கா ஞ்சி மாநகரில் வசித்த காளத்தியப்ப சிவாச்சார்யார், ஆதி சைவர் மரபில் தோன்றி யவர். இவர், குமரக் கோட்டம் திருக்கோயிலில் அர்ச்சகராக விளங்கினார். நெடுங்காலம் மகப்பேறு இன்றி வருந்திய அவருக்கு, குமரக் கடவுளின் திருவருளால் ஒரு மகன் பிறந்தான்.
மகனுக்கு ‘கச்சியப்பர்’ என்று பெயர் வைத்தனர். இவர் சிறு வயதில் வளமையாகக் கல்வி பயின்றார். வடமொழி மற்றும் தமிழில் வல்லவராக விளங்கினார். இவரும் குமரக் கோட்டத்தில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளை பூசித்து வந்தார்.
ஒரு நாள் அவர் கனவில் முருகன் தோன்றி, ‘‘அன்பனே, சிவ ரகஸ்ய கண்டத்திலுள்ள நமது சரித்திரத்தைத் தமிழில் பெருங் காவியமாகப் பாடுக. அதற்கு கந்த புராணம் என்று பெயரிடுக!’’ என்று கூறினார். கச்சியப்பர் முருகனைத் தொழுது கண்கள் கலங்க, ‘‘தங்கள் புராணத்தை சிறியேன் எங்ஙனம் பாடுவேன்?’’ என்று கேட்டார். உடனே முருகன் ‘திகட சக்கர செம்முகம் ஐந்துளான்’ என்று அடி எடுத்துக் கொடுத்து, பாடும் திறமையையும் அருளினார்.
கனவு தெளிந்து எழுந்த கச்சியப்பர், அந்தப் பணியை மேற்கொண்டார். நாள்தோறும் புராணத்தைப் பாடிய ஏட்டையும், எழுத்தாணியையும் இரவு பூஜை முடித்த பின் குமரக்கோட்டத்து முருகன் திருவடியில் வைத்து விட்டு இல்லம் போவார். மறு நாள் காலையில் கோயிலைத் திறந்து ஏட்டை எடுப்பார். அதில் சில திருத்தங்கள் செய்திருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைவார்.
 இவ்வாறு பல நாட்கள் முயன்று கந்த புராணத்தைப் பாடி முடித்தார். குமரக்கோட்டத் திருக்கோயிலில் அதை அரங்கேற்றத் தொடங்கினார். சிவனடியார்களும், புலவர்களும், மன்னரும், பெருஞ்செல்வர்களும் கூடி இருந்தனர்.
முருகனுக்கு முன்னால் கந்த புராணத்தை வைத்து ஆராதனை செய்து அஞ்சலி புரிந்து வழிபட்டார் கச்சியப்பர். பின்னர் அதை எடுத்து, ‘திகட சக்கரச் செம் முகம் ஐந்துளான்’ என்னும் முதற் செய்யுளை வாசித்து, ‘திகழ் தசக்கர செம்முகம் ஐந்து உள்ளான்’ என்றும், ‘விளங்குகின்ற பத்து திருக்கரங்களும், செவ்விய ஐந்து திருமுகங்களும் உள்ள சிவபெருமான்’ என்றும் பொருள் கூறினார். அங்கிருந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவர், ‘‘திகழ்+ தசம்= திகடசம் என்று கொள்வதற்கு தொல்காப்பியம் உட்பட்ட நூல்களில் விதி இல்லையே. ஆகவே, இதற்குத் தக்க சமாதானம் கூறுதல் வேண்டும்!’’ என்றார்.
கச்சியப்பர், ‘‘ஐயா இந்த முதல் அடி, செந்தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் கூறிய வாக்கு. அவர் முதல் அடியை அடியேனுக்கு அருளினார்!’’ என்றார்.
அதற்கு அந்தப் புலவர், ‘‘முருகன் மொழியாயினும் இலக்கணம் இல்லையாயின் எவ்வாறு ஒப்புக் கொள்வது? ஆகவே, இதற்கோர் விளக்கம் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், இந்தப் புராணத்தை இங்கு அரங்கேற்றக் கூடாது!’’ என்று மறுத்தார். எனவே, அந்த அரங்கேற்றம் நின்றது. கச்சியப்பர் முருகனை தியானித்து, ‘நின் திருவருள் யாதோ?’ என்று அன்று முழுக்க உணவு உட்கொள்ளாமல், இரவில் கோயிலுக்கு முன் தரையில் படுத்து கண்ணீர் வடித்தவாறே உறங்கினார். மீண்டும் அவர் கனவில் முருகன் தோன்றி, ‘‘அப்பனே, நாளை அரங்கேற்றத்தைத் தொடங்கு. நாம் அங்கு வந்து விடை அளிப்போம்!’’ என்று கூறி மறைந்தார்.
 மறு நாள் அவையில் நடுநாயகமாக கச்சியப்பர் வீற்றிருந்தார். கேள்வி கேட்ட புலவர் எதிரில் இருந்தார். சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. அப்போது புலவர் ஒருவர் கையில் ஒரு நூலோடு அங்கு வந்து, ‘‘சபை யோர்களே... இது வீரசோழியம் எனப்படும். இதில் சந்திப் படலத்தின் 18-ஆம் செய்யுளில் ‘திகட சக்கரம்’ எனக் கொள்வதற்கு விதி உள்ளது!’’ என்று அதைப் படித்துக் காட்டி, ‘‘ஐயம் அகன்றதா?’’ என்று கேட்டு உடனே மறைந்து விட்டார்.கச்சியப்பரும், அவையினரும் அதிசயமுற்று புலவராக வந்தவர் முருகக் கடவுள் என்று உணர்ந்து சிலிர்ப்பு அடைந்தனர். வினா எழுப்பிய புலவர் சிலிர்த்துப் போனார். கச்சியப்பரை வணங்கி, ‘‘சுவாமி, தங்கள் பெருமையை அறியாமல், நான் புரிந்த குற்றத்தை மன்னித்தருள வேண்டும்!’’ என்று வேண்டினார்.
கச்சியப்பர் அவரைத் தழுவி, ‘‘தங்களால் முருகனின் திருவருள் வெளிப்பட்டது. அதனால் வருத்தம் வேண் டாம்!’’ என்று கூறினார். அதன் பிறகு கந்த புராணம் அங்கே அரங்கேற்றம் செய்யப்பட்டது.
|
No comments:
Post a Comment