விதியுன்மாலி, தாரகாட்சன், கமலாச்சன் ஆகிய அசுர சகோதரர்கள் கடும் தவம் இருந்து... பொன், வெள்ளி மற்றும் இரும்பால் ஆன வல்லமை மிக்க கோட்டைகளை வரமாகப் பெற்றனர் (மூன்று கோட்டைகளையும் முப்புரம் என்பர்). வரம் கிடைத்ததும் சும்மா இருப்பார்களா அசுரர்கள்?! தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் இன்னல்கள் தந்தனர். தேவர்கள், சிவனாரிடம் சரணடைந்தனர்.
ஈசன் போருக்கு ஆயத்தமானார். மிகப் பிரமாண்டமான தேர் ஒன்று தயாரானது. சூரிய- சந்திரர்- தேரின் சக்கரங்களாயினர்; வேதங்கள்- குதிரைகளாக; பிரம்மனே சாரதியாக; மேருமலை- வில்லாக; வாசுகிப் பாம்பு- வில்லின் நாணாக; விஷ்ணுமூர்த்தி அம்பாக... பிரமாண்ட ரதம் போர்க்களம் புகுந்தது. திரிபுர அசுரர்களை நோக்கி சிவனார் அம்பு தொடுக்கும் வேளையில்... பிரம்மன், விஷ்ணு உட்பட தேவர்கள் யாவருக்கும், 'தங்களின் உதவியால்தான் சிவனார் அசுரனை அழிக்கப் போகிறார்' என்று கர்வம் எழுந்தது. இதை உணர்ந்த சிவனார் ஆயுதங்களை பயன்படுத்தாமல் திரிபுரங்களை சிரித்தே அழித்தார்.
பிரம்மன், விஷ்ணு தவிர மற்றவர்கள் அழிந்தனர். இந்த இருவருக்கும் தங்களது தவறு புலப்பட்டது. கர்வத்துக்கு இடம்கொடுத்து சிவ நிந்தை செய்த பாவத்துக்கு ஆளாகி விட்டோமே என வருந்தியவர்கள், ''பாவம் தீர அருளுங்கள்'' என்று சிவனாரிடம் வேண்டினர். இவர்களின் பாவம் தீர்க்கவும், செந்தீயில் உயிர் இழந்த தேவர்களை உயிர்ப்பிக்கவும் எண்ணிய சிவப்பரம்பொருள், ''பொன்னி நதிக் கரையில் புன்னை மரத்தடியில், லிங்கமாக வீற்றிருக்கும் எம்மை வழிபடுங்கள்; நலம் கூடும்'' என்று அருளினார்.
விஷ்ணுவும் பிரம்மனும் காவிரிக் கரையில் இருந்த புன்னகாவனத்தை அடைந்தனர். ஆனால், எங்குதேடியும் சிவலிங்கம் புலப்படவில்லை. மீண்டும் சிவனைத் தொழுது வணங்கினர். ருத்ரமூர்த்தியாக காட்சி தந்த சிவனார், ஒரு புன்னை மரத்தடிக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அங்கே மரத்தின் கீழ் இருந்த தழைகளை விலக்க, திவ்வியமான சுயம்பு லிங்கம் ஒன்று புலப்பட்டது. இதையடுத்து விஷ்ணுவும் பிரம்மனும், ''தாங்களே லிங்கத்தை பூஜித்து வழிகாட்டுங்கள், அதன்படி நாங்கள் தொடர்கிறோம்'' என்றனர். ருத்ர பகவானும் பொன்னி நதியில் நீராடி பூக்கள் கொய்து வந்து, லிங்க மூர்த்தத்தை பூஜித்தார். தொடர்ந்து விஷ்ணுவும் பிரம்மனும் பூஜித்தனர்.
இப்படி, மூவரும் சிவலிங்க பூஜை செய்த அந்தத் தலம் மூவலூர். மயிலாடுதுறை- கும்பகோணம் மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கோயில் கொண்டிருக்கும் ஈஸ்வரன்- ஸ்ரீமார்க்கசகாயேஸ்வரர். அம்பாள்- ஸ்ரீசௌந்தரநாயகி.மகிஷாசுரனை அழிக்க அகோர உருவம் கொண்டாள் அம்பாள். அசுரனை அழித்தபிறகு, சுய ரூபம் பெற வேண்டி சிவனாரைப் பிரார்த்தித்தாள். ''மூவலூருக்குச் சென்று ஒருமண்டல காலம்... புனித தீர்த்தத்தில் நீராடி எம்மை வழிபடுக'' என்று பணித்தார் பரமன். அதன்படியே இங்கு வந்து சிவவழிபாடு செய்து அருள்பெற்றாள். அதுமட்டுமா? சிவனார் அம்பிகையின் கரம்பற்ற... இருவருக்கும் இங்கே திருக்கல்யாணமும் நடந்ததாம்.
ஒருமுறை... சிவனார் வேதாகமத்தை உபதேசிக்கும்போது, மயிலின் நடனத்தால் பார்வதியாளின் கவனம் சிதறியது. கோபம் கொண்ட சிவனார், மயிலாக மாறும்படி அவளை சபித்தார். இந்த சாபம் நீங்க... மூவலூருக்கு மயிலாக வந்து சிவவழிபாடு செய்து அருள்பெற்றாள். இதையட்டி ஸ்ரீமயிலாம்பாள் எனும் அம்பிகையும் இங்கு அருள்கிறாள். இவளை, ஸ்ரீஅஞ்சல் நாயகி என்றும் கூறுவர்.
அம்மை- அப்பனின் திருமணம் நடந்த தலம் ஆதலால் இங்கு வந்து வழிபட, திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சகல துன்பங்களுக்கும் காரணம் முற்பிறவியில் நாம் செய்த பாவம் என்பார்கள். இந்த பாவங்கள் தீரவும் மூவலூர் வந்து, வழிகாட்டும் வள்ளலாம் ஸ்ரீமார்க்கசகாயேஸ்வரரை வழிபடுவது சிறப்பு!
|
Saturday, 5 August 2017
மூவலூர் - ஸ்ரீமார்க்கசகாயேஸ்வரர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment