அ ந்த அதிகாலைப் பொழுதில், தங்களது மகிழ்ச்சியைக் கீச்சொலிகள் மூலம் தெரிவித்துக் கொண்டிருந்தன பறவைகள். கோயில் மண்டபத்தின் புறாக்களும் புது விடியலை நோக்கிப் புறப்பட்டிருந்தன. அந்தப் புறாக்கள் தரையில் தத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் பரஞ்சோதி.
இது தினப்படி வழக்கம். பொலபொலவென்று வெளிச்சம் கரை கட்டும்போதே அக்கச்சியார் வந்து விடுவார். ஒரு கையில் திருஅலகு இருக்கும்; இன்னொரு கையில் திருமெழுக்குத் தோண்டி இருக்கும். பால் வெண்ணீறு பூசிய நெற்றி பளிச்சென்று துலங்க அவர் வந்தாரென்றால், கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். முகம் லட்சுமிகரமாக இருக்கும்.
கோயில் மண்டபத்துக்கு அருகே அக்கச்சியார் வந்தவுடன், இடுப்பில் பொதி கட்டிச் செருகியிருக்கும் தானியத்தை எடுப்பார். புறாக்களுக்கு வைத்துவிட்டு, அவை கொத்தி எடுப்பதைச் சில நிமிடங்கள் பார்த்திருப்பார். அதற்கப்புறம், உள்ளே நுழைந்தாரென்றால்... மண்டபங்கள், தூண்கள், பிராகாரங்கள், சுவர்கள் என்று எல்லாவற்றையும் தண்ணீர் விட்டுக் கழுவி, குப்பையும் அழுக்கும் இன்றித் துடைத்து... தூண் சிலைகளை எண்ணெயிட்டு மெருகேற்றி... ஓயாமல் உழைப்பார் அக்கச்சியார். அவ்வப்போது பரஞ்சோதியும் அவருடன் சேர்ந்து கொள்வான். அக்கச்சியார் கையால் ஒரு பிடி சோறாவது வாங்கி உண்ணவில்லை என்றால், பரஞ்சோதிக்கு நாள் செல்லாது.
அக்கச்சியார் கண்களிலேயே அன்பு மிளிரும். ஆனாலும், அவ்வப்போது அக்கச்சியார் எதையோ நினைத்துப் பெருமூச்செறிவார். பணிகளை முடித்துவிட்டு, வீரட்டேஸ்வரர் சந்நிதி முன்பு அமர்ந்தாரென்றால், அப்படியே ஆழ்ந்து விடுவார்.
அக்கச்சியாரைப் பற்றி மங்கையம்மாள் சொன்னது பரஞ்சோதியின் நினைவுக்கு வந்தது. ‘பாவம்... அப்பன், ஆயி இறந்துட்டாங்களாம். கட்டிக் கொடுக்கறதா இருந்தவரும் சண்டையில உசுர விட்டுட்டாராம். இருந்த ஒரே தம்பியும், பாதிரிப்புலியூர் போய், வேறெங்கோ சேர்ந்துட்டாராம். அதிகையே கதின்னு மனசுலயோ கண்ணுலயோ அன்பு மாறாம இருக்காங்க அக்கச்சி!’ _ நினைவுகளுக்குள் நீச்சலிட்டிருந்த பரஞ்சோதி சலசலப்பு கேட்டு நிமிர்ந்தான். அக்கச்சிதான் வருகிறார். கூடவே, மற்றோர் உருவம். மேனியெல்லாம் திருநீறு. முகத்தில் வாட்டம்; இடக்கை லேசாக வயிற்றைத் தாங்கியபடி.
வழக்கமாக, ‘பரஞ்சோதி இருக்கிறானா?’ என்று எட்டி நோக்கும் அக்கச்சியார், இன்று ஏதோ நினைவில் நடந்து, பரபரப்பாக உள்ளே போனார். ‘கூட வந்தவரைப் பார்த்தால், அக்கச்சி ஜாடை போலத் தெரிகிறதே... அவர் தம்பியாரோ என்னவோ... பெயர் சொன்னார்களே... தருமசேனரோ என்னவோ...’
மெள்ள யோசித்துக் கொண்டே பரஞ்சோதியும் உள்ளே புக... கருவறை முன்னால் அக்கச்சியாரும், புதியவரும்!
