தேர் அழகு- திருவாரூரில், ஸ்ரீதியாகேசர் கோயிலும் கமலாலயத் திருக்குளமும்கூட பேரழகுதான்!
இந்த கமலாலயக் குளத்தில் நீராடி அல்லது இதன் தீர்த்தத்தை தலையில் தெளித்து, கண்களில் ஒற்றிக்கொண்டு, தியாகேசரையும் கமலாம்பாளையும் கண்ணார தரிசித்திருப்போம்! ஆனால், கமலாலயக் குளத்தின் நடுவே வீற்றிருக்கும் ஸ்ரீநாகநாதரை தரிசித்திருப்போமா?
''ரொம்ப சக்தி வாய்ந்தவர் நாகநாதர். கரைலேருந்து சுமார் நூறு நூத்தம்பதடி தூரத்துல, குளத்துக்கு நடுவுல உள்ள கோயிலுக்குள்ள நுழைஞ்சதும், லிங்க ரூபமா காட்சி தர்றாரு நாகநாத ஸ்வாமி. இவரை வழிபட்டா, நாக தோஷம் நீங்கி, திருமண பாக்கியம் கைகூடுங்கறது நம்பிக்கை'' - கமலாலய குளக்கரையில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் சொன்னார்.
மூன்றடுக்கு கோபுரம் கொண்ட இந்தக் கோயிலை, நடுவனாங் கோயில், நடுவாங்கோயில் என்றெல்லாம் சொல்கின்றனர் பக்தர்கள். குளத்துக்கு நடுவேயுள்ள கோயிலில் மடப்பள்ளி, பிராகாரம், பரிவார தெய்வங்கள் என அனைத்தும் உண்டு. அம்பாளின் திருநாமம் - ஸ்ரீயோகாம்பாள்! இவளும் கருணையே உருவானவள்; அனைத்து யோகங்களையும் வாரி வழங்குகிறாள்!
''இந்தக் கோயிலோட சாந்நித்தியத்தைத் தெரிஞ்சவங்க சில பேரு அடிக்கடி வந்து போவாங்க. கோயில் சார்பா படகுகூட இருந்துச்சு. அப்புறம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பா படகு விட்டாங்க. அதுவும் பழுதடைஞ்சுட்டதால, தனியார் படகுதான் இப்ப இயங்கிட்டிருக்கு. இந்தப் படகுல போய்தான் சிவனாருக்கும் அம்பாளுக்கும் பூஜை பண்ணிட்டு வர்றார் அர்ச்சகர்'' என்கின்றனர்.
தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கோயிலின் நடை திறந்திருக்குமாம்! பக்தர்கள் வருகின்றனரோ இல்லையோ... நாள் தவறாமல் பூஜை, நைவேத்தியம், வழிபாடு என அனைத்தும் நடப்பதாகச் சொல்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர். ஆம்... தியாகேசர் கோயிலுக்கு உட்பட்ட ஆலயம் இது!
நடுவாங்கோயிலில் இருந்து கரையின் ஒருபகுதிக்கு நேர்க்கம்பி ஒன்று உள்ளது. இங்கேயுள்ள படகு மோட்டார் வசதியில் இயங்கவில்லை. துடுப்பு போடுகிற அவசியமும் கிடையாது. இந்தக் கம்பியைக் கொண்டு, மெள்ள இழுக்க இழுக்க... படகானது அப்படியே நேர்க்கோட்டில், தண்ணீரைக் கிழித்தபடி கோயிலை நோக்கி பயணிக்கிறது!
பார்க்கவும் பயணிக்கவும் சுவாரஸ்யம் தரும் அதே நேரம்... கோயிலுக்குச் சென்று, ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீநாகநாதரையும் வணங்கித் திரும்ப, வாழ்வில் வளமும் நலமும் பெறுவது நிச்சயம்!
இன்னொரு விஷயம்... நடுவாங்கோயில் நாகநாதருக்கு பிரதோஷ வழிபாடும் அமர்க்களப்படுகிறது! ஆகவே பிரதோஷ நாளில், படகில் சவாரி செய்து, நாகநாத ஸ்வாமியை வணங்குங்கள்; வாழ்க்கைப் பயணம் சிறக்கும்!
|
No comments:
Post a Comment