Tuesday, 8 August 2017

அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில் , முனுகப்பட்டு – திருவண்ணாமலை

உலகெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயங்களுக்கு பிரதான ஆலயம் ; சிவபெருமான் மனித வடிவம் கொண்ட கோவில் ; அன்னை பார்வதி வாழை இலையில் பந்தல் அமைத்து வரம் பெற்ற பூமி ; சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட அம்மன் திருத்தலம்..

⚜⚜ BRS⚜⚜

தொலைபேசி எண் : 94424 58848, 94867 67395

曆曆 *BRS*曆曆曆

இறைவன் : மன்னார்சாமி (மண் லிங்கேஸ்வரர்)

மூலவர்: பச்சையம்மன்

உற்சவர்: பச்சையம்மன்

தல விருட்சம்: வில்வ மரம், வேப்பமரம், வெப்பாலை

தீர்த்தம்: செய்யாறு, கமண்டலநதி, பிரம்பகநதி

பழமை : 2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : முக்கூடல் , முறுக்கப்பட்டு

ஊர்: முனுகப்பட்டு

 திருவிழாக்கள் :

 தமிழ் வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

 நவராத்திரி

 ஆடி திங்கட்கிழமை சோமவார திருவிழா.

 பிரமோற்சவம் எனும் பெருந்திருவிழா ஆடி மற்றும் ஆவணியில் வரும் திங்கட்கிழமைகளைச் சேர்த்து ஏழு திங்கட்கிழமைகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 7-வது திங்கட்கிழமையன்று அம்மன் திரு வீதியுலா நடைபெறும்.

 7 வாரமும் அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரம் :

 முதல் சோமவாரம் லட்சுமி அலங்காரம்.

 2 - ஆம் சோமவாரம் பார்வதி தவநிலை அலங்காரம் - இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம்.

 3 - ஆம் வாரம் ( 31-07-2017 இன்று) மீனாட்சி அலங்காரம்.

 4 - ஆம் வாரம் நாக சயனம் அலங்காரம்.

 5 - ஆம் வாரம் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.

 6 - ஆம் வாரம் சரஸ்வதி அலங்காரம்.

 7 - ஆம் வாரம் உமா மகேஸ்வரி அலங்காரத்துடன் விழா நடைபெறும்.

 விழா நாள்களில் மாலை அக்னி கரகமும், பூங்கரகமும், இரவு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும்.

 தல சிறப்பு:

 அம்மன் ஆலயமாக இருந்தாலும், இங்குள்ள மன்னார்சாமியே (மண் லிங்கேஸ்வரர்) பிரதானமாகத் திகழ்கிறார்.

 ஈசன் இங்கே தெற்குப் பார்த்து வீற்றிருக்கிறார்.

 கருவறையுள் சுதை வடிவில் அம்பிகை பச்சைத் திருமேனியளாய் அருட்காட்சி தருகிறாள்.

 இவள் சன்னதியில் பக்தர்களுக்கு பச்சைநிற குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

 பொதுவாக சிவனுக்கு திங்கட்கிழமையும், அம்மனுக்கு வெள்ளியும் உகந்ததாகும்.
ஆனால் இத்தல அம்மனுக்கு திங்கட்கிழமையே உகந்த நாளாக போற்றப்படுகிறது.
இத்தலத்தில் ஆடி திங்கட்கிழமைகளில் விழா கொண்டாடப்படுவது சிறப்பு. இதை சோமவார விழா என அழைக்கின்றனர்.

 இது தவிர ஞாயிற்றுக்கிழமையிலும் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

 எண்ணற்ற குடும்பங்களுக்கு வாழைப்பந்தல் பச்சையம்மன் குலதெய்வமாக விளங்குகின்றது.

 இந்த அம்மன், மணப்பேறு, மகப்பேறு வழங்கும் தெய்வமாக விளங்குவது தனிச்சிறப்பு.

 மகப்பேறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் 5 அல்லது 7-வது மாதத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.

 உலகமெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயங்களுக்குப் பிரதான ஆலயம் மற்றும் ஆதி ஆலயம் வாழைப்பந்தல் பச்சையம்மன் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்யாறு, கமண்டலநதி, பிரம்பகநதி என மூன்றும் ஒன்றுசேரும் முக்கூடல் எனும் முக்கூட்டில் அமைந்த தலம் முனுகப்பட்டு (வாழைப்பந்தல்).

 பார்வதி தேவிக்கு இங்கு தவத்தில் இருந்த முனிவர்களால் அமைக்கப்பட்ட ஆலயம்.

 அம்பாள் பூஜித்த லிங்கம் ஸ்ரீமணல்கண்டேஸ்வரர் என்றும் முக்கூட்டு சிவன் என்றும் இத்தலத்திற்கு அருகேயே இயற்கை சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

 நடை திறப்பு:

 காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

(ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இடைப்பட்ட நேரங்களில் நடை அடைக்கப்படாது. இந்நேரம் திருவிழா காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது)

 பொது தகவல்:

曆 பல இடங்களில் உள்ள முக்கியமாக முருகனும் வள்ளி தேவியும் உள்ள ஆலயங்களிலும் பார்வதி தேவி பச்சையம்மனாக வழிபடப்படுகிறார். அது போலவே தான் இந்த ஆலயத்திலும் பார்வதி தேவியை பச்சையம்மனாக வழிபடுகிறார்கள்.

曆 பச்சையம்மன் சிலை சுதை ஓவிய வடிவில் அமைந்துள்ளது. சுதை ஓவியம் என்பது சுண்ணாம்புக் கலவையை காரைப்பூச்சு போல சுவர் மீது பூசி அதன் மீது ஓவியம் வரைவதைக் குறிக்கும். சுதை சிற்பங்கள் எனப்படும் சுண்ணாம்புக் காரை பூச்சு மீது உருவாக்கப்பட்ட ஆலய சிற்பங்கள் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பழக்கத்தில் இருந்துள்ளது. அந்தக் கலவையைக் கொண்டு வண்ண ஓவியம் வரைவது எளிதல்ல. அவற்றின் நிறம் காலப்போக்கில் சற்று மங்கலாகுமே தவிர சிற்பங்கள் எளிதில் பழுதடைவது இல்லை.

曆 இங்கு லிங்கம், பச்சையம்மன், வாமுனி, செம்முனி, ஜமதக்கனி முனிவர், அஷ்ட விக்னேஸ்வரர்கள், நமவீரர்கள், சப்தமுனிகள் ஆகியோரது சிலைகள் உள்ளன.

 பிரார்த்தனை:

 மணப்பேறு, மகப்பேறு வழங்கும் தெய்வமாக இங்கு அம்மன் விளங்குவது தனிச்சிறப்பு.

 பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

 நேர்த்திக்கடன்:

 அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

 மகப்பேறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் 5 அல்லது 7-வது மாதத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.

 அம்மனுக்காக நேர்ந்து கொண்டு பெரிய யானை, குதிரைச் சிலைகள் வைக்கின்றனர். இரவில் குதிரையில் ஏறி அம்மன் நகர்வலம் வருவதாக ஐதீகம். ஆகவே குதிரைகள் அம்மன் குதிரை என்றே அழைக்கப் படுகின்றன.

 தலபெருமை:

 பார்வதிதேவி, ஈசனின் இடபாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில், முதலில் கண்ட ஊர் முறுகப்பட்டு என்றும், பின்னர் கடைசியாகத் தங்கி பிரயாணப்பட்ட இடம் பிரயாணப்பட்டு என்றும் கூறப்படுகிறது. பிரயாணப்பட்டு தற்போது பெலாம்பட்டு என்று அழைக்கப்படுகிறது.

 மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் அன்னை மணல் லிங்கம் பிடித்த இடத்தில் தற்போது சுமார் நான்கடி உயரத்தில் கல் லிங்கம் அமைந்துள்ளது.

 பச்சை நிறமாக மாறிய அன்னை :

 தவம் புரியவும், லிங்கம் வடிக்கவும் தண்ணீர் தேடினார் அன்னை பார்வதி தேவி. ஆனால் தண்ணீர் உடனடியாக கிடைக்கவில்லை. இதனால் தவித்துப் போன அன்னையின் உடல் கோபத்தால் சிவந்த மேனியாக மாறியது. பிறகு தன்னுடைய பிள்ளைகளின் முயற்சியாலும், தன்னுடைய முயற்சியாலும் மூன்று நதிகள் தோன்றியதில், அன்னையின் உள்ளம் குளிர்ந்தது.

 இதையடுத்து சாந்தமாக தவம் இயற்றத் தொடங்கிய அன்னையின் மேனி பச்சை நிறமாக மாறியதாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் தான் இத்தல தேவி பச்சையம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

 இத்தல இறைவன் மண்ணால் உருவானவர் என்பதால், ஈசனுக்கு ‘மண் லிங்கேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. இந்த பெயர் மருவி தற்போது ‘மன்னார்சாமி’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

 ஆலய அமைப்பு :

 ஆரணி - செய்யாறு சாலையின் ஓரத்தில், கமண்டல நாகநதியின் தெற்கே, பச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி ஆலயம் அமைந்துள்ளது.

 சாலையின் கீழ்ப்புறம் வாழ்முனி, செம்முனி, குதிரை வடிவங்கள் பெரிய வடிவில் அமைந்துள்ளன.

 இங்கு பில்லி, சூனியம், கண் திருஷ்டி, சொத்துப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காலில் எலுமிச்சை பழத்தை நசுக்கி, எதிரில் உள்ள முனிகளுக்கு நடுவில் உள்ள கருங்கல்லில், தேங்காயை வீசி சிதறச் செய்கின்றனர். இதனால், அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

 சாலையின் மேற்புறம் பச்சையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சிறிய ராஜகோபுர வாசலில் அமைந்துள்ளது.

 இந்திரனும், எதிரே உள்ள பாறையில் இரட்டை தந்தங்கள் கொண்ட ஐராவதம், ஈசான்ய மூர்த்தி, நந்தி வடிவங்கள் பெரிய அளவில் அமைந்துள்ளன.

 அடிவாரத்தில் சிறிய விநாயகர் சன்னிதி தெற்கு முகமாய் உள்ளது.

 இடதுபுறமாக வலம் வந்தால் அக்னி மூலை எனும் தென்கிழக்கில் அக்னி முனியான அக்னி பகவானும், அதனையடுத்து நவக்கிரகங்களாக நவ முனிகளும், அஷ்டதிக்கு பாலகர்கள் எனும் அஷ்ட முனிகளும், சப்தரிஷிகள் எனும் சப்தமுனிகளும் மேற்கு, வடக்குமுகமாய் பிரம்மாண்ட வடிவில் கம்பீரமாய்க் காட்சி தருகின்றனர்.

 வலமாக வரும் போது மன்னார்சாமி சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சிவபெருமானை லிங்க வடிவிற்கு பதிலாக மனித வடிவில் சிலா ரூபத்தில் காண முடிவது சிறப்பானது.

 இறைவன் நான்கு கரங்களோடு, கீழ் வலது கரத்தில் சூலம், கீழ் இடது கரத்தில் கபாலம், மேல் வலது கரத்தில் மழு, மேல் இடது கரத்தில் மான் தாங்கியுள்ளார். இவரே மன்னார் ஈஸ்வரன் எனும் மன்னார்சாமி ஆவார்.

 இவரையடுத்து நடுநாயகமாக பச்சையம்மன் சன்னிதி இருக்கிறது. அன்னை பச்சையம்மன், கருவறை முன் மண்டபத்தில் சப்தமாதர்கள், விநாயகர், முருகனும் வாசலின் இருபுறமும் காட்சி தருகின்றனர்.

 இந்த ஆலயத்தின் துவாரபாலகர்களாக, வலதுபுறம் சிவபெருமானும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் காட்சி தருவது அபூர்வ அமைப்பாகும்.

 இதனைக் கடந்து கருவறையில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இரு பச்சையம்மன் காட்சி தருகின்றனர். நின்ற அம்மன் கற்சிலையாகவும், அமர்ந்த அம்மன் சுதைவடிவிலும் அமைந்துள்ளது.

