தே வாரப் பாடல் பெற்ற 274 சிவத் தலங்களில் கொங்கு நாட்டில் 7 தலங்கள் உண்டு. அவற்றுள் திருப்பாண்டிக் கொடுமுடி 6-வது தலம். இந்தத் தலத்தை தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடியுள்ளனர்.
ஈரோடு - திருச்சி ரயில் மார்க்கத்தில் கொடுமுடி ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு பர்லாங் தூரத்தில், காவிரி நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது திருப்பாண்டிக் கொடுமுடி. ஈரோட்டில் இருந்து 40 கி.மீ. தூரம். கோயிலுக்கு எதிரே காவிரி தென்கிழக்கில் ஓடுகிறது.
பரத்வாஜ க்ஷேத்திரம் என்று போற்றப்படும் இந்தத் திருத்தலம், பிரம்மன் வழிபட்டதால் பிரம்மபுரி. திருமால் பூஜித்ததால் அரிகரபுரம். கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமிர் தம் கொண்டு வந்ததால் அமுதபுரி. கன்மாடன் என்னும் வேதியன் வழிபட்டு, வயிற்றுப் பிணி நீங்கப் பெற் றதால் கன்மாடபுரம். இவை தவிர கறையூர், கறைசை ஆகிய சிறப்புப் பெயர்களும் உண்டு.
மேரு மலையின் ஒரு பகுதி வைரமணியாக விழுந்து பெருஞ்சிகரமாகவும், அதுவே மூல லிங்கமாகவும் அமைந்ததால் கொடுமுடி என்றும், தென் கயிலாயம் என்றும் இந்தத் தலம் சிறப்பிக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் ‘அதி ராஜராஜ மண்டலத்துக் காவிரி நாட்டுக் கறையூர்த் திருப்பாண்டிக் கொடுமுடி’ என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை வாயுதேவனுக்கும் ஆதிசேடனுக்கும் தங்கள் வலிமை குறித்து விவாதம் நிகழ்ந்தது. முடிவில் ஆதிசேடன் மேரு மலையின் சிகரங்களை அசையாமல் சுற்றிக் கொண் டான். வாயுதேவன் மிகுந்த பலத்துடன் மலையைத் தகர்க்க முயற்சித்தான். அப்போது, மலையின் ஐந்து சிறு பகுதிகள் ஐந்து மணிகளாகச் சிதறி விழுந்தன. அவை விழுந்த இடங்கள் ஐந்து திருத்தலங்கள் ஆயின. அவற்றுள் சிவப்பு மணி விழுந்த இடம் திருவண்ணாமலை. மரகதம் விழுந்த இடம் திருஈங்கோய்மலை. மாணிக்கம் - ரத்தினகிரி (சிவாயமலை). நீலமணி - திருப்பொதிகை மலை. வைரம் விழுந்த இடம் கொடுமுடியாக அமைந்தது.
கொடுமுடி என்பதற்கு ‘பெரிய சிகரம்’ என்று பொருள். மலைச் சிகரமே மகுட லிங்கமாக அமைந்துள்ளது. மற்ற நான்கு தலங்களில் விழுந்த மேரு மலைச் சிதறல்கள் மலைகளாகவே காட்சி தர... கொடுமுடியில் மட்டும் லிங்க வடிவமாக அமைந்துள்ளது.
காவிரிக்கு இந்தத் தலத்தில் தனிச் சிறப்பு உண்டு. பூலோகம் செழிக்கும் வகையில், விநாயகர் காக்கை வடி வெடுத்து அகத்திய முனிவரின் கமண்டலத்தைக் கவிழ்த்து, காவிரி நதியைப் பெருகியோடச் செய்தார் என்பது நாம் அறிந்ததே! அப்படி காவிரி கவிழ்க்கப்பட்ட இடம் கொடுமுடித்துறை என்பர். இங்கு கொடுமுடிநாதரை தரிசிப்பதற்காகவே வந்தது போல், தெற்கு நோக்கி வந்து, பின் இங்கிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறாள் காவிரி.
பரத்வாஜருக்கும் இந்தத் தலத்துக்கும் என்ன தொடர்பு? வேத ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்தவரும், தவத்தில் சிறந்தவருமான பரத்வாஜர், ஒரு முறை பல தலங்களை தரிசித்து கொடுமுடி திருத்தலத்தை அடைந்தார்.
தினமும் காவிரியில் நீராடி, வன்னி மரத்தின் அடியில் பொன்னம்பலத் தில் நடனமாடும் நடராஜப் பெருமானின் திருவடிகளைச் சிந்தித்துத் தவமிருந்தார் பரத்வாஜர். மகுடலிங்கரையும் தவறாமல் வழிபட்டார். பெருமான் அவருக்குத் திருவருள் செய்ய வேண்டி சிவ கணங்கள், முனிவர்கள் சூழ, நந்தியும் திருமாலும் மத்தளம் கொட்ட, பிரம்மன் பொற்றாளம் இசைக்க... தும்புரு, நாரதர் ஆகியோர் யாழ் இசைக்க, யாவரும் கண்டு மகிழும்படி சித்திர நடனம் செய்தருளினார். திருநடனம் கண்டு முனிவர் பெரிதும் மகிழ்ந்தார். இப்படி சிவனருள் பெற்ற பரத்வாஜரின் பெயரால் பரத்வாஜ க்ஷேத்திரம் என போற்றப்படும் கொடுமுடியில் அவரது பெயரால் ஒரு தீர்த்தமும் உள்ளது.
மலையத்துவச பாண்டிய மன்னனின் மகனுக்குக் கையிலுள்ள விரல்கள் மட்டும் வளரவே இல்லை. அவர்கள் கொடுமுடிக்கு வந்தபோது, அந்த மகனின் கைவிரல்கள் வளர்ந்தன. இதைக் கண்டு மிகவும் மகிழ்ந்த பாண்டிய மன்னன் கொடுமுடிநாயகருக்குப் பல திருப்பணிகள் செய்தான். கோபுரம், மண்டபம், அன்னசாலை, அடியார் மடம், அந்தணர்கள் வாழ இல்லங்கள், வீதிகள் ஆகியவற்றை அமைத்தான். அத்துடன் கொடுமுடிநாதருக்குப் பெரிய தேர் ஒன்றையும் செய்வித்தான். அபிஷேக ஆராதனைகளுக்காகப் பல கிராமங்களைத் தேவ தானமாக வழங்கிய அரசன், ஸ்வாமிக்குப் பல ஆபரணங்களையும் செய்து அர்ப்பணித்தான். மலையத்துவச பாண்டியன் கொடுமுடி தலத்துக்குப் பல திருப்பணிகள் செய்ததால் ‘திருப்பாண்டிக் கொடுமுடி’ என்றும், அவன் மகனுக்குப் பெருவிரல் அங்கம் வளரப் பெற்றதால், ‘அங்கவருந்தனபுரம்’ என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
ஸ்வாமி சந்நிதியில் நுழையும்போது சூரியன், சந்திரன் ஆகியோர் பக்கவாட்டுகளில் உள்ளனர். அருகில் நவக்கிரகங்கள், பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள். உள் பிராகாரத்தில் தெற்கே அறுபத்துமூவர், தட்சிணா மூர்த்தி ஆகியோர் அருள் பாலிக்கின் றனர். மேற்கில் விநாயகர், உமா மகேஸ்வரர், அகத்தீஸ்வரர், கஜ லட்சுமி, தேவியருடன் ஆறுமுகப் பெருமான், வடக்கில் நடராஜர், நால்வர் ஆகியோரையும் தரிசிக்க லாம். இங்குள்ள விநாயகர் ‘காவிரி கண்ட விநாயகர்’.
கொடுமுடி மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு கொடுமுடிநாதர், மலைக் கொழுந்தீசர், மகுடேசுவரர், மகுடலிங்கர், கொடு முடீஸ்வரர், கொடுமுடிலிங்கர் என்றெல்லாம் பெயர்கள் வழங்குகின்றன. கல்வெட்டுகளில் திருப்பாண்டிக் கொடுமுடி மகாதேவர், ஆளுடை நாயனார் ஆகிய பெயர்கள் கூறப்படுகின்றன. அம்பிகைக்கு சௌந்திராம்பிகை, வடிவுடை நாயகி, பண்மொழியம்மை ஆகிய திருநாமங்கள். ஆவணி, பங்குனி நான்கு நாட்கள் சூரியனின் கதிர்கள் ஸ்வாமி, அம்மன் திருவுரு வங்களில் விழுவது கண் கொள்ளாக் காட்சி!
பெருமாள் சந்நிதியின் இரு புறமும் பன்னிரு ஆழ்வார்கள், பரமபத நாதர், வேங்கடாசலபதி, கருடன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். மூலவர் வீர நாராயணப் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலின் தலவிருட்சம் வன்னி மரம். இது பிரம்மனின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. இங்கு பிரம்மனுடைய விக்கிரகமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த வன்னி மரத்தில் முள், பூ, காய் போன்றவை இல்லை! இதைச் சுற்றி வந்தால் பிள்ளைப் பேறு வாய்க்கும் என்பது ஐதீகம். இது தவிர பேய்த் தொல்லை, கிரகதோஷம், திருமணத் தடை ஆகியவையும் நீங்கும்.
இங்கு நான்கு தீர்த்தங்கள். காவிரி: கோயிலுக்கு எதிரே தென்கிழக்கில் ஓடுகிறது. தேவ தீர்த்தம்: வன்னி மரத்துக்கு அருகில் உள்ளது. காவிரியிலும் தேவ தீர்த்தத்திலும் மூழ்கி எழுந்து வன்னியையும், ஈசனையும், திருமாலையும் சுற்றி வந்து வழிபட்டால் பிரம்மஹத்தி உட்பட பல தோஷங்கள் நீங்கும். மூன்றாவது தீர்த்தம் பரத்வாஜ தீர்த்தம், நவக்கிரகத்துக்கு அருகில் உள்ளது. நான்காவது தீர்த்தம்_பிரம்ம தீர்த்தம்.
சைவ-வைணவச் சமநோக்கு நிலையில் வழிபடப்படும் இந்தத் திருக்கோயிலில் மூர்த்திகள் புறப்பாட்டின்போது சிவனும் திருமாலும் சேர்ந்து காட்சி தருவர்.
|
Thursday, 3 August 2017
காவிரி வணங்கும் கொடுமுடிநாதர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment