யாரோ மீண்டும் தட்டினார்கள். கண்களைக் கசக்கியபடி எழுந்து உட்கார்ந்தார். தன்னைத் தட்டிய வடிவம், எழுந்து நடப்பது போலத் தெரிந்தது. யாரென்று திரும்பிப் பார்ப்பதற்குள், மறு திசைக்கு நகர்ந்து விட்டது அந்த உருவம். ஆனால், அலைந்து நெளிந்த சடைக் கற்றையும் முதுகுப்புறத்தில் சுருண்டு கிடந்த பாம்புக் கற்றையும் தெறித்து விழுந்த கொன்றை மலரும்... ஆஹா!...
‘‘என்ன, ஞானசம்பந்தா! நம்மைப் பாட மறந்தனையோ? பார்க்கவும் வாராயோ?’’ -குரல் வந்த திசையைக் கண்கள் நிலைகுத்தப் பார்த்தார் ஞான சம்பந்தர்.
‘‘பாட மறந்தாயோ?’’ என்னும் வினா மீண்டும் எழ... காட்சி கொடுத்த பரமனார், சடுதியில் காணாமல் போனார்.
மீண்டும் எல்லோரையும் பார்த்தார் சம்பந்தர். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். சரிந்து பாய்ந்த நிலவொளியும் விண்ணில் தெரிந்த நட்சத்திரங்களின் நிலையும் இரவின் மூன்றாம் யாமம் என்பதைக் காட்டின.
‘கனவில் வந்தா சிவனார் காட்சி கொடுத்தார்? காட்சி மட்டுமா - பாதை காட்டியும் கொடுத்தார் அல்லவா?’
கண்ணில் நீர், உள்ளத்தில் அன்பு, சொற்களில் உணர்வு பெருக்கெடுக்க... பழம் பஞ்சுரப் பண்ணில் பெருக்கெடுத்தன தேவாரப் பாடல்கள்.
‘
துஞ்ச வருவாரும்....’ தூங்கும் போதல்லவா வந்தார்... ‘துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும்...’ உறங்கும்போது வந்து, உறக்கம் நீக்கி, வணங்குவித்தாரே...
துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும்...
- ஞானசம்பந்தர் பாடப் பாட, பாட்டுக் குரல் கேட்டு ஒவ்வொருவராக எழுந்தனர். இரவின் குளுமையும் இசையின் இனிமையும் பழையனூர் மண்டபத்துக்குப் பரிவட்டம் கட்டின.
காலை பொழுது புலரும்போதே மொத்தக் கூட்டமும் புறப்பட்டிருந்தது. எல்லாம் ஆலங்காடு நோக்கித்தான்! இரவு ஞானசம்பந்தர் பாடிய பதிகப் பாடல்களை மீண்டும் பாடிக் கொண்டே போனார்கள்:
கந்தம் கமழ் கொன்றைக் கண்ணி சூடிக் கனலாடி வெந்த பொடிநீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்கொந்தண் பொழில் சோலை அரவில் தோன்றிக் கோடல் பூத்(து) அந்தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே!
என்னே அற்புதம்! என்னே அற்புதம்! நேற்று திருப்பாச்சூர் தரிசனம் முடித்துவிட்டு இங்கு வந்தபோது, ஆலங்காட்டுக்குள் நுழையத் தயங்கிய ஞானசம்பந்தர் இங்கேயே தங்கிவிட்டார். ‘அரவா! நினக்கு நான் பாட வேண்டும் என்று கேட்ட காரைக்கால் அம்மை, தலையால் நடந்த திருத்தலமாயிற்றே! இப்போதும் அம்மை பாட, அத்தன் இங்கே ஆடுகிறாரே! அந்த திருத்தலத்தில் கால் பதித்து நடப்பதா!’ காரைக்கால் அம்மையார் அருளாட்சி நடத்தும் ஆலங்காட்டுக்குள், தானும் தன் கூட்டத்தாரும் கால் கொண்டு நடத்தல் தகாது என்று கருதிய ஞானசம்பந்தர் பழையனூரிலேயே தங்கிவிட்டார்.
பொறுப்பாரா பரமனார்! கனவில் எழுந்தருளி அழைத்தார். இரவு, ‘துஞ்ச வருவாரும்’ என்று பதிகம் பாடிய சம்பந்தப்பெருமான், காலையில் எல்லோரிடமும் தகவலைச் சொன்னார். எல்லோரும் ஆலங்காட்டுக்குப் புறப்பட்டு விட்டார்கள்.
ஊருக்குள் நுழைகிறோம். கிராமிய வாடை முற்றிலும் அரவணைத்துக் கொள்ள, அந்தச் சிறிய ஊர் மென்மையாக வரவேற்கிறது.
காரைக்கால் அம்மையார், ஆடற்கோலம் கண்டு இறைவனோடு ஐக்கியப்பட்ட அருள் தலம்; தேவார மூவரும் பாடிப் பரவிய பதி; பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்ன சபை; கார்க்கோடகனும் முஞ்சிகேஸ்வரரும் தரிசித்துப் பேறு பெற்ற ஊர்; காளியின் செருக்கை அடக்க நடனப் போட்டி நடத்திய பரமன், ஊர்த்துவ தாண்டவம் ஆடி வென்ற இடம்.
இப்படி, பெருமைகள் பல கொண்ட ஆலங்காட்டுத் திருக்கோயில், மிகப் பெரியது. ஊர் நடுவில் கம்பீரமாக இருக்கிறது. இருப்பினும், காளியை வணங்கிவிட்டு, இறைவனை வணங்குவதுதான் இந்த ஊர் மரபு. எனவே, காளி கோயில் செல்வோம்.
ஊரின் மேற்கில் ஒரு பெரிய குளம். சுற்றிலும் படிக்கட்டுகளும் துறைகளும் அமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டுள்ள குளம். முக்தி தீர்த்தம். முக்தி தீர்த்தத்தின் மேற்குக் கரையில் அருள்மிகு திருமூலநாயகி உடனாய அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. தீர்த்தத்தின் வடகிழக்கு மூலையில், காளி கோயில்.
வடக்குப் பார்த்தவளாகக் காட்சி தரும் பத்ரகாளி. எட்டுத் திருக்கரங்கள். வலப் பக்கக் கரங்களில் திரிசூலம், உடுக்கை, வாள் ஆகியவற்றோடு நடன முத்திரை. இடப் பக்கக் கரங்களில் உடுக்கை போன்ற ஒரு ஆயுதம், வர-ஹஸ்தம் ஆகியவற்றுடனும் வியப்பைக் காட்டும் நடன முத்திரைகளுடனும் திகழ்கிறாள்.
காளியை வணங்கிவிட்டு, ஆலங்காட்டு அப்பரின் திருக்கோயிலுக்குச் செல்கிறோம்.
பெரிய கோயில். கிழக்கு வாயில் பிரதானம். கோயிலுக்கு வெளியே, பதினாறு கால் மண்டபம். கோயில் முகப்பில், கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு மேலே, விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், ரிஷபாரூடர், முருகர், காளி என்று சுதைச் சிற்பங்கள். உள்ளே நுழைந்தவுடன், நான்கு கால் மண்டபம். உள் கோபுரத்தைப் பார்த்து நின்றால், நமக்கு வலப் புறம் பெரிய மண்டபம். நூற்றுக்கால் மண்டபம். நடராஜர் அபிஷேகம் நடைபெறக் கூடிய இந்த மண்டபத்தில், இப்போது ஒரு சித்த மருத்துவச் சாலை நடைபெறுகிறது. இடப் புறத்தில், சற்றுத் தள்ளி ஒரு மண்டபம். வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சில செடிகள். மரங்கள். அருகிலேயே பசுக்களும் கன்றுகளும் மரங்களில் கட்டப்பட்டுள்ளன.
இதுதான் வெளிப் பிராகாரம். இந்தப் பிராகாரத்தை வலம் வரலாம். தனியாகச் சந்நிதிகள் ஏதுமில்லை. விஸ்தாரமான இடம். நிறைய மரங்கள்.
வெளிப் பிராகாரத்திலிருந்து உள்ளே நுழையும் வாயிலில், ஐந்து நிலைகளுடன் கூடிய கோபுரம். இதுவே ராஜகோபுரம். கோபுர வாயிலில், ஒரு புறம் வல்லபை விநாயகர். தும்பிக்கை உள்ளிட்ட 11 கரங்கள். மற்றொரு புறம், வள்ளி- தெய்வானை உடனாய பன்னிருகை ஷண்முகர். வணங்கி, வழிபட்டு உள்ளே சென்றால், பலிபீடம். செப்புக் கவசமிட்ட கொடிமரம். நந்தி மண்டபம். இரண்டு பக்கமும் மண்டப அமைப்புடன் கூடிய இடங்கள். இடப் பக்கம் இருப்பது சுக்கிரவார மண்டபம். வலப் பக்கத்தில் துவஜாரோகண மண்டபம். கோயில் திருப்பணிக் காலத்தில் துவஜாரோகண மண்டபப் பகுதியில்தான் பாலாலயம் இருந்துள்ளது. இரண்டு மண்டபங்களிலும் இப்போது கடைகள் உள்ளன.
அடுத்த உள் வாசலில், மூன்று நிலை கோபுரம். ஏழு கலசங்களுடன், வெள்ளி நிறப் பூச்சு கொடுக்கப்பட்டுத் தகதகக்கிறது. நிறையச் சிற்பங்கள். ஊர்த்துவ தாண்டவம் ஆடும் பரமன், மத்தளம் கொட்டும் நந்திதேவர், பாட்டுப் பாடும் காரைக்காலம்மையார், ரிஷபாரூடர், கஜசம்ஹாரர் என்று பலப்பல சிற்பங்கள். கோபுரத்தின் ஒரு புறம் காரைக்கால் அம்மையார் வரலாறும் இன்னொரு புறம் மீனாட்சி திருக்கல்யாண கோலமும் அழகு வாய்ந்த சிற்பங்களாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால், எதிரில் இன்னொரு வாயில். உள் பிராகாரத்துக்குச் செல்லும் இந்த வாயிலின் மேலே, இடமிருந்து வலமாக சித்திர சபை, வெள்ளி சபை, ரத்தின சபை, பொன் சபை, தாமிர சபை ஆகியவற்றின் ஆடல் காட்சிகள்.
நாம் இப்போது நிற்பது இரண்டாம் பிராகாரம். வலம் வருவோமா? வலம் தொடங்குவதற்கு முன்னால், நின்று ஒரு முறை மூன்று நிலை கோபுரத்தை உட்புறமிருந்து நோக்குகிறோம். இந்தப் பக்கமும் எழிலார்ந்த சிற்பங்கள். தசாவதார விஷ்ணு, கண்ணை அப்பும் கண்ணப்பர், மனைவியுடன் நிற்கும் அரிவாட்டாய நாயனார் என்று எழில் கொஞ்சும் காட்சிகள்.
இரண்டாம் பிராகாரத்தில், ஆங்காங்கே திருமாளிகை அமைப்புகள் உள்ளன. ஆனால், சந்நிதி ஏதுமில்லை. தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி. தெற்குத் திருச்சுற்றில் திரும்பியவுடன், ஆருத்ரா அபிஷேக மண்டபம் கண்ணில் படுகிறது. பழைய பாணியில் கட்டப்பட்டுள்ள சமீபத்திய கட்டுமானம். இங்கிருந்து பார்த்தால், தெற்கு வாயில் வழியாக உள்ளே இருக்கும் ரத்தின சபை தெரிகிறது. இந்த வாயில் வழியாகவும் ரத்தின சபை தரிசனத்துக்குப் போகலாம். ஆருத்ரா மண்டபத்தில், ரத்தின சபைக்கு நேர் எதிரே, நந்தி. நந்திக்குப் பின்னால், நிலைக் கண்ணாடி. ஆருத்ரா நேரத்தில், அபிஷேக பிம்பம் கண்டு தரிசிக்கலாம். வலம் வந்து திரும்பும்போது, வடமேற்கு மூலையில் தல மரமான ஆலமரம். பெரிய மரம். நிறைய விழுதுகள். அருகிலேயே நவீன காலத்தில் கட்டப்பட்ட சிறிய மண்டபம்.
வடக்குச் சுற்றில் வலம் வந்து கிழக்குச் சுற்றில் திரும்பும் இடத்தில் யாகசாலை. வடகிழக்கு மூலையில், தெற்குப் பார்த்த அம்பாள் சந்நிதி. வலத்தை நிறைவு செய்து, உள் வாயில் வழியே நுழைகிறோம்.
உள்ளே நுழைந்து வலப் புறம் திரும்ப.... அடடா! அடடா!... ரத்தின சபை. வலம் வரும்போது, தெற்கு வாயில் வழியாகப் பார்த்தோமே, அதே ரத்தின சபை. கால் தூக்கி ஆடும் ஆண்டவன் சந்நிதி. தெற்குப் பார்த்து ஆடிக் கொண்டிருக்கிறார் அம்பலத்தாடுவார்.
திருவாலங்காடு, பஞ்ச சபைகளில் ஒன்று. ரத்தின சபை. இங்கு எழுந்தருளி ஆடும் இறைவன் ரத்தினசபாபதி. இறைவனின் தாண்டவங்களில், இங்கு ஆடப்படுவது சற்றே வித்தியாசமான தாண்டவம்.
ஊர்த்துவ தாண்டவம். ஊர்த்துவம் என்றால் மேலே என்று பொருள். காலை மேலே (தலைக்கு மேலே) தூக்கி ஆடுவதால், இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.
இந்த நடனத்துக்கு வேறு சில பெயர்களும் உண்டு. காளியுடன் ஆடியதால் காளி தாண்டவம். வேகமாக ஆடுவதால் சண்ட தாண்டவம். வீடுபேறு அருளும் அனுக்கிரக நடனம் என்பதால் அனுக்கிரக தாண்டவம் (அல்லது அருள் நட்டம்). ஆடினார் பெருங்கூத்து காளி காண என்று அப்பர் பெருமான் இதனைப் பாடுகிறார். எனவே, பெருங்கூத்து என்றொரு பெயரும் உண்டு. ஆதிப் பரமனார் இங்கே ஏன் ஊர்த்துவ தாண்டவம் ஆடுகிறார்?
முன்னொரு காலத்தில், இந்தப் பகுதி ஆலம் வனமாக இருந்தது. சும்பன், நிசும்பன் என்கிற இரண்டு அசுரர்கள், ஆலம் வனத்தை ஆர்ப்பாட்ட வனமாக மாற்றி, பலருக்கும் துன்பம் கொடுத்தனர். அசுரர்களின் அட்டகாசம் தாங்க முடியாத தேவர்கள் இறையனாரிடம் முறையிட்டனர். இறையனார், இறைவியிடம் கூற... பரமேஸ்வரியாம் இறைவி தன் கண்களில் இருந்து காளியைத் தோற்றுவித்தார். காளிக்குப் பற்பல படைகளையும் கொடுத்தார். படைகளுடன் சென்ற காளி, அசுரர்களை வென்று வாகை சூட, அந்த ஆலவனத்தின் ஆட்சி உரிமையை காளிக்கே அளித்தார்.
அசுர ரத்தத் தொடர்பு ஏற்பட்டதால், காளிக்கும் ஆணவம் ஏற்பட்டது. அதன் விளைவால் காளி கொடுமைகள் புரியத் தொடங்கினாள். காளியின் கொட்டத்தை அடக்க எண்ணிய இறையனார், அகோர வடிவம் பூண்டு, சூல பாணியாக ஆலங்காட்டை அடைந்தார்.
அகோர வடிவம் கண்ட காளி, நேரடியாகப் போரிடத் தயங்கினாள். காளி, ஆடல் கலையில் வல்லவள் (காளீயம் என்ற நடன நூலை காளி இயற்றியதாகச் செய்திகள் உண்டு). எனவே, தனக்குத் திறமை அதிகம் என்று நம்பி, இதில் அகோரரை வென்றுவிடலாம் என்று கணக்குப் போட்டாள். ‘ஆடலில் வெற்றி பெற்றால், ஆலவன ஆளுகையைப் பெறலாம்’ என்று கட்டளைப்படுத்தினாள். ஆடல் வல்லானாயிற்றே! ஆட்டத்துக்கா தயங்குவார்?
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே சொல்லும் பொருளெலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே...
ஆட்டமும் பாட்டுமாக ஆனார்... ஆடினார்... ஆடினார்.... ஆடிக் கொண்டாடினார்.
போட்டியைச் சொன்னவள் காளியல்லவா! காளி ஆட... கனகக்குன்றாம் ஐயனும் ஆட... கடைசியில் இறைவன் கால்தூக்கி ஆட... தான் அவ்வாறு செய்ய முடியாமல் கால் தடுமாற.... காளி காண ஆடிய நடனசபாபதி, போட்டியில் வென்று ஆடினார். காளியின் இறுமாப்பை நீக்கிய தாண்டவம்தான், நாம் ரத்தினசபையில் காணும் ஊர்த்துவ தாண்டவம்.
அழகான பஞ்சலோகத் திருமேனி. தலை வரையில் தூக்கிய இடக் கால். தாண்டவ வேகத்தில், சடைக் கற்றைகள் அவிழ்ந்து அலைகின்றன. எட்டுத் திருக்கரங்கள். ஊன்றிய வலக் கால். காலடியில் உயிர்ப்பின்றி மெலிந்து கிடக்கும் முயலகன். அவனருகே ஒரு சிறு பாம்பு. வலக் கரங்கள் நான்கிலும் உடுக்கை- அபய ஹஸ்தம்- பாக்குவெட்டி- திரிசூலம். இடக் கரங்களில் ஒன்று, ஊர்த்துவ பாதத்துக்கு மேலே கவிழ்ந்தாற்போல இருக்கிறது. இன்னொன்று வீசுகரமாக, மார்புக்குக் குறுக்காகப் பாய்ந்து, ஊன்றிய பாதத்தைக் காட்டுகிறது. மீதமுள்ள இரண்டு கரங்களில் ஒன்றில், தீச்சுடர், மற்றதில் பாம்பு. ஊர்த்துவ தாண்டவம், காளியை வெற்றி கொள்ள ஆடியது சரி. இதற்கு வேறு ஏதாவது பொருளுண்டா?
நமக்கு வரும் இந்தச் சந்தேகம் ஆதிசேஷனுக்கும் வந்ததாம். தன் ஐயத்தை திருமாலிடம் கேட்க, அவர் கூறிய பதில் என்ன? சேடனுக்கு மால் உபதேசித்த சருக்கம் என்று திருவாலங்காட்டுப் புராணம் இதைப் பற்றிக் கூறுகிறது.
நாற்றிசையும் போற்றிசெயும் ஆலவனப் பெருமையினை நாதன் அல்லால் போற்றி எவர் புகழ்ந்துரைப்பார்! புனிதமதில் புனிதமாய்ப் பொருவற் றோங்கி மேல்திகழும் புண்ணியத்தின் புண்ணியமாய் வியனாகி வீறு பாசம் மாற்றி அருள் அளித்து ஈசன் மலரடிக்கீழ்ப் பேரின்ப வாழ்வு சேர்க்கும் என்றார் திருமால்.
இறைவனின் ஐந்து தொழில்களில், இது ஐந்தாவது தொழிலான அருளலுக்கு உரிய நடனம். தூக்கிய ஊர்த்துவ பாதம் வீடுபேறு (மோட்சம்) அருளும் பாதமாகும்.
ஆதிசேஷன் எந்த விதத்தில் இதில் சம்பந்தப்பட்டார் என்று ஐயம் தோன்றுகிறதல்லவா! இதற்கு விடை காண, இன்னும் விரிவாகப் புராணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கிடையில், இறையனாரின் திருக்கரத்தில் தவழ்ந்து கொண்டிருந்த பாம்பு ஒன்று செருக்கு தலைக்கேற, விஷம் கக்கியது. அந்தப் பாம்பின் பெயர் கார்க்கோடகன். பாம்புக்கு தண்டனையாகப் பூமியில் பிறவியை அளித்தார் ஐயன். தவறுணர்ந்த பாம்பு, பாப விமோசனம் கோரியது. ஆலங்காட்டில் தவம் செய்து ஆடல் கண்டால் முக்தி கிட்டும் என்று பரமன் அருள, ஆலங்காடு அடைந்த கார்க்கோடகனும் தவம் செய்யத் தொடங்கினார்.
மார்கழித் திருவாதிரைத் திருநாள் வந்தது. அந்த ஆருத்ரா திருநாளில், முஞ்சிகேசருக்கும் கார்க்கோடகனுக்கும் ஊர்த்துவ தாண்டவம் காட்டியருளினார் நடன சபாபதி. பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷனின் அவதாரம்) கார்க்கோடகனாகவும், வியாக்ரபாதர் முஞ்சிகேசராகவும் வந்தனர் என்றும் கூறப்படுகிறது.
அண்டமெல்லாம் இருள் நீங்க ஆடல் செய்வோம் ஆலவனத்து உறுதி என்று இறையனாரே சுனந்தரிடம் கூறியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
சாஸ்திர ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் ஊர்த்துவ தாண்டவத்துக்கு மிகப் பெரிய சிறப்பு உண்டு. மெலிந்த முயலகன் உயிர் இல்லாமல் கிடக்கிறான்; அதாவது, பந்தத்தைத் தரும் உடல் உயிர் இல்லாமல் கிடக்கிறது. உயிர் எங்கே போயிற்று? உயிரான ஆன்மா, எம்பெருமானின் ஊர்த்துவ பாதத்தில் இருக்கிறது. பிறவி மலங்களிலிருந்து பிரிக்கப்பட்டுவிட்ட ஆன்மா, இறைவனின் குஞ்சிதபாதத்தால் தூக்கப்பட்டு, அலையும் சடைக் கற்றைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. அவிழ்ந்த சடைக்கற்றை ஞானத்தைக் குறிக்கும். நுண்சிகை ஞானமாம் என்பார் திருமூலர். ஆன்மாவுக்கு வீடுபேறு அருளும் இறைவன், அது ஞானத்தின் தொடர்பை அடைவதற்காக ஆன்மாவை, குஞ்சித பாதத்தால் தூக்கிச் சடைக் கற்றைக்கு அருகில் வைத்துள்ளார். அப்படி வீடுபேற்றைப் பெற்றுள்ள ஆன்மாவுக்குத் தம் திருக்கரமொன்றால் அருள் வழங்குகிறார் (குஞ்சிதபாதம் மீது குவிந்துள்ள கை).
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இன்பம் தரும் ஊர்த்துவ தாண்டவத்தை தரிசிக்கிறோம்.
ஊர்த்துவ தாண்டவருக்கு இடப் புறம் அம்பாள். சமீசீனாம்பிகை என்று திருநாமம். வலப் புறம் எலும்புருவாக காரைக்கால் அம்மையார். சமீசீனாம்பிகை என்ற திருநாமம், பலவற்றை விளக்குகிறது. சற்றே வித்தியாசமான வடிவில், நின்ற கோலத்து அம்பாள். சாதாரணமாக, இறையனார் ஆடும்போது அருகிலிருக்கும் சிவகாமியம்மை, தமது இடக் கரத்தைக் கீழே தொங்கவிட்டிருப்பார். ஆனால், இங்கே வேறுபாடு! அம்மனின் வலக் கரம் கீழே தொங்க, இடக் கையில்... அதென்ன... தம்முடைய ஆச்சரியத்தைக் காட்டும் வகையில், அம்பாள், இடக் கை விரல் ஒன்றை லேசாக நீட்டி முகத்துக்கு அருகே வைத்திருக்கிறாற் போலத் தோன்றுகிறது.
காரைக்கால் நகரில் தோன்றிய புனிதவதி, இளமையும் உடம்பும் எழிலும் வெறுத்து, எலும்பு உருவம் தாங்கி பலப்பலத் திருத்தலங்களுக்கும் சென்றார். கயிலாயம் காணும் ஆவல் ஏற்பட்டது. கயிலாயம் மீது, தன் கால்களால் ஏறக் கூடாது என்று தலையால் நடந்து சென்றார். ஆடி ஆடி ஏறி வரும் விநோத வடிவம் யாரென்று பரமேஸ்வரி வினவ, ‘‘எம்மைப் பேணும் அம்மை காண்!’’ என்று பதில் கூறினார் பரமனார்.
ஆதியும் அந்தமும் இல்லா இறையனாரால், ‘அம்மையே!’ என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மை, கயிலாயநாதரிடம் ஆடற்காட்சி வேண்டினார். பிறவாமை வேண்டும் - மீண்டும் ஒருவேளை பிறப்புண்டேல், நின்னை மறவாமை வேண்டும் அறவா! நின் அடிக்கீழ் அமர்ந்து யான் பாட வேண்டும்; நீ ஆட வேண்டும் என்று அம்மை கேட்டார். ஆடற்காட்சியை ஆலங்காட்டில் தருவதாக வாக்களித்தார் ஆடல்வல்லான். மீண்டும் தலையால் நடந்து ஆலங்காடு அடைந்தார்கள் அம்மை. ஆலங்காட்டில், ஊர்த்துவ தாண்டவக் காட்சியை ரத்தினசபையில் அருளினார் ஐயன்.
திருவாலங்காட்டில் தாண்டவத்தை தரிசித்து காரைக்கால் அம்மை பாடிய பதிகங்களே, மூத்த திருப்பதிகங்களாகும்.
தாழ் சடை எட்டுத் திசையும் வீசி அங்கும் குளிர்ந்த அனல் ஆடும் எங்கள் அப்பன் இடம் திரு ஆலங்காடே! ... ... எடுத்த பாதம் அண்டம் உற நிமிர்ந்தாடும் எங்கள் அப்பன் இடம் திரு ஆலங்காடே என்று பாடினார்.
ரத்தின சபையைத் தனியாக வலம் வரலாம். வலம் சுற்றும்போது, ஏதோவொன்று புரிகிறது. சுற்றி வரும்போது, ரத்தினசபை ஆழமாகத் தெரிகிறது. ஆனால், சபையின் சுவர்களில் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கும் சாளரங்கள் மூடி இருக்கின்றன. மீண்டும் முன்புறம் வந்து பார்த்தால், சபை ஆழமாக இருப்பது போலத் தோன்றவில்லை. ரத்தினசபாபதி முன்புறத்திலேயே ஆடிக் கொண்டிருக்கிறார். ஏன்?
சபையினுடைய பின்புறம் ‘ரகசியம்’ என்று அழைக்கப்படுகிறது. எப்போதும் இறையனார் திருவடிக்கீழ் அமர்ந்து, தான் பாட வேண்டும் என்று கேட்டாரல்லவா காரைக்கால் தாய்? அந்தத் தாய் அமர்ந்து பாடிக் கொண்டிருக்க, அதற்கேற்ப சபையின் உட்புறம் ஆடிக் கொண்டிருக்கிறாராம் அண்டநாயகர். எல்லையற்ற பரமானந்தத்தில் காரைக்கால் அம்மை, இறையனாருடன் இசையிலும் நடனத்திலும் இணைந்திருக்கும் தன்மைதான், ‘திருவாலங்காட்டு ரகசியம்’ ஆகும்.
ரத்தின சபைதான், பஞ்ச சபைகளுள் முதன்மையானது. ஆதியானது. மணிமன்றம் என்றும் இதற்குப் பெயருண்டு. ஊர்த்துவ தாண்டவ மணிமன்ற நாயகரை, மீண்டும் வணங்கி மூலவர் சந்நிதிக்குப் போக யத்தனிக்கிறோம்.
ரத்தின சபைக்கு எதிரில், உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டிருக்கும் மண்டபம். மூலவர் சந்நிதிக்குப் போகும் உள் வாயிலுக்கு அருகில், வடக்கு முகமாக ஒரு சந்நிதி. பத்ரகாளி அம்மன். தீர்த்தக்கரையில் தனிக் கோயிலில் காட்சி தரும் அதே காளியம்மன்தான் (சென்ற இதழில் விளக்கமாக வந்திருந்தது). உற்சவ மூர்த்தம்.
சைவ நால்வர் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிப் பார்த்தால், மூலவர் சந்நிதிக்குப் போகும் வழியன்று தெரிகிறது. நிமிர்ந்தால், நடராஜர் காட்சி கொடுக்கிறார்.
பிராகார வலத்தைத் தொடர்கிறோம். வரிசையாக கால பைரவர், கார்க்கோடகர், முஞ்சிகேஸ்வரர், பதஞ்சலி, சுநந்தர், வாதவூரர், சண்டேச அனுக்கிரகமூர்த்தி, அகஸ்தீஸ்வரர், நாகராஜர்.
தென்மேற்கு மூலையில் கணபதி. தெற்குச் சுற்றிலிருந்து மேற்குச் சுற்றில் திரும்பும் இடத்தில், வரிசையாக நிறைய கணபதிகள். தருண கணபதி, பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, த்வஜ கணபதி, உச்சிஷ்ட கணபதி, லட்சுமி கணபதி.
அடுத்து சுப்ரமணியர் சந்நிதி. வடமேற்கு மூலையில் கஜ லட்சுமி. வடக்குச் சுற்றிலும் சில மூர்த்தங்கள். கணநாதர், மாந்தீஸ்வரர், பாபஹரீஸ்வரர், நாகராஜர். அடுத்து ஒருவர் கனகம்பீரமாக அமர்ந்திருக்கிறார். இவர் எதிரிலும் ஒரு நந்தி. இவர் முகத்தில் அப்படியரு சாந்தம். யார் இவர்? உபதேச தட்சிணாமூர்த்தி.
வடக்குச் சுற்றிலிருந்து கிழக்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில், தெற்கு நோக்கிய பள்ளியறை. உமாதேவி சமேத சத்யோஜாதர் என்பது பள்ளியறைப் பெருமானின் திருநாமம். பள்ளியறை ஊஞ்சலில், அம்பாள் திருமேனி வீற்றிருக்க, பள்ளியறைப் பெருமான் மூலவர் சந்நிதிக்குள் இருக்கிறார்.
முக மண்டபத்திலிருந்து அர்த்த மண்டபம் செல்லும் வாயிலின் இரு புறமும் துவார பாலகர்கள். அர்த்த மண்டபத்தில் நின்று உள்ளே நோக்க... அழகான மூலவர். சிவலிங்கத் திருமேனி. ஆலங்காட்டு அப்பர். வடாரண்யேஸ்வரர் (வடாரண்யம் - ஆலங்காடு என்பதற்கான வடமொழிப் பெயர்); தேவர் சிங்கப் பெருமான் (சிவனே, தேவர் சிங்கமே என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் அன்புடன் அழைத்ததால் இந்தப் பெயர்).
ஒன்றா உலகனைத்தும் ஆனார் தாமே ஊழிதோறூழி உயர்ந்தார் தாமே நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே கொன்றாடும் கூற்றை உதைத்தார் தாமே கோலப் பழனையுடையார் தாமே சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே திருவாலங்காடுறையும் செல்வர் தாமே
வழிபட்டு வெளியே வருகிறோம். முக மண்டபத்தில் நடராஜர் எழுந் தருளியிருக்கும் இடத்துக்கு அருகில் சுரங்கப் பாதை ஒன்று இருந்ததற்கான அடையாளம் தெரிகிறது. ஆனால், சுரங் கம் எங்கே போனது, யார் கட்டினார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை. மூலவர் சந்நிதியை மீண்டும் வலம் வருகிறோம்.
அழகான கல் கட்டுமானம். சந்நிதியைச் சுற்றி சிறிய அகழி. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கா. சிறிய தனி விமானச் சந்நிதியில் சண்டேஸ்வரர். தாண்டி வரும்போது இன்னொரு விநோதம். கூடுதலாக ஒரு கோஷ்ட மூர்த்தம். துர்க்கா பரமேஸ்வரர்.
முதலாம் பிராகார நந்திக்கருகே நின்று மூலவரை மீண்டும் வணங்கிவிட்டு, இரண்டாம் பிராகாரத்துக்கு வருகிறோம்.
அம்பாள் சந்நிதிக்கு அருகில் நின்று பார்க்கும்போது ரத்தின சபையின் விமானம் தெரிகிறது. செப்புத் தகடுகள் வேயப்பட்டு மிளிர்கிற விமானம்.
ரத்தினசபாபதியை, ஆலங்காட்டு அப்பரை, வண்டார் குழலி அம்மையை மீண்டும் மீண்டும் வணங்கிக் கொண்டே வெளியே வருகிறோம்.
... உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க...
என்று காரைக்கால் அம்மை கேட்டது நினைவில் தட்டுகிறது. காரைக்கால் அம்மை கனிந்து பாட... பரமனார் பாதம் தூக்கி ஆட... அந்தப் பரமானந்த அனுபவம் பரவசம் கொடுக்க... ஆலங்காட்டிலிருந்து விடைபெறுகிறோம்!
பழையனூர் பெருமை!
கா ரைக்கால் அம்மை தலையால் நடந்த ஆலங்காட்டுக்குள், தான் கால் பதிக்கலாகாது என்று எண்ணிய ஞானசம்பந்தர் தங்கியிருந்த இடம், இங்கிருந்து சுமார் 0.7 கி.மீ. தூரத்தில் இருக்கும் பழையனூர்.
இப்போதும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் திருவாலங்காட்டில் ‘கூழாண்டார் கோத்திரம் சேர்வை’ என்கிற திருத்தொண்டு செய்கிறார்கள். பழையனூரில் ஒரு சிவன் கோயில் உண்டு. அருள்மிகு ஆனந்தவல்லி உடனாய அம்மையப்பர் கோயில். பழையனூர் போகும் வழியில் சாட்சிபூதேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, பங்குனி உத்தரத்தன்று பழையனூர் எழுந்தருள்வார். ராஜேந்திர சோழ மன்னர், பழையனூர் கிராமத்தை திருவாலங்காடுடைய மகாதேவருக்குத் தானமாகக் கொடுத்தார்.
திருவொற்றியூரில் கண்பார்வை இழந்த சுந்தரர், திருவெண்பாக்கத்தில் கோல் பெற்று, பின் ஆலங்காட்டுக்குச் சென்றார். ‘பழையனூர் ஆலங்காடு’ என்றே திருவாலங்காடு, ஞான சம்பந்தப் பெருமானாலும் சுந்தரராலும் பாடப் படுகிறது.
சமய ரீதியாக மட்டுமில்லாமல் வரலாற்று ரீதியாகவும் திருவாலங்காடு முக்கியத்துவம் மிக்க ஊராகும். பற்பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இங்கு கிடைத்துள்ளன. சோழர் வரலாறு பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவுபவை திருவாலங்காட்டுச் செப்பேடுகளே. இந்த ஊரில் இருந்த நடராஜர் படிமங்கள், உலகின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நடராஜர் சிலையன்று, இந்த ஊரைச் சேர்ந்தது என்கிறார்கள்.
|
அமர்ந்திருக்கும் பாங்கு!
காரைக்கால் அம்மை ‘தமிழிசையின் தாய்’ என்று போற்றப்படுகிறார். காரணம் _ இந்தப் பண்கள், இசைக்குத் தந்திருக்கும் வளமையே ஆகும். நட்டபாடை பண்ணின் வழித் தோன்றலாகவே, கம்பீர நாட்டை என்று தற்போது புழக்கத்தில் உள்ள ராகம் அமைந்துள்ளது.
ஆதிப்பரமனால் ‘அம்மை!’ என்றழைக்கப்பட்ட இவர், அறுபத்துமூவரில், மீதி அறுபத்திருவரும் நின்றிருக்க, தான் மட்டும் அமர்ந்திருக்கும் பெருமை பெற்றவர். அவ்வாறே, அமர்ந்த கோலத்தில்தான் ஆலங்காட்டு ரத்தின சபையிலும் காட்சி தருகிறார். கையில் தாளத்தோடு அமர்ந்திருக்கிறார். ராஜேந்திர சோழ மன்னன் தமிழகத்தை ஆண்டபோது, நடராஜ படிமத்தின் கீழ் காரைக்கால் அம்மையைக் கையில் தாளத்தோடு அமர வைக்கும் பாங்கு வழக்கத்துக்கு வந்தது. கம்போடியா, இந்தோனேஷியா போன்ற இடங்களிலும் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆலங்காட்டு அப்பரை, ‘அண்டமுற நிமிர்ந்து ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே!’ என்று பாடினார் காரைக்கால் அம்மை. கல்வெட்டுகளில் இந்தச் சிவனார், ‘அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்’ என்றே போற்றப்படுகிறார்.
|
ஊர்த்துவ தாண்டவம்
ஆனால் ஆலங்காட்டிலோ, இடக் காலைத் தூக்கி, அதுவும் உடலோடு ஒட்டாமல் உலகளந்த பெருமாள் போலச் சற்றே தள்ளி நீட்டி ஆடுகிறார்.
ஊன்றிய பாதம் திரோபாவமும் (மறைத்தல்) தூக்கிய பாதம் அனுக்கிரகமும் (அருளல்) காட்டுகின்றன.
கரண சாஸ்திரப்படி, ஊர்த்துவ தாண்டவத்துக்கு ‘லலாட திலகம்’ என்று பெயர். கால் தூக்கி நெற்றியில் திலகமிடுவது என்று பொருள். காதுக் குழையைக் காலால் கழற்றி அணிந்தார் எம்பெருமான் என்று கூறுவதும் இதனால்தான்!
ஐப்பசி மாதப் பௌர்ணமியில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியை தரிசிப்பது, எல்லா வகைப் பேறுகளையும் தரும் என்று காரண ஆகமம் கூறுகிறது.
|
No comments:
Post a Comment