Tuesday, 1 August 2017

திருவாரூர் ஸ்ரீதியாகராஜர்


திருவாரூர்- பஞ்சபூதத் தலங்களுள், நிலத்துக்கு உரிய தலம். சப்த விடங்கத் (வி+டங்கம்= உளியினால் செதுக்கப்படாதது) தலங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது இது.
சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பே திருவாரூர் கோயில் குறித்து, அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித்து இடம் கொண்டார் என்று அப்பர் பெருமான் பாடலில் குறிப்பிட் டுள்ளார். இதையே, ‘கோயில் ஐந்து வேலியாம். தீர்த்தக் குளம் ஐந்து வேலியாம். செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலியாம்’ என்பார்கள். திருவாரூர் கோவை என்ற நூலில் ‘குளம் வாவி மதில் ஐவேலியாம். திருவாரூர் தியாகர்’ என்ற குறிப்பு இருக்கிறது.
 சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது திருவாரூர் நகரமும் ஆலயமும் என்கின்றன புராணங்கள்.
 வருட ஆரம்பமான வசந்த காலத்தில் பௌர்ணமி அன்று, குரு சந்திர யோகம் சேர்ந்த கடக லக்கினத்தில், புண்ணியபுரம் எனும் திருவாரூரின் நடுவில் தியாகபதியாகத் தோன்றினார் சிவபெருமான். அப்போது திருக்கோயிலின் நடுவே லிங்கமாகவும், தியாகராஜ வடிவமாகவும் தோன்றினார்.
 இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராஜர், முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப் பெற்றார். பின்னர் இந்த தியாகராஜ மூர்த்தம், திருமாலால் இந்திரனுக்கும், இந்திரனால் முசுகுந்த சக்ரவர்த்திக்கும் அளிக்கப்பட்டது.
 திருக்கோயிலின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர். சுமார் 25 ஏக்கர் - கமலாலயத் தெப்பக்குளம்.
 செங்கற் தளியாக இருந்த திருவாரூர் ஆலயம் பிறகு சோழப் பேரரசி செம்பியன் மாதேவியால் கற்றளியாக மாற்றி அமைக்கப்பட்டது.
 முதலாம் ஆதித்த சோழனால் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் நாயக்கர், விஜய நகர, மராட்டிய மன்னர் களால் பராமரிக்கப்பட்டிருக்கிறது
 மூலவரான வன்மீகநாதர் சுயம்புத் திருமேனி. தியாகராஜர் சோமாஸ்கந்தராகக் காட்சி தருகிறார்.
 தியாகராஜ சுவாமியின் திருமேனிதான் திருவாரூர் ரகசியம். இதை சோமகுல ரகசியம் என்பர். ஸ்ரீசக்ரம் இறைவனின் மார்பை அலங்கரிப்பதால், இவர் மேனி காணக் கிடைக்காதது.
 நித்திய பூஜை, திருமஞ்சனம் ஆகியவை மூலவரின் அருகிலிருக்கும் மரகத லிங்கத்துக்கே நடைபெறுகிறது. பஞ்ச தாண்டவங்களில் இங்கு அஜபா தாண்டவம் நடைபெறுகிறது. வாயால் சொல்லாமல் சூட்சுமமாக ஒலிப்பதால் இதற்கு அஜபா (ஜபிக்கப்படாதது) என்று பெயர். இந்த வித்தையை விளக்குவதே திருவாரூர் தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம்.
 எல்லாக் கோயில்களிலும் பாடும் முன் திருச்சிற்றம்பலம் என்பர். இங்கு ‘ஆரூரா தியாகேசா’ என இரு முறை கூறுவர்.
 தில்லை நடராஜ சபை- பொன் அம்பலம். ஆரூர் ஸ்ரீதியாகராஜ சபை- ‘பூ அம்பலம்’ என்று பெயர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுவதால் இந்தப் பெயர்.
 மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவபெருமானுக்குப் பொதுவான தச அங்கங்களை அருளியுள்ளார். ஆனால், இந்த தியாகராஜருக்குத் தனியான தச அங்கம் உண்டு. அவை: 1. பெயர்- ஆரூரன், 2. நாடு- அகளங்க நாடு, 3. ஊர்- ஆரூர், 4. ஆறு- ஆனந்தம், 5. மலை- அருள்மலை, 6. படை- வீரகட்கம், 7. பறை- பஞ்சமுக முரசு, 8. மாலை- செங்கழுநீர், 9. கொடி- தியாகக்கொடி, 10. குதிரை- வேதம்.
 மணித் தண்டு, தியாகக் கொடி, ரத்தின சிம்மாசனம், செங்கழுநீர் மாலை, வீரகண்டயம், அஜபா நடனம், ஐராவணம், அரதன சிருங்கம், பஞ்சமுக வாத்தியம், பாரி நாகஸ்வரம், சுத்த மத்தளம், குதிரை-வேதம், சோழ நாடு, ஆரூர், காவிரி, பதினெண் வகைப் பண்- ஆகியவை தியாகராஜரின் 16 விதமான அங்கப் பொருட்கள்.
 தியாகேசர் சந்நிதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் பெருமானை வழிபடுவதாக கூறுவர். பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கும்.
 தியாகேசப் பெருமானுக்கு சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து இழைத்துக் கிடைக்கும் செந்நிறத் திரவியத்தை இடுகின்றனர். க்ஷ்உற்சவத்தில் வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது!
 தியாகராஜர் சந்நிதியில் ‘திருச்சாலகம்’ எனும், தென்றல் தவழும் சாளரம் உள்ளது.
 தியாகராஜருக்கு மாலை நேர பூஜையின் போது 18 இசைக் கருவிகள் (சுத்த மத்தளம், கர்ணா, சங்கு, எக்காளம், நகரா, நமுகி (நட்டுமுட்டு), கிடுகிட்டி (கொடுகொட்டி), புல்லாங்குழல், தாரை, பாரிநாயனம், பஞ்சமுக வாத்தியம், தவண்டை, பேரிகை, பிரம்மதாளம், வாங்கா, திருச்சின்னம், தப்பட்டை, முக வீணை) இசைக்கப் பெற்றனவாம்.
 ஆரூர்ப் பெருமானை ‘பவனி விடங்கர்’, ‘விடங்கராய் வீதி போந்தார்’ என் றெல்லாம் சிறப்பிக்கிறது தேவாரம். இவருக்கு ‘தக்கார்க்குத் தக்கான்’ எனும் பெயரும் உண்டு. மற்றும் சில பெயர்கள்: அசைந்தாடும் பெருமாள், அடிக்காயிரம் பொன்னளிப்பவர், ரத்தின சிம்மாசனாதிபதி, கருணாகரத் தொண்டை மான், கனகமணித் தியாகர், தியாக விநோதர், மணித் தண்டில் அசைந்தாடும் பெரு மான், செவ்வந்தித் தோடழகர், செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், கம்பிக் காதழகர், வசந்த வைபோகத் தியாகர், தேவசிந்தாமணி, முன்னிலும் மும்மடங்கு பின்னழகர், தியாக சிந்தாமணி, அந்திக் காப்பழகர், தியாகப் பெருமான், செம்பொன் தியாகர், கிண்கிணிக்காலழகர், தேவரகண்டன்.
 இங்கு மாலை வேளையில் தேவேந்திரன் வந்து பூஜிப்பதாகவும், சாயரட்சை பூஜையில் தேவர்களும் ரிஷிகளும் கலந்து கொள்வதாகவும் ஐதீகம்.
 தியாகேசரின் அசல் விக்கிரகத்தை ‘செங்கழுநீர்ப்பூ மூலம் சரியாகக் கணித்தான் முசுகுந்தன். எனவே, தியாகேசருக்கு செங்கழுநீர்ப்பூ சாத்துவது சிறப்பு.
 ஸ்ரீ தியாகராஜருக்கு நைவேத்தியமாக நெய் தேன்குழல், பெரிய உளுந்து வடை படைக்கப்படுகின்றன.
 இங்கு ரிஷப தேவர் நின்ற கோலத்தில் செப்புத் திருமேனியாக (நின்ற இடபம்) காட்சி தருகிறார்.
 யோக நெறியில் நிற்கும் சாதகர்கள், பாகற்காய் பொரியலும், தூதுவளைக் கீரை மசியலும் உண்பது வழக்கம். ஆகையால் தியாகேசப் பெருமானுக்கு தூதுவளையும், பாகற்காயையும் உச்சிகால வேளையில் நிவேதிக்கும் வழக்கம் இருந்தது. முன்னாளில் பெருந் திரு விழாவில் ஒரு நாள் ‘பாகற்காய் மண்டபப் பிரவேசம்’ என்ற வைபவம் நடந்ததாம். க்ஷ் மூன்றாவது பிராகாரத்தில், வடமேற்குத் திசையில் ஈசான்யத்தை நோக்கி அருள்மிகு கமலாம்பிகை திருக் கோயில் அமைந்துள்ளது. இந்த அம்பிகை மூன்று தேவியரின் சங்கமம். க- கலைமகள், ம- மலைமகள், ல- அலைமகள். அம்பிகைக்குத் தனிக் கொடி மரம் உண்டு. சர்வேஸ்வரனைப் போன்று தன் சிரசில் கங்கையையும், பிறையையும் சூடி, யோக வடிவில் அமர்ந்திருக்கிறாள்.
 அம்பிகை கோயிலின் மேற்கு மூலையில் 51 அட்சரங் கள் எழுதப்பெற்ற அட்சர பீடமும், திருவாசியும் உள்ளன. கமலாம்பிகை கருவறையின் அணுக்க வாயிலின் இரு புறமும் சங்க- பதும நிதிகள் உள்ளன.
 தியாகராஜரின் அருகில் வீற்றிருக்கும் தேவிக்குப் பெயர் ‘கொண்டி’. இறைவனின் அருளை பக்தன் அடைந்து இன்புறச் செய்பவள் என்பதால் இப்பெயர். கொண்டி என்பதற்கு ‘இணைப்பது’ என்று பொருள்.
 இத்தலத்தின் ஆதி சக்தியான நீலோத்பலாம் பிகைக்கும் (அல்லியங்கோதை) தனிச் சந்நிதி உள்ளது. நான்கு கரங்கள் கொண்ட இவளின் அருகே இடுப்பில் முருகப் பெருமானைத் தாங்கியபடி தோழி ஒருத்தி. அம்பிகை, தன் இடக் கரங்களுள் ஒன்றால் முருகப் பெருமானின் தலையைத் தொட்டபடி காட்சியளிக்கிறாள். இது அபூர்வ தரிசனம்.
 இந்தக் கோயிலில் எரிசினக் கொற்றவை (ரௌத்திர துர்கை) சந்நிதி உள்ளது. இவளை ராகு காலத்தில் வழிபட் டால் திருமணத் தடை அகலும்.
 இங்கு பள்ளியறை இல்லை.
 கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம், ‘செங்கழுநீர் ஓடை’ ஆகிய தீர்த்தங்கள் இங்கு உள்ளன. கமலாலயக் குளத்தில் ஒருமுறை நீராடினால் மகாமக திருக்குளத்தில் 12 முறை நீராடிய புண்ணியம் கிடைக்குமாம். இதில், 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. இதன் நடுவில் யோகாம்பிகை சமேத நடுவணநாதர் (நாகநாதர்) கோயில் கொண்டுள்ளார். இங்கு செல்ல படகு வசதி உண்டு.
 இந்தக் குளக் கரையில் மாற்றுரைத்த விநாயகர் எழுந்தருளி உள்ளார். விருத்தாசலத்தில் இறைவனிடம் பொன் பெற்ற சுந்தரர் அதை அங்குள்ள மணிமுத்தா நதியில் இட்டு, திருவாரூர் வந்து கமலாலயக் குளத்தில் பெற்றுக் கொண்டார். அந்தப் பொன் தரமானவையா என்று மாற்றுரைத்துப் பார்த்ததால், இந்தப் பெயர்.
 இங்கு தெப்பத் திருவிழா 3 நாட்கள் நடைபெறும். நாள் ஒன்றுக்கு மூன்று சுற்று வீதம் நடைபெறும் தெப்பத்தில் ஸ்ரீகல்யாண சுந்தரர் பவனி வருவார்.
 துர்வாச முனிவருக்காக கமலாலயத் தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார் சிவபெருமான். அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு ‘கங்காஹ் ரதம்’ என்றும், துர்வாசரின் தாபத்தைத் தீர்த்ததால், ‘தாபஹாரணீ’ என்றும் திருநாமம் வந்தது. இதில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்தத் தீர்த்தத்தின் தென்கரையில் துர்வாச மகரிஷி மடம் இருக்கிறது. இங்கு கமலாம்பிகையை துர்வாசர் மந்திர விதிப்படி பூஜித்திருக்கிறார்.
 தீர்த்தக் கரையில் பர்ணசாலை அமைத்து, கமலநாயகி எனும் பெயரில் தவம் செய்தாள் அம்பிகை. இதனால், பல்குண மாதம், பௌர்ணமி, சுவாதி நட்சத்திரத்தில் தியாகராஜர் - கமலநாயகி திருமணம் நடந்தது.
 இங்குள்ள அழகான ஆழித் தேருக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் விஷமி ஒருவன் தீவைத்தான். தேரை புனரமைப்பு செய்யும் பணியில் முக்கியமானவர் எழுலூர் ஸ்ரீமான் சுப்பராய வாத்தியார். இவர் பின்னாளில் ‘ஸ்ரீநாரா யண பிரம்மேந்திரர்’ எனப்பட்டார்.
 தேவாரப் பதிகங்கள்-350, திருவாசகப் பாடல்கள்-7 ஆகியவற்றைக் கொண்டது திருவாரூர். திருமந்திரத்தில் ‘அஜபா மந்திரம்’ என்ற பகுதியிலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டில் காடவர்கோன் நாயன்மாராலும், 11-ஆம் திருமுறையில் சேரமான் பெருமான் நம்பியாண்டார் நம்பியாலும், சேக்கிழாரின் பெரிய புராணப் பாடல்களாலும், அருணகிரிநாதரின் 11 பாடல்களாலும், ராமலிங்க அடிகளின் திருவருட்பாவிலும் தனி இடம் பெற்றுள்ளது திருவாரூர்.
 திருவாரூர் மும்மணிக்கோவை - 63 நாயன் மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமானால் இயற்றப்பட்டது. 11-ஆம் திருமுறையில் உள்ளது.
கமலாலயச் சிறப்பு: சிதம்பரம் மறை ஞானசம்பந்தர்.
திருவாரூர்ப் புராணம்: நிரம்ப அழகிய தேசிகரின் மாணவர் அளகைச் சம்பந்தர்.
திருவாரூர் திருவுலா: அந்தகக் கவி வீரராகவ முதலியார்
தியாகராச லீலை: திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் எழுதியது; முற்றுப் பெறவில்லை.
திருவாரூர் நான்மணிமாலை: குமரகுருபர சுவாமிகள்
தியாகராசப் பள்ளு:- கமலை ஞானப்பிரகாசர்
திருவாரூர்ப் பன்மணி மாலை: திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
திருவாரூர் ஒரு துறைக் கோவை: வெறி விலக்கல் என்னும் ஒரு துறையை மையமாகக் கொண்ட 400 பாடல்களில் பாடப்பட்டது. பாடியவர் கீழ் வேளூர்குருசாமி தேசிகர்.
திருவாரூர்க் கோவை: எல்லப்ப நயினார்
கமலாம்பிகை பிள்ளைத்தமிழ்: சிதம்பர முனிவர்
இவை தவிர திருவாரூர் மாலை, கமலாம்பிகை மாலை போன்றவையும் உள்ளன.
 இங்கு ஆனந்தீசுவரர், தட்சிணேசுவரர், அயத்தீசுவரர், சித்தீசுவரர், அல்வாதீசுவரர், பந்தேசு வரர், பிரம்மேசுவரர், புலஸ்தியரட்சேசுவரர், அண்ணா மலேஸ்வரர், வருணேஸ்வரர், பாதாளேஸ்வரர், பாண்டியநாதர், சேரநாதர் என்று சந்நிதிகள் நிறைய!
 இங்கு எட்டு துர்கை ஸ்தலங்கள் உண்டு. முதல் பிராகாரத்தில் மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்கையாக திகழ்கிறாள். தவிர, முதல் பிராகாரத்தில் மூன்றும், 2-ஆம் பிராகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்று. ஆக, 8 துர்கை. இங்கு சுமார் 15 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார்.
 பாடல்பெற்ற 275 தலங்களில் உள்ள 68 வகை யான தல விருட்சங்களும் இங்குள்ள நந்தவனத்தில் வளர்க்கப்படுகின்றன.
 இங்குள்ள நவக்கிரக மூர்த்தியர் வக்கிரம் இன்றி ஒரே வரிசையில் தென் திசையில் உள்ள ஸ்ரீ தியாகராஜஸ்வாமி நோக்கி அமைந்துள்ளனர். நளனும் சனியும் வழிபட்ட தலம் இது.
 சண்டேஸ்வரர் சந்நிதிகள் இரண்டு உள்ளன. ஆதிசண்டேசுரர் வெள்ளாடையுடன் உற்சவராகவும் ஏனையவர் எமசண்டேசராகவும் திகழ்கின்றனர். பிறக்க முக்தி தரும் தலமான திருவாரூரில் எமனுக்கு வேலை இல்லாததால், அவர் இங்கு எம சண்டேசு வரராக அருள் புரிவதாக நம்பிக்கை.
 பதினெண் சித்தர்களில் ஒருவரான கமலமுனி, இங்கு யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார்.
 ஸ்ரீஆனந்தீஸ்வரரை பௌர்ணமி மற்றும் விசாகம் குறிப்பாக வைகாசி விசாகத்திலும் அபிஷேக- ஆராதனை செய்து தாமரை மலரால் வழிபட்டால் எண்ணியவை ஈடேறும்.
 ஸ்ரீஆனந்தீஸ்வரம் நுழைவாயிலில் வலப்புறம் ஸ்ரீஜேஷ்டாதேவி அமைந்துள்ளாள். வனதுர்கை, வாராகி, அஸ்வாரூடாவும் புடைசூழ அமர்ந்துள்ளனர். இவளை வியாழக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டால் பெண்களின் மாதவிடாய் கோளாறுகளும், உடல் உபாதைகளும் குணமாகும்.
 கோயில் பிராகாரத்தில் தனிக் கோயிலாக ‘ஆரூர் அறநெறி’ அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற கோயில் இது. திருவாரூரில் தேர் நிலைக்கு அருகே கீழ வீதியில், ஆரூர்ப் பரவையுண் மண்தளி (தூவாய்நாதர்) எனும் கோயில் உள்ளது. சுந்தரரால் பாடப் பெற்ற தலம் இது.
 வடக்கு கோபுரத்தின் எதிரில் வெளிப்புறச் சுவரை ஒட்டி சிவன் சந்நிதி உள்ளது. இவர் ஒட்டுத் தியாகேசர். விறன் மிண்ட நாயனார், ஆலயத்துக்குள் போக விடாமல் தடுத்ததால் மனம் வருந்தினார் சுந்தரர். அவரது வருத்தத்தைப் போக்க ஸ்ரீதியாகராஜ பெருமான் சுந்தரருக்குக் காட்சியளித்தார்.
 இங்குள்ள விஸ்வகர்ம லிங்கத்துக்கு ஒற்றைப் படை எண்ணிக்கையில் செங்கல் வைத்து அபிஷே கித்து வழிபட்டால் வாஸ்து தோஷம் நீங்கும்.
 இரண்டாம் பிராகாரத்தில் ‘ஜுரஹரேஸ்வரர்’ சந்நிதி உள்ளது. நோயாளிகள் இவரை வேண்டி, ரசம் நிவேதித்தால் நோய்களிலிருந்து விடுபடலாம். இதே பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது அசலேசுவரர் சந்நிதி. அப்பரால் பாடப்பட்டது. சமற்காரன் என்ற அரசனின் கடும் தவத்துக்கு மகிழ்ந்து அவன் பிரதிஷ்டை செய்த லிங்கத் திருமேனியில் சலியாது எழுந்தருளியதால் அசலேசர் ஆனார். அசலேசுவரரோடு, பஞ்சபூத லிங்கங்களாக இறைவன் காட்சி தருவது சிறப்பு.
 இந்த சந்நிதிக்கு நேர் எதிரில் தல விருட்சத்தின் அருகில் ஆடகேசுவரம் அமைந்துள்ளது. இறைவனுக்கு தனி உருவம் இல்லை. ஆனால் நந்தி, பலி பீடம், கொடி மரம், துவாரபாலகர்கள் உள்ளனர். மூலாதாரத் தலம் திருவாரூர் என்பதற்கான சான்று ஆடகேசுவரம்.
 கோயிலின் கிழக்குப் பகுதியில், மனுநீதிச் சோழனின் கதையை விளக்கும் சிற்பம் உள்ளது.
 தியாகராஜ மூர்த்தங்களை முசுகுந்தனிடம் தந்தபோது திமிரி நாகஸ்வரம், பாரி நாகஸ்வரம், முகவீணை, யாழ், தவில், மத்தளம் ஆகியவற்றையும் அளித்தான் இந்திரன். அத்துடன் அவற்றை இசைக்க கந்தர்வர்களையும் அனுப்பி வைத்தானாம். தற்போதும் அந்த வாத்தியங்களை தேவலோக கந்தருது என்ற மரபினர் வாசிப்பதாகவும் கூறப்படுகிறது.
 பஞ்சமுக வாத்யம் இந்தத் தலத்தின் சிறப்பு. உலகில் இது ஓரிரு ஆலயங்களில் மட்டுமே உள்ளது. இதை ‘ஐமுக முழவம்’ என்றும் சொல்வர். சங்கரமூர்த்தி என்ற கலைஞர் மட்டுமே இதை வாசிக்கிறார்.
 ஆலயத்தினுள் தெற்கு நோக்கி காட்சி தருகிறது ருண விமோசனர் சந்நிதி. அமாவாசை அன்று இவருக்கு அபிஷேக- ஆராதனை நடைபெறும். கடன் மற்றும் தோல் வியாதி இருப்பவர்கள் இவரை வேண்டி பலனடைந்ததும் உப்பு வாங்கிக் கொட்டுகிறார்கள்.
 இங்கு பணியாளர்களுக்கு மன்னர் காலத்திலிருந்து சிறப்புப் பட்டப் பெயர்கள் உண்டு. அவை : தியாகராஜருக்குப் பூஜை செய்பவர் - நயினார். ஆபரணங்களைப் பாதுகாப்பவர்- பொற்பண்டாரி. தீபம் ஏற்றுபவர்- பரமராயர். சுவாமியை சுமப்பவர்- விழப்பரமராயர். பாரிநாயனம் வாசிப்பவர்- நாயினார் அடியார். அபிஷேகத் தண்ணீர் கொண்டு வருபவர்- திருமஞ்சனர். நைவேத்தியம் செய்பவர்- பரிசாரகர்.
 திருவாரூர் ஈசனை வழிபட்டவர்கள்: திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், விசுவாமித்திரர், அகத்தியர், மகாபலி, துர்வாசர், மேனகை, முசுகுந்தன், தசரதன், ராமன், லவ-குசர். புரூரவஸு, தேவர், யட்சர், கின்னரர், கிம்புருடர், சிவகணங்கள், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், தண்டி அடிகள், சோமாசி மாறர், செம்பியன் மாதேவி, குமரகுருபரர்.
 சங்கீத மும்மூர்த்திகளான தியாகய்யர், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி அவதரித்த தலம் திருவாரூர்.
 63-வரில் ஒருவரான நமிநந்தியடிகள், எண்ணெய்க்குப் பதிலாகக் குளத்து நீரைக் கொண்டு இறைவனுக்கு விளக்கு எரித்த திருத்தலம் இது.

No comments:

Post a Comment