திடீரென்று பாட்டுக் குரல்.
கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன் ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே
_ புதியவர் பாடிக் கொண்டிருந்தார். விட்டு விட்டு வந்த குரல். தடுமாறித் தடுமாறி வந்த வரிகள்.
கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் பெருக... பாடல் தொடர... ‘‘அக்கா, வலி போய்விட்டதக்கா’’ _ நடுவிலேயே புதியவர் சொல்ல... அக்கச்சியார் அவரையும் வீரட்டேஸ்வரரையும் மாறி மாறிப் பார்த்துக் கை கூப்பினாள். காதைத் துளைக்கும் ஒலி ஒன்று கேட்க, விக்கித்து நின்றான் பரஞ்சோதி.
‘‘நற்றமிழ் எடுத்துப் பாடியவனே! இனி நாவுக்கு அரசன் என்பதாக நாவரசன் என்றே நீ அழைக்கப்படுவாய்!’’ _ வானில் எழுந்த அசரீரி, அங்கிருந்த அனைவரையும் பரவசப்படுத்த, பரஞ்சோதி வியப்பில் மூழ்கிப் போனான்.
தி ரு அதிகை. தேவார மூவருள் காலத்தால் மூத்தவராம் மருள்நீக்கியாரை, ‘திருநாவுக்கரசர்’ என்று இறைவனார் பெயர் சூட்டி மகிழ்ந்த தலம். அவர் தமக்கை திலகவதியார், கைத் தொண்டு புரிந்த தலம்.
இன்றளவும் நோய்கள் தீரவும், பிரிந்த குடும்பம் சேரவும், அறிவு பெறவும் சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது திருவதிகை. நடுநாட்டுத் தலமாக வகைப்படுத்தப்படும் திருவதிகைத் திருத்தலத்தின் முன் நிற்கிறோம்.
அதிரைய மங்கலம், அதிராஜ மங்கலம், அதிராஜ மங்கலியாபுரம் என்றெல்லாம் கல்வெட்டுகளில் அழைக்கப்படும் அதிகை. தென்கங்கையாம் கெடில நதியின் கரையில் உள்ள அதிகை.
பெரிய கோயில். கிழக்கு ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் மிக உயரமாக உள்ளது. கோபுர வாசலில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தனிக் காவியம் பேசுகின்றன.
கோபுரத்தின் முன் நின்று சுற்றும் பார்க்கிறோம். இங்குதானே திலகவதியார் வாழ்ந்தார்! திருநாவுக்கரசர் என்னும் விளக்கைத் தூண்டிப் பிரகாசிக்க வைத்தவராயிற்றே அவர்! வாழ்க்கைப் பாதையில் பிரச்னைகள் வந்தபோதும் இறைப்பணியும் கடமையும் தன் கண்கள் என்று விளங்கியவர் ஆயிற்றே! திலகவதியாரைத் ‘தூண்டு தவ விளக்கு’ என்றே பாராட்டுவார் சேக்கிழார்.
கோயில் எதிரில் திலகவதியார் மடம். கோயிலின் முன்புறத்தில் பதினாறு கால் மண்டபம். திருநாவுக்கரசர் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய திருநீற்றுப் பெருமையைச் சொல்வதற்காக, ‘திருநீற்று மண்டபம்’ என்றே அழைக்கப்படுகிறது. மண்டபத் தூண்களில் காளை வாகனமும், மயில் வாகனமும், அப்பரும் காட்சியளிக்கிறார்கள் (திருநாவுக்கரசு பெருமான், திருஞானசம்பந்தரால் ‘அப்பரே!’ என்று அழைக்கப்பட்டு, பின்னர், எல்லோருக்கும் அப்பர் ஆகிவிட்டார் என்பது தனிக் கதை). பக்கத்திலேயே அப்பர் சுவாமி மடம்.
மீண்டும் ராஜகோபுரம் நோக்கித் திரும்புகிறோம். இரண்டு புறமும், எண்ணிலடங்கா சிற்பங்கள். அவற்றின் அழகில் வசப்பட்டு மயங்கி நிற்கும்போது, சற்று உயரத்தில் இருக்கும் திரிபுர சம்ஹார சிவன் திருக்கோலம் ஈர்த்துப் பிடிக்கிறது.
அ ட்டவீரட்டத் தலங்கள் என்பவை, சிவபெருமானின் வீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டு ஊர்களாகும். இவை யாவும் வீரட்டானங்கள். திருவதிகை, சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. இது திரிபுரம் எரித்த வீரத்தலம்.
வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்று மூன்று அரக்கர்கள். சிவ பூஜை செய்து, முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைப் பெற்றனர். அவற்றில் பறந்து பறந்து பலரையும் துன்பப்படுத்தினர்.
அரக்கர்களின் கொடுமை தாங்காமல் பலரும் சிவபெருமானிடம் வேண்ட, அரக்கர்களை அழிக்க அவரும் திருவுளம் பற்றினார். சூரியனும் சந்திரனும் தேர்ச் சக்கரங்களாக; காலம், வானம், பஞ்சபூதங்கள் போன்றவை தேரின் பாகங்களாக; வேதங்கள் குதிரைகளாக; பிரம்மா தேரின் சாரதியாக... அந்தத் தேரில் ஆரோகணித்தார் சிவப் பரம்பொருள். தேரில் ஏறி விண்ணில் நின்று, தங்களால் விண்ணில் பறக்க முடியும் என்று இறுமாந்திருந்த அரக்கர்களை அழிக்கப் புறப்பட்டார். மேரு மலையை வளைத்து வில்லாக்கி, வாசுகியை நாணாக்கி, விஷ்ணுவை அம்பாக்கி, அரக்கர்களை அம்பெய்யப் புறப்பட்டார்.
அம்பெய்யவே இல்லை. அதற்கு முன்பாகவே, பொன்னும் வெள்ளியும் இரும்பும் பாதுகாப்பு தரும் என்று பதுங்கிய ஆணவம் கண்டு மென்னகை புரிந்தார். அவரின் புன்னகையிலிருந்து புறப்பட்ட ஒளிப்பிழம்பு, மூன்று கோட்டைகளையும் எரித்து அரக்கர்களை அழித்தது. (விநாயகரை வணங்காமல் புறப்பட்டதால், தேரின் அச்சு முறிந்ததாகவும் அவ்வாறு முறிந்த இடமே அச்சிறுபாக்கம் எனவும், பின்னர் அங்கு விநாயகருக்கு அருள் செய்த பரமன், அதிகை நோக்கிப் புறப்பட்டார் என்றொரு துணை வரலாறும் உண்டு).
திரிபுரம் எரித்ததால் திரிபுராரி, முப்புராரி, புராரி, திரிபுராந்தகர் என்றெல்லாம் சிவனுக்குத் திருநாமங்கள் உண்டு. ‘அவனிரதம் அர்க்கேந்து சரணம்’ (அர்க்கன் - சூரியன்; இந்து-சந்திரன்; சரணம்-கால்) என்று இந்தத் தேரை, ஆதிசங்கரர் வர்ணிப்பார்.
முப்புராரியின் திருக்கோலத்தை மீண்டும் காண்கிறோம். விண்ணில் நின்று வீரம் நாட்டிய கோலம் என்பதாலோ என்னவோ, சற்றே உயரத்தில்தான் இருக்கிறது. சிவனின் சிரிப்பு, சிந்தையை அள்ளுகிறது. யாரோ மூன்று அரக்கர்களா அவர்கள்? மும்மலங்களுக்குள் கட்டுப்பட்டுக் கொண்டு, உலோகங்களும் கோட்டைகளும் பாதுகாப்புக் கொடுத்து விடும் என்று பொய்மைக்குள் தன்னைப் புகுத்திக் கொள்ளும் ஒவ்வோர் ஆன்மாவும், அரக்கன்தானே! திரிபுராரியின் சிரிப்பு ஆயிரம் அர்த்தங்களை உபதேசிக்க, புரிந்தும் புரியாமலும் தலையாட்டிக் கொண்டே, ‘மும்மலங்களையும் அண்ட விடாமல் காப்பாற்றப்பா!’ என்று ஐயனிடம் வேண்டிக் கொண்டே உள்ளே நுழைவோம்!
வாயிலின் இரு பக்கங்களிலும் இன்னும் இன்னும்... இன்னும் அழகுச் சிற்பங்கள். நடனக் கலைச் சிற்பங்கள். பரத சாஸ்திரத்தின் 108 கரணங்களையும் காட்டும் சிற்பங்கள். நடன மூர்த்தியான சிவபெருமான், அண்டலோகத்தையுமே தனது நடனத்தால் ஆள்கிறார். அவருக்கு அஞ்சலியாக நடன கரணங்கள் போலும். ‘ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே!’ என்று எண்ணிக் கொண்டே தொடர்ந்து செல்கிறோம்.
உள்ளே, மற்றுமொரு பதினாறு கால் மண்டபம். அதற்குப் பக்கத்தில் திருக்குளம். சக்கர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் உள்ள முகப்புத் தூண்களில், எதிரெதிராக இரண்டு சிற்பங்கள். அமர்ந்த கோலத்தில் ஒருவர்; அவருக்கு எதிர்த் தூணில் நின்ற கோலத்தில், கை கூப்பியபடி ஒருவர். அமர்ந்தவர் சுப்பிரமணியத் தம்பிரான்; நிற்பவர் சிவஞானத் தம்பிரான். சுப்பிரமணியத் தம்பிரான்தான், இந்தக் கோயிலைச் செப்பம் செய்தவர். அவரின் சீடரான சிவஞானத் தம்பிரான், அப்பர் பெருமானுக்கு விழா கொண்டாடும் பழக்கத்தை இங்கு ஏற்படுத்தியவர்.
உள் கோபுரத்தை அடைகிறோம். ஐந்து நிலைகள். கொடிமரம், நந்தி. (நமக்கு) வலப்புறம் நூற்றுக்கால் மண்டபம். ‘தேவ சபை’ என்று பெயர். திரிபுரம் எரித்த பின், தேவர்கள் அனைவரும் வந்து, இங்கிருந்து சிவனை வணங்கியதாகக் கூறப்படுகிறது. நடராஜ அபிஷேகம் நடைபெறும் மண்டபம்.
உள் கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால், உயரமான நந்தி. ஒரு பக்கம் விநாயகர். இன்னொரு புறம் முருகர். வணங்கி வலம் வருவோம், வாருங்கள்!
பிராகார வலம் தொடங்குகிறோம். அப்பர் பெருமானின் (செப்பு) உற்சவத் திருமூர்த்தம். தொடர்ந்து சேக்கிழாரும், அறுபத்துமூவரும் மூலத் திருமேனிகள். பின்னர், தல மரமான சரக்கொன்றை. மிளிர் கொன்றை சூடிய கொன்றை வேந்தர் ஆயிற்றே சிவபெருமான்! அவருக்கு மிகவும் உகப்பான சரக்கொன்றை. அருகில் திலகவதியார் திருச்சந்நிதி. கல் சிற்பம்.
ராஜராஜ சோழப் பேரரசரின் தமக்கையார் குந்தவைப் பிராட்டியார், ‘அக்கையார்’ என்னும் அன்புப் பெயரால் பிரசித்தி பெற்றவர். தேவாரம் கண்டெடுத்த அந்தச் சோழ மன்னருக்குப் பல்லாண்டு காலம் முன்னரே, தேவாரம் பாடித் திருமுறை செழிக்கச் செய்தவர் நாவுக்கரசர். நாவுக்கரசருக்கே நல்வழி காட்டியவர் அவர் திருத்தமக்கையார் திலகவதியார். சைவ உலகுக்கும், உண்மை ஞானத்துக்கும் அக்கையாராக விளங்கும் அந்தப் பெருமாட்டியைப் பணிந்து வணங்குகிறோம். ‘அக்கையாரே! எங்களையும் அறவழி நடப்பியுங்கள் அன்னையே!’ என்று மனதார வணங்கி நகர்கிறோம்.
அடுத்து சனைஸ்வரர். முன்னால், சிவலிங்கம். தாண்டி வர, மூலவர் அப்பர் சந்நிதி. அமர்ந்த கோலமும், அருள் புன்னகை முகமும், கையில் உழவாரப் படையும்... அடி பணிந்து நிற்கிறோம். அப்பர் பெருமானுக்கு இந்தத் தலம் பல விதங்களில் நெருங்கிய தொடர்புடையது. அந்தக் கதை...
நாவுக்கரசரான பின்னர், பல துன்பங்களுக்கு ஆளானார் அப்பர். நீற்றறையில் (சுண்ணாம் புக் காளவாய்) ஏழு நாட்கள் வைத்துப் பூட்டப்பட்டார். சோற்றில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டார். யானையால் இடறப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டார்.
மிகு சினம் கொண்டு ஒற்றை யானை வந்தது. எல்லோரும் பயந்து ஓட... அப்பர் மட்டும் அஞ்சாமல் நின்றார். கெடிலக் கரை அதிகையானை அகத்தில் எண்ணினார்.
சுண்ண வெண் சந்தனச் சாத்தும் சுடர்த் திங்கள் சூளா மணியும் வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை,
யானையென்ன, பூனையென்ன... அண்டமே எதிர்த்து வந்தாலும், உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமென்ப தில்லையே - அரனார் பதம் பணிந்தால்தானே! ‘கெடிலக் கரையார் தமர்- அவருடையவர் நாம்’ என்று அப்பர் சொன்ன சொல்லின் பொருளுணர்ந்து வணங்குகிறோம்.
உழவாரப்படை உள்ளத்தை உருக்கு கிறது. தமிழ்நாடும் தென்னகமும் ஏன் பாரதப் பெருங்கண்டமும்கூட அப்பர் பெருமானுக்கு ஆயிரமாயிரம் நன்றிக் கடன் பட்டுள்ளது. ஊர் ஊராகச் சென்று, உழவாரப் பணி செய்து, திருக்கோயில்களுக்கு வழியும் செலவும் வடித்துக் கொடுத்தவர்; மண்மேடிட்ட ஆலயங்களைத் தேடியெடுத்துக் கொடுத்தவர்; கோயில்கள் இடிக்கப்படாமல் காப்பாற்றியவர்; மரத்தாலும் சுதையாலும் கட்டப்பட்ட கோயில்கள் காலத்தால் அழிந்துபோய் விடலாம் என்பதால், மகேந்திரவர்ம பல்லவன் போன்றோர் கற்கோயில்களை எடுப்பிக்கக் காரணமாக இருந்தவர்; பண்முறைகளில் தேவாரப் பாடல்களைப் பாடிக் கொடுத்துத் தமிழிசையை வளர்த்தவர். இன்றைய பார்வையில் சொல்லப் போனால், இசையையும் தமிழையும் இதம் தரு கட்டடக் கலையையும் இனிய நற் சுற்றுலாவையும் பேணிப் பராமரித்தவர். கைத் தொண்டுக்காரரான அவரின் மெய்த் தொண்டு, மெய்யெல்லாம் புளகாங்கிதம் உண்டாக்க, அந்தப் பொய்யில் புலவராம் அப்பர் பெருமானைக் கண்ணீர் மலர்களால் அர்ச்சிக்கிறோம்.
பிராகார வலத்தில், அடுத்து விநாயகரையும் பசுபதிநாதராம் பஞ்சமுக லிங்கத்தையும் வணங்கி, தொடர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனிகள் பலவற்றையும் தொழுது, யாக சாலை கடந்து, நவக்கிரகச் சந்நிதியில் கும்பிட்டு, நடராஜ சபையை அடைகிறோம்.
ஆடிய கூத்தனின் ஆட்டம் - ஆகாயம், பூமி என அனைத் தையும் அசைய வைக்கும் ஆட்டம். கண்ணார தரிசித்து, மூலவர் சந்நிதியை அடைய முற்படுகிறோம். மூலவர் சந்நிதியின் முன் மண்டபம். உற்சவர் திரிபுராந்தகர் (திரிபுர சங்காரமூர்த்தி). இவரின் திருச்சந்நிதி தெற்கு நோக்கிக் காணப் படுகிறது. தேரோட்டத்தின்போது திருத்தேரில் எழுந்தருள்பவர் இவர்தான்.
உள் மண்டபத்தை அடைந்து, நேரே பார்வையைச் செலுத்தினால்... மூலவர் - வீரட்டேஸ்வரர்! சிவலிங்கத் திருமேனி. கிழக்கு நோக்கிய பெரிய சிவலிங்கம். ஆவுடையாரும் பெரியது. லிங்க பாணத்தில் பதினாறு பட்டைகள். ஷோடச கலா லிங்கம். கன கம்பீரம். வீரட்டநாதர், அதிகைநாதர், கெடிலநாதர் என்றெல்லாமும் இவருக்குத் திருநாமங்கள் உண்டு.
வார்கெடிலத் தென் அதிகையோங்கித் திலகவதியார் பரவு மன்னதிகை வீரட்ட மாதவம்-என்று வள்ளலார் பாடிய பரமனார். வீரட்டேஸ்வரரின் வீரமும் அருளும் உள்ளத்தை நிறைக்கின்றன.
வீரட்டேஸ்வரர் வீரம் மட்டுமா காட்டுவார்? அருள் பொழியும் ஆதி பரமனார் ஆயிற்றே! அவர் சுந்தரருக்குக் காட்டிய அருள் எத்தகையது!
சுந்தரர், சிதம்பரம் செல்லும் வழியில் பெண்ணையாற்றைக் கடந்து, திருவதிகைத் திருத்தலத்தின் அருகே வந்தார்.
நின்றார்; யோசித்தார். ‘உழவாரப் படையாளி, கைத்தொண்டு புரியும் பெருங்காதல் நாவரசர் நடந்த பதியில், தன் கால்கள் கொண்டு மிதித்து நடப்பதா?’ பதி மிதித்துச் செல்ல அஞ்சினார். பக்கத்தில் உள்ள சித்தவட மடம் சென்றார். அங்கேயே தங்கினார்.
இரவு சித்தவட மடத்தில் உறங்கினார். நல்ல உறக்கம். யாரோ தலையில் தட்டுவது போலத் தோன்றியது. கலக்கத்துடன் கண் விழித்துப் பார்த்தார். பாவம், யாரோ வயதான ஒருவர். ஒரு கால் மடக்கி, ஒரு கால் நீட்டி... தூங்கும் முதியவரின் கால் இவருடைய தலையில் தட்டியது. ‘பாவம்’ என்று இடம் மாறிப் படுத்தார். கலைந்த உறக்கம், மீண்டும் கண்களைக் கவ்வும் நேரம். மறுபடியும் தலையில் ஓர் இடி! கோபம் வந்தது. தான் திசை மாறிப் படுத்தால் பெரியவரும் திசை மாறிப் படுத்திருக்கிறார். பெரியவரை எழுப்பிக் கோபப்பட்டார். ‘‘அடுத்தவர் தலை வைத்திருக்கும் இடத்தில் கால் வைக்கலாமோ? பெரியவராக இருந்துமா திசை முறை தெரியவில்லையா?’’
‘‘வயதாகி விட்டதால், கண் மங்கிப் பார்வை சரியாகத் தெரியவில்லை’’ என்று வருத்தம் காட்டினார் முதியவர்.
எழுந்த சுந்தரர், மீண்டும் இடம் மாறினார். ஆனால், மீண்டும் தலை இடி. அடுத்தெழுந்து இடம் மாற... அடுத்தொரு தலை இடி. முதியவரின் கால்கள், இவரின் தலையைத் தீண்டாமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டன போலும்!
‘‘இங்கு என்னைப் பல முறை மிதித்த நீர் யார்?’’ வேகமாக வந்த வார்த்தைகளுக்கு, வேகமான விடை வந்தது.
‘‘எம்மை அறிந்ததில்லையோ!’’ _ கேட்ட வேகத்தில் மறைந்தும் போனார் அந்த மறை முதியவர்.
ஆஹா... வீரட்டேஸ்வரரின் வீர விளையாடல்களில் இதுவும் ஒன்றா! புரமெரித்தவர், புறநகர்க்கு வந்து அருள் புரிந்த அற்புதமன்றோ!
தம்மானை அறியாத சாதியார் உளரே என்று கேட்டு, தம்மான் தன் அடிக்கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் எம்மானை எறிகெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே!
என்று தொடர்ந்து வீரட்டேஸ்வரரைப் பாடினார் வன் தொண்டராம் சுந்தரர். இருக்கும் இடம் தேடி வந்து அருள் சுரந்த பிரானின் திருக்கோலம் கண்டு தரிசிக்கிறோம்.
இரண்டு புறமும் நிறைய உற்சவத் திருமேனிகள். பிட்சாடனர், விநாயகர், சந்திரசேகரர், திலகவதியார், சைவ நால்வர், சண்டேஸ்வரர் என்று எல்லாமே அழகு கொஞ்சும் அருள் மூர்த்தங்கள். கருவறையை வலம் வர யத்தனிக்கிறோம். கருவறை சுதைக் கட்டுமானம். இதிலிருந்து முன்பகுதியை வளர்த்தி, கற்கோயில் கட்டப்பட்டுள்ளது.
அதிகைக் கருவறை கட்டுமானம் அதி அற்புதமானது. தேர் வடிவம். புரமெரித்தபோது, தேரில் புறப்பட்டதைக் காட்டும் விதத்திலான வடிவம். தேரின் நிழல் கீழே விழாத படியான அமைப்பு. எண்கோண விமானம்.
கருவறையைச் சுற்றி வரும்போது, இன்னோர் எழிலும் நம் உள்ளத்தைக் கவர்கிறது. கோஷ்ட மூர்த்தங்கள், குடைவரைச் சிற்பங்கள் போல, உட்குடைவும் பக்கவாட்டு வளர்த்தியுமாக உள்ளன.
தட்சிணாமூர்த்தியும் லிங்கோத்பவரும் துர்க்கையம்மனும் நெஞ்சுக்குள் சென்று நேரடியாக அமர்கிறார்கள். சண்டேஸ்வரரின் அழகு சொல்லி மாளாது. திருவதிகைத் திருத்தலம், வரலாற்று ரீதியாகப் புகழ் வாய்ந்த தலம் மட்டுமன்று. சிற்பக் கலை பொக்கிஷமாகவே திகழ்கிறது. சரபமூர்த்தி, கல்யாணசுந்தரர், ஏகபாதர், நடன மங்கையர், ரிஷபாரூடர் என்று சிற்பங்களின் பட்டியல் பெரியது; அவற்றின் நுட்பமும் துல்லியமும் அளவிடற்கு அரியது.
அதிகைக் கோயிலின் ஆடற் சிற்பங்களைக் காணும்போது, திருஞானசம்பந்தருக்கு வீரட்டேஸ்வரர் அருளிய ஆடற்கோலம் நினைவுக்கு வருகிறது.
பாண்டி நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு, சீர்காழியை அடைந்த ஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு தொண்டை நாடு நோக்கிச் சென்றார். வழியில், நடுநாடு அடைந்து, திருப்பாதிரிப்புலியூரில் பெருமானை வணங்கிப் பின்னர் திருவக்கரை, இரும்பை மாகாளம் வழியாக அதிகை வீரட்டானத்தை அடைந்தார்.
திருஞானசம்பந்தர் வந்தபோது, பூதகணங்கள் பாடிக் கொண்டிருக்க, பாட்டுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார் நாயக பிரான்!
எண்ணார் எழில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி மண்ணார் முழுவதிர முதிரா மதிசூடிப் பண்ணார் மறை பாடப் பரமன் அதிகையுள் விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே! என்று பாடித் தொழுதார் ஞானசம்பந்தர்.
ஞா னசம்பந்தருக்கு நடனத் திருக்கோலம், நாவுக்கரசருக்குச் சூலைக்கான தீர்வு, சுந்தரருக்கோ திருவடி தீட்சை - இப்படி தேவார மூவருக்கும் திருவருள் பொழிந்து, மூவராலும் பாடப்பெற்ற அதிகை எம்பெருமானை மீண்டும் மீண்டும் வணங்கித் துதிக்கிறோம்.
சுவாமி, சந்நிதியிலிருந்து வெளிவந்து சுவாமிக்கு வலப் பக்கம் சென்றால், தனிக்கோயிலாக உள்ள அம்பாள் சந்நிதி. அம்பிகை திரிபுரசுந்தரி. பெரியநாயகி என்றும் திருநாமம் உண்டு. ஐயனுக்கு வலப் பக்கத்தில் அம்பிகை சந்நிதி, சில இடங்களில் மட்டுமே உண்டு. அம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியது. அம்பிகை அழகு ஸ்வரூபம். நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். அடைந்தோருக்கு அருளும் அபய ஹஸ்தம்; கேட்டோருக்கு அருளும் வர ஹஸ்தம். திரிபுராந்தரின் தர்மபத்தினி என்பதால், திரிபுரசுந்தரி. சாதாரணமாகவே, அம்பிகை பரமேஸ்வரிக்கு திரிபுரை என்றொரு திருநாமம் உண்டு. முப்புரை என்றே அபிராமி பட்டர் பாடுவார்.
அ தியரையமங்கை என்பதுதான் இந்த ஊரின் பழங் காலப் பெயர் என்றும், அதுவே திரிந்து குறைந்து அதிகை என்றானதாகவும் தமிழறிஞர்கள் கூறுகிறார்கள். அதிகைக் கெடில வீரட்டானம் என்றே பாடுகிறார் அப்பர் சுவாமி. இந்தத் திருத்தலத்தில் அம்பிகைக்கும் ஐயனுக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம். இன்றும்கூட, சுற்று வட்டாரப் பெருமக்கள் இந்தக் கோயிலில் வந்து திருமணம் நடத்துவிக்கிறார்கள்.
எந்தத் தலங்களின் கருவறைச் சுவர்களி லெல்லாம், (சிவலிங்க மூர்த்தத்தின் பின்புறம்) உமா நாயகராக, (அம்பிகையும் பரமேஸ்வரனும் காட்சி தரும் கோலம்) இறைவன் எழுந்தருளியிருக்கிறாரோ, அங்கெல்லாம் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடைபெற்ற திருமணத் தலமாகக் கொள்ளுதல் மரபு.
தி ருவதிகைத் திருக்கோயில் மட்டுமல்லாமல், சுற்று வட்டாரத்தில் சில இடங்களும் பார்க்கப்பட வேண்டியவை. திலகவதியார் பணி செய்ததாகக் கருதப்படும் நந்தவனம், இப்போதும் கெடிலக்கரையில் உள்ளது.
அதிகைக் கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. மேற்கே சென்றால், ஆதிகுணபரவீச்சரம் என்னும் கோயிலின் சிதிலங்களைக் காணலாம். திருநாவுக்கரசரால் நன்னிலைப் படுத்தப்பட்டு, மகேந்திரவர்ம பல்லவ மன்னர் கட்டிய திருக்கோயில். குணபரன் என்பது அந்த மன்னரின் பெயர்.
அதிகைக் கோயிலுக்கு அருகே இருக்கும் இன்னொரு முக்கியமான இடம், சுந்தரர் தங்கியிருந்த சித்தவட மடம். சிந்தாந்த மடம், சிவனாண்டி மடம் என்றெல்லாம் பலவாறாக அழைக்கப்பட்டு, தற்காலத்தில் கோடாலம்பாக்கம் என்ற பெயரில் வழங்கி வருகிறது.
அதிகைக் கோயில் இருக்கும் இடம் (வட) கயிலாயம் எனப்படு கிறது. (தமிழ்நாட்டில் உள்ள தென் கயிலாயமாம், திருவையாறுக்கு இது வடக்கு). கோயிலுக்குத் தெற்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில், வேகாக்கொல்லை என்றோர் இடம் உள்ளது. வட கயிலாயப் பகுதியின் மண் செந்நிறமானது (செம்மண்); வேகாக்கொல்லையின் மண், வெள்ளையாக இருக்கிறது. திரிபுர சங்கார காலத்தில், வெந்த மண் செம்மண்ணாயிற்று என்றும், வேகாத பகுதி வெள்ளையாக நின்றது என்றும் செவி வழிக் கதைகள் உண்டு.
சைவ சமய இலக்கியங்களில், (பன்னிரு) திரு முறைகள் காலத்துக்குப் பிற்பாடு தோன்றியவை மெய்கண்ட சாத்திரம் எனப்படும் பதினான்கு நூல்கள். இவற்றுள் ஒன்றான, உண்மை விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர் மனவாசகம்கடந்தார், அதிகையைச் சேர்ந்தவர்.
திருவதிகையைப் பற்றி மகாபாரதத்திலும் கூறப்பட்டுள்ளது. எல்லாவற்றை யும் விடப் பெரிய பெருமை ஒன்று திருவதிகைக்கு உண்டு. தேவார மூவரில் மூத்தவர் திருநாவுக்கரசர். இவர் பாடிய முதல் தேவாரப் பாடல், திருவதிகையில்தான் தோன்றியது. அப்படியானால், தேவாரத் தலங்களிலேயே, முதல் தலமாக விளங்கும் பெருமைக்குரியது திருவதிகைத் திருத்தலம்.
No comments:
Post a Comment