Wednesday, 2 August 2017

கருவறை பின்னே அமைந்த லிங்கோற்பவர்!



‘லிங்கம்’ என்பதற்கு உருவம் என்றும், ‘உற்பவம்’ என்பதற்கு வெளிப்படுதல் என்றும் பொருள். ஆக, ‘லிங்கோற்பவம்’ எனும் சொல்லுக்கு, உருவமற்ற இறைவன், திருவடிவம் கொள்ளுதல் என்பது பொருள். அதாவது ஓருருவம், ஒரு நாமம் இல்லாத பெருமான், உருவம் தாங்கி அருளும் நிலையே லிங்கோற் பவம் எனப்படும்.
சிவலிங்கமூர்த்தியின் மையத்தில் பெருமான் அழல் (நெருப்பு) போன்ற பிளவில் எழுந்தருளியிருக்க, லிங்கத் தின் வலப் புறம் பிரம்மதேவனும், இடப் புறம் திருமாலும் கை கூப்பி நிற்கிற நிலையே லிங்கோற்பவ மூர்த்தி வடிவம். லிங்கத்தின் கீழ்ப் பகுதியில் பன்றி வடிவில் திருமாலும், அன்னம் வடிவில் (அல்லது அன்னத்தின் மீது அமர்ந்தவாறு) பிரம்மதேவனும், பெருமானின் ‘அடி-முடி’ தேடும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த மூர்த்தியைப் புராணங்களும் கல்வெட்டுகளும், லிங்கபுராண மூர்த்தி என்று குறிப்பிடுகின்றன. பொதுவாக, சிவாலயங்களில் இவருக்கான இடம் கருவறையின் பின்புறம் அமையும் மாடம். ஆலயத்தின் பிற இடங்களில் இந்த மூர்த்தியை வைக்கும் வழக்கம் இல்லை.
லிங்கோற்பவரை கல் திருமேனியாக எழுந்தருள வைப் பதே வழக்கமாகும். என்றாலும், இதற்கு விதிவிலக்காக தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் மனைவியால் செய்தளிக்கப்பட்ட உலோகத் திருமேனியைப் பற்றி, கல்வெட்டுக் குறிப்பின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
திருவாதிரையில் நடராஜரையும், உமாமகேஸ்வர விரத காலத்தில் உமா- மகேஸ்வரரையும் வழிபடுவது போன்று, மகாசிவராத்திரியின் மூன்றாம் காலத்தில் இந்த லிங்கோற்பவ மூர்த்தியை வழிபட வேண்டும். இதனால் சிவராத்திரியின் மூன்றாம் காலம் ‘லிங்கோற்பவ காலம்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்த வேளையில் பெருமான், நெருப்புத் தூண் மத்தியிலேயிருந்து மான், மழு, அபய, வரத முத்திரைகளுடன் உருவம் தாங்கி அருள் பாலிக்கிறார்.
இவ்வாறு பெருமான் உருவம் கொண்ட நிலையான லிங்கோற்பவ காலமானது தினமும் அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை உள்ள காலமாகும். இதற்கு ‘நித்ய லிங்கோற்பவ காலம்’ என்று பெயர்.
திரயோதசியும் சதுர்த்தசியும் சந்திக்கிற வேளையானது ‘பட்ச லிங்கோற்பவ காலம்’ எனப்படுகிறது.
மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசியின் மூன்றாம் காலம் ‘வருஷ லிங்கோற்பவ காலம்’ எனப்படுகிறது. சிவராத்திரிக்கு முந்திய மாலைக் காலத்தில் நடராஜ மூர்த்தியையும், பிரதோஷ நாயகரையும் வழிபட்டு, இரவின் முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தென்முகக் கடவுளையும், மூன்றாம் காலத்தில் லிங்கோற்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூட மூர்த்தியையும் (சந்திரசேகரர்) வழிபட வேண்டும் என்பது நியதி.
லிங்கோற்பவ காலம் என்று அழைக்கப்படும் இந்த மூன்றாவது காலத்தில் கருவறைக்குப் பின்னால் அமைந்த இந்த லிங்கோற்பவ மூர்த்திக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் செய்த ஆடைகளை அணிவித்து, தாழம்பூக்களுடன், பிற மலர்களையும் கொண்டு அலங்கரித்து, எள் அன்னம் நிவேதிக்க வேண்டும். சிவந்த பழங்கள், நெல்பொரி, வெல்லம் கலந்த பொரி உருண்டை மற்றும் சுண்டல் முதலானவற்றையும் நிவேதனம் செய்து, பதினோரு முறை நமஸ்கரிக்க வேண்டுமென்பர். ‘ஸ்படிக மயமாக விளங்கும் மகாலிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்கிறேன்’ என்று கூறும் பாடல்களைப் பாடிவிட்டு, ருத்திர மந்திரம் கூறி அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் ஸ்ரீருத்திரத்தையும், சமகத்தையும் கூறல் வேண்டும்.
நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை, பிரமனும் திருமாலும் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்ததை நினைவுகூரும் வகையில் பெருமானை ருத்திர மந்திரம் ஓதி வழிபடும் வழக்கம் நிலவுகிறது. மேலும், சிவ சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து, தேவாரத்தில் உள்ள ‘இருநிலனாய் தீயாகி’ எனும் பதிகத்தையும், லிங்கபுராண குறுந்தொகையையும் ஓத வேண்டும். அப்பரடிகளின் இந்தப் பதிகத்தை ஓதுவது சிறந்த பலன் தரும். இறைவனை, பக்தி வலையால் பிடிக்கலாமே அல்லாமல், அகங்காரத்தால் அடைய முடியாது. அதற்காக பக்தர்கள் செய்ய வேண்டியதை பட்டியலிடுகிறார் அப்பர் பெருமான். இதில் ஒவ்வொரு பாடலிலும், ‘இருவர் இருவர்’ என்றே கூறி, இறுதிப் பாடலில் ‘அவ்விருவர் செங்கண்மாலும் பிரமனும்’ என்று காட்டுவது குறிப்பிடத் தக்கது.
பொதுவாக லிங்கோற்பவ மூர்த்தியில் உள்ள சிவபெருமானை நான்கு கரங்களுடன் தரிசிக் கலாம். அவற்றில் மான், முழு, அபய, வரத முத்திரை கள் கொண்டவராக அமைப்பது வழக்கம். ஆனால், காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலில், எட்டுக் கரங்களுடன் கூடிய லிங்கோற்பவரைக் காணலாம். பிள்ளையார்பட்டியில் உள்ள லிங்கோற்பவர், இரு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்!
திருவண்ணாமலை ஆலயத்தில் இந்த மூர்த்தியை சற்றுக் கலைநயத்துடனும், காவிய நயத்துடனும் அமைத்துள்ளனர். அதாவது, இந்தக் காட்சியின் பின்னணி யில் அண்ணாமலையும், அதன் மீது தீபமும் காட்டப்பட்டுள்ளன. அதிலிருந்து வெளிப்பட்டு தேவியுடன் கூடியவாறு, இடபம் பின் நிற்க... பெருமான் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பான லிங்கோற்பவ மூர்த்தியை வேறெங்கும் காண முடியாது!

No comments:

Post a Comment