ச மயக் குரவர்களான திருநாவுக் கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலங்கள் மிகச் சில. அவற்றுள் ஒன்று, கந்தாரண்யம் அல்லது சந்தன வனம் என்று அழைக்கப்படும் ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம். பிற்காலச் சோழர்களது கட்டடக் கலைக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாகத் திகழும் இந்தக் கோயில், முழுவதும் கருங்கற்களால் ஆன ‘சுத்த கட்டடக் கலை’ வகையைச் சார்ந்தது என்கிறார்கள்.
கும்பகோணம்- நன்னிலம்- நாகப்பட்டினம் மார்க்கத்தில் அச்சுதமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம். கும்ப கோணத்திலிருந்து 28 கி.மீ. தொலைவிலும், திருவாரூரிலிருந்து 16 கி.மீ தொலைவிலும் உள்ளது.
ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் மற்றும் ஸாம்போப புராணம் ஆகியவற்றில் ஸ்ரீவாஞ்சியத்தின் சிறப்புகள் கூறப்பட் டுள்ளன. தலம், தீர்த்தம், மூர்த்தி - ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஸ்ரீவாஞ்சியத்தில் ஒரு கணம் வசித்தாலோ, இதை நினைத்தாலோ, இதன் பெயரை ஒரு முறை சொன் னாலோ... பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். கிருத யுகத்தில் தங்க மயமாகவும் திரேதா யுகத்தில் வெள்ளி மயமாகவும், துவாபர யுகத்தில் தாமிர மயமாகவும் திகழ்ந்த ஸ்ரீவாஞ்சியம், இந்தக் கலி யுகத்தில் கலியின் தோஷம் காரணமாக மண் மயமாகத் திகழ்வதாக புராணங்கள் கூறுகின்றன.
ஈசன், உமையவளுடன் ஒரு முறை உலகை வலம் வந்தார். அப்போது காசி, காஞ்சி மற்றும் காளத்தி ஆகிய தலங்களுக்குப் பிறகு, சந்தன வனமான இந்தத் தலத்தை அடைந்தனர். உமையவள் இதன் மகிமையைக் கூறுமாறு இறைவனிடம் வேண்டினாள். ‘‘பஞ்ச மாபாதகங்களைத் தீர்க்க வல்லது, பிரளய காலத்திலும் அழிவற்றது, அறுபத்தாறு கோடித் தலங்களுள் சிறந்தது!’’ என்று விளக்கி னார் சிவனார். ஸ்ரீவாஞ்சியத்தின் சிறப்புகளை அறிந்த அம் பிகை அங்கேயே வசிக்க விரும்பினாள்.
அதன்படி மாசி மாதம், சுக்ல பட்சம், மக நட்சத்திர சுப தினத்தன்று பெருமான், உமையோடு இங்கு எழுந்தருளியதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜோதிச் சுடரான சிவபெருமான், ‘தானே விரும்பி வாழ வந்த நாயகி’யாம் அம்பிகையுடன் அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு பேறுகளையும் அளிப்பவராக இங்கு விளங்குகிறார்.
‘இங்கு வந்து ஸ்ரீவாஞ்சிநாதரை பூஜிப்பவர்கள், காசி விஸ்வநாதரை தரிசிப்பதைவிட அதிக பலன் அடைவர்!’- என் பது அகத்தியரது வாக்கு.
ஊரின் கிழக்கே, நான்கு மாட வீதிகள் சூழ, மூன்று கோபுரங்களு டன் சுமார் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது திருக்கோயில். எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் இந்தக் கோயிலின் ராஜகோபுரம், சுமார் 110 அடி உயரமுள்ளது. ஐந்து நிலைகளுடன் திகழும் ராஜகோபுரத்தைக் கடந்தால், வட திசையில் குப்த கங்கை எனும் புனிதக் குளம். கங்காதேவி தனது 999 அம்சங்களுடன், உறையும் பெருமை கொண்டது. கிருத யுகத் துவக்கத்தில் சிவ பெருமான் விருப்பப்படி அவரது சூலத்திலிருந்து தோன்றியது. இதன் கீழ்க் கரையில் பார்வதி தங்கி யிருந்ததால் ‘தூய புஷ்கரணி தீர்த்தம்’ என்று போற்றப்படுகிறது.
துவாபர யுகத்தில் இது பராசர தீர்த்தம் எனப்பட்டது. வீரதனு என்பவன், அறியாமல் செய்த தவறுக்காக மூன்று யுகங்கள் பிரம்மராட்சசனாக வாழும் சாபம் பெற்றான். பராசர முனிவர் இதன் தீர்த்தத்தைத் தெளித்து அவனுக்கு சாப விமோசனம் அளித்தார். எனவே, இது பராசர தீர்த்தம் எனப்பட்டது.
திரேதா யுகத்தில் இது அத்திரி தீர்த்தம் எனப்பட்டது. பிள்ளை இல்லாமல் வாடிய அத்திரி முனிவர், நாரத மகரிஷியின் உபதேசப்படி இங்குள்ள புண்ணிய புஷ்கரணியில் நீராடி, ஆயிரம் வருடம் தவம் செய்து ஈசன் அருளால் தத்தாத்ரேயரை மகனாகப் பெற்றார். அதனால், அத்திரி தீர்த்தம்.
இதனால் மகிழ்ந்த சிவபெருமான், பிருகு முனிவரின் ஆசிரமத்தில் இருந்த திருமகளை அழைத்து வந்து திரு மாலுக்குத் திருமணம் செய்து வைத்தார். இப்படி ஸ்ரீ’யாகிய மகாலட்சுமியை அன்போடு விரும்பி திரு மால் தவம் புரிந்த இடம் ஆதலால் இந்தத் தலம் ஸ்ரீவாஞ்சியம் என்றும், திருமாலும், திருமகளும் நீராடியதால், இங்குள்ள திருக்குளம் ‘புண்ணிய புஷ்கரணி’ என்றும் பெயர் பெற்றன.
இதன் குளக்கரையில் ஒரு விநாயகர் சந்நிதி. அவரை தரிசித்துத் திரும்பினால், ராஜ கோபுரத்தையட்டி, தென் புறத்தில் எமதர்மராஜன் சந்நிதி. இவர், தென் திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளார். எம தர்மன், உயிர்களை வருத்திய பாவத்தால் ஏற்பட்ட தோஷம் நீங்க இங்கு வந்து ‘எமகுண்டம்’ எனும் தீர்த்தத்தை உருவாக்கினார். பின்னர் அதில் நீராடி, ஸ்ரீவாஞ்சிநாதரை வழிபட்டு க்ஷேத்திர பாலகராகும் பேறு பெற்றார். இவருக்கு அருகிலேயே சித்ரகுப்தன் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். தமிழ கத்தில் எமதர்மராஜனுக்கு உள்ளவற்றுள் மிகப் பழைமையான சந்நிதி இது. இங்கு வந்து எமனை வழிபட்டால், எம பயம் அகல்வதுடன் ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம். இவரை தரிசித்த பிறகு இரண்டாம் நிலையில் நுழைந்தால், நமக்கு இடப் புறம் அபயங்கர விக்னேஸ்வர். வலப் புறம் பாலமுருகன். இரண்டாம் கோபுரத்தைத் தாண்டி வந்தால் நந்தவனம், மடைப்பள்ளி, மற்றொரு விநாயகர் சந்நிதி.
இங்கு வலப் புறத்தில் ‘மருவார் குழலி’ என வழங்கப் படும் ஸ்ரீமங்களாம்பிகை சந்நிதி. மருவார்குழலே, திருவாஞ்சை வாழ்வே வருக வருகவே...’ என பிள்ளைத்தமிழ் பாடல் ஒன்று இந்த அம்பிகையைப் போற்றுகிறது.
சௌபாக்கியங்களை அருள்வதால் பாக்யாப்த நாயகி, மங்களம் அருள்வதால் மங்களாம்பிகை, கயிலா யத்திலிருந்து ஈசனுடன் சேர்ந்து வந்தவளாதலால் கௌரீ; தானே விரும்பி வாழ வந்தவள்; எனவே, வாழ வந்த நாயகி என்று பல்வேறு பெயர்களால் இவள் போற்றப்படுகிறாள். இந்த அம்மனுக்கு மாலை வேளையில் வெண்பட்டு அணிவித்து கலைவாணியாகத் துதிக்கின்றனர். இவளை வணங்கினால் கல்வி, செல்வம், புகழ் ஆகியவை மேம்படும் என்று சாம்பவ புராணம் கூறுகிறது.
அம்மன் சந்நிதிக்கு அருகே பள்ளி யறை. அதைத் தாண்டினால் மூன்றாம் நிலை கோபுர வாயிலில் இரட்டை விநாயகர். அருகிலேயே அதிகார நந்தி அமர்ந்து அருள் பாலிக்கிறார். மூன்றாம் கட்டின் முன் மண்டபத்திலும் ஒரு நந்திதேவர் காட்சி தருகிறார். அடுத்து மகா மண்டபம். துவாரபாலகர்களைக் கடந்தால், அர்த்த மண்டபம்.
கருவறையில் அகில உலகையும் ரட்சிக்கும் எம் பெருமான், ஸ்ரீவாஞ்சீஸ்வரர் எனப்படும் ஸ்ரீவாஞ்சி நாத ஸ்வாமி. சுயம்பு லிங்கம். பெருமானைக் கண் குளிர தரிசித்த பின், அவரின் வலப் புறமாக வெளிச் சுற்றுக்கு வந்தால், சோமாஸ்கந்தர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள். தட்சிணாமூர்த்திக்கு எதிரே அறுபத்து மூன்று நாயன்மார்கள், ஒன்பது தொகையடியார்களுடன் உமாமகேஸ்வரர் காட்சியளிக்கிறார்.
அடுத்து தென் திசை நோக்கி ஸ்ரீசனீஸ்வரர், புகழ் பெற்ற பஞ்ச லிங்கங்கள், துர்க்கை சந்நிதிகள் ஆகியவை வடக்குப் பிராகாரத்தில் அமைந்துள்ளன. எட்டுக் கைகளுடன் மகிஷாசுரமர்த்தினியாகக் காட்சி அளிக்கும் இந்த துர்க்கையை, 108 தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்து 21 வாரங்கள்- செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டு வந்தால், எண்ணியது அனைத்தும் நடக்கும்.
மகிஷாசுரமர்த்தினியை வணங்கி வலம் வந்தால் சூரியன், சந்திரன், யோக நிலையில் பைரவர் மற்றும் ஒரே சிற்பத்தில் அமைந்த ராகு, கேது சந்நிதிகளை தரிசிக்கலாம். ‘மோகினி’ உருவெடுத்து வந்த மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்ட ராகு, கேது என்ற அசுரர்கள், அமிர்தம் பருகியதால் தேவர்களாயினர். இங்கு மட்டுமே இவர்கள் ஒரே மூர்த்தியாக இணைந்து அருள் பாலிக்கின்றனர். எனவே, இந்த இருவருக்குமான பரிகாரங்களையும் இங்கு செய்யலாம். இந்த அமைப்பை ‘சண்டராகு’ என்கிறார்கள்.
இங்குள்ள யோக பைரவர், மேற்குப் பார்த்துக் காட்சியளிப்பது ஆலயத்தின் தனிச் சிறப்பு. பொதுவாக நின்ற திருக்கோலத்தில் விளங்கும் பைரவ மூர்த்தி இங்கு அமர்ந்த நிலையில் யோக பைரவராகக் காட்சி தருகிறார். சனீஸ்வரரின் குருவான இவரை வழி படுவதால், நரம்பு வியாதிகள் அகலும். மனநிம்மதி கிடைக்கும்.
இங்கு மார்கழி மாதத் திருவாதிரை நாளன்று நடைபெறும் நடராஜர் வீதி உலா சிறப்பானது. மேலும், மாசி மக மும் வெகு சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
|
Wednesday, 2 August 2017
யுகங்கள் பல கடந்த ஸ்ரீவாஞ்சியம் சிவஸ்தலம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment