Saturday, 5 August 2017

ஆவுடையார்கோவில்




லயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்குச் சர்க்கரைப் பொங்கல், சுண்டல் என நைவேத்தியம் படைப்பது வழக்கம்தான்! ஆனால், ஆவுடையார்கோவிலில் இருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீஆத்மநாதருக்கு என்னென்ன நைவேத்தியங்கள் செய்யப்படுகின்றன என்று தெரியுமா உங்களுக்கு?!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார்கோவில். இங்கே, அம்பாளின் திருநாமம்- ஸ்ரீயோகாம்பாள்; ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீஆத்மநாதர். லிங்கத் திருமேனியில், ஆவுடை மட்டுமே உள்ளதால் ஆவுடையார் எனத் திருநாமம் அமைந்ததாம்! அம்பாள் ஸ்ரீயோகாம்பாளும் விக்கிரகத் திருமேனியாக இல்லை; அவளது திருவடிகளை மட்டுமே தரிசிக்க முடியும்!
இங்கே பச்சிலை மூலிகைகளைப் பயன்படுத்தி, ஆலய மண்டபத்தின் விதானத்தில் மதுரை, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, திருவானைக்காவல், திருவீழிமிழலை என ஆயிரத்தெட்டு சிவாலயங்களை அழகிய ஓவியங்களாக வரைந்துள்ளனர். ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதரை வணங்கிவிட்டு, அப்படியே இந்த ஆயிரத்தெட்டு சிவாலயச் சித்திரங்களையும் (காலப்போக்கில், ஓவியங்களின் சில பகுதிகள் அழிந்துவிட்டன. அந்த ஓவியங்களை அரசாங்கம் புதுப்பித்துப் பராமரிக்கவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை!) தரிசித்தால் பெரும் புண்ணியம் எனச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள்!
தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தின் பிரசாத வகைகளைப் பார்ப்போமா?
குருந்தை மரத்தடியில் (ஸ்தல விருட்சம்) அமர்ந்து, ஞான குருவாக வந்து உபதேசித்தார் அல்லவா சிவனார்?! ஆகவே, முதல் கால பூஜையில் சுத்த அன்னம் (வெறும் சாதம்) மட்டுமே நைவேத்தியம்; 2-ஆம் கால பூஜையின்போது, சர்க்கரைப் பொங்கல்; 3-ஆம் கால பூஜையில், தேன்குழல், பாயசம், அதிரசம், பிட்டு, தோசை என நைவேத்தியப் பிரசாதங்கள்; 4-ஆம் கால பூஜையில், சுத்த அன்னம், வடை, கீரை; 5-ஆம் கால பூஜையின்போது, சுத்த அன்னம் மட்டுமே; 6-ஆம் கால அர்த்தசாம பூஜையின்போது, புழுங்கல் அரிசி சாதம் (சாதத்தை வடிக்காமல், அன்னமேடையில் அப்படியே கொட்டுகின்றனர்) புளியோதரை, பாகற்காய் என நைவேத்தியம்; சூடு பறக்கும் உணவின் ஆவி ஸ்வாமிக்கு, பிரசாதம் பக்தர்களுக்கு என்பது ஐதீகம்!
ஒவ்வொரு பூஜையின்போதும், பிரசாதங்களை அன்ன மேடையில் கொட்டி, ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து விட்டு, பிறகு பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகின்றனர். ஈயம் பூசப்படாத பித்தளைப் பாத்திரங்களில் தயார் செய்யப்படும் இந்தப் பிரசாதங்கள், உணவே மருந்து எனும் தத்துவத்தை விளக்குகின்றனவாம்!
இந்தப் பிரசாதங்களைச் சாப்பிட, பித்ருக்கள் எனப்படும் முன்னோரின் சாபங்கள் நீங்கப் பெறுவதுடன், அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கப் பெறுவர்; யோகமும் ஞானமும் கிடைப்பது உறுதி; குழந்தைகள் கல்வி- கேள்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்!
கோயிலுக்குள் நுழையும் இடத்தில், மண்டபத்தின் விதானத்தில், குரங்கு ஒன்று கீழிறங்குவது போலவும், உடும்பு ஒன்று மேலேறுவது போலவுமான சிற்பம் உள்ளது. குரங்கினைப் போல் மனதைத் தாவவிடாமல், இறைவனே கதியென உடும்புபோல் பிடித்துக்கொள்ளவேண்டும் என உணர்த்துவதாக காட்சி தருகிறது இந்தச் சிற்பம்!

No comments:

Post a Comment