Saturday, 5 August 2017

அறையணி நல்லூர்

ரமணர் கண்ட ஜோதி!

துவொரு ஞாயிற்றுக்கிழமை. விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் கிளைப் பாதையில் புறப்பட்ட ரயில், மாம்பழப்பட்டு நிலையத்தை அடைந்தது.
கையிலிருந்த இரண்டரை அணாவில், மாம்பழப்பட்டு வரை மட்டுமே பயணச்சீட்டு வாங்க முடிந்திருந்த அந்த இளைஞன், நிலையத்தில் இறங்கினான். தான் செல்ல நினைத்த ஊர் வரையில், நடந்து செல்ல முடிவு கொண்டான். ரயில் பாதை ஓரமாகவே நடந்தான். நீண்ட தொலைவுக்குப் பின்னர், பாறையன்றும் அதன்மீது கோயிலும் கண்ணில் பட்டன. களைப்பில் துவண்ட இளைஞன், கோயிலுக்குள் நுழைந்தான்.
கோயிலைச் சுற்றிலும் இருட்டு; உள்ளேயும் இருட்டாகத்தான் இருந்தது. கோபுர வாசலில் நின்ற அவன், கதவு திறந்திருந்ததைக் கண்டு உள்ளே புகுந்தான். உள்ளே மண்டிக்கிடந்த இருட்டில், மண்டபத்தில் தெரிந்த மங்கிய விளக்கொளியில் அமர்ந்துவிட்டான். மெள்ள மெள்ள இறைவனுடன் இணைந்து கொண்டிருந்தவனுக்கு கண்ணைக் கூசும் ஒளி ஒன்று தென்பட்டது.
திடீரென்று தோன்றிப் பெரிதாகி விரிந்து, இன்னும் இன்னும்... பிரகாசமாகி... அவனை ஆட்கொண்டது. எழுந்த அவன், அது கருவறையிலிருந்து வருவதாக எண்ணி, அங்கே சென்றான். ஆனால், அங்கே அது தெரியவில்லை. உடனேயே மறைந்துவிட்ட அந்த ஜோதி, அவனுக்குள் புதைந்துபோனது.
1896-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதியன்று, அறையணிநல்லூர் திருக்கோயில் மண்டபத்தில் அமர்ந்து ஜோதியின் தரிசனம் கண்டார், பிற்காலத்தில் திருவண்ணாமலையில் குரு ரமணராக அமர்ந்து ஜோதி வழங்கவிருந்த வள்ளல்!
ஆம், திருச்சுழியல் வேங்கடராமனைத்தான், அன்று அறையணிநல்லூர் எம்பிரான் ஆட்கொண்டார். அம்பாள் கண்முன்னே தோன்றி, வேங்கடராமனை திருவண்ணாமலைக்கு போகச் சொன்னதாகவும் கர்ண பரம்பரைத் தகவல் உண்டு.
7-ஆம் நூற்றாண்டில், திருக்கோவலூர் வீரட்டத் திருத்தலத்தில் வழிபட்டுவிட்டு, இங்கே வந்த ஞானசம்பந்தப் பெருமான், பாறை மீது வலம் வந்து நின்றார். தொலைவில் தெரிந்த அண்ணாமலையார் அருள் விமானத்தைக் காட்டிய அடியார்கள், அருணாசலப் பெருமையையும் உரைத்தனர். அங்கேயே, ஞானசம்பந்தருக்கு, அண்ணாமலையார் அருள் ஜோதி தரிசனத்தைக் காட்டினாராம்.
சீரின் மன்னிய பதிகமுன் பாடிய திருவறையணிநல்லூர்
வாரின்மல்கிய கொங்கையாள்பங்கர்தம் மலைமிசை வலங்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர்நாடோறும் பணிந்தேத்தும்
காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிடக் கண்டார்
- என்று, இதனை சேக்கிழார் உரைக்கிறார்.
அறையணிநல்லூர் சிவபெருமானுக்கு அதுல்ய நாதேஸ்வரர் என்று திருநாமம். அதாவது, நிகர் ஒருவரும் இல்லாதவர்.
