தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் 'கயிலாய மலை'க்குச் சென்று, அங்கு உறையும் பார்வதி- பரமேஸ்வரரை தரிசித்துத் திரும்ப வேண்டும் என்பது சைவர்களது பெரும் கனவு; லட்சியம்; விருப்பம். எத்தனையோ ஆலயங்களில் அந்த ஆதி சிவ மூர்த்தி பிரதிஷ்டை ஆகி இருந்தாலும், அவனே விருப்பப்பட்டு வந்து குடி கொண்டிருந்தாலும், என்றென்றும் அவன் அருளாட்சி நடத்தி வரும் நிரந்தர இருப்பிடமாக புராணங்கள் குறிப்பிடுவது கயிலாய மலையைத்தான். இந்தியாவின் வடகோடியில் சீன- திபெத் எல்லை அருகே பனி படர்ந்த மலையாக இது காணப்படுகிறது.
பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே புண்ணிய பெருமக்கள் எத்தனையோ பேர் கயிலாயம் சென்று, சிவ தரிசனம் பெற்றுத் திரும்பி இருக்கிறார்கள். இத்தனைக்கும், அன்றைக்குக் கயிலாய யாத்திரை செல்வதற்கு முறையான சாலை வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லை. காடு- மலைகளை கடந்தும், பல துஷ்ட மிருகங்களின் அச்சுறுத்தலில் இருந்து தப்பியும், கயிலைக்குச் சென்று திரும்புவது என்பது ஆபத்து மிக்க பயணமாகக் கருதப்பட்டது.
இன்றைய நாளில் அத்தனை சிரமங்கள் இல்லை. என்றாலும், 'கயிலாய யாத்திரை' என்பது எளிதானது அல்ல. அதற்குப் பொருள் வளமும் உடல் பலமும் கால அவகாசமும் தேவை. இந்த மூன்றும் நிறைவாக வாய்த்தாலும், கயிலைவாசனின் அருளாசியும் அழைப்பும் இருந்தால் மட்டுமே அவனது உறைவிடம் வரை பயணப்பட்டு, அந்த ஆதிமூர்த்தியின் அற்புத தரிசனத்தை கண்டு ஆனந்தப்பட முடியும்.
கயிலாயமலை சென்று அவனைக் கண்ணாரக் கண்டு தரிசிக்க முடியாத அன்பர்கள் என்ன செய்வார்கள்?
கவலையே வேண்டாம். அவர் களுக்கும் சிரமமே இல்லாத வகையில் கயிலாயநாதரின் தரிசனம் காத்திருக்கிறது! எப்படி? 'தங்கள் ஊரில் அமைந்துள்ள ஆலயங்களுக்குச் சென்று, அங்குள்ள இறைவனின் திருமேனியைக் கண்டு தரிசிக்க முடிய வில்லையே' என்று ஏங்குகிற முதியோர்கள் மற்றும் உடல்நலக் குறைவுள்ளோரின் இல்லத்தையே தேடி 'வீதி உலா' என்ற பெயரில் உற்சவர் விக்கிரகங்கள் விமரிசையோடு புறப்பட்டு வருவதில்லையா?
அத்தகைய பக்தர்களுக்கு அவர்களது வீட்டு வாசலிலேயே மேள- தாளம் முழங்க பஞ்ச லோகத் திருமேனிகள் தரிசனம் தருவதில்லையா? அதுபோல்தான் கயிலாசநாதரும்!
கயிலைக்கு வந்து தன்னை நேரில் தரிசிக்க இயலாத பக்தர்களை மனதில் கொண்டு, 'கயிலாசநாதர்' என்கிற திருநாமத்தோடு பல ஆலயங்களில் இறைவன், லிங்கத் திருமேனியனாக வீற்றிருந்து அருளாசி வழங்கி வருகிறார். இந்தத் திருத்தலங்களில் குடி கொண்டுள்ள ஈசனை, கயிலைவாசனாகவே கருத்தில் கொண்டு அவன் பாதம் பணிந்து வணங்கினால், கயிலையில் தரிசித்தால் என்ன பேறு கிடைக்குமோ, அதே பாக்கியம் கிடைக்கும். பல ஊர்களிலும் 'கயிலாசநாதர்' குடி கொண்ட கதை இதுதான்!
வழிபாட்டுக்கு முதல் தேவை- அமைதியான மனம். இத்தகைய மனம் வாய்க்கப் பெற்றால், எங்கிருந்து பிரார்த்தித்தாலும், என்ன காட்சி வேண்டுகிறோமோ, அந்தக் காட்சி நம் கண் முன்னே கிடைக்கும். இப்படித்தான், கயிலைக் காட்சியை... திருவையாறு ஐயாறப்பன் ஆலயத்திலேயே காணப் பெற்றார் அப்பர் பெருமான். தற்போதும், ஒவ்வொரு ஆடி அமாவாசை அன்றும் அப்பர் திருக்கயிலைக் காட்சி கண்ட தினம், அந்த ஆலயத்தில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 'கயிலாசநாதர்' என்கிற திருநாமத்துடன் ஈசன் அருள் பாலிக்கும் தலங்கள் தமிழகத்தில் அநேகம். அதிலும் 'நவ கயிலாயம்' என்று சிறப்பித்துக் கூறப்படும் ஒன்பது சிவத் தலங்கள், தாமிரபரணி நதிக்கரையில் அருளாட்சி புரிந்து வருகின்றன. இந்தக் கயிலாசநாதர் ஆலயங்கள், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த ஒன்பது திருத்தலங்களிலும் உள்ள ஈசனுக்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வந்தாலும், அந்த லிங்கத் திருமேனிகளுக்கு உள்ள பொதுவான பெயர்- 'கயிலாசநாதர்'.
தஞ்சை மாவட்டத்தில் நவக்கிரகத் தலங்கள் எந்த அளவுக்கு ஆன்மிக அன்பர்களால் தரிசிக்கப்பட்டு வருகிறதோ, அந்த அளவுக்கு நெல்லை மற்றும் தூத்துக் குடி மாவட்டங்களில், 'நவகயிலாயத் திருத்தலங்கள்' தரிசிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒன்பது தலங்களிலும் அகத்திய முனிவரின் விருப்பப்படி நவக்கிரகங்களும் ஆட்சி பெற்று அருளாட்சி நடத்தி வருகின்றன என்பது கூடுதல் சிறப்பு. நவகயிலாயத் திருத்தலங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கிரகாதிபதி ஆட்சி செலுத்தி வருகிறார்.
இதில், நெல்லை ஜங்ஷனில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் கீழத் திருவேங்கடநாதபுரம் என்கிற குன்னத்தூரில் அமைந்துள்ள கயிலாசநாதர் ஆலயம், ராகுவின் சிறப்புடன் விளங்குகிறது. 'நவ கயிலாய' வரிசையில், நான்காவது தலமாக திகழும் இந்தத் தலத்தை, 'தென் காளஹஸ்தி' என்று குறிப்பிடுகிறார்கள் ஆன்மிக அன்பர்கள். மற்ற நவகயிலாயத் திருத்தலங்கள் பாபநாசம்- சூரியன்; சேரன்மகாதேவி- சந்திரன்; கோடகநல்லூர்- செவ்வாய்; முறப்பநாடு- வியாழன் (கடந்த இதழில் இந்தக் கோயில் பற்றிய கட்டுரை வெளியாகி உள்ளது); வைகுண்டம்- சனி; தென்திருப்பேரை- புதன்; ராஜ பதி மணத்தி- கேது; சேர்ந்த பூமங்கலம்- சுக்கிரன். (ஆதி நவகயிலாயத் திருத்தலங்களாக பிரம்மதேசம், அரியநாயகிபுரம், சிந்துபூந்துறை, கீழநத்தம், முறப்பநாடு, வைகுண்டம், தென்திருப்பேரை, சேர்ந்தபூமங்கலம், கங்கை கொண்டான் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன புராணங்கள்).
நவகயிலாயத் திருத்தலமாகவும் ராகுவின் அம்சத்துடனும் விளங்குகிற குன்னத்தூர் கயிலாசநாதர் (கோதபரமேஸ்வரர்) திருத் தலத்தை, இந்த இதழ் 'ஆலயம் தேடுவோம்' பகுதிக்காக தரிசிக்க இருக் கிறோம். அதற்கு முன், நவகயிலாயத் திருத் தலங்கள் தாமிரபரணிக் கரையில் அமைந்த கதையைத் தெரிந்து கொள்வது அவசியம்.
இயற்கை தந்த அருங்கொடையான பொதிகை மலையில் ஆசிரமம் அமைத்து தவம் இருந்து வந்தார் மாபெரும் முனிவரான அகத்தியர். அவரிடம் பாடம் பயின்று, ஆய கலைகளை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் வந்து சேர்ந்த சீடர்களில் ஒருவர் ரோமசர். இவரே, அகத்தியரின் முதல் சீடர் என்றும் கூறுவர்.
ஒரு நாள் அகத்தியரிடம் வந்த ரோமசர், ''குருதேவா... தங்களது ஆசியோடு கயிலயங்கிரிவாசனான அந்த சிவபெருமானின் திருக் காட்சியை தரிசிக்க ஆசைப்படுகிறேன்!'' என்று பணிந்தார்.
அகத்தியர் அகம் மகிழ்ந்தார். ''ரோமசா... தாமிரபரணி நதி, கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் நீ நீராடினால் உனது விருப்பம் நிறைவேறும். கயிலா யப் பெருமானின் தரிசனம் வேண்டி, உனது பயணத்தைத் தாமிரபரணி நதிக்கரை ஓரமாக இப்போதே தொடங்கு. நீ புறப்படுகிற இதே நேரத்தில், இதோ இந்த தாமிரபரணி நதியில் ஒன்பது பூக்களை மிதக்க விடுகிறேன். இவை, நீ செல்ல வேண்டிய இடத்தை அடைய அடையாளம் காட்டும். ஒவ்வொரு பூவும் தாமிரபரணி நதிக் கரை ஓரம் எந்த இடத்தில் தங்குகிறதோ, அங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடு. அந்த இறைவன் 'கயிலாசநாதர்' என்றும், அங்கு அமையும் இறைவி, 'சிவகாமி அம்மை' என்றும் அழைக்கப் பெறுவர்!'' என்று சொல்லி, ஆற்றில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார். வண்ணப் பூக்களின் தண்ணீர்ப் பயணம் பொதிகை மலையில் ஆரம்பமானது.
மலர்கள் செல்லும் வழியைப் பின்பற்றி, நதிக் கரை ஓரமாக ரோமசரும் நடந்து செல்லத் தொடங் கினார். ஒவ்வொரு மலரும், எங்கு கரை ஒதுங்கு கிறதோ, அங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தார். இப்படி ஒன்பது மலர்களும் முறையே பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, வைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதிமணத்தி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய ஊர்களில் ஒதுங்கின. அகத்தியர் அருளியபடியே, இந்த தலங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள பெருமான், 'கயிலாசநாதர்' என்றும், அம்மை 'சிவகாமி அம்மை' என்று அழைக்கப்படுகிறார்கள். நவக் கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வணங்க வேண்டும் என்று ரோமசருக்கு அகத்தியர் உத்தரவிட்டிருந்ததால், இந்த நவகயிலாயத் திருத்தலங்கள், கிரகாதிபதிகளின் ஆதிக்கத்துடன் விளங்குகின்றன. பௌர்ணமி, அமாவாசை, மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் நவ கயிலாயத் தலங்களை தரிசிப்பது சிறப்பு. இந்தத் தலங்களில் உள்ள இறைவனை வழிபடுவதால் நவக்கிரகங்களை வழிபட்ட பலனும் தோஷ நிவர்த்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இனி, ராகுவின் ஆதிக்கம் பெற்றதும் கயிலாசநாதர் அருள்பாலிக்கும் தலமுமான கீழத் திருவேங்கடநாதபுரம் செல்வோமா?
இந்த ஊரில் மலைக்குன்று இருப்பதால் குன்றத்தூர் என வழங்கப்பட்டு, இப்போது 'குன்னத்தூர்' ஆனதாகச் சொல்கிறார்கள். அதுபோல் (ª)சங்காணி எனவும் இந்த ஊர் வழங்கப்படுகிறது. செம்மண் பொருந்திய நிலம் என்பதால் (ª)சங்காணி எனப் பட்டது. மன்னர்கள் காலத்தில், 'குன்னத்தூர் கீழ் வெம்பநாட்டு செங்காணியான நவணி நாராயண சதுர்வேதி மங்கலம்' என்று கல்வெட்டுகளில் இவ்வூர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
'ஓர் அடி' என்பதைக் குறிக்கும் அளவுகோல் அமைப்பு ஒன்று இன்றும் இந்த ஆலயத்தில் இருக்கிறது. அந்தக் காலத்தில், நில அளவு சம்பந்தமாக ஊர் மக்களிடையே ஏதாவது பிரச்னை கள் எழுந்தால், இந்த ஆலயத்தில் உள்ள அளவை ஆதாரமாகக் கொண்டு, இறைவனின் தீர்ப்புப்படி தங்களுக்குள் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இறைவனின் தீர்ப்புக்குப் பணிந்து நடந்துள்ளனர் அன்றைய மக்கள். ஆலய தரிசனம் செய்வோமா?
ராகுவின் ஆதிக்கத்தில் இந்த ஆலயம் இருப்பதால், இங்குள்ள ஒவ்வொரு மூலவர் விக்கிரகத்திலும் நாகர் உருவம் இருப்பதைக் காணலாம். இது, இந்த ஆலயத்துக்கென அமைந்த ஒரு விசேஷ அம்சம். பிரதோஷ நந்திதேவர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், கயிலாசநாதர் ஆகிய திருமேனிகளில் நாகர் வடிவம் காணப்படுகிறது. கயிலாசநாதர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். என்றாலும், அந்த முகப்பு புழக்கத்தில் இல்லை. அம்பாள் குடி கொண்ட தெற்கு வாயில் வழியாக உள்ளே நுழைகிறோம். முதலில், பிராகார வலம் வருவோம்.
பிராகாரம் சுற்றி வரும்போது ஈசன் சந்நிதியின் வெளிப்பக்கம் சுற்றுச் சுவரில் அழகான சிற்பங்களும் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. வீரபாண்டிய மன்னன் இந்த ஆலயத்துக்குப் பணம் கொடுத்துள்ள ஒரு குறிப்பும் கல்வெட்டில் இருக்கிறது.
கன்னி விநாயகர், ஆறுமுக நயினார் (வள்ளி- தேவசேனா விக்கிரகங்கள் இல்லை. திருடு போய் விட்டதாம்), சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய சந்நிதிகளை வணங்குகிறோம். இவர்களில் ஆறுமுக நயினார் விக்கிரகம், சிறப்பான ஒன்று. ஆறு முகங்கள் மற்றும் பன்னிரண்டு
கரங்களுடன் மயில் மீது அமர்ந்திருக்கும் இவரது மார்பில் நாக முத்திரை தென்படுகிறது. மயிலின் வாயில் பாம்பு. திருவாசியுடன் காணப்படும் இந்த பிரமாண்ட விக்கிரகத்தின் ஒவ்வொரு பகுதியையும் விரலால் சுண்டினால், வெவ்வேறு விதமான ஒலிகள் எழுகின்றன. ஒரே கல்லால் ஆன இந்த ஆறுமுக நயினார் விக்கிரகத்தை வடித்து, பிரதிஷ்டை செய்த பிறகே சந்நிதியை எழுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், ஆறுமுக நயினார் விக்கிரகத்தின் அளவை விட, சந்நிதியின் வாயில் சற்றே சிறியது.
புழக்கம் இல்லா மடப்பள்ளி. பலிபீடம் தாண்டி பிரதோஷ நந்திதேவர். நான்கு கால் மண்டபத்தில் ஒருக்களித்து அமர்ந்திருக்கிறார் இவர்; கழுத்தில் மணிகளுடன் அழகான வடிவம். இவரின் நெற்றியிலும் நாக முத்திரை!
சமீபத்திய இருபத்தைந்து வருட காலத்தில் தொடர்ச்சியாக பத்து வருடங்கள் ஆலயம் புதர் மண்டிப் போய் காணப்பட்டதாம். ஆலய வாசலில் நைவேத்தியத்தை வைத்து விட்டு, பூஜைகளை அங்கேயே செய்து விட்டு அர்ச்சகர் கிளம்பி விடுவாராம். உள்ளே செல்லவே முடியாதாம். இந்தக் காலகட்டத்தில், ஆலயத்தில் முறையான வழிபாட்டை மீண்டும் தொடக்கி வைக்கும் முயற்சியாக பிரதோஷ நிகழ்ச்சியை ஒரு நன்னாளில் ஆரம்பித்தனராம். அதன் பிறகு, மெள்ள பக்தர்கள் வர ஆரம்பித்தார்களாம்.
படிகள் ஏறியதும் முன்மண்டபப் பிரதேசத்தில் அன்னை சிவகாமி... சுமார் நான்கடி உயரத்தில், அழகு ததும்பும் வடிவம். கேரள பாணியிலான மர வேலைகளை நினைவுபடுத்தும் கல் மேற்கூரை, பிரமிக்க வைக்கிறது.
இதைக் கடந்ததும் கயிலாசநாதரின் மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை. விஸ்தாரமான மகா மண்டபம். இங்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, நெல்லையப்பர் ஆகியோர் காட்சி தருகிறார்கள். உள்ளே- கருவறையில் கயிலாசநாதர், லிங்கத் திருமேனியராக தரிசனம் தருகிறார். உமை தொழும் நாயனார், கோத பரமேஸ்வரர், தென் காளத்திநாதர் என்றெல்லாம் போற்றப்படுகிறார் இந்த ஈசன்.
ஒரு முறை, அப்பாவிப் பெண் ஒருத்தியைத் தவறாக எண்ணித் தண்டித்து விட்டாராம் இந்தப் பகுதியை ஆண்ட அரசன். தவறான தண்டனையால் அந்த அரசன் வெகுவாகவே அல்லல் பட்டானாம். அறியாமல் செய்த தவறுகளை மன்னிக்கும் பொருட்டு, இந்தக் கயிலாசநாதரை வணங்குதல் சிறப்பு. 'கோதாட்டுதல்' என்றால் பாவம் முதலிய குற்றங்களைப் போக்குதல் என்று பொருள். அறியாமல் செய்த பிழைகளைப் பொறுத்தருளும் ஈஸ்வரர் என்பதால், 'கோத பரமேஸ்வரர்' என இவர் அழைக்கப்படுவதாக ஒரு தகவல் சொல்கிறார்கள்.
ஒரு காலத்தில் இந்தக் கயிலாசநாதர் சந்நிதியை புற்று மூடி இருந்ததாம். வழிபாடு நடக்க வேண்டி, புற்றை எல்லாம் களைந்து சீரமைத்தார்கள். அந்த நாட்களில் பூஜை செய்ய வரும் அர்ச்சகர், இடக் கையில் இருக்கும் மணியை ஒலித்தபடியேதான் உள்ளே வருவாராம்.
காரணம் கயிலாசநாதர் மேல், ஒரு நல்ல பாம்பு சுற்றிக் கொண்டு காணப்படுமாம். அர்ச்சகரின் மணிச் சத்தம் கேட்ட மறுகணம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் கோமுகம் வழியாக வெளியேறி விடு மாம். வழிபாடு முடிந்து அர்ச்சகர் போன பின், சிவன் அல்லது அம்பாள் சந்நிதியில் மீண்டும் படுத்து ஓய்வெடுக்குமாம் இந்த நல்ல பாம்பு.
கயிலாசநாதர் லிங்கத் திருமேனிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது கூர்ந்து கவனித்தால், இவரின் பாணப் பகுதியில் இருக்கும் மெல்லிய- வளைந்த கோடு போன்ற நாகர் உருவ அமைப்பு, கிடுகிடுவென்று ஊர்ந்து செல்வது போல் தோன்றும் என்கிறார் அர்ச்சகர். ராகு காலத்தில் 18 வகையான திரவியங்களைக் கொண்டு கயிலாசநாதருக்கு இத்தகைய அபிஷேகம் செய்யப்படும்.
ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், குழந்தைச் செல்வம் வேண்டுவோர், திருமணத் தடை அகல வேண்டுவோர், கல்வி ஞானம் பெற விழைவோர் ஆகியோர் இங்கு வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது நலம் பயக்கும். தவிர, நாக தோஷம் இருப்பவர்கள், வயிற்றுக் கோளாறு மற்றும் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், தகுந்தவர்களின் அறிவுரைப்படி வெள்ளி நாகர் விக்கிரகத்தை வாங்கி வந்து இங்கே பூஜை செய்து அதை ஆலயத்துக்கே கொடுத்து விடுகிறார்கள். இந்தக் கயிலாசநாதரை திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட்டால், அவர்கள் தங்கள் வாழ்வில் வளம் பெறுவர்.
இந்தக் கோயிலுக்கு அருகே திருவேங்கடநாதன் திருக்கோயில், வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இரண்டு பெருமாள் ஆலயங்களும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
நவக்கிரகங்களின் முக்கியமானவரான ராகு பகவானின் அம்சத்துடன் விளங்கும் கயிலாச நாதர் திருக்கோயிலின் திருப்பணி வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. தோஷத்தை விலக்கி, வாழ்வில் சந்தோஷத்தைப் பெருக்கிக் கொள்ள கீழத் திருவேங்கடநாதபுரம் கயிலாசப் பெருமானை வணங்குவோம்!
தகவல் பலகை
தலம் கீழத் திருவேங்கடநாதபுரம் என்கிற குன்னத்தூர். சங்காணி எனவும் வழங்கப்படுகிறது.
மூலவர் கயிலாசநாதர் என்கிற கோதபரமேஸ்வரர்; அருள்மிகு சிவகாமசுந்தரி.
சிறப்பு தென்தமிழகத்தில் அமைந்துள்ள நவகயிலாய திருத்தலங்களில் ராகுவின் அம்சம் நிரம்பப் பெற்ற திருத்தலம். ராகுவால் ஏற்படுகிற அனைத்து தோஷங்களுக்கும் இங்குள்ள இறைவனை வழிபட்டால் நிவர்த்தி பெறலாம்.
அமைந்துள்ள இடம் நெல்லை டவுனில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு. நெல்லை ஜங்ஷனில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவு.
எப்படிச் செல்வது? நெல்லை டவுனில் (கணேஷ் தியேட்டர்) இருந்தும், ஜங்ஷனில் இருந்தும் அரசு, தனியார் மற்றும் மினி பேருந்துகள் உள்ளன.
ஆலயம் திறந்திருக்கும் நேரம் திங்கள் முதல் வெள்ளி- காலை 800 முதல் 1000 மணி வரை; மாலை 500 முதல் 800 மணி வரை. சனி, ஞாயிறுகளில்- காலை 800 முதல் 1100 மணி வரை; மாலை 430 முதல் 800 மணி வரை.
ஆலயத் தொடர்புக்கு
கே.எம். காசி விஸ்வநாதன்,ஸ்வாமி கோதபரமேஸ்வரர் பிரதோஷ கமிட்டி, 114, அம்மன் சந்நிதித் தெரு, திருநெல்வேலி- 627 006. போன் 0462- 232 2996 மொபைல் 94431 57065
|
|
No comments:
Post a Comment