Friday, 4 August 2017

மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்


சென்னை மாநகரத்தின் பரபரப்பான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாக விளங்கும் இன்றைய மயிலாப்பூர், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்து செழிப்புடன் திகழ்ந்திருக்கிறது. ‘ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாடமாமயிலை’ என்றும், ‘தேனமர் சோலை மாடமாமயிலை’ என்றும், ‘மன்னுதண் பொழிலும் வாவியும் மதிலும் மாடமாளிகையும் மண்டபமும் தென்னன் தொண்டையர்கோன் செய்த நன்மயிலை’ என்றும் இந்தத் தலத்தின் பெருமைகளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலாப்பூரில் உள்ள சித்திரக் குளத்தைத் தல தீர்த்தமாகக் கொண்ட ஓர் ஆலயமே ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில். மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம். புராணப் பெருமையுடன் ஆழ்வார் மேன்மைகளையும் அதிகமாகக் கொண்ட திருத்தலம் இது. வைணவம் வளர்த்த முதலாழ்வார்கள் மூவரில், (முதல் இருவர்: பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்) மூன்றாமவரான பேயாழ்வார் அவதரித்த தலம் இது. அதனால் இந்த ஆலயத்தை ‘அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம்’ என்றே குறிப்பிடுகிறார்கள்.
இப்படிப்பட்ட மயிலாபுரியின் புராணப் பெருமை யும் சாதாரணமானது அல்ல. ஸ்ரீகருட புராணத்தில் பிருந்தாரண்ய க்ஷேத்திர (இன்றைய திருவல்லிக்கேணி) மஹாத்மியத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் மயூரபுரி மகாத்மியம் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பிருந்தாரண்ய க்ஷேத்திரத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது மயூரபுரிப் பட்டணம் (மயிலாப்பூர்). வேத விற்பன்னர்களும் சாஸ்திரத்தில் தேர்ந்த பண்டி தர்களும் இங்கு பல்கிப் பெருகி இருந்தனர். தங்களது தவ வலிமையைப் பெருக்கப் பலரும் இந்த மயூரபுரியை தேர்ந்தெடுத்துப் பயன் அடைந் தனராம்!
இந்த மயூரபுரிப் பட்டணத் தின் கைரவணி புஷ்கரணிக் கரையில் (இன்றைய சித்திரக்குளம்) பிருகு மகரிஷி மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். அப்போது யாகப் பணியில் தனக்கு உதவுவதற்காகப் பல ரிஷிகளையும் அமர்த்திக் கொண்டார். பிரமாண்டமான இந்த யாகத்தில் வேத மந்திரங்களின் கணீர் முழக்கம் திக்கெட்டும் பரவியது. மகரிஷிகளின் செயலால் தேவர்கள் மகிழ்ந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற இந்த யாகத்துக்கு ஒரு நாள் மது என்ற அரக்கன் மூலமாகச் சோதனை வந்தது. ‘‘யாகங்கள் நடத்தி இறையருள் பெற்று, எங்களை அழிக்கத் திட்டமா?’’ என்று பிருகு மகரிஷியிடம் சீறியவன், யாகத்துக்கு உறுதுணையான ரிஷிகளைக் கொடிய ஆயுதங்களால் தாக்கித் துரத்தினான். அவனுடன் துணைக்கு வந்த அரக்கர்களும் தங்களது பங்குக்கு அட்டூழியத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். பிருகு மகரிஷியை மட்டும் அவர்களால் நெருங்க முடியவில்லை. காரணம், அவரது தவ வலிமை அப்படிப்பட்டது!
அரக்கன் மதுவினால் துரத்தப்பட்ட ரிஷிகள், பிரம்மாவிடம் சென்று தங்களது குறையைத் தெரிவித்தனர். ‘‘பாற்கடல்வாசன் பரந்தாமனை நாம் ஒன்று சேர்ந்து போய் வணங்கினால் நலம் பிறக்கும்!’’ என்று பிரம்மதேவன் அவர்களை ஆறுதல்படுத்தினார். அதன்படியே அவர்கள் அனைவரும் திருமாலைத் துதிக்க... பகவான் பிரத்தியட்சமானார். பிரம்மாவும், ரிஷிகளும் மகிழ்ந்து மாலவன் தாள் பணிந்தனர். ‘‘யாது வேண்டும்?’’ என்று கேட்ட பரந்தாமனிடம் விஷயத்தைத் துயரத்துடன் சொன்னார்கள் ரிஷிகள். ‘‘கவலையை விட்டுவிட்டு, கைரவணி தீரத்தில் உங்களது யாகத்தையும் தவத்தையும் தொடருங்கள்!’’ என்று திருமால் அருளினார். அதன் பின் மகிழ்வுடன் அங்கிருந்து புறப்பட்டனர் ரிஷிகள்.
ரிஷிகள் சூழ... மீண்டும் யாகத்தைத் தொடர்ந்தார் பிருகு மகரிஷி. ஒரு சுப வேளையில் லட்சுமிப் பிராட்டியுடன் யாக குண்டத்தில் தோன்றிய மதுசூதனன், அரக்கர்களை அழித்து ரிஷிகளைக் காத்தருளினான். அப்போது பிரகாசிக்கும் ரத்தின கிரீடம் சூடி, ஆபரணங்கள் அணிந்து, கறுத்த அழகிய கேசத்துடன் (முடியுடன்) தோன்றியதால் பரந்தாமன் ‘கேசவன்’ எனப்பட்டான். ரிஷிகளும் தேவர்களும் முனிவர்களும் தங்களது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு, கேசவனைப் போற்றித் துதித்தனர்.
ஒரு முறை கேசி என்ற அரக்கனை சம்ஹாரம் செய்த தாலும் பரந்தாமனுக்கு ‘கேச வன்’ எனப் பெயர் உண்டு. பிருகு மகரிஷி நடத்திய சயன யாகத்தில் இருந்து தோன்றியதால் ‘சயன கேச வன்’ எனப்பட்டான். சூரிய குலத்தில் உதித்த சுமனங்கன் என்ற அரசனுக்கு பகவான் காட்சி அளித்து, அவனது விருப்பத்துக்கு இணங்கி கருடனோடு கூடிய மயூரம் என்ற கொடியை வழங்கி அருளியதால் ‘மயூர கேசவன்’ என்றும் போற்றப்பட்டான்.
சரி... தலப் பெயரான ஆதி கேசவன் என்கிற திருநாமம் எப்படி ஏற்பட்டது என்று பார்ப்போம்.
திருமால் ஒரு முறை, சூரியனான ஆதித்தனின் துயர்களைப் போக்கி அவர் வேண்டுவனவற்றை அருளினார். அதனால் ஆதிகேசவன் என்ற பெயர் மாலவனுக்கு ஏற்பட்டது. ‘ஆதி’ என்றால் ‘உலகின் முதல்’ என்று பொருள். ‘ஆதிமூலமே’ என்று கஜேந்திர யானை, அபயக் குரல் விடுத்தபோது, ஓடோடி வந்து அதன் உயிரைக் காத்தவர் பரமாத்மா. அந்த ஆதிபுருஷனையே குறிக்கிறது இந்த ஆதிகேசவன் என்ற திருநாமம். கலி யுகத்தில் நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களையும் போக்க வல்லவர் இந்த ஆதிகேசவன். இப்படிப்பட்ட ஆதிகேசவன் மயிலா புரியில் குடி கொண்டது எப்படி?
கருட புராணத்தில் இதற்கான பதில் கிடைக்கிறது. குருவின் சாபம் காரணமாக கிரகங்களில் ஒருவனான சந்திரன் ஒரு முறை பாதிக்கப்பட்டான். தனது சாபம் நீங்கி, நிவர்த்தி பெறுவதற் காகப் பல இடங்களிலும் அலைந்து திரிந்து கடைசியில் மயூரபுரி க்ஷேத்திரத்துக்கு வந்து சேர்ந்தான் சந்திரன். மகாவிஷ்ணுவை மனமாரப் பிரார்த்தித்தான். அவனது சாப நிவர்த்திக் காக மகா விஷ்ணு பாரத தேசத்தில் உள்ள புண்ணிய நதிகள் அனைத்தையும் ஒருங்கே அழைத்து, ‘‘நீங்கள் அனைவரும் இங்குள்ள கைரவணி புஷ்கரணிக்கு வந்து, சந்திரனின் பாவம் போக்க உதவுங்கள்!’’ என்றார்.
பகவானின் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட கங்கை உட்பட புண்ணிய நதிகள் அனைத்தும் கைரவணி புஷ்கரணியில் எழுந்தருளின. இதனால் மனம் மகிழ்ந்த சந்திரன், அந்தப் புஷ்கரணியில் மூழ்கி எழுந்து தனது பாவங்களிலிருந்து விடுபட்டான். ‘பகவான் நம்மை அழைத்த வேலை நல்லவிதமாக முடிந்து, சந்திரன் விமோசனம் பெற்று விட்டான். இனி நாம் கிளம்ப வேண்டியதுதான்’ என்று நினைத்த நதிகள் பகவானை அடைந்து, ‘‘இனி நாங்கள் எங்களது பிரதேசத்துக்குச் சென்று வளம் பெருக்க உத்தரவு தாருங்கள்!’’ என்று வேண்டின.
‘‘நதி தேவதைகளே... இந்த மயூரபுரி க்ஷேத்திரத்தில் ஆதிகேசவனாக எழுந்தருளி பக்தர்களின் பாவம் போக்கும் எனக்குத் துணையாக நீங்களும் இங்கேயே இருங்கள்!’’ என்றார் பரமாத்மா. இவ்வாறு அனைத்துப் புண்ணிய நதிகளும் இங்கே ஒருமித்துக் கூடியதால் கைரவணி தீர்த்தத்துக்கு ‘சர்வ தீர்த்தம்’ என்ற பெயரும், சந்திரனின் தோஷம் போக்கியதால் ‘சந்திர புஷ்கரணி’ என்ற பெயரும் ஏற்பட்டன. நாளடை வில், சந்திர புஷ்கரணி என்ற பெயரே சித்திர புஷ்கரணியாகி, தற்போது சித்திரக் குளம் என்று மருவியிருக்கிறது.
ஆணவத்துடன் திரிந்த பிரம்மனின் நான்கு தலைகளில் ஒன்றை சிவபெருமான் கிள்ளி எறிந்ததால், சிவபெருமானை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. அதன் பிறகு சிவபெருமான் இங்குள்ள ஆதிகேசவ பெருமாளைக் குறித்து தவம் இருந்து தனது தோஷத்தைப் போக்கிக் கொண்டாராம். எனவே, மயிலாபுரிக்கு ‘ருத்ர புரி’ என்ற பெயரும் உண்டு என்கிறது மற்றொரு தகவல்.
இனி, மயிலாப்பூர் தலத்துக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பேயாழ்வார் இங்கு அவதரித்த கதை.
ஒரு காலத்தில் மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணிக்கு நீரோடை ஒன்று பாய்ந்தது. அதன் முகத்துவாரம் கைரவணி புஷ்கரணியில் துவங்கு வதால் அந்த நீரோடைக்கு ‘கைரவணி நீரோடை’ என்று பெயர். அழகான அந்த நீரோடையில் அல்லி, தாமரை போன்ற பூக்கள் எப்போதும் மலர்ந்து மணம் பரப்புமாம். இந்த நீரோடையின் மறுமுனை திருவல்லிக்கேணியில் மற்றொரு புஷ்கரணியாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டதாம். (திருவல்லிக் கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஆலயத் திருக் குளமான அது, தற்போதும் கைரவணி தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது). புராண காலத்தில் இந்த நீரோடை வழியாகப் படகுகளில் அர்ச்சகர்கள் மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக் கும் போய் வந்து பூஜைகளை நடத்தினார்கள் என்றும் சொல்கிறார்கள். மயிலாப்பூருக்கும் திருவல்லிக் கேணிக்கும் இடையே இருந்து வந்த அந்தத் தொடர்பை உறுதி செய்யும் வண்ணம் இன்றைக்கும் செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் பேயாழ்வார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் எழுந்தருளி அவருக்கு மங்களாசாசனம் செய்து வைக் கும் திருவிழா நடந்து வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலாபுரி கைரவணி தீர்த்தத்தில் அல்லிப் பூ ஒன்றில் அவதரித்தார் பேயாழ்வார் (இவரது காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்றும் சொல்கிறார்கள்). அவர் அவதரித்த அந்த நீரோடையின் ஒரு பகுதி தற்போது ஒரு கிணறாக- பேயாழ் வார் அவதரித்த புண்ணியப் பகுதியாக (மயிலை அருண்டேல் தெருவில் தற்போதும் இருக்கிறது) பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீரோடையின் மற்ற பகுதிகள் பிற்காலத்தில் சாலைகளாகவும், வீடுகளாகவும் தோட்டங்களாகவும் மாறி விட்டன.
சித்தார்த்தி வருடம் ஐப்பசி மாதம் சுக்லபட்ச தசமி தினத்தில் வியாழக்கிழமை அன்று சதய நட்சத்திரத்தில் பேயாழ்வார் திரு அவதாரம் செய்தார். திருமாலின் பஞ்ச படைகளில் ஒன்றான ந(£)ந்தகம் எனும் வாளின் அம்சமாகத் தோன்றிய இவர், கல்வி மற்றும் கலைகளில் தேர்ந்தார். தெய்வ பக்தியில் எப்போதும் திளைத்து, பகவானின் நாமத் தையே துதித்து, பேய் போலவும் பித்தர் போலவும் சுற்றித் திரிந்ததால் இவரை பேயாழ்வார் என அழைத்தனர்.
பக்தியின் பெருமையையும் பாசுரங்களின் மகிமை யையும் உலகுக்கு உணர்த்த நினைத்த பரந்தாமன், திருக்கோவிலூர் திருத்தலத்தில் முதலாழ்வார்கள் மூவரையும் ஒன்று சேர்க்க நாடகம் ஒன்று நிகழ்த்தி னார். இந்த மூவருக்கும் அப்போது ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லை. பொய்கையாழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் தனித் தனியாகத் திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாளை தரிசித்து விட்டு அன்று இரவுப் பொழுதை அந்த ஊரிலேயே கழிக்கத் திருவுளம் கொண்டனர்.
அதனால் ஒரு வைணவரது வீட்டுத் திண்ணையில் முதலில் பொய்கையாழ்வார் சென்று படுத்தார். அடுத்து, மற்ற இருவரும் ஒருவர் பின் ஒருவராக அங்கு வந்தனர். ஒருவர் படுக்கலாம்; இருவர் உட்காரலாம்; மூவர் நிற்கலாம் என்று இருந்த அந்தத் திண்ணையில் மூவரும் சிரமப்பட்டு நின்று கொண்டிருந்த வேளையில் பெருமழை பெய் வித்தார் பெருமாள். சார லும் குளிரும் சேர்ந்து கொண்டதால் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்து நிற்கும்போது, மேலும் யாரோ ஒருவர் தங்களுடன் சேர்ந்து கொண்டது போல் மூவருமே ஏக காலத்தில் உணர்ந்தனர்.
அதன் பின் மூவருமே உடன் இருப்பது சாட்சாத் பரமாத்மா என்ப தைத் தங்களது ஞான சக்தியால் உணர்ந்து மெய்சிலிர்த்தனர். அந்தக் கணத்திலேயே அவர்களுக்கு தரிசனம் தந்தார் பெருமாள். அந்த ஆனந்தத் திளைப்பில் ஆளுக்கு நூறு பாசுரங்கள் பாடி பரவசம் அடைந்தனர் அவர்கள். இவை முறையே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்று வைணவர் களால் போற்றப்படுகிறது. இந்தச் சம்பவத்தை, பரம்பொருள் திரு விளையாடல் புரிந்து அருந்தமிழ் பாசுரங்களைத் தம் பக்தர்களுக்கு வழங்க இந்த மூன்று ஆழ்வார்களைப் பயன்படுத்திக் கொண்டார் என்கிறது புராணம்.
ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இந்தச் சம்பவம் ஐப்பசி மாதத்தில் ‘பேயாழ்வார் அவதார உற்சவ’ வைபவத்தின் மூன்றாம் நாளில் நடத்தப்படுகிறது. அப்போது ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மூன்று ஆழ்வார்களின் உற்சவர் விக்கிரகங்களை எழுந்தருளச் செய்து, திருவந்தாதி பாசுரங்களை இசைப்பர். இது, ‘திருக்கோவிலூர் உற்சவம்’ எனப்படுகிறது.
இந்த வைபவத்துக்காக முதலாழ்வார்கள் மூவரும் சிறிய மண்டபத்தில் நெருக்கமாக எழுந்தருள, பரமாத்மா, ஸ்ரீஆதிகேசவனாக கருட வாகனத்தில் எழுந்தருளுவார். அப்போது முதலாழ்வார்கள் பாடி அருளிய திருவந்தாதி பாசுரங்கள் பாடப்படும்.
இனி, ஆலய தரிசனம்.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரம். ஏழு கலசங்கள். உள்ளே நுழைந்ததும் ஆதிகேசவ பெருமாளைப் பார்த்த வண்ணம் தும்பிக்கை ஆழ்வார், நாகராஜன் சந்நிதிகள். இடப் பக்கம் ஆலய அலுவலகம், மடைப்பள்ளி. சற்றுத் தொலைவில் பலிபீடம், கொடிமரம். கருடாழ்வார் சந்நிதி. மூன்று படிகள் ஏறினால் ஒரு மண்டபம். வலப் பக்கம் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் சந்நிதிகள். மொத்தம் முப்பத்துமூவரின் திருமேனிகள் இங்கு காணக் கிடைப்பது பெரும் பாக்கியம்!
மூலவர் ஆதிகேசவ பெருமாள் தவிர, மகா மண்டபத்தில் ஸ்ரீராமபிரான், பேயாழ்வார் சந்நிதிகள். துவாரபாலகர்கள் ஜயன்- விஜயன் காவல் காக்க... மூலவர் ஆதிகேசவ பெருமாளின் நின்ற திருக்கோலம் அற்புதம். கிழக்கே திருமுக மண்டலம். நான்கு கரங்கள். சங்கு, சக்கரம், அபயம், கடிஹஸ்தம் தாங்கிய கரங்கள். உற்சவர் விக்கிரகங் கள். ஆதிகேசவ பெருமாளுக்கு பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். திருத்தேர் புறப்பாடு உட்பட தினசரி விழாக்கள் இந்த உற்சவ காலத்தில் களை கட்டும். ஆழ்வார்கள்- ஆச்சார்யர்கள் முப்பத்துமூவரும் பன்னிரண்டு சப்பரங்களில் தரிசனம் தருவர். மயிலை கபாலீஸ்வரர் கோயில் அறுபத்துமூவர் புறப்பாட்டை இது நினைவுபடுத்தும்.
அடுத்து, சீதாதேவி- ஸ்ரீராமபிரான், லட்சுமணருடன் சேவை சாதிக்கும் சந்நிதி. இடப் பக்கம் பரதனும் வலப் பக்கம் சத்ருக்கனனும் காட்சி தருகின்றனர்.
வெளியே வந்து பிராகார வலம் வருவோம். ஊஞ்சல் மண்டபம். அடுத்து, திருமழிசை ஆழ்வார் சந்நிதி. இவர், பேயாழ்வாரின் சிஷ்யர். மற்ற, ஆழ்வார்கள் தனி சந்நிதியில் காட்சி தர... இவர் பேயாழ்வாருக்கு எதிரே இருப்பது சிறப்பு. அடுத்து, வெள்ளித் தேர்.
தனிச் சந்நிதியில் தாயார். திருநாமம்- மயூரவல்லி தாயார். வீற்றிருக்கும் திருக்கோலம். கிழக்கே திரு முக மண்டலம். கருட புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில் மயூரவல்லி தாயாரின் அவதாரம் விளக்கப்பட்டிருக்கிறது. கைரவணி புஷ்கரணி தீரத்தில் பிருகு மகரிஷி, திருமகளே தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்று விரும்பி பிராட்டியைப் பிரார்த்தித்தார். மகரிஷியின் பிரார்த்தனைக்கு உடன்பட்ட மாலவனும், தாயாரை பிருகுவின் மகளாக அவதரிக்குமாறு ஆணையிட்டார். உத்திர நட்சத்திரம் கூடிய ஒரு சுப தினத்தில் புஷ்கரணியில் ஆம்பல் புஷ்பத்தில் ஆவிர்பவித்தார் தாயார். குழந்தைக்கு பார்கவி என்று பெயர் சூட்டினார் பிருகு மகரிஷி. மயிலாபுரியில் அவதரித்ததால், இவர் மயூரவல்லி தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்.
கருணையே வடிவான இந்த அன்னை தன்னைச் சரண் அடைந்தவர்களுக்கு அருளையும் பொருளையும் வாரி வழங்குபவள். இங்கு அன்னைக்கு விழாக்களும் வைபவங்களும் அதிகம். வெள்ளிக்கிழமை தோறும் தாயாருக்கு நடைபெறும் வில்வார்ச்சனை விசேஷ மானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.
‘‘விரும்பியதை அடைய வில்வார்ச்சனை செய்வது சிறப்பானது. திருமலையில் திருவேங்கடவனுக்கும் வில்வார்ச்சனை நடைபெறுகிறது. தாயாருக்கும் இது உகந்த ஒன்றுதான். வெள்ளிக்கிழமை அன்று மாலை ஆறரை மணிக்குத் தாயாருக்கு ஸ்ரீசூக்த வில்வார்ச் சனை நடைபெறுகிறது. அன்று காலை எட்டரை மணிக்குக் கோயிலில் ஸ்ரீசுக்த மகா ஹோமம் நடக்கிறது’’ என்றார் பட்டாச்சார்யர் ஒருவர்.
அடுத்து, சக்கரத்தாழ்வார்- நரசிம்மர். ஆண்டாள் சந்நிதி. ஆண்டாளுக்கு போகி அன்று திருக்கல்யாணம் நடைபெறும். மணவாள மாமுனிகள் சந்நிதி. திருக் கல்யாண மண்டபம். பரமபத வாசல். யாகசாலை. கண்ணாடி அறை. வாகனங்கள் அறை. அடுத்து, வீராஞ்சநேயர் சந்நிதி. உற்சவங்கள் நடத்துவதற்குத் தற்போது இருக்கும் கல்யாண மண்டபம் சிறிது என்பதால் பிராகாரத்திலேயே பெரிதாக ஒரு கல்யாண மண்டபம் கட்டி வருகிறார்கள்.
பல வருடங்களாகத் தடைப்பட்டிருந்த தெப்பத் திருவிழா இந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஐந்து நாள் உற்சவமாக பிரமாதமாக நடந்தேறியது. அதற்கேற்றாற் போல் சித்திரக் குளத்தில் தண்ணீரும் தேவையான அளவுக்கு இருந்ததைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர் பக்தர்கள்.
சென்னை நகரின் பரபரப்பான மயிலையில் பழைமையான ஓர் ஆலயம். அங்கு அமைதியான தரிசனம். மயூரவல்லி தாயார் மற்றும் ஆதிகேசவ பெருமாளின் முழுமையான அருள் பெற, புராணம் புகழும் பேயாழ்வார் அவதரித்த திருத்தலத்துக்கு வாருங்கள்! எல்லையற்ற அருளை வாரி வழங்கி ஆட்கொள்ள பெருமாளும் தாயாரும் ஆர்வத்துடன் ஆனந்தமாக வீற்றிருக்கின்றனர்!
தகவல் பலகை
தலத்தின் பெயர் : ஸ்ரீஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம்.
மூலவர் : ஸ்ரீஆதிகேசவ பெருமாள் அருள்மிகு மயூரவல்லி தாயார்.
சிறப்பு : பேயாழ்வார் அவதரித்த தலம் என்பதால் அவருக்குத் தனி சந்நிதி.
அமைந்துள்ள இடம் : மயிலாப்பூர் சித்திரக்குளம் மற்றும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகே.
எப்படிச் செல்வது? : சென்னையின் எந்தப் பகுதியில் இருந்தும் மயிலாப்பூரை அடைவது எளிது. பறக்கும் ரயில் மூலம் மயிலை ரயில் நிலையத்தில் இறங்கியும் கோயிலுக்குச் செல்லலாம். மயிலாப்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடை தூரம்தான்.
ஆலயத் தொடர்புக்கு :
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் 
மயிலாப்பூர், 
சென்னை 600 004. 
போன்: 044- 2464 3873.

No comments:

Post a Comment