பி ள்ளை வரும் காலடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த மருதவதிக்கு (மருத் வதி என்றும் சொல்வார்கள்), மகனைப் பார்க்கப் பார்க்க... துக்கம் தொண்டையை அடைத்தது. எண்ணி இன்னும் பத்து நாட்கள்தான். அதன்பின், மகன் மறைந்து விடுவான். ஏறத்தாழ பதினாறு பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள், மனதுக்குள் ஊர்வலம் போயின.
‘அன்றைக்குச் சற்றே அவசரப்பட்டுவிட்டார் அவர்!’ - இப்போது நினைக்க நினைக்க மனம் பரிதவித்தது. மருதவதியின் கணவரான மிருகண்டு முனிவர், பெரிய தவ சீலர். இருப்பினும் ஏனோ தடுமாறி விட்டார்.
மிருகண்டுவுக்கும் மருதவதிக்கும் திருமணமாகி நீண்ட காலத்துக்குப் பிள்ளை இல்லை. பிள்ளை வரம் வேண்டி மிருகண்டு தவம் செய்தார். மருதவதி தொடர்ந்து உபவாசம் இருந்தாள். கண்கண்ட தெய்வமாம் அமிர்தகடேஸ்வரர் கண்ணெதிரில் காட்சி அளித்து, நிபந்தனையுடன் கூடிய வரம் கொடுத்தார். ‘நூறு வயதுவரை வாழக் கூடிய மந்த புத்திக்காரன் வேண்டுமா? பதினாறு வயது வரை வாழும் புத்திசாலி வேண்டுமா?’ முனிவருக்கு உணர்ச்சிப் பெருக்கில் தலை-கால் புரியவில்லை. ‘தன்னுடைய தவத்துக்குப் பரமனார் இரங்கி விட்டாரா? அப்படியானால், நம் பிள்ளையும் சிவனையே சிந்திக்கும் சீலனாக இருக்க வேண்டாமா?’
அவசரமாக அன்றைக்கு வந்தன வார்த்தைகள். இப்போது தவிக்கிறாள் மருதவதி. ‘பதினாறு வயது புத்திசாலி வேண்டும்’ என்று கேட்டுப் பெற்ற மகன். மிருகண்டுவின் மகன் ஆனதால், மார்க்கண்டேயன்.
மார்க்கண்டேயனுக்குப் பதினைந்து வயது நிறைந்து விட்டது. இன்னும் பத்து நாட்களில் பதினாறும் முடிந்துவிடும். அதுதான், அவனைக் காணக் காணக் கண்ணீர் சிந்தினாள் மருதவதி. ஆறு மாதங்களுக்கு முன்னால், தங்கள் வருத்தத்தின் காரணத்தை மார்க்கண்டேயனிடம் சொல்லியும் விட்டார்கள். அவனோ கவலையே படவில்லை. ‘ஈசனிடம் வேண்டினால் அவர் காப்பாற்றுவார்!’ என்று பெற்றோருக்கே சமாதானம் சொல்கிறான். ‘முறையான நம்பிக்கையோடு தவம் செய்தால், எப்படி நீங்கள் கேட்டதைக் கொடுத்தாரோ, அப்படியே நான் கேட்பதையும் கொடுப்பார்!’ என்று விளக்கம் வேறு கூறுகிறான்.
இப்போதும்கூட, ஒரு யாகத்தை முடித்துவிட்டு அடுத்த யாகத்துக்குப் புறப்பட்டு விட்டான்.
அமிர்தகடேஸ்வரரிடம் அபாரமான பக்தி கொண்டவன். சர்வேஸ்வரனைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறான். வேறு எதுவுமே அவனுக்குப் பொருட்டில்லை. உணவு, உறக்கம் பற்றிய எண்ணமே இல்லை. பதினாறு வயது நிரம்புவதற்கு முன்னர், உணவுமின்றியே இவன் உருகிப் போய் விடுவானோ?
மருதவதியும் மிருகண்டுவும் கவலைப்பட்டு என்ன பயன்? காலம் என்ன நிற்கவா செய்யும்!
குறித்த நாளும் வந்தது. யாருக்கும் அஞ்சாத எமன், பாசக்கயிற்றோடு வந்தான். (அப் போது மார்க்கண்டேயன் பாடியதுதான் ஸ்ரீசந்த்ரசேகராஷ்டகம் என்னும் துதி. காஞ்சி ஸ்ரீமகா ஸ்வாமிகளுக்கு மிகவும் பிடித்தமானது) மார்க்கண்டேயன் மீது பாசத்தை வீச, அவனோ சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். எமனின் பாசம், சிவலிங்கத்தைச் சுற்றியது. லிங்கத்தைப் பிளந்து வெளிவந்தார் சிவப் பரம் பொருள். ‘மார்க்கண்டேயனை விட மாட்டேன்!’ என்று எமன் இழுக்க, இடப் பாதம் தூக்கி ஆடும் இறைவனோ, இடப் பாதம் தூக்கினார். காலனை உதைத்தார். எல்லோருக்கும் மரணம் தரும் காலதேவன், செத்து விழுந்தான்.
அஷ்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றான திருக்கடவூரின் ராஜ கோபுரம் வானளாவ நின்று வரவேற்கிறது. ஏழு நிலைகளைக் கொண்ட மேற்கு ராஜ கோபுரத்தின் சிற்பங்கள் மிக மிக அழகானவை. ரிஷப வாகனராக மையத்தில் பரமேஸ்வரியுடனாய பரமேஸ்வரர் காட்சி தர, பாற்கடல் கடைதல், கஜசம்ஹார மூர்த்தி, சம்பந்தர் திருத்தல விஜயம், சம்பந்தரின் பல்லக்கைத் தூக்கும் அப்பர் என்று ஏராளமான அழகுச் சிற்பங்கள்.
தாண்டி உள்ளே நுழைந்தால், வெளிப் பிராகாரம். எதிரே தெரியும் உள்கோபுரத்தையும் பிரதான மேற்குக் கோபுரத்தையும் நடைக் காவணம் இணைக்கிறது. வெளிப் பிராகாரத்தில், பளிச்சென்று ஒரு மண்டபம். நூற்றுக்கால் மண்டபம் என்றழைக்கப்படும் இதுவே பிரசங்க மண்டபம் ஆகும். தொடர்ந்து வெளிப் பிராகார வடக்குச் சுற்றில், நந்தவனம்.
கிழக்கு கோபுரத்துக்கு முனீஸ்வரர் கோபுரம் என்றொரு பெயர் உண்டு. வெளிப் பிரா காரத்தில், கிழக்கு கோபு ரத்துக்கு அருகில் அமிர்த புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. பாற்கடல் அமிர்தத்தின் ஒரு பகுதி இங்கு தீர்த்தமானதாக ஐதீகம். இங்கு நீராடி, அமிர்தகடேஸ்வரரையும் அபிராமியையும் வழிபட் டால், பிறவிப் பிணி அகலும். நன்மைகள் யாவும் ஸித்திக்கும். வெளிப் பிராகாரத்திலேயே தொடர்ந்து வலம் வந்தால், தென்மேற்கு மூலை யில் அபிராமி அம்பிகையின் ஆலயத்தை அடையலாம்.
அன்னை அபிராமி. அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் பரமேஸ்வரி, திருக்கடவூரில் அன்னை அபிராமியாக அருள் வழங்குகிறாள்.அம்பிகையின் சந்நிதி, தனிக் கோயிலாகவே உள்ளது. வாயிலைத் தாண்டி உள்ளே போனதும் ஒரு மண்டபம். வெளவால் நெத்தி மண்டபம். அம்பாளுக்குத் தனியான கொடிமரம் உண்டு. சந்நிதிக்குப் போகும்போது, கொடிமரத்தைச் சுற்றி வலமாகத்தான் போக வேண்டும்; கொடி மரத்துக்கும் சந்நிதி வாசலுக் கும் குறுக்காகப் போகக் கூடாது.
சந்நிதி வாசல் தாண்டி உள்ளே செல்ல... நின்ற திருக்கோலத்தில் அருள் வழங்கும் அன்னை அபி ராமி. அம்பிகையின் திருக் காதுகளில் ஒளிரும் ஸ்ரீசக்கரத் தாடங்கங்கள் (தோடுகள்) கவனத்தை ஈர்க்கின்றன.
‘தவ ஜனனி தாடங்க மஹிமா’ என்று ஆதிசங்கரர் பாடியது நினைவுக்கு வருகி றது. தன் தாடங்கத்தைக் கழற்றிப் போட்டுத்தானே, அன்றொரு நாள் தன் பக்தனுக் காக நிலவை வரவழைத்தாள் இந்த அன்னை!
அது நிறைந்த தை அமா வாசை நாள். அம்பிகை மீதான தியானத்தில் ஈடுபட்டி ருந்த சுப்ரமணிய ஐயர், சரபோஜி மன்னரிடத்தில், அமாவாசை என்று சொல்வதற்கு பதிலாக பௌர்ணமி என்று மாற்றிச் சொல்லி விட்டார். அம்பிகையின் பரிபூரண நிலவு முகத்தை மானசீக மாக தரிசித்துக் கொண்டிருந்த அவருக்கு, புற உலகின் அமாவாசையா புலப்பட்டிருக்கும்? தன் பக்தன் சொன்ன சொல்லை நிரூபிப்பதற்காக அம் பிகை தாடங்கத்தைக் கழற்றி விண்ணில் வீசினாள். அடுத்த கணம், அங்கே பட்டொளி பொழிந்தது பௌர்ணமி நிலவு!
கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம் பாடவியில் பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி மதங்கர்குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே!
என்று சுப்ரமணிய ஐயர் - இல்லையில்லை - அபிராமி அந்தாதி பாடி, அம்பிகையின் அற்புதம் நிகழக் காரணமாக இருந்த அபிராமி பட்டர், பாடுகிற நயம் காதுகளில் ஒலிக்கிறது. உதிக்கிற செங்கதிரை உச்சித் திலகமெனத் தாங்கி, மாதுளம்போது நிகர்த்தவளாக, மேலமலர்ந்தேவியாம் மகா லட்சுமி துதிக்கும் மின்கொடி யாக, குங்குமத்தோய திருமேனி பூண்டவளாக அருள் காட்சி வழங்கும் அன்னை அபிராமி யைக் கண்ணார தரிசிக்கிறோம்; மனதார வணங்குகிறோம்.
அம்பிகை கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். வலக் கீழ்க்கரத் தில் அபயம். இடக் கீழ்க் கரத்தில் வரஹஸ்தம். இடது மேல்கரத்தில் தாமரை மலர். வலது மேல்கரத்தில் ஜபமாலை. அம்பாளுக்கு வலப் புறத்தில் உற்சவத் திருமேனி.
திருக்கடவூர், பிரம்மன் வழி பட்ட தலம். எனவே, பிரம்ம மகிஷியான சரஸ்வதிதேவியும் அம்பாளை வழிபட்டு வணங்கிய இடம். கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதிக்கே அருளும் அம் பிகை, கையில் ஜபமாலை தாங்கி அருள் பொழிகிறாள்.
அம்பாள் சந்நிதியை தனி யாக வலம் வரும் வசதி உள் ளது. அபி-மேலான; ராமி- ரம்யமானவள். அம்பாள் சந்நிதியைவிட்டு வெளியே வருகிறோம்.
எல்லையற்ற அருள் தரும் அன்னை அபிராமியை மீண்டும் வணங்கி, திருக்கோயிலுக்குள் உலாவைத் தொடர்கிறோம்.
மூன்றாம் பிராகாரத்தில்தானே இருக்கிறோம். உள் கோபுரம் வணங்கி உள் நுழைகிறோம். ஐந்து நிலைகளைக் கொண்ட உள்கோபுரத்தைத் தாண்டி னால், இரண்டாம் பிராகாரம். இடப் பக்கத்தில் அலங்கார மண்டபம்; அதைத் தாண்டி யாகசாலை. வலப் பக்கத்தில் தேவஸ்தான அலுவலகம், தானியக் களஞ்சியம், வாகன மண்டபம் ஆகியவை.
அடுத்துள்ள உள் வாயிலைக் கடந்து முதல் பிராகாரத்தை அடைகிறோம். வலம் வருவோமா? இந்தப் பிராகாரத்தில் திருமாளிகைப் பத்தி மண்ட பங்கள் அழகு செய்கின்றன. மேற்குச் சுற்றில் தானே இருக்கிறோம். மேற்குச் சுற்றில் வரிசையாக, நாகநாதேஸ்வரர், சுப்ரமணியர், கஜலட்சுமி, சோமா ஸ்கந்தர் சந்நிதிகள். வடக்குச் சுற்றில் நட ராஜர் சபை. அடுத்து பிட்சாடனர். அடுத்ததாக வில்வ வனேஸ்வரர். வில்வ வனேஸ்வரர் சந்நிதி மனதை ஈர்க்கிறது. சிறிய, ஆனால் அமைதியான முன் மண்டபத்துடன் கூடிய மேற்கு நோக்கிய சந் நிதி. உள்ளூர் அர்ச்சகர், இந்த ஸ்வாமியைத்தான், ஆதி மூர்த்தி என்கிறார். அது என்ன கதை?
சிவலிங்க ஸ்வரூபமான வில்வ வனேஸ்வரர், உள்பிராகாரத்தின் (அதுதான், முதல் பிராகாரம்) ஈசான்ய பகுதியில், மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
இந்தச் சந்நிதியின் முன்மண்டபம், தியான மண்டபமாகத் திகழ்கிறது. இங்கு அமர்ந்து தியானம் செய்தால், ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை. இந்தச் சந்நிதியின் அர்த்த மண்டபத்தில், சுரங்கப்பாதை ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தச் சுரங்கம் வழியாகத்தான், இறைவனை வழிபடுவதற்காக, மார்க்கண்டேயர் கங்கையைக் கொண்டுவந்தாராம்.
பொடியார் மேனியனே புரிநூல்
ஒருபால் பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கை யடும்
கடியார் கொன்றையனே
என்று பாடினார் சுந்தரர். கங்கை செஞ்சடைநாதனை வழிபட்டு, பிராகாரத் திருவலம் தொடர்வோம். வடக்குச் சுற்றிலேயே, வில்வ வனேஸ்வரர் சந்நிதியை அடுத்து பைரவர்.
கிழக்குச் சுற்றில் திரும்பினால், பஞ்சலிங்கங்கள், குங்கிலிய கலயர், சந்தான ஆசார்யர்கள், சூரியன்.
உள்பிராகாரத்தின் தெற்குச் சுற்றில் திரும்புகிறோம். அகஸ்தியர், சந்திரபூஷணராஜா, அவரின் அமைச் சர், குங்கிலிய வணிகர், சப்த மாதர் கள், வீரபத்திரர், பிராமி என்று வரிசையாகத் திருமேனிகள். சிறிய சந்நிதியில் அஸ் வினி தேவர்கள்.
இந்தப் பிராகாரத்திலேயே, ஒரு பக்கத்தில் தலமரமான பிஞ்சிலம். சாதிமல்லிகைக் கொடியான பிஞ்சிலம்தான், இங்கு தலமரம். எனவே, இந்த ஊருக்கேகூட பிஞ்சிலவனம் என்று பெயருண்டு. மார்க்கண்டேயர், இறைவனை வழிபட கங்கை நீரைக் கொண்டு வந்தபோது, அதனுடன் சேர்த்து பிஞ்சிலக் கொடியும் வந்ததாக ஐதீகம். இந்தக் கொடியின் மலர், இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பூக்கிறது.
மார்க்கண்டேயரைப் பிடிக்கப் போய், இறைவனிடம் உதை வாங்கி இறந்த எமன், அப்புறம் எப்படி இங்கே வந்தார்?
எமனே இறந்து போனால், உலகம் என்ன ஆவது? பின்னர், தேவர் குழாமும் பூமிதேவியும் வேண்ட, எமனுக்கு அருளும் உயிரும் வழங்கினார் இறையனார். இந்த தெற்குப் பிராகாரத்தில், எருமை வாகனத்தோடு கூடிய எமதர்மன் வடக்கு முகமாக எழுந்தருளி இருக்கிறார். இங்கிருந்து பார்த்தால், எதிரே, சந்நி திக்கு உள்ளிருக்கும் காலசம்ஹார மூர்த்தியை தரி சிக்கலாம்.
அருள்பெற்ற எமன் என்றழைக்கப்படும் உற்சவ எமதர்மருக்கும் நமது வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு, வலத்தைத் தொடர்கிறோம். அறுபத்துமூவர் திருமேனிகள். தென்மேற்கு மூலையில் பள்ளியறை. உள்பிராகார வலத்தை நிறைவு செய்துவிட்டோம்.
மூலவர் சந்நிதிக்கு முன்பாக நிற்கிறோம். சில படிகள் ஏறித்தான் மூலவர் சந்நிதியை அடைய வேண்டும். முதலில் பெரிய மண்டபம். இதற்குச் சங்கு மண்டபம் என்று பெயர். அடுத்து மகா மண்டபம். இங்குதான், திருக்கடவூர் அட்டவீரட்ட மூர்த்தியான காலசம்ஹாரர் எழுந்தருளி இருக்கிறார். அடுத்து அர்த்த மண்டபத்துடன் கூடிய மூலவர் அமிர்தகடேஸ்வரரின் சந்நிதி.
அ மிர்தலிங்கேஸ்வரர், அமுதகடோற்பவர், அமுத கடேசர், அமிர்தேஸ்வரர் என்றெல்லாம் இந்தத் தலத்து ஈசனாருக்குத் திருப்பெயர்கள் உள்ளன.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த கதை நமக்குத் தெரிந்ததுதானே! பாற்கடலிலிருந்து பலப்பல வெளிவர, கடைசியில், ஆவலுடன் எதிர்பார்த்த அமுதமும் வந்தது.
அசுரர்கள் கையில் அதைச் சிக்க விடாமல் எடுத்துக் கொண்ட தேவர்கள், குடமொன்றில் அதை இட்டார்கள். நீராடச் செல்லும்போது, அசுரர்கள் எடுத்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிலத்தடியில் புதைத்து வைத்தார்கள். நீராடிவிட்டு வந்து பார்த்தால்... அந்தோ! குடத்தை எடுக்க முடியவில்லை. பாதாளம் வரை குடம் ஊடுருவி நிற்க... அமுதக் குடம் (குடம்- கடம்) சுயம்புலிங்கமாக காட்சி தந்தது. அமிர்தக் கடத்திலிருந்து எழுந்தருளிய ஈசனார், அமிர்தகடேஸ் வரர் என்று திருநாமம் பூண்டார்.
சங்காபிஷேகம்
அமிர்தகடேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்வது மிகச் சிறப்பானதாகும். கார்த்திகை மாதம் திங்கட் கிழமைகளில் சங்காபிஷேகம் நடைபெறும்.
மாலை நேரம் குறித்த வேளையில், 1,006 இடம் புரி மற்றும் வலம்புரி சங்குகளை வரிசையாக, சங்கு மண்டபத்தில் வைப்பர். எல்லாவற்றுக்கும் நடுவில், பீடத்தில், வெள்ளிக் காப்பிட்ட பெரிய வலம்புரி வைக்கப்படும். அதற்குள் தங்கக் காப்பிட்ட இன்னொரு வலம்புரியை வைப்பர் (வெள்ளி, தங்கக் காப்பிட்ட வலம்புரிச் சங்குகளையும் சேர்த்தால் மொத்தம் 1,008 வரும்). அவற்றுள் மார்க்கண்டேய தீர்த்த நீர் சேர்க்கப்படும். வெள்ளி மற்றும் தங்கக்காப்பு வலம்புரிகளைப் பிராகாரத்தில் வலமாகக் கொண்டு வந்து, பின்னர் மூலவர் சந்நிதிக்குக் கொண்டு செல்வார்கள். பிற சங்குகளும் மூலவர் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்படும். சங்கு தீர்த்த நீரால் இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்.
மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு வலம்புரி சங்கு கொண்டு அபிஷேகம் செய்தார். பிரகதீச மன்னர், சங்காபிஷேகம் செய்து தனது பாவப் பிணி அகலப் பெற்றார்.
| |
திருக்கடவூர் சிறப்புகள்!
மார்க்கண்டேயருக்காக கங்கை வந்தபோது கூடவே வந்தது பிஞ்சிலம் என்னும் சாதிமல்லிகை. இரண்டாவது தல விருட்சம். அம்பாளுக்கு மிகவும் ப்ரீதியானது. வருடம் முழுவதும் பூக்கக் கூடியது.
ஆனால், திருக்கடவூரில், அமிர்தகடேஸ்வரருக்கு நாக வாரி கிடையாது. கால சம்ஹாரரும் நாகாபரணம் அணியவில்லை. ஏன்?
மேற்கு நோக்கிய மூலவரை தரிசிக்கிறோம். அழகுத் திருமேனி. லிங்கத் திருமேனியில் பிளவு தென்படுகிறது; பாசக்கயிறு கட்டிய தழும்பும் தெரிகிறது. மார்க்கண்டேயர் லிங்கத்தைக் கட்டிக் கொண்டதால் ஏற்பட்ட அடையாளங்கள். ஐயனை வணங்கித் தலை நிமிர்கிறோம். மகா மண்டபத்தில் நிற்கிறோம். ஆங்காங்கே சிற்பத் தூண்கள் கொண்ட மகா மண்டபம். மிக மிகச் சிறப்பானது.
மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில்தான் காலசம்ஹார மூர்த்தி. தெற்கு நோக்கியவராக எழுந்தருளி இருக்கிறார்.
சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய சபை. வெள்ளிப்பிரபை. வலத் திருக் காலை ஊன்றி, இடத் திருக் காலைச் சற்றே தூக்கி... முகம் கொள்ளாப் புன்முறுவலுடன் காட்சி தருகிறார். இறைவனின் திருவடியின் கீழ், வலப் பக்கத்தில் கூப்பிய கைகளுடன் மார்க்கண்டேயர் நிற்கிறார். இறையனாருக்கு இடப் பக்கத்தில், இறைவி. இறைவியின் இரு புறமும், கலைமகளும் திருமகளும் தோழியராக நிற்கிறார்கள். அம்பிகை அருள்மிகு வாலாம்பாள் அல்லது பாலாம்பாள். என்றும் பதினாறாக இருக்க மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்ததால், அம்பிகையும் பாலாம்பாளாகக் காட்சி தருவதாக ஐதீகம்.
ஆமாம்! ஐயன்தானே காலனை உதைத்தார். அம்பிகைக்கு எப்படி பாலாம்பாள் கோலம்? சிவனுக்கும் சக்திக்கும் சர்ச்சை மூட்டுவதா என்று பார்க்கிறீர்களா? இது அம்மையப்பரின் அருள் குழந்தை ஆதிசங்கரர் மூட்டி விட்ட விளையாட்டுச் சர்ச்சை.
கம்பீரமாகக் காட்சி தருகிற காலசம்ஹார மூர்த்தியைப் பார்த்தார் சங்கரர். நான்கு திருக்கரங்கள். வலது மேல் கரத்தில் மழு; இடது மேல் கரத்தில் பாசம்; வலது கீழ்க் கரத்தில் சூலம். கீழ்நோக்கிப் பாய்ந்திருக்கும் சூலம்; இடது கீழ்க்கரத்தின் ஆள்காட்டி விரல், திருப்பாதங்களைக் காட்டினாற்போல இருக்கிறது. ‘காலில் விழுந்தால் கதியுண்டு!’ என்பதுபோல இருக்கும் சைகை.
இடப் பாதம் தூக்கிய திருவடியாக இருக்க, அதுவே காலனை உதைத்த பாதம்.
ஆதிசங்கரர் என்ன கேட்டார் தெரியுமா? இடப்பாகம் அம்பிகையுடையதுதானே? வாம பாகத்துக் காலை எடுத்துக் காலனை உதைத்துவிட்டு, அதற்கான பெருமையை ஐயன் எடுத்துக் கொள்ளலாமா? அது அம்பிகைக்குத்தானே சொந்தம்? நியாயமான கேள்விதானே! திருக்கடவூரில், அம்பாளின் உதவியுடன் தம்முடைய வீரச் செயலை ஐயன் நிகழ்த்தியதாக ஐதீகம்.
பஞ்சலோக விக்கிரகமாக விளங்கும் காலசம்ஹார மூர்த்தி தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். வழக்கமாக, இது நடராஜரின் நிலை. தாண்டவ நடராஜர், காலசம்ஹார தாண்டவம் ஆடியதாக நம்பப்படுகிறது. எனவேதான், அருகில் பாலாம்பாள் நின்று நோக்க, இடப் பாதம் தூக்கிக் காலனை உதைத்த கோலத்தில் காட்சி தருகிறார் காலசம்ஹார மூர்த்தி. பக்கத்திலேயே, வெள்ளிப் பேழையில் மரகத லிங்கம்.
காலசம்ஹார மூர்த்திக்கு தீபாராதனை நடைபெறும்போது, அர்ச்சகர், ஸ்வாமியின் பீடத்தை மூடினாற் போலவுள்ள வெள்ளித் தகட்டை நகர்த்துவார். உதைபெற்ற எமன், உயிரிழந்து தலைசாய்த்துக் கிடக்கிறான். பூதகணம் ஒன்று கயிறு கட்டி யிழுத்து, எமனை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது.
என்று மார்க்கண்டேயர் துதித்த மிருத்யுஞ்சய தோத்திரத்தைக் கூறி வணங்குகிறோம்.
எடை தாங்காமல் பூமிதேவி வேண்ட, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் பார்த்திருக்க, எமனை எழுப்பித் தந்தார் பரமனார். அவ்வாறு அருள் பெற்ற எமதர்மன், காலசம்ஹாரருக்கு நேர் எதிரில், முதல் பிராகாரத்தின் தெற்குச் சுற்றில் உள்ளார் (நாம் ஏற்கெனவே இவரைச் சந்தித்து விட்டோம்.)
ஆயுள்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், அஷ்டம தசாபுக்தி பரிகாரம் போன்றவற்றை இந்த மகா மண்டபத்தில், சாஸ்திர ரீதியாக நடத்துவதுண்டு. குறிப்பாக, காலசம்ஹார மூர்த்திக்கும், எமதர்மருக்கும் இடையிலுள்ள இடத்தில் நடத்தினால், யாருக்கு நடத்தப் படுகிறதோ அவரைத் தீமைகள் அண்டா என்பது திண்ணம்.
மகா மண்டபத்துக்கு முன்பாகவே சங்கு மண்டபம் இருக்கிறது என்று பார்த்தோமல்லவா! இறைவனுக்கு சங்கு தீர்த்த பூஜை இங்கு நடைபெறுவதால், இது சங்கு மண்டபம்.
பெரிய மண்டபம். இங்குதான் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. வடமேற்கில் சந்திரசேகரர் சந்நிதி. இதே மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் தல விநாயகரின் சந்நிதி. அருள்மிகு கள்ளவாரணப் பிள்ளையார் என்று திருநாமம். கிழக்குப் பார்த்தவர். ஏன் இப்படியரு பெயர்? விநாயகர் என்ன கள்ளத்தனம் செய்தார்?
தங்களின் தவறை உணர்ந்த தேவர்கள், விநாயகரை வழிபட்டனர். அவரோ அமிர்த கடத்தை எடுத்துக் கொண்டுபோய் ஒளித்து வைத்தார். வழிபாடு செய்தவுடன், மனமிரங்கி கடத்தைக் கொடுத்தார். ‘‘சோர கணபதியே! இதே திருநாமத்துடன் இங்கு எழுந்தருள வேண்டும். ஞானவாவியின் அருகில் தாங்கள் கொலுவீற்றிருக்க, தங்களின் திருமுன் நாங்கள் அமிர்தம் பருக ஆசைப்படுகிறோம். அங்கேயும் எழுந்தருள வேண்டும்’’ என்று தேவர்கள் வேண்டினர். அதை ஏற்று, ஞானவாவியின் தென்மேற்கு மூலையில் எழுந்தருளினார்.
கடத்தை ஒளித்துக் கள்ளத்தனம் செய்ததால், கள்ளவாரணர். வாரணம் என்றால் யானை (சோர கணபதி, நல்ல தமிழில் கள்ள வாரணர். அதாவது கள்ள + வாரணர்.)
என்று வணங்கி நிற்கிறோம்.
திருக்கடவூர் திருத்தலம் விநாயகருக்கான அறுபடை வீடுகளுள் ஒன்றாகும். விநாயகரை வணங்கிவிட்டு, மீண்டும் உள்பிராகாரத்தை வலம் வருகிறோம். முருகப் பெருமானுக்கான அறுபடை வீடுகள் வெகு பிரசித்தம். முருகரின் மூத்த சகோதரரான விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் உண்டு.
- என்பது பழந்தமிழ்ப்பாடல்.
திருஅண்ணாமலை - செந்தூரப் பிள்ளையார்
முதுகுன்றம் (விருத்தாசலம்) - ஆழத்துப் பிள்ளையார்
கடவூர் - கள்ளவாரணப் பிள்ளையார்
மதுரை - முக்குறுணிப் பிள்ளையார்
காசி - துண்டீர விநாயகர்
திருநாறையூர் - பொல்லாப் பிள்ளையார்
- இவர்களே படைவீட்டுப் பிள்ளையார்கள்.
உள் பிராகார வலத்தில் கவனிக்கப்பட வேண்டியவை சில உண்டு. வடக்குத் திருச் சுற்றில் புண்ணியவர்த்தனர். மார்க்கண்டேயரைக் காண்பதற்காக வந்த புலஸ்திய ரிஷி, அமிர்தகடேஸ்வரரை எண்ணி தியானித்து, சிவலிங்கத் திருமேனி ஒன்றைப் பிரதிஷ்டை செய்து வணங்கினார். அந்தத் திருமேனியே புண்ணிய வர்த்தனர். பூஜித்தவர்களுக்குப் புண்ணியத்தைத் தரக் கூடியவர். கிழக்குத் திருச்சுற்றில், தெற்கு நோக்கியவராகத் தனி மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார் சண்டேசர்.
மூலவர் சந்நிதி கோஷ்ட மூர்த்தங்களாக பிரம்மா; துர்க்கை; லிங்கோத்பவர்; தட்சிணாமூர்த்தி; விநாயகர். வழக்கமாக சண்டேசர் இருக்கும் இடத்தில் இல்லாமல், மூலவருக்குப் பின்புறமாக, லிங்கோத்பவருக்கு அருகிலிருப்பது கண்டு களிப்பதற்குரியது. பிராகாரத்தை வலம் வரும்போது, அறுபத்துமூவர் சிந்தையைக் கவர்கின்றனர்.
திருக்கடவூருடன் தொடர்பு கொண்ட இன்னும் இரண்டு தீர்த்தங்கள் உண்டு. கால தீர்த்தம் என்று பெயர் இருந்தாலும் தற்காலத்தில், ஆனைக் குளம் என்றழைக்கப்படும் தீர்த்தம், ஊரின் நடுவில் உள்ளது. எமன் தோற்றுவித்தது. இதில் நீராடி இறைவனைப் பூஜித்துத் தனது பலமெல்லாம் மீண்டும் பெற்றார் எமதர்மராஜா. மற்றொன்று மார்க்கண்டேய தீர்த்தம். திருக்கடவூர் மயானத்தில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் திருக்கடவூர் மயானம் என்றழைக்கப்படும் திருக்கோயிலும் உண்டு.திருக்கடவூரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது கடவூர் மயானம். மயிலாடுதுறையிலிருந்து வேப்பஞ்சேரி செல்லும் டவுன் பஸ் இந்த ஊர் வழியாகச் செல்லும்.
இதுவும் மூவர் பாடல் பெற்ற தலம்.
ஊர் மிக மிகச் சிறியது. இயற்கைச் சூழலில் அமைந்துள்ள ஊரில், போதிய பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது திருக்கோயில்.
நடராஜ சபையும், பைரவர் சந்நிதியும் கொண்ட இந்தக் கோயிலில், சிங்கார வடிவேலர் வில் ஏந்தியவராகக் காட்சி தருகிறார். சதுரபீட ஆவுடை யாருடன் கூடிய மூலவர், மேற்கு நோக்கியவராக தரிசனம் தருகிறார். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது.
கோயிலுக்குத் தெற்குப் புறத்தில், வயல்களுக்கு நடுவில் இருக்கிறது காசி தீர்த்தம். இங்கிருந்துதான் கடவூர் அமிர்தகடேஸ்வரருக்கு, தினந்தோறும் அபிஷேக நீர் கொண்டு போகப்படுகிறது. இதற்கு, அஸ்வினி தீர்த்தம் என்றும் இன்னொரு பெயருண்டு. ஏன், மார்க்கண்டேய தீர்த்தம் என்றும் அழைக்கலாம். மார்க்கண்டேயர் கடவூர் அமிர்தகடேஸ்வரரை அபிஷேக ஆராதனம் செய்து வழிபடுவதற்காக கங்கையை நாட, கங்காதேவி, பங்குனி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று, இந்த காசி தீர்த்தத்துக்குள் வந்து கலந்தாளாம்.
இந்தப் பெருமையைக் கொண்டாடும் விதத்தில், பங்குனி அஸ்வினி நாளன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று, கடவூர் இறைவரும் மார்க்கண்டேயரும் இங்கு வந்து தீர்த்தம் கொடுத்தருளுவார்கள். அன்றைய தினம், இந்தத் தீர்த்தத்தில் நீராடுவது மிக மிகச் சிறப்பானதாகும். அதெல்லாம் சரி. அதென்ன பெயர் மயானம்?
பிரம்மன் சாம்பலாகி உயிர்ப்பிக்கப்பட்டு, படைப்புத் தொழில் வழங்கப்படும் இடம் இது என்பதால், மயானம் என்று பெயர். அனைத்தும் இறைவனுக்குள் ஒடுக்கம். அனைத்தும் இறைவனி லிருந்து பிறக்கும் என்று உணர்வது மெய்ஞ்ஞானம் தானே! எனவே, அந்தப் பெயரும் பொருத்தமாகத்தான் உள்ளது.
பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமானடிகளே! என்று சுந்தரர் பாடியதை நாமும் பாடியவாறே, மயானத்தாரை வணங்கி நிற்கிறோம்.
|
No comments:
Post a Comment