சூரியனுக்கு ஒளி கொடுக்கும்படியாக, ஆதி ரத்தினமாக இருந்து இறைவன் அருளிய திருத்தலம்...
தனக்கே உரித்தான தேஜ சண்டேஸ்வரருடனும் தனது தேவி மார்களுடனும் சூரியன் காட்சி கொடுக்கும் திருத்தலம்...
ஆடு, யானை இரண்டும் சேர்ந்த வினோத உருவம் வழிபட்ட திருத்தலம்...
தட்சிணாமூர்த்தியின் சந்நிதிக்கு எதிரில் அமர்ந்து முறையான உபதேசம் பெற்று, 16 லட்சம் முறை பஞ்சாட்சரத்தை (நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம்) ஓதினால், இந்தப் பிறவியி லேயே இறைவனைக் காணலாம் எனும் நம்பிக்கை, இன்றும் இருந்து வரும் திருத்தலம்...
சுக்கிர தோஷ பரிகாரத்துக்கான திருத்தலம்...
மலர்கள் கொண்டு அர்ச்சித்தால், எல்லா விதமான வினைகளையும் தீர்த்து வைக்கும் இறை வன் எழுந்தருளியிருக்கும் திருத்தலம்...
ஆகம- சாஸ்திர மற்றும் பதிகச் சிறப்புகள் பெற்ற திருத்தலம்...
பாரிஜாத வனம், வன்னி வனம், குருந்த வனம், வில்வ வனம், ஆதிரத்தினேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுக்தீசம், விஜயேஸ் வரம், அஜகஜேஸ்வரம், சரவணப் பொய்கை என்று பற்பல பெயர்களால் அழைக்கப்பெறும் திருத்தலம்...
இத்தனை பெருமைகளும் கொண்ட திருத்தலம் எங்கே இருக்கிறது? புறப்படுங்கள், போகலாம்!
காரைக்குடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும், தேவகோட்டையில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும் உள்ள திருவாடானை திருத்தலம் போகலாம். காரைக்குடி, தேவகோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள் மூலமோ, வசதிக் கேற்ப தனி வாகனங்களிலோ செல்லலாம்.
ஊரின் மையப் பகுதியில், 130 அடி உயர ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது, இந்தப் பழைமையான ஆலயம். கிழக்கு ராஜ கோபுரம் உயரமானது மட்டுமல்ல, ஒன்பது நிலைகளுடன் வெகு அழகாக உள்ளது. கோபுரத்தை வணங்கி உள்ளே செல்கிறோம்.
பெரிய கோயில். விசாலமான முகப்பு மண்டபம். இது நூற்றுக்கால் மண்டபம். மண்டபத்தில் ஆங்காங்கே சில பக்தர்கள்... யாரோ சிலர் கேட்டுக் கொண்டிருக்கும் வினாக்களுக்கு மிகப் பொறுமை யாக விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் அர்ச் சகர்... பரிகாரம் செய்வதற்காகக் காத்திருக்கும் ஒரு குடும்பம்... மண்டபத்தின் வட கிழக்குப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருக்கோயில் அலுவலகம்... என்று தென்னகக் கோயி லின் அச்சு அசலான தோற்றத்துடன், விபூதி, மஞ்சள், கற்பூரம், பன்னீர் ஆகியவை கலந்த வாசனையும், ரம்மியமான கலகலப்புமாகத் திகழ் கிறது திருவாடானை திருக்கோயில்.
திருவாடானை. அழகான பெயராகத் தெரிந்தாலும், இதன் பொருள்? அதைத் தெரிந்து கொள்ள, காலச் சக்கரத்தில் சற்றே பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.
முற்காலத்தில், இந்தத் தலத்துக்குப் பாரி ஜாத வனம் என்றோ ஆதிரத்தினபுரி என்றோதாம் பெயர்கள்.
புஷ்பபத்திரை நதிக்கரையில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வருணனின் மகன் வாருணி என்பவன், முனிவரது தவத்துக்கு இடையூறு செய்தான். கோபக்காரரான துர்வாசர் சும்மா இருப் பாரா? 'இந்தா, சாபம் பிடி' என்றார்.
ஆட்டுத் தலையும் யானை உடலும் கொண்ட வினோத வடிவத்தைப் பெற்ற அவன், அளவற்ற பசியாலும் துன்பப்பட்டான். என்ன செய்வது? துர்வாசரிடமே மன்னிப்புக் கேட்டான்.
பன்னிரண்டு ஆண்டுகள் அப்படியே தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற துர்வாசர், அதன்பின், பாரிஜாதவனத்துக்குச் சென்று ஆதிரத்தினேஸ்வரரை வழிபட்டால், சாபம் நீங்கும் என்றார்.
வாருணி அவ்வாறே செய்ய, ஆடும் ஆனையு மாக வழிபட்டுச் சாபம் நீங்கிய இடம் என்பதால், ஆடானை ஆனது; இறைவனும் ஆடானைநாதர் (அல்லது அஜகஜேஸ்வரர்; அஜம்- ஆடு, கஜம் - யானை) ஆனார்.
நூற்றுக் கால் மண்டபம் என்பது, ராஜ கோபுரத்தில் இருந்து உள் வாயில் நோக்கிச் செல்லும் பாதையின் இரு மருங்கும் அமைந்துள்ளது எழில் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள்.
உள் வாயில் அருகே வந்து விடுகிறோம். நமக்கு இடப் புறம் உள்ள நூற்றுக்கால் மண்டபப் பகுதிக்கு (தெற்குப் பகுதி) அலங்கார மண்டபம் என்றே பெயர். உற்சவ காலங்களில், சுவாமியும் அம்பாளும் அலங்காரத்துடன் எழுந்தருளும் இடம். இந்த மண்டபத்தை ஒட்டிய சுவரில், ஸ்தல வரலாறை ஓவியச் சிற்பமாக அமைத்திருக்கிறார்கள்.
நூற்றுக் கால் மண்டபத்தின் வடக்குப் பகுதியில் யாக சாலை. உள் வாயிலின் ஒரு பக்கத்தில் விநாயகர்; இன்னொரு பக்கத்தில் சுப்ரமணியர். வழிபட்டு உள்ளே நுழைகிறோம். கொடிமரம். நந்தி. கொடிமரத்துக்கு முன்பாக, ஒரு பெரிய மணி மண்டபம் போன்ற இந்தப் பெரிய இடம், அப்படியே உள் பிராகாரத்துடன் சேர்கிறது. நந்தி இருப்பதால், இது நந்தி மண்டபம் எனப்படுகிறது.
இங்கிருந்து தொடங்கி, அப்படியே உள் பிராகார வலம் வரலாமா? கிழக்குச் சுற்றில், முதலில் அகத்திய விநாயகர். அடுத்து தேஜசண்டர். அருகிலேயே, தனது தேவியரான உஷா- பிரத்யுஷா சமேத சூரியன்.
சிவாலயங்களில், நிர்மால்ய அதிகாரியாகவும், கோயில் கணக்கு வழக்கு அதிகாரியாகவும் சண்டேஸ்வரர் எனும் சண்டர் இருப்பாரில்லையா? அதுபோல, சில குறிப்பிட்ட தெய்வங்களுக்கும் அவரவர்க்கான சண்டர்கள் உண்டு. 'சண்டர்' என்றால், கோபமான, பாசத்தோடு கூடிய உரிமை கொண்ட, உக்கிரமான... என்பன போன்ற பொருள்கள் உண்டு. அந்த தெய்வத்தின் மீது நிறைந்த பாசம் கொண்டவர் என்றும், தவறு செய்தாலோ தீங்கிழைத்தாலோ கோபப்படக்கூடியவர் என்றும் புரிந்து கொள்ளலாம்.
விநாயகருக்கானவர் கும்ப சண்டர், ஆத்மலிங்கத்துக்கு- த்வனி சண்டர் என்பதாக ஆகமக் குறிப்புகள் உள்ளன.
அந்த விதத்தில், சூரிய பகவா னுக்குரிய சண்டேஸ்வரர், தேஜஸ் (ஒளி) சண்டர் ஆவார். சூரியனுக்கு அருகில் தேஜசண்டர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை.
சூரியதேவன், இந்தத் தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து, தனது ஆற்றலைப் பெற்றான். அதனால், இங்கே சூரிய பரிகாரம் வெகு விசேஷம்.
கிருத யுகம். சூரியன், தனது ஒற்றைச் சக்கரத் தேரில் சஞ்சரித் துக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில், அவனது தேர்க்கால் (சக்கரம்) தடை-பட்டது; மேற்கொண்டு பயணிக்க முடிய--வில்லை. ஒன்றும் புரியாமல் சூரியன் விழிக்க, அசரீரியாக அவனுக்கு அருள் வழங்கினார் இறைவன்.
எந்த இடத்தில் தடங்கல் ஏற்பட்டதோ, அந்த இடத்-தில் இறங்கி, அங்கேயே லிங்க வழிபாடு நடத்தச் சொல்லி அசரீரி ஆணையிட்டது. சூரியனும் இறங்கினான். பாரிஜாத வனத்தின் (தேவலோக மரமான பாரிஜாதம், அந்தக் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் வனமாகப் பெருகிக் கிடந்தது) நடுவில், மணிமுத்தா நதியின் கிழக்குக் கரையில், நீல ரத்தினத்தால் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த சூரியன், அருகிலேயே தீர்த்தம் ஒன்றையும் ஏற்படுத்தி, சிவனாரை வழிபட்டான். இந்த வழிபாட்டால், சூரியனின் ஒளி மேம்பட்டது. அவனது சஞ்சாரம் தடை நீங்கப் பெற்றது. சூரியன், கோள்களின் மண்டலத்துக்கு அதிபதியாக்கப் பட்டான். நீல மணியால் ஆனவர் என்பதாலும், ஆதி காலத்தில் ஏற்பட்டவர் என்பதாலும், சுவாமியும் ஆதி ரத்தினேஸ்வரர் ஆனார்.
இந்த சூர்ய தீர்த்தம், அம்பாள் சந்நிதிக்கு எதிரில் உள்ளது. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி அன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டால், சகலவித தோஷங்களும் நிவர்த்தியாகும்.
பிராகாரத்தில் தொடர்ந்து வருண விநாயகர் மற்றும் மார்க்கண்டேய விநாயகர். அடுத்து தனீஸ்வரர். தெற்குச் சுற்றில் திரும்பினால், ஆலய பக்கவாட்டு வாயில். அடுத்து, அறுபத்துமூவரின் மூலவர்கள். தொடர்ந்து அறுபத்துமூவரது சித்திரங்கள். தெற்குச் சுற்றின் மூலையில், சப்த மாதர்.
மெள்ள மேற்குச் சுற்றில் திரும்புகிறோம். தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி. அடுத்த தாக, சோமாஸ்கந்தர். தொடர்ந்து ஆதிலிங்கம், அர்ச்சுனலிங்கம், கௌதம லிங்கம், வருணலிங்கம், கோமுக்தீஸ்வரர், ஜோதிர்லிங்கம், விஸ்வநாதர், விசாலாட்சி, தேவி- பூதேவி உடனாய வரத ராஜர் மற்றும் பிருகுலிங்கம் (இவருக்கு நந்தியும் உண்டு).
வடமேற்குப் பகுதியில் வள்ளி- தெய்வானை உடனாய சுப்ரமணியர். இவர் உயரமானவர்; வஜ்ரம், சக்தி, அபயம்- வரம் ஆகியவற்றுடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். இந்த முருகர் மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், 'ஆசார பக்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தமுறை பெருமாளே!' என்று அருளிச் செய்தார். வடமேற்கு மூலையில் மகாலட்சுமி சந்நிதி.
வடக்குச் சுற்றில் திரும்பினால், உற்சவ மூர்த்தங்கள். இந்தச் சுற்றின் கிழக்குப் பகுதியில் நடராஜ சபை. இந்த நடராஜர் வெகு சிறப்பா னவர். அவரும் சிவகாமியம்மையும் ஐம்பொன் திருமேனியர்.
நடராஜர் மட்டுமா ஆடுகிறார்? அவர் ஆட ஆட, பிரம்மா தாளமிட, விஷ்ணு மேளமிட, தும்புருவும் நாரதரும் தத்தமது கருவிகளை இசைக்க, வியாக்ரபாதரும் பதஞ்சலியும் வணங்கி நிற்க... ஆஹா, கண்கொள்ளா காட்சி! அடுத்து பைரவர். மீண்டும் கிழக்குச் சுற்றுக்குள் திரும்பினால், கார்த்திகாதேவி ஒருபுறமும், ரோகிணி ஒருபுறமுமாக சந்திரன். அடுத்து, தனிச் சந்நிதியில் சனி பகவான்.
திருவாடானை கோயில், செட்டி நாட்டுப் பகுதியில் உள்ளது. நகரத் தாரின் திருப்பணியைக் கண்டுள்ளது. நந்தி மண்டபத்தில் நின்று மூலவர் சந்நிதியைப் பார்த்தால், நகரத்தார் திருப்பணி அமைப்பின் சாயலை நன்கு உணர முடியும். நந்திக்கும் சந்நிதி முகப்புக்கும் இடையில், திருவாசி போன்ற பெரிய வளைவு; விளக்கேற்றுவதற்கு வசதியாக, அதில் நிறைய விளக்குகள்.
நந்தி மண்டபத்தைப் பார்த்துக் கொண்டே மூலவர் சந்நிதியை அடைகிறோம்.
கருவறை... முன்னே அர்த்த மண்டபம்... அதற்கும் முன்னே ஸ்நபனப் பகுதி. மெதுவாக உள்ளே பார்வையைச் செலுத்தினால், அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரரான ஆடானைநாதர். சதுரபீட ஆவுடையார் கொண்ட குட்டை பாணம். நீலக்கல் பாணத்தில் ஆவுடை சேர்க்கப்பட்டவர். இவர்மீது திருஞான சம்பந்தப் பெருமான் பதிகம் பாடி யுள்ளார்.
மாதோர் கூறுகந்தேற தேறியஆதியானுறை ஆடானைபோதினால் புனைந்து ஏத்துவார் தமைவாதியா வினை மாயுமேமங்கை கூறினன் மான்மறியுடைஅங்கையான் உறை ஆடானைதங்கையால் தொழுதேத்த வல்லவர்மங்குநோய் பிணியுமாமேசுண்ண நீறணி மார்பில் தோல் புனைஅண்ணலான் உறை ஆடானைவண்ண மாமலர் தூவிக் கைதொழஎண்ணுவார் இடர் ஏகுமே
இந்தப் பதிகத்துக்கு இரண்டு வகை சிறப்புகள். பாட்டுக்குப் பாட்டு... வினை தீரும், நோய் விலகும், துன்பம் மாயும் என்றெல்லாம் கூறுவதால், இது திருநீற்றுப் பதிகத்துக்கு நிகரானதாகக் கருதப்படுகிறது. இதனை ஓதினால், எத்தகைய நோயும் துன்பமும் சிக்கலும் தீரும்.
