Friday, 4 August 2017

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்

தினெட்டு நாட்கள் நடந்த மகாபாரதப் போரில் வில் வீரன் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்த பகவான் கண்ணபிரான் உபதேசித்த பகவத் கீதை, உலகப் பிரசித்தி பெற்றது. தனி ஒரு மனிதன் மனப் போராட்டத்தில் இருந்து விடுபட்டு, மனத் தெளிவு பெறுவதற்கு இந்த கீதை தரும் அறிவுரைகள் ஏராளம். வாழ்வியல் நெறிக்கு இன்றைக்கும் உதாரணம் காட்டிப் பேசப்படும் கீதை, சுமார் ஐயா யிரம் வருடங்களுக்கு முன்- துவாபர யுகத்தின் முடிவில் அருளப்பட்டது என்பதை நினைத்தால் பிரமிப்பு தோன்றுகிறது!
வீரர்கள் நிறைந்த களத்தில் அன்று கீதை அருளிய பரந் தாமன், இன்று கடற்கரை ஓரம்- திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்தில் குடும்ப சமேத ராக எழுந்தருளி, கீதையின் பாதையில் நம்மை வழி நடத்தக் காத்திருக்கிறார். முறுக்கு மீசையுடன் அந்த பரமாத்மா ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் (மூலவர்: ஸ்ரீவேங்கடகிருஷ்ணர்; உற்சவர்: ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள். உற்சவர் பெயராலேயே ஆலயம் அழைக்கப்படுகிறது), தேடி வரும் பக்தர்களுக்கு அருள் புரிய தன் தேவி ஸ்ரீருக்மணி பிராட்டியார், அண்ணன் பலராமர், தம்பி சாத்யகி, பிள்ளை பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் சகிதமாக எழுந்தருளி உள்ளார். ‘இப்படிக் குடும்ப சமேதராக கிருஷ்ணன் அருள் பாலிக்கும் தலங்கள் வெகு சொற்பம். பரந்தாமன் தன் குடும்பத்துடன் பக்தர்களை எதிர்கொண்டு அழைப்பது கலியுகவாசிகளுக்குப் பெருமை. இவரை தரிசிக்கக் கொடுத்து வைக்க வேண்டும்!’ என்பது வைணவர்கள் கூற்று.
எல்லாவற்றுக்கும் மேலாக நின்றான்- அமர்ந்தான்- கிடந்தான் ஆகிய மூன்று திருக் கோலங்களிலும் பெருமாளை இங்கு சேவித்து இன்புறலாம். நின்றான் திருக்கோலத்துக்கு ஸ்ரீவேங்கடகிருஷ்ணர் எனப் படும் ஸ்ரீபார்த்தசாரதி. இவரே மூலவர். அமர்ந்தான் கோலத் துக்கு தெள்ளியசிங்கர் என்ற ஸ்ரீநரசிம்மர். கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் எனப்படும் ஸ்ரீரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்கின்றன.
108 வைணவ திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று. திருமங்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசை யாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட பெருமை வாய்ந்தது இந்தத் திருக்கோயில்!
பண்டைய காலத்திலேயே சைவத்துக்கு மயிலை- வைணவத்துக்கு திருவல்லிக்கேணி என்று சென்னை புகழ் பெற்று விளங்கியது. ‘1952-ஆம் வருடத்தில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தின் வருமானம் சுமார் 81,210 ரூபாய்; செலவினம் சுமார் 66,216 ரூபாய்’ என்கிறது ஒரு குறிப்பு.
வேங்கடவன் எழுந்தருளி இருக்கும் திருப்பதிக்கும், வேங்கடகிருஷ்ணன் எழுந் தருளி இருக்கும் திருவல்லிக்கேணிக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்பு இருந்து வந்தது என்பது பிரமிக்க வைக்கும் செய்தி.
பல நூறு வருடங்களுக்கு முன் திருமலை- திருப்பதி சென்று வேங்கடவனை தரிசித்து தென் தமிழகம் திரும்பும் அனைத்து பக்தர்களும், திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்துக்கு வந்து, தங்கி இளைப் பாறுவர். அதன் பின் கடலில் நீராடி, ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை ‘கோவிந்தா கோவிந்தா’ என்கிற கோஷத்துடன் மனமுருக சேவிப் பார்கள். அங்கிருக்கும் இலவச போஜன சாலைகளில் உணவருந்துவார்கள்.
பேயாழ்வாரின் சிஷ்யரான திருமழிசையாழ்வார், யோக நிலையில் பல ஆண்டுகள் இங்கு தங்கியிருந் தார். ஆச்சார்யர்களான ஸ்ரீபாஷ்யக்காரர், ஆளவந்தார், வேதாந்தாசார்யர் போன்றோரும் சங்கீத மேதைகளான ஸ்ரீதியாகராஜர், முத்துசாமி தீட்சிதர் போன்றோரும் இந்தத் தலத்துக்கு விஜயம் செய்துள்ளனர். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ- பாண்டிய மன் னர்களால் திருப்பணி செய்யப்பட்ட தலம் இது.
வியாபார நிமித்தமாக சென்னை நகரை மையம் கொண்ட அந்நிய நாட்டினர், திருவல்லிக் கேணியையும், அமைதி நாடி இங்கு குடி கொண்ட அனந்தனையும் விட்டு வைக்கவில்லை. 1674-ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள், திருவல்லிக்கேணியைக் கைப்பற்றினர். பின்னர் ஸ்ரீபார்த்தசாரதியின் அமைதியைக் குலைக்கும் செயல்களில் இறங்கினர். பாரதப் போருக்கு வித்திட்டு, பாண்டவர்களின் கையில் நாட்டை மீட்டுக் கொடுத்த பார்த்தசாரதியைச் சுற்றி, ராணுவத் தளவாடங்களை நிறுவினர் பறங்கியர்கள். ஆங்கிலேயர் வரவுக்குப் பின் கி.பி.1754-ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்துக்கு ஒரு வகையாக விடுதலை கிடைத்தது. திருவல்லிக்கேணியில் நிரந்தர அமைதி குடிகொள்ள ஆங்கிலேயர்களே வழி வகுத்தனர். சரித்திரம் சொல்லும் தகவல்களுக்கெல்லாம் சரியான ஆதாரங்கள் இருக்கின்றன.
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் குடி கொண்டுள்ள இந்த ஆலயம், படுசுத்தமானது. கண்களைக் குளிர்விக்கும் சுற்றுச்சூழலோடு ஹைடெக்கான ஆலயமும்கூட. மூலவர் உட்பட நான்கு சந்நிதிகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த ஆலயத்தில் மூலவர் சந்நிதியில் செல்போனை பயன்படுத்த முடியாத அளவுக்கு ‘செல்போன் பிரேக்கர்’ கருவி பொருத்தப் பட்டுள்ளது. சுமார் 25,000 ரூபாய் மதிப்புள்ள இந்தக் கருவியை பக்தர் ஒருவர் வாங்கித் தந்துள்ளார்.
அழகிய அல்லி மலர்கள் நிரம்பிய குளத்தைக் கொண்டிருந்ததால் இந்தப் பகுதி, முற்காலத்தில் திரு அல்லிக்கேணி எனப்பட்டதாம். புராணங்கள் இந்தத் தலத்தை பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம்) என்கின்றன. திருக்கோயிலுக்கு எதிரே கைரவிணி என்கிற திருக்குளம் காணப்படுகிறது. இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய ஐந்து புனித தீர்த்தங்கள் இந்தத் திருக்குளத்தில் அடங்கி உள்ளதாக ஐதீகம். கங்கையைவிட புனிதமானது இந்தத் திருக்குளம் என் கிறது ஸ்தல புராணம் (ஸ்ரீநிவாஸ் இளைஞர்கள் நற் பணி சங்க’த்தினர் குளத்தைத் திறம்பட பராமாரித்து வருகின்றனர்). இந்தக் கோயிலின் தல விருட்சம், மகிழ மரம் ஆலய முகப்பில் இருக்கிறது.
ராஜ கோபுரம். ஐந்து நிலைகள்; ஏழு கலசங்கள். கோபுர மதிலில் இடப் பக்கம், உபதேசம் வழங்கும் கீதாச்சார்யன் கோலம் சுதைச் சிற்பமாக பிரமாண்டமாகக் காணப்படுகிறது. உள்ளே நுழைந்தால் இடப் புறம் அலுவலகம். பிறகு, துவஜாரோகண மண்டபம். பலிபீடம். கொடிமரம். கருடாழ்வார் சந்நிதி. வலப் புறம் வஸ்திரங்கள் சேகரித்து வைக்கும் கல்யாண மண்டபம். விசேஷ காலத்தில் இங்குதான் உற்சவங்கள் நடைபெறுகின்றன. இதன் அருகே யாக சாலையும் கண்ணாடி அறையும் காணப்படுகின்றன. கண்ணாடி அறைக்குத் தெற்கே சொர்க்க வாசல்.
கருடன் சந்நிதிக்கு நேராக உள்ள தொண்டரடிப் பொடி வாசல் வழியே உள்ளே செல்கிறோம். நமக்கு நேராக- கலியுகத்தில் இந்த உலகைக் கட்டி ஆளும் சர்வவியாபியான ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வெகு கம்பீரமாக- அதே நேரம் சாந்தமாக- தன் குடும்பத்தினருடன் சேவை சாதிக்கிறார். சுற்றுப்பிராகாரம் வலம் வந்து அங்குள்ள சந்நிதிகளை சேவித்து விட்டு அதன் பின் மூலவரை தரிசிப்பது வழக்கம். எனவே, பிராகார வலம் வருவோம்.
வலத்தின்போது மடைப்பள்ளி, தினசரி வழிபாட்டுக்கு நீர் இறைக்கும் கிணறு ஆகியவை தென்படுகின்றன. வலப் பக்கம் வெள்ளிக்கிழமை மண்டபம் எனும் நான்குகால் மண்டபம் இருக்கிறது. இதில் வேதவல்லி தாயாரின் ஊஞ்சல் சேவை நடக்கும். இதைக் கடந்து சென்றால், கிழக்குத் திக்கு நோக்கி இருக்கும் ஸ்ரீவேதவல்லித் தாயாரின் தனிச் சந்நிதி. சர்வாங்க சுந்தரியான ஸ்ரீவேதவல்லித் தாயாரின் உற்சவர் விக்கிரகம் மினுமினுப்புடன் பூக்களின் மணம் கமழ முன்னால் இருக்க... பின்னால் மூலவர் தரிசனம்!
உப சந்நிதியில் அருள் பாலிக்கிறார் மன்னாதர் என்கிற ஸ்ரீரங்கநாதர். அவருடைய தேவியான ஸ்ரீவேதவல்லி தாயாருக்குத்தான் இங்கே தனிச் சந்நிதி. தாயாருக்கு உண்டான உற்சவமும் மரியாதையும் வேதவல்லிக்கு கன ஜோராக நடக்கின்றன. வேதவல்லி இங்கே முக்கியத்துவம் பெற்றது எப்படி? புராணம் சொல்லும் கதையைப் பார்ப்போம்.
பிருந்தாரண்யம் (திருவல்லிக்கேணி) பகுதியில் பிருகு, அத்ரி, மரீசி, மார்க்கண்டேயர், ஸப்தரோமா, ஜாபாலி ஆகிய ரிஷிகள் மாபெரும் தவம் செய்து வந்தனர். அப்போது பாற்கடலில் பெருமாளுக்கும் லட்சுமி பிராட்டிக்கும் ஏதோ ஒரு வகையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. கோபப்பட்டு, தனியே புறப்பட்டு வருகிறார் பிராட்டி. நடக்கப் போகும் நாடகத்தை நாராயணன்தானே அறிவார்?!
ரிஷிகள் தவம் புரியும் பகுதியில் ஒரு சந்தன மரத்தின் அடியில் அழகிய பெண் குழந்தையாகத் தோன்றுகிறாள் லட்சுமி பிராட்டி. தற்செயலாக அங்கே வந்த பிருகு மகரிஷி, சமர்த்தான குழந்தையை சந்தோஷத்துடன் கொஞ்சுகிறார். அதே குதூகலத்துடன் குழந்தையைத் தூக்கிச் சென்று மனைவியிடம் கொடுத்தார். ‘வேதவல்லி’ என்று பெயரிட்டு, அவளை பரிவுடன் வளர்த்தனர்.
திருமகளைப் பிரிந்த சோகத்தில் தவித்த திருமால், ‘இனியும் தனித்து இருக்க முடியாது’ என்று பாற்கடலில் இருந்து கிளம்பி பூலோகம் வருகிறார். பிருந்தாரண்யத்துக்குள் புகுந்தார். அங்கே- பருவம் எய்திய பெண்ணாக- வேதவல்லி, முனிவர் பெருமக்களுக்கு சேவை செய்வதைக் கண்டார். பிருகு முனிவருக்குத் தன் உண்மை சொரூபத்தைக் காட்டி, வேதவல்லியை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். மணாளனைக் கண்ட வேதவல்லியும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.
‘திருமணத்துக்குப் பின்னும், பெருமாள் இங்கேயே எழுந்தருள வேண்டும்’ என்று சந்தோஷ மிகுதியில் கோரிக்கை வைத்தார் பிருகு மகரிஷி. பெருமாளும் அதற்குச் சம்மதித்து, ‘திருமணத்தை உடனே நடத்தித் தர வேண்டும்’ என்றார்.
மண மேடையில், மணாளனை நாணத்துடன் நோக்கிய வேதவல்லி, ‘இவரே என் தலைவர்’ என்ற பொருளில் ‘மன்னாதன்’ என்று அழைக்க... அதுவே இங்கு எழுந்தருளி உள்ள அரங்கனின் திருநாமம் ஆயிற்று. வேதவல்லி தாயாருக்கும் ஸ்ரீமன்னாத ஸ்வாமிக்கும் (ஸ்ரீரங்கநாதர்) மாசி மாதம் சுத்த சுக்ல பட்ச துவாதசி அன்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெறும். பிருகு மகரிஷியே இதைத் தொடங்கி வைத்ததாக ஸ்தல புராணம் சொல்கிறது. வைதீக முறையில் ஹோமங்கள் வளர்த்து, அம்மி மிதித்து, சப்தபதி நடத்தி இந்தத் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும்.
தாயார் சந்நிதியை சேவித்துக் கொண்டு சென்றால் அடுத்து, கஜேந்திர வரதர் சந்நிதி. பிற தலங்களில் குறிப்பிட்ட நாளில்- குறிப்பிட்ட நேரத்தில்தான் கருடசேவை வைபவத்தைக் காண முடியும். ஆனால், இங்கே வருடம் 365 நாளுமே கருடசேவைதான்! காரணம், கஜேந்திரனுக்கு மோட்சம் அருளிய அந்தக் கஜேந்திர வரதர் (மூலவர்), கருடாழ்வார் மேல் நித்திய வாசம் செய்கிறார். ஸப்தரோமர் மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி பெருமாள் இங்கு கருட வாகனத்துடன் காட்சி தருகிறார். மனதுக்கு நிறைவான தரிசனம். வைகாசி மாதத்தில் காஞ்சி வரதர் உற்சவத்தின்போது இங்கும் கஜேந்திர வரதரின் பத்து நாள் உற்சவம் திமிலோகப்படும்.
இவரை பிரதட்சணமாகச் சென்றால், தெள்ளியசிங்கர் எனப்படும் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியின் மகா மண்டபம் வருகிறது. இடப் பக்கம் ஸ்ரீதிருமழிசையாழ்வார் சந்நிதியை சேவித்துக் கொண்டு வருகிறோம். என்னே ஆச்சரியம்! தனி வாசலுடன் தனிக் கோயில் அமைப்பு! த்வஜாரோஹண மண்டபம், கருடாழ்வார் சந்நிதி, கொடிமரம், பலிபீடம், துவாரபாலகர்கள், கல்யாண மண்டபம் என எல்லாமே இருக்கின்றன. இதில் விசேஷம் என்னவென்றால், முக்கிய தினங்களில் இந்தத் தனி வாசல் வழியே ஸ்வாமி வெளியே புறப்பட்டுச் சென்று, இந்த வாசல் வழியாகவே உள்ளே வந்து விடுவாராம். ஸ்ரீநரசிம்மருக்கு, பார்த்தசாரதியைப் போலவே ஆனி மாதத்தில் பத்து நாள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
அத்ரி மற்றும் ஜாபாலி முனிவர்களுக்கு தெள்ளியசிங்கர் பிரத்தியட்சமாகக் காட்சி அளித்தாராம். அந்தக் கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம். எம்பெருமான் இங்கே தெள்ளிய சிங்கராக அவதரித்த வரலாறை பிரும்மாண்ட புராணம் கூறுகிறது. பிறப்பில்லா வரம் வேண்டி- முக்தியை எதிர்நோக்கி அத்ரி முனிவர் பிருந்தாரண்யத்தில் கடும் தவம் செய்தார். அப்போது ஒரு நாள் அங்கு வந்த விகடர் எனும் மாமுனிவர் மூலம், எம்பெருமான் தனக்குக் காட்சி வழங்க இருக்கும் அற்புதச் செய்தியைத் தெரிந்து கொண்டார் அத்ரி. பலருக்கும் இந்தச் செய்தி பரவியது. எம்பெருமான் காட்சி தரும் அந்த நாளும் வந்தது.
மலர்கள் தூவியவாறு தேவர்கள் சூழ்ந்து நிற்க... ஆதிசேஷன், கருடாழ்வார், சேனை முதலியார், சனகாதி முனிவர்கள் போன்றோர் சேவை செய்ய... பிரகலாதனுக்குக் காட்சி தந்த நரசிங்க வடிவில் விமானத்தில் எழுந்தருளி அத்ரி முனிவருக்குக் காட்சி தந்தார் பெருமாள்.
வீழ்ந்து பணிந்த அத்ரி, ‘‘மணிவண்ணா... எனக்கும் என் சீடர்களுக்கும் முக்தி கொடு!’’ என்று வேண்ட... பெருமாளும் அப்படியே அருளினார். அதன் பின், அத்ரி யின் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கேயே எழுந்தருளி, தெள்ளியசிங்கராக அருள் பாலிக்கத் தொடங்கினார். இடக் கை விரலால் ‘அருகே வா’ எனக் கூப்பிட்டு, வலக் கையால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் இந்த தெள்ளிய சிங்கர், சிறந்த வரப்ரசாதி!
இங்கு நரசிம்மர், யோகத்தில் இருப்பதால் இவர் சந்நிதியின் கதவில் இருக்கும் மணிகளுக்குக் கூட நாக்கு கிடையாது. ஓசை எழுப்பினால், இவரது யோகம் கலைந்து விடுமாம். இவரது மகா மண்டபத்துக்கு வட கோடியில் ஸ்ரீஆண்டாள் சந்நிதி. தவிர ஆளவந்தார், கூரத்தாழ்வார், முதலியாண்டான், மணவாள மாமுனிகள், ஸ்ரீபாஷ்யக்காரர், வேதாந்தாசார்யர், திருக்கச்சி நம்பிகள் போன்றோருக்கும் தனித் தனி சந்நிதிகள்.
மூலவர் பார்த்தசாரதி சந்நிதி அருகே இருக்கிறோம். வலப் புறத்தில் ஸ்ரீரங்கநாதர் (மன்னாதர்) மற்றும் சக்ரவர்த்தித் திருமகன் சந்நிதி, சிறிய திருவடி சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி போன்றவை காணப்படுகின்றன. ஆதிசேஷ படலத்தில் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீமன்னாதர் கிழக்கு நோக்கிக் காணப்படுகிறார். வேதவல்லித் தாயாருக்கும் ஸ்ரீமன்னாதருக்கும் வருடத்தின் பல தினங்களில் விசேஷம்தான். அந்தக் காலத்தில் உற்சவங்களும் புறப்பாடுகளும் சிறப்பாக நடக்கின்றன.
சீதை, லட்சுமணர், பரதன், சத்ருக்கனன், அனுமன் போன்றோருடன் தெற்கு நோக்கி நின்ற நிலையில் காட்சி தருகிறார் சக்ரவர்த்தித் திருமகன் (ராமபிரான்). மதுமான் என்கிற மகரிஷிக்குக் காட்சி கொடுத்தவர் இந்த ராமர்.
ஸ்ரீவேங்கடகிருஷ்ணர் சந்நிதி. பக்திப் பரவசத்தில் உருக வைக்கும் கம்பீரமான சந்நிதி. ஸுமதிராஜன் என்ற மாமன்னன், தீவிர பெருமாள் பக்தர். திருமலை வேங்கடவனை தரிசித்து, ‘‘பெருமாளே... உன்னை தேர்ப்பாகன் வடிவில் ஸ்ரீகண்ணனாகக் கண்டு நான் மகிழ வேண்டும்!’’ என்று பிரார்த்திக்கிறான். மன்னனின் விருப்பத்துக்கு இசைந்த வேங்கடவன், ‘‘பிருந்தாரண்ய க்ஷேத்திரத்துக்கு வா. அங்கே உனக்கு இந்தக் கோலத்தில் தரிசனம் தருகிறேன்!’’ என்றார்.
அதன்படி ஸுமதிராஜன் பிருந்தாரண்யம் வந்து தவம் இருந்து பெற்ற தரிசனத்தைத்தான் நாம் என்றென்றும் ஸ்ரீவேங்கடகிருஷ்ணராக சேவித்து வருகிறோம். கிருஷ்ணராக வேங்கடவன் காட்சி தந்தமையால் வேங்கடகிருஷ்ணன்! வியாச முனிவரால் இங்கே இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்கிறது ஸ்தல புராணம். இங்கு காணப்படும் மூலவர் திருமேனியே, கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.
வலக் கையில் சங்கு ஏந்தியும், இடக் கை வரத ஹஸ்தமாயும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீவேங்கடகிருஷ்ணர். பெருமாளின் வலப் பக்கத்தில் அழகு ததும்பும் முகத்துடன் ருக்மணி பிராட்டியார். இவருக்கு வலப் பக்கத்தில் வடக்கு நோக்கி ஒரு கையில் கலப்பையும், மற்றொரு கையை வரத ஹஸ்தமாகவும் கொண்டு பலராமர்.
பெருமாளுக்கு இடப் பக்கத்தில் அவர் தம்பி சாத்யகி, கிழக்குத் திசை நோக்கியும், பிரத்யும்னன் (மகன்) மற்றும் அநிருத்தன் (பேரன்) ஆகியோர் தெற்கு நோக்கியவாறும் இருக்க குடும்ப சமேதராக அருள் புரிகிறார் பெருமாள். மூன்று தலைமுறையினருடன் காட்சி தரும் இந்த மாலவனின் உறவு முறையைச் சொல்லி, அர்ச்சகர்கள் தீப தரிசனம் செய்து வைக்கும் அழகே அழகு! அதி அற்புதம்.
சந்நிதியின் முன்புறம் உற்சவ மூர்த்தியான ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவியுடன் எழுந்தருளி இருக்கிறார். பார்த்தசாரதியின் முகத்தில் யுத்த பாணங்களால் ஏற்பட்ட வடுக்கள். பாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகள், ஸ்ரீபார்த்தசாரதியைக் காயப்படுத்தியதால் அதன் தகிப்பு இன்னும் அடங்க வில்லையாம். எனவே, நைவேத்தியத்தில் நெய்தான் பிரதானம். எண்ணெய் வகையறாக்களை அதிகம் சேர்ப்பதில்லை. சுள்ளென்ற மிளகாய் கிடையாது. வெறும் மிளகுதான்!
கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை (திருப்பதி), பெருமாள் கோயில் (காஞ்சிபுரம்) என்று வைணவத்தின் மூன்று முக்கிய திவ்வியதேச மூர்த்திகளை சேவித்த புண்ணியத்தை திருவல்லிக்கேணியில் உள்ள இந்த ஒரு க்ஷேத்திரமே பக்தர்களுக்கு வழங்குவதால், மிகுந்த சிறப்பு வாய்ந்த தலமாக இது கருதப்படுகிறது. வருடத்தின் அனைத்து நாட்களுமே இங்கு உற்சவம் என்று சொல்லும் அளவுக்கு அலங்காரங்கள்... புறப்பாடுகள்! எப்போதுமே விழாக் கோலம்தான். தரிசிப்போம் பார்த்தசாரதி பெருமாளை; அவன் தாள் பணிவோம்!
தகவல் பலகை
தலத்தின் பெயர் : ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயில்
மூலவர் : ஸ்ரீவேங்கடகிருஷ்ணர்- ருக்மணி பிராட்டியார் (உற்சவர் பார்த்தசாரதி)
அமைந்துள்ள இடம்:
தென்சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி. இந்த ஆலயத்தின் நான்கு திசைகளிலும் பக்தர்களின் உதவியோடு நான்கு தோரண வாயில்கள், அமைத்துள்ளனர் ‘நண்பர்கள் குழு’ என்கிற அமைப்பினர்.
எப்படிச் செல்வது?:
சென்னை நகரின் எந்தப் பகுதியில் இருந்தும் திருவல்லிக்கேணிக்கு நகரப் பேருந்து வசதி உண்டு. பறக்கும் ரயிலில் வந்தால் திருவல்லிக்கேணியில் இறங்கிக் கொள்ளலாம்.
ஆலயத் தொடர்புக்கு:
அருள்மிகு ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயில் 
திருவல்லிக்கேணி, சென்னை-5 
போன்: (044) 2844 2462 
2844 7042

No comments:

Post a Comment