Friday, 4 August 2017

மதுரை மன்னனுக்கு பார்வை தந்த கண்ணீஸ்வரமுடையார்!

தே னி-கம்பம்-குமுளி சாலையில், தேனியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் வீரபாண்டி. இங்கு முல்லையாற்றின் (பெரியாறு) தென்கரையில் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகண்ணீஸ்வரமுடையார்.
மதுரையை ஆட்சி செய்த வீரபாண்டியன் தனது ஊழ்வினை காரணமாகப் பார்வை இழந்தான். கண் ணொளி வேண்டி அவன் இறைவனை தியானித்து தவம் இருந்தான். அவன் மனக் கண்ணில் தோன்றிய இறைவன், ‘வைகைக் கரையில் உள்ள காட்டில், உமாதேவியின் அம்சமான கௌமாரி, அசுரன் ஒருவனை அழிக்க வேண்டி திருக்கண்ணீஸ்வரரை பூஜித்து தவம் இருக்கிறாள். அவளை வழிபட்டால் உனது குறை நீங்கும்!’ என்றருளினார்.
தற்போது ஆலயம் இருக்கும் இடம், ஒரு காலத் தில் வனமாக இருந்ததாம். தேவி கௌமாரி இங்கு அமர்ந்து தவம் செய்தபோது அசுரன் ஒருவன் அவ ளைத் தாக்க முற்பட்டான். இதனால் கோபம் கொண்ட தேவி, புல் ஒன்றை எடுத்து அசுரன் மீது எறிந்தாள். அது அசுரனின் உட லைப் பிளக்க அவன் இறந்தான். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தேவி, ஈசனருள் பெற்று இங்கு கன்னி தெய்வமாக கோயில் கொண்டாள். அவள் வழிபட்ட லிங்க மூர்த்தமே ஸ்ரீகண்ணீஸ்வரர்.
இங்கு வந்து, இந்த தேவியை வழிபட்ட வீர பாண்டியன் ஒரு கண்ணில் பார்வை பெற்றான். பிறகு ஸ்ரீகௌமாரி அருளியபடி அவன், ஸ்ரீகண்ணீஸ்வரரை வேண்டி வழிபட்டதால், மற்றொரு கண்ணும் ஒளி பெற்றது. இறையருளுக்கு நன்றிக் கடனாக வீரபாண்டியன் ஸ்ரீகண்ணீஸ்வரருக்குக் கற்கோயில் ஒன்று கட்டி, வழிபாடுகளுக்கு வழிவகை செய்தான். அதனால், இவன் பெயராலேயே இந்தத் தலம் வீர பாண்டி எனப்பட்டது.
வடக்கில் முல்லையாறு, கிழக்கு மற்றும் தெற்கில் வயல்கள் சூழ காட்சி தருகிறது ஸ்ரீகண்ணீஸ்வர முடையார் திருக்கோயில். உள்ளே நுழைந்ததும் பிராகாரத்தில் வாது வென்ற விநாயகர் மற்றும் வள்ளி-தெய்வானையுடன் முருகன், சண்டி கேஸ்வரர், தட்சிணாமூர்த்தி சந்நிதிகள். முன் மண்டபம் தாண்டி மூலவர் கருவறை. 1967-ஆம் ஆண்டு இந்த மண்டபத்துக்காக அஸ்திவாரம் தோண்டும் போது ஒன்றன் பின் ஒன்றாக எட்டு ஐம்பொன் விக்கிரகங்கள் கிடைத்தனவாம். அந்நியர் படையெடுப்புக்கு அஞ்சி இந்த விக்கிரகங்களை இங்கு புதைத்திருக்கக் கூடும் என்கிறார்கள். தற்போது இந்த விக்கிரகங்கள் இந்து சமய அறநிலையத் துறையினரது பாதுகாப்பில் உள்ளனவாம்.
முன் மண்டபத்தைக் கடந்ததும் வலப் புறம் ஸ்ரீதுர்கை. இடப்புறம் நவக்கிரகங்கள். கருவறையில் லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீகண்ணீஸ் வரமுடையார். நம் ஞானக் கண்ணையும் திறந்து வைக்கும் அந்தப் பெருமானைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கருவறை வெளிச் சுவர்களில் பழங்காலக் கல்வெட்டுகளைக் காண முடிகிறது. மூலவரின் இடப் புறம் சற்று முன் தள்ளி தனியே காட்சி தருகிறாள் அம்பாள் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி. தல விருட்சம்- வில்வம். கோயிலுக்கு முன் நாகலிங்க மற்றும் மனோரஞ்சித மரங்கள் உள்ளன. திருக்கோயிலின் தீர்த்தம்- முல்லையாறு (பெரியாறு). மருத்துவத் தன்மை மிக்க இதில் நீராடினால் உடற்பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோயிலில் திருமண வைபவங்கள் அதிகம் நடைபெறுவதால், கோயிலுக்கு வெளியே வலப் புறம் புதிதாக மண்டபம் ஒன்று கட்டியுள்ளனர். சித்திரை வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி உற்சவம், தீபாவளி, கார்த்திகைத் திருநாள், மார்கழி மாத பூஜை உற்சவம், தைப் பொங்கல், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் மற்றும் பிரதோஷ உற்சவங்களுடன் தினமும் இரண்டு கால பூஜையும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.
ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவங்குமுன், அதற்கான ‘கால்கோள்’ எனப்படும் கம்பம் நடும் வைபவம் ஸ்ரீகண்ணீஸ்வரமுடையார் திருக்கோயிலை ஒட்டிய ஆற்றங்கரையில் ஆரம்பிக் கிறது. இங்கு வைத்து பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கொடிக்கம்பத்தை அம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்று நடுகிறார்கள். இங்கு கடந்த 1996-ஆம் வருடம் ஜூலை மாதம் 4-ஆம் நாள் திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்தேறியது. இந்தத் திருக்கோயில் ஸ்ரீகௌமாரியம்மன் திருக் கோயில் செயல் அலுவலரது நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

No comments:

Post a Comment