Friday, 4 August 2017

திருநெல்வேலி


சிவனாருக்கும் பார்வதிதேவிக்கும் இமயத்தில் திருமணம் நடந்தது அல்லவா? அப்போது, எல்லோரும் வட திசை சென்றுவிட்டதால், தென்திசை உயரத் தூக்கிக் கொண்டு மேலேறி விட்டது. இதைச் சமன் செய்ய அகத்தி யரைத் தென்திசைக்கு அனுப்பினார் பரமனார்.
தென்திசைக்கு வரும் வழியில் அகத்தியருக்கு உடல் வலி ஏற்பட்டு அவதிப்பட்டார். திருவான்மியூர் மருந்தீஸ்வரரை வணங்கி வழிபட, நோய் தீர்ந்தது. மருந்து- உபதேசம் பெற்ற அகத்தியர், ‘உலகம் சம நிலை பெற வேண்டும்’ என்கிற எண்ணத்தோடு இறைவனைத் துதித்துக் கொண்டே மேலும் தெற்காகச் சென்றார். அவருக்கு முழுமையாகத் தமது திருமணக் காட்சியை சிவனார் காட்டியருளிய திருத்தலம் திருநெல்வேலி! அகத்தியரோடு பயணித்து, நெல்லையை அடைந்து விட்டோம்.
திருநெல்வேலி- பழைமையும் புதுமையும் கைகோக்கும் நெல்லைச் சீமை-
பொருநை என்னும் தாமிரவருணியின் கரையில், தித்திக்கும் தமிழ் கொஞ்சி விளையாடும் நெல்லை-
சிந்துபூந்துறை, கொக்கு உறைகுளம் என்னும் அருந்தமிழ்ப் பெயர்களால் நெஞ்சம் கவரும் நெல்லை-
பாளையக்காரர்களின் வீர முழக்கம் எதிரொலிக்கும் நெல்லை-
மண்ணில் கால் வைத்ததுமே, கட்ட பொம்மன் முதல் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா (நெல்லைக்காரர் இல்லையென்றாலும், இவரை நெல்லையிலிருந்து பிரிக்க முடியுமா?), வாஞ்சிநாதன், வ.வே.சு ஐயர், சுப்பிரமணிய பாரதியார் என்று பலரும் நெஞ்சக் கோயிலில் எழுந்தருளுகிறார்கள்.
தாமிரவருணி ஆற்றின் வட கரையிலும் தென் கரையிலும் அமைந்த திருநெல்வேலி- பாளையங்கோட்டை என்னும் இரட்டை நகரங்களில், திருநெல்வேலியின் நடு நாயகமாக விளங்குகிறது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்.
வண்டு பண் முரலும் சோலைத் திக்கெலாம் புகழ் உறும் திருநெல்வேலி உறை செல்வர் தாமே! ... மதுத்திவலை சிந்துபூந்துறை கமழ் திருநெல்வேலி உறை செல்வர் தாமே! என்று
திருஞான சம்பந்தர் பாடித் துதித்த நெல்லையப்பரை வணங்கித் துதிக்க, திருக்கோயிலுக்குச் செல்வோமா?
பதினான்கு ஏக்கர் நிலப் பரப்பில், இரட்டைக் கோயில் அமைப்பில் இருக்கிறது காந்திமதியம்மன் - நெல்லையப்பர் திருக்கோயில். அம்பாள் சந்நிதி ஒரு தனிக் கோயில் என்று சொல்கிற அளவுக்குப் பெரியதாக, நெல்லையப்பர் சந்நிதிக்குத் தெற்குப் பக்கத்தில் அமைந்திருக்கிறது. இரண்டு சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை. சுவாமிக்கு நான்கு ராஜ கோபுரங்களும் அம்மனுக்கு ஒரு ராஜ கோபுரமும் உள்ளன. இரண்டு சந்நிதிகளையும் இணைக்கும் நீளமான மண்டபம், சங்கிலி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
‘நிறை கொண்ட சிந்தை யன்’ என்றும் ‘நெல்வேலி கொண்ட நெடுமாறன்’ என்றும் சுந்தரரால் குறிக்கப்படும் நின்றசீர் நெடுமாறன் எனும் பாண்டிய மன்னனால், கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்யப்பட்டு, இந்தக் கோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே கூட, இந்தக் கோயில் பிரபலமாக விளங்கியதை, திரு ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களால் தெரிந்து கொள் கிறோம்.
சுவாமி திருக்கோயிலின் கிழக்கு ராஜ கோபுரம்தான் கோயிலின் பிரதான வாயில். உள்ளே நுழைகிறோம். வாயிலின் இரு புறமும் ‘கோயில் கடைகள்’! மரச் சொப்புகளும், தயிர் மத்துகளும், பல்லாங்குழிகளும் கண் சிமிட்டி நம்மை அழைக்கின்றன. தலையை லேசாக உயர்த்தினால்... அட இதென்ன! மேல் கூரையிலும் அதன் இரண்டு பக்கவாட்டுகளிலும் அற்புதமான மர வேலைப்பாடுகள்! கேரளத்துப் பாணியில் கண்களையும் கருத்தையும் கவரும் மரச் சிற்பங்கள்- பல விதமான நாட்டிய முத்திரைகள் பளபளக்கும் இவற்றை விட்டுப் பார்வையை அகற்ற முடியவில்லை!
மெள்ள உள்ளே நுழைகிறோம். நெல்லையம்பலத் தில் எழுந்தருளியிருக்கும் கணேசரையும் முருகப் பெருமானையும் வணங்கிச் செல்வது மரபு. அடுத்து பெரிய திருவாசி. பின்னர், சைவ நால்வரையும் சேக்கிழார் பெருமானையும் வணங்குகிறோம். இசைக் கருவிகள் இசைக்கப்பெறும் வாத்திய மண்ட பத்தைக் கடக்கிறோம்.
அடுத்து உள்ளே செல்ல... நம் கண்களை அகல வைக்கும் பெரிய்ய்....ய்....ய நந்தி. நந்தியைச் சுற்றி இருப்பது நந்தி மண்டபம். கடல்சிப்பி, சுண்ணாம்பு ஆகியவற்றால் ஆன ‘வெண்சுதை நந்தி’, நெல்லையப்பர் கோயிலின் சிறப்பு அம்சம். ‘மாகாளை’ என்று உள்ளூர்க்காரர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், சமீபத்திய கும்பாபிஷேகத்துக்குப் பின்னர், வண்ணங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறார். குளம்பு, இயற்கையாக இருப்பதுபோல் பிளவு பட்டிருக்கிறது; தனது வாலை, இரண்டு பின்னங்கால்களுக்கும் இடையில் கொடுத்து, வலப் பக்கமாக வெளியில் வாங்கி இவர் அமர்ந்திருக்கும் அழகே அழகு!
நந்தி மண்டபத்தின் தெற்குப் பகுதியில் உள்ள அழகான சிலைகள் நம்மை வரவேற்கின்றன. ஒரு தூணில், பேரழகியாக ஒரு பெண். நீண்ட விழிகளும், எள்ளுப்பூ நாசியும், ஒயிலும் ஒய்யாரமுமாக, ஒரு காலை சற்றே சாய்த்து நிற்கும் இந்தப் பெண் யார் தெரிகிறதா? இவள்தான் ரதிதேவி. யாரையோ பார்த்துச் சிரிக்கிறாளே! வேறு யாரைப் பார்த்து ரதி சிரிப்பாள்? எதிர்த் தூணில் எழிலார்ந்த மன்மதன். கைகளில் கரும்பு வில்லும், மலர் அம்புகளும் கொண்டு கம்பீரமாக நிற்கும் மன்மதன். ஆமாம்! என்ன அது? மன்மதன் முதுகில்? ஒரு கூடையில், ஆமையன்றை வைத்துத் தொங்க விட்டிருக்கிறான். ஐம்புலன்களையும் அடக்குபவர்களை ஆமைக்கு ஒப்பிடுவாரே வள்ளுவர்; அப்படி அடக்கியவர்களையும் (அடக்கியதாக நினைத் தவர்களையும்) கூட, மன்மதன் வென்று விடுவான் என்று குறிப்பால் உணர்த்துகிற சிற்பமோ?
ரதியைத் தவிர வேறு யார் கண்ணுக்கும் தெரியாத அனங்கனான (அனங்கன்- அன்+ அங்கன்= அங்கமில்லாதவன்) மன்மதனை, நம் கண்களுக்குத் தெரிய வைத்திருக்கும் சிற்ப அழகைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே திரும்பினால்... அடடே! இன்னுமொரு அழகு. குழந்தைக்குச் சோறூட்டும் ஒரு குறத்தி; தூக்கிக் கட்டிய கொண்டையோடு பாங்காய் இருக்கும் குறத்தி. அவள் பக்கத்திலேயே, குழந்தைக்குக் கிலுகிலுப்பையை வைத்து விளையாட்டுக் காட்டும் குறவன் -மூவரும் ஒரே கல்லில்!
இந்தச் சிற்பங்கள் நம் உள்ளத்தில் செதுக்கும் வியப்பு வளைவுகள் நீங்காமலே நந்தியைத் தாண்டி உள்ளே நுழைய முற்படுகிறோம். நந்திக்கு முன்பாகவே, வேகம் நிறைந்த வீரபத்திரர்; அவருக்குப் பக்கத்தில், போருக்குப் புறப்படும் கோலத்துடன், முறுக்கேறிய நரம்புகளுடன், இடுப்பில் கட்டாரியுடன், இடக் கையில் ‘வாங்கா’ என்னும் கருவியுடன் நிற்கும் இவர்? ‘பகடை ராஜர்’! வீரபத்திரரின் தளபதியாக இருந்தவராம் பகடை; இவர் மரபில் வந்தவர்கள் ‘பகடைகள்’ என்று அழைக்கப்பட்டார்கள். பழைய காலத்து மன்னர்கள், பகடைகளுக்குத் தங்களின் ராணுவத்தில் முக்கியப் பொறுப்புகளைத் தருவார்கள். வீரபாண்டிய கட்ட பொம்மனின் படையிலும் பகடைகள் இருந்தார்கள். நெல்லை மண்ணல்லவா! அதனால்தான், தாய்மண்ணைக் காக்கும் பகடை ராஜாவுக்கும், திருக்கோயிலுக்குள் சிலையெடுத்துச் சிறப்பித் திருக்கிறார்கள்.
கி.பி.1654-ஆம் ஆண்டு சிவாண் டியப்ப நாயக்கரால் கட்டப்பட்ட நந்தி மண்டபத்தைக் கடந்து, கொடிமரத்தை வணங்கி உள்ளே நுழைகிறோம். இந்த வாயிலின் ஒரு பக்கத்தில் விநாயகரும் இன்னொரு புறத்தில் சுப்பிரமணியரும் தரிசனம் தருகிறார்கள். அவர்களை வணங்கி உள்நுழைய முற்பட, வாயிலின் வடக்குப்புறத்தில்... அட! கால்களில் கழல்களோடும், கையில் பிடித்த நாக பாசத்தோடும் வீரநடை போடும் கர்ணன்! அவன் கையிலுள்ள நாகபாசத்தை ஒரு மயில் கொத்திக் கொண்டிருக்கிறது. பக்கத்தில் பாசுபத அஸ்திரத்தோடு அர்ஜுனன்.
வாயிலின் தெற்குப் புறத்தில் உள்ள வேதபட்டரையும் நந்திகேஸ்வரரையும் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தால், உள் பிராகாரம் வந்து விடுகிறது. எதிரே உயரமான மண்டபம். இதில் ஏறித்தான் சுவாமி சந்நிதிக்குப் போக வேண்டும். இந்த மண்டபத்துக்கும் முன்பாக ஒரு கொடிமரம். இதற்குப் பிள்ளையார் கொடிமரம் என்று பெயராம். உற்சவத்தின்போது, இந்தக் கொடிமரத்தில் கொடியேற்றிய பின்னர் தான், நந்தி மண்டபத்துக் கொடிமரத்தில் கொடியேற்றுவார்களாம்.
நின்றசீர் நெடுமாறன் கட்டிய இந்த மண்டபத்துக்கு மணிமண்டபம் என்று பெயர். நெல்லையப்பர் கோயிலின் தனிச் சிறப்பு இந்த மணிமண்டபம் எனலாம். இதில் ஏற வடக்கிலும் தெற்கிலும் படிக்கட்டுகள். தெற்குப் படிக்கட்டில் ஏறும்போது, பக்கத்துச் சுவரில் சிற்பமாகக் காட்சி தருகிறார்கள், கயிலாயத்துக்கு யானைமீது செல்லும் சுந்தரரும், குதிரை மீது செல்லும் சேரமான் பெருமாளும்; தொண்டரும், அந்தத் தொண்டரைப் பற்றிக் கொண்ட தொண்டரும் ஒருசேர கயிலாயம் செல்லும் கோலத்தை ரசித்துக் கொண்டே, மணிமண்டபத்தில் நிற்கிறோம். மணிமண்டபத்தில் வேறு என்ன சிறப்பு? இரண்டு பக்கமும் இரண்டு பெரிய தூண்கள்; ஒவ்வொன்றைச் சுற்றியும், உருவிலும் அளவிலும் வேறுபட்ட நாற்பத்தெட்டுச் சிறு தூண்கள்; ஒவ்வொரு தூணைத் தட்டும்போதும், விதவிதமான இசை ஸ்வரங்கள். ஒரு பக்கத்துத் தூண்களுக்கு நடுவே ஓர் (கல்) அணில் வேறு ஓடிக் கொண் டிருக்கிறது. அதுவும் ஸ்வரம் படிக்கிறதோ!
இசைத் தூண்களின் இனிய நாதத்தில் சற்றே மயங்கி நின்று... மெள்ள உள்ளே நுழைய... இதுவே மகாமண்டபம். நின்று நேரே நோக்க, சந்நிதியில் லிங்கத் திருமேனியாக நெல்லையப்பர். இவருக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது? வேதபட்டர் என்னும் வேதசர்மா, இறைவனுக்குத் திருவமுது செய்வதற்காக நெல் காயப் போட்டிருந்தார். கரையில் நெல் காய, ஆற்றில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தார். திடீரென்று மழை வந்துவிட்டது. பெருமழை பெய்ய, ஓடி வந்து நெல்லை எடுத்து பத்திரப்படுத்த முடியாத வேதபட்டர் வருந்தினார்; தவித்தார், துடித்தார். ‘‘ஐயோ! என்ன செய்வேன்; சுவாமிக்காக உலரப் போட்ட நெல்லாயிற்றே!’’ மழை சிறிது நிற்க, பரிதவித்துப் பாய்ந்தோடி வந்த வேதபட்டருக்கு ஆச்சரியம் காத்திருந்தது! காயப் போட்ட நெல் மட்டும் நனையவில்லை. அங்கு மட்டும் மழை பெய்யவில்லை. பக்தனின் பாசத்தைப் புரிந்து கொண்ட சிவபெருமான், நெல்லைச் சுற்றி தெய்வீக வேலி போட்டுக் காப்பாற்றினார். அதனால் இவருக்கு நெல்லையப்பர் என்றும் நெல்வேலிநாதர் என்றும் திருநாமங்கள். சால்வடிநாதர் அல்லது சால்வடீஸ் வரர் என்றும் அழைக்கலாம் (சால் அல்லது சாலி என்றால் வேலி). ஒண் செஞ்சாலி நெல்வேலி உண்மை நிலையமே என்று பாடினார் ராமலிங்க வள்ளலார்.
நெல்லையப்பரை நெஞ்சார வணங்கி, கண்ணார தரிசிக்கிறோம். சுயம்பு லிங்கம். கிழக்குப் பார்த்தவர். மேலே வெட்டுப்பட்ட அடையாளத்தோடு சற்றே சாய்ந்த லிங்கம்.
அந்த வழியாக தினந்தோறும் பால் கொண்டு போவாராம் ‘முழுதும் கண்ட ராமக்கோன்.’ ஒவ்வொரு நாளும் அந்தக் குறிப்பிட்ட இடத்தில், என்னதான் நடக் குமோ தெரியாது... எப்படியோ கால் இடறிவிடும்; ராமக்கோன் (இவரை முழுது கண்ட ராமபாண்டியன் என்றும் அழைப்பது வழக்கம்) தவறித் தடுமாறிப் போக, பால் கொட்டிவிடும். தினமும் இப்படியே நடக்க... கால் தட்டுப்பட்டு இடறுவதற்கு என்ன காரணம்? சுற்றித் தேடினார். காலை இடறச் செய்தது ஒரு மூங்கில் கொம்பு. அந்தப் பகுதி முழுவதும் மூங்கில் காடு. அதில் எடக்கு மடக்காகக் கிடந்த ஒரு மூங்கில் மட்டும் காலை இடறிவிட... தினமும் வழியில் இடைஞ்சலாக இருந்த அந்தக் குறுக்கு மூங்கிலை என்ன செய்யலாம்? ஒரு நாள், கோடரி எடுத்து அந்த மூங்கிலை வெட்டிவிட முடிவெடுத்தார் ராமக்கோன். கோடரியை ஓங்கி வீசினார்; மூங்கிலை அது தொட்டதுதான் தாமதம்... ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. ராமக்கோன் புரியாமல் விழிக்க... கண நேரத்தில்... சுயம்புலிங்கமாகக் காட்சி தந்தார் ஈசன். அதனால், நெல்லையப்பருக்கு, வேணுவன நாதர், வேணுவனேஸ்வரர், வேணுவன மகாலிங்கேஸ்வரர், வேய் முத்தநாதர் என்றெல்லாமும் திருநாமங்கள் உண்டு (வேணு- வேய்- மூங்கில்). கல்வெட்டுகளில் திருநெல்வேலி உடையார், உடைய நாயனார் என்றும் திருநாமங்கள் காணப் பெறுகின்றன.
சந்நிதிக்குள் நுழையுமுன், சந்நிதி வாயிலின் தெற்குப் புறத்தில் தரிசனம் தரும் வலம்புரி விநாய கரை வழிபடுகிறோம். நெல்லையப்பர் திருச்சந்நிதியில் நிறைய பெரிய புராணச் சிற்பங்களும் நாட்டிய முத்திரைகளும் காணப்படுகின்றன. ‘ஆடக ஞாயில் சூழ் அகழும் அகழ்ப்புறமும் நீடவள வனஞ்சேர் நெல்லையே - சேடுமிகு செவ்வேள்வி நாயகனாம்’ ஈசரை வணங்குகிறோம். சதுர வடிவ ஆவுடையார். இப்போது வெளியே தெரிவது இருபத்தோராவது ஆவுடையார் என்றும், பூமிக்கு அடியில் இருபது ஆவுடையார்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். முழுது கண்ட ராமக்கோன் வேண் டிக் கொண்டதற்கு ஏற்ப, சிவனார் மேலும் மேலும் வளர்ந்தார் என்பதால், வேண்ட வளர்ந்த மகாலிங்கம் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.
வெடிதரு தலையினர் வேனல் வெள் ஏற்றினர் விரிசடையர் பொடி அணி மார்பினர் புலி அதள் ஆடையர் பொங்கரவர் வடிவுடை மங்கை ஓர் பங்கினர் மாதரை மையல் செய்வார் செடிபடு பொழிலணி திருநெல்வேலி உறை செல்வர்தாமே
என்று சம்பந்தர் பாடிப் பரவிய நெல்லையப்பரை நாமும் பாடி வணங்குகிறோம். மிருத்யஞ்சய மூர்த்தியாக வணங்கப்படும் நெல்லையப்பருக்கு, தினந்தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. உச்சிக் காலத்தில், காந்திமதி அம்மையே வந்து வணங்கிச் செல்வதாக ஐதீகம்.
அகத்தியருக்குக் கல்யாணக் கோலம் காட்டியருளிய வரும் இவர்தாம். ‘நெல்லையப்பரே, நீரே கதி’ என்று சொல்லிக் கொண்டே திரும்புகிறோம். அப்போது நமது பார்வையைக் கட்டிப் போடுபவர் யார் தெரியுமா?
நெல்லையப்பருக்கு வடக்குப் பக்கத்திலேயே இன்னொரு சந்நிதி. மல்லாந்து சயனித்திருக்கும் பெருமாள். நெல்லை கோவிந்தர் என்பது இவரின் திருநாமம். கோவிந்தராஜ பெருமாளின் உற்சவர்- கையில் தாரை வார்த்துத் தரும் நீர்ப் பாத்திரம்!
பூமியை சமன் செய்வதற்காக அகத்தியரைத் தெற்கு நோக்கிச் சிவபெருமான் அனுப்பினாரல்லவா; இறைவனின் கல்யாணத் திருக்கோலத்தைத் தானும் காண வேண்டும் என்று ஆசைப்பட்ட அகத்தியருக்கு, தமது கல்யாணக் கோலத்தை முழுமையாகவும் காட்டியருளினாராம்.
எப்படி? பார்வதிதேவியின் சகோதரரான திருமால் தாரை வார்த்துக் கொடுக்க, அம்மைக்கும் அப்பனுக்கும் திருமணம் நடந்ததாம். சகோதரிக்குத் திருமணம் முடித்துவிட்ட ஆயாசத்தில் நிம்மதியாக நீட்டி நிமிர்ந்து சேஷ சயனத்தில் படுத்து விட்டார் பெருமாள். கோவிந்தரின் மார்பில் சிவலிங்க அடையாளம் இருக்கிறது. நீண்டிருக்கும் அவரின் வலக் கைக்கு அருகிலும் ஒரு சிவலிங்கம்.
ஐப்பசி மாதம், நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கல்யாண உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். உற்சவத்தில், ஒரு நாள் வைணவர் ஒருவர் வந்து தாரை வார்த்துக் கொடுப்பார்; சிவாச்சார்யர் பெற்றுக் கொள்வார்.


மைத்துனர்கள் இருவரையும் ஒருசேர மீண்டும் வழிபட்டுச் சந்நிதிக்கு வெளியில் வருகிறோம். மகா மண்டபத்தின் தெற்கு வாசல் வழியாகச் சென்று, சுவாமி சந்நிதியை வலம் வரலாம். தெற்கு கோஷ்டத்தில் தெற்கு முகமாக அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி. சுவாமி பிராகாரத்தில், மேற்குச் சுற்றில், கன்னிமூல விநாயகர், நந்திதேவர், பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. வேறு கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. வடக்குச் சுற்றில் சண்டேசர் வீற்றிருக்கிறார்.
சுவாமி பிராகாரத்தைச் சுற்றி வரும்போது வடகிழக்குப் பகுதியில், சற்றே தாழ்வான நிலையில், இரண்டு மூன்று படிகள் இறங்கி தரிசிக்கும்படியாகத் தனிச் சந்நிதியில் ஒரு லிங்கம். இவரும் கிழக்குப் பார்த்தவர். மூல மகாலிங்கம் என்று இவருக்குப் பெயராம். அகத்தியர் பிரதிஷ்டை செய்த மகாலிங்கம் இவர்தாம். நெல்லையப்பருக்கும் வேணுவனநாதருக்கும் காலத்தால் முற்பட்டவர் (அகத்தியர் காலமல்லவா!) என்பதால், இவருக்குத் ‘திருமூலநாதர்’ அல்லது ‘மூல மகாலிங்கர்’ என்று திருநாமம்.
மூல மகாலிங்கருக்கு எதிரில் ஒரு மண்டபம். தனிச் சந்நிதியில் பெரிய நடராஜர். அக்னி சபாபதி என்று இவருக்குப் பெயர். சிவகாமியம்மை அருகில் நிற்க, காரைக்காலம்மையார் நட்டுவாங்கம் செய்ய, புன்சிரிப்புடன் ஆடுகிறார். பார்க்கப் பார்க்க... மெய்யாகவே நடராஜர் அசைந்தாடுவது புரிகிறது!
மகாமண்டபம் வழியாக மணிமண்டபம் வந்து, கீழிறங்கி, ‘உள் பிராகாரம்’ என்று அழைக்கப்படும் திருச்சுற் றில் வலம் வருகிறோம். இதன் தெற்குச் சுற்றில் அகத்தியர், பன்னிரண்டு மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார். ஒரு புறம் உற்சவர் மண்டபம். இன்னொரு புறம் வரிசையாக அறுபத்துமூவர். அடுத்து கயிலாய பர்வதக் காட்சி; கீழே அழுந்திக் கிடக்கும் ராவணேஸ்வரன். அருகே, உயரமான மண்டபத்தில் சோமாஸ்கந்தர்.
உள்பிராகாரத்தின் தெற்குச் சுற்றிலிருந்து மேற்குச் சுற்றுக்குத் திரும்புகிறோம். தூண்களுடன் கூடிய மண்டபம் போல (தூண் மண்டபம் என்றே அழைக்கலாம்) நீண்ட அமைப்பு ஒன்று. மேல் விதானம் கல் வளைவுகளுடன் கண்களைக் கவர்கிறது. இங்கு

நின்று பார்க்க, மேற்குச் சுற்றின் நடுநாயகமாகத் ‘தாமிர சபை’ தெரிகிறது. நடராஜ பெருமான், ஆனந்தத் தாண்டவம் ஆடும் சபைகள் ஐந்து எனக் கணக்கிடப் பட்டுள்ளன. ‘பஞ்ச சபைகள்’ எனப் படும் இவை, ஐந்து திருத்தலங்களில் அமைந்துள்ளன. கனக சபை என்கிற பொன் அம்பலம்: சிதம்பரம்; ரஜத சபை என்கிற வெள்ளி அம்பலம்: மதுரை; தாமிர சபை என்கிற செப்பு அம்பலம்: திருநெல்வேலி; ரத்தின சபை என்கிற மணியம்பலம்: திருவாலங்காடு; சித்திர சபை என்கிற ஓவிய அம்பலம்: குற்றாலம்.
தாமிர சபையில் தெற்குப் பார்த்தபடி ஆடுகிறார் ஆறடி உயரமுள்ள செப்பு நடராஜர். இவருக்கு ‘தாமிர சபாபதி’ என்று பெயர். சிவகாமியம்மையும் செப்புத் திருமேனி கொண்டவர். மார்கழி மாசம், ஆருத்ரா தரிசனத்தில் தாமிர சபாபதி தாண்டவமாடும்போது, தூண் மண்டபத்தில் அமர்ந்து காண்பதற்குக் கண் கோடி வேண்டும். தாமிரசபையின் அருகிலேயே மூங்கில் மரம். ஸ்தல விருட்சமான இதைச் சுற்றி ஒரு மேடை. தாமிரசபையின் கீழ்ப் பகுதியில் மரச் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகிறது. ருத்திரர், விஷ்ணு திருமேனிகளும் ரிஷிகளின் உருவங்களும் அழகான சிற்பங்களாக உள்ளன. சபை கூரையின் மேல்பகுதி தாமிர (செப்பு) ஓடுகள் வேயப்பட்டது.
தாமிரசபையைக் கடந்து, பிராகாரத்தின் வடக்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில், சிலாரூபமாக உள்ள நடராஜர். கல் விக்கிரகம் என்றாலும் எப்போதும் சந்தனக் காப்பு அணிந்திருப்பதால், ‘சந்தன சபாபதி’ என்று அழைக்கப்படுகிறார்.
வடக்குச் சுற்றில் வலம் வந்து, கிழக்குச் சுற்றில் திரும்பி, நவராத்திரி மண்டபத்தை அடைகிறோம். புரட்டாசி மாத நவராத்திரி விழா இங்கு நடப்பதால், இது நவராத்திரி மண்டபம். நிறையக் கல் தூண்கள்; கல் உத்திரங்கள்; கல் வளைவுகள். ஆனால், மரக் கட்டுமானம் போல வியக்க வைக்கிறது. சோம வார மண்டபம் என்றும் பெயர் சொல்கிறார்கள்.
இப்போது, உள் பிராகாரத்தை முழுவதுமாக வலம் வந்து, கிழக்கு வாயில் வழியாக வெளிப் பிராகாரத்தை அடைந்து விட்டோம். நந்தி மண்டபத்துக்கு எதிர்த்தாற்போல, ‘அம்மன் சந்நிதிக்குச் செல்லும் வழி’ என்று பலகை தொங்க, வெளிப் பிராகாரத்தில் வலம் வரத் தொடங்குகிறோம். தெற்குத் திருச்சுற்றில் வரிசையாக வாகன மண்டபங்கள். வாகனங்கள் மட்டுமல்லாமல், சுவாமி புறப்பாட்டுக்கான கொடி கள், ஆலவட்டங்கள், தோரணங்கள், குடைகள் ஆகியனவும் வைக்கப்பட்டுள்ளன. தூண்களில், இந்தப் பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்கள் சிலைகளாக நிற்கிறார்கள். இந்தத் திருச்சுற்றின் நடுவில், தெற்குப் பார்த்தபடி, ஆறுமுகர் சந்நிதி. வள்ளி- தெய்வானை சமேதராக, ஏறு மயில் ஏறி விளையாடும் ஆறுமுகர் பன்னிரு திருக்கரங்களில், ஆயுதங்களுடனும் காட்சி தருகிறார். ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப்பட்டவர். இந்த சந்நிதியை வீரபாண்டிய கட்டபொம்மனிடம் இருந்த வடமலையப்பப் பிள்ளை என்பவர் கட்டினாராம்.
ஆறுமுகரை வணங்கித் திரும்பினால், நேர் எதிரே அம்மன் சந்நிதிக்குப் போகும் வழி. அந்த வழியில் திரும்பித் தெற்கு முகமாக நடக்கத் தொடங்கினால், எதிரில் சங்கிலி மண்டபம். வழியின்மேற்குப் புறம் திரும்பினால், வசந்த மண்டபம். கிழக்குப் புறம், அம்மையப்ப விநாயகர் சந்நிதி. வேனிற் காலத்திலும், கோடை கால விழாக்களிலும் சுவாமியும் அம்பாளும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்கள்.
நீளமான சங்கிலி மண்டபத் துக்குள் நுழைந்து விட்டோம். ஆஹா... ஆஹா... தூண்களும், சிற்பங்களும் அழகோ அழகு. ஆங்காங்கே துர்கை, ஐயப்பன், மஞ்சள் வடிவ அம்மன் என்று சிறு சிறு சந்நிதிகள். தரையில் துண்டை விரித்து ஆங்காங்கே ஓரமாக உட்கார்ந்திருக்கும் பக் தர்கள். உள்ளத்தையும் உணர்வு களையும் ஆக்கிரமித்துக் கொள் கிற அமைதி!
சங்கிலி மண்டபத்தில், ஐந்து நிமிடங்கள் அமர்ந்தால் போதும்; எவ்வளவுதான் ஆயிரமாயிரம் கவலைகளும் சிந்தனைகளும் இருந்தாலும், மனது நிறைய வந்து உட்கார்ந்து விடும் அமைதி. கி.பி.1617-ஆம் ஆண்டு வடமலையப்பப் பிள்ளையால் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம்தான், சிவன் சந்நிதியையும் அம்பாள் சந்நிதியையும் இணைக்கிறது. இதே வடமலையப்பப் பிள்ளைதான், வடக்குத் திருச்சுற்று தவிர, மீதமுள்ள எல்லாப் பிராகாரங்களையும் கட்டியவர். வடக்குப் பிராகாரத்தை மட்டும் இவர் மைத்துனர் திருமலைக் கொழுந்து கட்டினாராம்.
சங்கிலி மண்டபத்துக்கு மேற்காக இருக்கிறது குமரன் கோயில் எனும் முருகன் கோயில். கந்தர் சஷ்டி விழா, வெகு விமரிசையாக ஆறு நாட்களும் இங்கு நடைபெறும். சங்கிலி மண்டபத்தின் சிற்பங்கள் நேர்த்தியானவை; திருத்தமானவை. தூணின் உச்சியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே வாழைப்பழத்தை உரித்துச் சாப்பிடுகிறது ஒரு குட்டிக் குரங்கு. அடடா! ஏன் நகர்ந்து போகிறீர்கள். கவலைப்படாதீர்கள்; மேலே குதிக்காது. கல் சிற்பம் குதிக்குமா என்ன?
சங்கிலி மண்டபத்தைக் கடந்து சென்றால், அம் மன் சந்நிதி (கோயில்) வளாகம். நந்தி. கொடி மரம். நந்திக்குக் கிழக்குப் பக்கத்தில் ஒரு சிறிய மண்டபம். இதற்கு நிருதி மண்டபம் என்று பெயர். நந்தியையும் கொடிமரத்தையும் கடந்து உள்ளே நுழைகிறோம். சுவாமி சந்நிதி மாதிரியே உயரமான ஒரு மண்டபம். படிகள் ஏறி இந்த மண்டபத்தை அடைய, இங்கும் இரண்டு இசைத் தூண்கள். இந்த இசைத்தூண் மண்டபத்தைத் தாண்டி, அம்மன் சந்நிதிக்குள் நுழைகிறோம். முன்மண்டபம்- அர்த்த மண்டபம்- அம்பாள் கருவறை. கரிசனத்துடன் வரவேற்கிறாள் காந்திமதி அன்னை. வைரக் கிரீடம்; கேசத்தில் ராக்கொடி; மூக்குத்தி, மூக்குப்பொட்டு, புல்லாக்கு; கழுத்தில் நவரத்தின மாலை; கால்களில் சிலம்புகள்; உயர்த்திப் பிடித்த வலக் கையில் ஒரு தாமரை மலர்; அந்தக் கையில் தொத்திக் கொண்ட கிளி. இடக் கையை குழைத்து தொங்க விட்டிருக்கிறாள் அன்னை.
அன்பும் கனிவுமாக, அருள் பொங்க நிற்கும் அம்மையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ‘காந்திமதியம்மை’ என்னும் அம்பாளின் பெயரை, அழகு தமிழில் ‘கதிர்நிலா அம்மை’ என்று அழைத்தார் திருஞானசம்பந்தர். அம்மையை வணங்கி, அம்மன் சந்நிதி உள்சுற்றை வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. கன்னி மூல விநாயகர் சந்நிதி தனியாக உள்ளது. முன்மண்டபத்தில் பள்ளியறை.
நெல்லையப்பர் கோயில் உச்சிகால பூஜை மிகச் சிறப்பானது. அப்போது அம்மனே நேரில் சுவாமி சந்நிதிக்கு வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அம்பாள் சமைத்துக் கொண்டு வந்து சுவாமிக்குப் படைப்பதாகவும் நம்புகிறார்கள். சுவாமி சந்நிதி வழியாக வராமல், நேரடியாக, அம்மன் சந்நிதி கிழக்கு ராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்திருந்தால், நுழைவாயிலைத் தாண்டியதும் ஊஞ்சல் மண்டபத்தை அடைந்திருப்போம். அதைத் தாண்டித்தான் நாம் ஏற்கெனவே பார்த்த நிருதி மண்டபம். அதன் பின்னர், நந்தி, கொடிமரம் ஆகியவை. முறைப்படி தரிசிக்க வரக் கூடியவர்கள், காந்திமதியம்மனை தரிசித்த பின்னரே நெல்லையப்பரை தரிசிப்பது திருநெல் வேலி மரபு. எனினும், தேவாரம் தந்த உரிமையில், நாம் அப்பனை தரிசித்து அம்மையிடம் வருகிறோம்.
ஊஞ்சல் மண்டபத்தைக் கண்டிப்பாகக் காண வேண்டும். தொண்ணூற்றாறு கல்தூண்கள் கொண்ட அழகான ஊஞ்சல் மண்டபம். வழவழப்பான தரை. ஐப்பசி மாதத் திருக்கல்யாணத்தின்போது, இங்குதான் மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் விழா நடைபெறும். மனித வாழ்வில் தொண்ணூற்றாறு தத்துவங்கள் உள்ளதாக சைவ சித்தாந்தம் கூறுவதை நினைவுபடுத்துகிற 96 தூண்கள். நிலைக் கண்ணாடி அறையும் உண்டு. லட்சதீப விழா நடைபெறும்போது, அர்த்தநாரீஸ்வரப் பெருமான் இந்த ஊஞ்சல் மண்டபத்தில்தான் கொலு இருப்பாராம். எனவே, இதுவே கொலு மண்டபமும் ஆகும். நீண்ட ஊஞ்சல் மண்டபத்தைத் தாண்டுகிறோம்.
ஊஞ்சல் மண்டபத்துக்கு வடக்கா கப் பொற்றாமரை திருக்குளம். பொற்றா மரைக் குளத்தின் தீர்த்தமே சிவபெருமான் என்றும், அதில் முளைத்த தாமரைதான் சிருஷ்டிகர்த்தாவான பிரம்மா என்றும் ஐதீகம். பாவங்களைப் போக்கவல்ல பொற்றாமரையைத் தொழுது, நிருதி மண்டபத்தை அடைகிறோம்.
அம்மன் சந்நிதியின் அற்புதங்களில் ஒன்று, ஆயிரம் கால்கள் கொண்ட திருமண மண்டபம். 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்ட இந்த மண்டபத்தில்தான், அம்மன் திருக் கல்யாணம் நடைபெறும் (பின்னர், ஊஞ்சல் விழா- ஊஞ்சல் மண்டபத்தில்). பங்குனி மாத உத்திரத் திருநட்சத்திரச் செங்கோல் விழாவும் ஆயிரங்கால் மண்டபத்தில்தான். அம்மன் சந்நிதிக்குச் சற்றே வட கிழக்காக ஆக்கோட்டம். பசுக்கள் (ஆ-பசு) இருக்கும் இடம். ஜீவன்கள் யாவுமே பசுக்கள்; பசுக்களின் தலைவர் பசுபதியானார்; பசுக்களை பரிபாலிப்பவர் கோபாலர் ஆனார்.
திருக்காமக் கோட்டமுடைய நாச்சியாராம் காந்தி மதி அம்மை, நெல்லையில் புதுமணக் கோலத்தில் காட்சி தரும் வடிவுடை நாயகி ஆவார். அம்மன் மீது பிள்ளைத் தமிழ் பாடிய அழகிய சொக்கநாதப் பிள்ளை என்பவர்,
தாரார் இமவான் தடமார்பில் தவழும் குழந்தாய் வருகவே சாலிப் பதி வாழ் காந்திமதித் தாயே வருக வருகவே - என்று
குழையக் குழைய அம்மையைக் கூப்பிடுவார். சுந்தர தாமிரவருணி தடஸ்திதாம் ஸ்ரீ காந்திமதீம் என்று நாதப் பெருக்கில் அழைப்பார் முத்துசுவாமி தீட்சிதர்.
அம்மையையும் அப்பனையும் மீண்டும் வணங்கி நிற்க... கோயிலின் பிரமாண்டமும் வனப்பும் மெள்ள மெள்ள உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. எத்தனை முறை பார்த்தாலும், பார்த்து முடியா பேரழகு. மண்டபம் கண்டார் மண்டபமே கண்டார்; மிகு தூண் கண்டார் தூணே கண்டார் என்னும் படியாக எத்தனை எத்தனை மண்டபங்கள்; எத்தனை எத்தனை தூண்கள்; எத்தனை எத்தனை சிற்பங்கள்; எத்தனை எத்தனை சந்நிதிகள்!
நெல்லையப்பர்- காந்திமதியம்மை திருக்கோயிலின் பல்வேறு சிறப்புகளை சொற்கள் கொண்டு சொல்லிவிட முடியாது. எனினும், சில: சிவபெருமானது பஞ்ச தாண்டவ சபைகளுள் தாமிர சபையும் ஒன்று. இந்தச் சபையில், இறையனார் முனி தாண்டவம் என்றும் அழைக்கப் பெறுகிற காளிகா தாண்டவத்தை ஆடினார். சாந்த பாவத்தோடு ஆடப்பெறும் இந்த நடனம் படைப்புக்கானது. இதை ஆடிப் படைப்பைத் தொடங்கி, பின்னரே பிற தாண்டவங்களைச் சிவப் பரம்பொருள் ஆடினாராம்.
சுவாமி கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள அனவரத நாதர் சந்நிதி தனிச் சிறப்புக்கு உரியது. முகமது அலி என்பவரின் படைத்தலைவராக இருந்தவர் அன்வர்தின் கான் (அன்வர் உதீன் கான்). இவர் மனைவி நோயுற்று அவதிப்பட்டபோது, நெல்லையப்பரை வழிபட்டால் நோயும் தீரும்; மகப் பேறும் கிட்டும் என்று பலரும் சொன்னார்கள். அதன் படியே நடக்க, இறைவனின் அருளால் நோய் நீங்கி, பிள்ளையும் கிட்டியது. நன்றிக்கடன் பட்ட அன்வர், கோயிலில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டாராம். அன்வர்தின் வழிபட்ட சிவனார், அனவரத நாதர் ஆகிவிட்டார். மாஃபுஸ்கான் என்ப வரின் மனைவியின் நோய் தீர்த்ததற்காக அன்வர் கட்டினார் என்றும் சொல்கிறார்கள். எப்படியோ, சமயம் கடந்து அருள் பாலிக்கிறார் அனவரதர்.
நெல்லையப்பர் கோயில் பிள்ளைத் தொண்டு பிரசித்தி மிக்கது. சுவாமி கோயில் பிராகாரத் தெற்குச் சுற்றில் 63 நாயன்மார்கள் இருக்கிறார்கள். இங்கே ஒரு பொல்லாப் பிள்ளையாரும் உள்ளார். இந்த இடத்தில், மொத்தம் ஒன்பது தொண்டுகள் உள்ளன. தொண்டு என்பது குறுகலான குட்டையான வழியாகும். சதுர வடிவில் அமைந்துள்ள இந்தத் தொண்டுகளுக்குள் நுழைந்து, பின்னர் பிள்ளையாரை வழிபட்டு வந்தால், நிச்சயம் பிள்ளைப் பேறு கிடைக்குமாம்.
புத்திரப் பேறு வேண்டி, கிடைக்கப் பெற்றவர்களும் பிள்ளைத் தொண்டு செய்வார்கள். குழந்தையை இங்கு கொண்டு வந்து, தொண்டுக்குள் கொடுத்து வாங்குவார்கள். குழந்தைக்கு நீண்ட ஆயுளும், நன்மைகளும் கிடைக்கும். பொல்லாப் பிள்ளையாரே, பிள்ளைத் தொண்டு பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.
நவராத்திரி மண்டபச் சிற்பங்கள் வெகு அழகானவை. ஒரு பக்கத்தில், அர்ஜுனனும் அல்லி ராணியும்; மறு பக்கத்தில், பவளக் கொடி. லேசான சினத்தோடும் சற்றே ஏக்கத்தோடும் அல்லியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் பவளக்கொடி.
கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்பட்ட திருநெல்வேலியில், தாமிர சபை மட்டுமல்லாமல், இன்னும் சில சபைகளும் உள்ளன. சிந்துபூந்துறை தீர்த்த சபை, சுமார் 10 மைல் தொலைவில் உள்ள ஆசார்ய சபை, அம்மன் கோயிலுக்கு வடக்காக உள்ள சௌந்தர்ய சபை, அம்மன் கோயிலில் உள்ள திருக்கல்யாண சபை, சுவாமி கோயிலுக்கு முன்புறம் உள்ள அழகிய ராஜ சபை ஆகியவையே இவை.
இந்தக் கோயிலுக்கு மொத்தம் 32 தீர்த்தங்கள் உண்டு. பொற்றாமரை தீர்த்தம் அம்மன் கோயில் பகுதியிலும், கருமாறி தீர்த்தம் பிராகாரத்திலும் உள்ளன. துர்வாசரது சாபம் பெற்று யானையான இந்திரதுய்மன் எனும் மன்னன், கருமாறி தீர்த்தத்தில் மூழ்கித் தனது சுய வடிவம் பெற்றதாக வரலாறு. வெளிப் பிராகாரத்தில், ஆறு கால தீர்த்த குண்டம், கோயிலுக்கு உள்ளே வைரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம் ஆகியவையும் இருக்கின்றன. சிந்துபூந்துறை, குறுக்குத் துறை, கம்பை, தெப்பக்குளம் ஆகியவையும் கோயில் தீர்த்தங்களே ஆகும். குறுக்குத் துறை முருகர் கோயில் மிக்க புகழ் பெற்றது.
சம்பந்தப் பெருமான் காலத்திலேயே திருநெல்வேலி என்ற பெயர் இருந்ததாகத் தெரிகிறது. 7-ஆம் நூற்றாண்டிலேயே பெரிய கோயிலாகத் திகழ்ந்த இதற்கு, நின்ற சீர் நெடுமாற பாண்டியர் திருப்பணி செய்துள்ளார். முதலாம் ராஜ ராஜேந்திரன், குலோத்துங்கன், வீர பாண்டியன் மற்றும் பாண்டிய, நாயக்க மன்னர்கள் தொடர்ந்து திருப்பணிகள் ஆற்றி உள்ளனர். சுவாமி ராஜ கோபுரம் 1606-லும், அம்மன் கோபுரம் 1626-லும் கட்டப்பட்டன.
ஆடிப்பூரத் திருவிழாவில் அம்மனுக்கு வளை காப்பும் சீமந்தமும் நடைபெறும். இங்குள்ள ஜுவர தேவர் சந்நிதி சிறப்பு மிக்கது. நோயாளிகள் இவருக்கு மிளகு அரைத்துச் சாத்தி, வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும். நோய் நீங்கிவிடும்.
காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், நெல்லை வருத்தக் கோவை, நெல்லை மணிக்கோவை, நெல்லை அந்தாதி, நெல்லைச் சிந்து என்று பற்பல நூல்கள் நெல்லைச் சீமையின் புகழ் பேசுகின்றன. சீரும் சிறப்பும் பெற்ற நெல்லையப்பர் ஆலயத்தில் இருந்து வெளிவர மனமில்லாமலேயே புறப்படுகிறோம்.

No comments:

Post a Comment