கோ யம்பேடு_சென்னை நகரத்தின் ஒரு சிறு பகுதி யான இந்த இடம் பற்றி சில வருடங்களுக்கு முன் சென்னைவாசிகளிடம் விசாரித்தால், நம்மை அலட்சியமாகப் பார்ப்பார்கள். இன்று ஓஹோவென்று வளர்ந்து, சென்னையின் ‘லேண்ட் மார்க்’ ஆகியுள்ளது. இந்தியாவின் எந்தப் பகுதிக்குத் தரை மார்க்கமாகப் பயணிக்க வேண்டுமானாலும் இங்கு வந்தே பேருந்து ஏற வேண்டும். நெருக்கமான குடியிருப் புப் பகுதிகள்... பரபரப்பான வர்த்தக வளாகங்கள்... காய்- கனி மொத்த விற்பனை அங்காடி, பூ வியாபாரம்... சொகுசு ஓட்டல்கள்... என்று கோயம்பேட்டின் கீர்த்தி தற்போது உச்சத்தில்!
இந்த கோயம்பேட்டில், புறநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 15 நிமிட நடை தூரத்தில் இருக்கிறது, அருள்மிகு குசலவபுரீஸ்வரர் எனும் குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்! கலியுகத்தில் பிரபலம் அடைவதற்காக குறுங்காலீஸ்வரர், கோயம்பேட்டில் இத்தகைய அபார வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் போலிருக்கிறது!
இதை விளக்கினார் ஆலய அர்ச்சகர் சசிகுமார் சிவாச்சார்யர். ‘‘உலகத்துல கோயம்பேடுங்கிற பேர் கொண்ட ஊர் இது ஒண்ணுதான். பொதுவா ஒரு ஊர்ல சிவபெருமானுக்கு இருக்கற பேரு, இன்னொரு ஊருல இருக்கும். ஆனால், இந்த ஈஸ்வரனோட பேரு, வேறு எங்கும் இல்லை! வடக்கு நோக்கி, எழுந்தருளியுள்ள மூலவராக ஈஸ்வரன் இருப்பது இங்குதான். அடுத்தது, மடக்குப் போன்ற லிங்கம். இங்குள்ள ஈஸ்வரனின் லிங்க பாணம்- ஒரு மடக்கையை (பானை மூடப் பயன்படும் மூடியை) கவிழ்த்தது போல் இருக்கும்.
இதுவும் இங்குள்ள சிறப்பம்சம்!’’ என்றார்.
ஸ்ரீராமபிரானின் மைந்தர்களான குசன், லவன் ஆகியோர், குறுகிய சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்ட தலம் இது. அந்த லிங்கம் தான் குறுங்காலீஸ்வரர். இவரை, குசலவபுரீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.
குசனும் லவனும் இங்கு வந்து சிவபெருமானை வணங்கிய கதையைப் பார்ப்போமா?
ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்குப் பிறகு நடந்த சம்பவம் இது. மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஒற்றன் ஒருவனை அனுப்பி வைத்தார் ராமன். இறுதியாக ராமனிடம் திரும்பி வந்த ஒற்றனிடம், ‘‘மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் ராமபிரான்.
அதற்கு ஒற்றன், ‘‘பிரபோ... தங்களிடம் சொல்லத் தயக்கமாக இருக்கிறது...’’ என்றான் சுரத்தில்லாமல்.
‘‘தயங்காமல் சொல்... என்ன விஷயம்?’’ என்றார் ராமன். ‘‘வேந்தே... மணமான பெண் ஒருத்தி, ஒரு நாள் இரவு நேரத்தில் சூழ்நிலை காரணமாகத் தன் கணவனைப் பிரிந்திருக்க நேர்ந்தது. மறு தினம் காலையில் தன் கணவனிடம் வந்து சேர்ந்ததும் அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றான். ‘நான் ஒன்றும் ராமன் இல்லை. பல நாட்கள் தன்னை விட்டுப் பிரிந்திருந்த சீதையை அவர் சேர்த்துக் கொண்ட மாதிரி உன்னையும் சேர்த்துக் கொள்ள நான் தயாராக இல்லை!’ என்று மனைவியைத் திருப்பி அனுப்பினான்!’’ என்றான் ஒற்றன்.
‘யாரோ ஒரு குடிமகன் தன்னை உதாரணம் காட்டி அவன் மனைவியிடம் மட்டம் தட்டிப் பேசியிருக்கிறானே’ என்றெல்லாம் கோபப்படாமல் அவனுடைய சொல்லுக்கும் மதிப்புக் கொடுத்தார் ஸ்ரீராமபிரான். ‘தன்னை விட்டு ஓர் இரவு நேரம் மட்டும் பிரிந்திருந்தாள் என்ற காரணத்துக்காக தன் மனைவிக்குத் தண்டனை தரும் விதமாக அந்தக் கணவன் அவளை ஒதுக்கி வைத்திருக்கும்போது, சில காலத்துக்குத் தன்னை விட்டுப் பிரிந்து அசோக வனத்தில் இருந்த சீதைக்கும் தண்டனை தருவதுதான் பொருத்தம். என்ன தண்டனை தருவது?’ என்று யோசிக்க ஆரம்பித்தார் ராமபிரான்.
இறுதியில் ராமபிரான், தம்பி லட்சுமணரிடம், ‘‘லட்சு மணா... சீதாதேவியை ஏதேனும் கானகப் பகுதிக்குக் கூட்டிப் போய் விட்டுவிட்டு வா. தனிமை அவளுக்கு ஒரு தண்டனையாக இருக்கட்டும்!’’ என்றார்.
அப்போது சீதை கருவுற்றிருந்த நேரம். லட்சுமணன் பதற்றமடைந்தான். ‘‘அண்ணா... என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? அண்ணியார் தாய்மைப் பருவம் எய்தி இருக்கும் இந்த வேளையில், இப்படி ஒரு தண்டனை அவருக்குக் கூடவே கூடாது!’’ என்றான் தவிப்புடன்.
‘‘இல்லை லட்சுமணா... குடிமகனுக்கு இருக்கும் நியாயம்தான் எனக்கும். சீதை தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நீ உடனே அவளைக் கூட்டிக் கொண்டு கானகம் கிளம்பு’’ என்றார் ராமபிரான்.
அதன் பின், மனமே இல்லாமல் தன் அண்ணியாரை லட்சுமணன் கொண்டு வந்து விட்ட கானகப் பகுதியே தற்போது நாம் காணும் கோயம்பேடு. புனித நதி (தற்போதைய கூவம்) ஓடிக் கொண்டிருந்த இந்தப் பகுதியில் அப்போது தர்ப்பைப் புற்கள் காடு போல் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. பலா மரங்களும் மாமரங்களும் காய்த்துக் குலுங்கின. ‘இயற்கை சுகம் இருந்தும் இனியவர் அருகில் இல்லையே’ என்று கணவர் ஸ்ரீராமபிரானை நினைத்துக் கண் கலங்கினாள் சீதை. தனிமை வாட்டியது. சோகத்தின் உச்சிக்கே போனவள், ஒரு தினம் காலை நேரத்தில் பெருங் குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள்.
அந்த நேரம் பார்த்து, தனது நித்ய அனுஷ்டானங்களை முடித்து விட்டு, புனித நதியில் இருந்து ஆசிரமம் திரும் பிக் கொண்டிருந்த வால்மீகி முனிவர், ‘யாரோ ஒரு யுவதியின் அழுகுரல் கேட்கிறதே’ என்று சுற்றுமுற்றும் தேடினார். அப்போது சீதாதேவி தட்டுப்பட்டாள். அவளை அணுகியதும் விவரம் புரிந்தது. ‘‘கவலைப்படாதே சீதா... விதியின் தீர்மானத்தை எவராலும் மீற முடியாது. உன் கணவனே வந்து உன்னைக் கைப்பிடித்து அழைத்துப் போகும் ஒரு நாள் வரும். அதுவரை என் ஆசிரமத்தில் தங்கலாம் நீ. வாம்மா...’’ என்று அன்புடன் அழைத்துச் சென்றார்.
உரிய காலத்தில் குசன், லவன் என்னும் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் சீதாதேவி (முதலில் லவன் பிறந்தான். ஒரு நாள் அவனைக் காணாததால் அவசரம் அவசரமாக அவனைப் போல் ஒருவனை உருவாக்குவதற்காக தர்ப்பையைக் கிள்ளிப் போட்டு அதை ‘குசன்’ என்ற குழந்தையாக மாற்றினார் வால்மீகி. அதன் பின் லவனும் கிடைத்து விட்டான் என்று கர்ணபரம்பரையாகச் சொல்லப்படுவது உண்டு.) குழந்தைகள் இருவரும் குருகுலம் செல்லும் பருவம் வந்தது. இந்த இருவருக்கும் அனைத்துக் கலைகளையும் கற்பித் தார் வால்மீகி முனிவர். வில் பயிற்சி, வாள் பயிற்சி போன்ற அனைத்துத் தற்காப்புக் கலைகளிலும் தேர்ந்த குசன், லவன் ஆகிய இருவரும் சிறந்த வீரர்களாக விளங்கினர்.
அயோத்தியில் திடீரென்று பஞ்சம் ஏற்பட்டது. எனவே, உலக நன்மைக்காக அஸ்வமேத யாகம் நடத்த ஏற்பாடு செய்தார் ராமபிரான். இதற்காக யாகக் குதிரை ஒன்றைத் தயார் செய்து, அதை படை வீரர்களுடன் அனுப்பி வைத்தார்.
ராமபிரான் அனுப்பிய குதிரை ஆயிற்றே! அனைவரும் அதற்கு உரிய மரியாதை செய்து தங்கள் பிரதேசத்தை விட்டு அடுத்த இடத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வால்மீகி முனிவரின் ஆசிரமம் இருக்கும் பகுதிக்குள் வந்த படை வீரர்களைப் பார்த்த குசன், லவன் ஆகிய இருவரும், ‘‘எங்களது ஆசிரமப் பகுதிக்குள் அனுமதி இல்லாமல் ஏன் நுழைந்தீர்கள்?’’ என்று கேட்டு குதிரையையும் உடன் வந்த வீரர்களையும் கட்டிப் போட்டனர். தகவல் ராமபிரானை எட்டியது. ‘‘யாகக் குதிரையைக் கட்டிப் போட்டவர்களை வென்று வா!’’ என்று லட்சுமணனை அனுப்பி வைத்தார் ராமபிரான்.
சித்தப்பாவான லட்சுமணனை யார் என்றே தெரியாமல் சிறுவர்கள் இருவரும் அவனுடன் போரிட்டு வென்றனர். மட்டுமின்றி, லட்சுமணனுடன் வந்த படை வீரர்களும் தோற்றுப் பின்வாங்கினர். ராம பிரானுக்குச் சோகத்துடன் தகவல் அனுப்பினர் அயோத்தி வீரர்கள். ‘‘சகல கலைகளிலும் வல்லவனான என் தம்பியையே தோற்கடித்த அந்தச் சிறுவர்கள் யார்? அவர்களோடு நான் போரிட்டு வெல்கிறேன்!’’ என்று ஆவேசத்துடன் அயோத்தியில் இருந்து புறப்பட்டார் ராமர்.
குசன், லவன் ஆகிய சிறுவர் களுக்கும் ராமபிரானுக்கும் (மகன்கள்- தந்தை என்ற உறவு முறை அறியாமலேயே) போர் மூண்டது. அப்போது ஆசிரமத்தில் தவத்தில் ஆழ்ந்திருந்த வால்மீகி விரைந்தோடி வந்தார். மகன்கள் போரிட்டுக் கொண்டிருப்பது உத்தமமான ஒரு தந்தையுடன் என்ற விவரத்தை குசன் மற்றும் லவனுக்கு எடுத்துக் கூறினார்.
‘ஐயகோ... இத்தனை நேரமாக நாங்கள் போரிட்டுக் கொண்டிருந்தது எங்கள் தந்தையுடனா? பெரும் பாவத்துக்கு நாங்கள் ஆளாகி விட்டோமே! தந்தையை எதிர்த்துப் போர் புரிந்த எங்களின் தோஷம் நீங்க ஒரு பரிகாரம் சொல்லுங்கள் முனிவரே...’’ என வால்மீகியிடம் வேண்டினர் லவ- குசர்கள்.
‘‘சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு பூஜை செய்து வழிபட்டால், உங்கள் தோஷம் நீங்கும்!’’ என்றார் வால்மீகி முனிவர். அதன்படி, தாங்கள் போரிட்ட அதே இடத்தில் தங்களுக்கு ஏற்ப, உயரம் குறைந்த சிவலிங்கம் ஒன்றை நிறுவி வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனர் லவ- குசர்கள். அந்த ஈஸ்வரனே ‘குசலவபுரீஸ்வரர்’ என்றும் பின்னாளில் ‘குறுங்காலீஸ்வரர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
குறுங்காலீஸ்வரரை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். எனவே, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து பித்ரு தோஷ நிவர்த்திக்காக ஈஸ்வரனை வழிபட்டுச் செல்கிறார்கள்.
‘‘காசி புண்ணிய க்ஷேத்திரம் இருக்கும் வட திசையை நோக்கி குறுங்காலீஸ்வரர் வீற்றிருப்பதால், இந்தத் தலம் காசிக்கு இணையான பெருமை உடையது. ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். அதேபோல் அவர் மைந்தர்களான குசன், லவன் இங்கு சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டதால், ராமேஸ்வரத்தைத் தரிசித்த புண்ணியமும் இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு உண்டு!’’ என்கிறார் ஆலயத்தின் இன்னோர் அர்ச்சகரான விஜயகுமார் சிவாச்சார்யர். இனி, ஆலய தரிசனம் செய்வோம், வாருங்கள்!
மெயின் ரோட்டில் இருந்து பிரியும் குறுங்காலீஸ்வரர் கோயில் தெருவுக்குள் நுழைந்தால், கூப்பிடு தூரத்தில் நேரே இருக்கிறது கோயில். உள்ளே நுழையுமுன் இடப் பக்கம் வைகுண்டவாச பெருமாள் கோயில். சைவமும் வைணவமும் அருகருகே இருக்கிறது.
இந்த வைணவ ஆலயத்தின் உள்ளே குசனும் லவனும் அருகில் இருக்க... வால்மீகி முனிவர் தவம் இருக்கும் ஒரு சிலா விக்கிரகம் உள்ளது. இதன் அருகிலேயே கர்ப்பவதியாக சீதை நின்று கொண்டிருக்கும் மற்றொரு சிலா விக்கிரகமும் காணப்படுகிறது.
குறுங்காலீஸ்வரர் ஆலயத்துக்கு முன் உள்ள மண்டபத் தூண்களில் ராமாயணக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இவற்றில் ஒரு தூணில் ஸ்ரீசரபேஸ்வரர் காணப்படுகிறார். சமீப காலமாக ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடு இங்கு பிரபலம் ஆகியுள்ளது. ஞாயிற்றுக் கிழமையன்று மாலை நேரத்தில் அவரை வழிபடுவதற்குக் கூட்டம் அதிகமாகக் கூடுகிறது.
உள்ளே நுழைகிறோம். பெரிய ராஜ கோபுரம் இல்லை. மூன்று நிலைகளுடன் சிறு கோபுரம். வலப் பக்கம் அதிகார நந்தி. இடப் பக்கம் காலபைரவர்.
கொடிமரம். பலிபீடம். நான்கு கால் மண்டபத்தில் நந்திதேவர். ஒரு முறை சித்தம் கலங்கி, சிவபெருமானின் அருளால் தெளிவடைந்த நந்திதேவர், இங்கு கட்டுப்படும் கோலத்தில் மூக்கணாங்கயிறுடன் அமர்ந்திருப்பது சிறப்பு. ‘‘இந்தத் தலத்தில் பிரதோஷம் விசேஷம். இதை ‘ஆதி பிரதோஷத் தலம்’ என்பார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் இங்குள்ள குறுங்காலீஸ்வரரை தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தின வேளையில் தரிசித்த பலன் கிடைக்கும். ஒரு சனிப் பிரதோஷத்தன்று ஈஸ்வரனை தரிசித்தால், ஒரு கோடி பிரதோஷத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுவது உண்டு!’’ என்கிறார் சசிகுமார் சிவாச்சார்யர்.
இதன் வலப் பக்கம் வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர் சந்நிதி. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற முருகன் இவர். எனவே, சந்நிதியின் உள்ளேயே அருணகிரிநாதருக்கும் ஒரு சிலா விக்கிரகம் இருக்கிறது. இதன் அருகில் அண்ணாமலையார் சந்நிதி.
உள்ளே செல்கிறோம். முதலில் நாற்பது தூண்களுடன் கூடிய பிரமாண்ட மண்டபம். நுழையும்போது நமக்கு வலப் புறம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் காணப்படுகின்றன. இந்த தூண் களில் ஏராளமான சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. அதில் யாகக் குதிரை யைக் கடிவாளத்தோடு பிடித்த நிலையில் காணப்படும் குச- லவர்களின் கம்பீரமான காட்சி, கலைநயம் மிக்கது.
இந்த மண்டபத்தில்தான் குசலவ புரீஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சந்நிதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தனி அம்மன் சந்நிதியும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.
முதலில், ஈஸ்வரன் சந்நிதி. துயர் தீர்க்கும் தும்பிக்கை விநாயகர் இடப் பக்கம்- பாலசுப்ரமணியர் வலப் பக்கம். இவர்களை தரிசித்து விட்டு, துவாரபாலகர்களைக் கடந்து குறுங்காலீஸ்வரரை தரிசிக்கச் செல்கிறோம். சிறிய ஆவுடையாரின் மேல் சுமார் நான்கு அங்குல உயரம் கொண்ட பாணம். குச- லவர் ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட லிங்கத் திருமேனி. அற்புதமான தரிசனம்.
இந்த ஆலயத்தின் எந்த ஒரு சந்நிதியிலுமே கிரானைட் கற்கள் கிடையாது; மார்பிள் கற்களின் அணிவகுப்பு இல்லை; இறை உருவங்களின் மேல் ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும் வண்ண மின்விளக்குகள் இல்லை. எல்லாச் சந்நிதியிலுமே தீபத்தின் பிரகாசத்தில் தெய்வங்களை தரிசிக்க முடிகிறது. இறைவன் குடி கொண்டிருக்கும் கருவறையை, நாகரிகச் சாயல் படாமல் புனிதமாகக் காத்து வரும் பணி பாராட் டத் தக்கது. வடக்குப் பார்த்த இறைவன் என்பதால் கோஷ்டத்திலும் மாறுதல்கள். விநாயகர், பிரம்மா, ஈஸ்வரனுக்கு நேர் பின்புறம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, விஷ்ணுதுர்கை என்று கோஷ்ட தேவதைகள்.
தவிர, இந்தப் பிராகாரத்தின் துவக்கத்தில் நடராஜர், சூரியன், சந்திரன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். பிராகார வலம் வருகிறோம். சண்டிகேஸ்வரர் (கோமுக தீர்த்தம் விழும் இடத்தில்), விநாயகர், ஜுரகரேஸ்வரர், அகத்தீஸ்வரர், இன்னொரு விநாயகர், சாஸ்தா, சுப்ரமண்யர், சிவலிங்கம், லட்சுமி, அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், ஞானசரஸ்வதி, நாகர்கள் என பல வடிவங்களை இங்கே தரிசிக்கிறோம்.
ஈஸ்வரனின் பிராகார வலம் முடிந்து, அம்பாள் சந்நிதிக்குச் செல்கிறோம். திருவையாறில் அருள் பாலிக்கும் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி எனும் தர்மசம்வர்த்தினி. பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலத்தில், இடது திருவடியை முன் எடுத்து வைத்த பாவத்தில் பக்தர்களின் துயர் தீர்க்கப் புறப்படத் தயாராக இருக்கிறாள் இந்த அம்பிகை. பிராகார வலம் வர முடியும்.
அம்மனை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணப் பேறு வாய்க்கும். தீராத வியாதிகள், மனக் குழப்பங்கள் அகலும். அம்மன் சந்நிதிக்கு அருகே நவக்கிரக சந்நிதி. பிற்காலப் பிரதிஷ்டை.
சூரிய பகவான், இங்கு குறுங்காலீஸ்வரரை வழிபட்டமையால், சூரிய தேவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. நடுவே, ஏழு தேர் பூட்டிய ரதத்தில் மனைவியருடன் சூரியன் இருக்க... அருணன் தேரோட்டிச் செல்கிறான். கீழே, பீடத்தில் பிற கிரகங்கள் அமைந்துள்ளன.
வெளிப் பிராகாரம் உண்டு. இங்கு நந்தவனம், வில்வ விநாயகர், மடப்பள்ளி, யாக சாலை, தல மரமான பலா போன்றவை காணப்படுகின்றன.
தல தீர்த்தம்: லவகுச தீர்த்தம். சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி பிரம்மோற்சவம், ஆடிப் பூரம், நவராத்திரி, கார்த்திகை தீபம், மாசி மகம் உள்ளிட்ட பல திருவிழாக்கள் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2000-ஆம் ஆண்டில் திருப்பணி செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தூய்மையான- கம்பீரமான ஆலயம். புராண- வரலாற்றுப் பெருமைகளை தன்னகத்தே கொண்டு, கோயில் என்ற இலக்கணத்துக்கு உட்பட்டு, பாங்காக அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் குறுங்காலீஸ்வரரின் பாதம் போற்றி வணங்குவோம்!
|
Tuesday, 1 August 2017
அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், கோயம்பேடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment