Thursday, 3 August 2017

‘கோவிந்தா... கோபாலா..!’ குமரியில் சிவாலய ஓட்டம்!


கா சிவராத்திரி தினத்தன்று கன்யாகுமரி மாவட்டத்தில், பன்னிரண்டு சிவாலயங்களை தரிசித்து வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ என்ற நிகழ்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.
மகா சிவராத்திரியன்று பக்தர்கள் விரதமிருந்து கன்யாகுமரி மாவட்டம் கல்குளம், விளவங்கோடு தாலூகாக்களில் அமைந்துள்ள திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிப் பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு, திருநட்டாலம் ஆகிய பன்னிரண்டு சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது. இந்த ஓட்டத்தின் தொலைவு 87 கி.மீ.! ‘அரியும் சிவனும் ஒன்றே!’ என்ற தத்துவத்தை உணர்த்துவதே இந்த சிவாலய ஓட்டம் என்று சொல்லப்படுகிறது. சிவாலய ஓட்டம் ஓடுவதற்குக் காரணமாக ஒரு புராணக் கதையைச் சொல்கிறார்கள்.
இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படியோர் உருவம் ஏற்றார் என்றும் சொல்வார்கள். புருஷாமிருகத்துக்கு விஷ்ணுவைப் பிடிக்காது. தனது எல்லைக்குள் யாராவது திருமால் நாமத்தைக் கூறினால் அவரைத் தாக்கிவிடும்.
‘தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது!’ என்று நம்பியவன் பீமன். பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் ‘சிவனும் அரியும் ஒன்று’ என்பதை உணர்த்த வேண்டும் என்பது ஸ்ரீகிருஷ்ணரது விருப்பம். தர்மர் ஒரு முறை ராஜசூய யாகம் நடத்தத் திட்டமிட்டார். எனவே, யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனைப் பணித்தார். அவனும் சம்மதித்தான். ஆனால், ‘வைணவத்தை வெறுக்கும் அந்த புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி?’ எனத் தயங்கினான்.
இதுவே தக்க தருணம் என நினைத்த ஸ்ரீகிருஷ்ணர், ‘‘பயப்படாதே பீமா. நான் உனக்குப் பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்க ஆரம்பித்து விடும். அப்போது நீ எளிதில் தப்பித்து விடலாம்!’’ என்று கூறினார்.
ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகளுடன் காட்டுக்குச் சென்றான் பீமன். திருமலையில் ஒரு பாறைமீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம்.
பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா!’’ என்று உரத்துக் கூறினான். இதனால் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே, பீமன் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது.
சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று குரல் எழுப்பினான். புருஷா மிருகம் பீமனைத் துரத்த ஆரம்பித்தது. பீமன் மீண்டும் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. இந்த இடமே திக்குறிச்சி.
இப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பன்னிரண்டாவது இடத்தில் (திருநட்டாலம்) ருத்திராட்சத்தைப் போடும்போது புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன், ‘‘உனது எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!’’ என்றான் புருஷாமிருகத்திடம்.
அப்போது அங்கு வந்த தர்மரிடம் இருவரும் நியாயம் கேட்டனர். அவர் பாரபட்சம் கருதாமல், ‘‘ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால் பாதி உடல் புருஷாமிருகத்துக்கே!’’ என்று தீர்ப்பு வழங்கினார். இதைக் கண்டு மகிழ்ந்தது புருஷாமிருகம். அந்த நேரத்தில் ஒளிப் பிழம்புடன் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் ‘அரியும் சிவனும் ஒன்றே!’ என்கிற தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜசூய யாகம் நடக்க உதவியது புருஷாமிருகம்.
புருஷாமிருகத்திடம் இருந்து தப்பிக்க பீமன் ருத்திராட்சங்களைக் கீழே போட... அவை அனைத் துமே சிவலிங்கங்களாக மாறி, ஆலயங்கள் எழும்பின என்பார்கள்.
மகா சிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிவார்கள். அன்றிலிருந்து விரதம் இருப்பர். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள். ‘கோவிந்தா... கோபாலா’ என்று கோஷமிட்டவாறு திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவர். அந்த தொடர் ஓட்டத்தில் பன்னிரு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள். பன்னிரண்டாவது ஆலயமான திருநட்டாலத்தில் சந்தனமும் மற்ற ஆலயங்களில் திருநீறும் பிரசாதமாக வழங்கப்படும்.
சிவாலயங்களை தரிசிக்க ஓடுபவர்கள், ‘கோவிந்தா... கோபாலா...’ என விஷ்ணு நாமம் சொல்லி ஓடுவது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு அம்சம். இனி, இந்த சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் தரிசிக்கும் பன்னிரண்டு சிவாலயங்களைப் பார்ப்போம்.
1. திருமலை: சிவாலய ஓட்டம் துவங்கும் முன்சிறை என்ற ஊரை ஒட்டியுள்ள திருமலை சிவாலயம் முக்கியத்துவம் வாய்ந்தது. மலை மேல் இருக்கும் இந்தக் கோயிலுக்குச் செல்லப் படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் தனித் தனி சந்நிதிகள் உண்டு. முன்சிறைக்கு ராமபிரான் வந்து சென்றதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை முருகன் இங்கு சிறைப்பிடித்ததாகவும், அதனால் இதன் பெயர் முன்சிறை ஆனது என்றும் கூறுகிறார்கள். திருமலை கோயிலில் சாயரட்சை பூஜை முடிந்ததும் சிவாலய ஓட்டம் துவங்கும். பின், மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சியை அடை வார்கள்.

2. திக்குறிச்சி: திருமலையில் இருந்து 12 கிமீ. தொலைவில் உள்ள இந்த சிவன் கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு மகாதேவர், விநாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, நாகராஜா ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன. பக்தர்கள் ஆற்றில் நீராடி மகாதேவரை தரிசித்த பின், இங்கிருந்து அருமனை களியல் வழியாக 14 கி.மீ. தூரம் ஓடி திற்பரப்பு சிவாலயத்தை அடைகின்றனர்.
3. திற்பரப்பு: மேற்கு நோக்கியுள்ள இந்தக் கோயில் வட்ட வடிவில் அமைந்துள்ளது. இங்கு மகாதேவர், முருகன், கிருஷ்ணன், ஆஞ்சநேயர், அம்மன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. வழக்கமாக சிவன் கோயில்களில் சிவலிங்கத்தின் எதிரில் நந்தி இருக்கும். ஆனால், இங்கு சிவனின் உக்கிரத்தைத் தவிர்க்கும் பொருட்டுக் கருவறை ஓரத்தில் உள்ளது. இதையட்டிய திற்பரப்பு அருவி சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கிருந்து பக்தர்கள் திருநந்திக்கரை நோக்கி ஓடுகின்றனர்.
4. திருநந்திக்கரை: குலசேகரம் வழியாக 8 கி.மீ. தொலைவு திருநந்திக்கரை ஆலயம். இங்கு பார்வதி சமேதராக ஈசன் திருவருள் புரிகிறார். இங்குள்ள பரந்து விரிந்த பாறையின் வெப்பம் தாங்காத சிவபெருமான், கோயில் தெப்பக் குளத்தில் சுயம்புவாக எழுந்தருளி, தனக்குக் குளத்திலேயே ஆலயம் எழுப்புமாறு கட்டளையிட்டாராம். அதன்படி எழுப்பப்பட்டதே இந்த ஆலயம். இது கேரள மாநிலத் தந்திரிகளால் ஆகம விதிப்படியும் கேரள தச்சு சாஸ்திரப்படியும் உருவாக்கப்பட்டது. கோயிலையட்டி குகைக் கோயில் ஒன்றும் கல்வெட்டுகள் சிலவும் காணப்படுகின்றன. அடுத்து பக்தர்கள் பொன்மனை நோக்கி ஓடுகின்றனர்.
5. பொன்மனை: திருநந்திக்கரையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம். இங்கு கிழக்கு முகமாக சிவபெருமான் அருள் புரிகிறார். இந்த தரிசனத்துக்குப் பின் பன்றிப்பாகம் நோக்கி ஓடுகின்றனர்.
6. பன்றிப்பாகம்: பொன்மனையிலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் பன்றிப்பாகம் சிவாலயம். வயல்வெளிகளும் நீரோடைகளும் கூடிய இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டையுடன் விநாயகர் மற்றும் நாகராஜாவுக்குத் தனி சந்நிதிகள் உள்ளன. தரிசனத்துக்குப் பிறகு பக்தர்கள் கல்குளம் நோக்கிச் செல்கின்றனர்.
7. கல்குளம்: பன்றிப்பாகத்திலிருந்து 6 கி.மீ. தூரம் ஓடி, புகழ்பெற்ற பத்மனாபபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள கல்குளம் நீலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடைகின்றனர். இங்கு ஆதிமூல மூர்த்தியாக 10 அடி உயர சிவலிங்கம் உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்த்து வியந்த மார்த்தாண்டவர்மா மகாராஜா, தமிழக ஆலய அமைப்பின் சாயலில் முன்புறம் அழகு மிக்க கோபுரத்துடன் இந்த ஆலயத்தைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இங்கு நீலகண்டேஸ்வரர், சக்தி சந்நிதிகள் உள்ளன. அடுத்து பக்தர்கள் மேலாங்கோடு நோக்கி ஓடுகின்றனர்.
8. மேலாங்கோடு: கல்குளத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த சிவன் கோயில். மேலாங்கோடு இசக்கியம்மன் ஆலயம், பத்மனாபபுரம் கோட்டை ஆகியவையும் அருகில் உள்ளன. இங்கு தரிசனம் முடிக்கும் பக்தர்கள் திருவிடைக்கோடு நோக்கி ஓடுகின்றனர்.
9. திருவிடைக்கோடு: மேலாங்கோட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடைக்கோடு சிவாலயம். இது மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த ஆலயம் கேரளா- தமிழக கட்டடக் கலைகளை இணைத்துக் கட்டப்பட்டது. இங்கு தரிசனம் முடிக்கும் பக்தர்கள் திருவிதாங்கோடு நோக்கி ஓடுகின்றனர்.
10. திருவிதாங்கோடு: திருவிடைக்கோட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவில் தெப்பக்குளத்து டன் அமைந்த இந்த ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணுவுக்குத் தனி சந்நிதிகள் உள்ளன. இந்த ஆலய மண்டபத் தூண்களில் கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் செதுக்கப் பட்டுள்ளன. இங்கு தரிசித்த பிறகு 9 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பன்றிக்கோடு நோக்கி ஓடுகின்றனர் பக்தர்கள்.
11. திருப்பன்றிக்கோடு: பள்ளியாடி அருகில் அமைந்துள்ள சிவாலயம். இது கேரள அமைப்புடன் காணப்படுகிறது. ஆலய விமானத்தில் நரசிம்ம மூர்த்தி, ஐயப்பன் சிலைகள் உள்ளன. கூம்பு வடிவத் தட்டு விமானமும் அதன் மேல் செப்புத்தகடுகளால் கூரையும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. சிவன்- நந்தி இருவரும் முறையே வேடன்- பன்றியாக உருமாறியதும், அந்தப் பன்றியை வேட்டையாடும் பொருட்டு சிவனுடன் அர்ஜுனன் போர்புரிந்த இடமும் இதுவே. எனவே, இந்தத் தலத்துக்கு திருப்பன்றிக்கோடு என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். இங்கு தரிசனம் செய்த பிறகு திருநட்டாலம் நோக்கி ஓடுகின்றனர்.
12. திருநட்டாலம்: திருப்பன்றிக்கோட்டிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் ஓடி திருநட்டாலத்தில் ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர் பக்தர்கள். இந்த சிவாலயத்தில் சங்கரநாராயணர் என்ற சிறப்புப் பெயருடன் விளங்குகிறார் விஷ்ணு.
புராணத்தின்படி 12-வது ருத்திராட்சம் விழுந்த இங்கு வியாக்ரபாதர் இந்த ஆலயத்தைக் கட்டியதாகக் கூறுவர். இங்குள்ள திருக்குளத்தில் நீராடி சிவபெருமானையும் பின்னர் சங்கரநாராயணரையும் தரிசித்து, சிவன்-விஷ்ணு இருவரும் ஒன்றே என்று உணர்ந்து பக்தர்கள் ஏகாதசியிலிருந்து சிவராத்திரி வரை தாங்கள் மேற்கொண்ட விரதத்தை முடித்துக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment