Thursday, 3 August 2017

சந்திரமௌலீஸ்வரரை அடையாளம் சொன்ன மகா பெரியவர்!

 
தொ ண்டை மண்டலம், ‘சான்றோ ருடைத்து’ எனும் பெருமைக்குரியது. இது மட்டுமின்றி, பண்பாடும் பண்பாடு சார்ந்த கலைகள் ஆகியவற்றிலும் பெரு மைக்கு உரியது தொண்டை மண்டலம்.
பல்லவர்களின் காலத்திலும் (கி.பி.400-800), சோழர்களின் சாம்ராஜ்யம் விரிவடைந்த காலத்தி லும் (கி.பி.10-11-ஆம் நூற்றாண்டுகளில்) ஏராளமான கோயில்கள் கட்டப் பெற்றும், புதுப்பிக்கப்பட்டும் தொண்டை மண்டலம் சிறப்புற்றுத் திகழ்ந்தது. கலை ஈடுபாடுள்ள மன்னர்கள் பலர், சிற்பங்கள் மற்றும் ஓவியங்களால் கோயில்களை நிறைத்தனர். தங்களது ஆளுகையின் கீழ் நிறைய மலைகளும் பாறைகளும் பரவிக் கிடந்ததால் பல்லவ மன்னர்கள், புடைச் சிற்பங்களையும் குகைச் சிற்பங்களையும் குடை வரைக் கோயில்களையும் எடுப்பித்தனர். பல்லவ- சோழ கலைத் தொகுப்பின் அழகிய உதாரணமாக விளங்குகிறது அருங்குன்றம். வேலூருக்கு அருகே இருக்கிறது ஆற்காடு. ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலம் சாலையில், சுமார் எட்டு கி.மீ தூரத்தில், மலைகளுக்கும் குன்றுகளுக்கும் நடுவில் இயற்கை எழிலுடன் விளங்கும் இந்தக் கிராமம், தமிழகத்தின் பக்திச் சிறப்புக்கும் சான்றாகத் திகழ்கிறது.
ஊருக்குள் நுழைந்ததும், பெரிய கல்லால மரம் ஒன்றைக் காணலாம். அதன் அடியில் அமர்ந்திருக்கும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியை மானசீகமாக வணங்கியபடியே திரும்பினால் _ அருங்குன்றம் ஊரின் நடுநாயகமாக இருக்கிறது ஒரு சிறிய சிவன் கோயில். அருள்மிகு சாலாட்சி உடனாய அருள்மிகு தர்மேஸ்வரர் கோயில். கோயிலின் பிரதான வாயிலின் கீழ்ப்பகுதியில் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இதன் மீது வண்ணம் பூசியுள்ளதால், எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார்கள்.
சிறிய கோயில். எதிரில், சற்றுத் தள்ளி ஒரு பெரிய குளம். கோயிலுக்குள் மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியது. அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய இந்த சந்நிதி, பழங்கால பல்லவர் கட்டுமானப் பாணியிலானது. தெற்குப் புறப் பிரதான வாயில் கடந்து, மகா மண்டபத்துள் நுழைகிறோம். அங்கிருந்து, மூலவரை தரிசிக்கப் பக்கவாட்டில் செல்ல வேண்டும். இப்படி பக்கவாட்டில் உள்ளே நுழையும் அமைப்பை, தொண்டை நாட்டுக் கோயில்கள் (காஞ்சிபுரம்- கயிலாசநாதர் கோயில், திருமுக்கூடல் - பெருமாள் கோயில் உட்பட) பலவற்றிலும் காணலாம்.
அம்பிகை சந்நிதி, தனிக் கோயில். கிழக்கு நோக்கி யது. முன் மண்டபமும் அர்த்த மண்டபமும் உள்ள கோயில். நான்கு திருக்கரங்க ளுடன், அபய-வர ஹஸ்தங்கள் தாங்கி, நின்ற திருக்கோலத்தில் அம்பிகை சாலாட்சி அருள் பாலிக்கிறாள். மூலவர் சந்நிதிக்கு முன் நந்தி வாகனம். அம்பாள் சந்நிதிக்கு முன் சிம்ம வாகனம். கொடிமரம் இருக்க வேண்டிய இடத்தில், கல்லாலான தீப ஸ்தம்பம். (இந்த மாதிரி தீப ஸ்தம்பங்களை கொங்கு நாட்டுக் கோயில்களில் அதிகமாகக் காணலாம்). கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று லிங்க ரூபமாக சிவபெருமான் காட்சி அளித்த வைபவத்தை ‘கார்த்திகை தீபத் திருநாள்’ என்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அதன் எதி ரொலியாக, செஞ்சி நாயக்க மன்னர்கள் காலத்தில், கோயில்களில் தீப ஸ்தம்பங்கள் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அருங்குன்றம் கிராமத்தின் எல்லையில், காவல் தெய்வமான பொன்னியம்மனுக்குத் தனிக் கோயில் உள்ளது. இரு புறமும் சப்த கன்னியர் புடைசூழ, நடுநாயகமாக வீற்றிருந்து அருளாட்சி புரிகிறாள் அருள்மிகு பொன்னியம்மன். அவளை வணங்கி வெளியில் வந்தால், எதிரில் ஒரு பெரிய கல்வெட்டு. மண்ணுக்குள் பாதி புதைந்து கிடக்கிறது. இந்தக் கல்வெட்டு, சுமார் முப்பது வருடங்களாக மண் மேடிட்டு மேடிட்டு, அமிழ்ந்து விட்டதாம். அருகில் இன்னொரு பாறை. அதிலொரு காலடி. கிராமத்துப் பெண்மணி ஒருவர், தலையில் இருந்த கூடையைக் கீழே வைத்து விட்டுக் காலடியைத் தொட்டுக் கும்பிட்டு வலம் வருகிறார். என்ன இது?
பழைய சம்பவத்தைப் பார்ப்போம். நெடுங் காலமாக, அருங்குன்றம் கிராமத்தையும் அங்கு வசித்த மக்களையும் காத்து வந்த பொன்னியம் மனை ஒரு கட்டத்தில் மக்கள் மறந்தார்கள். அவள் ஆலயத்துக்குப் பூஜையோ படையலோ, ஏன்... விளக்குகூடப் போடுவதில்லை. உணவு கிடைக்காத பொன்னியம்மன், தினமும் நடுநிசியில் சப்த மாதருடன் வெளியில் வந்தாள். கோயில் விவசாய நிலத்தில் இருந்து தேவையான அளவு நெல் எடுத்து, பக்கத்திலிருந்த கல் உரலில் இட்டுக் குத்தி, கிடைத்த அவலை பொன்னி யம்மனும் சப்தமாதர்களும் உண்டு வந்தனர்.
வயற்காட்டின் சில பகுதிகளில் நெல் அறுக்கப் படுவதைக் கவனித்த ஊர்க்காரர்கள், திருட்டைக் கண்டுபிடிக்க ஆட்களை அமர்த்தினர். காவலுக்கு வந்த ஆட்கள், அம்மனின் செய்கையால் இரவில் தூங்கி விடுவார்கள். குறிப்பிட்ட ஒரு காவல்காரனை நிலத்தின் சொந்தக்காரர் ஏகத்துக்கும் கோபித்துக் கொண்டார். எனவே, ‘எப்படியாவது இன்று கண் விழித்துக் காத்திருந்து திருடனைப் பிடித்து விடுவது!’ என்று உறுதி கொண்டான் அந்தக் காவல் காரன். அதன்படியே அன்று இரவு, வயலில் நெல் அறுத்த- மங்களகரமான தோற்றத்தில் இருந்த ஒரு பெண்மணியைக் கையும் களவுமாகப் பிடித்து விட் டான். அது சாட்சாத் பொன்னியம்மனேதான்! விஷ யம் தெரிந்தவன் விதிர்விதிர்த்துப் போய் அந்த அம்மனின் காலடியில் பக்தியோடு விழுந்தான். ‘‘எழுந்திரு பக்தா! ஊர்க்காரர்கள் எவரிடமும் எதுவும் சொல்லாதே!’’ என்று அவனை எச்சரித்துவிட்டு மறைந்தாள் பொன்னியம்மன்.
மறு நாள் ஊர்மக்கள் எல்லோரும் அவனை அடித்து விசாரித்தனர். கடைசியில், உண்மையைச் சொல்லிவிட்டு இறந்து போனான் காவல்காரன்.
அன்றிரவு அந்த ஊர் மணியக்காரர் கனவில் தோன்றிய பொன்னியம்மன், தானும் சப்தமாதர்களும் ஊரைவிட்டுப் போவதாகச் சொன்னாள். அப்படி அவள் ஊரைவிட்டுப் போகும்போது ஏற்பட்ட தடங்க ளில் ஒன்றுதான் பாறையில் உள்ளது. ஊர் குளத்தருகே ஒன்று, மணியக்காரர் வீட்டருகே ஒன்று என்று இவை காணப்படுகின்றன. பிறகு தவறை உணர்ந்த ஊரார் மன்னிப்பு கேட்டனராம். அம்மனும் மனம் இரங்கினாள். அதன்படி ஒவ்வொரு தை மாதத்திலும் சாம்பசிவபுரம் எனும் பக்கத்து கிராமத்தில் எழுந்தருள்கிறாளாம் பொன்னியம்மன். இவை எல்லாம் அருங்குன்றத்து மக்கள், பொன்னியம்மன் பற்றி பக்தியோடு கூறும் செய்திகள்.
பொன்னியம்மன் கோயில் வாசலிலிருந்து பார்த் தால், சுற்றிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க குன்றுகள். திருப்பாண்மலையில் நந்திவர்ம பல்லவர் காலத்து குகைக் கோயில்கள் ஏழு உள்ளன. ஒரு காலத்தில் சமணப் பெண் துறவிகளின் துறவு மடமும் இங்கு இருந்ததாம். மலை மீது சுனை ஒன்று காணப்படுகிறது. சுனை இருப்பதால், இது ‘சுனை மலை’ எனப்படுகிறது. இதன் அருகில் உள்ள சமணப் பள்ளியில் நாகநந்தி எனும் துறவியின் சிற்பமும், யக்ஷியின் வடிவமும் காணப்படுகின்றன. சமண மதத்தில் சாசன தேவ தைகள் எனப்படும் யக்ஷிகள், காவல் தெய்வங்க ளாகவும் தீர்த்தங்கரர்களுக்குப் பாதுகாப்பு தரக் கூடியவர்களாகவும் கருதப்படுகின்றனர். பஞ்ச பாண்டவர் மலை, தலைகாத்தான் மலை, மலை மேடு என்று நிறையக் குன்றுகள்!
இந்தக் குன்றுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது ஊருக்குப் பெயர் தரும் அருங்குன்றம். ஹரிஹரன் குன்றம் என்பதே காலப்போக்கில் அருங்குன்றம் ஆகிவிட்டது. கல்வெட்டுகளின்படியும் செவிவழிக் கதைகளின்படியும், இந்த ஊரில் 108 சிவலிங்கங்கள் உள்ளனவாம். அவற்றில் பிரதானமானது, ஹரிஹரன் குன்றில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் திருமேனி.
குடும்ப ஒற்றுமை, பிரிந்தவர் கூடுவது, காணாமல் போன பிள்ளை கிடைப்பது போன்றவற்றை அருளக் கூடியவர் அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர். ஒரு காலத்தில், திருமணப் பிரார்த்தனைத் தலமாகவும் இந்தத் திருக்கோயில் விளங்கியதாம்.
சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குத் தலைமை தாங்கு வது போல அருங்குன்றம் விளங்கிய காலத்தில் தடைபட்ட திருமணங்கள் பல, சந்திரமௌலீஸ்வரர் அருளால், தடை நீங்கி நடந்தேறியதாகத் தெரி கிறது. ஒரு காலத்தில், திரிபுரசுந்தரி உடனாய சந்திரமௌலீஸ்வரர், மலை மீதிருந்த கோயிலில் கம்பீரமாகக் காட்சி கொடுத்தாராம். ஆனால், 18- ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் நடைபெற்ற கர்நாடகப் போர்களின்போது, பெரும் பாதிப்புக்கு உள்ளான ஹரிஹரன் குன்றம் மலைக் கோயில், 20-ஆம் நூற்றாண்டில் ஏறத்தாழச் சிதைந்து விட்டது. சுமார் எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இங்குள்ள தர்மேஸ்வரர் கோயிலுக்கு வந்த காஞ்சி மகா பெரியவர், ‘‘மலைக்கு மேல் சந்திரமௌலீஸ்வரர் இருக்கிறார். சக்தி வாய்ந்தவர். ஊர்மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி போய் வணங்க வேண்டும்!’’ என்று அங்குள்ள மக்களிடம் சொல்லி இருக்கிறாராம்.
கிட்டத்தட்ட அதே சமயம் (பிரிட்டிஷாரின் ஆட் சிக் காலம்), இந்த ஊரைவிட்டு பிழைப்புக்காக வெளியூர் சென்றவர்களின் வாரிசுகள் சிலர் சந்திர மௌலீஸ்வரரைத் தேடி வந்தனர். அவர்களுள் ஒரு வர், தன் கொள்ளுப்பாட்டி சில அடையாளங் களைக் குறிப்பிட்டதாகச் சொன்னார். மேலும் தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினையைத் தீர்த்து வைக்குமாறு அந்தக் கொள்ளுப் பாட்டி, சந்திரமௌலீஸ்வரை வேண்டியதாகவும் அது நிறை வேறியதால், நேர்த்திக் கடனைச் செலுத்துமாறு அவர், தம் குடும்பத்தாரிடம் வலியுறுத்தி அனுப்பியதாகவும் கூறினார்.
அவர் சொன்ன அடையாளங்களை வைத்தும், காஞ்சி மகா பெரியவர் வந்தபோது சொன்ன சில குறிப்புகளை வைத்தும் தேடினார்கள். அப்போது குன்றின் மீது இடிபாடுகளுக்கு நடுவில், சந்திரமௌ லீஸ்வரர் காட்சி கொடுத்தார். தேடி வந்த பக்தர் மனம் நெகிழ்ந்தார். சந்திரமௌலீஸ்வரரை ஊராரும் மனம் குளிர தரிசனம் செய்தனர்.
இதன் பிறகு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருக்கும் அருங்குன்றத்துக்காரர்கள் ஒன்று கூடி, ‘ஹரி ஹரன்குன்றம் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட்’ ஒன்றை ஏற்படுத்தி, சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயிலைப் புனருத்தாரணம் செய்தனர். இந்தத் திருப்பணிக்குத் தலைமை ஏற்று, பங்காற்றியவர் டாக்டர் ஏ.என். சந்திரசேகரன். இவர், சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் முட நீக்கியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
பழைய பெரிய சிவலிங்கத் திருமேனி. சந்திர மௌலீஸ்வரர் ஆவுடையாரின் அழகு மெய் சிலிர்க்க வைக்கிறது. கோயிலில் இருந்த பிராஹ்மி மற்றும் சாஸ்தா சிலைகளும் அப்படியே உள்ளன.
மேற்கு நோக்கிய சந்நிதி. அருகில், தெற்கு நோக்கியவாறு திரிபுரசுந்தரி அம்மன் சந்நிதி. இன்னும் சில கூடுதல் திட்டங்களும், சந்திரமௌலீஸ்வரர் அருளால் நிறைவேற்றப்பட உள்ளன. மலையின் ஒரு பக்கத்தில், பெரிய பாறை ஒன்று தனித்து நிற்கிறது. அங்கு தினமும் மலைதீபம் ஏற்றும் எண்ணமும் இருக்கிறதாம்.
குன்றத்துக்குச் சுற்றிலும் உள்ள இடத்தைச் செப் பனிட்டு, கிரிவலப் பாதையாக்கும் திட்டமும் உண்டு. அதற்காக இப்போது மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மலையின் வடமேற்குப் பகுதியில் திருமலையான் திருக்கோயில் அமைக்கும் திட்டமும் உள்ளன.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனும் இருப்பது வழக்கம். எனவே, குமரக் கடவுளுக்காகவும் புதிய சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டுள்ள முருகப்பெருமான், திவ்வியமாகப் புன்னகைக்கிறார். முருகன் சந்நிதி- கிழக்கு நோக்கி, மகா மண்டபத்துடன் அமைந்துள்ளது. தென்மேற்கில் கணபதி சந்நிதி.
சிவாகமங்களில், சிவன் கோயிலில் தெற்காகவும் மேற்காகவும் உள்ள பகுதிகள் உயரமாக இருக்க வேண்டும் என்பது நியதி. ஹரிஹரன் குன்றின் மீது நின்று பார்த்தால், ஆகம விதிப்படி நிலம் அமைந் திருப்பதைக் காணலாம். தெற்கிலும் மேற்கிலும் குன்றுகள். கிழக்கிலும் வடக்கிலும் தாழ்வரைகள். ஹரிஹரன் குன்றத்துக்கு மேற்கில் லிங்கம் பாறை. பாறை லிங்க வடிவில் காணப்படுவதால் இந்தப் பெயர்.

எப்படி போவது?
வேலூருக்கு அருகே இருக்கிறது ஆற்காடு. அங்கிருந்து கண்ணமங்கலம் சாலையில் எட்டு கி.மீ. சென்றால் அருங்குன்றத்தை அடையலாம். ஆற்காட்டில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.

No comments:

Post a Comment