Saturday, 5 August 2017

திருநேத்ரநாத ஸ்வாமி கோயில் - திருவாரூர்


திருவாரூர் - திருப்பள்ளிமுக்கூடல்

வில்வ வனமாகத் திகழ்ந்த அந்த தலத்தில், பிறவிப் பயன் நிறைவேறவேண்டி, சிவனாரை தியானித்துக் கடும் தவம் இருந்தது அந்தப் பறவை. அதன் பக்தியால் மகிழ்ந்து தரிசனம் தந்த ஈசன், ''விரைவில் ராம அவதாரம் நிகழும். தன் மனைவியைத் தேடி இந்தப் பகுதிக்கு வரும் ஸ்ரீராமனின் மூலம் மோட்சம் அடைவாய்!'' என்று அருள்புரிந்தார்.
இதைக் கேட்டுக் களிப்புற்ற அந்தப் பறவை, மேலும் ஒரு வரம் கேட்டது. ''காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய க்ஷேத்திரங்களில் புனித நீராட விரும்புகிறேன். இதற்கும் தங்களின் திருவருள் வேண்டும்'' என்றது.அதன் வேண்டுதலை ஏற்று, எதிரிலிருந்த தீர்த்தத்தில் 16 கிணறுகளை உண்டாக்கிய சிவப்பரம்பொருள், அதில் நீராடினால் சப்தசாகரங்களில் நீராடிய பலன் கிடைக்கவும் அருள்செய்தார். ''சுவாமி... இதில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விளக்கியருளுங்கள். அதையும் அறிந்துகொண்டு நீராடினால் கூடுதல் புண்ணியம் அல்லவா?'' என்று பணிவுடன் கேட்டது பறவை.
உடனே, ஸ்ரீஅஞ்சநாட்சி அம்பிகையுடன் திருநேத்ர ஸ்வாமியாக திருக்காட்சி தந்த சிவனார், அந்தப் பலாபலன்களை விளக்கிச் சொன்னதோடு, ''பன்னிரண்டு அமாவாசை தினங்கள் இங்கு வந்து இந்தக் குளத்தில் நீராடி, இங்கு கோயில் கொண்டிருக்கும் எமக்கு விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர்'' என்றாராம்.
சிவனருள் பெற்ற அந்தப் பறவை- ஜடாயு; அதற்கு இத்தகைய பேறு கிடைத்த தலம்- திருப்பள்ளிமுக்கூடல். சுயம்புமூர்த்தியாக திருநேத்திரநாத ஸ்வாமி அருளும் இந்தத் தலம், திருவாரூர்- மயிலாடுதுறை பேருந்து வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சீதாதேவியைத் தேடியலைந்த ஸ்ரீராமன், இந்தத் தலத்துக்கு வந்தபோதுதான், ஜடாயுவின் மூலம் சீதையின் நிலையைக் குறித்து அறிந்தாராம். இன்றைக்கும் பிரிந்த தம்பதியை ஒன்றுசேர்க்கத் திருவருள் புரியும் தலமாகத் திகழ்கிறது.
திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தத் தலத்துக்கு வந்து, அவர்களின் பதிகத்தைப் பாடி, திருநேத்ரநாத ஸ்வாமியை வழிபட, பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர்; சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஜடாயு தவம் செய்ததால் இவ்விடம் பட்சி ராமேஸ்வரம் என்று வழங்கப்படு கிறது. முனிவர்கள் பலரும் வழிபட்ட இந்த ஆலயத்தில், அஷ்டநாகங்களும் வழிபட்டு சாபவிமோசனம் அடைந்தனவாம். இங்கே, முனிவர்கள் தடையின்றி வழிபட ஏதுவாக, வடக்கு நோக்கி முகம் திருப்பிய நிலையில் நந்தி அமைந்திருப்பது சிறப்பு. இங்கு அருளும் ஸ்ரீகால பைரவரை, தேய்பிறை அஷ்டமியில் தரிசித்து வழிபட, வேண்டியது நிறைவேறுமாம்.

No comments:

Post a Comment