Thursday, 3 August 2017

கந்தனுக்கு அரோஹரா!



 
சோலைமலை முருகன் கோயிலில் ஸ்தல விருட்சமாக விளங்கும் நாவல் மரம், புராணச் சிறப்பு மிக்கது. ஒளவையிடம் முருகன், ‘‘சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா’’ என்று கேட்ட நாவல் மரம் இந்தக் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. பொதுவாக நாவல் மரம் ஆடி மாதம் பழுக்கும். ஆனால், இங்குள்ள நாவல் மரம் ஐப்பசி மாதம் பழுக்கும் தன்மை உடையது.
 திருச்செந்தூரில் மூலவர் முருகன், துறவுக் கோலத்தில் இருப்பதால் அவருக்குப் படைக்கப்படும் உணவில் உப்பு, புளி, காரம் சேர்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் சர்க்கரைப் பொங்கலே படைக்கப்படுகிறது. இங்கு ஆறுமுகப் பெருமான் இல்லறக் கோலத்தில் இருப்பதால், அவருக்கு ஆறுமுக அர்ச்சனை முடிந்தபின் பால் பாயசம், தேங்காய் சாதம், புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் ஆகிய ஆறு வகை நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன.
 திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அருப்புக் கோட்டை, பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி, விருதுநகர், சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகிறார்கள். இதில் ராமநாதபுரம் பகுதியில் இருந்து வரும் பக்தர்கள், ‘‘திருச்செந்தூர் கோயிலுக்குப் பாத யாத்திரை சென்றால் எங்கள் பகுதியில் மழை பெய்கிறது. நாங்கள் பாத யாத்திரை செல்லாவிட்டால் மழை பொய்த்து விடுகிறது!’’ என்கிறார்கள்.
 முருகப் பெருமான் கோயில் கொண் டுள்ள எல்லாத் தலங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாதம் சூரசம்ஹார விழா நடைபெறும். ஆனால், திருப்பரங்குன்றத்தில் மட்டும் ஆண்டுக்கு மூன்று முறை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இங்கு ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா, தை மாதம் தெப்பத் திருவிழா மற்றும் பங்குனி மாதப் பெருவிழாவின்போதும் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.
 தென்காசி அருகே ஆய்க்குடி பாலசுப்பிர மணிய சுவாமி கோயிலில் படி பாயசம் நிவே தனம் செய்வார்கள். 1 படி முதல் 12 படி வரை அரிசி பாயசம் செய்து குழந்தைகளுக்கு வழங்குவர்.
 ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் என்ற ஊரில் வீரகுமாரசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு முருகப் பெருமான் வீரத் தோற்றத்தில் கன்னி குமரனாக காட்சி அளிப்பதால், பெண்கள் கோயிலுக்குள் செல்லும் வழக்கம் இல்லை. மாறாக, ‘குறட்டு வாசல்’ எனப்படும் முன்புற வாசலில் நின்று சப்த கன்னியரையும், வீர குமாரரையும் வணங்கிச் செல்லும் வழக்கம் நீடிக்கிறது.
 கோவை மாவட்டம் குருந்த மலையிலும், பழநி திருவாவினன்குடியிலும், முருகப்பெருமான் குழந்தை வேலாயுதசாமியாக மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

 சிதம்பரம், ரத்னகிரி, வேலூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பிரான்மலை, செட்டிகுளம் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களில் யானை வாகனத்தில் முருகன் காட்சி தருகிறார்.
 திருப்போரூர் கோயிலில் ஆட்டு வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம் ஆகியவற்றில் அமர்ந்துள்ள முருகனை தரிசிக்கலாம்.
 திருப்பரங்குன்றம் மூலவரான முருகனின் திருவுருவத்துக்குக் கீழே ஆடு, மயில், யானை, சேவல் ஆகிய நான்கு வாகனங்கள் உள்ளன.
 மருங்கூர் என்ற தலத்தில் ஆட்டு வாகனத்தின் மேல் அமர்ந்துள்ள அபூர்வ முருகனை தரிசிக்கலாம்.
 சிதம்பரத்தில் யானை மேல் அமர்ந்த முருகனை தரிசிக்கலாம்.
 காங்கேயத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் மீன் மீது அமர்ந்திருக்கும் முருகனைக் காணலாம்.
 ஆவூர் கோயிலில் உள்ள முருகன், கையில் தாமரை மலர் ஏந்தி, காட்சியளிக்கிறார்.
 திருச்சி மாவட்டம் திண்ணியம் என்ற தலத்தில் முருகன்-வள்ளி-தெய்வானை மூவரும் ஆளுக்கொரு மயில் மீது அமர்ந்தருளும் அழகிய கோலத்தைக் காணலாம்.
 பெரியார் மாவட்டம் காசிப்பாளை யத்தில் உள்ள முருகன் மிக வித்தியாசமாக 3 தலைகளுடன், 6 திருக்கரங்கள் கொண்டு தரிசனம் தருகிறார்.
 11 தலைகள் மற்றும் 24 கரங்களுடன் விஸ்வரூப தரிசனம் தரும் முருகனை பழநி மலையில் வடக்குப் புறமுள்ள மண்டபத்தில் காணலாம்.
 7 அடி உயரமுள்ள முருகனை வல்லக் கோட்டையில் கண்டு பரவசம் அடையலாம்.
 60 தமிழ் வருடங்களை நினைவுகூரும் முகமாக 60 படிகளைக் கொண்டது சுவாமிமலை. 365 நாட்களை நினைவுபடுத்தும் விதமாக 365 படிகளைக் கொண்டது திருத்தணி.
 10 அடி உயரமுள்ள முருகனை கன்யாகுமரி மாவட்டம் வேனிமலையில் காணலாம்.
 அரிசிக்கரைப்புதூர் முருகன், மகாவிஷ்ணுவைப் போல் சங்கு, சக்கரங்களுடன் காட்சி தருகிறார்.
 குதிரையின் மேல் அமர்ந்துள்ள முருகப் பெரு மானை மருதமலையில் காண முடியும்.
 இலஞ்சி திருக்கோயிலின் நுழைவு வாயிலில் பத்துத் தலைகளுடன் முருகன் அமர்ந்துள்ள திருக்காட்சியைக் காணலாம்.
 விராலிமலையில் முருகனின் மூன்று முகங்களை நேரடியாகப் பார்க்கலாம். மற்ற மூன்று முகங்களைக் கண்ணாடியில் தரிசிக்கலாம்.
 தஞ்சாவூர் வடக்கு வீதி சிவேந்திரர் ஆலயத்தில் ஒன்பது தலை சர்ப்ப ரூப சண்முகரை தரிசிக்கலாம். இவர், வள்ளி-தெய்வானையுடன் மூன்று அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார்.

No comments:

Post a Comment