இன்னொரு சிறப்பு, அர்ச்சனையைப் பற்றிக் கூறப் பட்டுள்ள தகவல்கள்.
போதினால் புனைந்து ஏத்துதல் (போது- அரும்பு), தோடுமாமலர் தூவி, வண்ண மாமலர் தூவி, கையணி மலர், தேனணிம்மலர், நலங்கொள் மாமலர், கந்தமாமலர், தூய மா மலர் என்று பற்பல மலர்களைக் கொண்டு ஆடானைநாதருக்கு அர்ச்சனை செய்யும் முறைகள் பேசப்பட்டுள்ளன. ஆகவே, பலவித மலர்களைக் கொண்டு இந்தத் தலத்து இறைவனுக்கு பூஜை செய்தால், வினைகள் அகலும். வகை வகையான மலர்களைக் கொண்டு வந்து மக்கள் இவரை வழிபடுவதை இன்றும் காணலாம்.
மூலவரை வணங்கி, மீண்டும் உள் பிராகார வலம் வருகிறோம். கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். தட்சிணாமூர்த்தி சந்நிதி, மண்டபம் அமைக்கப்பட்டு நேர்த்தியாக இருக்கிறது. சனகாதி முனிவர்களும் இருக்கிறார்கள்.
சிவாகமங்கள், சிவபெருமானது முகங்களிலிருந்து உதித்தன என்பது ஐதீகம்.
இருபத்தெட்டு சிவாகமங்களில், காரண ஆகமமும், காமிக ஆகமும் மிக முக்கியமானவை. திருவாடானை தலத்து தட்சிணாமூர்த்தி, ஆகமங் களை அருள் உபதேசம் செய்து கொண்டிருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு.
வேத சாஸ்திர ஆகமக் கல்வி கற்கக் கூடியவர்கள், தட்சிணாமூர்த்தி திருமுன் அமர்ந்து உபதேசம் பெறு வதும், பரிவர்த்தனை பெறுவதும், ஜபம் செய்வதும், பஞ்சாட்சர மந்திரம் ஓதுவதும் இன்றும் நடைபெற்று வருகின்றன. இதை மெய்ப்பிப்பதாக, அருணகிரிநாதரும், 'ஞான ஆகமத்தை அருள் ஆடானை' என்று போற்றுகிறார்.
சற்று நில்லுங்கள். வழக்கமாகக் காண்பதுபோல, கோஷ்ட மாடங்களை மட்டும் பார்த்து விட்டு நகர்ந்து விடாதீர்கள். கோஷ்டப் பகுதியில், சற்றே உயரத்தில் உள்ள நாசித் துளைகளைப் (சிறிய மாடங்கள்) பாருங்கள்!
கோஷ்டப் பகுதியில் சற்றே உயரத்தில் உள்ள நாசித் துளைகளைப் பாருங்கள். ஒவ்வொரு துளையிலும் ஒரு விதமான சிவமூர்த்தம்; பிட் சாடனர், கஜசம்ஹாரர் என்று பலவிதமான மூர்த்தங்கள்; மொத்தம் சுமார் முப்பது விதமான சிவமூர்த்தங்களைக் காண முடிகிறது.
சண்டேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் வில்வம். இந்தத் தலத்தின் தலமரமும் வில்வமே! கிருத யுகத் தில் இந்தப் பகுதி பாரிஜாத வனமாக இருந்தது என்று ஏற்கெனவே கண்டோம் இல்லையா! அதே போல் திரேதா யுகத்தில் வன்னி வனமாகவும், துவாபர யுகத்தில் குருவிந்த வனமாகவும் திகழ்ந்த இது, இப்போது கலியுகத்தில் வில்வ வனமானது.
நந்தி மண்டபத்துக்குள் வந்து விடுகிறோம். தூண்களையும் சிற்ப வடிவங்களையும் பார்த் துக் கொண்டே சுற்றி வருகிறோம். காளிங்க நர்த் தனர், வேணுகோபாலன், பூதகணங்கள், நரசிம்மர், கோரக்க சித்தர் என்று பலவித சிற்பங்கள். நந்தி மண்டபத்தில், கொடிமரத்துக்கு முன்னே இருக்கும் மணியை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கிறார் அர்ச்சகர். கூர்மம், அதன்மீது ரிஷபம் போன்ற அமைப்பு. ஒவ்வொரு இடத்தில் மணியைத் தட்டினால், ஒவ்வொரு ஸ்வரம் கேட்பது போன்ற ஏற்பாடு. ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ எனும் ஸ்வர ஸ்தானங்களைக் குறிக்கும்விதமாக அந்தந்த இடத்தில் யானைகள்... ஒரு மணியிலேயே இத்தனை நுட்பமா!
திருவாடானை திருத்தலத்தில், பற்பல மகான்களும் முனிவர்களும் அரசர்களும் வழிபாடு செய்திருக்கிறார்கள். பிராகார உள்சுற்றிலேயே நாம் பார்த்த வருணலிங்கம், அர்ச்சுனலிங்கம், கௌதமலிங்கம், பிருகுலிங்கம் முதலானவை வருணன், அர்ச்சுனன், கௌதம ரிஷி, பிருகு ஆகியோர் வழிபட்டதைக் காட்டுகின்றன. நடுவில் கோமுத்தீஸ்வரர் இருக்கிறார். இவர் யார்? காமதேனு வழிபட்ட மூர்த்தம்.
ஒருமுறை, வசிஷ்டரது சாபத்தால், காமதேனு ஆடாக மாறியதாம்; சாபம் நீங்குவதற்காகத் திருவாடானைக்கு வந்து, தனது கால் குளம்புகளால் தரையைக் கீறி தீர்த்தம் ஏற்படுத்தி, அதில் நீராடி இறைவனை வழிபட்டதாம்; அந்த மூர்த்தமே கோமுத்தீஸ்வரர் (கோவான காமதேனு வழிபட்டது). குபேரன் வழிபட்ட மூர்த்தம், தனீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் (தன ஈஸ்வரர்), உள்பிராகாரத் தென் கிழக்கு மூலையில் உள்ளது.
இக்ஷ்வாகு குல மன்னர்களில் ஒருவரான மாந்தாதா இங்கு வழிபட்டதாகத் தல புராணம் கூறும். அறம் செறிந்த ஆட்சியாளரான மாந்தாதாவின் காலத்தில், ஒரே தண்ணீர்த் துறையில், புலியும் புள்ளிமானும் ஒன்றாகச் சேர்ந்து நீர் அருந்துமாம்; அந்த அளவுக்குப் பசியில்லாத செழுமையும், பகையில்லாத ஒற்றுமையும் நிலவியது. யுவனாஸ்வனின் மகனான மாந்தாதா, ராமருடைய முன்னோர்களில் ஒருவர். ராமபிரானும் திருவாடானை யில் வழிபட்டுள்ளார்.
நீடானை சூழு நிலமன்னர் வாழ்த்து திரு
வாடானை மேவு கருணாகரமே என்று ராமலிங்க வள்ளலார் சொன்னது நினைவு வர, அவ்வாறு பிரார்த்தித்தபடியே உள் வாயிலுக்கு வெளியில் வருகிறோம். உள்வாயிலுக்கு அருகில் யாகசாலை இருக்கிறது; இதைத் தாண்டியே அம்பாள் சந்நிதிக்குச் செல்ல வேண்டும்.
வாடானை மேவு கருணாகரமே என்று ராமலிங்க வள்ளலார் சொன்னது நினைவு வர, அவ்வாறு பிரார்த்தித்தபடியே உள் வாயிலுக்கு வெளியில் வருகிறோம். உள்வாயிலுக்கு அருகில் யாகசாலை இருக்கிறது; இதைத் தாண்டியே அம்பாள் சந்நிதிக்குச் செல்ல வேண்டும்.
சுவாமி சந்நிதிக்கு வடக்காக, கிழக்கு நோக்கியதாக, கிட்டத்தட்ட ஒரு தனிக் கோயிலாகவே விளங்குகிறது அம்பாள் சந்நிதி. முன்பக்கத்தில் சூரிய தீர்த்தம். வாயிலுக்கு நேர் எதிரில் கொடிமரம், நந்தி. ஒரு பக்கத்தில் தேர் மண்டபம்; இன்னொரு பக்கத் தில், சற்றே கிழக்காக நவக்கிரகம்.
அம்பாள் சந்நிதிக்கு உள்ளே நுழைகிறோம். உள்சுற்று. விசாலமாகவே இருக் கிறது. வலம் வருகிறோம். சந்நிதியின் பின்புறத்தில், 'ப' வடிவச் சுவர். கோஷ்டத்தை ஒட்டினாற் போலவும் வலம் வரலாம்; சுவருக்குப் பின்புறமாகவும் வலம் வரலாம். பிராகார வட கிழக்குப் பகுதியில் பள்ளியறை. சுவாமி சந்நிதி போன்றே இங்கும் விளக்குத் திருவாசி. அர்த்த மண்டபம் தாண்டி பார்வையைச் செலுத்தினால்... அப்பப்பா! அருள்மிகு சிநேகவல்லி என்னும் அருள்மிகு அன்பாயிரவல்லி. பத்ம பீடத்தின்மீது நின்ற திருக்கோலம்; சதுர் புஜவல்லியாக நான்கு திருக்கரங்கள் கொண்டவள்; சிரசின் நடுப்பகுதியில் பிறைசந்திரனைச் சூடிய சந்திரசேகரி; நெற்றியில் எழில்விழி கொண்ட முக்கண்ணி; ஒரு கையில் நீலோத்பல மொட்டு; ஒரு கையில் தாமரை மலர்; ஒரு கையில் அபய முத்திரை; ஒரு கையில் வர முத்திரை.
இந்துநிப வேதஹர பங்கஜ வர அபய கரோத்பல சதுஷ்கம், அங்க ஹிம பூஷண விசித்ர தர தேஹம், துங்க மகுடோத்ஜ்வலம் என்று மனோன்மணி அம்பாளைப் பற்றிய ஸ்லோகம் ஒன்று உண்டு. ஸ்லோக வர்ணனை போன்றே அம்பாள் சிநேகவல்லி காட்சி கொடுக் கிறாள். பராசக்தியின் நவசக்தி வடிவங்களில் ஒருத்தியான மனோன்மணி, ஆத்மாவின் அக விழியைத் திறந்து, உள்ளிருக்கும் சிவப் பேரொளியைக் காட்டித் தருகிறாள். மனதை எழுப்பித் தருகிறாள் (மன + உன்மனீ). வாமை, ஜ்யேஷ்டை, ரௌத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்ரதமனி, சர்வ பூத தமனி ஆகிய அஷ்டமாசக்திகளுக்கும் முன்னால் நிற்கும் மகாசக்தியே மனோன்மணி ஆவாள். 'ஏடு அங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி' என்று மனோன்மணி சக்தியைப் பாடுவார் திருமூலர். கையில் சுவடியை வைத்துக் கொண்டு, உயிர்களை நல்வழிப் படுத்துகிறாள் என்பது கணக்கு. ஆத்மாக்களான உயிர்களைப் பரமாத்மாவோடு இணைப்பதற்கான வழிசெய்பவள் மனோன்மணி என்பதாகவும் சித்தாந்தம் சொல்லும்.
அருள்மிகு சிநேகவல்லி, மனோன்மணி சக்தியின் அம்சங்கள் கொண்டவள். ஒரு கையில் கருநீல வண்ண நீலோத்பலம், மற்றொரு கையில் செந்நிறமான தாமரை என்று எதிரும் புதிருமான வற்றை ஏந்தியவளாக, ஜீவனையும் பரமனையும் இணைக்கிறாள். அது சரி? ஏன் சிநேகவல்லி என்னும் திருநாமம்?
வல்லி என்றால் கொடி; சிநேகத்தோடு, பரமனைக் கொடியாகத் தழுவி நிற்கிறாள் என்று அர்த்தம். பாகம் பிரியாதவள், அன்பும் பாசமும் நிறைந்தவளாகத் தழுவி இருக்கிறாள். அவள் அன்பாயிரவல்லி (காலப் போக்கில், அம்பாயிரவல்லி என்றும் ஆகிவிட்டது). ஆயிரம் என்பது ஒரு குறிப்பிட்ட எண்ணை இப்போது குறிப்பிட்டாலும், பழைய காலங்களில் 'எண்ணற்ற' என்ற பொருளைச் சுட்டுவதற்காகவே, ஆயிரம், ஸஹஸ்ரம் போன்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அன்பர்கள் யாவரிடத்திலும் அன்பு காட்டுபவள். அன்புக்கு உகந்து அன்பாகி நிற்பவள்.
அம்பிகையை மனதாரப் பணிந்து நிற்கிறோம். அம்பிகை கோஷ்டங்களில் சக்தி சொரூபங்கள். தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரி. அம்பாளுக்கு சாயங்காலங்களில் திரிசதி அர்ச்சனை நடை பெறும். அப்போது விநியோகம் ஆகும் பாயசமும் சுண்டலும் வெகு விசேஷமான பிரசாதங்கள். அம்பாளுக்குத் திரிசதி அர்ச்சனை செய்து பிரசாதம் விநியோகம் செய்வதாக நேர்ந்துகொண்டால், திருமணத் தடைகள் விலகும்; குழந்தைப் பேறு கிட்டும்.
அம்பாள் சந்நிதிக்கு வெளியில் வந்து நிற்கிறோம். எதிரில் சூரிய தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடினால், தோல் வியாதிகள் விலகும்.
திருவாடானை திருக்கோயிலுக்கு மொத்தம் ஏழு தீர்த்தங்கள். உடலின் ஆறு ஆதார சக்கரங்கள் (மூலாதாரம் முதல் ஆக்ஞை வரை) ஆகியவற்றுடன் சஹஸ்ராரமான ஆயிரம் தளத் தாமரையையும் சேர்த்து, இந்தத் தலத்தில் உள்ள ஏழு தீர்த்தங்களும் சுட்டுகின்றன. இவற்றில் தீர்த்தமாடுவது, இந்தப் பிறவியிலேயே வினைகள் தீரப் பெறுவதற்கும் இறைவனை அடைவதற்கும் சமானம்.
இங்குள்ள தீர்த்தங்களுள் முக்கியமானது சூரிய தீர்த்தம். மணிமுத்தா நதியும் ஒரு தீர்த்தம். அகத்திய தீர்த்தம், கோயிலுக்கு வெளியில், மூலவருக்குத் தென்திசையில் உள்ளது. மகா பாதகங்களையும் விலக்க வல்லது (ரத வீதிகளையும் சேர்த்து ஐந்து பிராகாரங்கள் கோலாகலமாக விளங்கிய காலங் களில், கோயிலுக்கு உள்ளே இருந்திருக்கும்). மார்க்கண்டேய முனிவரால் ஏற்படுத்தப்பட்ட மார்க்கண்டேய தீர்த்தம், கோயிலுக்குத் தென் கிழக்கில் சுமார் 1 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த இடத்தில், பர்ணசாலை அமைத்து லிங்கப் பிரதிஷ்டை செய்து மார்க்கண்டேயர் தவம் செய்தார்.
