ப ங்குனி உத்திரம் என்றால் காவடி நினைவுக்கு வரும். பால் காவடி, பழக் காவடி, பன்னீர்க் காவடி, மச்சக் காவடி எனக் காவடியில் பல வகை உண்டு. இனி, காவடி வந்த வரலாறு:
அகஸ்தியர் தனது விருப்பத்தைச் சொல்லிப் பணிந்தார். வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுவதும் தருவாய் நீ! என திருமுறைகளால் துதிக்கப் பெற்ற சிவபெருமான், ‘‘அகஸ்தியா! உன் விருப்பம் நிறைவேறும். என் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்த முருகன் வீற்றிருக்கும் மலையாகிய இந்த மலையில் நானும் உமாதேவியும், சிவ - சக்தி என்னும் இரண்டு மலைகளாக இருக்கிறோம். மலை வடிவில் எம்மை பூஜிக்க நீ ஆசைப்படுவதால், இரண்டு மலைகளையும் நீ வழிபடு! தேவர்கள் உட்படப் பலர் அங்கு வழிபடுகிறார்கள்!’’ என்று அந்த இரண்டு மலைகளின் பெருமையை வர்ணித்துவிட்டு, உமாதேவியோடு அங்கிருந்து மறைந்தார்.
உடனே அங்கிருந்து கிளம்பிய அகஸ்தியர், மாதொரு பாகன் சொன்ன மலைகள் இரண்டையும் தரிசித்தார். வலம் வந்தார். விழுந்து வணங்கினார். கைகள் இரண்டையும் தலைக்கு மேல் வைத்துத் துதித்தார். அவரிடம் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
அங்கே.. தாமரை மலர் போன்ற திருமுகங்கள், இள நிலவைப் போன்ற பற்கள், நல்லவர்களின் இதயங்களில் குடிகொண்ட இரண்டு திருவடிகள், அவற்றில் ஒலி எழுப்பும் சதங்கைகள், அகன்ற மார்பு, ஆற்றல் நிறைந்த தோள்கள் ஆகியவை கொண்ட திருவுருவில் முருகப் பெருமான் உலாவிக் கொண்டிருந்தார்.
நவ சித்தர்கள், யட்சர்கள், பூத கணங்களின் தலைவர்கள், தேவர்கள், வீணை இசைப்பதில் வல்லவர்களான வித்தியாதரர்கள், வேதத்தை எடுத்துச் சொல்லிப் பாடம் நடத்துபவர்கள், யாகம் செய்பவர்கள், ஜீவன் முக்தர்கள், சிவ யோகிகள், ரிஷிகள் முதலான பலர் அங்கே தவம் செய்து கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க அகஸ்தியரின் உள்ளம் ஆனந்தத்தில் விம்மியது. எனவே, அவர் சிவபெருமான் சொன்ன முறைப்படி வழிபட்டார்.
மூவரையும் ஒரே இடத்தில் கண்ட அகஸ்தியர், ஆனந்தக் கூத்தாடினார். சாம கானம் பாடித் துதித்தார். ‘‘முக்கண் முதல்வனே... அம்பிகையுடனும் ஆறுமுகக் கடவுளுடனும் தாங்கள், அடியேனுக்கு முன் காட்சியளிக்க என்ன புண்ணியம் செய் தேனோ நான்!’’ என்று நாத் தழுதழுக்கக் கூறினார். ‘‘அகஸ்தியா! உன் வழிபாடு என்னை வசப்படுத்தி விட்டது. வேண்டியதைக் கேள்!’’ என்றார் சிவபெருமான்.
அகஸ்தியர் தனது விருப்பத்தைச் சொன்னார். ‘‘ஈசனே! சிவகிரி- சக்திகிரி என்னும் ஈடு இணையற்ற, உயரிய இந்த இரண்டு மலைகளையும் தென் திசைக்கு (தமிழ்நாட்டுக்கு) கொண்டுபோய் பூஜிக்க விரும்புகிறேன். அது போதும் எனக்கு!’’ என்றார்.
‘‘அப்படியே நடக்கும்!’’ என்று அருளிய சிவபெருமான் அகஸ் தியரின் பார்வையில் இருந்து மறைந்தார்.
உடனே சக்திகிரி- சிவகிரி எனும் இரண்டு மலைகளும் அகஸ்தியரின் கைகளில் வந்து தங்கின. அப்போது அவற்றின் தோற்றம், முருகக் கடவுள் அம்மானை ஆடும், மாணிக்கம்- ரத்தினம் ஆகியவற்றால் ஆன அம்மானைக் காய்கள் போல இருந்தன.
மலைகளுடன் கிளம்பிய மாமுனிவர் அகஸ்தியர், கேதாரம் வழியாக (வடக்கே உள்ள திருத்தலம் கேதார்நாத்.) பூர்ச்சவனம் என்னும் காட்டை அடைந்தார். அங்கே வடகிழக்குத் திசையில் மலைகள் இரண்டையும் வைத்து மனமுருகி வழிபாடு செய்தார். அதன் பிறகு மலைகளை அங்கேயே விட்டுவிட்டு காசிக்குப் போன அகஸ்தியர், விஸ்வநாதரை தரிசித்து விட்டுப் பொதிகையை அடைந்தார்.
ஆனால், அகஸ்தியர் எண்ணப் படி தமிழ்நாட்டுக்கு வர வேண் டிய இரண்டு மலைகளும் பூர்ச்ச வனத்தில் அல்லவா இருக்கின்றன? அவை எப்படித் தமிழ்நாட்டுக்கு வரப் போகின்றன? அதற்குரிய செயல்களை அங்கே இடும்பன் மூலம் செய்யத் தொடங்கியது காலம்.
தலைசிறந்த வீரன். சிங்கத்தைப் போல வலிமை படைத்தவன். அளவற்ற ஆற்றல் கொண்டவன். தங்களது நீதி நெறியைக் கடைப்பிடிப்பவன். அசுரர் குலத் தலைவனான சூரபத்மனுக்கு குருவாக இருந்து போர்க் கலையைச் சொல்லிக் கொடுத்தவன் இடும்பன். அவன் மனைவி இடும்பி. சூரபத்மன் போர்க்களத்தில் மறைந்த செய்தி கேட்டு மனம் வருந்திய இடும்பன், தன் மனைவியோடு புறப்பட்டான். பற்பல வனங்களில் தங்கித் தவம் செய்தான். இடும்பனின் பயணம் குற்றாலத்தை அடைந்தபோது, பூர்ச்சவனத்தில் தான் வைத்துவிட்டு வந்த இரண்டு மலைகளையும் கொண்டு வருவதற்காக முனிவர்கள் புடைசூழக் கிளம்பினார் அகஸ்தியர்.
அப்போது அகஸ்தியர் கால்களில் வந்து விழுந்தான் இடும்பன். ‘‘முனிவர் பெருமானே! நல்லவர்கள் எல்லோருக்கும் தினந்தோறும் தீமை செய்து வந்த சூரபத்மனுக்குப் போர்த்தொழிலைச் சொல்லிக் கொடுத்த பாவி நான். சூரபத்மனது முடிவுக்குப் பின், காடுகள் தோறும் தவம் செய்கிறேன். தீவினை உடையவனாகிய நான், திருவுடை முனிவராகிய உங்களை தரிசித்ததற்குத் தங்கள் அருள்தான் காரணம். அடைக்கலம் அடைந்த என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஏவிய அனைத்து ஏவல்களையும் செய்வேன். உத்தரவிடுங்கள் ஸ்வாமி! என் தீவினையெல்லாம் தீரும்!’’ என்று அவரிடம் வேண்டினான்.
சற்று நேரம் மனதுக்குள் ஆராய்ச்சி செய்த அகஸ்தியர், ‘‘இடும்பனே! பூர்ச்சவனத்தில் நான் இரண்டு மலைகளை வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அவற்றை இங்கு கொண்டு வா!’’ என்று அவை பற்றிய விவரங்களுடன், அங்கு போவதற்குரிய வழியையும் விவரித்தார். (வழியில் ஆங்காங்கு உள்ள திருத்தலங்களையும் அங்குள்ள தெய்வங்களையும் பற்றி விரிவாகவே சொல்லியிருக்கிறார் அகஸ்தியர்.) அகஸ்தியரை வணங்கிக் கிளம்பினான் இடும்பன். இடும்பி அவனைப் பின்தொடர்ந்தாள்.
தம்பதி பூர்ச்சவனத்தை அடைந்தனர். முனிவர்கள் பலர் சிவகிரி-சக்திகிரி இரண்டையும் அழகான நறுமண மலர்களைக் கொண்டு பூஜை செய்து கொண்டிருந்தனர்.
பார்த்தான் இடும்பன். அவனுக்கு மெய் சிலிர்த்தது. ‘‘அகஸ்திய முனிவரின் அடிமை யாக இருப்பதால்தான், நமக்கு இந்த தரிசனம் கிடைத்தது. நாம்கூட ஏதோ நல்லது செய் திருக்கிறோம்!’’ என்று வாய்விட்டுச் சொன்னான்.
கணவனின் கனிவு கண்ட இடும்பி, அனைத்துப் பணி விடைகளையும் செய்தாள். வாசமிக்க மலர்களைக் கொண்டு வந்த இடும்பன், முறையாக வழிபாடு செய்தான். பின்பு அங்கேயே ஒரு பக்கமாகத் தவத்தில் உட்கார்ந்தான். உள்ளமும் உதடுகளும் அகஸ்தியர் உபதேசித்த மந்திரத்தை உருவேற்றிக் கொண்டிருந்தன.
இடும்பன் அங்கு ஒரு வருட காலம் ஒப்பற்ற தவம் செய்தான். தோளில் வைத்துத் தூக்கும் தண்டுத் தடியாக, க்ஷீபன் என்னும் பிரம்மதண்டம் அங்கு வந்தது. வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகா பதுமன், கார்க்கோடகன் என்னும் அஷ்ட (எட்டு) நாகங்களும் கயிறுகளாக வந்தன.
ஆச்சரியப்பட்ட இடும்பன் எழுந்தான். கைகளைக் குவித்து வணங்கினான். கயிறுகளாக வந்த நாகங்களைக் கொண்டு உறிபோலச் செய்து, சக்திகிரி- சிவகிரி மலைகளைப் பிணைத்தான். பிரம்மதண்டத்தை நடுவில் கொடுத்துத் தூக்கினான்.
இடும்பன் அந்த மலைகளைத் தூக்கியதை பழநி தல புராணமும், ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீமத் குமார சுவாமியம் என்ற நூலும் பாடல்களால் விவரிக்கின்றன. அந்தப் பாடல்களை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தால், இடும்பன் கால்களை வளைத்தது, குனிந்து மலைகளைத் தூக்கியது, நிமிர்ந்து நடந்தது என அனைத்துமே நேரடி ஒளிபரப்பு போல் தெரியும்.
மண்ணினிடை சானுவுற வூன்றி வரு தண்டம் திண்ணிய புயத்து மிசை சேர்த்தி மலயத்துப் புண்ணியன் வழங்கு புரை தீருருவ நெஞ்சுள் எண்ணினன் எழுந்தனன் எழுந்த கிரி இரண்டும் அன்ன துணைமால்வரைகள் அன்பினனிகாவின் மன்னிடும் இடும்பன் மணி நீலமொரு தட்டும் தன்னிகரின் மாமணியர் தட்டினு நிறைத்து நன்னரினிறுக்கு மொரு நாயகனை நிகர்த்தான்- பழநித் தல புராணம்,
மலைகள் பழநியடைந்த சருக்கம்.எதிர்முகங் கிடக்கக் கண்டே ..... அதிசயித் தெடுத்துத் தாம்பைக் கதழ்வுறு குவடி ரண்டும் ..... கரகம் போல் வதியுமாறு முதிருறியாக்கித் தண்டின் ..... மொய்ம்புற மாட்டி நாப்பண் வதியரு மடங்கன் மானக் ..... குந்தினான் வலி மிக்குள்ளான் குந்திய இரண்டு தாளுள் ..... இடமுழந்தாளைக் குன்றா அந்திகழ் தரையிலூன்றி ..... அமர்வுறு தண்டைத் தோள்மேல் சுந்தரமாக வேய்த்துத் ..... துணைக்கரம் தொடை மேலாக்கி மந்திர நுவன்று கொண்டே ..... எழுந்தனன் முகத்தேர் மல்க& ஸ்ரீமத் குமார சுவாமியம்
பூர்ச்சவனத்திலிருந்து மலைகளுடன் கிளம்பினான் புண்ணியசாலி இடும்பன். மல்லிகார்ஜுனம், சீகாளத்தி, திருவண்ணாமலை, விருத்தாசலம் முதலிய தலங்களின் வழியாக வந்து காவிரியைக் கடந்து புஷ்ப மலையின் அடிவாரத்தை அடைந்தான்.
இடும்பனுக்கு அதன் பிறகு வழி தெரியவில்லை. அப்போது இடுப்பில் கறுப்பு நிறப் பட்டை, கால்களில் செருப்பு மற்றும் வீரக் கழல்கள், வேல், வில், அம்பு ஆகியவற்றுடன் அரச கோலத்தில் முருகப் பெருமான் அவனுக்கு எதிரில் நின்றார்.
வழி தெரியாமல் தவித்த இடும்பன், ‘யார் இவன்? பொங்கித் ததும்பும் பேரழகு. வெற்றி நிறைந்த போர்த் தொழில், அவற்றை வெளிப்படுத்தும் ஆயுதங்கள்... இவனைப் பார்த்தால் மால் மருகனான முருகக் கடவுள் போல் இருக்கிறதே!’ என்று நினைத்து, ‘‘அப்பா! யார் நீ? தன்னந்தனியாக இங்கு ஏன் வந்தாய்?’’ என்று கேட்டான்.
‘‘இந்த உலகத்தை ஆளுகிற அரசனின் மைந்தன் நான். மிருகங்களை வேட்டையாட வந்தேன். என்னைக் கேட்கிறாயே! நீ யார்? ராட்சசனா? என் எதிரில் நிற்கும் c, எதற்காக இங்கு வந்தாய்?’’ என்று கேட்டார் வடிவேல் இறைவன்.
‘‘அரச குமாரா! அகஸ்திய முனி வரின் ஏவல்படி இந்த மலைகளை பொதிகைக்குக் கொண்டு போகிறேன். வழி தெரியவில்லை. தடுமாறிப் போய் நிற்கிறேன்!’’ என்று பதில் சொன்னான் இடும்பன்.
‘‘ஓஹோ... வழி தெரியவில்லையா? இந்த வழியாகப் போனால் வராக மலை வரும். அதையும் தாண்டினால் நீ சொன்ன பொதிகை மலையை அடையலாம்!’’ என வழிகாட்டினார் வள்ளி மணாளன்.
அவரை வணங்கி நன்றி தெரிவித்துவிட்டு மலைகளுடன் மறுபடியும் கிளம்பினான் இடும்பன். வராக மலைக்கு வடக்கிலுள்ள திருஆவினன் குடியை அடைந்தான்.
இடும்பனின் கால்கள் பலமிழந்தன. உடம்பில் அசதி, தாங்க முடியாத பசி- தாகம். மலைகளை இறக்கி வைத்தான் இடும்பன். பக்கத்திலுள்ள காட்டில் நுழைந்து அங்கிருந்த வாமதேவ முனிவர் ஆசிரமத்துக்குப் போனான்.
அவனுக்குத் துணையாக வந்த இடும்பி, காய்- கனி- கிழங்குகளைச் சேகரித்து வந்து கணவனுக்குக் கொடுத்தாள். அவளுடன் சேர்ந்து சாப்பிட்டான் இடும்பன். சிவகிரி, சக்திகிரி மலைகளுக்கு அருகிலேயே தன் கைகளால் ஒரு பெரும் குளத்தை உண்டாக்கித் தண்ணீர் குடித்தான். பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொண்டான். களைப்பும் அசதியும் நீங்கின. ‘‘இடும்பி! வா... கிளம்பலாம்’’ என்றபடி மலைகளைத் தூக்க முயற்சித்தான். ஆனால்...
அப்போது இடும்பனால் அந்த மலைகளைத் தூக்க முடியவில்லை. தோள்கள் முறிந்தன. பின்பக்கமாகப் பிடரி நெரிந்தது. முழந்தாள்களும் கால்களும் முறிந்தன. கண்கள் கொதித்துப் பிதுங்கின. ‘நமது பெருமை கெட்டது. வலிமையும் போய்விட்டது. ஏன் இப்படி?’ என்று நடுங்கினான் இடும்பன். இடும்பனின் இந்த நிலையை அப்படியே காட்டும் பழநி தல புராணப் பாடல்:
தோ(ள்)ண் முறிந்தன நெறிந்தன ..... சுவற்புறஞ்சானும் தா(ள்)ண் முறிந்தன எரிந்தன ..... தடங்கண்கள் பிதுங்கிப் பாண் முறிந்து நம் அடுதிறன் ..... முறிந்தது என்னென்னா நாண் முறிந்து இடர் நின்று ..... உள நடுங்கினன் இடும்பன்.
‘தவச் செல்வரான அகஸ்திய முனிவரின் அடிமை நான். அந்தப் பெயர் போய்விட்டது. அவர் உபதேசித்த மந்திரமும் என்னை விட்டுப் போய்விட்டது போலிருக்கிறது. எனது பலம் போன இடம் தெரியவில்லை! என்ன ஆயிற்று இங்கு?’ என்று மனமொடிந்து, தான் கொண்டுவந்த இரண்டு மலைகளில் ஒன்றான சிவகிரியின் மீது ஏறினான். நாலா பக்கங்களிலும் பார்வையை ஓட்டினான் இடும்பன்.
அங்கே... ஒரு பக்கத்தில் குரா மரத்தினடியில் மழலைச் சொல் பேசுகிற கோவைப் பழம் போன்ற உதடுகள் கொண்ட சிறிய குழந்தை ஒன்று நிற்பதைப் பார்த்தான் இடும்பன். ‘எப்போதும் இல்லாத ஆச்சரியமாக இருக்கிறதே இன்று! பார்ப்பதற்கு சின்னப் பிள்ளை போல இருந்தாலும், இவன் சின்னப் பிள்ளை இல்லை. யார் இவன்? ம்... யட்சனா? தேவர்களில் ஒருவனா? ஒருவேளை மந்திரம், மாயம் தெரிந்தவனாக இருப்பானோ? இவன் பலத்தை யும்தான் பார்க்கலாம்!’ என்று முணுமுணுத்தபடி சிறுவனை நெருங்கினான் இடும்பன்.
அழகொழுகும் குழந்தையை அருகில் நின்று பார்த்தான். அவன் பார்த்த வடிவம்: பிடரியிலே தவழும் தலைமுடி, அருள் ததும்பும் கண்கள், அழகு நிறைந்த திருமுகம், பூணூல் தவழும் மார்பு, கையில் அழகிய தண்டாயுதம், கோவண ஆடை ஆகியவற்றுடன் இருந்தது. இதுதான் பழநி முருகனின் வடிவம். மொட்டைத் தலையாக இல்லை. பழநி ஆண்டவன் படத்தை வீட்டில் வைத்தால், குடும்பம் மொட்டையாகிப் போய்விடும் என்பது அபத்தம். ஸ்வாமி பிடரியில் தவழும் தலைமுடியுடன்தான் இருக்கிறார்.
அது உடனே செயல் வடிவம் பெற்றது. உடனே இடும்பன் கோப வசப்பட்டான். ‘‘என் குருநாதரான அகஸ்தியரின் காரியத்துக்கு ஓர் இடைஞ்சல் வருமானால், என் உயிரைக் கொடுத்தாவது அதை நீக்குவேன். யார் நீ? வழி தவறி வந்துவிட்டாயா? இங்கு ஏன் தனியாக நிற்கிறாய்?’’ என்று இடிமுழக்கக் குரலில் கேட்டான்.
பால தண்டாயுதபாணி பதில் சொல்லாமல் புன்முறுவல் பூத்தார். இடும்பனின் கோபம் அதிகரித்தது. ‘‘சின்னப் பயலே! சிரிக்கிறாயா? என்ன சிரிப்பு? மரியாதையாக மலையை விட்டுக் கீழே இறங்கிப் போய்விடு! நான் யார் தெரியுமா? கொலைகாரன். என் தொழிலே கொலை செய்வதுதான். போய்விடு இங்கிருந்து!’’ என்று உரத்த குரலில் மிரட்டினான்.
வாய் திறந்தார் வள்ளி மணவாளர். ‘‘அசுரனே! நீ கொண்டு வந்த இரண்டு மலைகளும் என் இருப்பிடமாகும். உனக்கு வலிமை இருந்தால், இவற்றைக் கொண்டு போ!’’ என்றார்.
சினத்துடன் சிரிப்பும் வந்தது இடும்பனுக்கு. ‘‘சிறுவனே! நல்லவன். ஆனால், வஞ்சனையில் கைதேர்ந்தவன் நீ! அதனால்தான் உன்னைக் கண்டு நான் பயப்படவில்லை. அகஸ்தியரின் சீடனான நான் பொறுமையானவன். என்னிடமிருந்து நீ தப்பித்து விடுவாயா?’’ என்று கர்ஜித்தபடி கைகளைப் பிசைந்தான். பற்களை நெரித்தான். நாக்கு அவ்வப்போது வெளிவந்து உதடுகளை ஈரப்படுத்தியது. தலை ஆடியது. கண்கள் தீப்பொறிகளைச் சிந்தின.
அவ்வளவுதான்... குமரன்மேல் பாய்ந்தான் இடும்பன். அதே விநாடியில் அலறிக் கீழே விழுந்தான்.
‘இதற்கு நான் பொறுப்பில்லை!’ என்பது போல் இடும்பனின் உயிர் அவன் உடலை விட்டுப் பிரிந்தது. மலைகளைக் கயிறாகச் சுற்றி இருந்த அஷ்ட நாகங்களும் பிரம்மதண்டமும் அங்கிருந்து விலகிப்போய், அகஸ்தியரிடம் நடந்ததைச் சொல்லிவிட்டுத் தங்கள் இருப்பிடத்தை அடைந்தன.
இடும்பன் இறந்ததைப் பார்த்த இடும்பி புலம்பினாள். பெருமூச்சு விட்டாள். கொழுகொம்பு இல்லாத கொடி போல் துவண்டு கீழே விழுந்தாள். கைகளால் முகத்தில் அறைந்து கொண் டாள். அவளது வளையல்கள் நொறுங்கின. பெரிய பெரிய யானைகளைப் பிடித்துப் புழு போல நசுக்கிப் போட்டாள். ‘‘சிங்கமே! அகஸ்திய முனிவரின் ஏவலுக்கு இதுதானா பலன்? நீங்கள் செய்த தவமும் வீணாகிப் போய் விட்டதா? எனக்கு இங்கு யார் துணை? ஐயோ... ஐயோ... யார் இப்படிச் செய்தது? அசுரர்களுக்கு குருவான உங்களுடன் அசுரர்கள்கூட சண்டை போட மாட்டார்களே! உங்கள் சீடனான சூரபத்மனைத் தேடி எம லோகம் போய்விட்டீர்களா? நீங்கள் எங்கு போனாலும் நானும் தொடர்ந்து வருவேன்!’’ என்று புலம்பிய இடும்பி தன் உயிரை விடத் தீர்மானித்தாள்.
அவரை தரிசித்த இடும்பிக்கு மெய் சிலிர்த்தது. திருக்காட்சி தந்த தெய்வத்தைத் துதித்தாள் இடும்பி. அவள் துதியின் முடிவில், ‘‘சைவ ஆகமங்களின் தெளிவும் பொருளுமாக இருப்பவரே... அடியேனைத் தடுத்து ஆட்கொள்வதற்காக இங்கே எழுந்தருளினீரா?’’ என்று சொல்லி வணங்கினாள்.
இவை மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள். அசுர குலத் தலைவனான சூரபத்மனுக்குப் போர்க் கலையைச் சொல்லிக் கொடுத்த குருவான இடும்பனின் மனைவி இடும்பி என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இடும்பி பேசிய வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அவளது ஞானம் புரியும். வாருங்கள்! அவள் சைவ ஆகமங்களையும் ஸ்வாமியையும் ஒன்றாகச் சேர்த்துச் சொன்ன காரணத்தைப் பார்ப்போம்.
சைவ ஆகமங்கள் இருபத்தெட்டு. இவை இறைவனின் அங்கங்களாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. அபூர்வமான அந்தத் தகவல்கள்: காமிகம்- இறைவனின் இரண்டு திருவடிகளாகவும், யோகசம்- அவரின் கணைக் கால்களாகவும், சிந்தியம்- திருவடி விரல்களாகவும், காரணம்- கெண்டைக் கால்களாகவும், அசிதம்- முழங்கால்களாகவும், தீப்தம்- தொடைகளாகவும், சூக்குமம் - குஹ்ய ஸ்தானமாகவும், சகச்சிரம்- இடுப்பாகவும், அஞ்சுமான்- முதுகாகவும், சுப்பிரபேதம்- தொப்புளாகவும், விசயம்- வயிறாகவும், நிச்சுவாசம்- இதயமாகவும், சுவாயம் புவம்- இரு மார்புகளாகவும், அனலம் (ஆக்னேயம்) - திருக்கண்களாகவும், வீரம்- கழுத்தாகவும், ரௌரவம்- காதுகளாகவும், மகுடம்- கிரீடமாகவும், விமலம்- அவரின் கைகளாகவும், சந்திரஞானம்- மார்பாகவும், விம்பம்- முகமாகவும், புரோ(ற்)த்கீதம்- நாக்காகவும், இலளிதம்- கன்னங்களாகவும், சித்தம்- நெற்றியாகவும், சந்தானம்- அவரது குண்டலமாகவும், சர்வோத்தம்- பூணூலாகவும், பாரமேசுரம்- மாலையாகவும், கிரணம் (காலோத்ரம்)- ரத்தின ஆபரணங்கள், இருபத்திரண்டு நாடிகள்- பிராண வாயுவாகவும், வாதுளம் - இறைவனுக்கு நைவேத்தியமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.
இறைவனின் அங்கங்களாகச் சொல்லப்பட்ட இந்த ஆகம உண்மைகளை உணர்ந்ததாலேயே, ‘சைவ ஆகமத் தெளிவே! தடுத்தாள வந்தனையோ!’ எனச் சொல்லி வணங்கினாள் இடும்பி. பின்னர் ‘‘தேவாதி தேவா... முருகப்பெருமானே, எனக்குத் திருமாங்கல்யப் பிச்சை தந்தருள வேண்டும்!’’ என்று வேண்டினாள்.
மின் தவழு மங்கலியப் பிச்சையிட வேண்டுமென விழி நீர் சிந்திமுன் தொழுதாள் தனக்கு விழிக்கடை அளித்தான் முடிந்தானும் எழுந்தான்.- பழநி தல புராணம்
கந்தக் கடவுள் தன் கருணைப் பார்வையை இடும்பன் மேல் செலுத்த, இடும்பன் உயிர்பெற்று எழுந்தான். பிரம்மன் உட்பட எல்லோரும் வணங்க, குரா மரத்தின் அடியில் எழுந்தருளியிருக்கும் முருகனை தரிசித்தான் இடும்பன். தேன் ததும்பும் புத்தம் புது மலர்களை எடுத்து, ஸ்வாமியின் திருவடிகளில் இட்டுப் பல விதமாகத் துதித்தான். (இந்த இடத்தில் பழநி தல புராணத்தில் இடும்பனின் துதியாக அமைந்துள்ள பாடல் சைவ சமயத்தின் சாரமாக, அற்புதமாக அமைந்துள்ளது.)
இடும்பனின் குரு பக்தியையும் குணத்தையும் பாராட்டினார் முருகப் பெருமான்.
‘‘இடும்பா! இன்று முதல் நீ இங்கே என் காவல் தெய்வமாக விளங்குவாய். உன்னைப் போலவே பால், பழம், சந்தனம், பூ முதலான பொருட்களை எல்லாம் காவடி எடுத்து, என் சந்நிதிக்கு வருபவர்கள் எல்லோருக்கும் நான் அருள் பாலிப்பேன்!’’ என்று வாக்குறுதி தந்தார் ஸ்வாமி.
அன்று முதல் முருகன் கோயில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. அகஸ்தியரின் உத்தரவுப்படி இடும்பன் தூக்கி வந்ததில் பழநி மலையே சிவகிரி. இதற்குச் சற்றுத் தூரத்தில் நம்மால் இடும்பன் மலை என்று அழைக்கப்படுவது சக்திகிரி.
பழநி மலை மீது முருகப் பெருமானை தரிசிக்க வருபவர்கள் முதலில், மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள இடும்பன் சந்நிதியில் வணங்கி அதன் பிறகே பழநி மலை பரமனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இங்கு இடும்பன் தலைசிறந்த வரப்பிரசாதியாக விளங்கி அருள் புரிகிறான். அந்த இடும்பனைப் போலவே ஆயிரக் கணக்கானோர் காவடி சுமந்து காவடிச்சிந்து பாடியபடி பழநிக்கு வந்து பால தண்டாயுதபாணியைத் தரிசிப்பதை இன்றும் காணலாம்.
No comments:
Post a Comment