Tuesday, 1 August 2017

சீர்காழி


கோபத்தில் சற்றே கோணலாக நடந்தார் சிவபாத இருதயர். ‘வராதே...’ என்று சொன்னால், ‘வந்துதான் தீருவேன்!’ என்று அடம் பிடித்தான் மகன். அழுகையின் சுவடு, முகமெல்லாம் மண்டிக் கிடக்க... லேசாக எட்டிப் பார்க்கும் புன்னகையோடு அண்ணாந்து பார்த்த மகனை, நோக்க நோக்கக் கோபமும் பெருமையும் மாறி மாறி வந்தன. பயம் தணிந்து தன் விரலைப் பிடித்துக் கொண்ட மகனைக் குனிந்து பார்த்தார்.
கைகளில் காப்பும் கால்களில் தண்டையும் சரிந்து விளையாட- தளர்நடையிட்ட அந்தப் பிள்ளை, தானும் தன் மனைவி பகவதியும், ‘சிவநெறியில் நிற்கும் பிள்ளை வேண்டும்!’ என்று வேண்டியதன் பயனாகத் திருவாதிரைத் திருநாளில் தோன்றிய பிள்ளை. ‘மூன்று வயதாகவில்லை; அதற்குள் எத்தனை எத்தனை விளையாட்டுகள்!’
நினைத்துக் கொண்டே நடந்தவருக்கு, ‘இப்போதெல்லாம் பிள்ளையின் சிணுங்கலும் அழுகையும் அதிகமாகி இருக்கின்றனவோ?’ என்று தோன்றியது.
இன்றும் அப்படித்தான்... காலை அனுஷ்டானங்களுக்காக பிரம்மதீர்த்தத்துக்குப் புறப்பட்டபோது, தானும் வருவேன் என்று அழுதான். வாய்ப் பேச்சு சரியாக வரவில்லை என்றாலும் சாடைகளும் சிணுங்கலுமாக ஓடி வந்தான். கட்டிப் பிடித்துக் கொண்ட பகவதியையும் தள்ளி விட்டுவிட்டு ஓடி வந்து விட்டான்.
முதலில் கோபமாகத்தான் இருந்தது. ஆனால், கண்ணீரில் தோய்ந்த கருவிழிகளையும் சுழித்த உதடுகளையும் பார்த்தவுடன், கோபம் தானாக விடைபெற்றுக் கொண்டது. அப்பாவின் கோபம் போய்விட்டது என்பதை உணர்ந்து கொண்டு விட்ட பிள்ளையும், தன் சிறு கை நீட்டி அப்பாவின் விரலைப் பற்றிக் கொண்டான்.
கோயில் கரையைத் தாண்டி பிரம்மதீர்த்தக் கரையை அடைந்தார்கள். தீர்த்தத்தின் தெற்குப் படிக்கட்டில் மகனை உட்காரச் செய்த சிவபாத இருதயர், அங்கேயே அமர்ந்திருக்கும்படி திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டுத் தீர்த்தத்துள் இறங்கினார்.
சிணுங்கலின் சுவடே இல்லாமல் சிரிப்போடு தலையாட்டிய மகனை, பார்வையால் அரவணைத்துக் கொண்டே புனித நீரை வணங்கிவிட்டு நீராடப் புகுந்தார். இடுப்பளவு நீரில் நின்று மந்திரங்கள் ஓதி அனுஷ்டானங்கள் செய்தார்; தோணியப்பர் விமானத்தை நோக்கி வணங்கினார். இடையிடையே கரையில் உட்கார்ந்திருந்த பிள்ளை மீதும் பார்வை பட்டது. அப்பா பார்த்த திசை நோக்கித் தானும் அவ்வப்போது திரும்பி, தோணியப்பர் விமானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் பிள்ளை.
சிவபாத இருதயர், அகமருஷணம் (இது ஒரு மந்திரம். மறம் அகற்றும் மந்திரம்; கோப தாபங்களை அகற்றுவதற்கான மந்திரம் என்றும் சொல்வர். நீரில் மூழ்கிய நிலையில் இது ஓதப்படும்) செய்யத் தொடங்கினார்.
தோணியப்பர் விமானத்திலிருந்து பார்வையைத் திருப்பி அப்பாவைப் பார்த்த பிள்ளைக்குத் திடீர் அதிர்ச்சி! ‘அப்பாவைக் காணோமே! விட்டுவிட்டுப் போய் விட் டாரா?’ கண்ணீர் முட்டத் தொடங்கியது. உதடுகள் பிதுங்கிக் கொள்ள, சுற்றுமுற்றும் பார்வையைத் திருப்பியது அந்தப் பிள்ளை. ‘அந்த உயரத்தைப் பார்த்துப் பார்த்து, அப்பா ஏதோ முணுமுணுனு சொன்னாரே!’ - தோணியப்பர் விமானத்தைப் பார்த்த பிள்ளைக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
‘‘அம்மே...’’ அழுகை பெரிதாக விம்மி வெடிக்க, கன்னங்களில் கண்ணீர் வெள்ளம் பாய்ந்து பெருக... கையும் காலும் துடிக்க... விரல்கள் கண் பிசைய... ‘‘அம்மே!’’
பரமேஸ்வரியைத் திரும்பிப் பார்த்த பரமேஸ்வரர், மெள்ளப் புன்னகைத்தார். கண்கள் பாசத்தைப் பொழிய, புருவங்கள் லேசாக நெரிய... பிள்ளை அழுகிறதே என்கிற கவலைக் கீற்றுகள், அம்மையின் திருமுகத்தில் கோலமிடத் தொடங்கின.
புன்னகைத்துக் கொண்டே திரும்பினார் தோணியப்பர். அவரது பார்வையைப் புரிந்து கொண்ட ரிஷபம், அடிமேல் அடி வைத்து அருகே வந்தது. அம்மையின் திருத்தோளைத் தொட்டார். அதற்காகவே காத்திருந்தாற்போல, உமாதேவி உடனடியாக ரிஷபத்தின் மீது அமர்ந்தார். தேவியாரோடு ரிஷபமேறிய தோணியப்பர் ரிஷபாரூடராக, உமா மகேஸ்வரராக, பிரம்மதீர்த்தக் கரையை அடைந்தார். ‘‘அம்மே’’ - அழுது கொண்டே, கண்களைப் பிசைந்து கொண்டிருந்த அந்தப் பிள்ளையின் கருவிழிகள், சற்றே விரிந்தன. ரிஷபத்தின் மீது அமர்ந்திருந்தாலும், ஒரு காலை தரை மீது பாவ விட்டிருந்த பரமேஸ் வரியின் அவசரம், அரனாருக்கு நன்றாகவே புரிந்தது.
‘‘தேவி, உன் குமாரன் அழுகிறான். உன் அருள் வேண்டி அழைக்கிறான். உனதருமை பாலெடுத்துப் பொன் கிண்ணத்தில் வழங்கு வாயாக தேவி!’’
அடுத்த கணமே தீர்த்தக்கரையில் நின்ற தேவியார், பாலகனின் கண்ணீரைத் தம் திருக்கரங்களால் துடைத்தார்; பாலும் ஞானமும் குழைத்துப் புகட்டினார்.
பிள்ளையின் குரல் நடுவில் கேட்டதுபோல இருந்தது. இப்போது தெரியவில்லை! நீருக்குள்ளிருந்து தலை நிமிர்த்திய சிவபாத இருதயர், மந்திரத்திலிருந்து நழுவி விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்த மனதை மகன் பக்கம் திருப்பினார். கண்கள் தாமாகவே பிள்ளை அமர்ந்திருந்த படிகளைத் தேடின.
‘இந்த மூலையில்தானே அமர்த்தினோம்; எங்கே காணோம்?’ கண்கள் சல்லடையிட... அதோ, படிக்கட்டின் அந்த மூலையில்... ‘என்ன செய்கிறான்? கையில் ஏதோ மின்னு கிறதே!’ இனம் புரியாத அவசரத்தோடு வேக வேகமாகப் படியேறினார். மகனருகே வந்தார். கையில் பொற்கிண்ணம். பெரிய தாமரை யைச் சின்னத் தாமரைகள் பற்றிக் கொண்டாற்போல கிண்ணியைப் பிடித்துக் கொண் டிருந்த பிள்ளை, கிண்ணத்தில் வாய் பதித்து, வாயில் கிண்ணம் பதித்துப் பாலருந்திக் கொண்டு இருந்தது.
‘‘யாருடைய கிண்ணம்?’’ - சற்றே உறுமலாகக் கேட்டார் சிவபாத இருதயர். கேள்வி காதில் விழுந்தாற் போலவே இல்லை. கண் தாமரைகள் சற்றே எட்டத்தில் பதிந்திருக்க, கைத் தாமரைகள் கிண்ணத்தைப் பற்றியிருக்க, அதரத் தாமரைகள் அமுதப் பாலால் நனைந்திருக்க... அந்தப் பிள்ளை தலையைத் திருப்பவில்லை.
‘யாருடைய கிண்ணத்தை எடுத்தான்? பசித்தால், யார் வைத்திருந்தாலும் எடுத்து விடுவதா?’ - ஆத்திரமும் ஆதங்கமும் போட்டி போட, ஆவேசமடைந்த சிவபாத இருதயர் சுற்றுமுற்றும் தேடினார். எவரும் கண்ணில் படவில்லை. ‘யார் கொண்டு வந்த பாலோ? எதற்குக் கொண்டு வந்தார்களோ?’- அவர் மனக்கேள்விகளுக்கு பதில் கொடுப்பதற்கு அங்கு எவரும் தென்படவில்லை. ‘எங்கிருந்து எடுத்தாய்?’ - மகனின் தோளைப் பற்றியபடி மீண்டும் உறுமினார். பால் கிண்ணத்திலிருந்து தன் செம்பவள அதரங்களை மெள்ள நீக்கிக் கொண்ட அந்தச் செல்லப் பிள்ளை, ஒன்றுமே தெரியாத மாதிரி நிமிர்ந்து பார்த்தது. ‘‘இறைவர்க்கு யாரோ கொண்டு வந்த பாலை எச்சில் படுத்தி விட்டாயே... யார் கொடுத்தார்கள்?’’ -மீண்டும் கோபத்தோடு வினவிய சிவபாத இருதயர், அருகில் கிடந்த கோல் (குச்சி) ஒன்றை எடுத்து ஓங்கினார். தளிர்மலர் பாதங்களில் ஒன்றை ஊன்றி, மற்றொன்றை மெள்ளத் தூக்கியபடியே, இடக் கை பொற்கிண்ணத்தைப் பற்றியிருக்க, வலக் கரம் நீட்டிய அப்பிள்ளை, தன் கண்கள் வழியாகப் புகுந்து உள்ளமெல்லாம் நிரம்பிக் கிடந்த ரிஷபாரூடரைச் சுட்டிக் காட்டியது.
