அகிலம் காக்கும் அன்னைக்கு ஆயிரம் திருநாமங்கள். ராஜராஜேஸ்வரியம்மன், லலிதாம்பிகை, புவனேஸ்வரி, காமாட்சியம்மன், மீனாட்சி அம்மன், விசாலாட்சியம்மன் என்றெல்லாம் ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு திருநாமத்தில் அன்னை அலங்காரமாக வீற்றிருந்து அருளாட்சி புரிகிறாள். அவளின்றி ஓர் அணுவும் அசையாது. அனைத்தும் அவளே! ஆதார சக்தியும் அவளே! அனுதினமும் நடப்பதெல்லாம் அவள் திருவருளே!
அப்படிப்பட்ட அவள், மகத்துவங்கள் நிறைந்த மயிலாப்பூர்த் திருத்தலத்தில் மகா மாரியம்மனாக- முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயரில் குடி கொண்டு மக்களை வாழ்வித்து வருகிறாள். மயிலை என்கிற மயிலாப்பூரில் காலங் காலமாக வாழ்ந்து வரும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இவள்தான் மூத்த மகள். இவளிடம் உத்தரவு பெற்ற பிறகுதான் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தங்களது இல்லங்களில் செயல்படுத்தத் துவங்குகிறார்கள்.
அன்னையின் ஆலயக் கதவுகள் காலை ஆறு மணிக்குத் திறக்கும் வரை வெயில் படாமல் வெளியே காத்திருந்து, திறந்த பின் உள்ளே போய் முகம் இல்லா அந்த சிலா விக்கிரகத்தை- முண்டகக்கண்ணி அம்மனை, மனமாரப் பிரார்த்தித்து, உளமாரத் தொழுது பிரசாதம் பெற்றுக் கொண்ட பின் வீட்டுக்குப் போய் அன்றாடப் பணிகளைத் துவக்கும் தாய்மார்கள் அதிகம் பேர் அக்கம் பக்கத்தில் இருக்கிறார்கள்.
ஒரு விஷயத்தை அவசியம் சொல்ல வேண்டும். இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களில் 80 சதவிகிதம் பேர் பெண்கள். முண்டகக்கண்ணி அம்மனிடம் இவர்கள் வேண்டுவதில்லை; பிரார்த்தனை செய்வதில்லை; பேசுகிறார்கள். வீட்டில் வசிக்கும் வயது முதிர்ந்த தாயிடம், தங்களது குறைகளைச் சொல்வது போல், அன்னை முண்டகக்கண்ணியிடமும் குறைகளைப் பேச்சு மொழியில் சொல்கிறார்கள். அவள் விழியோடு கலக்கிறார்கள். கல்லூரியில் சேர்வதற்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டு வீட்டில் காத்திருக்கும் இளம்பெண் முதல், வி.ஆர்.எஸ். வாங்கி வீட்டில் இருக்கும் பெண்மணி வரை அனைவருமே முண்டகக்கண்ணி அம்மனின் அன்பான பக்தர்கள்.
முண்டகக்கண்ணி அம்மனின் மூலவர் விக்கிரகம் என்பது ஒரு வடிவம் இல்லாமல், பாறை போன்று தட்டையாக இருக்கிறது. சுயம்பு. இதில்தான் அம்மன் ஆவிர்பவித்திருக்கிறாள்.
காலை வேளைகளில் அபிஷேகத்தின்போது, சிலா விக்கிரகத்தின் உச்சியில் (நெற்றியில்) பெரிய அளவுக்கு முகம் போல் மஞ்சள் தூளை உருண்டையாக உருட்டி வைக்கிறார்கள் பூசாரிகள். கண்மலர், நாசி, அதரம் என்று முகத்தின் பகுதிகளை அந்த மஞ்சள் உருண்டையில் குழிவு ஏற்படுத்தி வைத்து அலங்கரிக்கிறார்கள். அதன் பின் வேப்பிலைப் பாவாடை கட்டி, பூமாலைகள் சார்த்தி, அர்ச்சனை செய்கிறார்கள்; ஆரத்தி காட்டுகிறார்கள்.
மதியம் 12 மணி வரை அபிஷேகம், தீபாராதனை... என்று தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள், முன்கூட்டியே அபிஷேகச் சீட்டு பெற்றுக் கொள்கிறார்கள். ஆலய அலுவலகத்தில் 150 ரூபாய் கட்டினால், அபிஷேகச் சீட்டு தருகிறார்கள்.
மாலை வேளையில் வெள்ளியாலான அல்லது தங்கத்தாலான திருமுகம் வைத்து, நாகாபரணம் பூட்டி, கிரீடம் சார்த்தி, ஆபரணங்கள் அணிவித்து, திருக்கரங்கள் சேர்த்து அன்னையை அலங்கரிப்பார்கள். கூடி விடும் பக்தர்கள் கூட்டம், ‘என்னைப் பார் ஆத்தா... என் மீது கருணை வை ஆத்தா’ என்று எட்டிப் பார்த்து, முட்டிப் பார்த்து... அன்னையை ஆனந்த தரிசனம் செய்கிறார்கள்.
அன்னையின் அருகே சென்று, பதுமை போல் நின்று அவள் அழகை தரிசிக்க முடியும். அருகில் இருந்து அவளைக் காணும் போது உடலில் சிலிர்ப்பு ஏற்படுகிறது. மனம் லேசாகிறது. அன்னையை தரிசிப்பதற்கு அருகில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்பதில்லை. மகா மண்டபத்தின் எந்தப் பகுதியில் நின்றாலும் அன்னையைச் சுலபமாக- சுதந்திரமாக தரிசிக்க முடியும். எங்கு நின்று அன்னையை தரிசிக்கிறோம் என்பதல்ல முக்கியம்! பகட்டில்லாத நமது பிரார்த்தனையில் அவள் மயங்கி, அவளின் அருட்பார்வை நம் மீது விழ வேண்டும் என்பதே லட்சியம். பிறகென்ன... திருவருள் நிச்சயம்!
ஆலயம் வெகு சிம்பிள். ஒரு பெரிய மகா மண்டபம், கருவறை, ஒரே பிராகாரம், பரிவார தேவதைகள்... அவ்வளவுதான்! அன்னையின் கருவறை, கான்கிரீட் கட்டடமோ செங்கல் கட்டுமானமோ இல்லை. முகப்பு வாசலைத் தவிர மூன்று பக்கமும் கீற்றுக் கொட்டகை. மேலே, கருவறையை மூடியபடி மூங்கில் பாய். கட்டடம் கட்டுவதற்கு இதுவரை உத்தரவாகவில்லையாம்- அன்னையிடம் இருந்து!
ஒரு முறை ‘கருவறைக்குக் கட்டடம் கட்டித் தருகிறேன்!’ என்று பிடிவாதக்கார பக்தர் ஒருவர், தளம் அமைக்க முற்பட... ‘தீயது செய்ய முற்படாதே’ என்று அறிவுறுத்துவது போல் தீயைச் சுற்றிலும் வரவழைத்து, கோடி காட்டினாளாம் முண்டகக்கண்ணி அம்மன். இந்தத் தீ திடீர் திடீரென்று ஆலயம் அமைந்துள்ள பகுதியிலும், சுற்றுத் தெருக்களிலும் அப்போது திகுதிகுவென்று பரவியதாம். ஆனாலும், ஆலயக் கருவறைப் பக்கம் கீற்றுக் கொட்டகை இருந்தும்கூட தீயின் நாக்குகள் எட்டிப் பார்க்கவில்லையாம். அதன் பிறகுதான் ‘கருவறைக்குக் கட்டடம் எக்காலத்திலும் கூடாது!’ என்று ஆலயத் தரப்பினரும் பக்தர்களும் தெளிந்தனர். இந்தப் பழைய சம்பவத்தை இன்னமும் சிலிர்ப்பாகச் சொல்கிறார்கள் ஆலயத் தரப்பினர்.
கருவறையெங்கும் மஞ்சள் வாசம்; இளநீர் வாசம்; பால் வாசம்; பூவாசம். அநியாயக்காரர்களை அழிப்பதற்குத் தகித்த மேனியுடன் தரணி எங்கும் பவனி வருபவளுக்குத் தண்ணீரை ஊற்றி ஊற்றிக் குளிர்வித்ததால், தரையெங்கும் ஜிலீரென்று இருக்கிறது. கருவறை அருகே நின்று கொண்டிருக்கும் சில நிமிடங்களில் குளிர்ச்சியை உணர்கிறோம். இந்த இதத்தையும் சுகத்தையும் எந்நாளும் விரும்பித்தான் அன்னை தனக்கென கட்டடம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை போலும். உலகத்தையே காத்து ரட்சிப் பவளுக்கு எல்லாச் சூழ்நிலையும் இதம் தான்; சுகம்தான்!
முண்டகக்கண்ணி அம்மன்- பெய ருக்கு வெவ்வேறு காரணங்களைச் சொல் கிறார்கள். ‘முண்டக்கண்ணி’ அம்மன் என்ற பெயர் ஆரம்பத்தில் இருந்து, முண்டகக்கண்ணி அம்மன் என்று பிற்பாடு ஆனதாகச் சொல்கிறார்கள். தலை இல்லாத ஒன்றை முண்டம் என்று சொல் லுவோம். அந்த அடிப்படையில் தலை இல்லாத- உருவம் இல்லாத இந்த அன்னையை அந்தக் காலத்தில் முண்டக்கண்ணி அம்மன் என அழைத்து வந்ததாகவும் சொல்கிறார்கள்.
முண்டகம் என்றால் தாமரை என்று பொருள். தாமரை போன்ற கண்களை உடையவள் என்ற பொருளில் முண்டகக்கண்ணி அம்மன் ஆகி இருக்கலாம் என்கிறார்கள். அவள் குடியிருக்கும் தெரு, அவள் பெயராலேயே ‘முண்டகக்கண்ணி அம்மன் தெரு’ என அழைக்கப்படுகிறது.
ஆடி மாதங்களில் கூழ் ஊற்றுவது, பொங்கல் இடுவது என்று ஆலயப் பகுதி முழுவதையும் பக்தர்கள் ஆக்கிரமித்திருப்பார்கள். அது போன்ற விசேஷ காலங்களில் கோயிலுக்கு வெளியே தெருவுக்கும் வந்து பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் உண்டு. சித்ரா பௌர்ணமி போன்ற முக்கிய தினங்களில் பால் குட ஊர்வலம் கன ஜோராகப் புறப்பட்டு வந்து அம்மனுக்கு குடம் குடமாக ஊற்றிக் கொண்டே இருப்பார்கள். கோடையில் அம்மனை குளிர்விக்க இந்த அபிஷேகம். ஆடிப் பூரம், நவராத்திரி போன்ற காலங்களில் முண்டகக்கண்ணி அம்மன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும், வெள்ளி சிம்ம வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும்.
மயிலாப்பூர், மந்தவெளி, ராஜா அண்ணாமலைபுரம், அபிராமபுரம் போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் குடி கொண்டிருக்கும் அனைத்து அம்மன் கோயில் களுக்கும் இவள் தாய் போன்றவள். எனவே, மேற்சொன்ன ஆலயங்களில் உற்சவம், திருவிழா என்றால் முதலில் இங்கிருந்துதான் கரகத்தையோ, பவனியையோ துவக்குவார்களாம். இது பல ஆண்டு களாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பின் கீழ் வருகிறது. ‘‘அரசின் அன்னதானம் தினமும் சுமார் 125 பேருக்கு நடந்து வருகிறது. திருக்கோயிலில் விழாக்கள், பக்தர்களிடம் இருந்து வசூலாகும் நன்கொடைகள் மூலமே நடைபெறுகிறது. அம்மனின் அருளில் நனைந்து திளைக்கும் இந்த ஆலய பக்தர்கள் சாதாரணப்பட்டவர்கள் அல்ல... ஆலயத்தின் எந்த ஒரு விழாவுக்கும், விசேஷத்துக்கும் தாங்களே மனமுவந்து ஆலயத்தில் தொகை செலுத்தி விழாவைச் சிறப்பிக்கிறார்கள். இதற்கு மிகச் சிறந்த ஓர் உதாரணம்- ஆலய வளாகத்தில் அழகாகக் காட்சி தரும் தங்கத் தேர்!’’ என்று அதை நமக்குக் காட்டி விளக்கினார், செயல் அலுவலரான மோகன சுந்தரம்.
‘‘முண்டகக்கண்ணி அம்மனின் உற்சவர் விக்கிரகத் தைத் தங்கத் தேரில் வைத்து பவனி வர வேண்டும் என்று பக்தர்கள் ஆசைப்பட்டனர். மளமளவென உதவிகள் சேர்ந்தன. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தங்கத் தேர் ஆலயத்திலேயே நிலை கொண்டு விட்டது. இந்தப் பணிக்காக உயர்தர தேக்கு மரங்களை ஒரு பக்தர் தந்தார். தேரின் டயர்களை டன்லப்பில் பணி புரியும் அதிகாரி ஒருவர், பிரத்தியேகமாகத் தயாரித்துக் கொடுத்தார். தகடு தந்தார்கள்; தங்கம் தந்தார்கள். உருவானது அழகான தேர்’’ என்றார் ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவரான உதயகுமார். ஆலயத்தைத் தேர் வலம் வருவதற்கு 1,500 ரூபாய் பணம் கட்ட வேண்டும். விருப்பப்பட்ட நாளில் பணம் கட்டி பக்தர்கள் தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இனி, ஆலய தரிசனம் செய்வோம்.
கிழக்கு நோக்கிய திருக்கோயில். ராஜ கோபுரம் மூன்று நிலைகள். ராஜ கோபுரத்துக்கு இடப் பக்கமும் வலப் பக்கமும் தனித் தனி நுழைவாயில்கள். இந்த வாயில்களின் மேலே மகிஷாசுரமர்த்தனி மற்றும் ராஜராஜேஸ்வரியின் சுதை வடிவங்கள் காட்சி தருகின்றன. ராஜ கோபுர நுழைவாயில் வழியே உள்ளே செல்கிறோம். ஓரிரு படிகள் ஏறியவுடன் கண்களுக்கு நேராக தரிசனம் தருகிறாள் முண்டகக்கண்ணி அம்மன். வைசூரி எனப்படும் அம்மை நோய், விஷக் கடி, பில்லி சூனியம், கடும் ஜுரம் போன்ற எல்லாவற்றுக்கும் இவளின் பிரசாதமே மாமருந்து!
அம்மனை தரிசிப்பதற்கு முன் பிராகார வலம் வந்து விடுவோம். பரிவாரங்களை வணங்கி வருவோம். இடச் சுற்று துவங்கும் இடத்தில் இரண்டு அரச மரங்கள். இங்கு ஏராளமான நாகர்களின் சிலா வடிவங்கள். பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் பலித்த பின், இது போன்ற நாகர் விக்கிரகங்களை இங்கே எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து செல்வார்களாம். பக்தர்களது இந்தப் பிரார்த்தனைகளில் நாக தோஷம் சம்பந்தப்பட்டவைதான் அதிகம். தவிர, பிள்ளைப்பேறு இல்லாதவர்களும் இங்கு வேண்டிக் கொண்டு நாகர்களுக்குத் தாங்களே பாலபிஷேகம் செய்கிறார்கள். நெய் விளக்கு ஏற்றிக் கையில் வைத்துக் கொண்டு தீபாராதனை காட்டு கிறார்கள். மஞ்சள் பூசுகிறார்கள். குங்குமத்தை வைத்து அர்ச்சனை செய்கிறார்கள். இந்த நாகர்களோடு விநாயகர், சிவலிங்கம், அம்மன் போன்றோருக்கான சிலா விக்கிரகங்களும் காணப்படுகின்றன.
சற்று நடந்தால் ஞானஜோதி நர்த்தன விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், அன்னபூரணி, ஐயப்பன், வள்ளி- தெய்வானை சமேத முத்துக் குமாரசாமி, ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களுக்கான சந்நிதிகள், தனியார் ஒருவரது பராமரிப்பில் இருந்து வருகின்றன. இங்கு வள்ளலாருக்கும் தனியே ஒரு சந்நிதி உண்டு.
கொஞ்சம் நடந்தால் வேப்ப மரம் மற்றும் அரச மரத்தின் பின்னணியில் மூன்று நாகர் விக்கிரகங்கள். அருகே ஒரு விநாயகர். பக்தர்கள் இந்த நாகருக்கும் பால் ஊற்றி அபிஷேகம் செய்கிறார் கள்.
அடுத்து சிலா வடிவத்தில் தனி மண்டபத்தில் நாகர் சந்நிதி. முண்டகக்கண்ணி அம்மன் சந்நிதியின் நேர் பின்னால் இந்த நாகர் சந்நிதி அமைந்துள்ளது. இதற்கு, பால் அபிஷேகம் செய்வதற்கு அவ்வளவு கூட்டம். பிராகாரத்தின் இந்தப் பகுதியை ‘பொங்கல் மண்டபம்’ என்று அழைக்கிறார்கள். இங்குதான் பொங்கல் வைக்கிறார்கள். இதை அடுத்து, கிணறு மற்றும் மடப்பள்ளி.
தொடர்ந்து, ஆலய உற்சவர் விக்கிரகம் அமைந்துள்ள மண்டபம். உள்ளே, அழகான சொரூபத்துடன் அன்னை முண்டகக்கண்ணி அம்மன். வெளியே சப்தகன்னியர்.
செங்கல் வடிவில் இருக்கும் ஒவ்வொரு கன்னியருக்கும் பக்தர்களே மஞ்சள் தடவி, அபிஷேகம் செய்கிறார்கள்.
ஆலயத்தின் பழைமை ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டும் என்கிறார்கள். ஆனால், எவராலும் எந்த ஒரு பழைய நிகழ்வையும், இன்னின்ன வருடத்தில் இப்படி எல்லாம் நடந்தது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.
மயிலாப்பூர் பகுதியில் தலைமுறை தலைமுறையாக இன்றைக்கும் வாழ்ந்து வரும் சில பெரியவர்கள் ‘முண்டகக்கண்ணி அம்மன்’ என்ற பெயரை உச்சரித்தாலே உடல் சிலிர்க்கிறார்கள்! உணர்வுபூர்வமான பக்தியில் தங்கள் உள்ளங்களை இந்த அம்மனிடம் கரைத்தவர்கள் இவர்கள். அப்படிப்பட்ட ஒருவர் ராமமூர்த்தி. வயசு 84.
‘‘மயிலாப்பூருக்கே இந்த முண்டகக் கண்ணிதான் எல்லை தெய்வம். இவளோட பார்வை பட்டாலே எல்லாமும் சுபிட்சம்தான். எந்த ஒரு வேண்டுதலா இருந்தாலும் எல்லாரும் இவ முன்னால வந்து நின்னு, ஏதோ வீட்டுல இருக்கிற ஒரு ஆசாமி கிட்ட அந்நியோன்னியமா சொல்லிட்டுப் போற மாதிரி அம்மன் கிட்ட சொல்லிட்டுப் போவாங்க. அவளும் நியாயமான கோரிக்கைகளை எல்லாம் நிறைவேத்தி வெப்பா.
அம்மை நோய்க்கு இந்த அம்மன் கோயில்லேர்ந்து தீர்த்தமும் வேப்பிலையும் மஞ்சளும் வாங்கிட்டுப் போய், யாருக்கு அம்மை இருக்கோ, அவங்களுக்குக் கொடுத்தா போதும்... அம்மன் படிப்படியா உடல்லேர்ந்து இறங்கிப் போயிடுவா.
இன்னிக்கும் நாட்டு சுப்ப ராய முதலி தெரு போன்ற சில இடங்களில் ஆழமாகக் கிணறு தோண்டும்போது கடல் இங்கு இருந்ததன் அடையாளமாக கிளிஞ்சலும் கடல்மணலும் கிடைச்சுக் கிட்டே வருது!’’ என்றார் ராம மூர்த்தி. முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் தற்போது தலைமைப் பூசாரியாக இருக்கும் மூர்த்தி சொல்கிறார். ‘‘எட்டு தலைமுறையா எங்க பரம்பரை இங்கே பூஜை செஞ்சிட்டு வர்றோம். இப்ப சொன்னா எல்லாருக்கும் நம்பறதுக்குச் சிரமமா இருக்கும். என் தாத்தாவுக்கு 115 வயசு ஆகிற வரை இங்கே அவர் தொடர்ந்து பூஜை செஞ்சுட்டு வந்திருக்காரு. ஆலயத்துல எத்தனையோ சிறப்புகளைச் சொல்லலாம். எங்கேயும் இல்லாத ஒரு விசேஷம் இங்கே என்னன்னா, அம்மை கண்டுச்சுன்னா அதுக்கு அந்தக் குடும்பத்துலேர்ந்து யாராவது ஒருத்தர் இங்கே வந்து அம்மனின் தீர்த்தம், வேப்பிலை, மஞ்சள் இவற்றை வாங்கிட்டுப் போனா போதும்.
அம்மையால் பாதிக்கப்பட்டவருக்குத் தீர்த்தம் உட்கொள்ளக் கொடுத்து, அவர் தலையில் தெளிக்க வேண்டும். அம்மை இருக்கும் இடங்களில், அம்மனின் பிரசாதமான மஞ்சளைத் தடவலாம். உடலில் எரிச்சல் இருக்கும் இடங்களில் வேப்பிலையால் தடவிக் கொடுக்கலாம். படுக்கும்போது தலைமாட்டில் வேப்பிலை வைத்துக் கொள்ள லாம். எத்தனையோ வி.ஐ.பி-ங்க அவங்க வீட்டுல அம்மை வந்தா, இங்கே வந்து அம்மனின் பிரசாதம் வாங்கிட்டுப் போறது இன்னிக்கும் நடக்குது. தங்கள் வீட்டுல அம்மை நோய் வந்தபோது பிரபலமான பல டாக்டருங்க வீட்டுலேர்ந்துகூட கோயிலுக்கு வந்து பிரசாதம் வாங்கிட்டுப் போவாங்க. ஆத்தாவோட பவர் அப்படி!’’ என்றார் பூசாரி மூர்த்தி.
அன்னையின் தீர்த்தம் அருந்தி, அபிஷேக மஞ்சளை நெற்றியில் இட்டுக் கொண்டு, குங்குமப் பிரசாதம் வாங்கி, அவளின் பரிபூரண அருள் பெற்று வெளியே வருகிறோம். ராஜ கோபுரத்தை அண்ணாந்து பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ளும்போது ‘அன்னையின் தரிசனம் அடுத்து எப்போ?’ என்று ஏங்குகிறது மனசு.
|
Friday, 4 August 2017
முண்டகக்கண்ணி அம்மன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment