Wednesday, 2 August 2017

தில்லையிற் கூத்தனே..!

 
ல்லா வகைக் கலைகளுக்கும் முற்பட்டு, பழைமையும், பெருமையும், மிக்கதாக விளங்குவது நடனக் கலையே. கலையின் தெய்வமாக அமைந்து, அண்ட வெளியையே நடன மேடையாகக் கொண்டு, பிரபஞ்சத்தில் உள்ள யாவற்றையும் ஒருங்கே இயக்கும் ஸ்ரீநடராஜரின் திருவடிவம், பல தத்துவங்களை உள்ளடக்கியது. மார்கழி மாதத் திருவாதிரைத் திருநாள் வழிபாடு, நடராஜப் பெருமானுக்கு உகந்த ஒன்று. நடராஜரின் திருவடிவம் நமக்கு உணர்த்துவது என்ன? அதன் பெருமைகளை இங்கே பார்க்கலாம்.
நடராஜரின் திருமுகம் : இறைவனின் தலைமை நிலையையும், எல்லையில்லா அழகையும் உணர்த்துகிறது.
சிவந்த சடை: சிவ நெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பைக் குறிக்கிறது.
தலையில் இருக்கும் கங்கை : இறை வனின் பேராற்றலையும், ஆணவத்தை அழித்து ஆளும் வித்தகத்தையும் விளக்குகிறது.
தலையில் சூடிய பிறை : தன்னைச் சரண் அடைந்தவர்களைத் தாங்கிப் பாதுகாக்கும் வள்ளல் என்று அறிவிக் கிறது.
வளைந்த புருவம்: தன்னிடம் வந்து குறை சொல்லி முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தைக் காட்டுகிறது.
குமிண் சிரிப்பு: தன்னிடம் அடைக்கலம் கேட்டு வருபவர்களை அருளுடன் வரவேற்று, அவர்களது பிழைகளை மன்னித்து, வாழ்வளித்து மகிழ்ச்சி உண்டாக்குதல்.
பவழ மேனி: பவழம் போன்ற மேனி; நெருப்பு போன்றவன். நெருப்பு, தன்னிடம் வரும் பொருள்களை எல்லாம் தூய்மைப்படுத்தி புனிதமாக்கும். அதே போல் தன்னிடம் அன்பு செய்பவர்களின் மாசுகளை அகற்றித் தூய்மையாக்கி இறைவன் அருள் புரிவான்.
பால் வெண் நீறு: எல்லாப் பொருள்களும் அழிந்து, இறுதியில் நீறு ஆகும். நீறு மற்றொன்றாக மாறி அழியாது. அதனால் திருநீறு அழிவிலாத் தன்மையும், தூய இயல்பையும் காட்டும்.
நெற்றிக்கண்: பெருமானுக்குரிய சிறப்பு அடையாளம்.
நீலகண்டம் (கழுத்து) : தான் நஞ்சு உண்டு விண்ணோர்க்கு அமிர்தம் கொடுத்து அருள் செய்த பெருந்தகையாவார்.
உடுக்கை: வலக்கை ஒன்றில் உடுக்கை ஏந்தி, ஒலியை எழுப்பி, அணுத் துகள்களைத் திரட்டி உலகப் பொருட்களைப் படைத்தல் ஆகும். இது படைக்கும் தொழிலை உணர்த்துகிறது.
நெருப்பு: இடக்கை ஒன்றில் நெருப்பு இருக்கும். உலக உயிர் களைப் படைத்த இறைவன், அவை பிறந்தும், இறந்தும் வரும் துயரைப் போக்கும் பொருட்டு நிகழ்த்தும் அழித்தல் தொழிலுக்கு அடையாளம்.
அமைத்தகை: இதை அபயகரம் என்பர். ‘நீவிர் அஞ்சற்க. யாம் உம்மைக் காக்கிறோம்’ எனத் தன் அடியவர்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றும் நிலை. காத்தல் தொழிலைக் காட்டும்.
வீசிய கரம்: இந்த இடக்கை யானையின் துதிக்கை போல் நீண்டு திகழ்வதால் ‘கஜஹஸ்தம்’ எனப்படும். இந்தக் கையின் ஒரு விரல் தூக்கிய திருவடியைக் காட்டிக் கொண்டிருக்கும்.
எடுத்த திருவடி: பிறவிக் கடலில் விழுந்து தத்தளிக்கும் உயிர் களை மீட்டுக் காப்பாற்றும் இது, அருளல் தொழிலைக் குறிக்கும்.
ஊன்றிய திருவடி: இது இறைவனின் வலக் கால். முயலகனை மிதித்து, அடக்கி, அவன் மீது ஊன்றிய நிலையில் அமைந்திருக்கும். நசுக்கி விடாமலும், விட்டு விடாமலும், இறைவன் முயலகன் மீது நிற்கிறான்.
இது, ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று விதமான தீமைகளை முழுவதாக அழித்து விடாமலும், அவற்றால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகரச் செய்ய, இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிக்கும்.
முயலகன்: முயலகன் ஆணவத்துக்கு அறிகுறி. ஆணவம் என்றும் அழிவதில்லை. அது போலவே முயலகனும், இறைவன் திருவடிக் கீழ் என்றும் விளங்குகிறான். முக்தி நிலையில் உயிர்களின் பால் ஆணவம் அடங்கிக் கிடப்பது போல, முயலகன் கிடக்கிறான்.
தெற்கு நோக்குதல்: எல்லாத் திருக்கோயில் களிலும் நடராஜப் பெருமான் தெற்கு நோக்கியே அமைக்கப்பட்டிருப்பார். வழி படும் அடியவர்கட்குத் தெற்கே இருந்து வரும் எமராஜனால் யாதொரு துன்பமும் நேராமல் காத்தற் பொருட்டே தெற்கு நோக்கி ஆடுகிறான் என்பார்கள். ஆனால், பரஞ் ஜோதி முனிவர், செந்தமிழ் மொழியின் மீதும், தென்றல் காற்றின் மீதும் உள்ள விருப்பம் காரணமாகத் தெற்கு நோக்கி இறைவன் நடனம் புரிகிறான் என்கிறார்.
தில்லையில் இறைவன் திருநடனம் புரியக் காரணம், அந்த இடம், உலகின் நடுவிடமாக இருத்தல் ஆகும். இந்த அரும் பெரும் நடனத்தை மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று தரிசித்தால் பெரும்பேறு கிடைக்கும்!

No comments:

Post a Comment