தோடுடைய செவியன் விடையேறிஓர் தூவெண்மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசிஎன் உள்ளம் கவர்கள்வன் ஏடுடைய மலரான் முனைநாள்பணிந்து ஏத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
பாட்டுப் பிரவாகம் பொங்கிக் கொண்டிருந்தது. விக்கித்துப் போன சிவபாத இருதயர், பாடல் வரிகள் உள் செல்லச் செல்ல... உணர்வோங்கி நின்றார். வெற்று வெளியாகத் தெரிந்த இடத்தில், ரிஷபமும் பரமேஸ்வரரும் பார்வதியன்னையும் தெரிவது போல் தோன்றியது.
கண்களின் மயக்கமா? கருத்து மயக்கமா? ‘இரண்டு நொடி களுக்கு முன்னர், அம்மை தெரிந்தார். இப்போது இல்லையே. இதோ ரிஷபம்கூடத் தெரியவில்லையே!’
தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாமலும் சிவபாத இருதயர் திகைத்து நிற்க, அந்த இரண்டேமுக்கால் வயதுப் பிள்ளை, பாட்டுமழை பொழிந்து கொண்டிருந்தது.
உள்ளம் கவர் கள்வன் வாள்நுதல் செய்மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப் பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
பாடி முடித்த பிள்ளை நடக்கத் தொடங்கியது.
‘பிள்ளையா! இவரை இனி பிள்ளை என்று கூற முடியுமா?’- தன் மகன் எனும் உரிமையில் கோலெடுத்து நின்ற சிவபாத இருதயர், பிள்ளை பெற்ற காட்சியைத் தான் பெறாவிடினும், பிள்ளையின் பெருமையை உணர்ந்தார்.
ரிஷபாரூடராக வந்த தோணியப்பர், பார்வதியம்மையின் கரம் பற்றி மீண்டும் தோணியப்பர் விமானம் நோக்கி நகர... தளர்நடை, கிளர்நடையாக, சீர்காழிச் சிறுபிள்ளையும் பிரம்ம தீர்த்தக் கரையிலிருந்து தோணியப்பர் திருக்கோயிலுக்குள் நுழைந்தார். சிவபாத இருதயரும் தொடர்ந்தார். பாட்டுக் குரல் கேட்டு வந்த இன்னும் சிலரும், வியப்புக் குறையாமல் வழிதொடர்ந்தனர்.
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெருமா னைப் பாடிய தம் திருவாயால்- ஞானப்பால் அமுதுண்டு இன்னும் பால் துளிகள் கடைவாயில் கோடிட்டுக் கொண்டிருந்த திருவாயால் -இறையனார் தமக்குக் காட்டிய பேரருள் காட்சியையும், பெருமாட்டி அளித்த பாலமுது ஞானத்தையும் எல்லோருக்கும் புரியும்படி எடுத்துக் கூறியது அந்தப் பிள்ளை.
பிள்ளையா? இனியும் ‘பிள்ளை’ என லாமா? பிள்ளைதாம். ஆளுடைய பிள்ளை- இறைவனும் இறைவியுமே வந்து ஆளுகை தந்த பிள்ளை; சிவஞானப் பாலின் தொடர்பு பெற்றதால் சிவஞான சம்பந்தர் ஆன செல்லப்பிள்ளை; காழித் திருநகரில் அவ தரித்து, தேவாரப் பாடல்களால் தமிழ்நாட்டை வளப்படுத்திய சின்னப் பிள்ளை- ஞான சம்பந்தப் பிள்ளையின் பதம் பணிந்து சீர்காழித் திருத்தலம் போவோமா?
பிரம்மதேவன் வழிபட்டதால் பிரமபுரம்; பரம்பொருள் இறையனார் மூங்கில் வடிவத்தில் தோன்றி வேணுவனம் ஆனதால் வேணுபுரம்; பிரளய காலத்தில் உலகம் முழு மையும் வெள்ளத்துக்குள் மூழ்க, உமையம் மையை அருகில் இருத்திக் கொண்டு, சுத்த மாயை என்பதையே ஒரு தோணியாக்கி, இறையனார் தங்கியிருந்த இடம் ஆகை யால் தோணிபுரம்; சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் புகல் (அடைக்கலம்) தேடிய இடம் என்பதால் புகலி; குருவாக வணங்கப்படும் வியாழன் பூசித்துத் தனது குருத்துவத்தைப் பெற்றதால் வெங்குரு; பூமியைப் பிளந்து கொண்டு சென்ற ஹிரண்யாக்ஷன் என்னும் அரக்கனை அழிக்க வராஹ அவதாரம் எடுத்த நிலையில் விஷ்ணுமூர்த்தி வழிபட்டதால் பூந்தராய்; பாம்புத் தலை கொண்ட ராகு பூசித்ததால் சிரபுரம்; சண்பைப் புல்லால் அடித் துக் கொண்டு அழிந்து போன யாதவ குலத்தின் பழி தீர, கண்ண பரமாத்மா வழிபட்ட தலம் என்பதால் சண்பை.
மச்சகந்தியைப் (பின்னாளில் சத்யவதி) பற்றிய கொச்சை மொழிகள் நீங்குவதற்காகப் பராசரர் வழிபட்டதால் கொச்சை வயம்; தம்மைப் பற்றிக் கொண்ட மலங்கள் நீங்க (உ)ரோமச முனிவர் வழிபட்டதால் கழுமலம்; தில்லை நட ராஜரோடு வாதாடிச் சண்டையிட்ட குற்றம் நீங்குவதற்காகக் காளிதேவி வந்து வழிபட்டதால் ஸ்ரீகாளி; அக்னிதேவன் புறா வடிவில் வந்து சிபி மன்னனுக்கு அருளியதால் புறவம். அப்பாடி! இத்தனை பெயர்களும் ஒரே ஊருக்கா?
சீர்காழி ஊருக்கு இன்னும்கூட சில பெயர்கள் உண்டு. காளி வணங்கிய பதி என்பதுதான் ஸ்ரீ + காளி - சீகாழி என்று மருவியது என்பது இந்த ஊர்ப் பெயருக்கு வல்லுநர்கள் தருகிற விளக்கம். சீகாழிதான், தவறுதலாகச் சீர்காழி என்று வழக்கில் வந்து விட்டது. சீயாளி (ஸ்ரீ+காளி) என்றும் சிலர் சொல்வார்கள். காழி என்றால் வலிமையானது என்று பொருள். சீரும் வலிமையும் நிறைந்ததால் சீர்காழி என்று சிலர் விளக்கம் கொடுப்பார்கள். எப்படியிருந்தாலும் வாயால் சொல்லும்போதே சிவஞான இன்பத்தை வழங்கும் சீர்காழி திருத்தலம் செல்வோம், வாருங்கள்.
தேவாரமுதலிகளில் (தேவாரம் பாடிய மூவருக் குத் தேவார முதலிகள் என்று பெயர்) வயதுக் கணக்குப்படியும் தோன்றிய காலப்படியும் மூத்த வர் திருநாவுக்கரசர் என்றாலும், இறையனாரின் செல்லப் பிள்ளையானதால் முதலில் வைத்துப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தப் பெரு மானே ஆவார். சைவத் திருமுறைகளின் வகைப் பாட்டிலும் ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள், முதல் மூன்று திருமுறைகளாகும். முதல் திருமுறையின் முதல் பதிகமாக இருப்பது, ‘தோடுடைய செவியன்’ என்று தொடங்கிப் பாடிய பிரமாபுரப் (சீர்காழி) பதிகமாகும்.
பிரம்மதீர்த்தக் கரையில் நின்று சம்பந்தப் பெருமான் அழுதார் என்பதைக் கூறவந்த சேக்கிழார்,
வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க 
பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்தழுத...
என்று விவரிப்பார். சீர்காழியில் நடைபெற்ற ஞானப் பால் வைபவத்தைத் தொடர்ந்து, ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்’ ஆகிவிட்ட ஆளுடைய பிள்ளைக்கு அருள் பாலித்த தலமான சீர்காழி திருக் கோயிலை அடைந்து விட்டோம்.
தருமபுர ஆதீன மேற்பார்வையில் வெகு அழகாகவும் தூய்மையாகவும் பராமரிக்கப்படும் இந்தத் திருக்கோயில், ஊரின் நடுநாயகமாக விளங்குகிறது. கோயிலைச் சுற்றி பெரிய மதில்; நான்கு பக்கங்களிலும் பெரிய கோபுரங் கள். கிழக்கு ராஜ கோபுரம்தான், பிரதான வாயில். தெற்கு கோபுரம் (7 நிலை கோபுரம்) வழியாகவும் நிறையப் பேர் வருகிறார்கள். கிழக்கு ராஜ கோபுரம் வழியாக நுழைகி றோம். வலப் பக்கம் மண்டபம். இடப் பக்கம் கோயில் அலுவலகம்; அருகில் மற்றொரு சிறிய மண்டபம். நேரே பலிபீடம், நந்தி, கொடிமரம்.
திருஞானசம்பந்தப் பெருமான் நடந்த மண் இதுவல் லவா என்ற எண்ணமே நம்மைத் திக்குமுக்காட வைக் கிறது. விசாலமான பிராகாரம். பிராகார வலத்தைத் தொடங்குகிறோம். கிழக்குச் சுற்றிலிருந்து தெற்குச் சுற்றுக்குள் நுழைந்தால், நமக்கு வலப் பக்கம் கோயிலின் உள் மதில்; இடப் பக்கம் அழகாகப் பராமரிக்கப்படும் நந்தவனம். தெற்கு வாயில் கோபுரம் உயரமாக ஏழு நிலைகளோடு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. தெற்கு கோபுர வழியை ஒட்டி, ஒரு பெரிய மண்டபம். படிக்கட்டுகள் கொண்டு உயரமாகவும் இருக்கிற இந்த மண்டபத்துக்கு வலம்புரி மண்டபம் என்று பெயர். இங்கு அஷ்ட பைரவர்கள் எழுந்தளியுள்ளார்கள்.
அடுத்து நந்தவனம். மேற்குச் சுற்றுக்குள் திரும்புகிற தென்மேற்கு மூலையில், கிழக்குப் பார்த்த சந்நிதியில் ருணம் தீர்த்த விநாயகர். அப்படியே நந்தவனமும் தொடர்கிறது. மேற்கு கோபுர வாயிலையும் அடைத் தாற்போல நந்தவனம் தொடர்கிறது. கோபுர வாயிலை ஒட்டி சிங்காரவேலர் சந்நிதி. அடுத்து காளிபுரீஸ்வரர் சந்நிதி. இரண்டு சந்நிதிகளும் கிழக்குப் பார்த்தவை. சுலபமாக உள்ளே புக முடியாதபடி நந்தவனத்துக்குள் உள்ளன. அடுத்து, சிறியதாக கணநாதர் சந்நிதி. வடக்குச் சுற்றுக்குள் திரும்புமுன், நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது ஞானசம்பந்தர் கோயில்.
கிழக்குப் பார்த்த கோயிலாக உள்ள ஞானசம்பந்தர் கோயிலுக்குள் நுழைகிறோம். நல்ல பெரிய கோயில். 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தப் பெருமான், சுமார் 16,000 பதிகங்கள் பாடியதாகச் சொல்லப்படுகிறது. இன்றளவும் நமக்குக் கிடைத்திருப் பவை சுமார் 384 பதிகங்களேயாகும். தமிழ் ஞான சம்பந்தன், நற்றமிழ் விரகன், தமிழ் விரகன், காழி வேந்தர், புகலிப் பெருமான், சண்பைநகர் வேந்து என் றெல்லாம் குறிக்கப்படுகிற இவர், தமிழகம் முழுவதும் பயணப்பட்டு, பற்பல திருத் தலங்களையும் தரிசித்துத் தேவாரப் பாடல்களைப் பாடினார்.
சேக்கிழார் பெருமான், தாம் பாடிய பெரிய புராணத்தில், மொத்தம் உள்ள 4,287 பாடல்களில் சுமார் 1,256 பாடல்களில், ஞானசம்பந்தரின் வரலாற்றைப் பாடுகிறார். இதனாலேயே ‘புராணம் பாதி பிள்ளை பாதி’ என்னும் மொழி வழங்குகிறது. தமிழ் இலக்கியத் திலும் பக்தி மரபிலும் ஞானசம்பந்தரின் பாடல்கள் ஒரு புதிய சகாப்தத்தை உண்டாக்கின. தமிழ் இசை வரலாற்றிலும் இவருடைய பங்கு மிக முக்கியமானது. பண் முறையில் இவரது பாடல்கள் உள்ளன.
ஞானசம்பந்தரோடு தொடர்பில் வந்த நாயன்மார் களும் அநேகர். வயதில் சிறு பிள்ளையாக இருந்தா லும், பதினாறு ஆண்டுகள் மட்டுமே பூவுலக வாழ்வு வாழ்ந்திருந்தாலும், சைவப் பெரியோரில் உன்னத நிலையில் போற்றப்படும் ஞானசம்பந்தப் பெருமானைப் பெருமைப்படுத்தும் விதத்தில்தான், ஞானசம்பந்தர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கோயில். வெளியிலிருந்து பார்க்கும்போது விசாலம் புரியவில்லை. படிக்கட்டுகள் இறங்கி, பெரியதாக உள்ள பிராகாரத்தில் வலம் வரலாம். திரு மாளிகைச் சுற்று அமைப்பில் உள்ள பிராகாரம். முன் மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அமைப்புடன் கூடிய மூலவர் சந்நிதி.
முன் மண்டபம் தூண்களோடு, பக்கவாட்டுச் சுவர்கள் இல்லாமல் இருக்கிறது. முக மண்டபப் பகுதியில், ஞானசம்பந்தர் நூல் நிலையம் என்றொரு பகுதி. நிறைய மர அலமாரிகளில் புத்தகங்கள். நேரே போனால் மூலவர் சந்நிதி; அருள்மிகு ஞானசம்பந்தர்; சிவலிங்கத் திருமேனி. அம்மன் சந்நிதியும் உண்டு.
மூலவர் சந்நிதிக்கு இடப் பக்கத்தில் (அதாவது, சுவாமிக்கு இடப் பக்கம் என்ற கணக்கில்), தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி; அருள்மிகு ஞானாம்பிகை. ஞானப்பால் பெற்ற ஞானசம்பந்த பெருமானல்லவா? இவரும் நமக்கு அறிவும் ஞானமும் வழங்குவார் என்று உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.

மு ன் மண்டபத்திலும் பிராகாரத்திலும் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் சிலரையும் பாடம் சொல்லிக் கொடுக்கும் தந்தைமார் சிலரை யும் காண முடிந்தது. ஞானசம்பந்தர் கோயிலின் பிராகாரச் சுவர்களில், ஓவியங்கள் காணப்படுகின்றன. அழகான சுவரோவியங்கள். சீர்காழி நகருக்கு உள்ள பெயர்கள் ஏற்பட்ட காரணங்களை விளக்கும் ஓவியங்கள். திருஞானசம்பந்தரே ‘பல்பெயர்ப் பத்து’ என்னும் பதிகத்தில் (முதல் திருமறை 63-ஆம் பதிகம்- தக்கேசி பண்) சீர்காழியின் பெயர்களுக்கான காரணங்களைப் பாடுகிறார். ‘ஞானசம்பந்தரே ஞானம் நல்குவீர்!’ என்று விண்ணப்பித்தவாறு வெளிப் போகிறோம்.
மீண்டும் வடக்குச் சுற்றில் நடக்கத் தொடங்க, பிரம்ம தீர்த்தம் கண்ணில் படுகிறது. வடக்குச் சுற்றில், மேற்கு முனையிலிருந்து தொடங்கி நீளும் அம்மன் சந்நிதி; அம்மன் சந்நிதிக்கு முன்பிருந்து ஆரம்பித்து, மீதி தூரம் முழுவதையும் நிறைத்துக் கொண்டு, பிராகாரத்தின் கிழக்கு முனை வரை நீண்டு கிடக்கும் பிரம்ம தீர்த்தம். ஞானசம்பந்தர் கோயிலிலிருந்து வெளியே வந்தால், அம்மன் சந்நிதி மதிலை ஒட்டியே நடக்கிறோம்.
அம்மன் சந்நிதி, தனிக் கோயிலாகவே திகழ்கிறது. வடக்கு கோபுரத்தை ஒட்டினாற் போல, கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயில். முன் மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி வாகனம். விநாயகரையும் துவார சக்திகளையும் வணங்கி உள்ளே நுழைந்தால், பெரிய பிராகாரம். இங்கேயும் திருமாளிகைச் சுற்று அமைப்பிலான பிராகாரம். வாயிலில் நின்று பார்த்தால், அம்பாள் சந்நிதி நேரே தெரிகிறது.
இரண்டு படிகள் ஏறி முக மண்டபத்தை அடைகிறோம். அடுத்துள்ள மண்டபத்தில் போய் நின்று உள்ளே நோக்கினால், அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருள்

எத்தகைய சிக்கலிலும் இடரிலும் ஸ்திரத் தன்மையைத் தரக் கூடியவரான இந்த அம்பாள், நான்கு திருக்கரங்களோடு, அபய- வரத ஹஸ்தங்கள் தாங்கிக் காட்சி தருகிறார். மாசி மாத வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு மாவிளக்கு இடுவதும் காவடி சுமப்பதும் உண்டு. கம்பிகளால் ஆன காவடிகளைச் சுமந்தும், நாக்கிலும் முதுகிலும் அலகு குத்திக் கொண்டும் முன் மண்டபம் முழுக்க பக்தர்கள் கூடியிருந்தார்கள்.பாலிக்கிறார். மென்மையான புன்னகையோடு திருமுகம் காட்டும் அம்பாளின் திருநாமம், அருள்மிகு ஸ்திர சுந்தரி அல்லது திருநிலைநாயகி. பெரியநாயகி என்றும் சில குறிப்புகள் உள்ளன.
திருநிலைநாயகியை வணங்கிவிட்டு, உள் பிராகாரத்தை வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தங்களாக சாமளாதேவி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி மற்றும் துர்க்காதேவி. தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரி. பிராகாரச் சுற்று மண்டபத்தில் வாகனங்கள் வைக்கப் பட்டுள்ளன. ஆடிப் பூர நாளும் அம்பாளுக்கு உகப்பான நாளாகும்.
ஸ்திரசுந்தரிப் பெருமாட்டியை வணங்கிவிட்டு முன் மண்டபம் வருகிறோம். மண்டபத்தின் வடக்குப் புறத்தில் முருகப்பெருமான் சந்நிதி.
அம்பாள் சந்நிதி மண்டபத்தில் நின்று நோக்க, எதிரே ஞான நெடுங்கடலாக விரிந்து கிடக்கிறது பிரம்ம தீர்த்தம்.
சேலொன்று விளையாடு சீகாழி நாடாளி செங்கீரை ஆடியருளேசெழுநான் மறைத் தலைவ திருஞானசம்பந்த செங்கீரை ஆடியருளே
என்று திருவாவடுதுறை எட்டாவது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள், தாம் இயற்றிய திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழில் பாடித் துதித்தாரே, அந்த ஞானசம்பந்தக் குழந்தை, ஞானப்பால் அருந்திய அதே திருக்குளம் - பிரம்ம தீர்த்தம். பெரிய குளம். வெயில் வீச்சு மின்னும் குளம். நான்கு புறமும் நல்ல படிக்கட்டுகள். குளத்தின் தெற்குப் புறப் படிக்கட்டுகள் ஏறுமிடத்தில், அலங்கார வளைவு. ஞானசம்பந்தருக்கு அம்பிகை பொற்கிண்ணத்தில் பாலளிப்பது, தோணியப்பரைத் தந்தைக்குத் தனயன் சுட்டிக்காட்டுவது, பிரம்மா வழிபடுவது என்று பற்பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில்தான், ஞானசம்பந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்வு நடந்ததாக ஐதீகம்.
சீர்காழி திருத்தலத்துக்கு 22 தீர்த்தங்கள் இருக் கின்றன. இவற்றுள் பிரதானமானது பிரம்ம தீர்த்தமே. பிரம்மதேவன் இதை ஏற்படுத்தி, இங்கு நீராடி, இறையனாரை வழிபட்டாராம்.
தோடுடைய செவியனாக, காழிக் கொழுந்தான பாலறாவாயருக்கு ஞானப் பால் கொடுத்தருளிய பெருங்கருணையை எண்ணி எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டே, பிராகாரத்தில் சற்றே திரும்பி, கிழக்கு வாயில் பகுதியை அடைகிறோம்.
உயரமான ஐந்து நிலை கிழக்கு ராஜ கோபுரம் பரவசப்படுத்துகிறது. ஒரு பக்கம் கோயில் அலு வலகம்; விசாலமான இடம். பலிபீடமும் கொடிமரமும் தாண்டி, மூலவர் மகா மண்டபத்துள் நுழைகிறோம். வலப் புறத்தில், நடராஜர் சபை; அதைத் தண்டி பள்ளியறை. அர்த்த மண்டபத்துள் நுழைய, எதிரில்.... திருநீற்றுப் பட்டையும், பட்டும் சார்த்திக் கொண்டு திவ்வியமாக தரிசனம் தருகிறார் அருள்மிகு பிரம்ம புரீஸ்வரர்.
‘பிரமாபுரம் மேவிய பெருமானே’ என்று சிறப்பிக்கப் பட்டவர் இவர்தாம்! பிரம்மாவே ஸ்தாபிதம் செய்து வணங்கிய லிங்க மூர்த்தம் என்று ஐதீகம். சீர் பூத்த காழி நகர் அமர்ந்த பிரம்மேசனை வணங்கி வெளியே வருகிறோம். பக்கத்திலேயே ஞானசம்பந்தருக்கு ஒரு சந்நிதி. உற்சவர், ஞானப்பால் கிண்ணத்தைக் கையில் ஏந்தியபடி நிற்கிறார். நாளும் தமிழ் ஞானசம்பந்தப் பெருமானைப் போற்றி விட்டு, பக்க வாயில் வழியாகப் பிராகாரத்தை அடைகிறோம்.
நாம் நுழைந்திருப்பது பிராகாரத்தின் தெற்குச் சுற்று. தெற்குச் சுற்றில் வாகன மண்டபங்கள்; அடுத்து அறுபத்து மூவர்.
ஞானசம்பந்தர் சந்நிதிக்குப் பின்புறம் கங்கா விசர்ஜனர்; அகத்தியர்; விநாயகர். அடுத்ததாக, தட்சிணாமூர்த்தி.
மேற்குச் சுற்றில் திரும்புகிறோம். தென்மேற்கு மூலையில், ஆண்ட விநாயகர். தொடர்ந்து மேற்குச் சுற்றில் சோமாஸ்கந்தர்; லிங்கங்கள்; முத்துச் சட்ட நாதர்; மலைக்குமாரர். தென்கிழக்கு மூலையில், கஜலட்சுமி. வடக்குச் சுற்றில் திரும்ப, மீண்டும் முத்துச் சட்ட நாதர்.
இந்தத் திருச்சுற்று சிறப்பானது. இங்குள்ள படிகளில் ஏறித்தான், தோணியப்பரையும், சட்ட நாதரையும் தரிசிக்க வேண்டும். என்ன விவரம் என்கிறீர்களா?
சீர்காழித் திருத்தலத்தில், மொத்தம் மூன்று மூலவர்கள் எனலாம். பிரம்மபுரீஸ்வரர்; தோணியப்பர்; சட்ட நாதர். பிரம்மன் பூசித்த பிரம்மபுரீஸ்வரர் லிங்க வடிவம்; தோணியப்பர் (ஞானப் பால் கொடுத்தவர்) குரு வடிவம்; சட்டநாதர் சங்கம வடிவம்.
பிரளய காலத்தில், எங்கும் வெள்ளம். உயிர்களெல்லாம் இறைவனிடத்தில் ஒடுங்கிப் போக... மாயையைத் தம்முடைய தோணியாக (படகாக) ஆக்கிக் கொண்டு, உமையம்மையையும் அந்தத் தோணியில் ஏற்றிக் கொண்டு, தூயதான சீர்காழித் திருத்தலத்தில் சிவபெருமான் வந்து தங்கினார். தோணியில் வந்ததால் அவர் தோணியப்பர்; தோணியாக இங்கு வந்ததால், இது தோணிபுரம். அம்மையும் அப்பனுமாக இருக்கும் தோணியப்பத் திருவுருவத்தோடு, அந்தச் சின்னப்பிள்ளை, பிரம்மதீர்த்தக் கரையில் நின்று அழுதபோது, அம்மையும்- அப்பனுமாக வந்து ஞானப்பால் கொடுத்தார்கள்.
தோணியப்பர் சந்நிதிக்குப் போகும் வழி என்று போட்டிருக்கும் படிகளில் ஏறி, அருள்மிகு தோணியப்பரை தரிசிக்கச் செல்கிறோம்.
பிரமாண்டமாக அமர்ந்த கோலத்தில் தோணியப்பர்; அருகில் தோணிபுரத்து நாயகி. ஐயன் நான்கு திருக்கரங்களோடு, அபயம் தாங்கியவராகக் காட்சி தருகிறார். அம்பாள் இரண்டு கரங்கள் தாங்கியிருக்கிறார். முப்புரி நூல் எழில் சேர்க்க, அருள் தரிசனம் தரும் தோணியப்பரின் அழகை வர்ணிக்கச் சொற்கள் இல்லவே இல்லை. அம்மையும் ஐயனும் தோணியில் வந்தபோது, இந்தப் பகுதி மட்டும் சற்றே தூக்கலான மேடாக, பிரளய நீருக்கு நடுவில் தெரிந்ததாம். இதையே தமது இருப்பிடமாக தோணியப்பர் ஆக்கிக் கொண்டார். காளி வந்து தோணியப்பரை வணங்க, ஸ்ரீ காளி வணங்கிய இடம், ஸ்ரீகாளி ஆனது. ரோமேச முனிவர் வழிபட்டதும், பிரம்மபுரீஸ்வரர் பெருமையும் ஓவியங்களாக இரு புறமும் தீட்டப்பட்டுள்ளன. தோணியப்பர் திருச்சந்நிதியை வலம் வரலாம். அங்கிருக்கும் சாளரத்தின் வழியாகப் பார்த்தால், பிரம்ம தீர்த்தம் தெரிகிறது. ஞானசம்பந்தர் அழுது அழைத்தபோது, அம்மையும் அப்பனும் இப்படித்தான் பார்த்திருப்பார்களோ!
தோணியப்பர் சந்நிதிக்குப் பக்கவாட்டிலுள்ள படிகளில் ஏறிச் சென்றால், சட்ட நாதரை தரிசிக்கலாம். குறுகலான படிகளில் ஏறுகிறோம். சட்டநாதரைப் பற்றிய விவரம் என்ன?
மாபலி என்றோர் அரக்கர் தலைவனை நினைவிருக் கிறதா? மாபலியின் செருக்கை அடக்க, மகா விஷ்ணு, வாமனராக அவதாரம் எடுத்தார். செருக்கை அடக்கிய பின்னர், மகாவிஷ்ணுவே செருக் குற்றார். வடுகநாதரான சிவன் சென்று, அவர் மார்பிலடித்துக் கீழே வீழ்த் தினார். வீழ்ந்துவிட்ட பெருமாளைக் காப்பாற்ற, மகாலட்சுமி, வடுகநாதரிடம் மாங்கல்யப் பிச்சை கேட்டார். அவ்வாறே அருளினார். மகாவிஷ்ணு, அந்தத் தமது வடிவத்தின் தோலையும் எலும்பையும் ஆட்கொள்ளுமாறு வேண்டினார். எலும்பை கதையாக்கிக் கொண்ட சிவனார், தோலைச் சட்டையாக அணிந்தாராம். இதுதான் சட்டநாதர் எனும் திருநாமத்துக்குப் பின்னுள்ள கதை. மகாவிஷ்ணுவும் சிவனும் சங்கமித்த வடிவம் என்பதால், இது சங்கம வடிவம். மிக மிக பக்தியோடு சட்டநாதரை தரிசிக்க வேண்டுமென்பது ஐதீகம். நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் சட்டநாதர் பெயராலேயே, கோயில் தேவஸ்தானம் வழங்கப்படுகிறது. வெள்ளிக் கிழமை இரவுகளில், 10 மணிக்கு மேல், புனுகுச் சட்டம் சார்த்தி வழிபடுவது வழக்கம். அப்போது நிவேதனமும் உண்டு.
சட்டநாதரை வணங்கிக் கீழே இறங்குகிறோம். மீண்டும் வடக்குப் பிராகாரத்தில் தொடர்கிறோம்.
படிக்கட்டு இறங்கிய இடத்தின் அருகில், மூங்கில் மரம். பக்கத்திலேயே, பாரிஜாதம். இறைவன் இங்கே மூங்கில் வடிவில் காட்சி கொடுத்தார் (வேணுபுரம்). தல மரம் பாரிஜாதம். தாண்டி நடக்க, பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி கோஷ்ட மூர்த்தங்களான பிரம்மா, துர்கை. பிட்சாடனரும் கால பைரவரும் கூட உள்ளார்கள். பக்கத்திலேயே மேற்குப் பார்த்த சந்நிதி - தேவேந்திர லிங்கம். அருகில், தனி மண்டபத்தில், சண்டிகேஸ்வரர்.
தொடர்ந்து நடக்க... கிணறு. சுவாமிக்கு எடுக்கப்படும் தீர்த்தம். கிணற்றுக்குப் பக்கத்தில் நின்று பார்த்தால், நடராஜர் விமானம் பளீரென்று தெரிகிறது.
கிழக்குத் திருச்சுற்றில் திரும்ப, நவக்கிரகங்களும், அடுத்து ஜ்வரஹரேஸ்வரரும். பிராகார வலத்தை நிறைவு செய்து நிற்கிறோம். உள்ளே பிரம்மபுரீஸ்வரர் தெரிகிறார்.
சீர்காழியைப் பற்றி நினைக்கிறோம். திருஞானசம்பந்தர் மட்டுமல்லாமல், இந்தத் தலத்தோடு தொடர்பு உடையவர்கள் ஏராளம். ராம நாடகக் கீர்த்தனைகள் பாடிய அருணாசலக் கவிராயர் இங்கே பல நாட்கள் வாழ்ந்ததால், அவருக்கு சீர்காழிக் கவிராயர் என்றே பெயர். காழிப் பள்ளு, காழி அந்தாதி ஆகியவற்றை அவர் பாடினார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சீகாழிக் கோவை பாடினார்.
‘சீர்காழி ஞானத் திரவியமே’ என்று ராமலிங்கப் பெருமான் பாடலைப் பாடிக் கொண்டே வெளியே வருகிறோம்.

No comments:

Post a Comment