நான்மாடக்கூடல் - கூடல் மாநகரம் -
ஆலவாய் - பூலோக கயிலாயம் -
கடம்பவனம் - சிவ ராஜதானி -
மதுரையம்பதி... சொல்லும்போதே நாவினிக்கிறதா?
ஆலவாய் - பூலோக கயிலாயம் -
கடம்பவனம் - சிவ ராஜதானி -
மதுரையம்பதி... சொல்லும்போதே நாவினிக்கிறதா?
'மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவைவரி வளைக்கைம்மட மாணிபங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவப்பொங்கழல் உருவன் பூத நாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளிஅங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்தஆலவாயாவதும் இதுவே'
சிவப்பரம்பொருளை வணங்கிய பின்னரே அம்மையின் சந்நிதி செல்வது வழக்கம். என்ன இருந்தாலும் இது மதுரையல்லவா! எனவே, முதலில் அருள்மிகு மீனாட்சியின் பதம் பணிவோம்.
நான்மாடக்கூடல் எனும் பெயருக்குப் பொருத்தமாக இலங்குகிற திருக்கோயில். அம்பிகை மீனாட்சியின் கோயிலும், ஐயன் சொக்கநாதரின் கோயிலும் அருகருகில் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தாலும், பொதுமக்கள் வழக்கில், 'மீனாட்சி கோயில்' என்றே பிரசித்தம். இந்தக் கோயிலை, தாமரை மலரின் மைய மகரந்தப் பகுதியாகவும், சுற்றிலும் உள்ள வீதிகளை மலரின் இதழ்களாகவும் விவரிப்பது வழக்கம்.
தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்; சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் நடைபெற்ற ஊர்; பஞ்ச சபைகளில் ரஜத சபை; யோக முறையில், துவாதசாந்த பதி; ஹாலாஸ்ய க்ஷேத்திரம்; முப்பெரும் சக்தி பீடங்களுள் ஒன்று! இந்தத் தலத் துக்கு இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புகள் உள்ளன. கோயிலுக்குள் நுழைந்து அம்பிகையையும் ஐயனையும் வழிபடும்போது, ஒவ்வொன்றாக இவை விரியும்.
கோயிலின் கிழக்கு வாயிலில் நிற்கிறோம். கோயிலைச் சுற்றி வெளியில் இருக்கும் வீதி, சித்திரை வீதியாகும். மதுரை திருக்கோயிலில் ஓர் அற்புதத்தைக் காணலாம். கோயில் வளாகத்தின் உள்ளேயும், கோயிலைச் சுற்றியும் உள்ள வீதிகள், கோயில் உற்ஸவங்கள் நடைபெறுகிற மாதங்களின் பெயர்களைத் தாங்கியுள்ளன. நான்கு புறங்களிலும் வீதிகள் உள்ளதால், அந்தந்தத் திசைக்கு ஏற்ப, வீதியின் பெயரிலும் திசை விளக்கம் அமையும் (எடுத்துக்காட்டாக, கோயிலை ஒட்டியே உள்ளது சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி, கிழக்குச் சித்திரை வீதி. அடுத்து வெளியில் உள்ளது ஆவணி மூல வீதி, வடக்கு ஆவணி மூல வீதி என்பன போன்று). கோயில் வளாகத்துக்கு உள்ளேயே இருப்பது, ஆடி வீதி.
கிழக்கு சித்திரை வீதியில் நிற்கிறோம். அம்மன் கோயிலுக்கு முன்பாகவும் சுந்தரேஸ்வரர் (சிவன்) கோயிலுக்கு முன்பாகவும் நுழைவாயில்கள் உள்ளன. சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வாயிலில் கோபுரமும் உண்டு. இதற்கு சுந்தர பாண்டியன் கோபுரம் (கிழக்கு கோபுரம்) என்று பெயர். மீனாட்சியம்மன் நுழைவாயிலில் கோபுரம் இல்லை; முகப்பு வாயில் உண்டு. முகப்பு வாயில் சமீபகாலங்களைச் சேர்ந்தது. வாயிலின் மேல் பகுதியில், வெகு நுட்பமாக அமைக்கப்பட்டுள்ள மீனாட்சி திருக்கல்யாண காட்சி. முகப்பின் இரண்டு பக்கங்களிலும் ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீசுப்ரமணி யரும் காட்சி தருகிறார்கள். உள்ளே சென்றவுடன் நாம் நிற்பது, அஷ்ட சக்தி மண்டபம்.
மீனாட்சியம்மன் கோயில், அளவில் பெரியது மாத்திரமன்று; மண்டபங்களுக்குப் பெயர்பெற்றது. ஏராளமான மண்டபங்கள்... எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகி றோம். இப்போது அஷ்ட சக்தி மண்டபத்தைக் கவனிப்போம்.
நீள்செவ்வக அமைப்பில் இருக்கும் இந்த மண்டபத்தின் மேற்கூரை, அரை வட்ட வடிவில் வளைவாக உள்ளது. மண்டபத் தூண்களில் ஒரு பக்கம் வரிசையாக கௌமாரி, ரௌத்ரி, வைணவி, மகாலட்சுமி; மற்றொரு பக்கம் வரிசையாக யக்ஞாரூபினி, சியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் சிற்பங்கள். ஆகவேதான் இது அஷ்ட சக்தி மண்டபம் என்று வழங்கப்படுகிறது. மண்டப முகப்பிலேயே, இருபுறமும் துவார பாலகியர் மற்றும் சாமரதாரிகள் (சாமரம் வீசும் பெண்கள்). அஷ்ட சக்திகளின் அழகு வடிவங்களைக் கண்டுகொண்டே பார்வையை மெள்ள மேலே திருப்பினால்... விதானத்தின் பக்கவாட்டில், மலையத்துவச பாண்டியனுக்குப் பிள்ளைக் குறை தீர, அவன் மகள் தடாதகையாக அம்பிகை தோன்றியது தொடங்கி, உக்கிரபாண்டியன் முடிசூட்டுவிழா வரை, வண்ணச் சுதைச் சிற்பங்களும் ஓவியங்களும் கருத்தைக் கவர்கின்றன.
அஷ்ட சக்தி மண்டபம் என்றழைக்கப் பட்டாலும், கட்டப்பட்ட காலத்தில், பக்தர்களுக் கும் யாத்ரீகர்களுக்கும் உணவு வழங்குகிற இடமாக இது விளங்கியது. மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னருடைய (17-ஆம் நூற்றாண்டு) பட்டமாதேவிகளான ருத்திரபதி அம்மையும் தோளி அம்மையும் இதைக் கட்டுவித்தவர்களாவர். இப்போது தேங்காய்ப் பழக்கடைகள் உள்ளன.
இந்த மண்டபத்தில் இருந்து உள்ளே செல்லும் வாயிலில் காட்சி தரும் நர்த்தன கணபதி யையும் அறுமுகக் கடவுளையும் வணங்கிச் சென்றால், அடுத்திருக்கும் சிறிய பகுதிக்கு 'வேட மண்டபம்' என்று பெயர். ஒருபக்கத்தில், வேட்டுவச்சியின் சிலாரூபம்; எதிர்ப்புறத்தில் வேடன் உருவம். எனவே, இது வேட மண்டபம். வேட்டுவச்சி, கைகளில் சூலமும் கபாலமும் ஏந்தியிருக்கிறாள். கீழே, அவளுடைய சக்திப் படைகள் நிற்கிறார்கள். வேடன், பறவையையும் குரங்கையும் பிடித்திருக்கிறார். தோளில் பாம்பு வேறு. சிவனும் சக்தியுமே, வேடனும் வேட்டுவச்சியுமாக தரிசனம் தருகிறார்கள்.
பக்தர்களின் உள்ளங்களை வேட்டையாடி, அப்படியே கொள்ளை கொண்டுவிடும் அபூர்வ வேடனல்லவா, சிவபெருமான்! கிராத வேடம் (வேடனாக வேடமிடுவது) அவருக்குக் கைவந்த கலை... விடுவாரா?
மற்ற தருணங்களிலும் இடங்களிலும் வேடர்க ளாக வருவதில், அம்மைக்கும் அப்பனுக்கும் ஆசை உண்டு என்றாலும், இந்தத் தலத்தில் இதற்குச் சிறப்பு கூடுதல். எப்படி? அதைத் தெரிந்துகொள்ள, பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத் தைப் புரட்டவேண்டும்.
மதுரைக் காண்டம், கூடல் காண்டம், ஆலவாய்க் காண்டம் எனும் மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த நூல், 3,363 பாடல்களில், சிவபெருமானுடைய அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் விவரிக்கிறது. இதில் கூடல் காண்டத்தில், மாபாதகம் தீர்த்த படலம் உள்ளது. பெரும் பாதகம் செய்த ஒருவனுடைய மாபாவத்தை, இறைவனும் இறைவியும் வேடர்களாகத் தோன்றித் தீர்த்து வைத்த கதை.
அவந்தி நகரத்தில் வாழ்ந்த அந்தணர் ஒருவர். அவருக்குப் பாவியருவன் மகனாகப் பிறந்தான். அந்தக் கொடும்பாவி, தாய்மீது காமமுற்றான். தாயும் தடம் புரண்டு உடன்பட்டாள். இதைத் தந்தை அறிந்தபோதும், மானம் கருதி ஒன்றும் உரைக்கவில்லை. மகனா விடுவான்? தாய் தடுத்த போதும், தந்தையைக் கொன்றான். தூர தேசம் சென்று வாழலாம் என்ற எண்ணத்துடன் தாயை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். வேடர்கள் வழிமறித்தார்கள்; கையிலிருந்ததையெல்லாம் கொள்ளை அடித்தார்கள். பொருள் இழந்து, பண்பும் இழந்து தாயும் மகனும் திரிந்தார்கள்!
அப்பனைக் கொன்ற பாவம் சும்மா விடுமா? பிரம்ம ஹத்தி தோஷமாகத் துரத்தியது. நல்ல இடங்க ளுக்கோ, நல்லவர்கள் அருகிலோ செல்ல விடாது; சாப்பிட விடாது; உறங்கக்கூட விடாது. செய்த மாபாதகத்தால் நிம்மதி இழந்து, மனம் மிக உழன்று, எங்காவது சென்றால் பாவம் தொலையாதா என்று மகன் திரிய, கடைசியில் மதுரையை வந்தடைந்தான்.
அவன் வருகிறான் என்பதை அறிந்த மீனாட்சியம்மை, அதற்கு முன்பாகவே, புலிப்பல்லை மங்கல நாணில் கோத்து அணிந்துகொண்டு, வேடச்சி வேடம் தாங்கினார். சிவ பெருமானும், பெரிய மீசையோடும் வில்லேந்திய கையோடும் வேடராக உருக்கொண்டார். இருவருமாகச் சொக்கட்டான் விளையாடினர். அப்போது அழுதுகொண்டே அன்னையும் மகனும் வந்தனர். என்ன என்று வினவிய வேடுவர், பாவம் நீங்கவும் வழி சொன்னார். 'வேறெங்கும் இது நீங்காது. இது பாவமன்று; மாபாதகம். பிச்சை ஏற்று ஒரு பொழுது மட்டும் உண்பாய்; அடியார்களுக்கு ஏவல் செய்வாய்; பசுக்களுக்கு அருகம்புல் கொடுப்பாய்; நாள்தோறும் முக்காலம் நீராடி, இத்தலத்தை நூற்றெட்டு முறை அங்கப் பிரதட்சிணம் செய்வாய்; அப்போது உன் பாதகம் கழியும்!'
படுபழி அஞ்சான் செய்த பாதகத் தொடக்குண்டு எங்கும்
விடுவகை இன்றி வேறு களைகணும் இன்றி ஈயக்
கடவனைக் காப்ப தன்றோ காப்பென்றான் கருணை மூர்த்தி
'பழி செய்து அதன் பாதகத்தால் தாக்குண்டு, வேறு புகல் இல்லாமல் அலையக்கூடிய வரையும் காப்பதல்லவா கருணை!' என்று அன்னையிடம் ஐயன் கூறினார்.
கிராத வேடம் பூண்டுவந்து மாபாதகனின் பழியகற்றிய வரலாற்றை நினைவுகூர்வது போன்றே வேட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பழைய வரலாற்றுக்காக மாத்திரம் அன்று... இன்றும் என்றும் செய்த தவறுக்காக வருந்தி ஓடோடி வருபவர்களுக்கு அப்பனும் அன்னையும் அருள் தருவார்கள் என்பதை உணர்த்தவே இந்த ஏற்பாடு. வேட மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால்... அடடா! இதுவுமொரு மண்டபம். மீனாட்சி நாயக்கர் மண்டபம். 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையை ஆண்டவர் விஜயரங்கநாத சொக்கநாத நாயக்கர். அவருடைய பிரதானியாக இருந்தவர் மீனாட்சி நாயக்கர். அவர் கட்டியதால் இந்தப் பெயர்.
சுமார் 110 தூண்கள். நாயக்கர் கலைப் பாணியைக் காட்டும் வகையில், தூண்களின் மேல்பகுதிகளில் சிங்க வடிவங்கள். கட்டப்பட்ட காலத்தில் யானைகள், காளைகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு இந்த மண்டபத்தைப் பயன்படுத்தினராம். இப்போது இருபுறமும் வகை வகையான கடைகள். மண்டபத்திலிருந்து இடதுபுறம் திரும்பினால், வளைந்து சென்று தெற்கு ஆடி வீதியை அடையலாம். அங்கு வன்னி மரத்தடி விநாயகரை தரிசிக்கலாம்.
மண்டபத்திலிருந்து நேரே சென்றால், அடுத்து இருப்பது சித்திர கோபுரம். கோபுரத்தை ஒட்டிய தூண் ஒன்றில், கைகூப்பி வணங்குகிற சிற்பம் உள்ளது. மீனாட்சி நாயக்கர் என்று ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர். சித்திர கோபுரத்தை அடையும் முன், அதற்கு முன்புறம் 25 அடி உயரத்தில், 1008 விளக்குகள் கொண்டதாக உள்ள திருவாட்சி. மருது சகோதரர்களால் செய்து வழங்கப்பட்டது. இன்றும் சிவகங்கை சமஸ்தான வழித்தோன்றல்கள் இதில் விளக்கேற்றுகின்றனர்.
மதுரை மாநகருக்கு என்னென்ன பெயர்கள்! சிவ நகரம், கடம்ப வனம், ஜீவன் முக்திபுரம், திருஆலவாய், மதுரை, பூலோக சிவலோகம், சமஷ்டி விச்சாபுரம், தென் கூடம், துவாதசாந்தத் தலம் எனத் திருவிளையாடல் புராணம் பட்டியல் தருகிறது. அழகுமிகு மீனாட்சியம்மன் கோயிலில், சித்திர கோபுரத்தின் அருகில் நிற்கிறோம்.
சித்திர கோபுரம். அம்மன் கோயிலுக்கு எதிரில் உள்ள கோபுரங்களிலேயே உயரமானது. ஏழு நிலைகள் கொண்டது. தெரியாமலா பெயர் வைத்தார்கள்? அதிஅற்புதமான சிற்பங்கள். கயிலாயக் காட்சியும் பலவகையான அம்மன் வடிவங்களும், ஆறுமுகப்பெருமானும், இன்னும் வகை வகையான சிலா ரூபங்களும்... என பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்த இடத்தில் நின்று பார்த்தால், இந்தக் கோபுரத்தை முழுமை யாகக் காண முடியாது. பொற்றாமரைக் குளத்தின் மேற்குக் கரைக்குச் செல்லும் போது, அங்கேயிருந்து மேலும் ரசிக்கலாம்.
இப்போது மேலே தொடர்வோம்... அரியநாத முதலியாரின் திருமகனான காளத்தியப்ப முதலியார் கட்டிய சித்திர கோபுரத்தின் உள்புகுந்து தொடர்ந்தால்... அட, இன்னொரு மண்டபம். இது முதலிப்பிள்ளை மண்டபம். பழங்காலத்து மக்கள் கணக்கில், இருட்டு மண்டபம். 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கடந்தை முதலியார் கட்டினார்; எனவே, முதலிப்பிள்ளை மண்டபம். சரி, அதென்ன இருட்டு மண்டபம்? நெடுங் காலமாக இது போதிய வெளிச்சமின்றி இருட்டாகவே இருந்தது; 20-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் திருப்பணிகள் செய்தபோது, வடக்குச் சுவரில் சாளரங்கள் வைத்தார்கள்.
சற்று நில்லுங்கள். இந்தத் தூண் சிற்பங்கள் எப்படிக் கட்டி இழுக்கின்றன பாருங்கள். சிற்பங்களில் ஏதோ கதை தெரிகிறதே! ஆம், சிவபெருமானுடைய அழகுத் திருக்கோலமான பிட்சாடன வடிவத்தைப் பற்றிய கதை, இவற்றுக்குள் உலா வருகிறது. தாருகவனத்து ரிஷிகள், தங்களது கர்ம அனுஷ்டானங்கள் மட்டுமே போதும் என்றும், அவற்றைத் தங்களைப்போன்று யாரும் செய்ய முடியாது என்றும் கர்வம் கொண்டனர். ரிஷிபத்தினிகளோ, தங்களுடைய கற்புத் திறமே உயர்ந்தது என்று மதர்ப்படைந் தனர். கர்வத்தையும் மதர்ப்பையும் அடக்கி, இவர்களை பக்திவசப்படுத்த இறைவனார் முடிவு செய்தார். பாற்கடல் நாயகனான பரந்தாமன், பெண் வடிவம் பூண்டார்; அழகிய மோகினி ஆனார். சிவபெருமானோ, கையில் திருவோடு ஏந்திய பிட்சாடனர் ஆனார். ரிஷிகளின் யாக சாலை வழியே, மோகினி நடந்தாள். யாகத்தை, கர்மத்தை, அனுஷ்டானத்தை அத்தனையையும் விட்டுவிட்டு, அந்தப் பெண்ணைக் கண்டு ரிஷிகள் மயங்கினர். 'மாலை வேளையில் பிச்சை கேட்க வந்த இவர் யார்? ஆனாலும் இவ்வளவு எழிலா!' என்று ரிஷிபத்தினிகள், பிட்சாடனரைக் கண்டு மயங்க... தங்களின் செயல்களால் பெருமையில்லை என்பதை தாருகவனத்தார் உணர்ந்தனர். எதிரும் புதிருமாக, இரண்டு தூண்களில் தாருகவனத்து ரிஷிகள் இருவர். அடுத்து, ரிஷிபத்தினியும் எதிரில் மோகினியும்; தொடர்ந்து பிட்சாடனர். இவருக்கு எதிரில், மண்டபத்தைக் கட்டிய கடந்தை முதலியார், கூப்பிய கரங்களுடன் நிற்கிறார்.
மோகினியும் பிட்சாடனரும்... தூண் சிற்பமாக இருக்கும் போதே இவ்வளவு அழகென்றால்... சொற்களுக்கு அப்பாற் பட்ட சுகத்தைச் சுவைத்துக்கொண்டே தொடர்ந்து செல்கிறோம். முதலிப்பிள்ளை மண்டபத்திலிருந்து அடுத்திருக்கும் பொற்றாமரைக் குளப் பகுதிக்குச் செல்லும் வழியில், ஒருபக்கம் நர்த்தன கணபதி; மறுபக்கம், சுப்பிரமணியர்.
பொற்றாமரைக் குளம். மதுரை மாநகருக்கே உரித்தான பெருமை. சங்கப் புலவர்கள் கூட்டம் நடைபெற்ற இடம்; பரமனாரின் திருவிளையாடல்கள் பலவும் நடைபெற்ற இடம்; மீன்களே இல்லாத குளம்; அங்கயற்கண்ணியாம் அன்னையின் அமுத அருள் பெற்ற அழகுப் பிரதேசம்... பார்க்கப் பார்க்கப் பரவசப்படுத்தும் பொற்றாமரைக் குளத்தைவிட்டுக் கண்களை அகற்றாமல் நிற்கிறோம்.
165 அடி நீளம், 120 அடி அகலம்; நான்கு புறமும் பக்தர்கள் இறங்கி ஏறுவதற்கு வசதியாகப் படிக்கட்டுகள். அதேபோன்று, குளத்தைச் சுற்றிலும், தூண்களுடன் கூடிய பிராகாரப் பாதைகள். தெற்குப் பக்கச் சுவரில், வள்ளுவப் பேராசானின் குறட்பாக்கள் அனைத்தும் செதுக்கப்பட்டுள்ளன. அபிராமி அந்தாதி, தேவாரப் பதிகங்கள் போன்றவையும் காணப்படுகின்றன.
பொற்றாமரை என்றால் தங்கத் தாமரை. இந்தத் திருக்குளம் எப்படி ஏற்பட்டது?
முன்னொரு காலத்தில், உருவமில்லாத அருவ மான பரம்பொருள், திருவிளையாடல்களை நிகழ்த்தி உலகைப் படைக்கக் கருதியது. அதனால், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்த தமது அருளை, மூன்று கண்கள், செக்கச் சிவந்த செஞ்சடைக் கற்றை, சிவந்த கண்கள் ஆகியவற்றோடு, பிறை அணிந்து, சூலமும் கபாலமும் தாங்கி, இடப் பாகத்தில் உமையம்மை காட்சி தரக் கூடியதான திருவுருவத்துள் அடக்கி வெளிப்பட்டது. பேரொளி யோடு இறைவனார் வெளிப்பட்ட இந்த வடிவைச் சுற்றிச் சூழ்ந்து நந்தி முதலான கணங்கள் வழிபட்டனர். தொண்டர்கள் புடைசூழ, பூமியை அடைந்தார்; கடம்ப வனத்துள் புகுந்தார்; திருஆலவாய் எனும் மதுரை இருக்கும் பகுதியை நாடினார்; அங்கேயே தங்கினார். இறைவனாரை வழிபட்டுக் கொண்டிருந்த கணங்களும் முனிவர் களும் தேவர்களும், நீராடுவதற்குத் தீர்த்தமில்லாது தவித்தனர். புனித தீர்த்தம் எதுவும் பூமியில் இல்லை; அந்தக் குறையைப் போக்கும்படி தீர்த்தமொன்றை அருளுமாறு இறைவனிடம் யாசித்தனர்.
திரிசூலத்தை பூமியில் இறைவன் குத்த, அது நிலவுலகத்தையும் கிழித்துக்கொண்டு, பிரம்ம தடாகத்தையும் துளைத்தது. அதற்கும் அப்பாலிருந்த பெரும்புறக் கடல், பொங்கி எழுந்து, துளை வழியே புகுந்தது. பூமியை அடைந்த கடலின் கொந்தளிப்பைத் தமது கையைக் காட்டி அடக்கிய இறைவனார், ஜடாமுடியிலிருந்து கங்கை நீரை எடுத்து அதனுள் தெளித்தார்.
இறைவனார், ஆதியில் உண்டாக்கியதால் ஆதி தீர்த்தம், அனைத்துக்கும் மேலானதால் பரம தீர்த்தம், மங்கலங்களைத் தரக்கூடியதால் சிவ தீர்த்தம், அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தைக் கொடுப்பதால் ஞான தீர்த்தம், முக்தி வழங்குவதால் முக்தி தீர்த்தம், கங்கை கலந்தமையால் சிவகங்கை, உத்தமமானதால் உத்தம தீர்த்தம், அறம், பொருள், இன்பம், வீடென்னும் பயன்களைப் பயப்பதால் தர்ம தீர்த்தம் என்று பற்பல திருநாமங்கள், இந்தக் குளத்துக்கு அமையப் பெற்றன.
சரி, பொற்றாமரைக் குளம் என்னும் திருநாமம் எப்படி ஏற்பட்டது?
விருத்திராசுரன் எனும் அரக்கனை, தேவேந்திரன் கொன்றான். இருப்பினும், கொலைப் பாவம் துரத்தியது. அதைத் தீர்த்துக் கொள்வதற்காக ஊர்ஊராகத் திரிந்தான். எங்கும் தீராத பாவம், தென் தமிழ்நாட்டில் தீரும் என்று நம்பி வந்தான். கடம்பவனத்தை அடைந்தவுடனேயே, தன்னை விட்டுப் பாவம் அகல்வதை உணர்ந்தான். மகிழ்ச்சியோடு கடம்பவனத்துக்குள் நடந்தான். சுயம்புவாக நின்ற சிவலிங்கத்தைக் கண்டான். இறைவனாரே தனது பாவத்தைத் தீர்த்தவர் என்பதைப் புரிந்துகொண்டவன், சிவலிங்க பூஜை செய்வதற்கு மலர்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். அதுவும் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினான். தேவேந்திரன் ஆயிற்றே... அவன் நினைத்த மாத்திரத்தில், அந்தக் குளத்தில் தங்கத் தாமரைகள் தோன்றின. அதுவே பொற்றாமரைக் குளம்!
பொற்றாமரைக் குளத்தால் பெருமை பெற்றவர்களும், சாபம் நீங்கப் பெற்றவர்களும் ஏராளம்.
துர்வாசர் கொடுத்த மலர்களைக் காலில் போட்டு நசுக்கிய ஐராவத யானை, அவரது சாபத்தால் காட்டு யானை ஆனது. கரிய நிறம் பெற்று 100 ஆண்டுகள் வனங்களில் திரிந்தது. இறுதியில், கடம்ப வனத்தை அடைந்து, பொற்றாமரைக் குளத்தில் நீராடி, இறைவனை வணங்கிச் சாபம் நீங்கப்பெற்று, வெள்ளை நிறத்தை மீட்டுக்கொண்டு, தேவலோகம் சென்றது.
ஆற்றங்கரையில் தவம் செய்து வேதம் ஓதிய முனிவர்களைக் கண்டது ஒரு நாரை. அவர்கள் கூறியதை செவி மடுத்ததால் நல்ல புத்தி கொண்ட அந்த நாரை... ஆற்றில் சில மீன்களை இரையாகக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும்... முனிவர்கள் நீராடிய தருணத்தில் அவர்களின் திருமேனியில் குதித்து விளையாடியவை என்பதால், அவற்றைப் பிடிக்காமல் விட்டுவிட்டது. முனிவர்களுடனே மதுரை வந்தது. அவர்கள் பொற்றாமரைக் குளத்தருகில் இருந்தபோதும், குளத்தின் மீன்களைப் பிடிப்பது பாவமென்று கருதி, உண்ணாமலே இருந்தது. தனது நெறியில் பிறழாத அந்த நாரைக்கு முக்தி கொடுத்த இறைவன், இந்தக் குளத்தில் மீன்கள் இருந்து, அவற்றை நாரைகள் தன்னியல்பில் பிடித்துவிட்டால்கூட அவற்றுக்குப் பாவம் வந்து சேருமே என்று பொற்றாமரைக் குளத்தில் மீன்களே இல்லாமல் செய்துவிட்டாராம்.
பாண்டிய மன்னனின் வினாவுக்குப் பாடல் கொண்டு வந்த தருமியின் பாடலில் குற்றம் கண்டுபிடித்தார் நக்கீரர். இறைவனே புலவராக வந்து வாதம் செய்தார்; ஆணவத்தின் தலைப்பட்டுத் தனக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்று வாதிட்ட நக்கீரருக்கு வெப்பு நோய் தோன்ற, அது தணியும் பொருட்டுப் பொற்றாமரைக்குளத்தில் வீழ்ந்தார்; பின்னர், பிற புலவர்கள் வேண்ட, இறைவன் அவரைக் கரையேற்றினார்; தருமிக்கும் பொற்கிழி வழங்கினார்; நாள்தோறும் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி இறைவனை வழிபட்ட நக்கீரருக்கு, அகத்தியரைக் கொண்டு இலக்கணம் கற்பிக்கச் செய்தார் இறைவனார்.
பொற்றாமரைக் கரையில் குழுமிய சங்கப் புலவர்கள் இடையே ஏற்பட்ட பிணக்கைத் தீர்க்கும் பொருட்டு, அவர்களில் திறமை மிக்கவரை அடையாளம் காண வகை செய்யும் சங்கப் பலகையையும் தந்தருளினாராம்.
பொற்றாமரைக் குளத்தைச் சுற்றிலும் உள்ள நடை வழிச் சுவர்களில், இறைவனின் திருவிளையாடல் காட்சிகளையும் காணலாம். சோழர் பாணியிலும் நாயக்கர் பாணியிலும் தீட்டப்பட்டிருந்த பழங்கால ஓவியங்களில் பலவும் காலத்தின் கோலமாகச் சிதைந்துவிட்டன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக் காட்சியும், அதனை ராணி மங்கம்மாள் கண்டு இன்புறுவது போலவும், விதானங்களில் ஓவியங்கள் இருந்தனவாம். இப்போது ஒருசில ஓவியங்களை மீட்டிருக்கிறார்கள்.
பொற்றாமரைக் குளத்தின் தெற்குப் பிராகாரத்தின் மேற்கு மூலையில், நாம் சந்தித்து ஆசி வாங்கவேண்டிய ஒருவர் இருக்கிறார். அவர்... விபூதிப் பிள்ளையார்! இவர் சமீப காலத்தவர் என்றாலும், பிரசித்தியானவர். வடநாட்டில், கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், இறைவன் திருவுருவங்களுக்குத் தாங்களே அபிஷேக- ஆராதனைகள் (அர்ச்சகர் இல்லாமல்) செய்வது வழக்கம். அதையட்டி, இங்கேயும் (மதுரை - வடநாட்டு யாத்ரீகர்கள் பலரும் வருகிற தலமல்லவா!) பிள்ளையார் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, அவர் மீது பக்தர்களே திருநீற்று அபிஷேகம் செய்யும் முறையை ஏற்படுத்தி யிருக்கின்றனர். அன்பர்களின் அபிஷேகத்தை ஏற்று, குறுநகையோடு மிளிர்கிறார் விநாயகர்.
பொற்றாமரைக் குளத்தின் பெருமைகளை அசை போட்டுக்கொண்டே, அம்மன் சந்நிதி வாயிற் பகுதியை நெருங்குகிறோம்.
அம்மன் சந்நிதிக்குப் பக்கத்தில், பொற்றாமரைக் குளத்தின் மேற்குச் சுற்றுப் பகுதியில், அழகிய ஆறு தூண்களுடன் திகழ்கிறது ஒரு மண்டபம். 16-ஆம் நூற்றாண்டில், விசுவநாத நாயக்கரின் ஆட்சிக் காலத்தில், கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் வெள்ளிக்கிழமைகளில், மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருவடிவங்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்கள். ஆகவே, ஊஞ்சல் மண்டபம் என்று பெயர். சமீப காலத்தில், சுற்றிலும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளதால், ஊஞ்சல் திருக்கோலத்தை, எதிர்திசையிலிருந்தும் கண்ணார தரிசிக்கலாம். இந்த மண்டபத்திலிருந்து தெற்கு நோக்கி (இடது புறமாக) நகர்ந்தால், தெற்கு ஆடிவீதியையும், தெற்குக் கோபுரத்தையும் அடையலாம். வடக்கு நோக்கி நகர்ந்தால், நேரே முக்குறுணி விநாயகரை அடையலாம்.
ஊஞ்சல் மண்டபத்தில் நின்றுகொண்டு, பொற்றாமரைக் குளத்தை மீண்டும் திரும்பிப் பார்க்கும்போது... அட, குளத்தின் சுற்றுக்குள் பதிந்தாற்போல ஒரு மண்டபம்! ஆமாம், இது ராணி மங்கம்மாள் மண்டபம்! ஓ... ராணி மங்கம்மாள் கட்டினதா? இல்லையில்லை. 16-ஆம் நூற்றாண்டில், விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில், செட்டியப்ப நாயக்கர் கட்டியது. அப்படியெனில் ஏன் மங்கம்மாள் பெயர்? மீனாட்சி கல்யாணத்தில் பங்குபெற்று, ராணி மங்கம்மாள் புளகாங்கிதத்தோடு நிற்கும் ஓவியக் காட்சியைப் பற்றிப் பார்த்தோமே, நினைவிருக்கிறதா? அந்த ஓவியம் இந்த மண்டபத்தின் விதானத்தில்தான் காணப்படுகிறது. ராணியின் காலத்தில் (17-ஆம் நூற்றாண் டின் கடைப் பகுதியும் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும்) இங்கே நிறைய ஓவியங்கள் தீட்டப்பட்டதாகத் தெரிகிறது.
காலப் போக்கில் இந்த ஓவியங்கள் பலவும் களையிழந்து வண்ணமிழந்து சிதைந்துபோக, சமீபத்திய திருப்பணிகளில், இவற்றைச் செவ்வனே சீர் செய்திருக்கின்றனர். இவை, மீனாட்சியின் திருவரலாற்றைச் சொல்வ தாக அமைந்திருக்கின்றன.
உலக திக்விஜயம் செய்கிற மீனாட்சி... தத்தம் வாகனங்களில் வந்து தன்னை எதிர்க்கும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், ஈசானன், வாயு, குபேரன் ஆகிய எட்டு திசைக் காவலர்களுடனும் போரிட்டு வெல்லும் காட்சி அற்புதம். மீனாட்சியின் திருக்கல்யாண கோலம் இன்னும் அழகு.
ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கு மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுக்கிறார் திருமால். வலது மேல்கரத்தில் சக்கரம் ஏந்திய நீல நிறத் திருமால்; நாணப் புன்முறுவலுடன் சாய்ந்து நிற்கும் பச்சை வண்ண மீனாம்பிகை; மானும் மழுவும் பூச்செண்டும் தாங்கிய வெண்ணிற மேனியரான மாப்பிள்ளை சொக்கேசர்; திருமண அக்னியை வளர்க்கிறார் பிரம்மா. மண மக்களுக்கு இடது பக்கத்தில், எண்திசைக் காவலர்கள். இவர்கள் ஒவ்வொருவரின் மேனி வண்ணங்களும் துல்லியமாகக் காட்டப்பட்டுள்ளன.
இந்திரனுக்கு அருகில் கைகூப்பி நிற்கும் நந்திதேவர்; பக்கத்திலேயே வெண்ணிறச் சேலையில், கம்பீரமான தோற்றத்துடனும் கச்சிதமான அணிகலன்களுடனும் மங்கம்மாள், அஞ்சலிக் கரங்களோடு நிற்கிறார். மிகவும் சிறிய உருவமாக, மங்கம்மாளுக்கு அருகில், நீலப்பச்சை ஆடையும் வெள்ளைத் தலைப்பாகையும் அணிந்த விஜயரங்க சொக்கநாதன் (இவர், ராணியின் பெயரன். இவர் தாயின் வயிற்றிலிருக்கும்போதே, இவருடைய தந்தை, அதாவது ராணியின் மகன் இறந்துபோக, மகப்பேற்றைக் காட்டி மருமகள் உடன்கட்டை ஏறுவதை ராணி தடுத்தார்; பின்னர், மூன்று மாதப் பெயரனுக்குப் பட்டம் சூட்டி, அவருடைய பிரதிநிதியாக இருந்து, தானே அரசாண்டார்). தெலுங்கிலும் தமிழிலுமாக ராணியின் பெயரும் (மகாராஜமாண்ணி மகாராஜராஜி மங்கம்மாள்), தமிழில் விஜயரங்கநாதன் பெயரும் எழுதப்பட்டுள்ளன. மண மக்களுக்கு வலது பக்கத்தில், எண்திசைக் காவலர்களின் பத்தினிமார்கள். அவர்களில், கரும்பேந்திய இந்திராணி; திருமாலுக்கு அருகில் மகாலட்சுமி; அடுத்ததாக, சரஸ்வதி. ஓவியத்தின் ஒருபுறத்தில் மங்கம்மாளின் தளவாயான ராமப்பய்யரும் கரம்குவித்து நிற்கிறார்.
'மீனாட்சியம்மன் செங்கோல் கொடுத்தது' எனும் தலைப்புடன் உள்ள ஓவியம், திருமலை நாயக்கர் காலத்திலிருந்து மதுரை மன்னர்கள் பின்பற்றிய வழக்கத் தைக் காட்டுகிறது. பட்டமேறுகிற மங்கம் மாள், அம்பிகையிடமிருந்து செங்கோலைப் பெறுவதற்கு முன்னதாக, அம்மனை வணங்கி நிற்கிறார். அம்பிகையை வணங்கியபடி அர்ச்சகரும் நிற்கிறார். இன்னும், மேற்கிலும் வடக்கிலும் சிவ மூர்த்தங்களையும் திருவிளையாடல் களையும் வெளிப்படுத்தும் அதிஅழகான ஓவியங்களைக் காண முடிகிறது.
கல்யாண சமையல் சாதம்!
மீனாட்சி திருமணத்தில் அரசர்கள், முனிவர்கள், தவசீலர்கள், மக்கள் என்று எல்லோரும் உண்ட பின்னரும், நிறையவே மீதம். இதில் சற்றே கர்வம் கொண்ட அம்பிகை, 'பூத கணங்களை அனுப்பக் கூடாதா?' என்று ஈசனிடம் வினவ, ஐயனும் 'குண்டோதரன் பசியால் துடிக்கிறான்; அவனை அனுப்புகிறேன்' என்றார். அவனும் வந்தான்; உண்டான். எல்லாம் உண்ட பின்பும் பசி அடங்காமல், 'இன்னும் வேண்டும்' எனக் கேட்டு நின்றான். பிராட்டியார் ஐயன் முன் நாணத்தால் தலைகுனிந்து நின்றாள்.
தீயவர்களின் தீமையெல்லாம் ஒன்று திரண்டு, குண்டோதரனது வயிற்றில் பசியாக முற்றுகையிட்டிருந்தன. அம்பிகையைப் புன்சிரிப்போடு சிவனார் பார்க்க... அவரின் திருவுளப்படி, தானே அன்னம் வடிவம் கொண்டாள்; தயிரும் சோறுமாக நிறைந்து குண்டோதரனின் பசி தீர்த்தாள்.