இலையினார் சூலம் ஏறுகந்தேறியே இமையோர் தொழ
நிலையினாலொரு காலுறச் சிலையினான் மதில் எய்தவன்
அலையினார்புழல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே
என்று ஞானசம்பந்தப் பெருமான் காந்தாரப் பண்ணில் பாடுவது காதில் விழுகிறதா? தேவாரப் பாடல் வழிகாட்ட, அதுல்யநாதரான அறையணிநல்லூராரை நாடிச் செல்வோம், வாருங்கள்.
அறையணிநல்லூர் எனும் தேவாரத் திருநாமம், இன்று வழக்கில் அரகண்டநல்லூர் ஆகிவிட்டது. தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் (சரியாகச் சொன்னால், வடகிழக்கு), திருக்கோவலூருக்கு நேர் எதிர்ப்புறத்தில் இருக்கிறது இந்த ஊர். பாறை மீது அமைந்த திருக்கோயில்.
பாறையிலிருந்து பார்த்தால், எதிர்க்கரையில், திருக்கோவலூரின் கீழூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் தெரியும். திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவலூரை அடையும் பாதையில், பெண்ணையாற்றுப் பாலத்துக்கு முன்னதாகவே பிரியும் விழுப்புரம் சாலையில் திரும்பி, சுமார் 1 கி.மீ சென்றால், கோயிலும் பாறையும் கண்களைக் கவரும். திருக்கோவலூரில் இருந்து வருபவர்கள், பாலத்தைக் கடந்து வரவேண்டும்.
சின்னஞ்சிறிய ஊர்; சாலையோரத்திலேயே கோயில். பாறைமீது அமைந்துள்ள இதன் தெற்கு ராஜகோபுரம், ஏழு நிலைகளுடன் கூடியது. சுமார் 160 அடி உயரத்தில் நிற்கும் கவின்மிகு கோபுரத்தின் கம்பீரம் சொல்லி மாளாது.
உள்ளே நுழைந்தவுடன், வெளிப் பிராகாரம். செப்பனிடப் படாத பாறைப் பிராகாரமாகவே இருக்கும் இதில், கோபுரத்தின் அருகில் கிழக்கு நோக்கிய அம்பாள் சந்நிதி. திறந்த முக மண்டபமும், அதையடுத்து முன் மண்டபமும் உள்ளன.
பல்லவ, சோழ மற்றும் விஜயநகர கட்டடக் கலைகளின் சங்கமமாகத் திகழும் இவற்றைத் தாண்டியதும் சிறிய இடைகழி. அடுத்து அர்த்தமண்டபம்; தொடர்ந்து அம்பாள் கருவறை.
ஸ்ரீஅழகிய பொன்னம்மை; சௌந்தர்ய கனகாம்பிகை, அருள்நாயகி. நின்ற திருக்கோலத்தில், சுமார் ஐந்தரையடி உயரத்துக்கு, நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னை; மேல்கரங்களில் சூலமும் தாமரையும் ஏந்தியவள்; கீழ்க்கரங்களில் அபயம், வரம் தாங்கியவள். அன்னையின் ஒயில், அதியற்புதம்.
அம்பிகையை வழிபட்டு, வெளிப் பிராகாரத்தில் வலமாகத் தொடர்ந்தால், தென்மேற்கு மூலையில் நிருத்த மண்டபம். சோழர் காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த மலையமான் பெரிய உடையான் என்பவரால் கட்டப்பட்ட நிருத்த மண்டபத்தில் நிறைய தூண்கள்; இங்குதான், அந்தக் காலத்தில் கோயில் நர்த்தனம் நடைபெறுமாம். இதைப் பற்றி செவிவழிச் செய்தியன்று உண்டு.
மண்டபம் முழுமையாகக் கட்டப்பட வேண்டும் என்ற ஆசையில், இளவெண்மதி சூடினான் என்பான், அதற்காகத் தன்னுயிரைத் தருவதாக அறிவித்தானாம்; மண்டபம் கட்டிய பின்னர், உயிரைத் தியாகம் செய்தானாம்.
மேற்குச் சுற்றில் திரும்பினால்... அட, இதென்ன! பீடத்தின் மீது அமைக்கப்பட்ட இரண்டு பாதங்கள்! திருஞானசம்பந்தர் இங்கே வந்து வலம் செய்தபோது, அவருடைய பாதச் சுவடுகள் பதிந்துவிட்டன. அவற்றை பீடத்தின் மீது உள்ளன போன்று அமைத் திருக்கின்றனர்.
பாதங்களின் உயரத்திலேயே கண் பதித்துப் பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டால், திருவண்ணாமலையைக் காணலாம். மேற்குச் சுற்றின் மையத்தில் கொடிமரமும் பலி பீடமும் உள்ளன. அப்படியே பாறை சார்ந்த வடக்கு மற்றும் கிழக்குப் பிராகாரங்களைச் சுற்றி வரலாம்.
தெற்குச் சுற்றை மீண்டும் அடையும்போது, அருள்மிகு அருணாசலேஸ்வரர் சந்நிதி அழைக்கிறது. அர்த்தமண்டபமும் கருவறையும் கொண்ட மேற்கு முக சந்நிதி. உள்ளே சிவலிங்கம்; எதிரில் நந்தி. மேற்கு முகமாக நோக்குகிற அருணாசலேஸ்வரர், தம்முடைய சொந்த ஊரான அண்ணாமலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
தெற்குச் சுற்றில் அம்பாள் சந்நிதிக்குப் பின்பாக, உள் வாயில் தென்படுகிறது. இதுதான், மூலவர் சந்நிதிக்குச் செல்லும் வழி. மேலே, கயிலை காட்சியின் சிற்பம். ரிஷபாரூடருக்கு இருபுறமும் விநாயக- சுப்பிரமணியப் பிள்ளைகள்.
மூலவர் மேற்குப் பார்த்தவர். அதனால்தான், மேற்குச் சுற்றில் வரும்போது, பலிபீடத்தையும் கொடி மரத்தையும் கண்டோம். இருப்பினும், தெற்கு வழியாக நுழைந்து திரும்பிச் செல்லவேண்டும்.
உள்ளே நுழைந்ததும், முதலில் நாம் நிற்கிற இடம், உற்ஸவ மண்டபம். இருபுறமும் மேடைகள். வலது பக்கம் திரும்பினால், ஸ்வாமி சந்நிதி. இடது பக்கம், ஸ்வாமியைப் பார்த்தபடி இருக்கும் நந்தி... அவருக்கான மண்டபம். உற்ஸவ மண்டபத்தின் உள்பகுதி (அதாவது வடக்குப் பகுதி), நவராத்திரி மண்டபமாகும்.
உற்ஸவ மண்டபத்திலிருந்து உள்ளே திரும்பி, சுவாமி சந்நிதி நோக்கிச் சென்றால், உள் பிராகாரத்தை அடைகிறோம். வெறும் பிராகாரமில்லை; தூண்களுடன் கூடிய உயரமான தாழ்வாரம். திருநடைமாளிகை என்றும் அழைப்பர்.

றையணி நல்லூர் ஆலயத்தின் உள் பிராகாரம், வெறும் பிராகாரம் இல்லை; தூண்களுடன் கூடிய உயரமான தாழ்வாரம். திருநடைமாளிகை என்றும் அழைக்கப்படுகிற இந்தத் திருச்சுற்றுமாளிகையில்தான், பிராகார சந்நிதிகள் அமைந்துள்ளன.
ஸ்ரீபாலசுப்பிரமணியர், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீஜேஷ்டாதேவி ஆகியோரை அடுத்து, வடமேற்கு மூலையில் உக்கிராண அறை. வடக்குச் சுற்றின் மையத்தில், ஸ்ரீதுர்கை சந்நிதி. வழக்கத்துக்கு மாறாக, தென்முகம் நோக்கியபடி நிற்கிறாள்; கேட்டதைக் கொடுக்கும் சாந்த வடிவினள். வடகிழக்குப் பகுதியில் நவக்கிரகங்கள். அருகில், ஸ்ரீபைரவர், ஸ்ரீசனீஸ்வரர் மற்றும் ஸ்ரீசங்கரநாராயணர் சந்நிதிகள். ஸ்ரீசனீஸ்வரர், காகத்தின்மீது ஒரு காலை ஊன்றியபடி ஒய்யாரமாக இருக்கிறார்.
ஸ்ரீசங்கரநாராயணர் திருவுருவம், கல்லில் செதுக்கப் பட்டிருந்தாலும், ஓவியம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. சற்றே தள்ளி, மகாவிஷ்ணு. சங்கு சக்ரதாரியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் விஷ்ணு. தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி. தெற்குச் சுற்றில், சப்த கன்னிகைகள்.
அடுத்ததாக, ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை உடனாய ஸ்ரீசுப்பிரமணியர். வெகு விசேஷமான இவர், ஒரு முகத்துடனும் ஆறு கரங்களுடனும் காட்சி தருகிறார். ஆயுதங்கள் தாங்கி, வடக்கு நோக்கியவராக இருப்பது, சம்ஹாரத்துடன் தொடர்பு உடையது; எனவே, இவர் சூரசம்ஹாரமூர்த்தி என்றே சிலாகிக்கப்படுகிறார். அடுத்து நால்வர்; ரமணர்; கையில் தாளமேந்தி நிற்கும் ஞானசம்பந்தர்.
தென்மேற்கு மூலையில் காட்சி தரும் வலம்புரி விநாயகரே, தல விநாயகர். கல்லில் செதுக்கப்பட்டாலும் சுவர் ஓவியமாகத் தோற்றம் தருகிற திருமேனி. அழகோ அழகு. நாம் எங்கேயிருந்து பார்த்தாலும், அவர் நம்மையே காண்பதுபோல் அமைந்த எழில். மேற்குச் சுற்றில் திரும்பினால், காசி ஸ்ரீவிஸ்வநாதர்- விசாலாட்சி.
வலம் நிறைவு செய்து, சுவாமி சந்நிதிக்குள் நுழைகிறோம். முன்மண்டபம் விசாலமானது. இதன் இடதுபக்கத்தில், நடராஜ சபை. ஆடல்வல்லானை வழிபட்டு, சுவாமி சந்நிதி வாயிலுக்குச் சென்றால், சிறிய நந்தி; துவாரபாலகர்கள். உள்ளே, ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் எனும் ஒப்பிலா மணி ஈஸ்வரர். மேற்கு முகமாகக் காட்சி தரும் இந்தச் சிவலிங்க நாதர், உண்மையில் சுயம்பு என்கிறார்கள். எப்படியோ, மிகவும் பழைமையானவர். 'தேவா இறைவா சிவனே எனும் முழக்கம் ஓவா அறையணிநல்லூர் உயர்வே' என்று வள்ளல் பெருமானால் போற்றப்பெற்ற ஸ்ரீஅறையணி நாதர்.
பாடிப் பரவி வணங்குகிறோம். மீண்டும் சுவாமியை வலம் வருகிறோம். கருவறை, அகழி அமைப்பு கொண்டது. சமீபகாலங்களில், பல இடங்களில், அகழியானது சமதளமாக்கப்பட்டுள்ளது. பிற்கால சோழர் வரலாற்றில் ஆழங்கால்பட்ட பாலசுப்பிரமணியன் போன்றோர், இந்தக் கோயிலுக்கு மூன்று பிராகாரங்கள் என்று குறித்துள்ளனர். வெளிப் பிராகாரம் தவிர, அகழிப் பகுதி ஒன்றாகவும், திருச்சுற்றுமாளிகையின் உயரத் தாழ்வாரம் ஒன்றாகவும், மொத்தம் உள் பிராகாரங்கள் இரண்டு என்று அவர்கள் கணக்கெடுத்திருக்க வேண்டும். கோஷ்டங்களில், பிரம்மா, லிங்கோத்பவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி. தனி மண்டபத்தில் அமர்ந்திருக்கும் தெற்கு நோக்கிய சண்டேஸ்வரர்.
வெளிப்பிராகாரத்தில் நின்று பார்த்தால், அம்மன், அருணாசலேஸ்வரர் மற்றும் சுவாமி சந்நிதி விமானங்கள் வெகு நேர்த்தியாகத் தெரிகின்றன. மூன்றுமே இருதள விமானங்கள். அழகான சிற்பங்கள் கொண்டவை.
அறையணிநல்லூரின் உற்ஸவத் திருமேனிகள், வெகு அற்புதமானவை. நடராஜர், சிவகாமி, முத்துக் குமாரசுவாமி, வள்ளி, திரிபங்க நிலையில் நின்று கடக முத்திரையுடன் கருங்குவளை பற்றிய தெய்வானை, கந்தர், சோமாஸ்கந்தர், கரண்டிகை மகுடம் சூடிய உமையம்மை, அஞ்சலி கூப்பிய அப்பர், ஜடாமகுடம் சூடி கரங்களில் தாளம் பற்றி பத்மபீடத்தில் நிற்கும் ஞானசம்பந்தர் என்று பற்பல; பாதுகாப்பு கருதி இவை திருக்கோவலூர் கீழூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைக்கப்படுவது வழக்கம்.
தல தீர்த்தம் பெண்ணையாறு. மிலாடுடை நாடு, சேதி நாடு, மலையமான் நாடு, திருமுனைப்பாடி நாடு என்றெல்லாம் பெண்ணை யாற்றின் இருகரைகளை ஒட்டிய பகுதிகள் அழைக்கப்பட்டன. இதுவே நடுநாடும் ஆகும். நடுநாட்டின் 22 தேவாரத் தலங்களில் 12-வது திருத்தலமாக அறையணிநல்லூர் வகைப்படுத்தப் பட்டாலும், இன்னுமொரு சிறப்பும் உண்டு. பெண்ணையாறுதான், தொண்டை நாட்டின் தென்கரை. பெண்ணையின் வட கரையில் இந்தத் தலம் விளங்குவதால், தொண்டை மண்டலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது எனலாம். நீலகண்ட முனிவர் என்பவர் (வரலாற்றுக் காலத்துக்கு முந்தையவர்) இங்கு முதலில் வழிபட்டு வந்ததாகவும் அவரே இந்தக் கோயிலை எழுப்பியதாகவும் சொல்லப் படுகிறது. கபிலர், பாண்டவர்கள், மெய்ப்பொருள்நாயனார், நரசிங்க முனையரையர் (இவர்கள் இருவரும் அறுபத்து மூவரில் அடங்கும் நாயன்மார்கள்), திருமுடிக்காரியின் மகன்களான தெய்வீகன் மற்றும் ஏனாதிக் கண்ணன், ஞானசம்பந்தர், ரமணர் என வாழையடி வாழையாக மகான்கள் இங்கு வழிபட்டுள்ளனர்.
பல்லவ சாம்ராஜ்ஜியம், சோழ சாம்ராஜ்ஜியம், பாண்டியப் பேரரசு ஆகிய காலங்களில் பிரஸித்தியுடன் விளங்கிய இந்தத் தலம், அந்நியப் படையெடுப்பின்போது புகழ் குன்றியது. ஒட்டியர்கள் படையெடுப்பின்போது (ஒட்டியங் கலாபை- கி.பி.15-ஆம் நூற்றாண்டு) இந்தக் கோயில் மண்டபங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. சம்புவராயர் காலத்திலும் (கி.பி.14-ஆம் நூற்றாண்டு) பிறகு விஜயநகர காலத்திலும் மீண்டும் பிராபல்யம் கொண்டது. இருப்பினும் அதன்பின்னர் பெயர் மறைந்துபோனது. சமீபகாலங்களில், ரமண மகரிஷியின் சீடர்களால், திருப்பணிகள் கண்டு மீண்டும் புகழ் பெற்றுள்ளது.
கோயிலில் உள்ள ஏராளமான கல்வெட்டுகள், திருச்சுற்று மாளிகைத் தூண்களின் 'விக்கிரம பாண்டியன்' எனும் பெயர் பொறிப்பு போன்றவை, சங்க காலம் தொடங்கி விஜயநகர காலம் வரையான பற்பல வரலாற்றுத் தகவல்களைத் தருகின்றன. சொல்லப்போனால், ஒட்டியங் கலாபை போன்ற அரிய செய்திகள் இன்னமும் முழுமையாக வெளிவரவில்லை எனலாம்.
அறை என்றால் பாறை. பாறைக்கு அழகு சேர்ப்பதாகக் கோயில் அமைந்திருக்கிறது. ஆகவே, அறை அணி நல்லூர். அறை அண்டை நல்லூர் (அண்டை - அருகு) என்றும், அறைகண்டநல்லூர் என்றும்கூட வழங்கப்பட்டிருக்கலாம்.
தெய்வீகனும் கண்ணனும் பாரி மகளிரான அங்கவையையும் சங்கவையையும் முறையே மணந்த தாகத் தமிழ் நாவலர் சரிதை எனும் நூல் தெரிவிக்கும். திருமணத்தின் போது, அறங்கள் செய்த இடம், அறங்கண்டநல்லூர் ஆனதாகச் சிலர் எண்ணுகின்றனர்.
பல்லவர் காலத்திலேயே இந்தத் திருத்தலம், பிரபலமாக விளங்கியிருக்க வேண்டும். ராஜ கோபுரத்தின் அடிவாரத்தில், பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் குடைவரைக் கோயில் காணப்படுகிறது. பாண்டவர்கள் ஐவருக்கு ஐந்து அறைகள் என்று அடையாளம் காட்டுகிறார்கள். உள்ளே சிலையோ விக்கிரகமோ இல்லை. பாறைகளையும் மலைகளையும் குடைந்து கோயில் கட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பல்லவர்கள் (குடைவரை; குடை- குடைதல்; வரை- மலை), இங்கும் அவ்வாறு செய்யத் தொடங்கினார்கள், ஆயின், இங்கு உள்ள பாறை அதற்குத்
தக்கதாக உறுதியுடன் இல்லை என்று ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ளனர். குடைவரையின் உள் சுவர்களில் காணப்படும் கற் பாளங்களைப் பார்த்தால், அப்படித் தெரியவில்லை. இந்தக் குடைவரை, முற்றுப் பெறாமல் நின்று போனதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும். அரசியல், சமூக நிலைமைகள் தடைப் படுத்தியிருக்கலாம்.
அறையணி நல்லூர் என்பதற்கு ஐந்து அறைகள் அணிகளாக விளங்கும் தலம் என்றேகூட சிலர் பொருள் காண்கின்றனர். ஐந்து அறைகளும் முற்றுப் பெற்றிருந்தால், இன்னும் எவ்வளவு அணியாக இருந்திருக்கும் என்று எண்ணாமல் இருக்கமுடியவில்லை.
வனவாசத்தின்போது பஞ்சபாண்டவர்களும் திரௌபதியும் இங்கு வந்து தங்கினார்களாம். கோயிலுக்கு வெளியில், பாறையில் பரவிக் கிடக்கும் பெரிய குளம், பீமன் குளம் என்றே அழைக்கப்படுகிறது. பீமன், தன்னுடையை கதையால் ஓங்கிப் பிளந்து குளம் ஏற்படுத்தியதாக ஐதீகம். குளக்கரையில், திரௌபதி தங்கியதாகக் கருதப்படும் இடம், இப்போது திரௌபதியம்மன் கோயில் ஆகிவிட்டது.
பெண்ணையாறு ஒருபுறம்; பாறையும் குளமும் உயர்ந்தோங்கிய கோபுரமும் மறுபுறம்; தொலைவில் திருவண்ணாமலை; சற்றே மேற்கில் கபிலர் குன்று; எதிர்க்கரையில் திருக்கோவல் கீழையூர் வீரட்டம்; இத்தனை அழகையும் உள்வாங்கிக்கொள்வதற்காகக் கண்களை மூடினால்... உள்ளுக்குள் விஸ்வரூபம் காட்டும் ஞானசம்பந்தரும் ரமண மகரிஷியும் அமைதியாக அருள் பாலிக்கின்றனர்.

No comments:

Post a Comment