Saturday, 5 August 2017

இடர்கள் போக்கும் சப்த விடங்கர்



                                         திருமால் தந்த தியாகேசர்!
'உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது தப்பாகிவிட்டதே?! இந்தா... நீ செய்த காரியத்துக்குப் பரிசு என்று பொன்னையோ பொருளையோ அள்ளித் தந்திருக்கவேண்டும். மாறாக, என்ன வேண்டுமோ கேள் என்று சொன்னது பிசகாகிவிட்டது. இருக்க இடம் கொடுத்தால் மடத்தைச் சுருட்டிக் கொள்கிற கதையாக, அடிவயிற்றில் கைவைத்துவிட்டானே, இந்த முசுகுந்தன்?!' - தனக்குள் புலம்பிக்கொண்டு இருந்தான் இந்திரன்.
முதலில்... முசுகுந்தனைப் பார்ப்போம்.
திருக்கயிலாயம். வில்வ மர நிழலில், சிவபெருமானும் பார்வதிதேவியும் அமர்ந்திருக்க... மரத்தின் மீதிருந்த குரங்கு ஒன்று, இலையைப் பறித்து சிவ-பார்வதி மீது போட்டது. 'என்ன இது?' என்று அண்ணாந்து பார்த்த பார்வதிதேவிக்கு, குரங்கின் சேட்டையைக் கண்டு பொறுக்கமுடியவில்லை. ஆனால், அந்தக் குரங்கு எது குறித்தும் கவலைப்படாமல், இலையைப் பறிப்பதும் இறைவனின்மீது போடுவதுமாகவே இருந்தது.
'குரங்கு கையில் கிடைத்த பூமாலை' எனும் பழமொழி சரிதான்!' - பார்வதிதேவி இப்படி நினைத்தாலும், ஈசன் அந்தக் குரங்கின் செய்கையில் மகிழ்ந்தார். காரணம், அந்த இலை சிவனாருக்கு மிகவும் பிடித்த வில்வம் அல்லவா?! அந்தக் குரங்கை ஆசீர்வதித்து, ''பூலோகத்தில் மாபெரும் சக்கரவர்த்தியாகப் பிறப்பாய்'' என்று அருளினார். இதில் நெகிழ்ந்துபோன குரங்கு, ''விளையாட்டாகச் செய்த காரியத்துக்கு வரமா? அப்படியெனில், எனக்கு இன்னொரு வரமும் வேண்டும். தங்களை தரிசித்தது எனது இந்தக் குரங்கு முகம்தானே! எனவே, இந்த நினைவு அகலாதிருக்க, மனிதப் பிறவியிலும் எனக்கு இதே குரங்கு முகத்தைக் கொடுங்கள், ஸ்வாமி!'' என்று வேண்டியது. 'அப்படியே ஆகட்டும்' என வாழ்த்தி ஆசீர்வதித்தார் சிவபெருமான். அதன்படி பூலோகத்தில், மகா சக்கரவர்த்தியாகப் பிறப்பெடுத்து, வசிஷ்டரிடம் ஞான உபதேசமும் பெற்றவன்தான் முசுகுந்த சக்கரவர்த்தி.
இந்த முசுகுந்த சக்கரவர்த்தியிடம்தான், ''உனக்கு என்ன வேண்டும்?'' என்று இந்திரன் கேட்க... அவன் சொல்ல... ஆடிப்போனான் இந்திரன். 'என்னடா இது, வம்பாப் போச்சு?' என்று புலம்பினான்.
''எதைக் கேட்டாலும் தந்துவிடுவேன். தியாகேசரை அல்லவா கேட்கிறான்! வலம் எனும் அசுரனை அழிப்பதற்குப் பெரிதும் உதவினான்தான்; ஆனால், அதற்காகத் தியாகேசரைக் கேட்டால் தந்துவிடமுடியுமா? இந்தத் தியாகேசர்... எங்கள் இனிய சிவனார் சாதாரணமானவரா என்ன? இந்தத் தியாகேசரை 'இந்தா... நீ வைத்துக் கொள்; தினமும் பூஜை செய்' என்று வழங்கியவரும் சாமானியர் இல்லையே?!'' - ஆத்திரமும் கோபமும் ஒருசேரத் தாக்கியது இந்திரனை.
