Thursday, 3 August 2017

முக லிங்கங்களும் தாரா லிங்கங்களும் !



ந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான சிவ லிங்கங்கள் உள்ளன. வண்ணம், வடிவம், அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சிவலிங்கங்களை நம் முன்னோர் நான்கு பிரிவாக வகைப்படுத்தி உள்ளனர். அவை: ஆட்யம், ஸுரேட்யம், அநாட்யம், சர்வ சமம்.
இவற்றுள், ‘ஆட்யம்’ என்பது 1001 முகங்கள் கொண்ட சிவலிங்கம். ‘ஸுரேட்யம்’ என்பது 108 முகங்கள் கொண்ட சிவலிங்கம். ‘அநாட்யம்’ என்பது தற்போது வழக்கில் உள்ளதும், இல்லாததுமான அனைத்து வகை சிவலிங்கங்களையும் குறிக்கும். ‘சர்வசமம்’ என்பது ஒன்று முதல் ஐந்து முகங்கள் கொண்டது.
பொதுவாக சிவாலயங்களில் முக லிங்கங்கள் அபூர்வமாகவே இடம்பெறுகின்றன. அவை ஐந்து வகைப்படும்: ஒரு முகம் கொண்ட ‘ஏகமுக லிங்கம்’; இரு முகம் கொண்ட ‘துவிமுக லிங்கம்’; மூன்று முகம் கொண்ட ‘திரிமுக லிங்கம்’; நான்கு முகம் கொண்ட ‘சதுர்முக லிங்கம்’; ஐந்து முகம் கொண்ட ‘பஞ்சமுக லிங்கம்’ என்பவையே அவை.
ஆறாவது வகையான ‘ஷண்முக லிங்கம்’ என்ற வகையும் உண்டு. ஆனால், இதை வழிபடும் வழக்கம் இல்லை.
சத்யோஜாதர், அகோரர், தத்புருஷர், வாமதேவர், ஈசானர் எனும் சிவபெருமானின் ஐந்து திருமுக வடிவங்களே, ‘பஞ்சப் பிரம்மங்கள்’ எனப்படும்.
முக லிங்கங்களை வழிபடுவதால், இம்மையில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் மறுமையில் சிவ சாயூஜ்யமும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறும். சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் இந்த முகங்களை அமைக்க வேண்டும். ஆனால், பிற்காலத்தில் சிவனின் மார்பு வரை உருவம் செதுக்கும் பாணி ஏற்பட்டது. பின்னர் இரண்டு கரங்களுடன் முக லிங்கங்கள் அமைக்கப்பட்டன.
இனி, முக லிங்கங்களின் தன்மை, அவை எழுந்தருளியுள்ள தலங்கள் பற்றி பார்ப்போம்.
ஏகமுக லிங்கம்: இதில் சிவபெருமானின் தத்புருஷ முகம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கும் இந்த முகம், வெண்மை நிறமும், சாந்த குணமும் கொண்டது. பொதுவாக இந்த லிங்கம் சிவாலயங்களின் நிருதி மூலையில் அமைவதாகும். எனவே இது ‘நிருதி லிங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
பதவி, அஷ்ட ஐஸ்வர்யங்களை விரும்புவோர் இந்த தத்புருஷ லிங்கத்தை வழிபடுவர். பொதுவாகத் தென்னகத்தில் ஏகமுக லிங்கத்தை கருவறையில் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், பெரிய நாயகர் சந்நிதிக்குத் தெற்கே நிருதி மூலையில் ஒரு ஏகமுக லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தில்லைச் சிற்றம்பலத்தில் ரகசியத்துக்கு அருகில் ஒரு முகலிங்கம் உள்ளது.
இந்த லிங்கமூர்த்திகளுக்கு ஒரு முக ருத்திராட்சங்களை 11, 121 ஆகிய எண்ணிக்கையில் கோத்துச் செய்த மாலை அணிவித்து, வில்வ தளங்களால் ஆராதித்தால் மன அமைதியும் செல்வங்களும் பெறலாம்.
துவிமுக லிங்கம்: சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு மேற்காக முகங்கள் அமைவதே துவிமுக லிங்கம் அல்லது இரு முக லிங்கம் எனப்படும். கிழக்கு முகம்- தத்புருஷம், மேற்கு முகம்- சத்யோஜாதம் என்றும் அழைக்கப்படுகிறது. தியாகம் புரியும் எண்ணம் கொண்டவர்கள், உலகுக்குத் தன்னை அர்ப்பணிப் பவர்கள், வீர சைவர்கள் போன்றோர் இந்த லிங்கத்தை வழிபடுவர்.
துவிமுக லிங்க சந்நிதிக்குக் கிழக்கிலும் மேற்கிலும் வாயில் அமைக்க வேண்டும் என்பது நியதி. இரு முக ருத்திராட்ச மாலை சூட்டி, இருவாட்சி மலர்களால் அர்ச்சித்து இந்த லிங்கத்தை வழிபட வேண்டும். இந்த வகை லிங்கங்கள் பொதுவாக நமது ஆலயங்களில் இடம் பெறுவதில்லை.
திரிமுக லிங்கம்: சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு- தெற்கு- வடக்கு ஆகிய மூன்று திசைகளில் முகம் கொண்டது மும்முக லிங்கம்; அதாவது திரிமுக லிங்கம். கிழக்கில்- தத்புருஷ முகம் ஆண்மையுடன் புன்னகை புரிவதாகவும், தெற்கில்- அகோர முகம் கோப வடிவம் கொண்டதாகவும், வடக்கில்- வாமதேவ முகம் பெண் சாயலுடன் மந்தகாசம் கொண்டதாகவும் அமையும். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் பிரம்மா-விஷ்ணு- ருத்திரர் ஆகியோரின் முகங் களை தன்னுள் கொண்டதாகக் கருதப்படுவதால், இதற்கு ‘திரி மூர்த்தி லிங்கம்’ என்றும் பெயர்.
திருவக்கரை திருத்தலத்தில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தின் கருவறையில் மூலமூர்த்தியாக திரிமுக லிங்கத்தை தரிசிக்கலாம். ஈரோடு மகிமாலீஸ்வரர் ஆலயத்திலும் திரியம்பக லிங்கம் அமைந்துள்ளது.
பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரியம்பக சிவலிங்கத்தின் மீது, மூன்று முகங்களைத் தங்கத்தால் செய்து அணிவித்துள்ளனர். இந்த மும்முக லிங்கத்தை மூன்று வேதங்கள் ஓதி, மூன்று முக ருத்திராட்சம் அணிவித்து, மூன்று தள வில்வங்களால் அர்ச்சித்து வந்தால் எண்ணற்ற செல்வங்களை அடையலாம்.
சதுர்முக லிங்கம்: இந்த லிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கில் தத்புருஷம், மேற்கில் சத்யோஜாதம், வடக்கில் வாம தேவம், தெற்கில் அகோரம் என நான்கு முகங்களை அமைப்பர். இந்த லிங்கத்தின் நான்கு முகங்களையும் நான்கு வேதங்களால் அர்ச்சித்து பூஜை செய்வர்.
நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் ஆலயத்தில் உள்ளது சதுர்முக லிங்கம். இது மார்பு வரை இரு கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் ஜப மாலையும், மற்றொரு கையில் அமுதக் குடமும் உள்ளன. நான்கு முக லிங்கம் ஆனதால் இங்கு நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழில் இதை ‘நான்முகக் கோயில்’ என்பர். வடமொழியில், ‘சர்வதோ பத்ராலயம்’ என்பர்.
திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்-கச்சபேசுவரர் ஆகிய ஆலயங்களிலும் சதுர்முக லிங்க சந்நிதிகள் உள்ளன. கச்சபேஸ்வரர் ஆலயத்தில் நடராஜர் சந்நிதிக்கு அருகில் நான்குமுக லிங்கம் அமைந்த சந்நிதி உள்ளது.
சதுர்முக லிங்கத்தை நான்கு முக ருத்திராட்சத்தால் அலங்கரித்து, நால்வகை வில்வங்களால் அர்ச்சிப்பவர்கள் பெரிய அறிஞர்களாக விளங்குவார்கள்.
பஞ்சமுக லிங்கம்: இவை மிகவும் அபூர்வமாகவே காணப்படுகின்றன. நான்கு திசைகளில் நான்கு முகங்களுடன், கிழக்குத் திசையில் அதிகப்படியான ஒரு முகத்துடன் ஐந்து முகங்களுடன் விளங்குகிறது.
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் அமைந்துள்ள சந்நிதியில் இந்த வகை லிங்கம் உள்ளது.
கயிலையில் உள்ள மகா சிவாலயத்தில் பஞ்சமுக லிங்கம் ஒன்று இருப்பதாகவும் அதன் ஐந்து ஜடா பாரங்களில் இருந்தும் ஐந்து கங்கைகள் பொங்கி வருகின்றன என்றும் சிவ ரகசியம் கூறும். இவையே ‘பஞ்ச கங்கை’ எனப்படும்.
வட மாநிலங்களில் சமீப காலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்களில் பஞ்சமுக லிங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்த லிங்கத்துக்கு பஞ்சமுக ருத்திராட்சத்தால் விதானம், மாலை ஆகியவற்றை அமைத்து, பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்து, பஞ்ச வில்வத்தால் அர்ச்சித்து, பஞ்ச வித உபசாரம் செய்து, பஞ்ச அன்னங்களை நிவேதனமாகப் படைக்க வேண்டும். இதன் ஐந்து முகங்களில் இருந்தும் ஆகமங்கள் வெளிப்பட்டதால், இது ‘சிவாகம லிங்கம்’ என்றும் வழங்கப்படும்.
ஷண்முக (ஆறுமுக) லிங்கம்: இதில் நான்கு முகங்கள் நான்கு திக்குகளை நோக்கியும், ஐந்தாவது முகம் உச்சியில் _ வானத்தை நோக்கியும், ஆறாவது முகம் பாதாளத்தை நோக்கியும் இருக்கும். மேல்நோக்கியது ஊர்த்துவ முகம் என்றும், கீழ்நோக்கியது அதோ முகம் என்றும் வழங்கப்படும்.
ஈசன், இந்த ஆறு முகங்களின் நெற்றிக் கண்களில் விளைந்த நெருப்புப் பொறிகளால் முருகனை உருவாக்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இதை குமரகுருபர சுவாமிகள், ஐந்து முகம் தந்து அதோமுகமும் ஆறாக என்று தமது கந்தர் கலிவெண்பாவில் குறிப்பிடுகிறார்.
பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த ஆலகாலத்தை உண்டது அதோமுகமே. அதனால் சிவனாரின் ஸ்ரீகண்டத்தையே ஆறாவது முகமாக பாவித்து அர்ச்சிக்கின்றனர். நடை முறையில் ஆறுமுக லிங்கங்கள் அமைக் கப்பட்டதாகவோ வழிபட்டதாகவோ தெரியவில்லை.
முக லிங்கங்களைப் போன்றே தனிச் சிறப்பு வாய்ந்தவை தாரா லிங்கங்கள். லிங்கத்தின் பாணப்பகுதியில் முகங்களுக்கு பதிலாக அழகிய பட்டைகள் அமைந்தவை தாரா லிங்கங்கள். பல்லவ அரசர்கள் வெகு சிறப்பாக தாரா லிங்கங்கள் அமைத்தனர் என்பதை வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. இந்த வகை லிங்கங்களின் பாணப் பகுதியில் 4, 8, 16, 32, 64 ஆகிய எண்ணிக்கையில் ஐந்து வகையாக பட்டைகள் அமைந்திருக்கும். இந்தப் பட்டைகள் ‘தாரா’ எனப்படும்.
இதில் நான்கு பட்டைகள் கொண்டது ‘வேத லிங்கம்’. பாடல் பெற்ற திருத்தலமான சக்ரப்பள்ளியில் வேத லிங்கத்தைக் காணலாம்.
எண் பட்டை (அஷ்ட தாரா) லிங்கம் பல்லவர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் அனைத்திலும் உள்ளன. காஞ்சிபுரம் கயிலாயநாதர் ஆலயம், திருவதிகை வீரட்டானேசுவரர் ஆலயம் ஆகியவற்றில் இந்த வகையான லிங்கங்கள் இடம்பெற்றுள்ளன.
பதினாறு பட்டை (ஷோடச தாரா) லிங்கம், சந்திரனின் பதினாறு கலைகளையும் பதினாறு பட்டை களாகக் கொண்டது. ஆகையால் ‘சந்திர கலாலிங்கம்’ என்றும் இதை அழைப்பர். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்தில் அமைந்த லிங் கம் மற்றும் காஞ்சி கயிலாயநாதர் ஆல யத்தின் சுற்றாலயத்தில் உள்ள லிங்கம் ஆகியவை இந்த வகையானதே.
முப்பத்திரண்டு பட்டை(தர்ம தாரா)லிங்கம், தர்மத்தின் 32 வகையைக் குறிப்பிடுவது. எனவே, இது ‘தர்ம லிங்கம்’ என்றும் அழைக்கப்படும். காமாட்சி அம்பிகை 32 அறங்களை வளர்த்த காஞ்சிபுரத்தில், வயல் வெளியில் 32 பட்டைகளைக் கொண்ட கலை நயமிக்க ஒரு லிங்கம் அமைந்துள்ளது.
அறுபத்துநான்கு பட்டை (சதுஷ்சஷ்டி) லிங்கம், சிவபெருமானின் 64 லீலா விநோதங் களை விளக்கும் வகையில் 64 பட்டைகள் கொண்டது. எனவே, இது ‘சிவலீலா சமர்த்த லிங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் 64 பட்டைகள் 64 யோகினி சக்திகளைக் குறிக்கும் என்றும் கூறுவர். இந்த தாரா லிங்கங்களை வணங்குவதால் இறைவனோடு இரண்டறக் கலக்கும் பேறு பெறலாம் என்பர்.
தாரா லிங்கங்களின் மீது தாரா பாத்திரத்தை வைத்து அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீர் பட்டைகளின் வழியே பல கிளைகளாகப் பிரிந்து வழிந்தோடுவது கண்ணுக்கு இன்பம் அளிப்பதுடன், இறைவனின் அருள் சுரப்பதையும் காட்டுகிறது.

No comments:

Post a Comment