Thursday, 3 August 2017

திருவெளிச்சையில் தீர்க்க தரிசனம்!


சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில், கேளம்பாக்கம் அருகே அமைந்துள்ள சிறு கிராமம் _ திருவெளிச்சை! மண் வாசனை நிரம்பிய பசுமையான கிராமம். இங்கு அழகாக அமைந்துள்ளது ஓர் ஆலயம். சைவமும் வைணவமும் இணைந்து மணக்கும் ஸ்ரீபசுபதீஸ்வரர் மற்றும் சுந்தர வரதராஜ பெருமாள் ஆலயம், அமைதி ததும்பும் ஓர் ஆன்மிக பூமி. இந்த ஆலயத்தைக் கட்டி முடித்தவர் சதாசிவ பிரும்மேந்திரர்.
யார் இந்த சதாசிவ பிரும்மேந்திரர்?
‘ஞானிகள்’ என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். ‘நெரூரில் ஜீவசமாதி அடைந்த பிரும்மம், விட்ட பணிகளைத் தொடர, 20-ஆம் நூற் றாண்டில் அவதரித்தவர் பிரும்மேந்திரர்’ என்று பக்தர் கள் இவரை போற்றுகின்றனர்.
1979-ல் நெருங்கிய அன்பர்களது விருப்பத்துக்கு இணங்கி, ‘ஞானச்சேரி’ என்கிற அமைப்பை மயிலாப்பூரில் தொடங்கினார் பிரும்மேந்திரர். வெள்ளி விழா கண்ட தங்கள் குரு பிரும்மேந்திரருக்கு, ஞானச்சேரி அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள், அண்மையில் ஒரு விழா எடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறார்கள். இளமையிலேயே ஆன்மிகத்தால் கவரப்பட்டு அந்த நினைவுகளிலேயே வாழ்ந்தவர் பிரும்மேந்திரர்.
குழந்தைப் பிராயத்திலேயே பூஜித்து வழிபட தனக்கென்று ஓர் ஆலயம் அமைத்துக் கொள்ள விரும்பினார் பிரும்மேந்திரர். அந்த விருப்பம்தான் கேளம்பாக் கம் அருகே உள்ள திருவெளிச்சை கிராமத்தில் நிறைவேற்றப்பட்டது. 1995-ஆம் ஆண்டு திருவெளிச்சை கிராமத்தில் ஒரு பாலாலயம் நிர்மாணிக்கப்பட்டது. சொற்பப் பணத்துடன் வேலைகள் துவங்கி, அன்பர்கள் ஆதரவுடன் மெள்ள நீண்ட பணி, 1999-ஆம் ஆண்டு பூர்த்தி ஆனது. அதே வருடம் ஜூன் மாதம் 30-ஆம் தேதி ஆலய கும்பாபிஷேகம் பிரமாதமாக நடந்தேறியது. பூத்துக் குலுங்கும் தோட்டத்துடன் அமைந்த பிராகாரத்தில் பரிவார தேவதைகள் புடை சூழ, அங்கே அருள் பாலிக்கத் துவங்கினர் சிவபெருமானும், மகா விஷ்ணுவும்.
அருள்மிகு பசுபதீஸ்வரர்; அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாள்... இந்த இருவரும் பிரதான தெய்வங்கள். சித்தி விநாயகர், சிவசுப்ரமணிய சுவாமி, சிம்மப்ரியா, கனக வல்லித் தாயார் என்று சந்நிதிகள் வரிசை நீள்கிறது. பின்னாளில் மெள்ள மெள்ள இங்கு வந்து குடியேறிய பிற தெய்வங்களும் உண்டு. அவற் றுள் 2004-ல் இங்கே குடி கொண்ட பிரத்யங்கரா தேவி அதர்வண பத்ரகாளி குறிப்பிடத் தக்கவள். ஆலயத்தின் முகப்பிலேயே தனிச் சந்நிதியுடன் முன்னால் சிம்ம வாகனம், பலி பீடம் திகழ, வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறாள் பிரத்யங்கரா தேவி.
எங்கும் இல்லாத அளவுக்கு இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய திசையாதிபதிகள் எட்டுப் பேருக்கும் அவரவருக்குரிய இடத்தில் ஒவ்வொரு விக்கிரகம் இருப்பது, இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. ஆலய நுழைவாயிலில் கொடிமரம். பலிபீடம். பிரதோஷ நந்திதேவர்.
நாம் ஆலயம் சென்ற தினம் ஒரு பிரதோஷ வேளை. நந்திதேவர் பிரமாதமாக ஜொலித்துக் கொண்டி ருந்தார். நேராக பசுபதீஸ்வரர் சந்நிதி. கிழக்கு நோக்கிய மூலவர். இவருக்குத் தனியாக நந்தி, பலிபீடம். பசுபதீஸ்வரருக்கு அருகிலேயே உற்சவர் விக்கிரகங்கள். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி வீற்றிருக்கும் அம்பாளின் நாமம் _ சிம்ம ப்ரியா. கொள்ளை அழகு. வெளியே சிம்ம வாகனம். பலிபீடம். விநாயகர், நடராஜர், சூரியன், சந்திரனும் இங்கே வீற்றிருக்கின்றனர்.
அழகான ஒரே பிராகார கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்களுக்கு விக்கிரகங்கள். பிராகாரத்தில் சித்தி விநாயகர். மூஞ்சுறு வாகனம். பலிபீடம். அடுத்து வள்ளி, தேவசேனாவுடன் வீற்றிருக்கும் ஸ்ரீசிவசுப்ரமணியர். மயில் வாகனம். பலிபீடம். அடுத்துத் தனியே அமைந்திருக்கும் பெருமாள் ஆலயம். ஸ்ரீதேவி-பூதேவியுடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் வரதராஜர்.
எதிரே கருடாழ்வார். அருகே தாயார் கனகவல்லி. ஆஞ்சநேயர் பெருமானுக்கும் இங்கு விக்கிரகம் உண்டு.
இது தவிர, ஆலயத்தில் பாலாலயத்தின் போது நிர்மாணிக்கப்பட்ட விக்கிரகங்களையும் தனியே வைத்து ஆராதனை செய்து வருகிறார்கள். கண்களைக் கொள்ளை கொள்ளும் விக்கிரகங்கள் இங்கே அணிவகுக்கின்றன. நவக்கிரகம், ஸ்ரீகாலபைரவர் ஆகியோருக்கும் விக்கிரகங்கள் உள்ளன. வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி இந்த ஆலயத்துக்குக் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.
எளிமையான முறையில் அமைந்த சிறிய ஆலயம். கண்களையும் மனசையும் நிறைக்கும் அற்புத விக்கிரகங் கள். மனதுக்கு ரம்மியமான சூழ்நிலை. ஆண்டவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
எப்படிப் போவது?
ப ழைய மகாபலிபுரம் சாலையில் சென்று கேளம்பாக்கத்தை அடைந்தால், அங்கிருந்து வண்டலூருக்கு ஒரு பாதை பிரிந்து செல்லும். இந்த சாலையில் சுமார் நான்கு கி.மீ. தூரம் பயணித்து மலை ஆஞ்சநேயர் கோயிலில் இறங்கிக் கொள்ள வேண்டும்.
இங்கிருந்து இடப் பக்கம் ஒன்றரை கி.மீ. தூரம் நடந்து சென்றால், திருவெளிச்சை ஆலய கோபுரம் கண்களுக்குத் தெரியும். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில், வண்டலூர் மிருககாட்சிசாலையை ஒட்டி கேளம்பாக்கம் செல்லும் சாலை வழியே சென்று மலை ஆஞ்சநேயர் கோயிலில் இறங்கி சாலையைக் கடந்தும் செல்லலாம். வண்டலூர் மிருககாட்சிசாலையில் இருந்து திருவெளிச்சை கிராமம் சுமார் 10 கி.மீ. தொலைவு. தாம்பரத்தில் இருந்து திருப்போரூர் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் மலை ஆஞ்சநேயர் கோயில் நிறுத்தத்தில் நின்று செல்லும்.
தினமும் ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடந்து வருகிறது. காலை ஒன்பது மணி முதல் பத்தரை மணி வரை மட்டுமே கோயில் திறந்திருக்கும். பிரதோஷ தினத்தன்று மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை நந்திதேவருக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும்.

No comments:

Post a Comment