'மகாவிஷ்ணு பிள்ளை வரம் வேண்டிக் கடும் தவம் இருந்தபோது, அவரை மகிழ்விக்க எண்ணி, சிவனாரும் பார்வதிதேவியும் தங்கள் மைந்தன் முருகப்பெருமா னுடன் அழகு ததும்பக் காட்சி தந்து அருளியதை, அப்படியே மனதுள் பதிந்துகொண்டார் மகாவிஷ்ணு. அந்தக் காட்சியை நினைக்க நினைக்க பூரித்துப் போனது அவர் மனம்.
இப்படி பூரிப்பைத் தந்த திருவுருவத்தை, தியா கேசரின் அழகு மேனியைத்தான், 'தேவர்குலம் தழைக்க, நீயே வைத்துக் கொள்; அனுதினமும் பூஜை செய்' என்று இந்திரனிடம் கொடுத்தார் திருமால். அதைத்தான் முசுகுந்தன் கேட்கிறான். எப்படிக் கொடுக்க முடியும்? - இந்திரனின் மனம், சூழ்ச்சி செய் யத் தயாரானது.
''நாளைக் காலை வா... பார்க்கலாம்'' என்று சொல்லி அனுப்பினான்.
திருமால் கொடுத்த தியாகேசரைப் போலவே அச்சு அசலாக ஆறு திருவுருவங்களைச் செய்தான் இந்திரன். இப்போது அவனிடம் ஏழு தியாகேசர்கள் இருந்தனர். முசுகுந்தன் வந்ததும், 'எங்கே... இந்த ஏழு தியாகேசர்களில், தினமும் நான் வழிபட்ட தியாகேச ரைச் சரியாகச் சுட்டிக்காட்டு, பார்க்கலாம்! அப்படி நீ சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், அவரை உனக் குத் தருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சொல்லிவிட வேண்டியது; முசுகுந்தனாவது... நான் வழிபட்ட தியாகேசரைக் கண்டுபிடிப்பதாவது!' என்பதுதான் இந்திர னின் திட்டம்.
விடிந்தது. இந்திர சபை கூடியது. முசுகுந் தனின் முன்னே ஏழு தியாகேசர்களின் திருமேனியையும் வைக்கச் சொன்னான் இந்திரன். ''முசுகுந்தா! திருமால் எனக்குத் தந்த, அனுதினமும் நான் பூஜித்த தியாகேசர் யார் என்று உன்னால் முடிந்தால் சரியாகக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்!'' என்று சவால் விட்டான்.
முசுகுந்த சக்கரவர்த்தி கண்களை மூடி னான்; நெஞ்சில் கைவைத்துக் கொண்டான்; தென்னாடுடைய சிவபெருமானை மனம் குவித்து வேண்டினான்; உள்ளே ஜோதி ஒன்று சுடர் விட்டுப் பிரகாசித்தது. அந்தச் சுடர், இடதும் வலதுமாக, மேலும் கீழுமாக அசைந்தது. அந்த அசைவில் சிவபெருமானின், தியாகேசரின், நடராஜப் பெருமானின் திரு நடனம் நிகழ... மனதை உற்றுக் கவனித்தான். அங்கே... தியாகேசரின் திருமேனியை தெள்ளத்தெளிவுறக் கண்டான்; உடல் சிலிர்த்தான்; 'திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்...' என உரக்கச் சொல்லிக் கொண்டே கண்களைத் திறந்தான். எதிரில்... ஏழு தியாகேசர்களும் இருந்தனர். மெள்ள அருகில் சென்றவன், சந்தேகமோ தயக்கமோ இன்றி, மகாவிஷ்ணு இந்திரனுக்கு அளித்த அந்தக் குறிப்பிட்ட தியாகேசரின் திருவுருவ விக்கிரகத்தைச் சரியாக எடுத்தான்; கண்களில் ஒற்றிக் கொண்டான்; சிரசில் வைத்துக் கொண்டான்.
அதிர்ந்து போனான் இந்திரன். அதே நேரம், இப்போது அவனுக்கு முசுகுந்தன்மீது எள்ளளவும் கோபம் இல்லை; அவனையும் அவனது இறைபக்தி யையும் கண்டு வியந்தான். ''தியாகேசரைத் தரு கிறீர்களா? இந்தப் பிறவிக்கு எனக்கு இதுபோதும்!'' என்று முசுகுந்தன் கேட்க... அப்படியே அவனை ஆரத்தழுவிக்கொண்டான் இந்திரன். ''மிகச் சிறந்த சிவபக்தன் நீ! இப்பேர்ப்பட்ட சிவனடியாரிடம் தியாகேசர் இருப்பதுதான் சரி. இதை நீயே வைத் துக்கொள். அது மட்டுமல்ல, மற்ற ஆறு தியாகேசர் களையும்கூட நீயே வைத்து வழிபடு'' என்று அனைத்து தியாகேசத் திருவுருவங்களையும் அவனிடம் வழங்கினான் இந்திரன்.
மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் ஏழு தியா கேசர் திருவுருவங்களையும் பெற்றுக்கொண்ட முசுகுந்த சக்கரவர்த்தி, ஆரூருக்கு வந்தான். ஏழு தியாகேசர்களையும் ஒருங்கே வைத்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டான். திருமால் நெஞ்சில் வைத்திருந்து, இந்திரனிடம் அளித்திருந்த அந்த தியாகேச மூர்த்தத்தை ஆரூரில்... திருவாரூர் தலத்தில் பிரதிஷ்டை செய்தான்.
அடுத்து... ஆறு மூர்த்தங்களையும் ஆறு தலங் களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இந்த ஏழு இடங்களிலும் ஆடல்வல்லான், ஒவ்வொருவித திருநடனத்தை ஆடிக்காட்டினான்; களிப்பூட்டி னான். இந்த ஏழு இடங்களே 'சப்த விடங்கத் தலங் கள்' எனப் போற்றப்படுகின்றன (டங்கம் என்றால் உளி; விடங்கம் என்றால் உளி செதுக்காத, உளி படாத மூர்த்தம் என்று பொருள்).
தமிழகத்தில், திருவாரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏழு தலங்கள், சப்தவிடங்க தலங்களாக அமைந்துள்ளன. இந்த ஏழு தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசிப்பது பெரும் பாக்கியம்; பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்!
திருவாரூரில் வீதி விடங்கர்; திருக் கோளிலி(திருக்குவளை)யில் அவனி விடங்கர்; திருநள்ளாறில் நக விடங்கர்; திருநாகைக்கோரணத்தில் (நாகப்பட்டினம்) சுந்தர விடங்கர்; திருக்காறாயிலில் (திருக் காரவாசல்) ஆதி விடங்கர்; திருவாய்மூரில் நீல விடங்கர் மற்றும் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) புவனி விடங்கர் என அருள்பாலிக்கிறார் சிவபெருமான்.
வீதி விடங்கர்
திருவாரூரில் உள்ளது ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி திருக்கோயில். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகமலாம்பிகை. கோயிலும் அதன் பிரமாண்டமும் கொள்ளை அழகு. கோயிலின் எதிரேயுள்ள கமலாலயத் திருக்குளத்தைப் பார்க்கும்போதே நம் துன்பமெல்லாம் பறந்தோடும்.
இந்தத் தலத்தில், அஜபா நடனம் கொண்டு, வீதி விடங்கராகக் காட்சி தருகிறார் சிவபெருமான். ஊருக் குள்ளேயே அமைந்துள்ளது திருத்தலம். சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை முதலான தமிழகத்தின் முக்கிய ஊர்களில் இருந்து நேரடி பஸ் வசதி உண்டு. திருவாரூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உண்டு. அற்புதமான ஆலயம்!
ஆதி விடங்கர்
திருவாரூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்காறாயில் எனப்படும் திருக்கார வாசல். இங்கே... அழகிய ஆலயத்தில் குடிகொண்டு பக் தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீகண்ணாயிர நாத ஸ்வாமி. அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகயிலாசநாயகி. கருங்கல்லால் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட அருமை யான கோயில். இங்கே... ஆதிவிடங்கராக, குக்குட நடன நாயகனாக காட்சி தருகிறார் தியாகேசர் (குக்குடம் என்றால் சேவலின் நடையையத்த நடனம் என்று பொருள்). திருவாரூரில் இருந்து பஸ் வசதி உண்டு.
அவனி விடங்கர்
திருக்காரவாசலில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கோளிலி எனப்படும் திருக்குவளை திருத்தலம். பிரம்மன் வழிபட்டு அருள்பெற்ற அருமை யான தலம்; ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். வெண்மணல் மூர்த்தமாகக் காட்சிதரும் இவருக்குக் ஸ்ரீகோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர் என்றும் பெயர் உண்டு. அம்பாளின் திருநாமம் ஸ்ரீவண்டார் பூங்குழலி.
இங்குதான், அவனி விடங்கராகக் காட்சி தந்து, உலக மக்களுக்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் சிவனார். இங்கேயுள்ள திருநடனம் - பிரமர நடனம் என்பர். பிரமரம் என்றால் வண்டு; அதாவது வண்டு பறப்பது போலான நடனமாம் இது! திருவாரூரில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ள திருக் குவளைக்கு டவுன்பஸ் வசதி நிறையவே உண்டு.
நீல விடங்கர்
திருக்குவளையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் திருவாய்மூர். இங்கே... ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீவாய்மூர்நாதர்; ஸ்ரீவேதாரண் யேஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு. அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபாலினும் நன்மொழியாள். கோயிலுக்கு எதிரேயுள்ளது பாபமேக பிரசண்ட தீர்த்தம். பிரம்மன், தேவர்கள் முதலானோர் இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை தரிசித்து பாவங்கள் நீங்கப்பெற்றதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.
இன்னொரு விசேஷம்... இந்தத் தலத்தில் சூரிய பகவான் பெயரால் சூரிய தீர்த்தமும், இந்திரன் நீராடி வழிபட்டதால் இந்திர தீர்த்தமும் உண்டு. இங்கே... நீல விடங்கராக தியாகேசர் பெருமான் எழுந்தருளியுள்ளார். தண்ணீரில் மிதக்கும் தாமரை மலர் போல், மெள்ள ஆடுகின்ற நடனம்கொண்டு திகழும் தலம் என்பதால், கமல நடன ஸ்தலமாகப் போற்றப்படுகிறது.
புவனி விடங்கர்
திருவாய்மூரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேதாரண்யம். அருமையான, புராண - வரலாற்றுச் சிறப்புமிக்க அழகு ததும்பும் ஆலயம். வேதங்கள் சிவ பூஜை செய்த தலம்; ஈசனின் பேரரு ளால் அவை இங்கே செடி-கொடி களாக உறைந்திருப்பதால், வேதா ரண்யம் என்றானதாம்! இறைவனின் திருநாமம் - ஸ்ரீவேதாரண்யேஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீயாழைப் பழித்த மொழியம்மை.
இங்கே... புவனி விடங்கராக, ஹம்ச பாத நடனத்தில் அதாவது அன்னப் பறவையின் நடையையத்தபடி காட்சி தருகிறார் தியாகேசர். மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே இவருக்கும் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய ஊர்களில் இருந்து வேதாரண்யத்துக்கு நேரடி பஸ் வசதி உண்டு.
சுந்தர விடங்கர்
திருவாரூரில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவிலும் வேதாரண்யத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது நாகப்பட்டினம். திருநாகைக்காரோணம் எனப் புராணங்களால் புகழப்படும் இந்தத் தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகாயாரோகணர் திருக்கோயில். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீநீலாயதாட்சி.
இந்த ஆலயத்தில், சுந்தர விடங்கராக, (வீசி நடனத்தில்) அருள்பாலிக்கிறார் ஸ்ரீதியாகேசபெருமான். அற்புதமான இந்த ஆலயம் ஊருக்கு நடுவிலேயே அமைந்துள்ளது. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் நாகப்பட்டினத்துக்கு நேரடி பஸ் வசதி உண்டு; நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி மற்றும் ஆட்டோ வசதியும் உண்டு.
நக விடங்கர்
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர ஸ்வாமி கோயில். சனி தோஷங்கள் நீங்குவதற்காக பிரார்த்தனை செய்யும் ஒப்பற்ற அதே திருத்தலம்தான்! அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபோகமார்த்த பூமுலையாள். இந்தத் தலத்தில் நக விடங்கராக, உன்மத்த நடனத்தில் காட்சி தருகிறார் தியாகேசர். அருமையான தலம்; பாவங்களையெல்லாம் போக்கும் கோயில். நள தீர்த்தத்தில் நீராடி, இறைவனைத் தரிசித்து, நம் பாவங்களைப் போக்கிக் கொள்வோம்; சனி தோஷங்களில் இருந்து விலகி, சந்தோஷமாக வாழ்வோம்!
இரண்டு நாள் ஒதுக்கி, திருவாரூரில் இருந்து ஆற அமர அப்படியே வந்தால், சப்த விடங்கர் தலங்களை கண்ணார தரிசிக்கலாம்; மனதார மகிழலாம்!
சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறுகாரார் மறைக்காடு காறாயில் - பேரானஒத்த திருவாய்மூர் உகந்திருக் கோளிலிசத்த விடங்கத் தலம்!

No comments:

Post a Comment