புனல் சூழ்ந்த வடுகூர், அன்னங்கள் ஆளும் வடுகூர், வரிவண்டு இசைபாடும் வடுகூர், குளிர்ச்சி மிக்க வடுகூர், சிறப்புடை வடுகூர் என்றெல்லாம் ஞானசம்பந்தப் பெருமானால் பாடிப் பரவப்பெறும் வடுகூர் திருத்தலம் நம்மை அழைக்கிறது, செல்வோமா?!
வடுகூர் என்றோ திருவடுகூர் என்றோ இப்போது கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆண்டார் கோவில் என்றோ திருவாண்டார்கோவில் என்றோ கூறினால்தான் தெரியும். நடுநாட்டுத் திருத் தலங்களில் ஒன்றான ஆண்டார் கோயில், புதுச்சேரி மாநில எல்லைக்குள் உள்ளது. விழுப்புரம் - புதுச்சேரி மார்க்கத்தில், கோலியனூர், வளவனூர் தாண்டியதும், சிறிது தொலைவில் வருவது 'திருவாண்டார்கோவில்'. ஊரின் தொடக்கத்தில், சாலையோரத்திலேயே அமைந்துள்ளது ஆலயம். கோயிலைக் கண்டுபிடிப்பதற்குப் பரவலாக இப்போது மக்கள் பயன்படுத்தும் அடையாளம்- 'இந்திய உணவுக் கார்ப்பொரேஷன் அலுவலகம் எதிரில்!'
தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அழகான சிறிய கோயில். வெளியில் இருந்து காணும்போதே நம்முடைய கண்களையும் கருத்தையும் ஏதோவொன்று ஆழமாக ஈர்க்கிறது. உள்ளே தெரிகிற விமானம், அச்சு அசலாகத் தஞ்சை பெரியகோயில் விமானம் போன்று, சிறிய அளவில் அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கிய திருக்கோயில்; சிறிய முகப்பு வாயில். வாயிலுக்கு முன்பாகவே நந்தி மண்டபம் உள்ளது. அழகான சுற்று மதில்கள். முகப்பைக் கடந்து உள்நுழைந்தால், பிராகாரம். அங்கும் நந்தி, பலிபீடம்.
வடுகூர் - அதென்ன பெயர்? வடுக பைரவர் (வடுகர்) வழிபட்டதால் வடுகூர்.
இறைவனாருடைய வெவ்வேறு வகை மூர்த்தங்களுள் பைரவ மூர்த்தமும் ஒன்று. ஆகம சாஸ்திரங்களின்படி, பைரவர் என்பவர், அகங்காரம் தணிப்பதற்காக வெளிப்படும் சிவ அம்சம் ஆவார். தட்சன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா ஆகியோருக்கு அகங்காரமும் ஆணவமும் மேலிட்ட காலங்களில், சிவ அம்சம், பைரவ மூர்த்தமாக வெளிப்பட்டு வந்து ஆணவத்தை அடக்கியது. ஆணவம் அடக்குகிற வடிவம் என்பதாலேயே, இவருக்கு வேத ஸ்வரூபமான நாய் வாகனம். 'பைரவ' எனும் திருநாமத்தில் உள்ள 'ப', 'ர', 'வ' எனும் அட்சரங்கள், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் களைக் குறிக்கின்றன.
 பைரவ மூர்த்தங்களிலும் எட்டு வகைகள் உண்டு; அஷ்ட பைரவர்கள் என்றழைக்கப்படும் மூர்த்தங்களில் வடுக மூர்த்தமும் ஒன்று. அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் எட்டு வகைகளில் வடுகர் பெயரைக் காணோமே என்கிறீர்களா? சம்ஹார பைரவருக்குத்தான் 'வடுகர்' என்றும் திருநாமம். 'வடுக' எனும் சொல்லுக்கு இளைஞன், வேகமான, பிரம்மசர்யம் முதலான பற்பல பொருள்களோடு 'சற்றே கடுமையான' எனும் அர்த்தமும் உண்டு. கடுமையானவர் வடுகர்; காளியும் வடுகி என்று அழைக்கப்படுவாள்.
துந்துபி எனும் அசுரனின் மகனாகத் தோன்றினான், முண்டகன் எனும் மகா அசுரன். பிரம்மாவைக் கண்டால் இவனுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அவருடைய நான்கு தலைகளைக் கிள்ளுவான்; அவரை ஓட ஓட விரட்டுவான்; சத்ய லோகத்தைப் பாடாய்ப் படுத்துவான். இப்படியே பலகாலம் சென்றது. தன்னால் ஆகாதது எதுவுமில்லை எனும் மதர்ப்பின் வசப்பட்டிருந்த பிரம்மா, முண்டகனிடம் மட்டும் படாதபாடு பட்டார். இறுதியில், சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்த பிரம்மா, தன்னை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று இறைஞ்சினார். பிரம்மாவின் கதறலுக்கு இறங்கிய இறைவனார், பிரம்மாவின் ஆணவத்தையும் அடங்கச் செய்வதற்காக வடுகரைத் தோன்றச் செய்தார். வடுகர், முண்டகனையும் வதம் செய்தார்.
என்னதான் அசுரன் என்றாலும் உயிர்க்கொலை, உயிர்க்கொலைதானே! அந்தப் பாவம் போவதற்காக, ஆதிப் பரம்பொருளான சிவனாரைப் பணிந்து வணங்கினார். அவ்வாறு வடுக பைரவர், வணங்கி வழிபட்ட தலமே, அவருடைய பெயரால், வடுகூர் என்று அழைக்கப்படலானது.
ஆதிப் பரம்பொருள்தாமே, ஆண்டவனார். எனவே ஊர் 'வடுகூர்' என்று வழங்கப்பட, கோயில் 'ஆண்டவனார் கோயில்' என்று வழங்கப்பெற்றது. காலப்போக்கில், ஆண்டவனார் கோயில், ஆண்டார் கோயிலாகி, ஊருக்கும் அதுவே பெயராகி, திருவாண்டார்கோவிலாகிவிட்டது.
பிராகார வலம் வருவோமா? கிழக்குச் சுற்றின் தொடக்கத்தில் சந்திரன்; தெற்குச் சுற்றில் திரும்பி யவுடன், சைவக் குரவர்கள் நால்வரும் காட்சி தருகிறார்கள். தென்மேற்கு மூலையில், வலம்புரி விநாயகர் சந்நிதி. அருகில், தல மரமான வன்னி. வடமேற்கு மூலையில் முருகர் சந்நிதி. வடக்குச் சுற்றில் பைரவர்; அடடா, இந்தக் கோயிலின் முக்கிய பக்தர் இவர்தாமே! வழிபட்டுக் கடந்தால், வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள். அடுத்ததாக, சனீஸ்வரர்; கிழக்குச் சுற்றில் வாயிலுக்கு அருகில் சூரியன்.
மூலவர் சந்நிதியையும் அம்பாள் சந்நிதியையும் சேர்த்து வலம் வருவதுபோன்றே பிராகாரம் அமைந்துள்ளது. வலம் நிறைவு செய்து, முன்மண்டபப் பகுதியை அடைகிறோம். இந்த மண்டபம் வழியாகவும் ஸ்வாமி- அம்பாள் சந்நிதிகளுக்குச் செல்லலாம்; இல்லையெனில், பக்கவாட்டு வழியாகவும் செல்லலாம். முன் மண்டபத்தின் வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி. சந்நிதிக்கு எதிரில், மண்டபத்திலேயே நந்தி. நின்ற கோலத்துடனும், நான்கு கரங்களுடனும் தரிசனம் கொடுக்கும் அம்பிகைக்கு, அருள்மிகு வடுவகிர்க்கண்ணி என்றும் திரிபுரசுந்தரி என்றும் திருநாமங்கள். மாவடுவின் பிளவுபோன்ற அழகிய கண்களைப் பெற்றவள் என்பதால், வடுவகிர்க்கண்ணி. அம்பிகை, தம்முடைய கருணைப்பார்வையால் அருள்கிறாள்.
அம்பாள் சந்நிதிக்கு அருகில், மண்டபத்தில் உற்ஸவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. அம்பிகையை வழிபட்டு, மண்டபத்தை அடைந்து நின்றால், நேராக ஸ்வாமி சந்நிதி. துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று, துவார விநாயகரையும் துவார சுப்ரமணியரையும் வணங்கி உள்ளே புகுகிறோம். அற்புதமான சிவலிங்கத் திருமேனியில், அருள்மிகு வடுகீஸ்வரர் தரிசனம் தருகிறார். வட்ட வடிவ ஆவுடையார். வடுகருக்கே நாதரானதால் வடுகநாதர்; வடுகூர் நாதர்.
திருப்பாதிரிப்புலியூரில் இறைவனை வழிபட்டு விட்டு, வடுகூர் சேர்ந்த ஞானசம்பந்தர், குறிஞ்சிப் பண்ணில் இந்தப் பெருமானை வழிபட்டார்.
சுடுகூர் எரிமாலை அணிவர் சுடர் வேலர் கொடுகூர் மழுவாள் ஒன்றுடையார் விடையூர்வர் கடுகூர் பசி காமம் கவலை பிணியில்லார் வடுகூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே
வடுக பைரவரின் வீராவேசமும், அவரே வணங்கிய நாதர் எனும்போது, பெருமானுடைய பிரதாபங்களும் சம்பந்தப் பெருமானுக்கு நெஞ்சில் அலையிட்டிருக்கவேண்டும். சிவனுடைய வீரங்களையெல்லாம் இந்தப் பதிகத்தில் அடுக்குகிறார்.
ஓடும் களியானை உரிபோர்த்து - பாடும் வடுகூரில் ஆடும் அடிகள் - கஜ சம்ஹார மூர்த்தியாக யானையின் செருக்கினை அடக்கியவர், வடுகூரில் ஆடுகிறார்; கிளறும் அரவு ஆர்த்து - ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகள் - பாம்பை அடக்கியவர், வடுகூரில் ஆடுகிறார்; கடிய தொழில் காலன் மடிய உதைகொண்ட அடியர் வடுகூரில் ஆடும் அடிகள் - காலனான எமனைக் காலால் உதைத்தவர், வடுகூரில் ஆடுகிறார்.
ஸ்வாமியை வணங்கியபின், சந்நிதி விட்டு வெளியில் வந்து, மீண்டும் வலம் செய்கிறோம். ஸ்வாமி கருவறை கோஷ்டங்களில், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை; பிரம்மாவுக்கும் துர்கைக்கும் இடையில், அர்த்தநாரி உருவமும் உள்ளது. கோஷ்ட தட்சிணாமூர்த்தியின் புன்னகை, அண்ட பகிரண்டத்தையே கட்டிப் போடுகிறது. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர்.
காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறும் இந்தத் திருத்தலம், திருவண்ணாமலை பத்ததியைச் சேர்ந்ததாகும். கார்த்திகை மாத அஷ்டமி நாட்கள், பைரவருக்கு வெகு விசேஷம். ஞாயிறுதோறும் அபிஷேகமும் உண்டு. இந்தத் தலத்தின் தீர்த்தம் - வாமதேவ தீர்த்தம். மூலவர் சந்நிதி விமானம்தான், வெளியிலிருந்து பார்க்கும்போது தஞ்சைக் கோயில் போன்று தோற்றம் தருகிறது. சொல்லப்போனால், காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் கோயில் விமானத்தின் தோற்றம் என்றும் கூறலாம். திரிதள விமானமான இதன் அழகு, பழைமைக்குப் புதுமை சேர்க்கிறது. சைவ முதலிகளில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இந்தத் தலத்தை வள்ளல் பெருமானும் சிறப்பித்துள்ளார். 1300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இந்தக் கோயிலுக்கு, பல்லவ மன்னர்களும், சோழ மன்னர்களும் (குறிப்பாக, பராந்தக சோழ மன்னர்) திருப்பணி செய்துள்ளனர். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர்கள் பலரும், அருள்மிகு வடுகீஸ்வரரைத் தம்முடைய குலதெய்வமாகவே பாவித்து வழிபட்டுள்ளனர். இந்த ஆலயத்தில் நேர்ந்துகொண்டு, தங்கத்தால் இலை வடிவங்கள் செய்து ஸ்வாமிக்கு இட்டால், நோய்கள் குணமாகும் என்று ஐதீகம். ஆனியில் பவித்ரோற்ஸவம், கார்த்திகையில் சங்காபிஷேகம், பங்குனியில் திருக்கல்யாணம் என வடுவகிர்க்கண்ணி சமேத வடுகீஸ்வரரின் உற்ஸவங்கள் கொண்டாட்டமாக நடைபெறும்.
கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள்; அழகழகான சிற்பத் தூண்கள்; இரட்டைத் தூண்களும், யாளிகளும், சிங்கங்களும், நடன மங்கைகளும், குழலூதும் கண்ணனும், காளிங்க நர்த்தனனும், கஜ சம்ஹாரரும் என சிற்பப் பொக்கிஷமே இருக்கிறது. பல்லவர் காலக் கட்டுமானத்தை நினைவுறுத்துவது போன்று, கருவறைப் பகுதியில், ஆங்காங்கே அகழி அமைப்பு.
வடுகூர் இதயத்தினார்க்கென்றும் தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே
என்று வள்ளல் பெருமான் பாடியதை நெஞ்சில் தாங்கி, கோயிலிலிருந்து விடைபெறுகிறோம்!
|
No comments:
Post a Comment