Saturday, 5 August 2017

பொன்னேரி - ஸ்ரீஅகத்தீஸ்வரர்


சிவனாரின் கட்டளைப்படி, உலகை சமன் செய்ய தெற்கு நோக்கி பயணப்பட்ட அகத்தியர், வழிநெடுக பல தலங்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டாராம். அவற்றில் ஒன்று பொன்னேரி ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்!
திருவள்ளூர் மாவட்டம்- பொன்னேரியில், ஆரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில். சோழ சக்கரவர்த்தி ராஜராஜ பெருவுடையார் எழுப்பிய ஆலயம்! சிவ சந்நிதிக்கு வலப்புறம், ஸ்ரீஆனந்தவல்லி எனும் திருநாமத்துடன் காட்சி தருகிறாள் அம்பாள். எனவே, இது திருமண வரம் அருளும் தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
அதுமட்டுமா? நெடுந்தொலைவு பயணம் செய்த அகத்தியர், இந்தத் தலத்துக்கு வந்தபோது, தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டாராம். இங்கே, சிவனாரை விபூதியால் அர்ச்சித்து வழிபட்டு, அதனை உட்கொள்ள...வயிற்றுவலி நீங்கியதாம். எனவே தீராத வயிற்றுவலியால் அவதிப்படுவோரும், நோயால் வருந்துவோரும் இங்கே வந்து அகத்தீஸ்வரரை வழிபட்டு, விபூதிப் பிரசாதத்தைப் பெற்றுச் செல்கின்றனர்!
அமாவாசைதோறும் இங்கே நடைபெறும் சிவசக்தி பூஜை விசேஷம்! சிவனார் தவத்தில் ஆழ்ந்திருந்த வேளையில்... அவர் மீது பனித் துகளை அள்ளித் தெளித்தாளாம் தேவி. இதனால், தவம் கலைத்த தோஷத்துக்கு ஆளானாள். 'பூலோகம் சென்று அகத்தியரை சந்தித்தால் தோஷம் நீங்க வழி கிடைக்கும்' என்று நாரதர் சொல்ல... அதன்படி அகத்தி யரை சந்தித்தாள் பார்வதிதேவி. ''இந்த நதிக் கரையில் 11 அமாவாசைகள் தொடர்ந்து சிவபூஜை செய்து வழிபடுங்கள்; தோஷம் விலகும்'' என்றார் அகத்தியர். பார்வதியாளும் 11 அமாவாசைகள் சிவபூஜை செய்து சாபம் நீங்கப் பெற்று, மீண்டும் சிவனாரை அடைந்தாள். எனவே, அமாவாசை தினங் களில் இந்தக் கோயிலுக்கு வந்து சிவ-சக்தி பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால், இல்லறம் செழிக்கும்; தம்பதி ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம்!
இங்கே தவம் செய்தபோது பார்வதி தேவி நீராடிய குளம், ஆலயத்தின் தீர்த்தக் குளமாகப் போற்றப்படுகிறது. ஸ்ரீஆனந்த வல்லி திருக்குளம் என்பர். இதில் நீராடி, ஸ்வாமி மற்றும் அம்பாளை ஏழு முறை வலம் வந்து வணங்க, தடைப்பட்ட திருமணம் கைகூடும்; புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீஅகத்தீஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து, ஸ்ரீஆனந்தவல்லிக்கு தாமரைத் தண்டு திரியிட்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; ஆனந்தம் பெருகும்!

No comments:

Post a Comment