ஆனால், இப்போது தாகம் பெருகியது. நீர் தேடி அவன் அலைய, மீண்டும் முறுவலோடு அம்மையைப் பார்த்த சிவன், தம்முடைய முடியில் அணிந்த கங்கையை அழைத்தார்; அவளும் பொங்கிப் பெருகி வர, அதில் சென்று நனைந்து நீர் பருகினான் குண்டோதரன். அவனுடைய பசியைத் தீர்க்க முடியாமல் பெண் வீட்டார் தவித்த காட்சியைத்தான், அன்னமிட்ட படலமாக நிறைவேற்றுவார்கள்.
|
தேரோடும் மதுரையில் சித்திரைத் திருவிழா!
பாண்டியனின் மகளாக- தடாதகைப் பிராட்டியாக அவதரித்த மீனாட்சி, மதுரையின் அரசியாக முடிசூடினாள்; பலரையும் வென்றாள்; பின்னர், சுந்தரேஸ்வரரை மணந்தாள். அழகரான திருமால், வசந்த காலத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் வழங்க... மீனாட்சியைக் கரம் பிடித்த சுந்தரேஸ்வரர், மதுரையின் மன்னராகப் பட்டம் சூட்டிக் கொள்ள... மீனாட்சியம்மையும் சுந்தரேஸ்வரரும் தேர்பவனி வர... இவை அனைத்தும் சேர்ந்ததே சித்திரைத் திருவிழா!
|
அழகான அழகர் திருவிழா!
தங்கை மீனாட்சியின் திருமணத்தில் பங்குகொள்ள, அழகர், சீர் செனத்தியோடு வருகிறார். பலரையும் சந்தித்துவிட்டு வரும்போது தாமதாகி விடுகிறது. வைகைக்கு வடகரையை அடையும்போது, அதற்குள் தங்கையின் திருமணம் முடிந்துவிட்டது என்பதை அறிகிறார். தமக்காகக் காத்திருக்கவில்லையே என்ற கோபத்தில் மதுரைக்கே வராமல், அப்படியே திரும்பிவிடுகிறாராம்!
வீரராகவப் பெருமாள் கோயிலில் அவர் தங்குகிற நாளில், துலுக்க நாச்சியார் இல்லத்துக்குச் சென்று வருவதாகவும் கதை உண்டு.
|
திருக்கரத்தில் கிளியை ஏந்தியபடி மீனாட்சியம்மை அருளாட்சி நடத்துவதால், முன்பெல்லாம் இங்கே ஒரு பெரிய கிளிக்கூண்டை வைத்துக் கிளிகளை வளர்த்தனர். கிளிக்கூண்டு இப்போது இல்லையெனினும், பெயர் மட்டும் நிலைத்துவிட்டது.
இது வெறும் கிளி மண்டபம் மட்டுமில்லை; அழகான சிற்பக் கூடம். கச்சிதமான சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்ட தூண்கள்; கம்பீரமான பீமன், சாந்தமான தருமர், ஒரு கையில் வில்லுடன் வலது கையில் வாளை ஓங்கிய சகாதேவன், வில்லேந்திய நகுலன், தாடி வைத்துக்கொண்டு தவக்கோலத்தில் காட்சி தரும் அர்ஜுனன் (இந்தச் சிற்பத்தை தருமர் என்பார்கள் சிலர்), நாகாஸ்திரத்தோடு நிற்கும் கர்ணன், வியாக்ரபாதர், நெஞ்சில் அறைந்துகொள்ளும் வாலி, எதிர்த்தூணில் சற்றே அளவில் சிறுத்த சுக்ரீவன், எழில்மிக்க நடனப் பெண், பெருமிதம்மிக்க யாளிகள்... இப்படி ஏராளமான சிற்ப அற்புதங்கள். இன்னும் இன்னும் பார்க்கத் தூண்டுகிற பரமானந்தம்.
இந்த மண்டபத்தின் வியாக்ரபாதர் சிற்பத்தைப் பற்றிச் சிலர், வேறுவிதமான கருத்துகளைச் சொல்கிறார்கள். அதன்படி, அது புருஷாமிருகத்தின் (பாதி மனிதன், பாதி மிருகம்) சிற்பம். புருஷ வியாக்ரம், மிருகாநரம் என்றெல்லாமும் அழைக்கப்படுகிற புருஷாமிருகத்தின் கதை என்ன?
பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் செய்தபோது, புருஷாமிருகத்தின் பால் தேவைப் பட்டது. புருஷாமிருகம் ஆழமான சிவபக்தி கொண்டது; ஆனால், விஷ்ணு பக்தர்களிடம் துவேஷம் காட்டும். கிருஷ்ணர், பால் கொண்டு வருவதற்காக பீமனை அனுப்பினார்; புருஷாமிருகத்தை வசப்படுத்த ருத்திராட்சங்களையும் கொடுத்தனுப்பினார். காட்டுக்குள் சென்று தேடிய பீமன், அதனைக் கண்டுபிடித்துவிடுகிறான். ஆனால், அதுவோ அவனை விரட்டுகிறது. தன்னை அது பிடிக்காமல் இருப்பதற்காக, ருத்திராட்சத்தைப் போடுகிறான். உடனே புருஷாமிருகம் பூஜை செய்கிறது. பின்னர் அதனிடம் பேசி, தன் நாட்டுக்கு அதை அழைத்து வர முற்படுகிறான்.
பற்பல நிபந்தனைகளைப் போடுகிற புருஷாமிருகம், தனக்கு முன்னால் காத தூரம் இடைவெளியில் அவன் போனால், தானும் தொடர்ந்து வருவதாகச் சொல்கிறது.
மகாபாரதத்தில், உண்மையிலேயே இது நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், விஜய நகர சாம்ராஜ்ஜியம், திருமலை நாயக்கர் ஆட்சி போன்ற காலங்களில், இப்படிப் பட்ட கதைகள் பல, பரவலாக வழங்கப்பட்டன. சைவ - வைணவ ஒற்றுமையை வளர்ப்பதற் காகவும் நன்னெறிகளைக் கூறுவதற்காகவும் இவற்றைப் பயன்படுத்தினர். அதற்கு ஏற்றவாறு ஓவிய, சிற்பங்களை உருவாக்கினர். அரியும் சிவனும் ஒன்று என்று அறியாதவர்கள் மண்ணுக்குச் சமமானவர்கள்; மனித வடிவில் இருந்தாலும் மிருகத்தன்மை கொண்டவர்கள் என்று சொல்ல நினைத்ததன் விளைவு போலும்!
கிளிக்கூட்டு மண்டபத்தின் வடக்குப் பகுதியிலிருந்து, மடப் பள்ளிக்குள் நுழையலாம். நுழைகிற இடத்தில், சுவாமிக்கும் அம்பாளுக்கும் பூக்கட்டும் இடம். அதற்கு அருகில் ஒரு சந்தனக்கல். மும்மையால் உலகாண்ட மூர்த்தி நாயனார் பயன்படுத்திய சந்தனக்கல் என்கிறது அறிவிப்புப் பலகை.
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர் மூர்த்தி நாயனார். மதுரையில் அவதரித்த அவர், நாள்தோறும் சோமசுந்தரக் கடவுளுக்குச் சந்தனம் அரைத்துக் கொடுப்பார். அதே காலத்தில், பாண்டியனைப் போரில் வென்ற கர்நாடக மன்னன் ஒருவன், மதுரையைக் கைப்பற்றினான். சிவ வழிபாட்டைப் பலவகைகளிலும் தடுத்தான். மூர்த்தி நாயனாருக்குச் சந்தனக் கட்டைகள் கிடைக்காதிருக்கும்படி இடைஞ்சல் செய்தான்; கடைகளிலும் அவருக்குச் சந்தனக் கட்டைகளை விற்கக்கூடாது என்று தடை விதித்தான். எங்கு தேடியும் சந்தனம் கிடைக்காத நிலையில், அவர் சந்தனக் கட்டைக்குப் பதிலாகத் தனது கையையே கல்லில் வைத்துத் தேய்த்தார்.
அவருடைய கை தேயத் தேய, உடலும் எலும்பும் தசையும் தேயத் தேய...
உள்ளம் உருகிய இறைவனார் இறங்கி வந்தார்; மூர்த்திக்கு அருளினார். கொடுங்கோலானால் ஏற்பட்ட தீமைகளை அழித்து, மூர்த்தியே நல்லாட்சி நடத்துவார் என்றும் மொழிந்தார்.
அன்று இரவே, காரணமேயில்லாமல் திடீரென்று நோய்வாய்ப்பட்ட அரசன் இறந்துபோனான். வாரிசுகள் இல்லாத அவன் மரணமடைய, மதுரைக்கு அரசர் தேடுகிற பணி தொடங்கியது. பட்டத்து யானை யின் கண்களைத் துணியால் கட்டி, அதனிடம் மாலையைக் கொடுத்து அனுப்ப, அது மூர்த்தி நாயனாரைத் தேடிவந்து மாலையிட்டது. தன்னையே சந்தனமாக அரைத்தவர், ஊர் மணக்க அரசரானார். திருநீற்றையும் கண்டிகையையும் ஜடாமுடியையும் அணிகளாகக் கொண்டு மதுரையம்பதியை ஆண்டார்.
ஏய்வுற்ற நல் சந்தனம் எங்கும் பெறாது சிந்தை
சாய்வுற்றிட வந்தனர் - தம்பிரான் கோயில் தன்னில்
நட்டம் புரிவார் அணி நல் திரு மெய்ப்பூச்சு இன்று
முட்டம் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்று
கிளிக்கூட்டு மண்டபத்தில் சுற்றிச் சுற்றி வந்து, மெள்ள அம்மன் சந்நிதி வாயிலை அடைகிறோம். ஸித்தி விநாயகரையும் முருகனையும் வழிபட்டு, அம்மன் சந்நிதிக் கோபுரம் எனப்படும் வேம்பத்தூரார் கோபுரத்தை நெருங்குகிறோம். 12,13-ஆம் நூற்றாண்டுகளில், வேம்பத்தூர் ஆனந்த தாண்டவ நம்பி என்பவரால் கட்டப்பட்டதால், வேம்பத்தூரார் கோபுரம் என்று இது அழைக்கப்படுகிறது. மூன்று நிலைகள் கொண்ட இதனை, சந்நிதிக் கோபுரம் என்றும் சொல்வர். வேடிக்கை தெரியுமா? இது பெண்மணி ஒருவரால் கட்டப்பட்டதாகத் திருப்பணி மாலை குறிப்பு தெரிவிக்கிறது.
கன்னலும் செந்நெல்லும் சூழ் செல்லி நாடன் கவுணியர் கோன்
நன்னர்கள் எண்ணிய ஆனந்த தாண்டவ நம்பிகற்பாள்
தென்னவர் போற்றிய அங்கயற்கண் அம்மை செல்வித் திருச்
சந்நிதி கோபுரம் கட்டினள் தர்மம் தழைக்க என்றே
கோபுரத்தின் உள்பகுதியில் உள்ள மீனாட்சி கல்யாண மற்றும் முடிசூட்டு விழா ஓவியங்களை ரசித்துக்கொண்டே உள்புகுந்து, அம்மன் சந்நிதி 2-ஆம் பிராகாரத்தை அடைகிறோம். சந்நிதிக்கு நேராகக் கொடிமரம். இங்கே, பலிபீடம் கிளிக்கூட்டு மண்டபத்திலும், கொடிமரம் பிராகாரத்திலும் உள்ளன. தங்கத் தகடு வேயப்பட்ட கொடிமரத்தை வணங்கியபடியே, பிராகார வலம் வருவோமா?
பிராகாரத்தில்... முதலில் நம் கண்களில் படுவது, மன்னர் திருமலை நாயக்கர், அவருடைய பட்டத்தரசிகளான ருத்திராபதி அம்மை மற்றும் தோளியம்மை ஆகியோரது சிலைகள். வலத்தைத் தொடர்ந்தால், தென்மேற்குப் பகுதியில், இரண்டு விநாயக உருவங்கள்; உச்சிஷ்ட கணபதி; கூத்தப் பிள்ளையார். விநாயக உருவங்களுக்கு எதிரில், தென்மேற்கு மூலையில், கொலு மண்டபம். 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிற இந்த மண்டபத்தில்தான், நவராத்திரி- ஒன்பது நாட்களும் அம்பிகை கொலுவீற்றிருப்பாள்.
மேற்குச் சுற்றில் திரும்புகிறோம். ஆஹா... ஐந்து நிலைகளுடன் கூடிய அம்மன் சந்நிதி மேலக் கோபுரம். கடக கோபுரம் என்றும் சொல்வர். வீரத்தும்மசி எனும் பெண் இதைக் கட்டினாராம். இருநூறுக்கும் மேற்பட்ட அதி அழகான சுதைச் சிற்பங்கள் இதில் உள்ளன. இந்தக் கோபுரத்தின் முழு அழகையும் காணவேண்டுமானால், மேற்கு ஆடிவீதியில் நின்றுகொண்டு பார்க்கவேண்டும். கடகம் என்றால் மதில்; மதில்மீது கட்டப்பட்டாற்போல அமைந்திருப்பதால், இப்படியரு பெயர். பாதுகாப்புக்காக, இதன் கதவுகளை அடைத்தே வைக்கிறார்கள். வடக்குச் சுற்றில் நடந்து வடமேற்கு மூலையை அடைந்தால், கூடல் குமாரர் கோயில். முருகப் பெருமானுக்குத்தான் இந்தத் திருநாமம். வள்ளி- தெய்வானை சமேதரான கூடல் குமாரர், பன்னிரு கரங்களுடனும் ஆறு திருமுகங்களுடனும் காட்சி தருகிறார். சந்நிதியின் முன் தூண்களில், துவாரபாலகியர். இந்தப் பிராகாரத்தின் வட கிழக்கு மூலையில், சுவாமி கோயில் 2-ஆம் பிராகாரத்தை அடையும் வகையில் ஒரு வாயில். முற்காலங்களில், அம்மன் சந்நிதியிலிருந்து சுவாமி சந்நிதிக்குச் செல்வதானால், கிளிக்கூட்டு மண்டபத்திலிருந்து நடுக்கட்டு கோபுரம் வழியாகத்தான் செல்லவேண்டுமாம். 1956-ஆம் ஆண்டில், அன்றைய அறநிலைய ஆணையாளர் உத்தண்டராமப் பிள்ளை பெருமுயற்சி எடுத்து, இந்த வாயிலை ஏற்படுத்தினாராம்.
பிராகார வலத்தை நிறைவு செய்து, அம்மன் சந்நிதிக்குள் நுழைய யத்தனிக்கிறோம். முதலில் நாம் நுழைவது, முக மண்டபம். ஆறுகால் மண்டபம் என்றும் பெயர். நாயக்கர் ஆட்சிக் காலங்களில், நிறைய கோயில்களில் இப்படிப்பட்ட முக மண்டபங்கள் எழுப்பப்பட்டன.
தொடுக்கும் கடவுள் பழம்பாடல் தொடையின் பயனே நறைபழுத்த
துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழ(கு)
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழல் காடேந்தும் இளவஞ்சிக் கொடியே வருகவே
மலையத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருகவருகவே...
- இந்தப் பாடலைக் குமரகுருபரர் பாடியபோது, கோயில் அர்ச்சகருடைய மகளான சின்னஞ்சிறுமி, தளர் நடையிட்டு வந்து, மன்னரின் மடியில் ஏறி அமர்ந்தாள். மன்னர் கழுத்திலிருந்த மணிவடத்தைக் கழற்றி குமரகுருபரரின் கழுத்தில் போட்டுவிட்டு மறைந்துபோனாள். மறைந்து போனாளா? அப்படியானால்...? ஆம், அம்பிகை மீனாட்சியே, அர்ச்சகர் மகளாக வேடம் தாங்கிவந்து, தமக்கான பாடலைத் தாமே கேட்டுச் சுவைத்திருக்கிறாள்.
சித்திரை விழாவில், அம்மனுக்கு முடிசூட்டு விழா நடைபெறுவதும் இந்த முகமண்டபத்தில்தான்! நாயக்க மன்னர்கள், அம்பாளிடம் செங்கோல் வாங்கியதும் இந்த மண்டபத்தில் வைத்துத்தான் என்கிறார்கள். அடுத்து உள்ளே சென்றால், மஹா மண்டபம். வாயிலில், துவாரபாலகியர். இரண்டு பக்கமும், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்ப் பாடல்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மஹாமண்டபத்துக்குள் நுழைந்துவிட்டோம். இங்கிருந்து அம்மன் சந்நிதி முதல் (உள்) பிராகாரத்துக்குள் புகுந்து விடலாம். இரட்டை விநாயகர் கோயில், முருகன் கோயில்... தென்மேற்கிலும் வடமேற்கிலும் இரண்டு சிறிய கோயில்கள். இந்தப் பிராகாரத்தின் வடக்குச் சுற்றில், பள்ளியறை. வலத்தை நிறைவு செய்து அம்மன் சந்நிதி அர்த்த மண்டபத்தை அடைகிறோம்.
மீனலோசனியாம் அங்கயற்கண்ணி அம்மை, புன்னகை தவழ திருக்கோலம் காட்டுகிறாள்.
வேதப் பழம்பாடல்; ஞானியர் தேடிய நல்மணி; அருள் பழுத்த கற்பகம்; தோன்றாத் துணையாம் சிவனுக்கே துணையானவள்; துவாதசாந்தப் பெருவெளியில் பரமானந்தப் பெருக்கைத் தரும் பூரண நிலவு; அடியார் துயரை அடியோடு துடைக்கும் காருண்ய தேவதை... அருள்மிகு மீனாட்சியம்மையை தரிசித்துப் பரவசப்படுகிறோம்.
நின்ற திருக்கோலம்; பச்சைத் திருமேனி; வலது கரத்தில் மலர்; இடது கரம் லோல ஹஸ்தமாகத் (தொங்கு கரம்) திகழ... வலது தோளில் பச்சைக் கிளி; இடது பக்கம் சாயக் கொண்டை; சின்னஞ் சிறுமியின் முகம்.
மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் நீண்டகாலமாக மகப்பேறு இல்லாததால், யாகம் செய்ய, அந்த வேள்வித் தீயிலிருந்து தோன்றிய பெண் குழந்தையாகக் காஞ்சனமாலையின் மடியில் அமர்ந்தவள் இவள்.
மூன்று மார்பகங்களுடன் குழந்தை தோன்ற, கலங்கி நின்றனர் பெற்றோர். அப்போது அசரீரி ஒலித்தது... 'இந்தக் குழந்தை ஆண்பிள்ளையைப் போல வளர்க்கப்பட வேண்டும். தக்க கணவனைக் காணும்போது மூன்றாவது மார்பகம் மறைந்துவிடும்' என அறிவுறுத்தியது. அதன்படியே வளர்க்கப்பட்டாள்; தடாதகை என்று பெயர் சூட்டப் பட்டாள். முடிசூட்டுவிழா முடிந்த பின்னர், பல திசைகளுக்கும் வெற்றி யாத்திரை போனவள், திருக்கயிலாயத்துக்கும் அவ்வாறே செல்ல, நந்திதேவரால் நினைவூட்டப்பட்ட சிவனார் போருக்கு வர, அவரைக் கண்டதும் மூன்றாவது மார்பகம் மறையப்பெற்றாள். அமைச்சரான சுமதி என்பவள் மூலம் அசரீரி வாக்கு குறித்து அறிந்துகொண்டாள். அதன் பின்னரே, சிவபெருமான் மதுரைக்குச் சொக்கனாக எழுந்தருளி, அம்மையை மணம் புரிந்தார்.
பாண்டிய குலம் தழைக்கவேண்டும் என அம்பிகை, ஆண்டானிடம் வேண்டினாள். அதன்படியே, பூவுலகில் வாழ்ந்த அவர்களுடைய திருமகனாக உக்கிர பாண்டியன் பிறந்தான். தக்க பருவத்தில் அவனுக்கு, காந்திமதி எனும் நங்கை நல்லாளை மணமுடித்து, முடிசூட்டி வைத்து, பின்னர் தடாதகை பிராட்டியும் சொக்கநாதப் பெருமானும் திருக்கோயிலுள் புகுந்து மறைந்தனர்.
பச்சைத் திருமேனி கொண்டதால் உலகுக்குப் பசுமை தருகிற இந்தப் பெருவல்லி, அழகே உருவானவள். அவளுடைய அழகைப் பருகிப் பருகித் திளைத்த சிவனார், அவளைவிட்டுப் பிரியாமல் இருப்பதற்காகச் சில விளையாடல்களைப் புரிந்தாராம். அவளுடைய புன்னகையே முழு நிலவு; நிலவின் கிரணங்களைப் பருகுகிற சகோரப் பறவையாக மாறினார். அவளுடைய கூந்தலின் மலர்களில் திகழும் வண்டாக மாறினார்; ஏன், அவளுடைய கையில் இருக்கும் கவினுறு கிளியாகவே மாறிக்கொண்டார்!
மீண்டும் உள் பிராகாரத்தைச் சுற்றி வருகிறோம். பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள், மீனாட்சியின் வாழ்க்கைக் காட்சிகள், நாயக்கர் கால வாழைப்பூ போதிகைகள், சிம்மத் தூண்கள்... கோஷ்டத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி. எழில் மிக்க திரிதள விமானம்; அழகான சிற்பங்கள்; உச்சியில் தங்கத் தகடு! அம்பிகை அங்கயற்கண்ணியின் சந்நிதியைவிட்டு அகல மனமே இல்லாமல், திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே, சுவாமி சந்நிதியை அடைய முற்படுகிறோம்.
கிளிக்கூட்டு மண்டபத்தை மீண்டும் அடைந்து, அங்கிருந்து வடக்கு நோக்கி நடந்தால், நடுக்கட்டு கோபுரம். இந்த கோபுரத்தைக் கடந்தால், சுவாமி சந்நிதியின் 2-ஆம் பிராகாரம். இடைக்கட்டு கோபுரம், முக்குறுணிப் பிள்ளையார் கோபுரம் என்றெல்லாமும் அழைக்கப்படுகிற இந்தக் கோபுரம், ஐந்து நிலைகளுடனும் ஏராளமான சிற்பங்களுடனும் உள்ளது.
கோபுரத்தைக் கடந்ததும், ஸ்ரீமுக்குறுணி விநாயகர் தரிசனம். சுமார் 8 அடி உயரம் கொண்டவராக, அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 17-ஆம் நூற்றாண்டில், மன்னர் திருமலை நாயக்கர், வண்டியூர் பகுதியில், பெரிய தெப்பக்குளம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார். அதற்காக நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தவர் இந்த விநாயகர். இவருக்கு, விநாயக சதுர்த்தி நாளில், முக்குறுணி அரிசியைக் கொண்டு, ஒரேயரு பிரமாண்ட கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் கொடுப்பார்கள். அதுதான், இப்படிப் பெயர்.
முக்குறுணிப் பிள்ளையாரை வணங்கிவிட்டு, இந்தப் பிராகாரத்தில் வலம் செய்கிறோம். பெரிய விசாலமான பிராகாரம். உள்மதிலும் வெளிமதிலும் இருக்கின்றன. உள்மதிலுக்குக் கபாலி மதில் என்றும்,
வெளி மதிலுக்குச் சுந்தரபாண்டியன் மதில் என்றும் பெயர். திருஞானசம்பந்தர் 'கபாலி நீள் கடி மதில்' என்றே பாடுகிறார். தெற்குச் சுற்றிலேயே தொடர்ந்து நடந்து, மேற்குச் சுற்றை அடைகிறோம். வெளி மதிலில், ஐந்து நிலை கோபுரம். 300-க்கும் மேற்பட்ட சுதைச் சிற்பங்கள். பலக கோபுரம் என்றும் பெயருண்டு (பலகம் என்றால் அடுக்கு).
வடமேற்கு மூலையில், சங்கத்தார் கோயில். மதுரையில் இருந்த கடைச் சங்கத்தில், சிவனாரையும் சேர்த்து 49 புலவர்கள் இருந்ததாகக் கணக்கு. அதன்படி, புலவர்களின் திருவுருவச் சிலைகள் இங்கு எழுப்பப்பட்டுள்ளன. அருகிலேயே காளத்தீஸ்
வரர் மற்றும் ஆதி பராசக்தி சந்நிதிகள். சற்று தள்ளி,
கரிய மாணிக்கப் பெருமாள் சந்நிதி. வடக்குச் சுற்றில் திரும்பினால், கிட்டத்தட்ட தனிக்கோயில் என்பதுபோன்ற ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதி. மஹாமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய இந்தச் சந்நிதியில், கிழக்குப் பார்த்த நிலையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணச் சிற்பம். இவர்களை வழிபட்டால், தடைப்பட்ட திருமணங்கள் கைகூடும். மண்டபத் தூண்களில் நிறைய சிற்பங்கள். சந்நிதியைவிட்டு வெளியே வந்து தொடர்ந்தால், வடக்குச் சுற்று; ஐந்து நிலைகளுடன் திகழும் ரிஷபக் குறி கோபுரத்துக்கு அருகில் வந்துவிடுகிறோம். அதென்ன பெயர்?
முன்னொரு காலத்தில், மீனாட்சி சுந்தரேஸ் வரரை வணங்கவேண்டும் என்ற ஆசை, சோழ மன்னன் ஒருவனுக்கு ஏற்பட்டது. ஆனால், பகைமை கொண்டிருந்த பாண்டிய நாட்டுக்கு எப்படி வருவது என்று புரியவில்லை. அவனுடைய கனவில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள், 'நீ மாறுவேடத்தில் வா, உனக்கு வழி கிடைக்கும்' என்று அருள, அவனும் அவ்வாறே வந்தான். சித்தர் வேடத்தில் அவனைச் சந்தித்த சிவனார், மீன் குறி (பாண்டிய இலச்சினை) இட்டுப் பூட்டியிருந்த வடக்கு கோபுர வாயிலைத் திறந்து, அவனை அழைத்துப் போனார். அவனும் மனதார மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தரிசித்துச் சென்றான். வாயிலைப் பூட்டும்போது, மீன் இலச்சினைக்கு பதிலாகத் தம்முடைய ரிஷப இலச்சினையை இட்டுப் பூட்டினார் பரமன். மறுநாள் பாண்டியன் திகைத்துப் போய் நிற்க, அவனுடைய கனவிலும் தோன்றி உண்மையை விளக்கினார் (திருவிளையாடல் புராணத்தில் இந்தக் கதை உள்ளது - விடை லச்சினை இட்ட
படலம்). வடக்கு வாயிலில் ரிஷபக் குறி இட்டதால், இங்கே கட்டப்பட்ட கோபுரத்துக்கு இந்தப் பெயர் அமைந்ததாம்! வடக்கு வெளி வாயிலில், அதாவது வடக்குச் சித்திரை வீதியில் அமைந்துள்ள கோபுரத் துக்கு, 'மொட்டை கோபுரம்' என்று பெயர். அதனால், ரிஷபக் குறி கோபுரத்துக்கு சின்ன மொட்டை கோபுரம் என்றும் ஒரு நாமதேயம்.
இந்தப் பகுதியில், நந்தவனம், கோயில் கிணறு. வடக்குச் சுற்றின் கிழக்கு மூலையில்... நூற்றுக்கால் மண்டபம்! விஜயநகர மற்றும் நாயக்கர் ஆட்சிக் காலங்களில், மக்கள் தங்குவதற்கும் திருவிழாக்கள் நடத்துவதற்கும் வசதியாக, ஆலயங்களில் நிறைய மண்டபங்களைக் கட்டுவித்தனர்.
மண்டபங்களுள் தலையாயது என்று பொருள்படும்படி, இதை 'மண்டப நாயகம்' என்கிறார்கள். ஆறு அடி உயர மேடை அமைப்பு கொண்ட இந்த மண்டபத்தில் ஸ்ரீநடராஜரை தரிசிக்கலாம்.
2-ஆம் பிராகாரத்தின் தெற்குச் சுற்றில், முக்குறுணிப் பிள்ளையாருக்குப் பக்கத்தில்தான் தொடங்கினோம்; அதனால், வடகிழக்கு மூலையிலிருந்து தொடர்ந்து நடந்து, தென்கிழக்குப் பகுதியையும் பார்த்துவிடலாம். இங்கு, சைவ நால்வர் கோயில். பழக்கத்தில் ஞானசம்பந்தர் கோயில் என்றே வழங்கப்படுகிறது. நால்வர் பெருமக்களுடன் கூன் பாண்டியன், மங்கையர்க்கரசி, குலச்சிறையார் ஆகியோரும் உள்ளனர்.
2-ஆம் பிராகாரத்தின் கிழக்குச் சுற்றில், சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரில் வந்து நிற்கிறோம்.
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மையைத் தரிசித்து முடித்து, சுவாமி சந்நிதியின் 2-ஆம் பிராகாரத்தை அடைகிறோம். இந்தப் பிராகாரம் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று பகுதிகளில் மட்டுமே அமைகிறது. கிழக்குப் பகுதியில் இதுவே விரிவாகி, பெரிய மண்டபமாகி விட்டது; கம்பத்தடி மண்டபம் என்று பெயர்.
இந்த மண்டபப் பகுதிக்கு நடுவில், சுவாமி கொடிக் கம்பமும் பலிபீடமும் உள்ளன. கொடிக் கம்பத்தடியில் உள்ள மண்டபம் என்பதால், கம்பத்தடி மண்டபம். இதில், நிறையத் தூண்கள்; ஒவ்வொன்றிலும் சிற்பங்கள். தூண்களுக்கு நடுவில், அதாவது கொடிமரத்துக்குக் கிழக்கில், நான்கு கால் மண்டபம்; அதில் அழகுற அமைந்திருக்கிறது நந்தி. இதன் விதானத்தில், அழகழகாகச் சுதைச் சிற்பங்கள்! கம்பத்தடி மண்டபத்தில் நின்று பார்வையைச் சுழல விடுகிறோம். வியப்பால் விரியும் கண்கள் குறுகவேயில்லை. தூண்களில், சிவனாரின் அதியற்புதமான சிலா வடிவங்கள்; மொத்தம் 25 வடிவங்கள். 19-ஆம் நூற்றாண்டில், கோயில் திருப்பணி நடைபெற்றபோது, அதில் பங்கேற்ற நகரத்தார் பெருமக்கள், தூண்களையும் சிவத்திருமேனிகளையும் அமைத்தனராம்.
ஈசனுக்கு ஐந்து திருமுகங்கள்; ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய முகங்கள்; ஒவ்வொன்றிலிருந்தும் ஐந்தைந்து வடிவங்கள் தோன்றியதாகச் சொல்வர். பிரதட்சிண முறையிலேயே, வடக்கில் உள்ள நான்கு தூண்களையும், தெற்கில் உள்ள நான்கு தூண்களையும் ஒவ்வொன்றாகச் சுற்றி வந்தால், ஏகபாதமூர்த்தி, ரிஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர், சக்கராதனர், ஜலந்தரவதமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, கஜ சம்ஹாரமூர்த்தி, சண்டேச அனுக்கிரக மூர்த்தி, பிட்சாடனர், வீரபத்திரர், கிராத அர்ச்சுனர், ரிஷபாந்திகர், சோமாஸ்கந்தர், சுகாசனர், கல்யாண சுந்தரேஸ்வரர், திரிபுராந்தகர், கால சம்ஹாரமூர்த்தி, பாசுபதமூர்த்தி, நடராஜர், காமதகன மூர்த்தி, சந்திரசேகரர், உமாமகேசர், லிங்கோத்பவர், ராவண அனுக்கிரகமூர்த்தி ஆகிய திருவடிவங்களைத் தரிசிக்கலாம். இதே தூண்களில் திருமால் வடிவங்கள், நரிகளைப் பரிகளாக்கிய வரலாறு, திரிபுரம் அழிக்கப் புறப்பட்ட சிவனாருக்குத் திருமால் அம்பாக நின்ற சம்பவம், குமார சம்பவம், பிட்டுக்கு மண் சுமந்த சம்பவம் போன்ற காட்சிகளும் உள்ளன.
ராவண அனுக்கிரக மூர்த்தி வடிவம், கொள்ளை அழகு. திருக்கயிலை மலையைத் தூக்குவதற்கு முயற்சி செய்கிற பத்துத்தலை ராவணனைக் கீழே அழுத்திவிடுகிறார் சிவனார். பரிதவிக்கும் அவனுக்காகப் பரிந்து, பின்னர் அருள்கிறார். இதற்குக் கீழேயே, கணேசருக்கும் அனுக்கிரகம். ஆனால், ராவண அனுக்கிரக மூர்த்தத்தின் சிவனாரே விநாயகருக்கும் அருள்கிறார். இரண்டு தனித்தனிச் சிற்பங்களை ஒருசேர அமைத்திருக்கும் சிற்ப நுணுக்கத்தைப் புகழ்வதா... இவற்றை அமைப்பதற்கு வழிசெய்தவர்களைப் புகழ்வதா?!
பேறுகாலத்தில் பெண்ணொருத்தி துணையின்றித் தவித்தாள்; உதவிக்கு வரவேண்டிய தாய், குறுக்கே ஓடிய வெள்ளத்தால் வரமுடியவில்லை; மகள் துடிக்க, அவளுடைய வேண்டுகோளுக் காக, அவளுடைய தாய் வடிவில் இறைவனே வந்து பிரசவம் பார்த்தார். இப்படியரு சம்பவம் காவிரிக்கரையில் நடைபெற்ற தால், திருச்சி மலைக்கோட்டைச் சிவனார் தாயுமானவர் என்று அழைக்கப்படுகிறார் இல்லையா? குழந்தை பெறுகிற பெண்ணும், அவளுக்கு அருகில் அவளுடைய தாயின் வடிவில் இறைவனும் காணப்படுகின்றனர். இந்தச் சிற்பத்தை வலம் வந்து வணங்கினால், பேறுற்ற பெண்களுக்குச் சுகப் பிரசவம் நிகழும். அடுத்து, வடக்குப் பகுதியில் நவக்கிரகச் சந்நிதி. கம்பத்தடி மண்டபத்திலிருந்து சுவாமி சந்நிதியின் உள்பிராகாரத்தை அடைய முற்படுகிறோம். இங்கே, சந்நிதி கோபுரம் என்று அழைக்கப்படுகிற மூன்று நிலை கோபுரம். வாசல் பகுதியில் அதிகார நந்தி, சாமுண்டி, ஆட்கொண்டார்- உய்யக்கொண்டார் எனும் துவார பாலகர்கள் ஆகியோரைக் காணலாம்.
பக்கத்துத் தூண்களில், ஒரு பக்கம்... ஐந்து முக சதாசிவ மூர்த்தம்; இன்னொரு பக்கம், பஞ்சமுக சக்தி. ஆதிசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, பராசக்தி என ஐந்துநிலையில் அருள்கிறாள் சக்திதேவி. அதற்கேற்ப, ஈசனும் ஐந்து முகங்கள் கொள்கிறார். சிவ சக்தி ஐக்கியமாக இருவரும் கயிலையில் இருப்பது போன்ற கோலத்தில் இவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சுற்றில், மூடப்பட்ட கிணறு; அருகில், கல்லால் ஆன வன்னி மரமும், லிங்கமும்! இந்தக் கதை, திருப்புறம்பயம் எனும் தலத்துடன் தொடர்பு கொண் டது. மகளை மணமுடித்துக் கொடுக்கத் தீர்மானித்திருந்த தந்தை இறந்துபோனார். தனியாக நின்ற மகளை, மதுரையில் இருந்து வந்த மருமகனார் (அவளை மணக்க வேண்டியவர்) அழைத்துக்கொண்டு புறப்பட்டார். வழியில்... திருப்புறம்பயத்தில் இருவரும் தங்கினர். விதிவசத்தால் பாம்பு தீண்ட, மருமகன் இறந்தான். அப்போது, அங்கே வந்த திருஞானசம்பந்தரின் அருளால், மீண்டும் உயிர்பெற்று எழுந்தான். அவர்களை அங்கேயே திருமணம் செய்யச் சொன்னார் சம்பந்தர். திருமணத் துக்குச் சாட்சி யார் எனக் கேட்க, அங்கிருந்த வன்னியும் கிணறும் சிவனுமே சாட்சி என்றார். மணம் செய்த பிறகு தம்பதி மதுரைக்கு வந்தனர். மூத்த மனைவியுடன் இவளையும் குடிவைத்தான் அவன்.
காலப்போக்கில், ஏதோவொரு சண்டை. 'உனக்கு நடந்த திருமணத்துக்கு யார் சாட்சி?' என்று மூத்தாள் இளையாளைக் கடுமையாகப் பேச, துடித்துப்போன இளையவள், திருப்புறம்பய லிங்கத் திருமேனியை அழைத்தாள். அங்கிருந்து வன்னியும், லிங்கமும், கிணறும் சாட்சி சொல்ல மதுரையம்பதிக்கு வந்தன. திருவிளையாடல் புராணம் மற்றும் ஞானசம்பந்த பெருமான் வரலாற்றில் காணப்படும் இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்ட கிணறுதான் இங்கே நாம் காண்பது! இந்தக் கிணறு, திருமலை நாயக்கர் மகால் வரை செல்லும் சுரங்கப்பாதை என்றும் சொல்வர்.
அடுத்து, ஆதிக் கடம்ப மரம். ஆதியில் கடம்பவனமாக இருந்ததாம், மதுரை. அதை நினைவுபடுத்தும் விதமாக, உலர்ந்த, பழைய கடம்ப மரம் இங்கே பாதுகாக்கப்பட் டுள்ளது. மரத்தைச் சுற்றி வந்து, தொட்டு வணங்குகின்றனர் பக்தர்கள். அடுத்து, வடக்குச் சுற்றில் தொடர்ந்தால், கனக சபை. சிவகாமி அம்மை அருகில் இருக்க, ஆடிக் கொண்டிருக்கும் செப்புப் படிம நடராஜர். இதையடுத்து, திருமகளின் சந்நிதி. இன்னும் சற்று நகர, ரத்தின சபை. இங்கேயும் சிவகாமியம்மையுடன் காட்சி தருகிறார் ஸ்ரீநடராஜர். இவரும் செப்புப் படிமம்!
உள்பிராகார வலம் முடிந்ததும் முதலில், ஆறுகால் மண்டபமான முக மண்டபம். குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டு, பின்னர் நாயக்க மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது இது! இங்குதான், 17-ஆம் நூற்றாண்டில், பரஞ்ஜோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் அரங்கேற்றப் பட்டது. மகா மண்டபம் செல்லும் வழியில், திருமலை நாயக்கர் அளித்த துவார பாலகச் சிலைகள். மகாமண்டபத்தில், அறுபத்து மூவரின் செப்புத் திருமேனிகள். சுவர்களில், திருவிளையாடல் புராணச் சிற்பங்கள்! அடுத்து, உள்ளே நுழைந்தால்... வெள்ளி அம்பலம்; ரஜத சபை. பத்துக் கரங் களுடன், நடனக் கோலத்தில் ஸ்ரீநடராஜர் அருகில் உமாதேவியார்.
ஆனாலும்... இதென்ன? ஏதோ வித்தியாசம்! ஆம், வழக்கமாக இடது காலைத் தூக்கி ஆடுபவர், இங்கே வலது காலைத் தூக்கி... ஆஹா, இவர்தான் கால் மாற்றி ஆடிய கருணை வள்ளலா?!
சிவபெருமான், பலவிதமான தாண்டவங்களை ஆடுகிறார் (ஆண் ஆடும் நடனம் தாண்டவம்; பெண் ஆடுவது லாஸ்யம் எனப்படும்). காளியை வெல்வதற்காக ஆடிய ஊர்த்துவ தாண்டவம், சம்ஹார காலத்தில் கோபம் கொண்ட ருத்ர தாண்டவம், காப்பாற்றுகிற காலத்தில் கௌரி தாண்டவம் என்று சிவ தாண்டவங்களில் பற்பல வகை உண்டு. இவை எல்லாவற்றையும்விட சிறந்ததாகக் கருதப்படுவது ஆனந்த தாண்டவம்.
ஆனந்த தாண்டவத்தை முதலில் தில்லையில்தான் (சிதம்பரம்) ஆடிக்கொண்டிருந்தாராம் சிவபெருமான். பின்னர் எப்போது மதுரையில் ஆட ஆரம்பித்தார்?
மீனாட்சியம்மை- சிவனார் திருமணத்தில் கலந்து கொள்ள வியாக்ரபாத முனிவரும் பதஞ்சலியும் வந்திருந்தனர். இருவரையும் உணவருந்திவிட்டுப் போகச் சொன்னார் சிவனார். அவர்கள் மறுத்தனர். தில்லையில் ஆனந்தத் திருக்கூத்தை தரிசிக்காமல் உணவருந்தும் வழக்கமில்லை என்றனர். அவர்களுக்காக, மதுரையிலேயே ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்தினாராம் இறைவனார். அப்போதிலிருந்து, அப்படியே இடது காலைத் தூக்கி ஆடிக்கொண்டுதான் இருந்தார்.
பிற்காலத்தில் ராஜசேகர பாண்டியன் எனும் மன்னன், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தினான். பற்பல கலைகளில் தேர்ச்சி பெற்ற அவன், ஆடல் கலையிலும் பயிற்சி பெற்றான். அவ்வாறு ஆடும்போது ஒருநாள், மனதில் நினைத்தானாம்... 'இந்தச் சிவனார் தினந்தோறும் இடது காலையே தூக்கி ஆடுகிறாரே, கால் நோகாதோ?' என்று!
தொடர்ந்து, பெருமானிடம் விண்ணப்பமும் வைத்தான், 'இனியாவது கால் மாற்றி ஆடுங்கள்; எவ்வளவு நாள்தான் வலது கால் மாத்திரம் எடை முழுவதையும் தாங்கும்..?' என்று ராஜசேகரனின் விண்ணப்பமும் அன்பும் இறைவனாரை நெகிழ்த்த, அன்றிலிருந்து கால் மாற்றி ஆடத் தொடங்கிவிட்டார்.
அருகில் உமையம்மை நின்று திருநடனத்தைக் கண்டு களிக்க, புன்சிரிப்புடன் ஆடும் வெள்ளியம்பல நடராஜரைத் தொழுகிறோம். சிவபெருமான் ஐந்து சபைகளில் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். தில்லை- கனக சபை (தங்கம்); மதுரை- ரஜத சபை (வெள்ளி); திருவாலங்காடு- ரத்தின சபை (நவமணிகள்); குற்றாலம்- சித்திர சபை (ஓவியம்); திருநெல்வேலி- தாமிர சபை (செப்பு) ஆகிய ஐந்து சபைகளில், மதுரை வெள்ளியம்பலச் சிறப்பை விவரிக்க வார்த்தைகள் இன்றி, அவரின் திருப்பாதம் பணிகிறோம்.
அப்படியே தொடர்ந்து உள்ளே நகர்ந்தால்... கருவறையில், அருள்மிகு சொக்கேசரான சுந்தரேஸ்வரர்; லிங்கத் திருமேனி. சொக்கநாதர், சொக்கலிங்கம், சோமசுந்தரம், மீனாட்சி சுந்தரர், கல்யாணசுந்தரர், செண்பகசுந்தரர், அடியார்க்குநல்லார், அதிரவீசி விளையாடுவார், அபிஷேக சொக்கர், அழகிய சொக்கர், கடம்பவன சொக்கர், கடம் பவனேஸ்வரர், கற்பகச் சொக்கர், மதுரேஸ்வரர், இறையனார், பேராலவாயர், ஆலவாய் அண்ணல் என்றெல்லாம் திருநாமங்கள் கொண்டவர் இவர்தானா?!
'வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்று என்(று)
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கி நின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செய்வாயே...'
என்று அப்பர் பெருமான் பாடிப் போற்றிய ஆலவாய் அண்ணல் இவர்தானா?!
'சொக்கேசா, பக்தர்கள் குறை தீர்ப்பவரே! உமது தாள் போற்றி, போற்றி' என்று பணிந்து வணங்கி நிற்கிறோம்.
சுவாமியின் கருவறையைச் சுற்றி வலம் வந்தால், தேவ கோஷ்டங்களில்- ஸ்ரீதட்சிணாமூர்த்தி (தெற்கு), ஸ்ரீலிங்கோத்பவர் (சுவாமிக்கு நேர் பின்புறமான மேற்கு) மற்றும் ஸ்ரீதுர்கை (வடக்கு) ஆகிய தெய்வங்களையும் வழிபடலாம். நாம் ஏற்கெனவே உள்சுற்று வலத்தின்போது வழிபட்ட சரஸ்வதியின் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு எதிரிலேயே இருக்கிறது. வியாழக்கிழமைகளில், ஆதிகுருவான தட்சிணாமூர்த்தியை வணங்கவும், கல்வி தேவதையான சரஸ்வதியைப் பணியவும் கூட்டம் திரண்டு வரும்.
சொக்கேசருக்கு இங்கு கோயில் அமைந்தது பற்றிய கதைகள் ஏராளம். அவற்றில் இரண்டு முக்கியமானவை. விருத்திராசுரன் எனும் கொடியவன், தேவர்களுக்கும் இந்திரனுக்கும் நிறையக் கொடுமைகளைச் செய்தான். மலைக் குகை ஒன்றில் விருத்திராசுரன் தவம் செய்துகொண்டு இருந்தபோது, இந்திரன் அவனைக் கொன்றுவிட்டான். கொலையுண்டவன் என்னதான் கொடியவன் என்றாலும், கொலை கொலைதானே! ஆகவே, இந்திரனைப் பாவம் துரத்தியது.
அதிலிருந்து தப்பிக்க எண்ணிய இந்திரன், சிவனாரை வழிபட்டான். விண்ணுலகில் பாவம் தொலைய வழியில்லை என்பதைப் புரிந்துகொண்டு, மண்ணுலகம் வந்தான். பூமியில் ஒவ்வோர் இடமாகச் சென்றான்; எல்லா இடங்களிலும் ஈசனை வணங்கினான்; ஆனாலும், கொலைப் பாவம் தன்னைப் பின்தொடர்வதை உணர்ந்தான். தெற்குப் பகுதியில், கடம்பவனம் அமைந்த இடத்துக்கு வந்ததும் தனது பாவம் காணாமல் போனது தெரிந்தது. ஆச்சரியம் அடைந்தவன், அந்த இடத்தில் ஏதோ புனிதம் இருக்கிறது என உணர்ந்தான். தேடினான். அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டான். அந்தச் சிவலிங்கமே தனது பாவம் தொலைந்ததற்கான காரணம் எனத் தெளிந்தான். அங்கேயே தங்கி, சிவலிங்க பூஜை செய்யலானான்.
இந்திரன் கிழக்கு திசைக்கு அதிபதி. இருப்பினும், தேவர்களின் தலைவன் என்பதால், அனைத்துத் திசைகளின் காவல் யானைகளும் அவனுடைய கட்டுப்பாட்டுக்கு உரியவை. திசையானைகளை அழைத்தான். எட்டுத் திசைகளிலும் நின்று, சிவனாருடைய பெருமையைப் பறைசாற்றும்படி ஆணையிட்டான். எட்டு யானைகள் புடைசூழ, சிவலிங்கத்துக்கு வழிபாடு செய்தான்.
திசையானைகள் புடைசூழ இங்கே இறை வனுக்கு வழிபாடு நடந்தது என்பதாலேயே, இப்போதும் ஸ்வாமி கருவறை விமானத்தில், எட்டு யானைகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த யானைகளே, ஸ்வாமி விமானத்தைத் தாங்கியிருப்பதாக ஐதீகம்; விமானமும், இந்திர விமானம் என்றே போற்றப்படுகிறது.
அப்படியானால் இந்தக் கோயில் இந்திரன் அமைத்த கோயிலா? ஆமாம். ஆனால், இந்திரன் சூட்சுமமாக அமைத்த கோயிலைப் பெரிதாக்கி, சுற்றிலும் நகர் அமைத்து, மக்களின் வழிபாட்டிடமாக மாற்றிய பெருமை, குலசேகரப் பாண்டிய மன்னனைச் சேர்ந்தது.
இது எவ்வாறு நடந்தது? அந்தக் கதையையும் கொஞ்சம் பார்ப்போமா?
தனஞ்சயன் என்றொரு வணிகன், பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். வணிகத்துக்காக வெளியூர் சென்று விட்டு, ஊர் திரும்பிக்கொண் டிருந்தான். இரவு நேரம், கடம்ப வனப் பகுதியில் தங்கவேண்டி வந்தது. அப்படித் தங்குகிறபோது, அங்கே உள்ளுக்குள் இந்திரன் கட்டிய கோயிலைக் கண்டான். தான், பாதுகாப்புடன் கருவறைக்குள் உறங்க முடிவதை உணர்ந்தான். காலையில் உறக்கம் கலைந்து விழித்தபோது, அவனுக்கு இன்னொரு அதிசயமும் காத்திருந்தது. இரவு, கருவறைக்குள் யாரோ வந்திருக்க
வேண்டும்; பூஜைகள் நடத்தியிருக்க வேண்டும். அவற்றுக்கான அடையாளங்களை அவன் அங்கே கண்டான். உடனடியாக, பாண்டிய நாட்டின் அப்போதைய தலைநகரான மணலூரை அடைந்தான். மன்னன் குலசேகரனிடம், தனக்கு நேர்ந்த அனுபவங்களைக் கூறினான். உடனே புறப்பட்ட மன்னனும், குறிப்பிட்ட பகுதியை அடைந்து, இறைவனை வணங்கினான்.
இரவு அங்கேயே தங்கிய மன்னனின் கனவில் இறைவன் தோன்றினார். கடம்ப வனத்தை அழித்து நகர் உண்டாக்கும்படி ஆணையிட்டார். நடுவில் கோயில் அமைத்து, அதைச் சுற்றி நகரை அமைக்கும்படியும் தடம் காட்டினார்.
இறைவனின் ஆணையை ஏற்ற மன்னன், அவ்வாறே செய்யத் தொடங்கினான். ஆனாலும், நகரை அமைக்கும் போது நடைமுறைச் சிக்கல்கள் உண்டாயின. அமைப்பு சரியாகப் புரியவில்லை. மன்னனுடைய குழப்பத்தைத் தீர்த்து வைப்பதற்காகச் சித்தர் ஒருவர் வந்தார். சிவலிங்கமும் இந்திர விமானமும் உள்ள இடத்தை மையமாக வைக்கச் சொன்னார். 'அந்தப் பகுதி, தாமரை மலரின் உள்மொட்டு போல...' என்றார். நகரின் மற்ற இடங்களை, மொட்டைச் சுற்றிய இதழ்கள் என்று குறிப்பிட்டார். அவர் சொன்ன அமைப்பிலேயே நகரத்தை நிர்மாணித்த மன்னன், சித்தரே சிவனார் என்பதை உணர்ந்தான்.
சொக்கேசர் சந்நிதி அருகில் நின்று இந்தக் கதைகளை அறிந்துகொள்ளும்போது, நாமும் அந்த அனுபவத்தைப் பரிபூரணமாகப் புரிந்து கொள்கிறோம். 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்று மாணிக்கவாசகர் பாடுவார். தம்முடைய கோயில் அமைவதற்கான வழியைச் சொல்லிக் கொடுத்து, நம்மையெல்லாம் இங்கே வழிபடவும் வழி செய்து கொடுத்திருக்கும் அந்தக் கருணைவள்ளலைத் தலைதாழ்த்திப் பணிகிறோம்.
சுவாமி சந்நிதியைவிட்டு வெளியே வந்து, மீண்டும் கம்பத்தடி மண்டபத்தில் நிற்கிறோம்.
நீல மா மிடற்று ஆல வாயிலார் பாலதாயினார் ஞாலம் ஆள்வரேஞாலம் ஏழுமாம் ஆல வாயிலார்சீலமே சொலீர் காலன் வீடவேஆல நீழலார் ஆல வாயிலார்காலகாலனார் பாலது ஆமினே- எனப் பாடுகிறார் திருஞானசம்பந்தர்.
கம்பத்தடி மண்டபத்திலிருந்து கிழக்கு நோக்கி, அதாவது வாசல் பக்கமாக நகர்ந்தால், ஐந்து நிலை கோபுரம்; இதுவே வசுவப்ப நாயக்கர் கோபுரம். 65 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரத்தில், நிறைய சுதைச் சிற்பங்கள். 14-ஆம் நூற்றாண்டில், வசுவப்பர் என்பவர் இதைக் கட்டினார். 'கோபுர நாயக கோபுரம்' எனப் பெருமையுடன் இது அழைக்கப்படுகிறது.
இன்னும் கிழக்கில் நகர்ந்தால், வீரவசந்தராயர் மண்டபம். திருமலை நாயக்கரின் தமையனாரான முத்துவீரப்ப நாயக்கரால், 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட இந்த மண்டபத் தில், 46 தூண்கள்; ஏராளமான சிற்பங்கள். ஆயிரங்கால் மண்டபத் தைக் கட்டிய பின்னர், ஸ்வாமி சந்நிதிக்கு எதிராகவும் மண்டபம் ஒன்று வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்டப்பட்டது.
மண்டபத்தில், ஸ்வாமி சந்நிதியை நோக்கியபடி நந்திதேவர் இருக்கிறார். இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? அவர் ஒரு தொட்டிக்குள் இருக்கிறார். நாட்டில் வறட்சி ஏற்படும் காலங்களில், மழைக்காக பூஜைகளும் யாகங்களும் செய்வார்கள். சிவன் கோயில் நந்தியை முதன்மையாக வைத்து, மழைப் பூஜை செய்வதைப் பாண்டி மண்டலக் கோயில்கள் பலவற்றில் காணலாம். தொட்டி நிரம்பத் தண்ணீரை ஊற்றி, பூஜை நடைபெறும்; தம்மைச் சுற்றியுள்ள தண்ணீரால் குளிர்ந்துபோகிற நந்திக்கு, மூச்சுத் திணறல் ஏற்படும்; உடனே அவர் மழை பொழியச் செய்வார் என்பது நம்பிக்கை. வறட்சியே ஏற்படாமல் காப்பாற்றவேண்டும் என அவரிடம் வேண்டிக்கொள்கிறோம்.
தூண் சிற்பங்கள் நம்மை ஈர்க்கின்றன. எட்டுக் கரங்களுடன் ஆயுதம் தாங்கியவளாக, நெருப்பு மகுடம் அணிந்தவளாக, நாகக் குடையின் கீழ் நிற்பவளாக உள்ள காளி; இளவரசியைத் தூக்கிக்கொண்டு ஓடுபவர்; நான்கு கர ஜடாமகுட சிவபெருமான்... இன்னும் நிறைய சிற்பங் கள் இருந்தாலும், பலவற்றைப் பார்க்கமுடிவதில்லை. காரணம், இந்த மண்டபம் முழுவதும் இப்போது கடைகள்.
ஸ்வாமி சந்நிதிக்கு முன்பாக வீரவசந்தராயர் மண்டபம் அமைந்தது போன்று, அம்மன் சந்நிதிக்கு முன்பாகவும் ஒரு மண்டபம் வேண்டும் என்பதால், 18-ஆம் நூற்றாண்டில், மீனாட்சி நாயக்கர் மண்டபம் கட்டப் பட்டது (இதை நாம் முன்பே பார்த்துவிட்டோம்). இரண்டையும் இணைக்கும் வழி ஒன்று உண்டு. அந்த வழியில்தான், மீனாட்சியம்மன் கோயிலின் பிரசித்தி பெற்ற மண்டபங்கள் சில உள்ளன. அவற்றைக் காண்பதற்கு முன்பாக, ஆயிரங்கால் மண்டபத்துக்குச் செல்வோம். வீரவசந்தராயர் மண்டபத்திலிருந்து வடக்குமுகமாகத் திரும்பினால், ஆயிரங்கால் மண்டபம். அட, ஆயிரம் கால்களா? எண்ணிப் பார்க்கலாமா? எண்ணினால், 985 தூண்கள்தாம் உள்ளன. மீதம் 15 தூண்கள்?!
ஆயிரங்கால் மண்டபத்தைக் காணும்போது, நம்மையறியாமல் அரியநாத முதலியாரின் நினைப்பு வருகிறது. யார் அவர்?
விஜயநகரப் பேரரசை கிருஷ்ணதேவராயர் ஆட்சி செய்த காலத்தில், தமது படைத்தலைவரை மதுரைக்கு அனுப்பினார். தொடர்ந்து, விசுவநாத நாயக்கர் வந்தார். இவரே மதுரையில் நாயக்கர் ஆட்சியை நிறுவியவர் எனலாம். இவருடைய தளபதியாக, கி.பி.1529-ல் மதுரைக்கு வந்தவர்தான் அரியநாத முதலியார். விசுவநாத நாயக்கரிலிருந்து இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் வரை, நான்கு அரசர்களுக்கு தளவாயாகவும் அமைச்சராகவும் சுமார் 71 வருடங்கள் பணியாற்றிய அரியநாதர், கோயில் பணிகள், மத நல்லிணக்கப் பணிகள், சமூகப் பணிகள் என பற்பல தளங்களிலும் செயல் பட்டவர். தமிழக வரலாற்றில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்று விட்ட இவர்தான் ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டுவித்தார். இந்த மண்டபத்தில், குதிரை மீது அமர்ந்திருக்கும் வீரரின் சிலை இவருடையது என்கிறார்கள். சொக்கராவுத்தர் என்றும் இந்தச் சிலை அழைக்கப்படும்.
கலைக் களஞ்சியமாக திகழும் ஆயிரங்கால் மண்டபத்தில், இறைவன்- இறைவியின் வெவ்வேறு வகையான செப்புச் சிலைகள், கண்ணாடிப் பேழைகளில் வைக்கப்பட்டுள்ளன. பெரிய பெரிய பலகைகளில் திருவிளையாடல் புராணக் காட்சிகள், நாயக்கர் கால லேபாக்ஷி ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
ஆயிரங்கால் மண்டபத்துக்கு அருகில், ஸ்ரீகாசி விஸ்வநாதர் சந்நிதி. தொடர்ந்து அப்படியே நேராக, அதாவது, தெற்குமுகமாக நடக்கிறோம். வீரவசந்தராயர் மண்டபத்தைக் கடந்தால், முதலில் மங்கையர்க் கரசியார் மண்டபம்; சமீப காலங்களில் (1960-களில்) கட்டப்பட்டது. நடுவில் சிவலிங்கம்; அரசி மங்கையர்க்கரசியார், அரசர் நின்றசீர் நெடுமாறர், அமைச்சர் குலச்சிறையார், திருஞானசம்பந்தர் ஆகியோரின் சிலா ரூபங்கள். பாண்டிய நாட்டுக்கு திருஞானசம்பந்தரை வரவழைத்து, சைவம் தழைக்கச் செய்த பெருமாட்டியான மங்கையர்க் கரசியின் பெயரால் உள்ள இந்த மண்டபத்துக்கு அடுத்து, சேர்வைக்கார மண்டபம். மருது பாண்டியர்களால் கட்டப்பட்டது. தூண் ஒன்றில் பெரிய மருது கம்பீரமாக நிற்கிறார். இதன் மேற்கே, கல்யாண மண்டபம். இங்குதான், சித்திரை மாதத்தில் மீனாட்சி- சொக்கேசர் கல்யாணம் நடைபெறும். சற்றே அருகில், முத்துராமைய்யர் மண்டபம்; அன்னதானக் கூடம்... அப்படியே வந்து, அம்மன் சந்நிதி முன்பாகவுள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தை அடைகிறோம்.
இங்கிருந்து அம்மன் சந்நிதி நோக்கிச் செல்லாமல் (அப்படித்தான் முதலில் சென்றோம்), வலமாகத் தொடர்ந்து, ஆடி வீதிச் சுற்றை அடைந்துவிடலாம். இதையே கோயிலின் வெளிப் பிராகாரம் எனலாம். வன்னி மரத்தடி விநாயகர் சந்நிதி, யானைக் கட்டு மண்டபம் ஆகியவற்றைக் கடந்து, தெற்கு ஆடி வீதியில் நுழைய, அங்கே நூல் நிலையம், தேவாரப் பாடசாலை, திருமுறை மன்றம் போன்றவை உள்ளன. மேற்கு ஆடிவீதியில், பசு மடம். வடமேற்கு மூலையில், புதிய திருமண மண்டபம். வடக்கு ஆடிவீதியில், பாதுகாப்பு அறைகள், திருப்புகழ் மண்டபம், திருவள்ளுவர்க் கழகம் ஆகியவை உள்ளன. கிழக்கு ஆடிவீதியில் தட்டுச் சுற்று மண்டபம் எனப்படும் பதினாறு கால் மண்டபம். சற்றே வடகிழக்காக நகர்ந்தால், ஆயிரங்கால் மண்டபம்.
ஆடிவீதிகளில் சுற்றிவரும்போது, நான்கு திசைகளிலும் உள்ள கோபுரங்களின் கம்பீரத்தையும் எழிலையும் காண முடிகிறது. கிழக்கு ராஜகோபுரம், ஸ்வாமி சந்நிதிக்கு நேர் எதிராக இருக்கிறது. சுந்தரபாண்டிய மன்னனால் (13-ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்ட, ஒன்பது நிலைக் கோபுரமான இதுவே, நான்கு வெளிக் கோபுரங்களிலும் பழைமையானது. இதே போல் ஒன்பது நிலை கொண்ட தெற்கு ராஜ கோபுரம், கோபுரங்களிலேயே உயரமானது; புராணச் சிற்பங்கள் நிறையக் கொண்டது.
மேற்கு ராஜகோபுரத்துக்கு, வரவேற்பு கோபுரம் என்றும், வாளால் விழித்துறங்கும் பராக்கிரம பாண்டியன் கோபுரம் என்றும் பெயர். கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்ட வடக்கு ராஜ கோபுரமும் ஒன்பது நிலை களைக் கொண்டது. பின்னே, மொட்டைக் கோபுரம் எனும் வினோதமான பெயர் இதற்கேன்? வேறொன்றுமில்லை, இது கட்டப்பட்ட ஆரம்ப காலத்தில், மேற்பூச்சு இல்லாமல் விடப்பட்டிருந்ததாம்; இதன் சுதைச் சிற்பங்களும் எண்ணிக்கையில் குறைவு. எனவே, மக்கள் அப்போது மொட்டைக் கோபுரம் என்றனர். திருப்பணிகள், பூச்சு செய்யப்பட்ட பின்னரும் பழைய பெயர் மாறாமல், அப்படியே நிலைத்துவிட்டது. இதன் முகப்பில், முனீஸ்வரர் ஆலயம் உள்ளது.
மீனாட்சியம்மன் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில், வெளிப்புறம் வந்து நிற்கிறோம். புது மண்டபம் எனப்படுகிற வசந்த மண்டபம், ராய கோபுரம் ஆகியவை கண்ணில் படுகின்றன. புது மண்டபச் சிற்பங்கள், கோயிலின் விழாக்கள் போன்றவற்றை பற்றியெல்லாம் சொல்லவேண்டுமெனில், இன்னும் பலப்பல பிறவிகள் வேண்டும். 'எத்தனை பிறவிகள் எடுத்தாலும், ஆலவாயப்பா, அங்கயற்கண்ணி தாயே, எப்போதும் உம்மை வணங்கிக்கொண்டிருக்க வழிகாட்டும்' என்றே பிரார்த்தித்து நிற்கிறோம்.
No comments:
Post a Comment