Saturday, 5 August 2017

திருச்செந்தூர்





றுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் திருச்செந்தூர். அலைகளின் ஓசை கேட்டபடி இருக்கும் இந்த விசேஷ தலத்தையும், இங்கேயுள்ள முருகப்பெருமானையும் தரிசிக்காதவர்கள் இருக்கிறார்களா, என்ன?!
கடல் செந்தில், திருச்சீரலைவாய், ஜெயந்திபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஒப்பற்ற திருச்செந்தூர் தலத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, ஸ்ரீசுப்பிரமணியரின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். அப்படியே, இலை விபூதிப் பிரசாதத்தையும்!
இந்தத் தலத்தின் தனிச்சிறப்புகளில், பன்னீர் இலை விபூதிப் பிரசாதமும் ஒன்று!
தீராத குன்ம நோயால் அவதிப்பட்ட விஸ்வாமித்திரர், முருகப்பெருமானை மனமுருகிப் பிரார்த்தித்து, இலை விபூதிப் பிரசாதத்தால் குணம் அடைந்தார் என்கின்றன புராணங்கள்.
அவர் மட்டுமா?! தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு, திருச்செந்தூர் தலத்துக்கு வந்து, இலை விபூதி பிரசாதம் உட்கொள்ள, பூரண நலம் பெற்றதாக 'சுப்ரமணிய புஜங்கம்' நூலில், 25-வது ஸ்லோகத்தில், முருகனையும் இலை விபூதியையும் சிலாகித்துச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
முருகப்பெருமானின் திருச்சந்நிதியில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதிப் பிரசாதத்தை தினமும் பூசிக்கொண்டும், கொஞ்சமாக உட்கொண்டும் வந்தால், குஷ்டம், வலிப்பு, நரம்பு தொடர்பான நோய்கள், பில்லி சூனிய ஏவல்கள் ஆகியவை நீங்கும்; ஆரோக்கியமாக இருக்கலாம்; குடும்பத்தில் சண்டைச் சச்சரவு இன்றி, நிம்மதியாக வாழலாம் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
வளர்பிறை சஷ்டி திதி நாளில் முருகப்பெருமானை தரிசித்து, இலை விபூதிப் பிரசாதத்தைப் பெற்று வந்து, வீட்டுப் பூஜையறையில் வைத்து, 48 நாட்கள் விரதம் இருந்து, விபூதியை அனுதினமும் நெற்றியில் இட்டுக்கொள்ள... குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்; சகல செல்வங்களும் சேரும்; குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்; குழந்தைகள் கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை!
அதேபோல், திருச்செந்தூர் நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடினால், சரும நோய்கள் நீங்கும். அத்தனை மருத்துவமும் மகத்துவமும் கொண்ட திருத்தலம், திருச்செந்தூர் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
இன்னொரு விஷயம்... பன்னீர் இலையில் உள்ள பன்னிரு நரம்புகள், வேறொன்றுமில்லை; முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களே என்பாரும் உண்டு. அதாவது, விபூதிப் பிரசாதத்தை, முருகப்பெருமானே நமக்குத் தந்தருள்கிறார் என்பது ஐதீகம்.
என்ன... திருச்செந்தூர் செந்திலாண்டவரை தரிசிக்கவும் இலை விபூதிப் பிரசாதத்தைப் பெறவும் கிளம்பிவிட்டீர்களா?!

No comments:

Post a Comment