Saturday, 5 August 2017

சேந்தபூமங்கலம் - ஸ்ரீகயிலாசநாதர்


தென் தமிழ்நாட்டு நவக்கிரக தலங்களில் சுக்கிர (2-வது) திருத்தலம்; நவ கயிலாயத் திருத்தலங்களில் கடைசி தலம்; கீழ் கயிலாய தலங்களுள் 3-வது திருத்தலம் என பல பெருமைகளைக் கொண்டது சேந்தபூமங்கலம். தூத்துக்குடி மாவட்டம்- ஆத்தூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் இறைவன் ஸ்ரீகயிலாசநாதர்; அம்பாள் ஸ்ரீஅழகிய பொன்னம்மை.
அகத்திய முனிவரின் சீடர்களில் ஒருவர் ரோமசர். இவர், ''சிவனாரை தரிசிக்க அருள் புரியுங்கள்'' என்று குருநாதரிடம் வேண்டினார். ''நான் லிங்க பூஜை செய்த மலர்களை, இதோ... தாமிரபரணியில் விடுகிறேன். இந்தப் பூக்கள் எங்கு போய் கரை ஒதுங்குகின்றனவோ, அங்கே உனக்கு சிவதரிசனம் கிடைக்கும்'' என்று அருளினார் அகத்தியர்.
தாமிரபரணியில் அகத்தியர் இட்ட பூக்கள் சேர்ந்த திருவிடம் சேர்ந்த பூ மங்கலம் என்று பெயர் பெற்றது. தற்போது, சேந்தபூமங்கலம் எனப்படுகிறது. அவனிய சேகர சதுர்வேதிமங்கலம் என்றும் சொல்வர். இந்தத் தலத்தில், குருநாதர் அருளியபடியே சிவ தரிசனம் கிடைக்கப்பெற்றார் ரோமசர்.
இயற்கை எழிலார்ந்த இந்த ஊரில் அமைந்திருக் கும் சிவாலயம் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாம். இறைவன் ஸ்ரீகயிலாசநாதர் கிழக்கு நோக்கி அருள, அம்பிகை ஸ்ரீஅழகிய பொன்னம்மை மேற்கு நோக்கி அருள்கிறாள். இது சுக்கிர ஸ்தலம் ஆதலால், ஜாதகத்தில் சுக்கிரபலம் குறைவானவர்கள், இங்கே வந்து வழிபடுவது சிறப்பு. இங்கே, சண்டிகேச தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீகயிலாசநாதருக்கு வில்வ அர்ச்சனை செய்து, மனம் உருக வேண்டினால் போதும்... சுக்கிர பலம் கூடும்; சுக்கிர யோகம் கிடைக்கும் என்று சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.
இங்கே விமரிசையாக நடைபெறும் விழாக்களுள், மகாசிவராத்திரியும் ஒன்று. இந்தத் திருநாளில் 4-ஆம் கால பூஜையின்போது சண்டிகேச தீர்த்தத் தில் நீராடி, ஸ்வாமிக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி, நீராஞ்சன விளக்கில் ஒன்பது திரியிட்டு விளக்கேற்றி வழிபட... விரைவில் திருமணம் நடைபெறுமாம்.
சுமார் 20 வருடங்கள் வரை ஒருவரின் ஜாதகத் தில், ஆட்சி செய்வார் சுக்கிர பகவான். கிட்டத்தட்ட ஒருவரின் வாழ்க்கையையே தீர்மானிக்கும் சுக்கிர பகவானின் அருளைப் பெற சுக்கிர ஸ்தலமான சேந்தபூமங்கலம் கயிலாசநாதரை தரிசியுங்கள்; நிறைவான வாழ்வைத் தந்தருள்வார் ஈசன்!

No comments:

Post a Comment