சென்னை பாரிமுனையில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ள பகுதி மண்ணடி. இங்கு, லிங்கிச் செட்டித் தெருவில் அமைந்திருக்கிறது ஸ்ரீமரகதாம்பாள் சமேத ஸ்ரீமல்லிகேஸ்வரர் திருக்கோயில். இறைவனின் பெயரில் மட்டுமல்ல, கோயில் ஸ்தல புராணத்திலும் கமகமக்கிறது மல்லிகை மணம்!
முற்காலத்தில் தொண்டை மண்டலத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது சென்னம்மன் குப்பம் (தற்போதைய சென்னை). மல்லிகை வனங்களும் இடையிடையே மணல் திட்டுகளும் நிறைந்த பகுதி இது. தொண்டைமான் சக்ரவர்த்தி என்பவரது ஆட்சி காலத்தில்... ஒரு முறை, மல்லிகை வனங்களை சீரமைக்கும் பொருட்டு மணல் திட்டுகளை சமப்படுத்தும் பணி நடைபெற்றது.
அப்போது, ஓரிடத்தில் கோபுரக் கலசம் ஒன்று தென்பட, அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தனர். உள்ளே, ஒரு கோயில் புதையுண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அகழ்வுப் பணிகள் ஆரம்பாயின. விரைவில் திருக்கோயில் வெளிப்பட்டது.
உள்ளே நுழைந்தவர்களுக்கு ஆச்சரியம்... ஆம், கருவறையில் அருள்பாலிக்கும் சிவலிங்கத் திருமேனியின் மீது வாடாத மல்லிகைப் பூக்கள் மணம் வீசிக் கொண்டிருந்தன. இதனால் இந்த இறைவனை ஸ்ரீமல்லிகார்ஜுனர் மற்றும் ஸ்ரீமல்லிகேஸ்வரர் என்ற பெயரில் வழிபடலாயினர். மண்ணுக்குள் இருந்து கோயில் அகழ்ந்தெடுக்கப்பட்டதால், இந்த ஊருக்கு 'மண்ணடி' என்று பெயர் ஏற்பட்டதாம்.
இந்தத் திருக்கோயில் சுமார் 500 வருடங்களுக்கும் முற்பட்டது என்பதை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. பிற்காலத்தில், 1923ஆம் ஆண்டுவாக்கில் மாங்காடு வெங்கடாஜலபதி செட்டியார் என்பவரின் மகன் எல்லப்ப செட்டியார் என்பவரால் கோயில் கோபுரம் அமைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். 4.4.1997 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் கண்டுள்ளது இந்தத் திருக்கோயில்.
சரி, இனி கோயிலை தரிசிப்போமா?
தெற்கு நோக்கிய கோபுர வாயில். கோயிலுக்கு வெளியே உள்ள வலப் பக்கத் தூணில் எமதர்மனின் சிற்பம். இவரை தரிசித்த பிறகே, கோயிலுக்குள் சென்று ஸ்ரீமல்லி கேஸ்வரரை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். காலதேவனான எமதர்மனை வழிபட்டு விட்டு உள்ளே நுழைகிறோம். நுழைவாயில் மண்டபத்துக்கு மேலே ராகுவும் கேதுவும் எதிரெதிரே காட்சி தருகின்றனர்.
வெளிப் பிராகாரத்தில் கொடி மரம், ஸ்ரீவிநாயகர், அலங்கார மண்டபம், ஸ்ரீபாலமுருகர், ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீநந்திகேஸ்வரர் மற்றும் சூரியன் ஆகியோரது சந்நிதிகளை தரிசிக்கலாம். இங்கு, அம்பாளுக் கென்றும் தனியே ஒரு கொடிமரம் உள்ளது. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்து நிற்கும் வேம்பு மற்றும் அரச மரங்களையும் வெளிப் பிராகாரத்தில் காணலாம். ஸ்வாமி மற்றும் அம்பாளின் அம்சமாகக் கருதப்படும் இந்த மரங்களை வலம் வந்து வணங்கினால், மனக் கவலைகள், திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
உள் பிராகாரத்தில்... ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீகௌரி, ஸ்ரீமகாதேவர், ஸ்ரீஆதிபுரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகர், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசரஸ்வதி மற்றும் ஸ்ரீகயிலாச நாதர் ஆகியோரை தரிசிக்கலாம். ஸ்ரீகயிலாசநாதர் சந்நிதியில், 'நமசிவாய' மந்திரத்தை உச்சரிக்க... அது, அப்படியே எதிரொலிப்பது இறை அற்புதமே!
தவிர, இந்தக் கோயிலில் நாகலிங்கங் கள், ஸ்ரீதுர்கா, நால்வர் பெருமக்கள் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்) சந்நிதி, ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஸ்ரீவிசாலாட்சி, அறுபத்துமூவர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், சந்திரன் மற்றும் சூரியன் ஆகியோரும் திவ்விய தரிசனம் தருகிறார்கள். இங்கு, வட்ட வடிவில் அமைந்திருக்கும் சந்நிதியில் தத்தமது வாகனங்களுடன் நவக்கிரக மூர்த்திகள் அருள் பாலிக்கின்றனர். இதுபோன்ற அமைப்பைக் காண்பது அரிது.
இவர்களை தரிசித்து விட்டுக் கருவறைக்குள் நுழைகிறோம். உள்ளே... ஆனந்த மூர்த்தியாக லிங்கத் திருமேனியுடன் அற்புத தரிசனம் தருகிறார் ஸ்ரீமல்லிகேஸ்வரர். இந்த ஸ்வாமியை, ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) மல்லிகை பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடுமாம். இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சமும் மல்லிகையே!
ஸ்வாமி சந்நிதிக்கு அருகில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது அம்பாள் சந்நிதி. உள்ளே, கருணையே உருவாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீமரகதாம்பாள். மரகதக் கல்லைப் போன்று பச்சை வண்ணத் திருமேனியளாக திகழ்வதால், அம்பாளுக்கு இந்தப் பெயர்!
ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷே கிக்கப்படும் நீர் மற்றும் கோயிலுக்குள் விழும் மழை நீர், அருகில் உள்ள திருக்குளத்தை அடைவது போன்ற அமைப்பு, இந்தக் கோயிலின் சிறப்பம்சம். திருக்குளம், கோயிலின் இடப் புறம் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு... ஸ்ரீகணபதி, பாலவிநாயகர், ஆனந்த விநாயகர், குளக்கரை விநாயகர், கொடிமர விநாயகர் என்று பற்பல வடிவங்களில் பற்பல பெயர்களில் காட்சி தருகிறார் ஸ்ரீவிநாயகப் பெருமான். ஒவ்வொரு விநாயகரும் விசேஷமானவரே!
மேலும், ஸ்ரீமல்லிகேஸ்வரர் திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. வம்பு வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து, கோயிலில் தெற்கு நோக்கிக் காட்சி தரும் ஸ்ரீபைரவரை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்கின்றனர். மேலும், இவரைப் பிரார்த்தித்துச் சென்றால், காணாமல் போன பொருட்கள் மூன்றே நாட்களுக்குள் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இங்கு, பிரதோஷ கால பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பாலை அருந்தினால் பிணிகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் கூடும். இங்கு, தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கும் ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு ஏலக்காய் மாலை மற்றும் வெண் தாமரைப்பூ சார்த்தி வழிபட கல்வித் தடைகள் நீங்கும் என்கிறார்கள்.
தங்கம் மற்றும் வெள்ளி வேயப்பட்ட ரிஷப வாகனங்கள், அதிகார நந்தி, புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட கலை நயம் மிக்க வாகனங்கள் இந்தக் கோயிலுக்கே உரிய சிறப்பம்சம்.
நாள்தோறும் நான்குகால பூஜைகள் நடை பெறுகின்றன. விழா உற்சவங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. சித்திரை திருக்கல்யாண உற்சவம், சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, ஆடிப் பூரம், ஆவணி மூலம் (ஸ்ரீசொக்கநாதர் உற்சவம்), விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், சூரசம்ஹாரம், கார்த்திகை பௌர்ணமி, மாசி மகம் கடலாட்டு விழா, மகா சிவராத்திரி ஆகிய விழா வைபவங்கள் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.
|
Friday, 11 August 2017
மண்ணுக்குள் புதைந்து கிடந்த மல்லிகேஸ்வரர் திருக்கோயில்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment