அமர்நாத் சிவலிங்கம் ஆவணி மாதம் அமாவாசை அன்று உறைபனியில் உருவாகத் தொடங்கி, பௌர்ணமியில் பூரணப் பொலிவுடன் திகழும். இந்த சிவலிங்கம் அடுத்த அமாவாசைக்குள் கரைந்து அருவமாகும்.
 கோதாவரி நதிக்கரையில் உள்ள திரயம்பகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. இங்குள்ள சிவலிங்கம் வித்தியாசமானது. அதில் பிரம்மன், விஷ்ணு ஆகியோரின் உருவங்கள் கட்டை விரல் அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மீது கோதாவரியின் மெல்லிய நீர்த்துளிகள் இடைவிடாமல் விழுந்து கொண்டிருக்கும்.
 மத்தியப் பிரதேச மாநிலத்தில் உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரர் ஆலயம் உள்ளது. இதில் நில மட்டத்துக்குக் கீழே படிகளில் இறங்கி, குகை வழியே செல்ல வேண்டும். இங்குள்ள திருக்குளத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளாவின் போது, வெவ்வேறு திசைகளிலிருந்து இங்கு வரும் பாதாளத் தண்ணீர் வெவ்வேறு நிறத்தில் இருக்கும். இங்குள்ள சிவபெருமானுக்கு மயானச் சாம்பல் சாற்றப்பட்டு, அதுவே பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
 ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை ஆலயத்தில் உள்ள நடராஜர் விக்கிரகம் மரகதத்தால் ஆனது. இந்த விக்கிரகத்தை நேரடியாகப் பார்த்தால் கண்கள் கூசும். ஆகவே எப்போதும் சந்தனக் காப்பிட்டு வைத்திருக்கிறார்கள். திருவாதிரை நாளின்போது மட்டும் குருக்கள் தம் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு இந்த மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு சாற்றுவார்.
 ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்க உருவங்கள் செதுக்கப்படுவது சகஸ்ரலிங்கம் எனப்படும். திருவிரிஞ்சை, திருக்காளத்தி போன்ற தலங்களில் இத்தகைய லிங்கங்கள் உள்ளன. கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் உள்ள லிங்கத்தில் கோடி லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. எனவே, இங்குள்ள இறைவனது பெயர் கோடீஸ்வரர்.
 சிவன் கோயில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கும். ஆனால், குளித்தலையில் உள்ள கடம்பவனநாதர் கோயில், வடக்கு நோக்கி உள்ளது. கங்கைக் கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் போல, காவிரிக் கரையில் வடக்கு நோக்கியிருக்கும் கோயில் இது ஒன்றுதான்.
 நேபாளத்தின் தலைநகரான காட்மண்டில் பசுபதிநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள சொர்க்கநாதர் ஆலயத்தில் வெள்ளியாலான சிவலிங்கம் உள்ளது.
 கோவா மாநிலம், ஜம்பாவனி-தாமோதர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள தங்க லிங்கத்துக்கு தினமும் 51 மலர்களை பூஜைக்கு பயன்படுத்துகிறார்கள்.
 இந்தியாவின் மிகப் பழைமையான சிவலிங்கம் ஆந்திராவில் கடிமல்லம் கிராம ஆலயத்தில் இருக்கிறது. இந்த லிங்கம் கி.மு 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
 கும்பகோணம் நகரத்தில் காவிரிக்குத் தென்புறம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் நிறுவப்பெற்ற கோயில் இது. இங்குள்ள இறைவனை வழிபட்டால் வாயு லிங்க க்ஷேத்திரமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும். இறைவன் காளஹஸ்தீஸ்வரர். அம்பாள் ஞானாம்பிகை. இங்கு கார்த்தியாயினி சமேத கல்யாண சுந்தரமூர்த்தி தனிச் சிறப்புடன் விளங்குகிறார்.
 கர்நாடகா மாநிலம் கோலார் தங்கவயலில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியில் ஏராளமான சிவலிங்கங்கள் காட்சியளிக்கின்றன. இங்கு ஒரு கோடி சிவலிங்கங்களை நிறுவி சாதனை படைப்பது நோக்கம். இதுவரை 11 லட்சம் லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. மட்டுமின்றி பிரமாண்டமான, 108 அடி உயர சிவலிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது. உலகிலேயே இதுதான் மிகப் பெரிய சிவலிங்கம் என்கிறார்கள்.
 இலங்கையில் திருக்கேத்தீஸ்வரத்தில் அமைந்துள்ளது திருக்கேத்தீஸ்வரர் ஆலயம். இங்கு மாசி மாதம் சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று நான்காம் கால பூஜை துவக்கத்தில் ராகு-கேது அம்சமான பாம்புகள் இரண்டு, சிவலிங்கத்தின் இரு பக்கங்களிலும் காட்சி தருகின் றன. இதை கலியுகத்தின் அற்புத தரிசனமாக இந்தப் பகுதி மக்கள் கருதி வணங்குகின்றனர்.
 தஞ்சாவூர்-கோவில்வெண்ணி சிவாலயத்தில் உள்ள மூலவரின் பெயர் கரும்பேஸ்வரர். பெயருக்கு ஏற்றாற் போல் இவர், கரும்புகளை ஒன்று சேர்த்து வைத்தது போல் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
|
No comments:
Post a Comment