அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் பரமேஸ்வரருக்கும் இமவானின் மகள் பார்வதிதேவிக்கும் கல்யாணம். திருக்கயிலாயமே திமிலோகப்பட்டது.
ஆம்! முப்பத்து முக்கோடி தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் முனிவர்கள் உட்பட அனைவரும் அம்மையப்ப ரின் திருக்கல்யாண வைபவத்தைக் காண அங்கு கூடி விட்டனர்.
'ஆஹா, என்னவொரு பாக்கியம் செய்திருந்தால்... பரமன், பார்வதியாளின் கழுத்தில் மங்கலநாண் சூடும் காட்சியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கும்?!'
- அகம் மகிழ... முகம் மலர... அந்த திவ்விய தரிசனத் துக்காகக் காத்திருந்தவர்கள், மெள்ள ஓர் அதிர்வை உணர்ந்தார்கள்!
'என்ன இது... ஒருவேளை நமது பிரமையாக இருக்குமோ!' என்று அவர்கள் அனுமானிப்பதற்குள் அதிர்வும் நடுக்கமும் அதிகமானது.
ஆம்! அகில உலகத்தவரும் ஒரே இடத்தில்... வட திசையில் கூடியதால் திருக்கயிலாயம் படிப்படியாக தாழ ஆரம்பித்தது. எனவேதான் அதிர்வும் நடுக்கமும்!
'என்ன இது... வட திசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தால் உலகின் சமநிலை பாதிக்கப்படுமே!' கணப் பொழுது சிந்தித்த பரமனாரின் மனதில் சட்டென்று ஒரு யோசனை!
''யாரங்கே... அகத்தியரை வரச்சொல்லுங்கள்!'' என்று கட்டளையிட்டார் பரமன்.
அகத்தியர் வந்து சேர்ந்தார்.
''சம்போ மகாதேவா!''- கரம் குவித்து, சிரம் தாழ்த்தி தம்மை வணங்கி நிற்கும் குறுமுனியை புன்முறுவலுடன் ஏறிட்ட பரமேஸ்வரன் பேசத் தொடங்கினார்.
''அகத்தியரே... நீர் உடனடியாக தென்பொதிகைக்குச் செல்ல வேண்டும். பூமியைச் சமப்படுத்த உம்மால்தான் முடியும்!''
பணிவுடன் தலையசைத்த அகத்தியர் முகத்தில், சோகம் இழையோடுவதைக் கவனித்தார் பரமன்.
''என்ன அகத்தியரே... எமது கட்டளையில் உமக்கு விருப்பம் இல்லையோ?!''
''சிவ சிவா! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தங்களின் திருக்கல்யாண வைபவத்தைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்காதே என்ற வருத்தம்... அவ்வளவுதான்!''
அடியவருக்கும் அடியவர் அல்லவா அந்த ஆண்டவன்! அகத்தியரின் ஏக்கத்தை உணராமல் இருப்பாரா? திருவாய் மலர்ந்தார்
''வருந்தாதே அகத்தியா. தென் பொதிகையை நீ அடைந்ததும், தம்பதி சமேதராக திருமணக் கோலத்து டன் உமக்குத் திருக்காட்சி தருவோம். மகிழ்வோடு சென்று வா!''
சிவம் அருளியதைக் கேட்டு சிந்தை குளிர்ந்தார் அகத்தியர். அங்கிருந்து புறப்பட்டார்.
விரைவில் தென்பொதிகையை அடைந்தார். இமைப் பொழுதும் மறவாமல், சிவ சிந்தனையில் லயித்திருப்பவருக்கு, திருக்கயிலை வேறு; தென்பொதிகை வேறா? அகத்தியருக்கு, தென்பொதிகையும் திருக்கயிலையாகவே பட்டது. அதை மெய்ப்பிக்கும் விதம், அம்மை- அப்பன் இருவரும் அகத்தியருக்குத் திருமணக் கோலத்தில் திருக்காட்சி தந்தனர்.
இப்படி, அகத்தியருக்குத் திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சியளித்தது, சித்திரை மாதம் முதல் நாள். இதையே சித்திரை விஷூ என்கிறோம். 'விஷூ' என்பதற்கு காட்சி என்று பொருள். சித்திரை மாதம் என்பது, அகத்தியச் சித்தரின் பெயரால் உண்டான மாதம். சித்தருக்குக் காட்சி தந்த நாள் என்பதே 'சித்திரை' என்று மருவியதாகச் சொல்வர்.
அகத்திய முனிவர் திருமணக் காட்சி பெற்ற தென் பொதிகை மலை, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத் தில் உள்ளது. இங்குள்ள உலகாம்பிகை உடனுறை பாபநாசநாதர் திருக்கோயில் பிரசித்திப் பெற்றது.
இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளன்று ஸ்வாமியும் அம்பாளும் திருமணக் கோலத்தில் எழுந்தருளும் வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள இன்னம்பூர் திருத்தலமும் (கும்பகோணம்- திருப்புறம்பயம் பேருந்து தடத்தில்) அகத்திய முனிவர் தொடர்புடையதே. இந்தத் தலத்தில் அகத்தியருக்கு, தமிழ் இலக்கணத்தை உபதேசித்து, எழுதச் செய்தார் சிவபெருமான். எனவே, இங்குள்ள இறைவனுக்கு எழுத்தறிநாதர் மற்றும் அட்சரபுரீஸ்வரர் என்ற திருநாமங்கள் வழங்கப் படுகின்றன. அம்பாளின் திருநாமம் சுகந்த குந்தளாம்பிகை.
|
Friday, 11 August 2017
தென்பொதிகையில் கிடைத்த சித்திரை தரிசனம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment