சைவ சமயம் உன்னதமாகத் தழைத்துச் செழித்திருப்பதற்குக் காரணம் தெய்வத்திரு சேக்கிழார் பெருமான் என்றால் அது மிகையில்லை. திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணத்தின் மூலம் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை நமக்குத் தொகுத்து அளித்த மகான் சேக்கிழார் பெருமான். இறை பக்தியின் அவசியத்தையும் அதன் மேன்மையையும் மனிதருக்கு உணர்த்துவதில் ஒவ்வொரு நாயன்மாரது வாழ்க்கையும் ஒவ்வொரு பாடம் என்றே கூறலாம். இந்த வகையில் சேக்கிழார் பெருமான் தமிழ் கூறும் நல்லுலகால் போற்றத் தக்கவர்.
சேக்கிழார் பெருமான் அவதரித்த திருத்தலம் சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர். வேளாண் மரபினரான சேக்கிழார் குடியில் அவதரித்த இவரது இயற்பெயர் அருண்மொழி தேவர். இந்தப் பெருந்தகையின் குண நலன்கள் மற்றும் கல்விச் செறிவினால் இவரது குடிக்கே பெருமை ஏற்பட்டதால், பின்னாளில் இவர் தமது குலப் பெயராலேயே ‘சேக்கிழார்’ என்று சிறப்பிக்கப் பட்டார்.
கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கிய சேக்கிழாரின் புகழ் திக்கெட்டும் பரவியது. அப்போது சோழ நாட்டை திறம்பட ஆட்சி செய்து வந்தவன் அநபாயன் எனும் இரண்டாம் குலோத் துங்க சோழன். அவன், மேதைமைத் திறன் வாய்ந்த ஒருவரை, தன் பிரதான அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று விரும்பினான். இந்தத் தருணத்தில் சேக்கிழார் பற்றிய தகவல்களை அவன் கேள்விப்பட்டான். அவரது சிறப்புகள் சோழ மன்னனைக் கவர்ந்தன. உடனே அவரைத் தனது அரசவைக்கு வரவழைத்துப் பாராட்டியதுடன், பிரதான அமைச்சராகவும் நியமித்து சேக்கிழாரை கௌரவித்தான். அப்போது அநபாயன் அவருக்கு வழங்கிய பட்டம் ‘உத்தம சோழ பல்லவன்’ என்பது.
இதன் தாக்கத்தினால்தான் பின்னாளில்- அமைச்சுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சேக்கிழார் தனது சொந்த ஊரான குன்றத்தூரில் ஈஸ்வரனுக்கு ஓர் ஆலயம் எழுப்பினார். இந்த ஆலயம் உருவாவதற்கு அடிப்படைக் காரணம் திருநாகேஸ்வரம் திருத்தலம்தானே! எனவே, திருநாகேஸ்வரம் ஆலயத்தை மனதில் கொண்டே, அந்த ஆலயத்தை நிர்மாணித்தார். இதனால் இந்தப் புதிய ஆலயம் ‘வடநாகேஸ்வரம்’ என்றும் இங்கு எழுந்தருளிய ஈஸ்வரன் ‘நாகேஸ்வரர்’ என்றும் அழைக்கப்பட்டார். நாகத்தின் கீழ் லிங்க வடிவமாகக் காட்சி தருகிறார் நாகேஸ் வரர். இப்படி, திருநாகேஸ்வரம் போல ஆலயம் எழுப்பி, தொடர்ந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்க ஏற்பாடு செய்த சேக்கிழார் பெருமானைப் பாராட்டி, உமாபதி சிவாச்சார்யர் ஸ்வாமிகள் எழுதிய பாடலைத்தான் கட்டுரையின் துவக்கத்தில் பார்த்தோம்.
சென்னையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது குன்றத்தூர் நாகேஸ் வர ஸ்வாமி ஆலயம். போரூரில் இருந்தும் (சுமார் 10 கி.மீ.) பல்லாவரத்தில் இருந்தும் (சுமார் 5 கி.மீ.) டவுன் பஸ் வசதி உள்ளது. கோயிலுக்கு மிக அருகில்தான் குன்றத்தூர் பேருந்து நிலையம் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் இறங்கினால், கோயிலுக்குக் காலாற நடந்தே சென்று விடலாம்.
சுமார் 800 வருடங்களுக்கு முன்னர் அதாவது அமைச்சுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், இந்த திருநாகேஸ்வரர் ஆலயத்தைக் கட்டி இருக்கிறார் சேக்கிழார் என்பது சரித்திர ஆய்வாளர்களின் கூற்று. குன்றத்தூர் நாகேஸ்வரர் ஆலயத்தில் இறைப் பணிகள் எல்லாம் மிகச் சிறப்பாக நடந்து வந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. விசேஷ தினங்களில் ஆலயத்தில் நடனமாட ஆடல் மங்கையர் பிரத்தியேகமாக நியமிக்கப் பட்டிருந்தனர். அவர்களில் சித்திரமேழி நங்கையும் திருவுண்ணாழிகை நங்கையும் பிரபலமான இருவராம். ஆலயப் பெருமை மற்றும் தொன்மையைப் பறை சாற்றும் வகையில், மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1178- 1218), மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி.1246- 1271) உட்பட ஏராளமான ஆட்சியாளர் களது 45 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சேக்கிழா ரின் மரபில் வந்தவர்களும் பிற்காலத்தில் இந்த ஆலயத்துக்குப் அறப் பணிகளை நிறையவே செய்துள்ளனர். தற்போது செங்குந்த மரபைச் சேர்ந்தவர்களே ஆலய அறங்காவலர்களாக உள் ளனர்.
இனி, ஆலய தரிசனம்:
கிழக்கு நோக்கிய சிவாலயம். நுழையும் முன் இடப் பக்கத்தில் அழகான திருக்குளம். தைப் பூசத்தின் போது தெப்பத் திருவிழா கோலாகலமாக நடக்கும். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் முதல் நாள் ஸ்ரீசோமாஸ்கந்தர் தெப்பத்தில் உலா வருவார். இரண்டாம் நாள் ஸ்ரீசந்திரசேகரும், மூன்றாம் நாள் வள்ளி- தேவசேனா சமேத ஸ்ரீசுப்ர மண்யரும் தெப்பத்தில் உலா வரும் காட்சி காண வேண்டிய ஒன்று.
நகர்கிறோம். முதலில், இடப் பக்கம் சேக்கிழார் பெருமான் சந்நிதி. இந்த ஆலயம் கட்டிய அருந்தமிழ்ச் செல்வரின் அற்புதமான வடிவம். ஒவ்வொரு வைகாசி மாதமும் பூச நட்சத்திரத்தன்று, சேக்கிழாரின் திருநட்சத்திர அவதார விழா அமர்க்களமாக நடைபெறுகிறது. ‘திருநாகேஸ்வரம் சிவனடியார் திருக்கூட்ட சபை’யினர் ஒவ்வொரு வருடமும் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். சொற்பொழிவுகள், அபிஷேகம், அலங்காரம், திருமுறை பாராயணம் என்று தமிழ் மணத்துடன் நீள்கிறது இந்த வைபவம்.
கொடிமரம். பலிபீடம். பிரதோஷ நந்திதேவர், நான்கு கால் மண்டபத்தில் வீற்றிருக்கிறார். பிரதோஷம் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நந்தியம்பெருமான் மற்றும் நாகேஸ்வரரின் திருவருளைப் பெற்றுச் செல்கிறார்கள். இடப் பக்கம் கற்பக விநாயகர். வலப் பக்கம் கோடி தீப மண்டபம். கோடி நெய் தீபம் ஏற்றும் வைபவத்தை டிசம்பர் 2005-ல் தொடங்கி இருக்கிறார்கள். ஆலய முகப்பிலேயே இதற்காக அகல்களை விற்கிறார்கள். இதுவரை ஏற்றப்பட்ட தீபங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டதாம்.
வடலூர் ராமலிங்க ஸ்வாமிகளும் சேக்கிழார் பெருமானைப் போற்றிப் பாடி உள்ளார். ராமலிங்க அடிகளாரின் வண்ண ஓவியத்துக்கு முன் விளக்கு ஒன்று தொடர்ந்து எரிகிறது.
நாகேஸ்வரரை தரிசிக்கச் செல்லும் ஆலய முகப்பில் சுதையால் ஆன துவாரபாலகர் உருவங் கள் காணப்படுகின்றன. நேராக உள்ளே சென்றால் அருள்மிகு நாகேஸ்வரர். அவருக்கு இடப் பக்கம் அன்னை காமாட்சி சந்நிதி. உள்ளே செல் கிறோம்.
அன்னை காமாட்சி அம்மன் மண்டபம். இடப் பக்கம் பள்ளியறை. வலப் பக்கம் அன்னை காமாட்சி. நேராக நாகேஸ்வரர். முதலில், உள் பிராகார வலம் வருவோம்.
பிராகார வலத்தில் சேக்கிழார் உற்சவர் விக்கிரகம். சூரியன், சந்திரன், பரவை நாச்சியார், விநாயகர், சத்தியநாராயணர், திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், நாகேந்திரர், நாகநாதேஸ்வரர், காளிங்கநர்த்தன கிருஷ்ணர் என்று வரிசையாக சிலா விக்கிரகங்கள் அருள் புரிகின்றன. நாகேஸ்வரரின் கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று சைவ நால்வருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெறுகிறது. தவிர, திருமாங்கல்ய பலத்துக்காகவும், குழந்தை வரம் வேண்டியும் செவ்வாய்க் கிழமைகளில் விஷ்ணு துர்கைக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. எலுமிச்சம் பழ விளக்கேற்றி வைத்து வழிபடுகிறார்கள் பெண்கள்.
வலம் தொடர்கிறது. ஒரு பெரிய மேடையில் காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர், லட்சுமி, சரஸ்வதி, வீரபாகு போன்ற தெய்வங்களின் சிலா உருவங்கள் கம்பீரமாகக் காணப்படுகின்றன.
இந்தப் பிராகாரத்தில் உள்ள இந்த அருணாசலேஸ்வரர் (மூலவர்) விக்கிரத்தைப் பற்றி செவி வழிச் செய்தி ஒன்று சொல்கிறார்கள். இது தலக் குறிப்பிலும் காணப் படுகிறது.
ஆலயத்தின் பிரதான மூலவரும் லிங்க வடிவமுமான ஸ்ரீநாகேஸ்வர ஸ்வாமியின் தலைப் பகுதியில் சிறிதளவு பின்னப்பட்டது. அர்ச்சகர் இதை கவனித்து ஆலயம் தொடர்பான அருட்செல்வர்களிடம் கவலையுடன் சொல்லி இருக்கிறார். தகவல் கேட்டு வருந்திய அவர்கள் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதாவது, பின்னமான மூல மூர்த்தியைக் கருவறையில் இருந்து அகற்றி ஆலயத் திருக்குளத்தில் போட்டு விட்டு, பதிலாக பிராகாரத்தில் உள்ள அருணாசலேஸ்வரரை நாகேஸ்வரர் இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்வது என்பது அவர்களது தீர்மானம்.
இது செயல் வடிவம் பெற்றது. பிரதான மூலவர் நாகேஸ்வரர், தண்ணீர் நிரம்பிய திருக்குளத்துக்குள் ஐக்கியமாகி விட்டார். பிராகார வலத்தில் இருந்த அருணாசலேஸ்வரர் ஆலய மூலவராக அங்கீகாரம் பெற்று உள்ளே கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டார். இதன் பிறகு நடந்ததுதான் இறைவனின் திருவிளையாடல். ஆலய மூலவராக இருந்த நாகேஸ்வரரை பிரதிஷ்டை செய்தது சேக்கிழார் பெருமானாயிற்றே! அந்த மூலவர் திருக்குளத்துக்குள் எப்படி உறைவார்? திடீரென திருக்குள நீர் முழுவதும் ரத்தச் சிவப்பானது.
அன்றிரவு சிவனடியார் ஒருவரின் கனவில் தோன்றிய இறைவன், ‘திருக்குளத்தில் இருக்கும் என் திருமேனியை எடுத்துப் பழையபடி மூலவர் இடத்தில் பிரதிஷ்டை செய்!’ என்று அருளி மறைந்தார். அதன்படி, திருக்குளத்தில் இருந்து எடுத்து மூலவரைப் பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்ய... குளத்தில் இருந்த நீர் தெளிந்து சுத்தமானது. அருணாசலேஸ்வரரும் பழையபடி பிராகாரத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டார். இதனால் விஷயம் தெரிந்த உள்ளூர்வாசிகள், சில காலம் மூலவர் சந்நிதியில் இருந்ததால் அருணாசலேஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
பிராகார வலம் தொடர்கிறோம். வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர் என்று சந்நிதிகள். இதை அடுத்து உற்சவர் விக்கிரகங்களுக்கான சந்நிதிகள். வலம் முடியும் இடத்தில் அம்பாள் சந்நிதி. அன்னையின் திருநாமம்- அருள்மிகு காமாட்சி. தெற்குத் திசை பார்த்து வீற்றிருக்கிறாள் அன்னை. பலிபீடம். சிம்ம வாகனம். சுமார் நாலரை அடி உயர விக்கிரகமாக திகழும் மங்கல நாயகியாம் காமாட்சி நான்கு திருக்கரங்களுடன் அருள் வழங்குகிறாள் அன்னையை வலம் வர தனிப் பிராகாரமும் உண்டு. வலத்தின்போது பைரவருக்கு ஒரு சிறு சந்நிதி.
நாகேஸ்வரரின் சந்நிதி அருகே வந்து விட்டோம். இவருக்கு உரிய பலிபீடம், நந்திதேவர் விக்கிரகங்கள் அருகே தீபங்கள் ஜ்வலிக்கின்றன. கருவறை செல்வதற்கு முன், முகப்பில் பெரிய துவார பாலகர்கள். நாயன்மார்களின் வரலாற்றுச் சிறப்பை அனுபவித்துச் சொன்ன
‘‘கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத் திருத் தலத்தை வழிபட்ட பெருமை, இங்கு வழிபட்டாலும் கிடைக்கும். ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சனி, ஞாயிறுகளில் டூரிஸ்ட் பஸ்களை இயக்கி சென்னை நகர நவக்கிரக தலங்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது. அந்தப் பட்டியலில் இது ராகுவுக்கான தலமாக அறிவிக்கப் பட்டுள்ளது’’ என்கிறார் ஆலய அர்ச்சகர் (பார்க்க- பெட்டிச் செய்தி).
வெளிப் பிராகாரம் பெரியது. இங்கு ஸ்தல விருட்சமான செண்பக மரம் காணப்படுகிறது. தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதத்தின் சிறப்பான அனைத்து உற்சவங்களும் இங்கு விமரிசையாக நடைபெறுகின்றன.
சைவம் வளர்த்த செம்மல் சேக்கிழார் கட்டிய திருக்கோயிலை தரிசித்து, ஸ்ரீநாகேஸ்வரரின் அருளும் ஆசியும் பெற குன்றத்தூர் சென்று கும்பிடுவோம்!
|
Friday, 4 August 2017
குன்றத்தூர் ஸ்ரீநாகேஸ்வரர் சுவாமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment