்கோடி வேண்டும்!
பிறவித் துன்பம் தொலையவும், சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் நிலைக்க வேண்டியும் தினம் தினம் இங்கு கூடும் பக்தர்கள் கூட்டமே... ஸ்ரீகாசிலிங்கேஸ்வரரின் திருவருளுக்கு சாட்சி!

No comments:

Post a Comment