 அன்னையின் கீழ் வலது கரம் பிரம்பையும், கீழ் இடது கரம் கபாலத்தையும், மேல் வலது கரம் அங்குசத்தையும், மேல் இடது கரம் பாசத்தையும் தாங்கி அருள்கின்றது. இரண்டு அம்மன்களுக்கும் அலங்காரம், தீபாராதனை நடத்தப்படுகிறது. ஆனால் நின்ற கோலத்தில் இருக்கும் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

 தல வரலாறு:

 சிவனின் கண்ணசைவில் உலகம் நில்லாமல் இயங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனந்த மூர்த்தியான ஈசனின் திருக்கண்களை விளையாட்டாய்ப் பொத்தினாள் அம்பாள். ஒரு வினாடி, உலகம் இருண்டது. சூரியன், சந்திரன் மற்றும் விண்மீன்கள் அனைத்தும் இருண்டு ஒளி இழந்தன. உயிர்கள் அசைவற்று நின்றன. முத்தேவர்களும் இயக்கமற்று நின்றனர். இதனால் உலக இயக்கமே நின்று போயிற்று.

 விளையாட்டாய் ஈசனின் கண் பொத்த, அதனால் உண்டான நிலைமையை உணர்ந்த அன்னை பரமேஸ்வரிக்கு அச்சம் மேலிட்டது. வியர்வை மிகுந்து வழிந்தது. அதே நேரம் இரு கண் பொத்தப்பட்டதால் சிவனின் மூன்றாவது கண் திறக்க அதில் இருந்து ஒரு ஒளிக் கீற்று தோன்றியது. அது அம்பாளின் கையிலிருந்து வழிந்த வியர்வையின் வழியாக ஊடுருவியது. அப்போது அதிக சக்தி, அதிக வீரம் ஆகியவற்றின் வெளிப்பாடாக ஓர் உருவம் தோன்றியது. அது அழகில்லாத, அசிங்கமான, கோர உருவோடு வகை தொகையற்ற, ஜடாமுடி, தாடி மீசை, கரும் தேகம், ஒழுங்கில்லாத முடி அடர்ந்த தேகம், பேரழுகை பெருஞ்சிரிப்பு... ஆடல் பாடல், பசி வெறி ஆகியவற்றின் கூட்டுக் கலவை கொண்டதாக அமைந்தது.

 அந்த உரு சிவனின் உக்கிரமும், சக்தியின் வீரமும் கொண்டவனாக இருந்தான். அதனால் அவன் 'உக்கிர வீரன்' எனப்பட்டான்.

 தான் கணப்பொழுது ஈசனின் கண்களை விளையாட்டாய் பொத்தி உலகை இருள் அடையச் செய்ததனால் தனக்கு 'சாயா தோஷம்' பீடித்து உள்ளதாலும், மக்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் உக்கிர வீரனுக்கு பாடம் புகட்டவும் நினைத்து இறைவனிடமே பரிகாரம் மற்றும் உபாயம் வேண்டினாள்.

 ஈசனோ, 'தேவி, எதுவும் இவ்வுலகில் காரணமின்றி நடைபெறுவதில்லை. என் கண்ணை நீ பொத்தியதும் உலகம் இருண்டதும் அவ்வகையில் அடங்கும். நீ ஒரு வினை முடிவடைய வேண்டியே பாவம் எனத்தோன்றும் அச்செயல் புரிந்தாய். அந்த பாவத்திற்கு பரிகாரமாக இயற்கை நியதிப்படி நீ காசி நகர் சென்று, அன்னபூரணியாக அன்னதானம் முதல் 32 வகை தானங்கள் செய்து வா.

 எந்த துன்பமும் உன்னைத் தீண்டாத வகையில் காஞ்சி மாநகரில் கம்பா நதிக்கரையில் தனித்துத் தவம் செய். அங்கு நீ செய்யப் போகும் செயலால் உன் புகழ் விளங்கி அப்பட்டினமும் உன் பெயர் விளங்க சிறப்புடன் திகழும். பின் நடப்பது உலகுக்கு பின்னர் தெரிய வரும் என்றார்.

 ஐயனின் கட்டளையைச் சிரமேற்றாங்கி அன்னையவளும் கம்பாநதிக்கரையில் சுற்றிலும் அக்னியை வளர்த்து பஞ்சாக்னிக்கும் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். அவள் கடுந்தவத்தைப் பார்த்த ஈசன் சற்றே சோதிக்க எண்ணிக் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். வெள்ளம் தான் பிரதிஷ்டை செய்திருக்கும் லிங்கத் திருமேனியை அடித்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது எனக் கலங்கிய அன்னை தன்னிரு கைகளாலும் லிங்கத்தைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

 அப்போது ரிஷபவாஹனராய்க் காட்சி தந்தார் ஈசன். அன்னை அவரை வணங்கி அவரில் தான் பாதியாக விரும்புவதைக் கூறினாள். அதற்கு அருளுமாறு கேட்டுக்கொள்ள, ஈசனோ அது அவ்வளவு சுலபம் இல்லை எனவும், இங்கே இருந்து தெற்கே ஜோதியே மலையாக மாறி இருக்கும் திருவண்ணாமலைக்குச் சென்று தவம் செய்ய வேண்டும் என்றும் அங்கே ஊசி முனையில் தவம் இருக்குமாறும் கூறி மறைந்தார். அதன்படியே திருவண்ணாமலைக்குப் பயணமானாள் அன்னை.

 ஏழு மோட்சபுரிகளில் ஒன்றான காஞ்சியிலிருந்து புறப்பட்டு கதலிவனம் என்கிற வாழை தோப்புகள் அடர்ந்திருந்த அந்த பிரதேசத்திற்குள் நுழைந்தாள், உமையன்னை. உடன் அறுபத்து நான்கு யோகினிகள் பரிவாரங்களாக சூழ்ந்து சென்றனர். மோட்சத்தின் வாயிலில் நிற்கும் முனிவர்களும், ரிஷிகளும், தேவர்களும், வேதியர்களும், பக்தர்களும், ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். தாயை தவிக்க விடாது என்ற ஆதங்கத்தில் உமையன்னையின் தெய்வக் குமாரர்களான சுப்ரமணியசுவாமியும், விநாயகப் பெருமானும் கூடவே வந்தனர்.

 வாழைப்பந்தலை (முனுகப்பட்டு)வந்தடைந்தவள் தான் தவம் இருக்க உள்ள இடம் கைலாயத்தைப் போலவே குளுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு வாழை இலைகளினால் ஆன பந்தல் ஒன்றை அமைத்தாள். அதன் அடியில் அமர்ந்து கொண்டு தவம் இருக்க ஆரம்பித்தாள்.லிங்கம் அமைத்து, தவமிருக்க தண்ணீர் தேவைப்பட்டது. உடனே தன் புதல்வர்களான விநாயகரையும், முருகனையும் தண்ணீர் கொண்டுவரப் பணித்தாள். அதன்படி விநாயகர் சற்றுத் தொலைவில் உள்ள மலையில் முனிவர் தவமிருப்பதையும், அவர் அருகே கமண்டலத்தில் நீர் இருப்பதையும் அறிந்து, அதனைத் தன் வாகனமான மூஞ்சுறுவின் உதவியால் கவிழ்த்தார். கமண்டல நீர், கமண்டல நாக நதியாகி, அன்னை தவம் இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தது.

 முருகப்பெருமான் தொலைவில் உள்ள மலை மீது தன் வேலைப் பாய்ச்சி நீர் வரச்செய்து ஆறாக்கியதால், அது சேயாறு ஆனது.

 இதற்குள் அன்னை தன் பிரம்பினை பூமியில் அடித்து நீர் வரச் செய்தாள். அது பிரம்பக நதி என்று பெயர் பெற்றது. இந்த மூன்று நதிகளும் ஒன்று சேரும் ஊரான முனுகப்பட்டில் அமைந்த இடத்தை முக்கூட்டு என்றும், இங்குள்ள சிவனை *‘முக்கூட்டு சிவன்’* என்றும் அழைக்கின்றனர்.

 அன்னை சிவ பூஜை செய்யும் வேளையில் அருகிலுள்ள கதலி வனத்திலிருந்து அரக்கன் ஒருவன் பல இடையூறுகளைச் செய்து வந்தான். அதனால் துன்பமுற்ற பார்வதி தேவி சிவபெருமானிடம் அவன் தொல்லையைக் குறித்து முறையிட, சிவபெருமானும், தன்னுடன் விஷ்ணு பகவானையும் அழைத்து வந்து அந்த ராக்ஷசனை அழித்து அவளது தவம் இடையூறு இல்லாமல் தொடர அங்கேயே வாமுனி மற்றும் செம்முனி எனும் இரு முனிவர்களாக உருவெடுத்து அம்மனுக்கு காவலுக்கு நின்றார்கள். அதனால் தான் அந்த முனிவர்களுக்கும் அந்த ஆலயத்தில் சிலைகள் உள்ளன.

 அவர்களைத் தவிர பல முனிவர்களும், ரிஷிகளும் பார்வதியின் தவத்துக்கு காவலாக இருந்தவாறு அங்கேயே தவம் இருந்தார்களாம். அவர்களது சிலைகளும் ஆலயத்தில் காணப்படுகின்றன.

 பின்னர் அன்னை சிவ வழிபாட்டை முடித்துக்கொண்டு திருவண்ணாமலை புறப்பட்டு சென்றாள். இதன்பின் திருவண்ணாமலையில், அன்னை ஈசனோடு இரண்டறக் கலந்து அர்த்த நாரீச்வரராக ஆனாள் என தலபுராணம் கூறுகிறது.

 அன்னை பிடித்த மணல் லிங்கம் தற்போது கல்லிங்கமாக மாறியது இவருக்கு துவார பாலகர்கள் வலப்பக்கத்தில் சிவ வடிவமாகவும் இடப்பக்கத்தில் விஷ்ணு வடிவமாகவும் காட்சியளிக்கின்றனர்.

 ஈசன் மன்னார் சுவாமியாக அம்மனுக்கு வலப்புறம் தனியாக அமர்ந்து அருள் புரிகின்றார். நடுவில் சுதை வடிவில் அம்பிகையும் வெளியில் விநாயகரும் முருகனும் அருட்காட்சியளிக்கின்றனர்.

 ஆலயத்தில் தென் கிழக்கில் மிகப்பெரிய சுதை வடிவில் வாழ் முனி உள்ளார். விசேஷ காலங்களில் இவருக்கு முதலில் வழிபாடு செய்த பின்னரே அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆகவே பச்சை மணலினால் லிங்கம் பிடித்து பூஜை செய்ததினால் பச்சையம்மன் என்ற பெயர் ஏற்பட்டதாக வரலாறு.

 சிறப்பம்சம்:

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ கருவறையுள் சுதை வடிவில் அம்பிகை பச்சைத் திருமேனியளாய் அருட்காட்சி தருகிறாள்.

♻ இவள் சன்னதியில் பக்தர்களுக்கு பச்சைநிற குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

♻ அம்மனை வணங்கி இங்கு தரும் பச்சை குங்குமத்தை நெற்றியில் வைத்தால் தீராத நோய்கள் தீரும்என்பது பக்தர்களின் நம்பிக்கை.

♻ பச்சையம்மன் அமைத்த சிவலிங்கத்தைப் பிடிக்க அவள் பயன்படுத்திய தண்ணீரைத் தந்த மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் சுமார் நான்கு அடி உயரமான சிவலிங்கம் அமைந்துள்ளது. அதுவே அங்குள்ள குளத்தின் நீர் என்கிறார்கள்.

 கோயிலின் நுழைவாயிலில் சண்டனும் முண்டனும் இருக்க அங்குள்ள பிற சிலைகள் வாமுனி, செம்முனி, ஜடாமுனி மற்றும் பிற முனிவர்களின் உருவங்களாகும். அவர்கள் அனைவரும் அங்கு அமர்ந்தபடி காட்சி தருகின்றனர்.

♻ கோவிலினுள் துவார கணபதியும், தேவேந்திரனும் நம்மை வரவேற்கின்றனர்.

♻ ஆலய வளாகத்தை சுற்றி பல காவல் தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

♻ பச்சையம்மனை தரிசனம் செய்த பின்னரே மலை மீது ஏறிச் சென்று பர்வத மலை மீது குடி கொண்டுள்ள சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்பதும் ஐதீகம் ஆகும்.

 இருப்பிடம்:

✈ ஆரணியில் இருந்து கிழக்கே 11 கி.மீ., செய்யாறு நகரில் இருந்து மேற்கே 20 கி.மீ., ஆற்காட்டில் இருந்து தெற்கே 35 கி.மீ., சென்னையிலிருந்து தென்மேற்கே 140 கி.மீ., தொலைவில், ஆரணி - செய்யாறு வழித் தடத்தில், முனுகப்பட்டு அமைந்துள்ளது..

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment