‘நந்த’ எனும் சம்ஸ்கிருதச் சொல்லுக்கு மகிழ்ச்சி அல்லது நிம்மதி என்று பொருள். நந்தி என்பவர் என்றும் நன்மையைத் தருபவர். இந்தப் பெயர் இறைவனான ஈசனுக்கும் பொருந்தும். அவரின் வாகனமாக விளங்கும் வல்லமை மிக்க நந்தி பகவானுக்கும் பொருந்தும்.
சிவ க்ஷேத்திரங்கள் அனைத்திலும் ஆண்டவன் சந்நிதிக்கு முன் காவலாக அமைந்திருக்கும் நந்தியெம்பெருமானுக்கு, சர்வேஸ்வரன் அருள் பாலித்த க்ஷேத்திரம் ஆந்திர மாநிலம் நந்தியால் அருகே உள்ள மகாநந்தி என்னும் தலம். நந்தி தேவருக்கு, இந்த மகாநந்தி க்ஷேத்திரத்தில், ஈசன் பெருமை தேடித் தர வேண்டிய காரணம் என்ன?
பல யுகங்களுக்கு முன்... முனிவர்களில் சிறந்தவரான சிலாத மகரிஷி, நல்லமலைத் தொடரில், வில்வ மரக் காடு ஒன்றில் ஆசிரமம் அமைத்து வசித்து வந்தார். என்றும் குன்றாத நிறைநிலை வாழ்க்கை வாழ்ந்த போதிலும், மகரிஷிக்கு, தனக்குப் பின்னர் தன் சார்பில் ஈசனை வழிபட குழந்தைப் பேறு இல்லை என்ற குறையன்று இருந்தது.
எனவே, மகேஸ்வரனிடம் குழந்தைப் பேறு அருளுமாறு வேண்டினார் மகரிஷி. ஈசனும் ஒன்றுக்கு இரண்டாகப் பிள்ளைகள் உண்டாக அவருக்கு வரம் ஈந்தார்.
மகரிஷிக்கு மல்லிகார் ஜுனன், நந்தனன் என்று இரண்டு மகன்கள் பிறந்தார்கள். பெரிய மகன் ஸ்ரீசைலத்தில் உறையும் மல்லிகார்ஜுன ஸ்வாமியைக் குறித்து மாபெரும் தவம் செய்தார். ஹிருதயாலீசுவரர் என்று ஈசனைத் தன் இதயத்திலேயே இருத்திக் கொள்ளும் வரமும், பேறும் பெற்றார்.
சிறிய மகன் நந்தனன், தந்தையிடம் நான்கு வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளைக் கற்றறிந்தார். கல்வி முடிந்ததும் கயிலைநாதனைக் குறித்து பெருந்தவம் புரிந்தார். அவருக் குப் பிரத்தியட்சமாகக் காட்சி அளித்த சிவபெருமான், ‘வேண்டும் வரம் கேள்’ என்றார் நந்தனனிடம்.
நந்தனனோ, ‘நானிலம் முழுவதும் எனது ஆட்சிக்குக் கீழ் வர வேண்டும்; ஈரேழு லோகங்களிலும் எனது புகழ் பரவ வேண்டும்; குபேரனுக்கு மிஞ்சிய பொன்னும் பொரு ளும் வேண்டும்’ என்று சாதாரணமான பலன்களைப் பெறுவதற்குத் தயாராக இல்லை.
அந்த மகேஸ்வரனுடனே வாழ்ந்து என்றும் அவருக்குச் சேவை செய்யும் பெரும் பேற்றை வரமாக வேண்டினார். சிவபெருமான் அவருக்கு அந்தப் பேற்றை அருளினார். மட்டுமின்றி, அவரைத் தன் வாகனமாக விளங்குமாறும் பணித்தார். மேலும் தன் பூத கணங்களில் ஒருவராக்கி, அவர்களின் தலைவனாக விளங்கும் தகுதியையும் அளித்தார்.
அப்படி ஆண்டவன் அருகிலேயே இருக்க வரம் வாங்கிய நந்தனன் உதயமான திருத்தலம் இது. அதனால் இது நந்தி க்ஷேத்திரமாக நானிலமெங்கும் அறியப்படுகிறது. நந்தனன் தவம் செய்த புற்றே, இங்கு லிங்க வடிவில் வழிபடப்படுகிறது. இங்கு ஈசன் மகாநந்தீஸ்வரனாக தரிசனம் தருகிறார்.
கலி யுகத்தில் இந்தப் பகுதியை, நந்த சக்ரவர்த்தி என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது கொட்டடியில் பல பசுக்கள் இருந்தன. அவை தினமும் காடுகளில் மேய்ச்சலுக்குச் சென்று வந்தன. அவற்றில் மன்னனுக்கு மிகவும் பிடித்தது- சுவையான பாலைப் பொழிந்து வந்த ஒரு கபிலப் பசு.
ஒரு தடவை அந்தப் பசு, பால் தருவது நின்று விட்டது. பல நாள் இது தொடரவே மன்னன் மேய்ச்சலுக்கு சென்ற மாட்டைப் பின்தொடர்ந்தான். மேய்ச்சலுக்குப் பிறகு திரும்பும் வழியில் பசு ஒரு புற்றைச் சென்றடைந்தது. அதனை வலம் வந்து பாலைப் பொழிய... புற்றுக்குள்ளிருந்து ஈசன், சிறுவன் உருவத்தில் பாலை அருந்தும் காட்சி தெரிந்தது. இந்த அற்புதக் காட்சியைக் கண்டதும் ‘மகேஸ்வரா’ என்று ஆனந்த அதிர்ச்சியில் மன்னன் அலறினான். திடுமென்று கேட்ட குரலால், மிரண்ட பசு, தன்னையுமறியாமல் புற்றை மிதித்தது. அதனால் புற்று உடைந்தது.
சக்ரவர்த்தி தனது தவறை உணர்ந்து, ஈசனிடம் மன்னித்து அருளுமாறு மன்றாடினான். பரமனும், குளம்புச் சுவடுடன் இருக்கும் இந்த புற்று, நந்தனன் தவம் செய்த இடமென்றும், அதுவே சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறது எனவும், அந்த லிங்கத்தில், தான் என்றென்றும் வாசம் செய்வேன் என்றும் அருள் புரிந்தார். சுயம்பு லிங்கம் எழுந்தருளியிருந்த இடத்தைக் கருவறையாக அமைத்து அங்கோர் ஆலயம் எழுப்பினான் நந்தச் சக்ரவர்த்தி .
பின்னர், 7-ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னர்கள் இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் பல செய்துள்ளனர். 11-ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட நந்த வம்சத்து அரசர்கள் ஆலயத்தைப் பெரிதுபடுத்திக் கட்டியுள்ளார்கள்.
விஜயநகர அரசர்களும் இந்த ஆலயத்தைப் போற்றி, ஆலயப் பணிகள் செய்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் கிருஷ்ணதேவ ராயரின் சகோதரர் சிம்மதேவ ராயர். மகாநந்தீசுவரர், மதங்களைக் கடந்து மக்களைக் கவர்ந்தவர். 17-ஆம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தை ஆண்ட கர்நூல் நவாப், இஸ்லாமியராக இருந்தாலும் மகாநந்தியில் நடைபெறும் சிவராத்திரித் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் நன்கொடைகள் அளித்துள்ளார்.
வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தத் தலத்தின் புஷ்கரணி பெரும் புகழ் பெற்றது. கங்கையைத் தலையில் அணிந்தவர் கங்காதரர். அந்த கங்காதரரின் காலடியில் இருந்து இந்தத் தலத்தின் புஷ்கரணி தோன்றுகிறது. சுயம்பு லிங்கத்தின் கீழே எங்கிருந்து இந்த நீர் வருகிறது என்பது இன்றும் கண்டுபிடிக்க முடியாத புதிராகவே உள்ளது.
குழந்தை வடிவில் சிவபெருமான் குடித்த பாலே, இப்படி நீராக வருவதாக ஒரு நம்பிக்கை நிலவுவதால், மக்கள் இந்த நீரைப் பிரசாதமாகக் குடிக்கிறார்கள். இங்கு தோன்றும் புனிதமான நீர், சந்நிதிக்கு அடுத்த முக மண்டபத்துக்கு எதிரே உள்ள ருத்ர குண்டத்தில் சென்று சேருகிறது. நீர் பளிங்கு போல சுத்தமாக இருப்பதுடன் தகிக்கும் கோடையிலும், கொட்டும் மழைக் காலத்திலும் அளவு குறையாமலும், கூடாமலும் இருப்பதே இந்த ருத்ர குண்டத்தின் சிறப்பு.
மகேசன் சந்நிதியிலிருந்து வரும் நீர், ருத்ர குண்டத்துக்குள் ஒரு நந்தி வாயிலிருந்து கொட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளது.
60 அடி அகலமும், 5 அடி ஆழமும் உள்ள ருத்ர குண்டத்தில் நீராடினால் பல பிறவிகளில் சேர்த்த பாவங்களைப் போக்க லாம் என்பது ஐதீகம். மேலும் இந்த நீர், தீராத நோய்களையும் தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்தது.
இங்கிருந்து தண்ணீர் ஆலயத்துக்கு வெளியே இருக்கும் இரட்டைக் குளங்களை அடைகிறது. ஆலயம் மூடியிருக்கும் சந்தர்ப்பத்திலும் மக்கள் இந்த நீரில் நீராடலாம். இந்த இரட்டைக் குளங்களில் இருந்து வெளியேறும் நீர், சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்துக்குப் பாய்ந்து விவசாயத்துக்கு உதவுகிறது.
வைகாசி மாதம், சுத்த சப்தமி அன்று எல்லா நதிகள் மற்றும் சமுத்திரங்களின் நீரும் ருத்ர குண்டத்தில் வந்து சேருவதாகப் புராணங்கள் சொல்கின்றன. அன்று இங்கு நீராடினால் அத்தனை புனித தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும் என்பதால், அன்று இங்கு ஒரு கும்பமேளா போல மக்கள் கூடி நீராடுகிறார்கள்.
மகாநந்தி தலத்தைச் சுற்றி சுமார் 15 கி.மீ. சுற்றளவில், இந்தத் தலத்தையும் சேர்த்து மொத்தம் ஒன்பது நந்தி க்ஷேத்திரங்கள் அமைந்துள்ளன. நந்தி மண்டலம் என்று அழைக்கப்படும் இந்த நவ நந்திகளுக்கும் நாயகனாக மகாநந்தியில் விளங்கும் ஈசன், மகாநந்தீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.
மற்ற நந்தித் தலங்கள்: விநாயக நந்தி, கருட நந்தி, சூர்ய நந்தி, சோமநந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, பிரம்ம நந்தி, நாக நந்தி ஆகியவை.
நந்தியால் ரயில் நிலையம் அருகே உள்ளது பிரம்ம நந்தி. நாக நந்தி- நந்தியாலுக்கு மேற்கே உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திலும், சூர்ய நந்தி- நந்தியாலுக்கு கிழக்கேயும், சிவ நந்தி- நந்தியாலிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள காதமாலா ஏரி அருகேயும் உள்ளன. கருட நந்தி- மகாநந்திக்கு மேற்கேயும், விஷ்ணு நந்தி அல்லது கிருஷ்ண நந்தி அங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலும் உள்ளன. சோம நந்தி- நந்தியாலுக்கு மேற்கே ஆத்மகூர் அருகிலுள்ளது. விநாயக நந்தி- மகாநந்தி க்ஷேத்திரத்திலேயே உள்ளது.
இந்த நவ நந்தி க்ஷேத்திரங்களையும் காலை தொடங்கி மாலைக்குள்ளாக தரிசனம் செய்தால் பூமியை வலம் வந்த பலன் கிட்டும் என்று நம்பப்படுகிறது.
ஆலயம் மேற்கு நோக்கிய வாயிலுடன் அமைந்துள்ளது. ராஜ கோபுரம். அதைத் தாண்டியதும் எந்த நேரமும் மக்கள் நீராடும் இரட்டைக் குளங்கள். குளங்களைத் தொடர்ந்து மண்டபம் இதை அடுத்திருக்கும் இரண்டாம் பிராகாரத்தில் கொடிமரம், ருத்ர குண்டம் ஆகியவை அமைந்துள்ளன. இதற்கு உட்பிராகாரத்தில் நந்தீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது.
நந்தீஸ்வரர் சந்நிதிக்கு முன்பாக, தலத்துக்குப் பெருமை சேர்க்கும் நந்தி பகவான் கம்பீரமாக- பிரமாண்ட உருவத்துடன் ஈசனை எந்த நேரமும் தரிசித்தவாறு காட்சி அளிக்கிறார்.
கருவறையில் மகாநந்தீஸ்வரர் மேற்குத் திசை நோக்கி உள்ளார். சுயம்பு லிங்கமானதால், மக்கள் நேரடியாகத் தாங்களே அபிஷேகம் செய்து தொட்டு, பூஜை செய்யலாம். நந்தீசுவரர் முழுமையான லிங்க வடிவில் இல்லாமல் பசுவின் கால் பட்டு உடைந்த புற்று வடிவில் தரிசனம் அளிக்கிறார். உடைந்த புற்றின் நடுவில் இருந்து நீர் பெருகி வெளி வருகிறது. தரைமட்டத்துக்கு மேல் லிங்கம் மட்டும் தெரிகிறது. பீடம், தரையின் கீழ் அமைந்துள்ளது.
சுவாமிக்கு இடப் புறம் அம்மன் சந்நிதி. எண்ணியவை எல்லாவற்றையும் நிறைவேற்றும் தேவியாக காமேஸ்வரி என்னும் பெயருடன் தனிக் கோயில் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் அன்னை காட்சி அளிக்கிறாள்.
கருணையே வடிவமான தோற்றம். நான்கு திருக் கரங்கள், நீண்ட பெரிய கண்கள். மூக்கில் மூக்குத்தி, புல்லாக்குடனும், உடல் முழுவதும் ஆபரணங் களுடனும் சர்வாலங்கார பூஷிதையாக தேவி தரிசனம் தருகிறாள்.
அன்னையின் கரங்களில் ஒன்று அஞ்சேல் என்னும் அபய ஹஸ்தம். மற்றொன்று வரத ஹஸ்தம். மற்ற இரு கரங்களும் மேல் நோக்கி இருக்கின்றன.
காமேஸ்வரியின் பாதத்துக்கு அருகில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த மகாமேருவும், ஸ்ரீசக்ரமும் உள்ளன.
அம்பாள் சந்நிதிக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் அன்னையின் வெவ்வேறு தோற்றங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில், ஐந்து தலைகளுடன் காயத்ரிதேவி, ‘பஞ்சகாயத்ரி’ என்ற பெயரில் காட்சி அளிக்கிறாள்.
நந்தீஸ்வரர் சந்நிதிக்கு வலப் புறம் ஆஞ்ச நேயர் சந்நிதி. அமைந்துள்ளது. நந்தீஸ்வரர் சந்நிதிக்குப் பின்னால் உள்ள கோதண்டராமர் சந்நிதியில் சலவைக்கல்லில் ராமர் சீதா, மற்றும் லக்ஷ்மணர் தரிசனம் அளிக்கிறார்கள்.
விநாயகர் பிரதிஷ்டை செய்த விநாயக நந்தீஸ்வரர், தனிக் கொடிமரத்துடன், தனிக் கோயிலில் சுவாமி சந்நிதிக்கும், அம்மன் சந்நிதிக்கும் தெற்கே தரிசனம் தருகிறார்.
நந்தீஸ்வரர் தரிசனத்துக்கா கவும், ருத்ர குண்டத்தில் நீராடவும் பக்தர்கள் பெரும் கூட்டமாக வருகிறார்கள். அதனால் தினமும் இந்தத் தலத்தில் திருவிழாதான்.
மகாநந்தி க்ஷேத்திரத் தின் ருத்ர குண்டத்தில் நீராடி, நந்தியெம் பெருமானையும், மகாநந்தீஸ்வரரையும் வணங்கி அவர்கள் அருள் பெறுவோம் வாருங்கள்!
|
Tuesday, 1 August 2017
மக்களே பூஜை செய்யும் மகா நந்தீஸ்வரர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment