திருக்கோயில்களில் அம்பிகை, சிவபெருமானுக்கு இணையாக இடப் பாகத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் கோலம், அவள் தவம் புரிந்து ஈசனின் இடப் பாகம் பெற்று அவருடன் சேர்ந்து அன்பர்களுக்கு சகல நலன்களையும் அருளும் நிலையாகும்.
சிவபெருமானின் கருவறையை நோக்கியவாறு, அதாவது இருவரும் எதிரெதிரே சந்நிதி கொண்டு அருளும் நிலை- ‘உபதேசக் கோலம்’ என்று போற்றப்படுகிறது (திருக்காளத்தி, திருப்பனந்தாள் போன்றவை உபதேசத் தலங்கள்).
இறைவனின் வலப் பக்கத்தில் (பெரும்பாலும் கிழக்கு நோக்கி) அம்பிகை வீற்றிருக்கும் கோலம், கல்யாணத் திருக்கோலம் ஆகும்! மதுரை (மீனாட்சி), நெல்லை (காந்திமதி) மற்றும் குற்றாலம் (குழல்வாய் மொழியாள்) ஆகிய தலங்களில் அம்பிகை கல்யாணத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளதால் இவை ‘கல்யாணத் தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன.
மேலும் அம்பிகை, இறைவனுக்கு வலப் பக்கத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் நிலை, அவள் சிவ பூஜை செய்யும் கோலமாகும். காஞ்சி புரத்துக்கு அருகில் உள்ள தக்கோலம் திருத்தலம் இதற்கு ஓர் உதாரணம்.
அகத்தியர் பூஜித்த பெரும்பான்மையான தலங்களில், அம்பிகை உள் மண்டபத்தில் தெற்கு நோக்கிக் காட்சி தருகிறாள். இந்த நிலை, அம்பிகை உயிர்களுக்கு ஞானம் உபதேசிக்கும் கோலம் ஆகும்.
கை கட்டி, வாய் பொத்தி நின்று சிவபெருமானிடம் சிவாகமங்களைக் கேட்கும் உமையம்மையின் திருக்கோலம், ‘சிஷ்யபாவ கௌரி திருக்கோலம்’ என்றழைக்கப்படும். இந்த திருக்கோலம் குறித்து புராணங்களில் காணப்பட்டாலும், திருவுருவங் களாக இந்தக் காட்சியை எங்கும் காண முடியவில்லை.
சிவாலயங்களில் அம்பிகை சந்நிதி ஒன்று மட்டும் இருப்பது பொதுவான நியதி. ஆனால், இதற்கு மாறாகச் சில தலங்களில் இரண்டு அம்பிகை சந்நிதிகள் இருப்பதைக் காணலாம். அதற்கான காரணங்களை புராணங்கள் வாயிலாகவும் வட்டார வழக்குகளாலும் அறிய முடிகிறது.
தவிர, இறைவனிடம் பேரன்பு கொண்டு, கோயில் பணிகளில் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு வீடுபேறு அடைந்த அரச குடும்பப் பெண்களை, பார்வதி தேவியின் அம்சமாகவே கருதி அவர்களுக்கும் சிவாலயத்தில் தனிச் சந்நிதிகள் அமைத்தனர். இதனாலும் இரட்டை அம்பிகை சந்நிதிகள் ஏற்பட்டன.
சில தலங்களில் அம்பிகையின் சந்நிதி, கருவறையில் இருந்து சிறிது தூரம் தள்ளித் தனித்து அமைக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாகச் சில நேரம் பூஜா காலங்களுக்குத் தாமதம் ஏற்பட்டது. ஆகவே சிவாச்சார்யார்கள், சிவ சந்நிதிக்கு அருகில் புதிய அம்பிகை சந்நிதியை அமைத்துக் கொண்டனர். இந்தக் காரணத்தாலும் இரட்டை அம்பிகை சந்நிதிகள் உருவாகின. மேலும் பல ஆலயங்களில் புராண தத்துவ நிலைகளுக்கு ஏற்பவும் இரண்டு அம்பிகை சந்நிதிகள் அமைந்துள்ளன.
இனி இரட்டை அம்பிகைத் தலங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
இதே போல் மயிலாடுதுறை- கும்ப கோணம் சாலையில் ஆடுதுறைக்கு இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது திருநீலக்குடி. இங்குள்ள சிவ ஸ்தலத்தில் அம்பிகை, ‘பக்தாபீஷ்டதாயினி’ எனும் பெயரில் தவக்கோலத்திலும் ‘அனூபமஸ்தினி’ எனும் பெயரில் தவம் முடிந்து இறைவனை மணந்த கோலத்திலும் காட்சி தருகிறாள். இங்கு அம்பிகையே சிவலிங்கத்துக்கு எண்ணெய்க் காப்பு செய்வதாக நம்பப்படுகிறது (இங்குள்ள சிவலிங்கத்தின் மீது எவ்வளவு நல்லெண்ணெய் விட்டாலும் அது முழுவதும் சிவலிங்கத்துக்குள்ளே ஊறி விடுகிறதாம்). இந்தக் கோயிலில் அம்பிகை சந்நிதியில் எண்ணெய் வைத்து வழிபட்ட பின்னரே சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
இன்னம்பூர் தலத்தில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருப்புறம்பயம் ஸ்ரீசாட்சிநாத ஸ்வாமி ஆலயம், திருவிளையாடற் புராணக் கதை நிகழ்ந்த விசேஷ, தலமாகும். இங்கு இக்ஷ§வாணி, குகாம்பிகை ஆகிய பெயர்களில் அமைந்த இரண்டு அம்பிகை சந்நிதிகள் உள்ளன (இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீபிரளயம்காத்த விநாயகர், கிளிஞ்சலால் ஆனவர். ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் தேனால் இந்த விநாயகருக்கு அபிஷேகம் நடப்பது வெகு சிறப்பு).
மயிலாடுதுறை அருகே திருமீயச்சூர் எனும் தலத்தில் அமைந்துள்ள மேகநாதர் ஆலயத்தில் சௌந்தரநாயகி, லலிதாம்பிகை எனும் இரு திருவுருவங்களுடன் அம்பிகை காட்சியளிக்கிறாள். இவற்றுள் லலிதாம்பிகை அமர்ந்த கோலத்திலும், சௌந்தரநாயகி நின்ற கோலத்திலும் காட்சியளிக்கின்றனர்.
கருவூர் (கரூர்) பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சௌந்தரவல்லி, அலங்காரவல்லி என்ற இரண்டு அம்பிகை சந்நிதிகள் உள்ளன. இந்த அம்பிகைகளுள், அலங்காரவல்லி, ‘வடிவுடையாள்’ எனும் பெயரில் இந்தத் தலத்துக்கு அருகில் உள்ள அப்பியபாளையத்தில் அவதரித்து சிவபெருமானை மணந்து கொண்டவள்.
சிதம்பரத்தின் மூல லிங்கத்துக்கு ‘மூலட்டானேஸ்வரர்’ என்று பெயர். இவருக்கு அருகே எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம் இமய பார்வதி. இந்த ஆலயத்தில் சிற்சபையில் தனிச் சிறப்புடன் ஆனந்த நடனமாடிக் கொண்டிருக்கும் நடராஜ மூர்த்தி உலா மூர்த்தியாக இருந்தாலும், இவருடைய தேவியாகிய சிவகாமசுந்தரி மூலவராகத் தனிப்பெரும் சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள்.
திருவாரூரில் உள்ள தியாகராஜர் ஆலயத்தின் மூல மூர்த்திக்கு மூலட்டானேஸ்வரர் என்று பெயர். அவருக்கு இணையாக எழுந்தருளியுள்ள அம்பிகை நீலோற்பலாம்பாள். வீதிகளில் உலா வரும் விடங்கராக (தியாகராஜ மூர்த்திகளுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர் - விடங்கர்) எழுந்தருளியிருக்கும் தியாகராஜ பெருமானின் தேவியாக, தனிக் கோயிலில் மூல மூர்த்தியாகத் திகழ்பவள் கமலாம்பிகை.
கும்பகோணம் அருகே ஆவூரில் இருக்கும் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இரண்டு அம்பிகை சந்நிதிகள் உண்டு. ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீபங்கஜவல்லி ஆகியவை அந்த அம்பாள்களின் பெயர்கள்.
|
Thursday, 3 August 2017
சிவாலயங்களில் இரண்டு அம்பிகை சந்நிதிகள் ஏன் ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment