Tuesday, 1 August 2017

அரசர்களுக்கு உதவி செய்த வட்டப் பாறை!


ஆ யிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த திருத்தலம்; பசுக்கள் தவமிருந்து சிவனருளால் கொம்புகளை பெற்ற தலம்; ஸ்ரீராமபிரான், ஈசனை வழிபட்ட தலம்; தேவார மூவரும், இரட்டைப் புலவர்களும் பாடிப் பரவிய தலம்; சிவபெருமானிடம் கோபம் கொண்ட உமையவள் தனிக்கோயிலில் குடிகொண்ட தலம். இப்படிப்பட்ட சிறப்புகளுடன் திகழ்கிறது திருவாமாத்தூர். இந்தத் திருத்தலத்தில் அருள்மிகு முத்தாம்பிகையுடன் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீஅபிராமேஸ்வரர். இந்தத் தலத்தை வட மொழியில் ‘கோமாதுருபுரம்’ என்கிறார்கள்.
ஆரம்பத்தில் பசுக்கள், கொம்புகள் இல்லாமல் படைக்கப்பட்டன. அதனால் பசுக்கள் மனமுருகி நந்தியையும் காமதேனுவையும் குறித்துக் கடுந்தவம் புரிந்தன. அவற்றின் தவப் பயனாக நந்தியும் காம தேனுவும் பசுக்கள் முன் தோன்றினர்.
அவர்களிடம், ‘‘கொடிய விலங்குகளால் நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறோம். எனவே, அவற்றை எதிர்க்க எங்களுக்குக் கொம்புகள் தேவை!’’ என்று விண்ணப் பித்தன பசுக்கள்.
‘‘சிவபெருமானை நோக்கி நாம் கடும் தவம் புரிவோம். அவர் அருள் பாலித்தால் நமக்கு அந்த வரம் கிட்டும்!’’ என்றார் நந்திதேவன். அதன்படி அவர்கள் எல்லோரும் வன்னிக் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய அழகியநாதனான சிவபெருமானைக் குறித்து தவம் புரிந்தனர்.
கடுமையான தவத்தின் முடிவில் சிவனருளால் அவர்களுக்குக் கொம்பு கிடைத்தது. இதனால், இந்த ஊர் ‘ஆமாத்தூர்’ என்று பெயர் பெற்றதாகச் சொல்கிறார்கள். பின்னர், ‘திரு’ என்ற அடைமொழியுடன் ‘திருஆமாத்தூர்’ என்றாயிற்று என்கிறார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில், இந்த ஊரைச் சுற்றிலும் பசுக்களின் பெயருடன் தொடர்பு கொண்ட இடையர்பாளையம் (தற்போது எடப் பாளையம்), ஆரியூர், சாணிமேடு கிராமம் (தற்போது சாணரமேடு) போன்ற ஊர்கள் அமைந்துள்ளன. தவிர, இதைச் சுற்றி உள்ள பல கிராமங்களில் மாட்டுச் சந்தையும் அவ்வப்போது கூடுகிறது.
ஒரு காலத்தில் இங்குள்ள வன்னிக் காட்டில், பிருங்கி முனிவர் தங்கியிருந்து சிவபூஜை செய்து வந்தார். ஒரு முறை பூஜை முடிந்து, சிவனை வலம் வரச் சென்றார். அப்போது சக்தி உடனிருந்தார். ஆனால், பிருங்கி முனிவர் வண்டாக மாறி சிவபெருமானை மட்டும் வலம் வந்தாராம். இதனால் கோபமடைந்த சக்தி, வண்டு வடிவ முனிவரை எரித்தாராம். சாம்பலான பின்பும் எழுந்த நின்ற பிருங்கி முனிவருக்கு ஈசன் ஊன்றுகோல் வழங்கினாராம்.
இதனால் கோபம் கொண்ட சக்தி, தனிக் கோயிலில் எழுந்தருளினாள். இருவரும் பிரிந்ததால் மனம் வருந்திய பிருங்கி முனிவர், அதன் பின் சக்தியையும் வழிபடத் துவங்கினார். இதில் மகிழ்ந்த சக்தி, பிருங்கி முனிவரிடம் வன்னி மரமாகி தனது சந்நிதியில் தல விருட்சமாக இருக்குமாறு அருள்பாலித்தார்.
எனவே, இங்குள்ள வன்னிமரத்தை விசேஷமாகக் கருதி வழிபடுகிறார்கள். இப்போது இந்த மரம் முழுமையாக இல்லாவிட்டாலும் அடிப்பகுதியுடன் காணப்படுகிறது. இந்தத் திருத்தலத்தில், பிருங்கி முனிவர் தவமிருந்து சாப விமோசனம் பெற்று வன்னி மரமான இடம், இன்றும் உள்ளது. சிவனும் சக்தியும் எதிரெதிரில், தேரோடும் மாட வீதியுடன் கூடிய தனித் தனிக் கோயிலில் எழுந்தருளி இருப்பது சிறப்பு. இங்குள்ள சக்தியை அருள்மிகு முத்தாம்பிகை என்கிறார்கள். இங்குள்ள திருவட்டப்பாறை முன் நின்று பொய் சொல்பவர்கள், தேவர்களாலும் மீட்க முடியாத துன்பக் கடலில் வீழ்ந்து, வருந்தி உயிரிழப்பார்கள். இதன் எதிரே நின்று பொய் சொல்லி கண் இழந்தும், தலை வெடித்தும், பாம்பு கடித்து மாய்ந்தும் போனவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அதே நேரம் உண்மையைச் சொல்லி, தமது துன்பங்களை ஒழித்தவர்களும் உண்டு.
ஆயிரம் சாட்சிகள் இருந்தும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை இந்தப் பாறை, நொடியில் தீர்த்து வைத்து, அந்த கால அரசர்களுக்குப் பேருதவி புரிந்திருக்கிறதாம்!
ஒரு காலத்தில் இந்த ஊரில் ஒற்றுமையான அண்ணன்- தம்பி வாழ்ந்து வந்தனர். இவர்களின் முன்னோர்கள் நிறையச் சொத்து சேர்த்து வைத்திருந்தனர். சொத்துகளைத் தம்பிக்குத் தராமல், தானே அனுபவிக்க நினைத்தான் அண்ணன். அதனால் மொத்த சொத்துகளையும் விற்று, ரத்தினங்களாக மாற்றினான். பிறகு, உள்ளீடற்ற நீண்ட ஒரு கைத்தடிக்குள் ரத்தினங்களை மறைத்து வைத்தான்.
இறுதியில் அண்ணன்- தம்பி சொத்துப் பிரச்னை பஞ்சாயத்துக்கு வந்தது. பஞ்சாயத்து கூடிய இடம் திருவட்டப்பாறை அருகில். அப்போது அண்ணன் ஒரு சூழ்ச்சி செய்தான்.
ரத்தினங்கள் அடங்கிய கைத்தடியைத் தம்பியிடம் தந்து விட்டு, ‘‘எங்கள் முன்னோர் தேடிய செல்வங்கள் எல்லாம் இப்போது என் தம்பியிடம்தான் உள்ளது!’’ என்று சத்தியம் செய்தான். பிறகு அந்த கைத் தடியை தம்பியிடம் இருந்து வாங்கிக் கொண்டான். அண்ணனுக்கு எதுவும் தீங்கு நேராததைக் கண்ட ஊர் மக்கள் திகைத்தனர்.
சுமார் 8 மைல் தூரம் சென்ற அண்ணன், தன்னுடன் வந்தவர்களி டம், ‘‘திருவட்டப்பாறை தேவதை சீறிக் கொத்தி விடுமா?’’ என்று கிண்டலாகக் கேட்டான்.அப்போது பெரிய கருநிறப் பாம்பு ஒன்று சட்டென்று அங்கு தோன்றி அவனைக் கொத்தியது. அவன் அங்கேயே இறந்து விழுந்தான்.
அந்தப் பாம்பின் வால் பகுதி, முத்தாம்பி கையின் திருமேனியில் வடிவமாக உள்ளது. தலைப் பகுதி, பொய் சொன்ன அண்ணன் தண்டிக்கப் பட்ட இடத்திலேயே கல்லானது. இதையே திரு வட்டப்பாறையின் துணை வடிவமாக, நாக வடிவில் உள்ள நாகாம்பிகை கோயில் என வழங்குகின்றனர். இது தாங்கல் என்ற ஊரில் உள்ளது. விழுப்புரம் - செஞ்சி பாதையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தும்பூர். அங்கிருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் தாங்கலை அடையலாம்.
இனி திருவாமாத்தூர் ஸ்ரீஅபிராமேஸ்வரர் ஆலயத்தை தரிசிப்போமா..?
13-ஆம் நூற்றாண்டு வாக்கில் அச்சுததேவ பல்லவனும் மற்றும் கோப்பரகேசரி வர்மனும் இந்தக் கோயிலைக் கட்டியதாகத் தெரிகிறது.
இந்தத் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ராஜ கோபுரம். மன்னர் கள் காலத்தில் ராஜ கோபுரம் கட்ட முயற்சி செய்துள்ளனர். முதல் முயற்சியாக அடித்தளம் மற்றும் தூண்கள் நிறுவப்பட்டதுடன் அந்தத் திருப்பணி அப்படியே நின்று போனது. ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பணி மீண்டும் தொடரப்பட்டு சுமார் 110 அடி உயரத்துடன், 7 நிலைகள் கொண்ட புதிய ராஜ கோபுரப் பணிகள் முழுமையடைந்து, கடந்த 14.9.2005 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இந்தத் திருப்பணிக் குழுவின் தலைவர் ஆர். குபேரன் செட்டியாரைச் சந்தித்த போது, ‘‘வருடத்துக்கு ஒரு முறை பௌர் ணமி பூஜைக்கு எனக்கு அழைப்பு வரும். அன்றைய சிறப்பு பூஜைகளின் செலவை நான் ஏற்றுக் கொள்வேன். ஒரு முறை ஊர்ப் பெரியவர்கள், கோபுரம் கட்டும் பணிக்கு என்னை தலைமை ஏற்குமாறு சொன்னார்கள். முதலில் தயங்கினேன். கோயில் சிவாச்சார்யர்கள் மற்றும் ஊர்ப் பெரியவர்கள் வற்புறுத்தியதால், சிவபெருமான் மீது நம்பிக்கை வைத்து, வேலைகளைத் தொடங்கினேன்.
திருப்பணி துவக்க நாளன்று மயிலம் பொம்பூரான் அடிகள் கலந்து கொண்டு, பூமி பூஜையைத் தொடங்கி வைத்தார். சுமார் இரண்டரை ஆண்டுகளில் திட்டமிட்டபடி ராஜ கோபுரத்தைக் கட்டி முடித்தோம்.
சுமார் 1 கோடி ரூபாய் செலவானது. இதில் 70 லட்சம் ரூபாயை பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர். மீதி தொகையை நான் ஏற்றுக் கொண்டு திருப்பணியை முடித்தேன். இந்தத் தலம், பசுக்களின் தாய் பூமியாக மதிக்கப்படுவதால் குடமுழுக்கு அன்று, 108 பசுக்களை வைத்து கோபூஜை நடத்தினோம்’’ என்றார்.
ராஜகோபுரத் திருப்பணியின்போது கோயில் வளாகத்தில் உள்ள பூங்காவில் வலம்புரி விநாயகர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தம் இடக் கை ஒன்றில் அமிர்தக் கலசம் தாங்கியிருக்கும் இவர் நான்கு திருக்கரங்களுடன், தாமரை மலரில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.இவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, வன்னி இலையால் அர்ச்சித்தால், கேது தோஷம் (நாக தோஷம்) மற்றும் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
இங்குள்ள மூலவர் சுயம்பு என்கிறார்கள். உள் சுற்று, வெளிச் சுற்று என்று இரண்டு பிராகாரங்கள் கொண்டது இந்தக் கோயில். வெளி மண்டப நுழைவாயிலில் ஸித்தி விநாயகர் சந்நிதி. அடுத்து வெளிச்சுற்றில் முதலாவதாக ராமர் சந்நிதி.
ஸ்ரீராமன் வந்து வழிபட்டதால், இங்குள்ள ஈஸ்வரன் அபிராமேஸ்வரர் என்று பெயர் பெற்றாராம். ஆதியில் இவரது திருநாமம் அழகியநாதர்.
சீதையைத் தேடி வந்த ராமன் வழியில் அகத்திய முனிவரைச் சந்தித்தார். அவரிடம் நிலைமையை விளக்கி சீதையை மீட்க வழி கூறுமாறு ஸ்ரீராமன் வேண்டினார். அப்போது, ‘‘திருவாமாத்தூர் சென்று அங்குள்ள ஈஸ்வரனை வழிபட்டால் எல்லாம் நலமாகும்!’’ என்றார் அகத்தியர். அதன்படி ஆமாத்தூர் வந்த ஸ்ரீராமன், இங்குள்ள இறைவனைத் தொழுது, அவரருள் பெற்று அதன் பிறகு ராவணனை வென்று சீதையை மீட்டார். அவர் சீதையுடன் திரும்பியபோது, மீண்டும் இங்கு வந்து, தனது அம்பினால் ‘தண்ட தீர்த்த’த்தை உருவாக்கி அபிஷேக- ஆராதனை செய்து ஈஸ்வரனை வழிபட்டார்.
அந்த தண்டத் தீர்த்தத்தை இங்கு இப்போதும் காணலாம். இதன் புனித நீரால்தான் இப்போதும் இங்குள்ள இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இதன் காரணமாகவே இந்தக் கோயிலில் ஸ்ரீராமனுக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது.
இந்த சந்நிதியில் சீதை, லட்சுமணன், அனுமன், சபரி, மற்றும் முனிவர் இருவருடன் ஸ்ரீராமர் காட்சியளிக்கிறார். மேலும் சிவன், பிரம்மன், திருமால் ஆகிய மூவரும் ஒரு சேர வீற்றுள்ள புடைச் சிற்பமும் காணப்படுகிறது.
வெளி மண்டபத்தில் துவார பாலகர்கள், விநாயகர், பாலமுருகன், நடராஜர், சிவகாமி அம்மன், நவக்கிரகங்கள் மற்றும் நந்திதேவர் அருள் பாலிக்கின்றனர். உள் சுற்றுப் பிராகாரத்தில் நந்தி, சூரிய பகவான், முருகப் பெருமான், பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி (தென்முகக் கடவுள்), சப்த கன்னிகைகள், நாயன்மார்கள், பிள்ளையார், ஆயிரத்தெட்டு லிங்கம், சட்டநாதர், அண்ணாமலையார், கஜலட்சுமி, சிவ துர்கை, பிரம்மா, விஷ்ணு துர்கை, சண்டிகேஸ்வரர், கால பைரவர் ஆகிய தெய்வ மூர்த்தங்களுடன் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
இந்தக் கோயில் பற்றி கோயிலுடன் தொடர்பு கொண்டவர்களுடன் பேசியபோது, ‘‘சிவனும், சக்தியும் தனித் தனியே இங்கு கோயில் கொண்டிருப் பது சிறப்பு. ஒரு காலத்தில் ஊருக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்தது பம்பை நதி. பின்னர் புகழ் பெற்ற இரட்டைப் புலவர்கள் கலம்பகம் பாடியதால், அந்த நதி திசை மாறி ஊருக்குள் வந்து கோயிலைச் சுற்றி ஓடுகிறது!’’ என்கிறார்கள்.
இங்கு நீண்ட காலமாக பூஜைகள் செய்து வரும் அருணாசல சிவாச்சார் யார் மற்றும் மகேஷ் குருக்கள், ‘‘இந்தக் கோயிலோட சிறப்புனு முக்கியமா ஒண்ணு சொல்லலாம். பசுக்கள் இங்கு கொம்புக்காக வழிபட்டதன் அடையாளமாக, பசுக்களின் கால் குளம்பு அடையாளம் சுவாமியின் தலை மேல் உள்ளது. மட்டுமின்றி பசுக்கள், ஈஸ்வரன் மீது பால் சொரிந்த அடையாளமும் இவரின் மேனியில் காணப்படுகிறது. இதனால் சுவாமி சற்று இடப் புறம் சாய்ந்தவாறு காட்சியளிக்கிறார். இங்கு பங்குனி உத்திரப் பெருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. 9-ஆம் நாள் அன்று பூரம் நட்சத்திரத்தன்று தேர்த் திருவிழா.
கிருத்திகை மற்றும் பிரதோஷங்களின்போது பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். வளர்பிறை நவமி நாட்களில் இங்குள்ள ஸ்ரீராமருக்கு நவமி பூஜை நடைபெறுகிறது. அம்மனுக்கு பௌர்ணமி பூஜையும், அன்றிரவு 12 மணிக்கு நடுநிசி தீப தரிசனமும் நடைபெறும் இந்த பூஜையில் பங்கேற்றால் பெண்களின் திருமணத் தடை மற்றும் செவ்வாய் தோஷம் நீங்கி, நல்ல கணவன் அமைவான்’’ என்றனர் நம்மிடம்.
தகவல் பலகை
தலத்தின் பெயர் : திருவாமாத்தூர்
மூலவர் : அபிராமேஸ்வரர், அழகியநாதர், ஆண்டநாயகர். முத்தாம்பிகை, அழகியநாயகி
அமைந்துள்ள இடம் : விழுப்புரம் - செஞ்சி சாலையில் விழுப்புரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவு.
எப்படிச் செல்வது ? :
1. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரைமணி நேரத்துக்கு ஒரு மினி பஸ் உள்ளது. 2. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஏழுசெம்பொன் செல்கிற 8-சி, கூடலூர் செல்கிற 32, தாங்கல் செல்கிற 35 ஆகிய அரசு டவுன் பஸ்களும் அதனூர் செல்கிற விரிஷி என்கிற பஸ்களும் உள்ளன.
ஆலயத் தொடர்புக்கு :
கே. அருணாசல சிவாச்சார்யார் 
அ. மகேஷ் குருக்கள்
அருள்மிகு முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் திருக்கோயில், 
 திருவாமாத்தூர் அஞ்சல், 
விழுப்புரம் வட்டம், 
விழுப்புரம் மாவட்டம் - 605 402. 
போன்: 04146 - 223319

No comments:

Post a Comment