கோயிலுக்கு எதிரே, கிழக்குத் திக்கில் வருண தீர்த்தம். மகனது சாபம் தீருவதற்காகப் பிரார்த் தனை செய்ய வருணனும் இங்கு வந்தான். மகர மாதமான தை மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும், மற்றும் ஒவ்வொரு மாத அமாவாசைகளிலும் இங்கு நீராடினால், சிவனருள் முழுமையாகக் கிட்டும். வாருணி தீர்த்தம், மணிமுத்தா நதிக்கு மேற்குத் திக்கில் உள்ளது. மற்றொரு தீர்த்தம், காமதேனு தீர்த்தம். க்ஷீரகுண்டம் என்று அழைக்கப்பெறும் இது, கோயிலுக்கும் நதிக்கும் இடைப் பட்டு அமைந்துள்ளது. சரவணப் பொய்கை எனும் பெயரும் கொண்ட இதனில், சூரியன் மேஷத்தில் இருக்கும் நாட்களிலும், அமாவாசை நாட்களின் மதியப் பொழுதிலும் நீராடி வழிபட்டால், புத்திரப் பேறு ஸித்திக்கும்.
திருவாடானையில், சுக்கிர மற்றும் செவ்வாய் தோஷங்களுக்கான பரிகாரங்களும் பிரபலம். வாருணி தனது சாபத்துக்கான பரிகாரம் தேடி வந்தபோது, பிருகு முனிவரைக் கொண்டு சுக்கிர நாடியைக் கண்டு, பரிகாரத்தை உறுதி செய்து கொண்டதாகவும், சுக்கிரனுக்கே சாபம் கிடைத்த காலங்களில் இங்கே பரிகாரம் தேடியதாகவும் (சுக்கிரனை, பிருகுவின் மகனான பார்க்கவன் என்பதும் உண்டு), கர்ண பரம்பரைக் கதைகள் நிலவுகின்றன. சுக்கிர வாரங்களில் (வெள்ளிக்கிழமைகளில்), சுவாமி பூஜைக்கான உபசாரங்களுக்கு முன்னர், சுக்கிரனுக்கு அபிஷேகம், நைவேத்தியம், உபசாரம் எல்லாம் நடக்குமாம். சமீபத்தில் சில ஜோதிடர்கள், இவற்றுக்கான அறிவியல் தகவல்களை மெய்ப்பித் திருக்கிறார்கள்.
அம்பாள் சந்நிதியிலிருந்து வெளியில் வந்து, நூற்றுக்கால் மண்டபத்தை அடைகிறோம். அப்ப டியே கோயில் வெளிப் பிராகாரத்தை வலம் வரலாமா? நூற்றுக்கால் மண்டபத்தின் தெற்குப் பகுதியிலிருந்து தொடங்கி, சமீப காலத்தில் அமைக்கப்பட்டுள்ள தலவரலாற்றுச் சிற்ப ஓவியங்களை ரசித்துக் கொண்டே, தெற்குத் திருச்சுற்றை அடைகிறோம். நந்தவனம்; நிறைய மரங்கள். நடுவில் நீளமாக ஒரு மண்டபம். இதுதான் சபாபதி மண்டபம். நடராஜ சபைக்கு நேர் தெற்காக அமைந்த மண்டபம். ஆருத்ரா தரிசனத்தின்போது, கோயில் பக்கவாட்டு வாயில் திறக்கப்படும். உள்ளே நடராஜருக்கு நடைபெறும் பூஜைகளை, பக்தர்கள் இங்கு இருந்தபடி தரிசிக்கலாம். வார வழிபாட்டுக் கலை நிகழ்ச்சிகளும் இங்கேயே நடைபெறுகின்றன.
சபாபதி மண்டபத்தைக் கடந்து, வலத்தைத் தொடர்கிறோம். விசாலமான பிராகாரம். சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி விமானங்களும் பிற தேவதா விமானங்களும் கண்கொள்ளாக் காட்சியாக தெரிகின்றன. இரண்டு சந்நிதிகளையும் முழுவதுமாகச் சுற்றி வருகிறோம்.
நூற்றுக்கால் மண்டபப் பகுதியிலேயே, தெற்கு வடக்காக ஒரு பாதை இடையே செல்கிறது. இது பிரதோஷ வீதி. பிரதோஷ காலங்களில், மக்கள் கூடுமிடம். வெளிப் பிராகாரத்தில் நின்று கோபுரத்தைக் காணும்போது, அதன் பிரமாண்டம் புரிகிறது. ஒன்பது நிலைகளிலும் மாடங்களிலும் துளைகளிலும் அழகழகாய் உருவங்கள். கோபுரத்தின் தெற்குப் பகுதியில், ஒன்பது நிலைகளுக்கும் ஒன்பதுவித தட்சிணா மூர்த்திகள்; வடக்குப் பகுதியில், ஒன்பது வித பிரம்மாக்கள். ஆடானை வரலாறும் பொம்மை களால் காட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் மீதேறி மேற்கு திசை நோக்கிப் பார்த்தால், காளையார்கோவில் கோபுரம் தெரியுமாம் (சுமார் 30 கி.மீ தொலைவில் கானப்பேர் என் னும் காளையார்கோவில் தலம் உள்ளது).
திருவாடானையில் நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. பிரதோஷத்தன்று, கூடுதலாக பிரதோஷ பூஜை, ஏழாவது காலமாக நடைபெறும். இந்தக் கோயில், ராமநாதபுர சமஸ்தானக் கோயிலாகும். சமஸ்தான அரச குடும்பத்தினர், சிறப்பாகக் கோயிலைப் பேணு கின்றனர். அர்ச்சகர் முதல் பிற பணியாளர்கள் வரை, எல்லோருமே இன்முகம் காட்டிப் பேசுகின்றனர். மதியம் அன்னதானத்தின் போது உணவருந்திச் செல்லலாம் என்று மிகவும் வாத்சல்ய மாக பக்தர்களிடம் அர்ச்சகர் சொல்வதைக் காண முடிந்தது.
அர்ச்சகர், சில சுவாரஸ்யத் தகவல்களையும் கூறினார். திருவாடானையில் ராமர்கூட வழிபட்டிருக் கிறார் என்று பார்த்தோமில்லையா? ராமாயணத்துக் கும் இந்தப் பகுதிக்கும் நிறையவே தொடர்புகள் உண்டு (பக்கத்தில்தானே ராமேஸ்வரம்). ராவண னோடு சண்டை போட்டுக் குற்றுயிராகக் கிடந்த சடாயுவின் சிறகுகள் விழுந்த இடம், 'இறகுச்சேரி' ஆனதாம்; சீதையைத் தேடுவதற்காகப் புறப்பட்ட அனுமன், எங்கும் காணக் கிடைக்காமல் மார்க்கம் தெரியாது தவித்தபோது, அசரீரி வாக்கில், மார்க்க சகாயரை தரிசிக்கும்படி வந்ததாம். பின்னர், திரும்பி வந்த அனுமன், காத்துக் கொண்டிருந்த தன் நண்பர் களிடத்தில், 'கண்டேன் தேவியை' என்று சொல்லிக் கொண்டே தரை இறங்கிய இடம் 'கண்ட தேவி' ஆனதாம். அர்ச்சுனன் இங்குதான் சிவனை நோக்கிப் பிரார்த்தனை செய்து பாசுபத அஸ்திரம் பெற்றான். மார்க்கண்டேயர் ருத்திராட்ச பெருமையையும் விபூதி மகிமையையும் உபதேசித்ததும் இந்த இடத்தில்தான்.
சுவாமிக்கு வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள்; ஒன்பதாம் நாள் மகா ரதம். அம்மனுக்கு ஆடிப் பூரப் பெருவிழா 15 நாட்கள்; பத்தாம் நாள் தீர்த்தம்; அம்மன் திக் விஜயம், தபசுக் காட்சி, புஷ்பப் பல்லக்கு, திருக்கல்யாணம் ஆகியவை ஆடி விழாவின்போது நடைபெறும்.
திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகம் தவிர, திருவாரூர் சுவாமிநாத தேசிகர் பாடிய தலபுராணமும் உள்ளது.
மருக்கமழும் குழலாளைக் கலைசேர் சோதி
மதியனைய முகத்தாளை வல்லாமென்றே
இருக்குமிரு தனத்தாளை இலையுண்டென்னும்
இடையாளை அடியவர்கள் வருஞானப்
பெருக்கமுற நின்றாளை உலகையெல்லாம்
பெற்றுவளர்த்து இறைவனிடம் பிரியாதோங்கும்
அருட்சுடலை ஆடானை பதி அன்பாயி
அம்மை மலர்த்தாள் இணையை அகத்துள் வைப்பாம் என்ற தலபுராணப் பாடல், நெஞ்சில் எதிரொலிக்க ஆடானையிலிருந்து அருள்விடை பெறுகிறோம்.
மதியனைய முகத்தாளை வல்லாமென்றே
இருக்குமிரு தனத்தாளை இலையுண்டென்னும்
இடையாளை அடியவர்கள் வருஞானப்
பெருக்கமுற நின்றாளை உலகையெல்லாம்
பெற்றுவளர்த்து இறைவனிடம் பிரியாதோங்கும்
அருட்சுடலை ஆடானை பதி அன்பாயி
அம்மை மலர்த்தாள் இணையை அகத்துள் வைப்பாம் என்ற தலபுராணப் பாடல், நெஞ்சில் எதிரொலிக்க ஆடானையிலிருந்து அருள்விடை பெறுகிறோம்.
No comments:
Post a Comment