''சாமியாராம்... சித்தராம்... அற்புதங்களாம்..! என்ன விளையாடுகிறீர்கள்... உங்கள் நாட்டில் இன்னுமா இதை எல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்..? - எகத்தாளமாகக் கேட்டார் அந்த ஆங்கிலேயத் துரை. அப்போது, ஆங்கிலேயர் ஆட்சி.
சுவாமிகளின் மகிமையையும் அவரின் ஸித்து விளையாடல்களையும் அறிந்திருந்த அன்பர், அவரிடம் வேறொன்றும் சொல்லாமல் மௌனம் காத்தார். இருந்தாலும், சுவாமிகளின் மகிமை என்னதான் என்று பார்த்துவிடுவோமே என எண்ணி, சுவாமிகளை அழைத்துவரச் சொன்னார் அந்த துரை.
சுவாமிகள் அவர் முன் நின்றார். இவரை எப்படியாவது மதமாற்றம் செய்து, இவர் மகிமையை குலைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு விருந்து கொடுத்தார் அந்த ஆங்கிலேயர். விருந்தின் போது, அவர் தன் விபரீத புத்தியையும் வெளிப்படுத்தினார். சுவாமிகள் உண்பதற்காக பரிமாறப்பட்ட உணவில், மாமிசமும் கலக்கப்பட்டது. மதுவும் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. அன்னம் முன் அமர்ந்த சுவாமிகள் புன்னகை பூத்தார். அந்த நொடியில் மது மறைந்தது. மாமிசமோ மலர்களாக மாறின.
அவ்வளவுதான்! அதுவரை பரிகாசப் பார்வை பார்த்த துரைக்கு இப்போது அடிவயிற்றில் பயம் கவ்விப் பிடித்தது. தடாலென சுவாமிகளின் பாதங்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினார். இப்படி ஒரு ஸித்து விளையாடலால், பாதகம் செய்ய எண்ணியவனை பக்தனாக மாற்றிய சுவாமிகளே, அப்பர் சுவாமிகள்!
திருமயிலை திருத்தலம்... கபாலீச்சரம் என சிறப்பு பெற்ற தலம். கற்பகாம்பிகை உடன் உறையும் கபாலீஸ்வரர் கோயில் கொண்ட தலம். இங்கேதான், சைவத் தொண்டில் தம்மை ஈடுபடுத்தி, அறநெறி வளர்த்து ஆன்மிகப் பணி செய்துவந்தார் பெரும் சித்தரான ஸ்ரீஅப்பர் சுவாமிகள்!
சுவாமிகளின் பூர்விகம், திண்டிவனம் தாலுகாவைச் சேர்ந்த அல்லாடி கிராமமாம்! இங்கே, அச்சிறுப்பாக்கத்துச் செட்டியார் மரபில் அவதரித்தார் சுவாமிகள். இவருக்கு அப்பர் என்றே பெயரிட்டனர்.
குடும்பத் தொழில் - நெய் வியாபாரம். அப்பரும் இந்தத் தொழிலில் ஈடுபட்டார். ஆனால், சிவனடியே சிந்தித்திருந்தார். திருமணத்துக்கு தக்க வயது வந்தது அப்பருக்கு! பெற்றோர் பார்த்து தகுந்த மணமகளைத் தேடி மணம் செய்து வைத்தனர்.
குடும்பச் சூழலில் அகப்பட்டாலும், சிவ வழிபாட்டிலும், தான தருமங்கள் செய்வதிலும் அதிக ஈடுபாடு இருந்தது. நற்காரியங்களில் ஈடுபட்டார். திருவப்பட்டன் என்ற ஊரில் குளம் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார்.
காலம் வேகமாகச் சென்றது. மண வாழ்வில் ஓர் இடி. இவரது அருமை மனைவி திடீரென காலமானார். அதனால், இவருடைய மன நிலையிலும் மாற்றம் ஏற்பட்டது. இறைச் சிந்தனை மேலும் பெருகியது. இல்லறத்தை விட்டு விலகி, துறவறம் புகுவதற்கு இறைவனாகப் பார்த்து வழி செய்து கொடுத்ததாகவே எண்ணிய அப்பர், சிவனடியாரோடு சேர்ந்து பக்தி செய்வதில் காலம் கழித்தார்.
ஒருநாள்... சிவனடியார்களுக்கு உணவு அளிப்பதில் நாட்டம் கொண்டவராக விளங்கிய வேளாளர் குலப் பெண்மணி ஒருவர் அப்பரைப் பார்த்து, ''ஐயா! தங்களுக்கு அமுதளிக்க ஆசைப்படுகிறேன். மனமுவந்து ஏற்க வாருங்கள்'' என அமுது உண்ண அழைத்தாள்.
அழைப்புக்கு இசைந்த அப்பரும், அமுதுண்ணச் சென்றார். அங்கே, சிவனடியார்கள் கூட்டத்தில் அப்பருக்கும் சேர்த்து அமுது படைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் ஒருவராகக் கருதி, தனக்கும் அமுது அளிக்கப்பட்டது பற்றி அப்பர் மனதால் சற்றே சங்கடப்பட்டார். அதனால் உணவை உட்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அப்போது அந்தப் பெண்மணி, திருவாசகத் தில் உள்ள திருக்கோத்தும்பி- இரண்டாவது பாடலைப் பாடினார். அது, ஜீவன் சிவனோடு ஐக்கியமாகும் வழிமுறை காட்டுவது...
உள்ளம் உருக்கும் இந்தப் பாடலைக் கேட்டதும், அப்பரின் மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள்... இறுதியில் மனது தெளிவு பெற்றது. துறவு மனப்பான்மை மேலோங்க, அணிந்திருந்த பூணூலைக் கழற்றினார். காவி உடுத்தினார். காட்டுக்குச் சென்றார்.
சிதம்பரத்தில் இருந்த மௌன வஸ்தாது சுவாமிகள் குறித்து அறிந்து அவரிடம் சென்றார் அப்பர். அவரிடம் ஏழு ஆண்டுகள் சீடராக இருந்து ஞானம் பெற்றார். குரு உபதேசம் கிடைத்தது. அவரிடம் விடைபெற்று வடக்கு நோக்கிப் புறப்பட்டார் அப்பர் சுவாமிகள்.
அற்புதங்கள் பல நிகழ்த்தினாலும், இயல்பிலேயே தர்ம சிந்தனை மிகுந்திருந்த அப்பர் சுவாமிகள், அதன்பின் தர்மவான்களை ஊக்கப்படுத்தி, அறப்பணிகள் நடக்கக் காரணமானார். அன்பர் கூட்டமும் பெருகியது. திருவேட்டீஸ்வரன்பேட்டையில் செஞ்சி லட்சுமணன் செட்டியார், சுவாமிகளிடம் ஆசிபெற்றார். அவரின் நண்பர் முத்தையா செட்டியார், சுவாமிகளின் முதன்மைச் சீடரானார். ஸ்ரீசிதம்பர சுவாமிகளும் அப்பர் சுவாமிகளின் சீடர்களில் ஒருவரானார். உலக்கூரைச் சேர்ந்த சாரம் எனும் ஊரில் அடியார் ஒருவருக்கு அருளுரை தந்தவர், தண்ணீர்ப் பந்தல் வைக்கும்படி அவரிடம் கூறினார்(சாரம் என்ற ஊரில் அப்பர் சுவாமி மடம் இன்றும் உள்ளது.)
சுவாமிகள் ஓரிடத்தில் இருக்காமல், திருவொற்றியூர், சிந்தாதிரிப்பேட்டை என மாறி மாறித் தங்கி வந்தார். இந்த நேரத்தில் மயிலாப்பூர் கொசப்பேட்டையில், சுவாமி களின் பெயரில் இரண்டு காணி நிலம் வாங்கினார் முத்தையா செட்டியார். இந்நிலையில், தான் பூவுடல் துறந்து பரவெளியில் கலக்க காலம் வந்துவிட்டதை உணர்ந்தார் அப்பர் சுவாமிகள்.
ஒரு நாள்... சீடரை அருகில் அழைத்தார். ''இறைவனை நான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன்... பரிபூரண நிலை அடைய இன்னும் ஒரு மண்டல காலம் உள்ளது. அதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார்.
சுவாமிகள் ஜீவசமாதி அடையப் போகும் செய்தி, எங்கும் பரவியது. போலீசார், இதைத் தடுக்க முயன்றனர்.
மயிலாப்பூரின் முக்கியப் பகுதியில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். வள்ளுவர் சிலைக்கு அருகில், தண்ணீர்துறை மார்க்கெட்டுக்கு எதிரில் உள்ளது.
கோயிலுக்குள் செல்கிறோம். விசாலமான இடம். இடப்புறத்தில் தலவிருட்சமாக அரசு, வேம்பு விளங்குகிறது. விருட்சங்களுக்கு அடியில் வலம்புரி விநாயகர். அடுத்து கொடிமரம். இடப்புறம் நவக்கிரக சந்நிதி. எதிரே மூலவராக அப்பர் சுவாமிகள் சந்நிதி. கோஷ்டத்தில் ஸ்ரீகணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவீரபத்ரர், மகாவிஷ்ணு, பிரம்மா, ஸ்ரீதுர்கை ஆகியோர். மூலவர் சந்நிதிக்கு இடப்புறம் நீதி விநாயகர் சந்நிதி. வலப்புறம் ஜெயசுப்ரமண்யர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
காலபைரவர் சந்நிதி தனியே உள்ளது. அஷ்டமி திதியில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. இங்கே தாயுமானவருக்கு சந்நிதி அமைந்திருப்பது சிறப்பான ஒன்று. குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் வாழைப்பழம் (வாழைத் தார்) நைவேத்தியம் செய்கிறார்கள். அந்த நைவேத்தியப் பிரசாதம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கனி, ஒவ்வொன்றாகப் பழுக்கப் பழுக்க, அதை சாப்பிட்டு வர வேண்டுமாம்! சுகப் பிரசவம் ஆனவர்கள் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கின்றார்கள். தை- விசாகத்தில் தாயுமானவ சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
இங்கே விசாலாட்சி அம்மைக்கு தனி சந்நிதி உள்ளது. அண்மையில் புதிய விக்கிரஹத் திருமேனி செய்து, நூதனப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். சிவ ராத்திரி விழாவன்று, நான்கு கால பூஜை விசேஷமாக நடக்கிறது. ஆனி மாத பரணி நட்சத்திரத்தில், அப்பர் சுவாமிகளின் குருபூஜை சிறப்பாக நடக்கிறது.
சென்னை நகருக்குப் பெருமை சேர்க்கும் தலங்களில் ஒன்றான மயிலை ஸ்ரீஅப்பர் சுவாமி கோயிலுக்குச் சென்று வந்தால், மாற்றம் ஏற்படுவதை உணருவீர்கள்!
|
Saturday, 5 August 2017
மயிலையில் அருளும் அப்பர் சுவாமிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment