|
வைணவ திவ்விய தேசங்கள் 108-னுள், ஒரு திவ்வியப் பதியாக திகழ்வது திருவிண்ணகரம். வடகலை திருமண் காப்புள்ள திவ்விய தேசங்களில் இதுவும் ஒன்று.
 தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு தெற்கில் சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவிண்ணகரம். கும்பகோணத்திலிருந்து இந்தத் தலத்துக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. ராகு பரிகார ஸ்தலமான நாகநாதசுவாமி திருக் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் திருக்கோயில்.
 திருப்பதிகள் 108-ல், விண்ணகரங்கள் எனப்படுபவை 6. ஒப்பிலியப்பன்கோவிலும் அதில் ஒன்று. மற்றவை: சீராம விண்ணகரம், அரிமேய விண்ணகரம், வைகுந்த விண்ணகரம், நந்திபுரம் விண்ணகரம், பரமேச்சுர விண்ணகரம்.
 விஷ்ணுவின் வசிப்பிடம் ‘விண்ணகரம்’ எனப்படுகிறது.
 இந்தத் திருத்தலம் ஆகாச நகரம், வைகுண்ட நகரம், ஒப்பிலியப்பன் சந்நிதி, உப்பிலியப்பன் சந்நிதி ஆகிய பெயர்களாலும் வழங்கப்படுகிறது. மார்க்கண்டேய முனிவர் தவம் இயற்றியதால், ‘மார்க்கண்டேய க்ஷேத்திரம்’ என்றும், திருத்துழாய்க் காட்டில் பூமிதேவியாக திருமகள் அவதரித்ததால் ‘துளசி வனம்’ என்றும், வைகுந்தபெருமாள் எழுந்தருளி உள்ளதால் திருவிண்ணகர் எனவும், நிகரில்லாத பெருமாளின் உறை விடமானதால் ஒப்பிலியப்பன் கோயில் என்றும் இந்தத் தலத்தை பல்வேறு பெயர்களால் அழைக்கின்றனர்.
  இங்கு கருடன், காவிரி, தர்ம தேவதை, மார்க்கண்டேயர் ஆகியோருக்கு எம்பெருமான் காட்சி அளித்ததாகப் புராணம் கூறுகிறது. தவிர துளசி, சூரியன், சந்திரன் ஆகியோரும் பூஜித்த தலம் இது.
 திருநாகேச்சுரம் சிவாலய மும், திருவிண்ணகரமும் இடம்பெற்றுள்ளமையால் இந்த ஊர் ‘திருவிண்ணகர் திருநாகேச்சுரம்’ எனப்பட்டது. ‘திரைமூர் நாட்டுத் தேவதானமான திருவிண்ணகர் திருநாகேச்சுரம்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
 இந்தத் தலத்தையும், இங்குள்ள எம்பெருமானையும் 11 பாசுரங்களில் நம்மாழ்வாரும், 34 பாசுரங்களில் திருமங்கையாழ்வாரும், ஒரு பாசுரத்தில் பொய்கையாழ்வாரும், 2 பாசுரங்களில் பேயாழ்வாரும் மொத்தம் 48 பாசுரங்களிலும் மேலும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
 திருப்பதி ஸ்ரீவேங்கடா சலபதியைப் போலவே இவருக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. இதை இயற்றியவர் ஸ்ரீராமதேசிகாச்சார்ய சுவாமிகள். தினமும் திருப்பள்ளி யெழுச்சியின்போது இதுவே ஒலிக்கிறது.
 இங்கு எம்பெருமானை துளசியால் பூஜிப்பவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நடை பயணமாக இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கால் எட்டுக்கும் புண்ணியம் பெறுவர் என்பது ஐதீகம். இந்தக் கோயிலுக்கு பசுவின் குளம்படி அளவுள்ள நிலத்தை தானம் கொடுத்தாலே மோட்சம் பெறுவர் என்கிறது தல புராணம்.
 பிரும்மாண்ட புராணத்தில் ஸ்ரீஒப்பிலியப்பன் ஆலயத்தின் தல வரலாறு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தல வரலாற்றை சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீராமதேசிகாச்சார்ய சுவாமிகள் அச்சுக்குக் கொண்டு வந்தார். பின்னர் அவர் மகன் கோபாலதேசிகாச்சார்ய சுவாமிகளால் திருத்தப்பட்ட பதிப்பை தேவஸ்தானமே வெளியிட்டுள்ளது.
 தந்தை பிரம்மனிடம் மகன் நாரதர் விவரிப்பது போல அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் வரலாறு.
 ‘திருமகளை நெஞ்சில் தரித்தது போல, என்னையும் தாங்கள் தரிக்க வேண்டும்!’ என்று திருமாலிடம் வேண்டினாள் துளசிதேவி.
திருமால், ‘‘நீ திருவிண்ணகரம் சென்று அங்கு துளசிச் செடியாகத் தோன்றி தவம் செய். மார்க்கண்டேய மகரிஷியின் தவத்தினால் அங்கு குழந்தையாக அவதரிக்கும் திருமகளை அவர் எடுத்து வளர்ப்பார். அவளை மணம் புரிய அங்கு நான் வரும்போது, உங்கள் எல்லோருக்கும் சகல மரியாதைகளும் ஏற்படும்!’’ என்று அருளினார்.
 அதன்படியே சகலமும் நடந்தன. பூமியிலிருந்து தோன்றி யதால் மார்க்கண்டேயரின் குழந்தை பூமாதேவி எனப்பட்டாள். குழந்தைக்கு ஐந்து வயதானது. இந்த நிலையில் முதியவர் வேடத்தில் மார்க்கண்டேய முனிவரைச் சோதிக்க வந்த திருமால், ‘உங்கள் குழந்தை அழகாக இருக்கிறாள், அவளை மணம் செய்ய விரும்புகிறேன்’’ என்றார் முனிவரிடம்.
அவர் திருமால் என்று அறியாத மார்க்கண்டேயர், ‘‘அவள் ஐந்து வயதுக் குழந்தை. சமையலில் எவ்வளவு உப்பு போட வேண்டும் என்று கூடத் தெரியாது. அப்படிப்பட்ட குழந்தையைத் திருமணம் செய்வதால் உமக்கு ஆகப் போவது என்ன?’’ என்று கேட்டார். ஆனால், அவளே தனக்கு மனைவியாக வேண்டும் என்று அடம்பிடித்தார் முதியவர். மார்க்கண்டேயர் யோசனையில் ஆழ்ந்தார். அப்போது முதியவர் அவருக்கு ஸ்ரீமந் நாராயணனாக காட்சி தந்தார்.
‘‘முதியவனாக வந்தது யாமே. மகாலட்சுமியான இவளை மணம் புரியவே வந்தோம்!’’ என்று சங்கு- சக்ரதாரியாக கன்னி ஒருத்தியை கரம் பிடிக்கும் பாவனையில் நாராயணன் காட்சி அளித்தார். அதைக் கண்ட மார்க்கண்டேயர் மகிழ்ச்சியுடன் திருமணத்துக்குச் சம்மதித்தார்.
‘‘உங்கள் குழந்தை உப்பில்லாது சமைத்தாலும் யாம் ஏற்றுக் கொள்வோம். கவலை வேண்டாம்!’’ என்று ஸ்ரீமந்நாராயணன் அருளினார். அதனால் மகிழ்ந்த மார்க்கண்டேயர் உடனே அந்தத் திருமணத்தை விமரிசையாக நடத்தினார். அதனால் இன்று வரை ஒப்பிலியப்பன் கோயிலில் உப்பில்லாத பண்டங்களே படைக்கப்படுகின்றன. எனவே, இங்குள்ள பெருமாள் உப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
 ஜைமினி முனிவரின் மகள் நந்தவனத்தில் பூக்கொய்து கொண்டிருந்தாள். அவளது அழகைக் கண்ட தேவசர்மா அவளை பலாத்காரம் செய் தான்.
அப்போது தன் மகளின் அலறல் கேட்டு அங்கு ஓடி வந்தார் ஜைமினி முனிவர். நடந்ததை உணர்ந் தவர், ‘நீ கிரௌஞ்சப் பறவையாக ஆகக் கடவது!’ என்று தேவ சர்மாவை சபித்தார். உடனே அவர் காலில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டினான் தேவசர்மா. அதனால் மனமிரங்கிய முனிவர், ‘‘மார்க்கண்டேய க்ஷேத்திரம் சென்று அங்குள்ள பொய்கைக் கரையில் உள்ள மரக் கிளையில் தலை கீழாகத் தொங்கு. புயல் ஒன்று உன்னை பொய்கையில் சேர்க்கும்போது, நீ சாபவிமோசனம் பெறுவாய்!’’ என்றார். அதன்படியே எல்லாம் நடந்து பொய்கையில் விழுந்த தேவசர்மா பாவம் நீங்கினான். அவன் வைகுண்டம் செல்லும்போது வருணனின் தூதர்கள் அங்கு வந்து, ‘‘இரவில் பொய்கையில் நீராடக் கூடாது. புயலால் பொய்கையில் விழுந்தாலும் அது பாவமே. ஆகவே, இவனைத் தண்டிக்க வேண்டும்!’’ என்றனர். அவர்களைத் தடுத்த விஷ்ணு தூதர்கள், ‘‘இந்த ஒரு திவ்விய க்ஷேத்திரத்தில் மட்டும் இரவிலும் நீராடலாம் என்ற விதி இருக்கிறது’’ என்று சொல்லி தேவசர்மாவை வைகுண்டம் அழைத்துச் சென்றனர்.
ஆகவே இந்த புஷ்கரணிக்கு, ‘அகோராத்ர புஷ்கரணி’ என்று பெயர். இதன் மேற்குக் கரையில் அமர்ந்து, ‘ஓம் நமோ நாராயணாய நம:’ என்ற எட்டெழுத்து மந்திரம் ஜபித்து பிறருக்கு அன்னதானம் செய்தால் நமது எல்லாப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். தற்போது பாதுகாப்பு கருதி, கோயில் திறந்திருக்கும் நேரத்தில் மட்டும் நீராட அனுமதிக்கப்படுகிறது.
 இந்த திருக்குளத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள வில்வ மரம், ஆலயத்தின் சுற்று மதிலின் உயரத்தைத் தாண்டி வளருவதில்லை.
 தனுஷ்கோடி தீர்த்தத்தைக் காட்டிலும் கோடி மடங்கு பெருமையுடையது இந்தக் கோயிலின் தென்மேற்கில் உள்ள சார்ங்கத் தீர்த்தம். இதை மனதால் நினைத்தாலே மோட்சம் தர வல்லது என்கிறார்கள்.
 இதன் வட புறத்தில் சூரிய தீர்த்தம் உள்ளது. இங்கு சூரியன் நீராடி பாவம் நீங்கியதுடன் மிகுந்த ஒளி பெற்றாராம். தட்சனை கொன்ற பாவம் நீங்க, கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று இதில் நீராடி தோஷம் நீங்கப் பெற்றார் மகேஸ்வரன். இந்த நாளில் இங்கு நீராடுவது சிறப்பு.
 கோயிலின் வடகிழக்கில் இந்திர தீர்த்தம் உள்ளது. இந்திரன் இதில் நீராடி சாப விமோசனம் பெற்றான் என்கிறார்கள்.
 இந்திர தீர்த்தத்தின் தென் புறத்தில் ‘பிரம்ம தீர்த்தம்’ உள்ளது. பிரம்ம பதவியை இழந்த பிரம்மன் இதில் நீராடி இழந்த பதவியைப் பெற்றாராம்.
 கோயிலின் தென் பகுதியில் ஓடும் தட்சிண கங்கை எனும் நாட்டாறு, தட்சிண கோதாவரி எனப்படும் கீர்த்திமானாறு, தட்சிண யமுனையான அரிசொல்லாறு (அரிசிலாறு) ஆகியனவும் புனிதம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்த மூன்று நதிகளும் காவிரியுடன் கலந்து, சார்ங்கபாணி கோயிலருகில் பூமாலை வடிவில் இரு ஓடைகளாகப் பிரிகின்றன.
 சுமார் 50 அடி உயரம் மற்றும் 5 நிலைகளுடன் கம்பீரமாகக் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது ராஜ கோபுரம். கோயிலில் இரு பிராகாரங்கள். ராஜ கோபுரத்தைக் கடந்தால் வலப் பக்கம் துலாபாரம் செலுத்தும் இடம்.
 உட் பிராகாரத்தின் வெளி மண்டபத்தில் வடக்கில் முதலில் ஆழ்வார்கள் சந்நிதி. அடுத்து கண்ணன் மற்றும் ஸ்ரீராமன் சந்நிதிகள் உள்ளன. அதன் தென் புறத்தில் பாஷ்யக்காரர் சந்நிதி. மூலஸ்தானத்தை நோக்கிய கருடன் சந்நிதியும், வீதியிலிருந்து ஆலயத்துக்குள் புகும்போது, வழிபடுவதற்கு ஏற்ப சிறிய கண்ணன் சந்நிதியும் ஆரம்பத்திலேயே உள்ளன.
 நம்மாழ்வாருக்கு திருவிண்ணகர் அப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன் ஆகிய ஐந்து அர்ச்சா வடிவங்களில் இங்குள்ள பெருமாள் காட்சியளித்து அவரை ஆரத் தழுவினார் என்பர். இந்த ஐந்து பெயர்களையும் சேர்த்து நம்மாழ்வார் பாசுரம் ஒன்றைப் பாடியுள்ளார்.
என்னப்ப னெனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென்னப்பனுமாய் மின்னப் பொன் மதில்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன் தன்னொப்பாரில்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே
 பிராகாரத்தில் மணியப் பனும், என்னப்பனும், ஸ்ரீதேவி- பூதேவியருடன் காட்சியளிக்கின்ற னர். மணியப்பனது பீடத்தின் இரு புறமும் சங்கு- சக்கரம் அமைந்துள்ளன. என்னப்பன் சந்நிதிக்கு முன்பு புஷ்கரணியின் மேற்கில், பூமிநாச்சியாரின் அவதார ஸ்தலம் உள்ளது. இங்கு முத்தப்பனுக்கு மட்டும் சந்நிதி இல்லை.
 ஒப்பிலியப்பன் சந்நிதியில் பொன்னப்பரும், முத்தப்பரும், விண்ணகரப்பரும் உற்சவர்களாக காட்சி அளிக்கிறார்கள்.
 கர்ப்பக்கிரகத்துக்கு வெளியே ஸ்ரீ தேசிகன் சந்நிதி உள்ளது. உட் பிராகார வலம் வரும்போது வெளி மண்டபத்தின் தென் புறத்தில் அனுமார் சந்நிதி உள்ளது.
 உட்பிராகாரத்தின் மேற்குப் புறத்தில் அழகிய சலவைக்கல் மண்டபம் ஒன்று உள்ளது. வெளி மண்ட பத்தின் வடபுறத்தில் ஆழ்வார்கள் சந்நிதியை ஒட்டி, பெருமாள் டோலோத்ஸவத்துக்குப் பாங்காக மற்றொரு சலவைக்கல் மண்டபம் (ஊஞ்சல் மண்டபம்) உள்ளது. அதன் அருகே மேற்கு நோக்கி பெருமாளின் திருப்பள்ளி அறை. புரட்டாசி மற்றும் பங்குனி பிரம்மோற்சவங்களின் போது திவ்விய தம்பதி திருக்கைத்தலப் புறப்பாட்டுக்குப் பின் பள்ளியறையில் எழுந்தருளு கிறார்கள்.
பள்ளியறையின் தென் புறம் யாகசாலை உள்ளது. அதையட்டி உள்ளது பெரிய திருமடைப்பள்ளி. வெளியே வரும்போது வாகன மண்டபம்.
கருடன் சந்நிதிக்குப் பின்புறம் துவஜ ஸ்தம்பமும், பலிபீடமும் அவற்றின் வட புறத்தில் புஷ்கரணிக் கரையில் எட்டுக் கால் மண்டபமும் உள்ளன. இந்த மண்டபத்தில் பெருமாள், கணு அன்றும் தீர்த்தவாரி தினங்களிலும் எழுந்தருளுவார். கருடன் சந்நிதிக்குத் தென் புறம் மிக விசாலமான, அழகிய கோடி மண்டபம். ஐப்பசி- திருவோண தினத்தன்று எம்பெருமான் திருக்கல்யாணம் உற்சவங்கள் மற்றும் பிரார்த்தனை திருக்கல்யாணங்கள் ஆகியவை இங்கு நடைபெறுகின்றன.
பன்னிரு ஆழ்வார்களும் இத்தலத்தில் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார்கள். ஆச்சாரியர்களில் நிகமாந்த தேசிகருக்கு மட்டும் இங்கு சந்நிதி உண்டு.
ஆலயச் சுவர்களில் திருப்பாவை பாசுரங்களும், தசாவதாரமும், சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளன. ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டுகள் பல இங்கு உண்டு.
சந்நிதி வீதியில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இரண்டு பெரிய திருமண சத்திரங்கள் உள்ளன. சந்நிதித் தெருக் கோடியில் கோ ரதம் நிறுத்தும் மண்டபமும், திருத் தேர் மண்டபமும் உள்ளன. திருக்கோயிலுக்கு வெளியே தென்புறம் ஐந்து அறைகள் கொண்ட அழகிய பயணிகள் விடுதி ஒன்றும் உள்ளது.
திருக்கோயிலின் வெளிப் பிராகாரத்தில் நந்தவனம் ஒன்று உள்ளது. மேலும் ஆலயத்தின் தென்புறம் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பெரிய நந்தவனம் ஒன்றும் உள்ளது. இதன் நடுவிலுள்ள பெரிய மண்டபத்தில் வசந்த உற்சவத்தின்போது பெருமாள் 7 நாட்கள் எழுந்தருளுகிறார். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்னர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நன்கொடையாக இந்த நிலத்தை அளித்துள்ளார்.
தேவசிற்பி விஸ்வகர்மாவால் எழுப்பப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில், சுத்தானந்த விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார் ஒப்பிலியப்பன். அருகில் நாச்சியார் வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்திலும் மார்க்கண்டேயர் தெற்கு நோக்கி அமர்ந்து, கன்னிகாதானம் செய்யும் கோலத்திலும் காட்சி தருகின்றனர். ஒப்பாக எவரும் இல்லாதவர் ஆதலால், இவருக்கு ஒப்பிலியப்பன் என்று பெயர். தேவஸ்தான ரெக்கார்டுகளில் ஸ்ரீவேங்கடாசலபதி என்ற திருநாமம் உள்ளது. திருப்பதி ஸ்ரீநிவாசனுக்கு இவர் அண்ணன் என்பது ஐதீகம்.
 பெருமாள் ஆலயங்களில் பொதுவாக உற்சவர், வேறு சிறப்புப் பெயர் கொண்டிருப்பார். ஆனால், இங்கு உற்சவருக்கும் மூலவருக்கும் ஒரே திருநாமம்தான்.
 ஸ்ரீஒப்பிலியப்பன் சுமார் 8 அடி உயரத்துடன் பொன்னாடைகள், சாளக்கிராமம் மற்றும் செண்பக மாலை ஆகியவை அணிந்து, நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம். கீழிரு கரங்களில் இடக் கரத்தை ஊரு ஹஸ்தமாக தொடையில் வைத்தவாறு உள்ளார். திருவடியைச் சுட்டிக் காட்டும் கீழ் வலக் கரத்தில் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ (என்னை சரணடை, உன்னை பாதுகாக்கிறேன்) என்ற கீதையின் ஸ்லோகப் பகுதி வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
 சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் சுதை பிம்பமாக எழுந்தருளி இருந்தாராம் மூலவர். அது சேதம் அடைந்ததால் அதற்கு பதிலாக கல்லால் ஆன விக்கிரகம் செய்து வைக்கப்பட்டதாகவும் கூறுவர்.
  ஒப்பிலியப்பன் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது பவுண்டரீகபுரம். இங்கு வசித்த அண்ணு ஐயங்கார் என்பவர் சிறந்த விஷ்ணு பக்தர்.
ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய பெருமாள், தான் திண்டிவனம் அருகிலுள்ள கிராமம் ஒன்றில் குளத்துக்குள் இருப்பதாகவும், அதற்கு திரு உருவம் கொடுத்து ஒப்பிலியப்பன் சந்நிதியில் எழுந்தருளச் செய்ய வேண்டும் என்று அருளினாராம். அண்ணு ஐயங்கார், தன் மகன் ராகவ ஐயங்காருடன் அங்கு சென்று குளத்தில் மூழ்கி தேடிப் பார்த்தபோது ஒரு பெரிய கல் தட்டுப்பட்டது. அதை வெளியே எடுத்து திருவுருவம் செய்யும் வேலையை ஒரு ஸ்தபதியிடம் ஒப்படைத்தார்களாம். அப்படி உருவானதுதான் ஒப்பிலியப்பன் கோயிலில் இப்போது எழுந்தருளியுள்ள பெருமாள்.
அந்த காலத்தில் இந்தப் பெருமாளை சுமார் 160 கி.மீ. தொலைவில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலுக்கு எடுத்துச் செல்வதற்காக ரயில்வே அதிகாரிகளிடம் உத்தரவு வாங்கி திருநாகேஸ்வரம் வரை ரயிலிலும் அதன் பிறகு மாட்டு வண்டியிலும் கொண்டு சென்றனராம்.
சுமந்து வந்த ரயில் பெட்டியின் பிரேக் சிலையின் கனத்தால், நடுவழியில் உடைந்ததாம். அதற்காக ரயில்வே நிர்வாகம் இவரிடம் நஷ்ட ஈடு கேட்டது. உடனே அண்ணு ஐயங்கார் சென்னையில் உள்ள வெள்ளைக்கார உயர் அதிகாரிகளிடம் வாதாடி, சிலையை திருநாகேஸ்வரம் வரை கொண்டு செல்ல அந்த அதிகாரியை மாற்று ஏற்பாடு செய்ய வைத்தாராம்.
ஒரு நல்ல நாளில் பெருமாளை கோயிலில் பிரதிஷ்டை செய்ய முற்பட்டபோது, ‘‘பக்கத்து ஊர்க்காரரான நீர், இந்த ஊர் பெருமாளுக்கு இவ்வாறெல்லாம் செய்யலாமா?’’ என்று உள்ளூர்க்காரர்கள் தடுத்தனராம். அண்ணு ஐயங்கார், பெருமாளை மனமுருகி வேண்டினாராம்.
குறிப்பிட்ட நாளன்று திடீரென்று ஒரு புயல் வீசியது. உள்ளூர்க்காரர்களது வீட்டுக் கூரைகள் தீப்பற்றி எரியத் தொடங்கின. கால்நடைகள் இறந்தன. இதனால் பயந்த ஊரார் அண்ணு ஐயங்காரரிடம், ‘‘உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்!’’ என்று கூறினார்களாம். அதன் பிறகு கோலாகலமாக ஒப்பிலியப்பன், சந்நிதியில் ஸ்தாபிக்கப்பட்டாராம்.
இந்த விழாவைக் காண வந்த வெள்ளைக்கார துரையிடம், ‘கோயிலில் செருப்பு, ஷூ போடக் கூடாது. அவற்றை ஊர் எல்லையிலேயே அவிழ்த்து வைக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார் அண்ணு ஐயங்கார். அதன்படி அந்த அதிகாரி செருப்பில்லாமல் வந்து ஒப்பிலியப்பனை தரிசித்து அருளைப் பெற்றாராம்.
ஒப்பிலியப்பனின் தீவிர பக்தரான அண்ணு ஐயங்கார் தனது சொத்தில் தனது தேவைகள் போக, மீதமுள்ள எல்லாவற்றையுமே ஒப்பிலியப்பன் கோயிலுக்கே செலவு செய்து அங்கேயே தங்கியிருந்தாராம். அதனால், ‘ஆயுள் தர்மகர்த்தா அண்ணு ஐயங்கார்’ என்ற அடை மொழியுடன் அவரது பெயர் வெளிப் பிராகாரத்தில் நீண்ட காலம் இடம்பெற்றிருந்தது. இப்போதும் அவரின் வம்சாவளியினருக்கு கோயிலில் இரண்டு நாள் மண்டகப் படி உண்டு.
 வழக்கமாக பெருமாளுக்கு இடப் புறம் பூதேவி இருப்பாள். ஆனால், இங்கு பூதேவியை விஷ்ணு மணம் புரிந்ததால் மணப் பெண்ணுக்குரிய இடமான வலப் புறத்தில் இடம்பெற்றிருக்கிறாள். இந்த பிராட்டிக்கு பூமி தேவி, பூதேவி, பூநாச்சியார், தரணிதேவி, வசுந்தரை ஆகிய திருநாமங்களும் உண்டு.
 இது பூதேவியின் தலம் ஆதலால், இங்கு தாயாருக்கு தனிச் சந்நிதி கிடையாது. ஆழ்வார்கள் சந்நிதியில் கோதை நாச்சியாரும் இல்லை.
 வருடத்தில் ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே மனைவியைப் பிரிவார் ஸ்ரீஒப்பிலியப்பன். மார்க்கண்டேயர் பூமாதேவியை மணம் முடித்துக் கொடுத்தபோது, தன் மகளை விட்டு ஒருபோதும் பிரியக் கூடாது என்று பெருமாளுக்கு நிபந்தனை விதித்தார். எனவே, அனைத்து விழாக்களிலும் ஒப்பிலியப்பன் பூதேவியுடன் இணைந்தே பவனி வருகிறார். ஆனால், நவராத்திரி உற்சவத்தில் அம்பு போடும் வைபவத்தின்போது மட்டும் சுமார் ஒரு மணி நேரம் பெருமாள் தனியே செல்கிறார். அப்போது பூமாதேவி தாயார் யாருக்கும் தரிசனம் தராததால், மூலஸ்தானத்தில் தாயார் சிலையை திரையிட்டு மறைப்பர்.
 இங்கு மூலவருக்கு திருமுழுக்கும், உற்சவருக்கு திருவடி திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
 சுமார் 40 கிலோ எடையில், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கவசம் ஒன்று மூலவர் ஸ்ரீஒப்பிலியப்பனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு மொத்தமும் சேவார்த்திகள் அளித்ததே. அடுத்ததாக தாயாருக்கும் சுமார் 15 கிலோ எடையில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கவசம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
 இங்கு வேதாந்த தேசிகருக்கு வழங்கப்படும் தனிச் சிறப்பாக பெருமாள்- பிராட்டி திருஉலாவில் இவரும் எழுந்தருளுகிறார்.
 புளியோதரை, தயிர்சாதம், பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வடை, அதிரசம், முறுக்கு ஆகியவை பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. உப்பில்லா விட்டாலும் இந்த பிரசாதங்கள் ருசியாகவே இருக்கிறது. அதேபோல் உப்புள்ள உணவுப் பொருட்களைக் கோயிலுக்குள் கொண்டு வந்து உண்டால், பாவம் ஏற்படும் என்பது ஐதீகம்.
 திருக்கோயிலுக்குள் பிரசாதங்கள் சாப்பிடும்போது உப்பு சேர்த்தாற் போல் சுவைப்பதும், வெளியே வந்து சாப்பிட்டால் உப்பு இல்லாதது போல் தோன்றுவதும் இந்தத் திருத்தலத்தின் தனிச் சிறப்பு!
 ஸ்ரீஒப்பிலியப்பன், திருப்பதி வேங்கடாசலபதியின் அண்ணன் என்பதால், திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட பிரார்த்தனைகளை இங்கும் நிறை வேற்றலாம். இந்தக் கோயில் ‘தென் திருப்பதி’ என்றும் போற்றப்படுகிறது. திருப்பதி போல் இங்கும் முடி காணிக்கை அனுமதிக்கப்படுகிறது.
 இங்கு சந்தனம், குங்குமம் ஆகியவற்றைச் சமர்ப்பித்தால் பிரமஹத்தி தோஷத்திலிருந்து விடுபடலாம். தீபக்கால், தூபக்கால், திருமஞ்சனப் பாத்திரம் மற்றும் வெங்கல மணி ஆகியவற்றை சமர்ப்பித்தால் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறலாம் என்கிறது தல புராணம்.
 கருடன் சந்நிதிக்கு முன் அமைந்துள்ள பெருமாள் திருவடிகளில் மிளகு கலந்த உப்பைக் கொட்டி வழிபட்டால் சரும நோய்கள் விலகுவதாக நம்பிக்கை. எதிரி பயம் நீங்கவும், அசுவமேத யாகம் செய்த பலனை அடையவும் பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்யலாம்.
 ஸ்ரீஒப்பிலியப்பனுக்கு உற்சவம் நடத்தினால், புத்திர பாக்கியம் திண்ணம் என்பது ஐதீகம்.
 இங்கு சந்தான கிருஷ்ணனை மடியில் எழச் செய்யும் சேவை தினமும் காலை 8:30 மணி வரை நடைபெறும். அப்போது குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள பகலிராப் பொய்கையில் நீராடி, நோன்பிருந்து அங்கப் பிரதட்சணம் செய்து ஸ்ரீசந்தான கிருஷ்ணனை மடியில் எழுந்தருளச் செய்து பெருமாளை சேவித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
 இங்கு துலாபாரம் உண்டு. உப்பு தவிர ஏனைய பொருட்கள் அனைத்தும் காணிக்கையாக ஏற்கப்படுகின்றன. காணிக்கைப் பொருட்களை கோயிலிலேயே பெறலாம்.
 டாக்டர் எம்.கே. நடராஜன் என்பவர் பல வருடங்களுக்கு முன் இங்கு கோடி அர்ச்சனை செய்தார். இவர் தனது சொத்தின் பெரும்பகுதியை இந்தக் கோயிலுக்குச் செலவு செய்துள்ளார்.
  இந்தக் கோயிலில் உள்ள பட்டாச்சார்யர்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி களில் விளக்கம் கூறி அர்ச்சனை செய்கிறார்கள்.
இங்கு ஸ்ரீவைகானஸ ஆகம முறைப்படி பூஜைகள் மற்றும் உற்சவங்கள் நடத்தப் பெறுகின்றன. தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.
காலையில்- விசுவரூப சேவை. அப்போது சுப்ரபாதம் - ப்ரபத்தி - மங்களம் ஆகியவை கோயிலுக்குள் ஒலி பரப்பப்படுகிறது. பிறகு திருப்பாவை - வேதம் சாத்துமுறை. அடுத்து பெரிய ஆராதனம். அப்போது இங்குள்ள எல்லா சந்நிதிகளுக்கும் நிவேதனம் நடைபெறும். நண்பகலில் உச்சிக் கால பூஜை. மாலையில் முதற்காலப் பூஜை. அப்போது நித்யானுஸந்தானமும், வேத பாராயணமும், சாத்துமுறையும் நடக்கும். பிறகு இரண்டாம் கால பூஜை. அப்போதும் மற்ற சந்நிதிகளுக்கு நிவேதனம் உண்டு. இரவில் அர்த்த ஜாம பூஜை.
பக்தர்களது வேண்டுதல் நிமித்தமாக இங்கு தினமும் திருக்கல்யாண உற்சவம், கருட சேவை, தங்க ரதம், பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, பள்ளியறை சேவை, நித்ய ஆராதனம், மூலவர் மற்றும் உற்சவர் திருமஞ்சனம் ஆகியவையும் நடைபெறுகின்றன.
 வைணவக் கோயில்களில் இங்குதான் முதன் முறையாக தங்க ரதம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்கள் வழங்கிய காணிக்கை தொகை சுமார் ரூ. 20 லட்சம்.
 தங்க ரதம் செல்வதற்காக கோயிலின் உட்புறம் அமைக்கப்படும் ஓடு பாதை 108 திவ்விய தேச பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதி லும் அந்தந்த திவ்விய க்ஷேத்திரத்தின் பாசுரமும், பெருமாளின் திருவுருவப் படமும் வைக்கப்படும். ஒரு முறை தங்க ரதத்துடன் வலம் வந்தால் 108 திவ்ய தேசங்களுக்கும் சென்று வந்த மன நிறைவு ஏற்படும் வண்ணம் அமைக்கிறார்கள். இதற்காக ரூ. 75,000 செலுத்தினால் நீங்கள் விரும்பும் திவ்விய தேச பகுதியில் உங்கள் பெயரைப் பொறிக்கலாம்.
 ஸ்ரீஒப்பிலியப்பனுக்கு மகோற்சவம் செய்ய ஆசைப்பட்ட பிரம்மன், பெருமாளிடம் அதற்கு அனுமதி கேட்டான். அவர் சம்மதித்தார். பங்குனி மாத சித்திரை நட்சத்திரத்தில் வைகானச முறைப்படி கொடியேற்றி, ஒப்பிலியப்பனுக்கு எட்டு நாள் உற்சவத்தை நடத்தி, ஒன்பதாம் நாள் ஏகாதசி கூடிய திருவோண நட்சத்திரத்தன்று திருத்தேர் உற்சவம் கண்டு மகிழ்ந்தான் பிரம்மன் என்கிறது புராணம்.
பின்னர், பிரம்மதேவன் மறுபடியும் புரட்டாசி மாதம் தேவர்களுடன் வந்து உற்சவம் நடத்தி 9-ஆம் நாள் திருவோணத்தன்று கோ ரதோற்சவம் கண்டருளி தட்சிண கங்கை நதியில் எம்பெருமானுடன் தீர்த்த வாரி ஸ்நானம் செய்தபின் தேவர்களுடன் தமது இருப்பிடம் சென்றான்.
இப்போது ஆண்டுதோறும் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் தேவர்களுடன் பிரம்மன் இங்கு வந்து உற்சவங்கள் நடத்துவதாக ஐதீகம்.
  இங்கு நடைபெறும் சிரவண தீபம் விசேஷ மானது. மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று பக்தர்கள் இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, பகல் 11 மணிக்கு மூவகை தீபம் கொண்ட சிரவண தீபத்தை தரிசிக்கின்றனர்.
 அப்போது ஆசாரத்துடன் தீர்த்த மாடி, ஈர உடையுடன் அகண்ட தீபத்தை கையில் வைத்துக் கொண்டு பெரிய பிரகாரத்தை வலம் வருவார் அதற்கென பாரம்பரியமாக உரிமை உள்ளவர். அப்போது அவர் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வதும் உண்டு. இது இப்போதும் நடைமுறையில் உண்டு. இதையட்டி ஆலயத்துக்கு வந்தோ அல்லது அவரவர் இருக்குமிடத்திலோ உண்ணா நோன்பிருந்து இறுதியில் உப்பில்லாத உணவைப் பெருமாளுக்குப் படைத்து தானும் உண்டு விரதத்தை முடிப்பது சிரவண விரதமாகும்.
 ஐப்பசி மாதம் திருவோண தினத்தன்று பூமிப் பிராட்டியை மணந்து கொண்டார் ஸ்ரீஒப்பிலியப்பன். இதையட்டி ஐப்பசித் திருவோணத்தன்று திருக்கல்யாண உற்சவம் தொடங்கி 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
 புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் திருக் கோயிலில் அதிகாலை 3:40 மணிக்கு சுப்ரபாதமும், 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.
அன்று மூலவர் ஸ்ரீஒப்பிலியப்பனுக்கு புஷ்ப அங்கியும், உற்சவருக்கு ரத்தின அங்கியும் அணிவிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. பெருமாளுக்கு உகந்த இந்த புரட்டாசி சனிக் கிழமை நாட்களில் பக்தர்கள், தங்களது வேண்டுதலையட்டி விரதம் மேற்கொள்கின்றனர்.
 ஸ்ரீஒப்பிலியப்பனுக்கு ஆவணி மாதத்தில் ஐந்து நாள் ‘பவித்ரோற்சவம்’ விழா நடைபெறுகிறது. ஆவணி கேட்டை நட்சத்திரத்த்தன்று துவங்கும் இந்த விழா, திருவோண நட்சத்திரத்தன்று (ஓணம் பண்டிகை) முடிவடைகிறது. அன்று சூரிய உதயத்தின்போது கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார் பெருமாள். இதை ‘உதய கருட சேவை’ என்கிறார்கள். கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள் தட்சிண கங்கை எனப்படும் நாட்டாற்றில் தீர்த்தமாடி திரும்புகிறார். அதன்பின் திருவோண பூஜை நடக்கிறது.
பங்குனி மாதம் இங்கு நடக்கும் பிரம்மோற்சவத்தை அடுத்து ஸ்ரீராமநவமி உற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு திருமஞ்சனமும், விசேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன. அந்த உற்சவத்தின் கடைசி மூன்று நாட்களில் முறையே மாப்பிள்ளை அழைப்பு, சீதை கல்யாணம், ஸ்ரீராமர் கனகாபிஷேகம் மற்றும் பட்டாபிஷேகம் ஆகியவை விமரிசையாக நடைபெறும்.
 ஸ்ரீஒப்பிலியப்பன் கோயில் உற்சவங்கள்:
வைகாசி: திருவோணம் - வசந்த உற்சவம். சாத்துமுறை சேஷ வாகனம் (அனுஷ நட்சத்திரம் தொடங்கி 6-நாள் திரு நந்தவனம் வசந்த மண்டபத்தில் உற்சவம்).
ஆடி: ஜேஷ்டாபிஷேகம் (4 நாள்) மூலவர், உற்சவர் கவசம் களைந்து திருமஞ்சனம். 4-ஆம் நாள் மாலை தொட்டித் திருமஞ்சனம்.
ஆவணி: திருவோணம்- பவித்ர உற்சவம். சாத்துமுறை சூரியோதய கருட சேவை (கேட்டை நட்சத்திரம் தொடங்கி 5 நாள் உற்சவம்).
புரட்டாசி: திருவோணம் - பிரம்மோற்சவம். சாத்துமுறை கோ ரதம் (சித்திரை நட்சத்திரம் தொடங்கி 9 நாள் உற்சவம் மற்றும் ஸ்ரீதேசிகன் அவதார உற்சவம்).
ஐப்பசி: திருவோணம்- திருக்கல் யாண உற்சவம் (12-நாள் உற்சவம்).
மார்கழி: பகல்பத்து 10-நாள், ராப்பத்து 10-நாள், இயற்பா சாத்துமுறை- 1 நாள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம் சாத்து முறை-1 நாள் (மொத்தம் 22-நாள்).
தை: திருவோணம்- தெப்போற்சவம். சாத்துமுறை - (கேட்டை நட்சத்திரம் தொடங்கி 5 நாள் உற்சவம்).
பங்குனி: திருவோணம்- பிரம்மோற்சவம் சாத்துமுறை (அவதார மகோற்சவம்) மற்றும் திருத்தேர் (சித்திரை நட்சத்திரம் தொடங்கி 9நாள் உற்சவம்).
|
No comments:
Post a Comment