வாசுகியை வடமாகப் பிடித்து, தங்களுடைய ஆற்றல் முழுவதையும் வைத்துக் கடைந்துகொண்டிருந்த வசுக்களுக்குக் கண்கள் எரிவது போன்ற உணர்வு ஏற்பட்டது. 'சரிதான், காலையிலிருந்து இதிலேயே இருக்கிறோமா, அதுதான் களைப்பினால் அப்படித் தோன்றுகிறது’ என்று எண்ணிக்கொண்ட வசுகுமாரனுக்கு, வசுவீமனை ருத்ரபரந்தாமன் கிண்டல் செய்வது காதில் விழுந்தது. 'அமுதம் வருமா வருமா என்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக் கிறாய். கண் எரியாமல் என்ன செய்யும்?’ என்று அவன் சொன்னதை கவனியாதது போன்று, கடைதலைத் தொடர்ந்தான். விரைவாகக் கடையும்படி, அசுரேந்திரனின் கட்டளை வேறு அந்தப் பக்கத்தில் கேட்டது.
சற்று நேரத்தில் தேவேந்திரனுக்கும் கண் எரிய... ஆதித்யன், வாயு, அக்னி, அஸ்வினி தேவர்கள், ருத்ராதி தேவர்கள் என அனைவரும் கண்களை கசக்கிக்கொள்ள, அசுரேந்திரன் வந்து தேவேந்திரனுக்கு எதையோ சுட்டிக்காட்ட... மெள்ள சுழன்று, பிரமாண்டமானதொரு பந்தாகச் சுருண்டு, கன்னங்கரேலென எழுந்துகொண்டிருந்தது ஆலகாலம்!
ஆலத்தின் அனல் காற்று, மேனியைக் காய்த்துவிட, நிற்கவும் முடியாமல், பார்க்கவும் முடியாமல்... உயிர் பறந்து விட்டதுபோன்ற ஜட உணர்வு உள்ளும் வெளியும் பரவ, ஏதோவொரு உந்துதலில் தேவர்களும் அசுரர்களும் திருக்கயிலாயம் நோக்கி ஓடினார்கள்!
அதன்பின் நடந்ததுதான் தெரியுமே! அமளிதுமளியின் ஒலிகேட்டுக் கயிலை யிலிருந்து எழுந்து வந்த பரமனார், குன்று ஒன்றின் மீது நின்று ஆலகாலத் தைக் கண்டார். சுழன்று சுழன்றாடும் அதன் பேயாட்டத்தை ரசித்தார். அதன் ஆட்டத்துக்குச் சிறிது தாளம் தட்டினார். மலையடிவாரத்தில் தேவர்களும் அசுரர் களும் அலமந்து துடிப்பதைக் கண்டு சிரித்துக்கொண்டே... எடுத்தார், உருட்டி னார், சுருட்டினார், குடித்தே விட்டார். ஆமாம், ஆலத்தை ஆசை ஆசையாக அருந்திவிட்டார்!
அண்ட சராசரத்தையும் காப்பாற்ற, ஆலகாலத்தை ஆண்டவனார் அருந்திய இடம்... திருஆலங்குடியைத் தரிசிக்க வேண்டாமா? வாருங்கள் புறப்படலாம்!
ஆலங்குடி- ஆலமான நஞ்சைப் பரமனார் அருந்தி யதால், ஆலங்குடி (ஆலம் குடி) ஆன திருத்தலம். ஆபத்திலிருந்து காப்பாற்றியதால், ஆண்டவனும் 'ஆபத்சகாயேஸ்வரர்’ ஆகிவிட்டார்.
நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
உச்சித் தலையில் பலி கொண்டுழல் ஊணே
கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
உச்சித் தலையில் பலி கொண்டுழல் ஊணே
- என திருஞானசம்பந்தர் போற்றிப் பரவுகிற திருத்தலம்.
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் உள்ள ஆலங்குடிக்கு கும்பகோணம், மன்னார்குடி, தஞ்சாவூர் என பல ஊர்களில் இருந்தும் வசதியாகச் செல்ல முடியும். கும்பகோணத்துக்கு தெற்கில் சுமார் 17 கி.மீ. தொலைவு; நீடாமங்கலத்துக்கு வடக்கே சுமார் 7 கி.மீ தூரம். பேருந்துகள் ஏராளமாக உள்ளன.
'குரு ஸ்தலம்’ என்றே பிரபலமாகிவிட்ட ஆலங்குடியை, ஆபத்சகாயேஸ்வரர் கோயில் என்று கேட்பதைவிட, குரு ஸ்தலம் என்று விசாரித்தால், விரைவாக விடை கிடைக்கும்! ஆலங்குடி நாதர் என்பதால், இறைவனை ஆலங்குடியான் (ஆலங்குடிக்காரர் எனும் பொருளில்) என்றழைப்பது வழக்கம். 'ஆலத்தைக் குடிக்காதவன்’ என்றும் இன்னொரு வகையில் பொருள் சொல்லலாம்! 2-வது வகை பொருளை வைத்துச் சிலேடையாகப் பாடினார் காளமேகப் புலவர்!
ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம்
குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம்
மடியாரோ மண்மீதில்...
ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம்
குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம்
மடியாரோ மண்மீதில்...
அந்த இறைவனைப் போய், ஆலத்தைக் குடியா தான் என்று சொல்லமுடியுமா? அவன் மட்டும் நஞ்சை அருந்தவில்லையானால், மண் மீது (ஏன், பிற எல்லா இடங்களிலும்கூட) யாரும் உயிரோடு இருக்க
முடியுமா?!
ஐந்து நிலை ராஜகோபுரம். அழகழகான சிற்பங்கள். உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி. மேற்குப் பகுதியில் காட்சி தருகிறார், ஸ்ரீகலங்காமல் காத்த விநாயகர். கஜமுகாசுரனின் கொடுமை பொறுக்காத தேவர்கள், விநாயகரை வழிபட்டுக் கதறினர். அந்த யானைத் தலை அசுரனை வதம் செய்த கணபதி, வெற்றியின் அடை யாளமாக அவனுடைய தலையைத் தாமும் அணிந்துகொண்டார். கலங்க வேண்டாம் என்று அபயம் அருளியவர் என்பதால், 'கலங்காமல் காத்தவர்’ எனும் திருநாமம் இவருக்கு! வெளிப் பிராகாரத்திலேயே, தெற்குப் பார்த்த அம்பாள் சந்நிதி.
உள் வாயில் வழியாக நுழைகிறோம். சூரியன் சந்நிதி. அருகிலேயே உற்ஸவ சுந்தரர். சுந்தரருக்கு இந்தத் தலத்தில் வெகு சிறப்பு. காவிரிக் கரையில் சுந்தரர் பயணித்தபோது... இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள (சுமார் 4 கி.மீ) வெட்டாறு பகுதியில் சுந்தரர் வரும் போது வெள்ளம் கரைபுரண்டது. அந்த வெள்ளத்தில் சுந்தரரை கரை சேர்க்கக் காத்திருந்தான் படகுக்காரன் ஒருவன். அவனது படகில் ஏறி பயணிக்க... வெகு அலட்சியமாக அவன் படகை செலுத்த, பாறையன்றில் மோதிச் சிதறியது படகு! சுந்தரரின் கதி?
கதிக்கும் கதியான பரம்பொருள், ரிஷப வாகனராகக் காட்சி கொடுத்தார்; அங்கிருந்து ஆலங்குடி அடைவதற்கும் வழி செய்தார். இந்தத் தலத்துக்கு வந்த சுந்தரர், இங்கு அருள்புரியும் ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. கர்ண பரம்பரைக் கதையாக வழங்கப்படும் இதற்கு, முறையான அகச்சான்றுகள் இல்லை. இந்தத் தலத்துக்கு திருஞான சம்பந்தரின் பதிகம் உள்ளதேயன்றி, சுந்தரரின் தேவாரம் இல்லை.
உள் பிராகாரத்தில்தானே நிற்கிறோம். வலம் வரலாமா? நால்வர் பெருமக்கள், தொடர்ந்து மேற்கு சுற்றில் சூரியநாதர், சோமேசநாதர், குரு மோட்சேஸ் வரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரமீசர் ஆகிய சப்த லிங்கத் திருமேனிகள். ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி அகத்தியர் ஆகியோரும் உள்ளனர். வடக்கு சுற்றில் ஸ்ரீநடராஜர் சபை. திருமுறைகளை (சைவப் பெருநூல்களான பன்னிரண்டு நூல்கள்) வழிபடும் திருமுறைக் கோயிலும் பக்கத்திலேயே உள்ளது. ஏராளமான உற்ஸவ மூர்த்தங்கள். ஆக்ஞா கணபதி, கல்யாண சாஸ்தா, சோமாஸ்கந்தர், சப்த மாதர்கள், சனகாதி முனிவர்களோடு கூடிய தட்சிணாமூர்த்தி ஆகிய யாவரும் உற்ஸவர்களாகவும் அருள்பாலிக்கிறார்கள்.
வலம் நிறைவு செய்து, ஸ்வாமி சந்நிதி முன்பாக வந்துவிடு கிறோம். மகாமண்டப வாயில் துவாரபாலகர்களை வணங்கி, உள்ளே சென்றால், கருவறையில் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். ஸ்ரீஇரும்பூளை நாதர், ஸ்ரீகாசி ஆரண்யேஸ்வரர், ஸ்ரீஆரண் யேஸ்வரர், ஸ்ரீஆலங்குடிநாதர், ஸ்ரீஆலங்குடியான் போன்ற திருநாமங்களைப் பூண்டவர்.
இரும்பூளை? ஆமாம்... ஞானசம்பந்தரின் பாடல்களில், இரும்பூளை என்றே குறிக்கப்பெறுகிறது இந்தத் தலம். பூளைச் செடிகள் நிறைந்த பகுதியாதலால், இரும்பூளை என்றழைக்கப்பட்டது. காட்டுப் பகுதியானதால், ஆரண்யம் என்றும், காசி ஆரண்யம் என்றும் வழங்கப்பட்டது. இங்குதான் பார்வதி தேவி தவம் செய்து, ஐயனைத் திருமணம் முடித்தாராம். ஆகவே, இந்தத் தலத்துக்குத் திருமண மங்கலம் என்றும் பெயர் வழங்குகிறது.
ஆலங்குடிநாதரை தொழுது நிற்கி றோம். ஆலகாலத்தை உண்டதனால் தானே, நீலகண்டம், நஞ்சுண்டர், காலகண்டர், கறைக் கண்டர், நீலகந்தரர், நீலக்ரீவர், கண்டம் கருத்தவர் என்றெல்லாம் சிவனார் பெயர் பெற்றார். ஐயனுடைய அருளாடலை வியந்தபடியே, மீண்டும் மூலவர் கருவறையை வலம் வருகிறோம்.
தெற்கு கோஷ்டத்தில், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இவர்தாம் இங்கு குரு. எனவேதான், இது குரு ஸ்தலமாகத் திகழ்கிறது. வியாழனை யும் குரு (தேவர்களுக்கு அவர் குரு என்பதால்) என்றே அழைக் கிறோம். வியாழனால் தோன்றும் துன்பங்களுக்கும் தட்சிணாமூர்த் தியே தீர்வு தருகிறார். அபய ஹஸ்தத் துடன், வீராசனத்தில் அமர்ந்திருக் கிறார் தட்சிணாமூர்த்தி. காலடியில் முயலகன்; இருமருங்கிலும் சனகாதி முனிவர்கள்; முதிய சீடர்களுக்கு இளமையான குரு! தட்சிணாமூர்த்தியின் திருவதனத்தில் குழந்தைத்தனம். இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம் ஆகிய யாவும் குறைவிலாது கிட்டும்.
14 ஜென்மங்களில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, ஆலங்குடிக்கு ஒருவர் வரக்கூடும் என்பதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது.
மூலவர் கருவறையை வலம் வரும்போது தானே, ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நிதியில் நின்று விட்டோம்; வாருங்கள், வலத்தை நிறைவு செய் வோம். மேற்குக் கோஷ்டத்தில் லிங்கோத்பவர், வடக்குக் கோஷ்டங்களில் பிரம்மாவும் துர்கை யும். சுற்றி வந்து, வெளிப் பிராகாரத்தை அடைந்து அம்பாள் சந்நிதியை அடைகிறோம். ஸ்ரீஏலவார் குழலியம்மை; நின்ற திருக்கோலநாயகி.
ஆலங்குடியின் தலவிருட்சம்- பூளைச்செடி; தீர்த்தம்- அமிர்தப் பொய்கை. ஆலத்தை ஆண்டவன் எடுத்துக்கொண்டு, அமுதத்தை நமக்கு வழங்குவதால், இந்தப் பொய்கையும் அமிர்தப் பொய்கை ஆகிவிட்டது. கிழக்கே சற்று தொலைவில் ஓடும் ஆறு, பூளைவள ஆறு. இதுவும் இத்தலத் தீர்த்தமே. கோயிலுக்குள்ளே உள்ள ஞான கூபம் என்ற கிணறும் விசேஷமானது. ஸ்வாமிக்கு ஐப்பசி அபிஷேகம் பூளைவள ஆற்று நீரால் நடைபெறும். சுக்கிர வார அம்மனுக்கும் சனீஸ்வரருக்கும் தனிச்சந்நிதி கொண்ட இந்த ஆலயத்தில், அழகான வசந்த மண்டபமும் சப்தமாதர் சந்நிதியும் உள்ளன.
இங்கு அகத்தியரை வழிபட்டபின், முருகனை வணங்கினால், மன நோய், மனக்குழப்பம் ஆகியன அகலும். பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சப்த ரிஷி தீர்த்தம் ஆகிய பதின்மூன்றும், பூளைவள ஆறு, அமிர்த புஷ்கரிணி, ஞான கூபம் ஆகிய மூன்றும் சேர்த்து மொத்தம் 16 தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம். இவை மாத்திரமல்ல; இன்னும் சில சிறப்பு களும் உள்ளன. திருவிடைமருதூர் மத்தியார்ச் சுன மகாலிங்கப் பெருமானுக்கான பரிவாரத் தலங்களில் (திருவலஞ்சுழி, திருவேரகம், திருவாவடுதுறை. சூரியனார் கோயில், சேய்ஞலூர், சிதம்பரம், சீர்காழி, திருவாரூர் ஆகியவை பிற) இதுவும் ஒன்று. சிவனுக் கான பஞ்ச ஆரண்யத் தலங்களிலும் இதுவொன்று. இந்த ஊரில், விஷக்கடி அபாயமோ, நச்சுத் தாக்குதல் ஆபத்தோ கிடையாது. எல்லாவற்றையும் ஆலங்குடியான் பார்த்துக்கொள்வார்.
விஸ்வாமித்திரர், மகாவிஷ்ணு, மகா லட்சுமி, பிரம்மா, கருடன், அஷ்டதிக் பாலகர்கள், ஐயனார், வீரபத்திரர், முசுகுந்தர், சுவாசனமுனிவர், அகத்தி யர் ஆகியோர் வழிபட்ட தலம். இங்கு வழிபட நமக்கும் கொடுத்து வைத்ததே என்கிற மனநிறைவோடு வெளி வருகிறோம்.
No comments:
Post a Comment